நிறைவுரை நடந்த கதைக்குத்தான் சம்பிரதாயமான முடிவுகள், சுபங்கள், மங்களங்கள் எல்லாம். இது நடந்த கதையோ நடந்து முடிந்துவிட்ட கதையோ இல்லை. எங்கோ நடக்கிற கதை... அல்லது இங்கேயே நம்மைச் சுற்றி நடக்கிற கதை. இன்னும் பச்சையாகச் சொல்லப் போனால் நடந்து கொண்டிருக்கிற கதை. நடந்து கொண்டிருக்கிற கதைகள் எப்படி முடியும்? எவ்வாறு முடிய இயலும்? ஆகவே இது நடக்கிறது. இன்னும் நடக்கிறது! இந்தக் கதாபாத்திரங்களை நீங்கள் கூட உங்கள் அருகருகே எப்போதாவது சந்திக்கலாம்! சந்தித்தால் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஆதரியுங்கள் அல்லது அனுதாபப்படுங்கள்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்று மகாகவி பாரதி பாடியது போல் மூத்த தழல் வீரரான சிவகாமிநாதனையும் - இளைய தழல் வீரர்களான முத்துராமலிங்கம், சண்முகம் முதலியோரையும் இந்த நகரத் தீமைகள் வெந்து தணிவதற்காக இதனிடையே பொதித்து வைத்து விட்டு விடைபெறுகிறேன். தந்தையின் பதவி, பணம், சுகங்களில் மயங்காமல் அவரது ஊழல்களை வெறுத்து, அவரிடமிருந்து வெளியேறும் ஒரு மகள்; சொந்தத் தந்தையை விடத் தன் ஞானத் தந்தையை மதிக்கும் ஒரு மகன், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றும், ‘சுதந்திரப் போராட்டம் இன்னும் முடியவில்லை’ என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு சத்ய விவசாயி - இவர்களை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது உங்களுக்கு அப்படி ஒன்றும் சிரமமாயிருக்காது என்று நினைக்கிறேன். சத்ய விவசாயங்களில் அறுவடையும் மகசூலும் கூட அவ்வளவு சீக்கிரமாகக் கைக்குக் கிடைக்காது. சிறுகீரை பயிரிடுகிறவன் பலனுக்காகப் படுகிற அவசரத்தைத் தென்னை பயிரிடுகிறவன் பட முடியாது. படவும் கூடாது. பொது நலனுக்குப் போராடுகிற சத்ய விவசாயிகள் தென்னை பயிரிடுபவர்களைப் போன்றவர்கள் என்பது உங்களுக்கும் புரிந்திருக்க வேண்டியது அவசியம். வணக்கம். நன்றி. நிறைந்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|