22 போலீஸ் இன்ஸ்பெக்டருக்குச் சிவகாமிந்தான் பதில் சொல்வதற்குள் மங்காவே முன் வந்து குறுக்கிட்டு விசாரித்தாள்: அவள் ஏதோ விசாரிக்க வாய் திறப்பதற்குள்ளேயே அந்த இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பதற்றத்தோடு, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! நீங்க... மினிஸ்டர் எஸ்.கே.சி. நாதனோட டாட்டர் இல்லியா?” என்று அவசர அவசரமாக வினவினார். “ஆமாம்! ஆனா மினிஸ்டரோட டாட்டர் இல்லாட்டாலும் நியாயத்தைக் கேட்க எனக்கு உரிமை உண்டு.” “இங்கே ஃபோன் இருக்கா?” “ஏன்? இல்லியே...!” “அப்ப நீங்க கொஞ்சம் தயவு பண்ணி சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்து உங்க ஃபாதரோட ஃபோன்லே பேசிடுங்க... நீங்களே ‘ஸெட்டில்’ பண்ணிட்டா எங்களுக்குப் பிரச்னை இல்லே...” “ஃபோன்லே என்ன பேசணும்?” “நீங்களே உங்க ஃபாதரோட பேசுங்க... எல்லாம் புரியும்... வீணா எங்களைத் தர்மசங்கடத்தில் கொண்டு போய் விடாதீங்க...” “வந்து பேசுங்க... புரியும்... ப்ளீஸ்... வாங்க ஜீப்பிலேயே போயிட்டு வந்துரலாம்.” முத்துராமலிங்கத்துக்கும், சிவகாமிநாதனுக்கும் ஒன்றும் புரியவில்லை. “கொஞ்சம் இருங்க!... இவங்களோட ஸ்டேஷனுக்குப் போய் என்ன தான் விஷயம்னு தெரிஞ்சிட்டு வரேன்” - என்று மங்கா அவர்களோடு புறப்பட்டாள். புறப்படும் போது, “மிஸ் மங்கா! ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்குங்க! எனக்குச் சிபாரிசு எதுவும் தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருப்பதே போதும்” - என்று சற்றே கடுமையான குரலில் இரைந்து சொன்னார் சிவகாமிநாதன். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்காவிடம் மிகவும் மரியாதையாகவும், விநயமாகவும் நடந்து கொண்டார். ஜீப் புறப்பட்டதுமே அவர் அவளிடம் சொல்லத் தொடங்கி விட்டார். “நேத்து ஏதோ கூட்டத்திலே வழக்கு நிதி வசூலுக்குன்னு உங்க கை வளையலைக் கழட்டிப் போட்டீங்களாம். சிவகாமிநாதன் கிட்டத்தான் அந்த வளையல்கள் இருக்கும். அதை அவர் வீட்டிலே தேடி எடுத்து அவர் மேலே திருட்டுக் குற்றம் சாட்டி உள்ளே தள்ளப் பாருங்கன்னு மினிஸ்டர் சொல்றாரு. நீங்களோ இங்கே சிவகாமிநாதன் வீட்டிலேயே அவரோட சிஷ்யை மாதிரிப் பழகிக்கிட்டிருக்கீங்க... எங்களுக்கு என்ன செய்யிறதுன்னு இப்பத் தர்ம சங்கடமா இருக்கு...?”
“நானே விரும்பிக் குடுத்தது எப்படித் திருட்டாகும்? இது திருட்டுன்னாக் கட்சி நிதி, சிலை வைக்க நிதி, நினைவு மாளிகை நிதி, சிறப்பு மாநாட்டு வசூல்னு எங்கப்பா அடிச்சிருக்கிற ஒவ்வொரு கொள்ளைக்கும் அவரை நீங்க நிரந்தரமா ஜெயில்லேயே வச்சிருக்கணும். வெளியிலேயே விட்டிருக்கக் கூடாது.”
