18 எப்போது பொழுது விடிந்ததென்றே தெரியவில்லை. முத்துராமலிங்கம் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்த போது சின்னி ஒரு பீடியைப் பற்ற வைத்துப் புகை இழுத்தபடி காலைத் தினசரிப் பத்திரிகையோடு வந்து கொண்டிருந்தான். தினசரியை வாங்கிப் பார்த்தபோது முதல் நாள் இரவு வடபழநிப் பொதுக் கூட்டம் பற்றியும் தடியடி பற்றியும் சிவகாமிநாதனும் அவருடைய மகளும் மகனும் கைதான விவரம் பற்றியும் அவர்கள் ஜாமீனில் விடுதலையானது பற்றியும் செய்திகள் வெளிவந்திருந்தன. மற்றொரு பக்கத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் தம்மைக் கைது செய்ததைக் கண்டித்துக் கமிஷனர் ஆபீஸ் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சிவகாமிநாதன் அறிக்கை விட்டிருந்தார். அவர் என்று உண்ணாவிரதம் என்பதாக அறிவித்திருந்தாரோ, அன்று காலையில் தான் புதன் கிழமை. பாபுராஜ் முத்துராமலிங்கத்தை முதல் முதலாக வேலையில் சேரச் சொல்லியிருந்த நான். ஆனாலும் ஸ்டூடியோவுக்குப் புறப்படு முன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் போய்ச் சாமி கும்பிட்டு விட்டு நேரே பைகிராப்ட்ஸ் ரோடும் திருவல்லிக்கேணி ஹைரோடும் சந்திக்கிற ஜாம் பஜார் முனையில் இருந்த பூக்கடையில் மாலை வாங்கிக் கொண்டு சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு ஆர்வத்தோடு புறப்பட்டுப் போனான் முத்துராமலிங்கம். சின்னி அந்தச் செயலை அவ்வளவாக இரசிக்கவில்லை. “வேலையிலே சேர்ற, நேரத்திலே இதுக்குப் போயி அலையிறியேப்பா... கிடைச்ச வேலை போயிடப் போவுது. பாபுராஜ் ஒரு கிறுக்குப் பய... மறுபடி இராகுகாலம்னு உன்னை வெளியே நிறுத்திடப் போறான்.” “அதில்லே சின்னி! ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ...! இத்தனை பெரிய ஊர்லே அரசியல்ங்கற புதர்க் காட்டிலே ஒரே ஒரு தீரனை - ஒழுக்கமுள்ள நாணயஸ்தனை நான் முதல் முதலா இப்பத்தான் பார்க்கிறேன். அந்த மனுஷனுக்கு மரியாதை பண்ணிட்டு வந்துடறேன்.” “போ... சுருக்க வந்து சேரு” - என்று உண்ணாவிரதப் பந்தலுக்கு, எதிர் பிளாட்பாரத்திலேயே விலகி நின்று கொண்டான் சின்னி. உண்ணாவிரதத்துக்காகப் போடப்பட்டிருந்த கிடுகுப் பந்தலில் கிடுகு பற்றாக் குறையால் வெய்யில் ஒழுகியது. சிவகாமிநாதன், அவர் மகள், மகன், தொண்டர்கள் சூழ உண்ணாவிரதமிருந்தார்.
முத்துராமலிங்கம் அவருக்கு மாலையை அணிவித்து வணங்கிவிட்டு வந்தான். அப்போதே காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது. பஸ் ஏறிச் சின்னியும் அவனும் கோடம்பாக்கம் போய்ச் சேர்ந்த போது ஏறக்குறையப் பதினோரு மணி ஆகிவிட்டது. ஸ்டூடியோவில் பாபுராஜ் இல்லை. யூனிட்டோடு அவன் காந்தி மண்டபத்தில் அவுட்டோருக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.