மந்திரியாயிருக்கும் தந்தையைப் பற்றி மகள் இப்படிப் பேசியது இன்ஸ்பெக்டரையும் போலீஸ்காரர்களையும் திகைக்க வைத்தது. அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ தகராறு என்று மட்டும் அவர்களுக்கு அப்போது புரிந்தது. “தயவு செய்து உங்க சண்டையிலே எங்களை வம்புலே மாட்டி வச்சிடாதீங்கம்மா! மந்திரியை விரோதிச்சுக் கிட்டாத் தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திப்பிடுவாங்க...” “ஆளுங் கட்சிக்கும், மந்திரிங்களுக்கும் மட்டுமே நீங்க காவலர்னு நினைச்சுக்கிட்டுச் செயல் படறதாலே வர்ற வினை இது. ஒரு கட்சி இன்னிக்கி ஆள வரும். நாளைக்கிப் போகும். ஜனங்க நிரந்தரமா இருப்பாங்க. ஜனங்களுக்குத் தான் நீங்க காவலரா இருக்கணும்” - என்று மங்கா கூறியதை எதிர்த்துச் சொல்லவும் முடியாமல், ஆதரித்து ஏற்கவும் இயலாமல் இன்ஸ்பெக்டர் நடுவாக இருந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்பாகப் போய் ஜீப் நின்றது. சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக அவளை மிகவும் மரியாதையாகவும் பவ்யமாகவும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்றார் அவர். “காபி குடிக்கிறீங்களாம்மா?” “இல்லை, வேண்டாம்.” முதலில் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்து பேசிவிட்டு அப்புறம் ஃபோனை மங்காவிடம் கொடுத்தார். அவள் ஃபோனை வாங்கிக் காதருகே கொண்டு செல்வதற்குள்ளேயே தந்தையின் குரல் சீறி வெடித்தது. “உனக்கு எதுக்கும்மா இந்த வம்பெல்லாம்; வெளிநாட்டிலே படிக்கப் போறவ லோகல் பாலிடிக்ஸ்ல எல்லாம் ஏன் தலையிடறே? எல்லா ஏற்பாடும் முடிஞ்சாச்சு... ரிஸர்வ் பாங்க் விவகாரம் கூடச் சரியாயிடிச்சி. பாஸ்போர்ட் கூட ரெடி. அடுத்த வாரமே புறப்படலாம்.” “நான் போகப் போறதில்லே அப்பா. நீங்களே பர்மிங்ஹாம் அண்ணனுக்கும் இதை எழுதிடலாம்.” “என்னம்மா இது? திடீர்னு இப்படிக் கல்லைத் தூக்கிப் போடறே? ஏன் உனக்கு என்ன வந்திச்சு?” “நான் உறுதியாத்தான் சொல்றேன். மேற்படிப்புக்காக நான் பர்மிங்ஹாம் போகப் போறதில்லை.” “ஏன்?... நான் வேணா அந்தச் சிவகாமிநாதனோ சிங்கக் குரல் நாதனோ... அவனை விட்டுடறேன்... ஏம்மா உனக்கே வெக்கமா இருக்க வேணாமோ? மினிஸ்டரோட டாட்டரா இருந்துக்கிட்டுச் சேரி குப்பத்து ஆளுங்க மாதிரிக் கண்ட கண்ட எதிர்க்கட்சிப் பொதுக்கூட்டத்திலே போயி நீயும் கேட்டுக் கைத்தட்டிக்கிட்டு நிக்கறது உனக்கே நல்லா இருக்கா? என்னை நாக்கிலே நரம்பில்லாமத் திட்டிப் பேசற கூட்டத்திலே என் மகளே போய் வளையைக் கழட்டிக் குடுத்து, கைதட்டிக்கிட்டு நின்னான்னா எனக்குக் கோபம் வருமா இல்லியா? நீயே சொல்லு.” “அதுக்குக் கோபம் என் மேலே தானே வரணும்ப்பா? பேசினவர் மேலே கோபப்பட்டு அவர் வீட்டுக்குப் போலீஸ்காரர்களை அனுப்பி ‘ரெய்டு’ பண்ணச் சொல்றது என்ன நியாயம்? இன்னிக்கி இந்த தமிழ்நாட்டுலே ஜனங்களுக்குத் தலைவன்னு தெரியிறவங்கள்ளே ஒரே ஒரு யோக்கியமான நல்ல மனுஷர் சிவகாமிநாதன் தான்.” “ஏதேது... பேசறதைப் பார்த்தா... இன்னும் கொஞ்ச நாளிலே நீயே அவங்கூடச் சேர்ந்துக்கிட்டு மேடையிலே என்னை எதிர்த்துப் பேசினாலும் பேசுவே போலிருக்கே.” “சரியாத்தான் சொல்றீங்கப்பா; நாளைக்கே நான் அதைச் செய்தாலும் ஆச்சரியப் படறதுக்கில்லேப்பா. நான் அதையும் முடிவு பண்ணியாச்சு...” “இதெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்லேம்மா? அமெரிக்கன் சென்டரிலிருந்தே ‘டிரைவ் இன்’னுக்குப் போறதாச் சொல்லிக் காரையும் டிரைவரையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பிவிட்டு நீ பாட்டுக்குக் கண்டவனோட கிளம்பிக் கண்டவன் வீட்டுக்கெல்லாம் போறது நம்ம ஸ்டேட்டஸுக்குச் சரியா இருக்காது.” டிரைவர் வீட்டுக்குப் போய் அப்பாவிடம் எல்லாம் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் அதற்காக அஞ்சவோ பதறவோ இல்லை. “நான் பச்சைக் குழந்தையோ வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பாப்பாவோ இல்லை அப்பா! எங்கே போகலாம் யாரைப் பார்க்கலாம் எங்கே போகக் கூடாது, யாரைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் எனக்குத் தெரியும்பா!” “முடிவா நீ என்னதான் சொல்றேம்மா?” “அநாவசியமா நீங்க சிவகாமிநாதனுக்குத் தொந்தரவு குடுத்தா நானே கோர்ட்டில் படியேறி வந்து அந்தத் தங்க வளையல்களை அவருக்கு மனம் விரும்பிக் கொடுத்தது நான் தான்னு சொல்லத் தயங்க மாட்டேன்ப்பா!” “அதை மட்டும் தான் சொல்லுவியா? அப்புறமும் ஏதாவது சொல்லுவியா?” “அவசியமானா அதுக்கு மேலேயும் சொல்லத் தயங்க மாட்டேன்.” “உண்ட வீட்டுக்கும் பெத்த தகப்பனுக்கும் துணிஞ்சு துரோகம் செய்யப் போறியா?” “நீங்க செய்துக்கிட்டிருக்கிற சமூகத் துரோகங்களை விட இது ஒண்ணும் அத்தனை பெரிசு இல்லே...” “உன்னை யாரோ நல்லா ‘பிரெய்ன் வாஷ்’ பண்ணியிருக்காங்க.” “ஆமா! என் ப்ரெய்ன்ல இருந்த அழுக்கை எல்லாம் வாஷ் பண்ணிச் சுத்தமா இப்போ ஆக்கியிருக்காங்க.” “நீ உருப்படப் போறதில்லே... நாசமாத்தான் போகப் போறே.” “உங்க ஆசீர்வாதம் அப்பா...” டெலிபோனை ரெஸ்டில் அழுத்தி வைத்தாள் அவள். “அடடே! ஃபோனை வெச்சிட்டீங்களா? நான் பேசணும்னு இருந்தேனே...?” என்று இன்ஸ்பெக்டர் அது வரை விலகித் தொலைவில் இருந்தவர் அவளருகே வந்தார். அவள் புறப்படத் தொடங்கியதைக் கவனித்து, “ஜீப்பிலேயே கொண்டு போய் விட்டிடச் சொல்றேம்மா! எங்கே வீட்டுக்குத்தானே?” என்றார். “இல்லே! எனக்குப் போகத் தெரியும்! நான் போக வேண்டிய