சின்னி சொன்னது போலவே ஆகிவிட்டது என்பதை உணர்ந்த போது முத்துராமலிங்கத்துக்கு வருத்தமாக இருந்தது. தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்தைத் தேடிப் போய் அவருக்கு மாலையணிவித்ததில் ஏற்பட்ட திருப்தி வேலையைக் கோட்டை விட்டுவிட்டோம் என்ற ஏமாற்றத்தில் மெல்லக் கரையைத் தொடங்கியது. ஒரு தற்காலிகமான பதற்றமும் ஏற்பட்டது. சின்னி விடவில்லை. உடனே ஸ்டூடியோவிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோ ரிக்ஷா பிடித்து இருவருமாக பாபுராஜ் அவுட்டோர் யூனிட் போயிருந்த காந்தி மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்திருந்த போது காந்தி மண்டபப் புல் வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. “சொன்னாச் சொன்ன நேரத்துக்கு வரணும்! நீ என்னாப்பா ஆளு!” என்று பாபுராஜ் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டான். சின்னி அவனைச் சமாதானப்படுத்தி முத்துராமலிங்கத்தை வேலைக்குச் சேர்த்து விட்டுப் போனான். அந்த வேலை ஒன்றும் பிரமாதமாகவோ பெருமைப்படும் படியாகவோ இல்லை. படப்பிடிப்பு விவரங்கள், வசனக்கத்தைகள் அடங்கிய ஐந்தாறு நோட்டுப் புத்தகங்களைச் சுமந்து கொண்டே பாபுராஜுக்குப் பக்கத்தில் அணுக்கத் தொண்டன் மாதிரி சதா நிற்க வேண்டியிருந்தது. அவன் எப்போதாவது எதையாவது சொல்லிக் கேட்டால் நோட்டுப் புத்தகத்தில் அந்தப் பக்கத்தைப் பிரித்துக் காட்ட வேண்டியதுதான் வேலை. அவன் கைநாட்டுப் பேர்வழியோ, கத்துக் குட்டியோ உரிமையாளரான முதலியாருக்கு வேண்டியவன் என்ற முறையில் அங்கே எல்லாரும் பாபுராஜுக்குப் பயந்தார்கள். மரியாதை காட்டினார்கள். ஒத்துப் பாடினார்கள். “ஏதுடா நாம ரொம்பப் படிச்சவனாச்சே, இவன் நம்மை அதிகாரம் பண்றதாவது ஒண்ணாவதுன்னா நினைக்காதே! பணிவா அடக்க ஒடுக்கமா இருக்காட்டி இந்த ஃபீல்டிலே நீ எதுவுமே கத்துக்க முடியாது! ஜாக்கிரதை!” என்று முப்பது நிமிஷங்களுக்குள் இருபது தடவையாவது முத்துராமலிங்கத்தை எச்சரித்து விட்டா பாபுராஜ்! அதிலிருந்து பாபுராஜின் ‘காம்ப்ளெக்ஸ்’ புரிந்தது. அன்று காலை பதினொரு மணியிலிருந்து முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை சென்னை நகரோடும், அந்தத் தொழிலோடும் பிணைக்கப்பட்டது. அங்கே உதவிக் காமிராமேன் சண்முகம் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடிலேயே கீழ்ப்பகுதி கடைகளாகவும், மாடிப்பகுதி முழுவதும் திருமணமாகாத தனிக்கட்டைகள் வாடகைக்குக் குடியிருக்கும் அறைகளாகவும் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் சண்முகம் வசித்து வந்தார். தனது அறையில் தங்கிக் கொள்ள வருமாறு அவரே முத்துராமலிங்கத்தைக் கூப்பிட்டார். முத்துராமலிங்கத்துக்கு அவரைப் பிடித்துப் போய்விட்டது. சண்முகம் மதுரைக்காரர். நன்றாகப் பழகினார். நல்ல சுபாவங்கள் உள்ளவராகத் தெரிந்தது. “வழக்கமாக ஒவ்வொரு ரூம்லேயும் ரெண்டு பேர் தான் இருக்காங்க. நூத்தி எழுபது ரூபா மாச வாடகை. என் சௌகரியத்துக்காக நான் இதுவரை தனியாத்தான் இருந்தேன். இப்ப உங்களைக் கூட இருக்கலாம்னு கூப்பிடறேன். என் வாடகை குறையும்கிறதுக்காக இல்லே. உங்க நட்புக்காகத்தான் கூப்பிடறேன்” என்று முத்துராமலிங்கத்திடம் சொன்னார் அவர். முத்துராமலிங்கம் அன்றிரவு கொலைகாரன் பேட்டைக்குப் போய்ச் சின்னியிடம் சொல்லி விடைபெற்ற பின் தன்னுடைய சூட்கேஸ் முதலிய சாமான்களோடு கோடம்பாக்கம் ஹைரோடு மாடி லாட்ஜுக்குக் குடியேறிச் சண்முகத்தோடு தங்கிவிட்டான். லாட்ஜ் உரிமையாளர் அந்த லாட்ஜ் திறக்கப்பட்ட சமயத்தில் பிரமாதப்பட்டு ஓடிய ‘இளைஞர் உலகம்’ என்ற தமிழ் சினிமாப் படத்தின் பெயரையே அந்த விடுதிக்குச் சூட்டியிருந்தார். மாடிப் பகுதியில் இருந்த முப்பது அறைகளில் இருபத்தைந்துக்கு மேல் சினிமா ஸ்டூடியோ படப்பிடிப்புக் கம்பெனிகளோடு தொடர்புடையவர்களே நிரந்தர அறைவாசிகளாகத் தங்கியிருந்தனர். சில நாட்களிலேயே முத்துராமலிங்கத்துக்கு இடமும் மனிதர்களும் நன்றாகப் பிடிபட்டு விட்டார்கள். ஸ்டூடியோவிலும் அவுட்டோரிலும் வேலைக்காகச் செலவழிந்த நேரங்களைத் தவிர மாலை வேளைகளிலும், இரவிலும், தியாகி சிவகாமிநாதனின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் தேடிச் சென்று விருப்பத்தோடு கேட்டுவிட்டு வந்தான் அவன். சிந்தாதிரிப் பேட்டைக்குத் தேடிச் சென்று தானே தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய ‘தியாகியின் குரலுக்’குச் சந்தா கட்டினான். “உங்களைப் போலத் துடிப்பும் துணிவுமுள்ள இளைஞர்களைப் பார்க்கறப்பத்தான் கொஞ்சம் ஆறுதலாயிருக்குத் தம்பீ! எதிர் நீச்சல் போட்டே என் வாழ்க்கையைக் கழிச்சாச்சு. ஆனா இன்னும் எதிர் நீச்சல் போடறதிலே நான் சலிப்படைஞ்சிடாமத்தான் இருக்கேன்” என்றார் சிவகாமிநாதன். பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தற்செயலாக நேருக்கு நேர் மிஸ்.மங்காவைச் சந்திக்க நேர்ந்தது. நகரின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் அவன் சார்ந்திருந்த கம்பெனியின் படத்திற்காக ஷூட்டிங் ஏற்பாடாகியிருந்தது. வழக்கமாக வாடிக்கையாளர்கள் குளித்துக் கொண்டிருந்த போதே கதாநாயகனும், கதாநாயகியும் அங்கே சந்திப்பது போலப் படப்பிடிப்பு நடைபெற்றாக வேண்டும். அன்று ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நீச்சல் குளத்தைப் பொறுத்தவரை மிக மிகக் குறைவாயிருந்தது. அந்த நீச்சல் குளத்தில் வெளியார்களும் கட்டணம் கட்டிவிட்டுக் குளிக்கலாம். படப்பிடிப்பு நடக்கப் போகிறது என்பது தெரியாமல் தற்செயலாக மங்காவும் அங்கே நீச்சல் குளத்திற்கு வந்திருந்தாள். ஒருவரை மற்றொருவர் அங்கே அந்த உடையில் எதிர்பாராததால் இருவருக்குமே ஆச்சரியம் தான். சமாளித்துக் கொள்ளச் சில விநாடிகள் ஆயின. முத்துராமலிங்கம் தான் முதலில் அவளைக் கேட்டான். “இன்னும் பர்மிங்ஹாம் போகலியா? டிரிப் என்ன ஆச்சு?” “போகலே! டிரிப் ஒரு மாசம் தள்ளிப் போச்சு! நீங்க எங்கே இப்பிடி...?” “நானா? நான் இந்த சினிமா கம்பெனியிலே வேலை பார்க்கறேன். இன்னிக்கு இங்க ஷூட்டிங்... குரங்காட்டிக்கு குரங்கை எப்பிடி வேணாலும் ஆட்டி வைக்கிற உரிமை இருக்கிறாப்ல எங்க முதலாளியும் என்னையும் ஷூட்டிங்கிலே நாலு பேர் குளிச்சிட்டிருக்கிற மாதிரி வர்றதுக்காகக் குளிக்கச் சொல்லி ஆட்டி வைக்கிறாரு...” “ஐயையோ! ஷூட்டிங்கா...? அப்படீன்னா நான் சீக்கிரம் டிரஸ்ஸை மாத்திக்கிட்டு ஓடணும். இந்த ஸ்விம்மிங் டிரஸ்ஸிலே நான் படத்திலே விழுந்து வச்சேன்னா ‘மந்திரி மகள் நீச்சல் உடையில் படப்பிடிப்பில் தோன்றினார்’னு எந்தப் பேப்பர்க்காரனாவது போட்டுடப் போறாங்க.” “இது இல்லாட்டி உங்கப்பாவைப் பத்திப் பேப்பர்ல வர்றத்துக்கு வேற ஒண்ணுமே இல்லியா என்ன? நாள் தவறாமதான் லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம்னு பேப்பர்லே உங்கப்பா பேரு நாறிக்கிட்டிருக்கே? போறாத கொறைக்கு அந்த மனுசன் சிவகாமிநாதன் கூட்டம் போட்டு இதையெல்லாம் சொன்னாருங்கறத்துக்காக... அவரோட கூட்டத்தைக் கலைச்சு அரெஸ்ட் பண்ணி அவர் மேலே