இடத்துக்குப் போயிப்பேன்.” அவள் தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். மறுபடி அவள் சாமிநாய்க்கன் தெருவுக்குப் போய் முத்துராமலிங்கத்தையும் சிவகாமிநாதனையும் சந்தித்த போது அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே ஒரு பெரிய பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். ‘காட்டு தர்பார் ஆட்சியையும் போலீஸின் காட்டுமிராண்டித்தனத்தையும் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்’ - என்று சுவரொட்டி அடிக்க விவரம் எழுதிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம். ‘பேசுவோர் சிம்மக்குரல் சிவகாமிநாதன், முத்துராமலிங்கம்’ என்று அவன் எழுத ஆரம்பித்திருந்த பேனாவை அவன் கையிலிருந்து வாங்கி ‘மங்கையர்க்கரசி’ என்று மூன்றாவது பேராகத் தன்னையே எழுதிக் கொண்டாள் அவள். சிவகாமிநாதனும் அதைப் பார்த்துக் கொண்டுதானிருந்தார். “நல்லா யோசனை பண்ணிக்கோம்மா! இது ஒரு தர்ம யுத்தம். வர்ற தர்மசங்கடங்களைத் தவிர்ப்பதற்காக இப்போ நானே நீ குடுத்த தங்க வளையல்களைத் திருப்பித் தந்து விடலாம்னு பார்க்கிறேன்” என்றார் சிவகாமிநாதன். “அப்படிச் செஞ்சா நீங்க என்னை எங்கப்பாவுக்குக் காண்பிச்சுக் குடுத்துடறீங்கன்னு அர்த்தம்! அந்த வளையலை வச்சுத்தான் அவரே உங்க மேலே திருட்டுக் குத்தம் சுமத்தறத்துக்குப் போலீஸை அனுப்பி வச்சிருக்காரு... நான் ‘அது திருட்டு இல்லே. நானே விரும்பி நன்கொடையாக் குடுத்தது தான்’னு போலீஸுக்கும் எங்கப்பாவுக்கும் பதில் சொல்லிவிட்டு வந்திருக்கேன். இப்போ நீங்க அதைத் திருப்பிக் குடுத்து என்னை எங்கப்பாவுக்கும் போலீஸுக்கும் முன்னாடி ‘லெட் டவுன்’ பண்ணப் போறீங்களா சார்?” சிவகாமிநாதன் யோசித்தார். முத்துராமலிங்கம் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான். சில விநாடிகள் யோசனைக்குப்பின் அவர் முத்துராமலிங்கத்தையும் மங்காவையும் பார்த்துத் தீர்மானமான குரலில் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாய் அளந்து எண்ணிச் சொன்னார். “சரி! என்ன வந்தாலும் வரட்டும். நான் அந்த வளையல்களைத் திருப்பித் தரலே! நீயும் சிந்தாதிரிப்பேட்டைக் கூட்டத்திலே எங்களோட மேடையிலே பேச அனுமதிக்கிறேன். ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோம்மா! இதுவரை இருந்ததை விட இனிமேல் தான் பொது வாழ்க்கையிலே எனக்குச் சோதனைகளும், விரோதங்களும், அபாயங்களும் அதிகம்கிறதை நீ புரிஞ்சுக்கணும். ஒரே காரணம் நீ இப்போ எங்களோட வந்திருக்கிறதுதான். அதுக்காக எத்தனை உறுதி வேணுமோ அத்தனை உறுதி உங்கிட்டக் குறையாம இருக்கணும். நீயே உறுதியா இல்லாட்டிக் கஷ்டம் தான் அம்மா.” நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|