பொய் வழக்கு வேறப் போட வச்சிருக்காரு.” “நீங்க அந்த வடபழநிக் கூட்டத்துக்கு வந்திருந்தீங்களா? நான் கூட அன்னிக்கு அம்மாவோடக் கோயிலுக்கு வந்திருந்தேன். திரும்பறப்ப அவரு பேச்சைக் கேட்டேன். பிரமாதமாப் பேசறாரு! எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிப் போச்சு.” “வந்திருந்தது மட்டுமில்லை. உன்னையும் உங்கம்மாவையும் கூடத் தூரத்திலிருந்து பார்த்தேன். தியாகி சிவகாமிநாதன் மகள் உண்டியல் குலுக்கிட்டு வந்தப்ப மந்திரி சிதம்பரநாதன் மகளான நீ அதிலே அஞ்சு ரூபா போட்டதையும் பார்த்தேன். உங்க காருக்குப் போக வழியில்லேன்னுதானே அன்னிக்குக் கூட்டத்தையே கலைச்சீங்க?” “ஐயையோ நான் கூடவே கூடாதுன்னேன்! டிரைவர் தான் என் பேச்சைக் கேட்காமே அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அன்னிக்கி அத்தனை கலாட்டாவும் பண்ணி வச்சான்.” “இந்தத் தேசத்து அரசியல்லே உங்கப்பா மாதிரி ஆளுங்க கை ஓங்கியிருக்கிறவரை என் போன்ற இளைஞர்களும், சிவகாமிநாதன் போன்ற முதியவர்களும் இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தியே ஆகணும் போலிருக்கு.” “இளையத் தலைமுறையைச் சேர்ந்தவள்ங்கற முறையிலே எங்கப்பாவோட அரசியல் எனக்கும் கூடத்தான் பிடிக்கலே.” “பிடிக்கிறதோ பிடிக்கலியோ, நீ அவரோட மகள். அவரை எதிர்க்க முடியாது.” “எக்ஸாக்ட்லி... அப்பிடித்தான் நான் இருக்கேன். மறுபடி எப்பப் பார்க்கிறது?” என்று கேட்டுக் கொண்டே பெண்கள் உடை மாற்றும் அறையை நோக்கி விரைந்தால் மங்கா. அவன் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவள் அந்த உடையில் மிக மிக அழகாக இருந்தால். அதைப் பற்றி அவன் அவளிடமே ஒரு வார்த்தை புகழ்ந்து சொல்லியிருந்தால் ஒரு வேளை அது அவளுக்கு மகிழ்ச்சியா யிருந்திருக்கலாம். அதை விட்டு விட்டு அவளுடைய அப்பாவின் லஞ்ச ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் பற்றியே நேரில் பேசிவிட்டு அவள் சென்ற பிறகு அவளுடைய அழகைப் பற்றி நினைக்கும் தன் செயலைத் தானே வியந்து கொண்டான் முத்துராமலிங்கம். பாபுராஜ் நீச்சல் உடையணிந்த ஏழெட்டு எக்ஸ்ட்ரா நடிகைகள் சூழ அதே போல உடையணிந்த அல்லது அதை விடக் குறைவான உடையணிந்த கதாநாயகியோடு ஒரு வேனிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். “என்னப்பா...? யாரோ பொம்பளை கூடப் பேசிக் கிட்டிருந்தியே, யாருப்பா அது?” “என் கூடக் காலேஜிலே படிச்சவ.” “அவளை ஏன்ப்பா விட்டே... ஷோக்கா இருந்தாளே... இந்த ஸீன்லே அவளையும் குளிக்க வச்சுக் காமிராவுக்குள்ளே பிடிச்சுப் போட்டிருக்கலாமே...?” “அவ மந்திரி எஸ்.கே.சி. நாதனோட மக. நீங்க எங்கே காமிராவிலே பிடிச்சிடப் போறீங்களோன்னு பயந்து தான் அவளே இத்தினி அவசர அவசரமாப் போறா.” “ஐயையோ! பெரிய இடத்து விவகாரம். பேசறதே ஆபத்து! வா வேலையைப் பார்க்கலாம்” என்று மந்திரி என்ற பேரைக் கேட்டதுமே பாபுராஜ் பயந்து உதறினான். ‘எல்லா வகையிலும் கெட்டவர்கள் பெரிய பதவியில் இருக்கிறார்களே என்பதற்காக அவர்களுக்குப் பயந்து பதறி மரியாதை செலுத்தும் இந்த அடிமைக்குணம் இந்த நாட்டை விட்டு என்று தான் போகப் போகிறதோ?’ என்ற ஏக்கத்தோடு நீச்சல் குளத்தில் இறங்கினான் முத்துராமலிங்கம். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|