14 முதல் நாளிரவுச் சந்திப்பையும் - சின்னியையும் அவன் நினைவூட்டியது அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. முத்துராமலிங்கத்தை உறுத்துப் பார்த்தார் வைரவன். பார்வையில் சுமுகத் தன்மை அறவே கலவாத கடுகடுப்புத் தெரிந்தது. அந்தக் கடுகடுப்போடு அவனை வினவினார் அவர். “என்ன சொன்னே...? காதிலே சரியா விழலே. இன்னொரு வாட்டி சொல்லப்பா.” “உங்க நண்பர் சின்னி அனுப்பிச்சாருன்னேன்” என்று சற்று இரைந்த குரலிலேயே சொன்னான் அவன். “கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் ரெண்டு நாளு எங்கயாவது பார்த்துப் பேசிட்டாலே உடனே நண்பர்னுடறாங்க...” செலுத்தவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் நமுட்டுக் கோபத்தோடு அவர் சிரமப்படுவதை முத்துராமலிங்கம் கவனித்தான். “உனக்கு என்ன வேலை தெரியும்?” “உங்ககிட்ட என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா அது என்னாலே முடியுமா முடியாதான்னு நான் பதில் சொல்லிடலாம்.” “இப்ப நான் அவசரமா வெளியிலே போகணும். நீ நாளைக்கி இதே நேரத்துக்கு வர முடியுமா?” பதில் பேசாமல் தலையாட்டிவிட்டு ஒரு தாளில் தன்னுடைய படிப்பு - தகுதி முதலிய விவரங்களை எழுதி அவரிடம் கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான் அவன். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பது போலச் சின்னியிடம் ஏதோ ஓர் அவசரத்தில் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்து விட்ட வார்த்தைக்காக அவர் பூசி மெழுகுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. பட்டணத்தில் யாரிடமிருந்தும் எதற்கும் தெளிவான பதில் கிடைக்காததை அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் வந்தான். தீர்க்க முடியாதவற்றையெல்லாம் தவிர்க்க முயலுவதும், தீர்மானிக்க முடியாதவற்றை எல்லாம் பூசி மெழுகுவதுமாக நாகரிகமாய் உடையணிந்த மனிதர்களே நகரம் முழுவதும் நிறைந்திருப்பதாகத் தெரிந்தது. யாருக்கும் எதிலும் வைராக்கியமோ, அக்கறையோ, முனைப்போ தெரியவில்லை. நேரே திரும்பிப் போய்ச் சின்னியிடம் நடந்ததைச் சொன்னான் முத்துராமலிங்கம். சின்னி அதைக் கேட்டுக் கோபப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. சிரித்துக் கொண்டே முத்துராமலிங்கத்துக்குப் பதில் கூறினான் அவன்: “ராத்திரி இங்க வர்றப்பத் தெரியற வைரவன் வேறே. மத்த நேரத்து வைரவன் வேறே! சரி, விட்டுத் தள்ளு... நான் வேற எடத்துலே உனக்கு ஏற்பாடு பண்றேன். வா... சாப்பாட்டை முடிச்சிக்கிட்டுப் போகலாம்...”
எதற்கும் அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையாத சின்னி ஒரு ஞானியைப் போல் அந்தக் கணத்தில் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றினான். குறையும் பலவீனமும் உள்ள மனிதர்களைப் பொறுத்துக் கொள்ளவும், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் தன்னையும், மனிதர்கள் குறையும் பலவீனமுள்ளவர்களாக இருப்பதுதான் இயல்பு என்று புரிந்து பொறுத்துக் கொண்டு, அதை ஏற்கத் தயாராயிருக்கும் அந்தப் பாமரனையும் ஒப்பிட்டான் அவன். வாழ்க்கை அனுபவங்களிலேயே பழுத்துச் சின்னி வேதாந்தியாகி விட்டானோ என்று கூட வியப்பாயிருந்தது அவனுக்கு.
“இவ்வளவு பேரையும் இவ்வளவையும் நீ பொறுத்துக்கிட்டு அட்ஜஸ்ட் பண்றது பெரிய காரியம் சின்னி...” “பெரிசோ, சிரிசோ... இங்கே தான் காலந்தள்ளணும்... இவர்களோட தான் காலந்தள்ளணும்... மொறைச்சிக்கிட்டுப் போயிட முடியாது” என்றான் அவன். ஏதோ ஒரு விதத்தில் உலகை அந்தப் பாமரன் தன்னை விடச் சரியாகவே கணித்திருக்கிறானோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம். கௌடியா மடத்துக்கு எதிரே இருந்த ஒரு மிலிடரி ஹோட்டலில் பகல் உணவை முடித்துக் கொண்டு ஓர் ஆட்டோ ரிக்ஷாவில் புறப்பட்டார்கள் அவர்கள். கோடம்பாக்கத்தில் வடபழனி தாண்டி ஒரு பிரபல திரைப்பட ஸ்டூடியோவின் பெயரை ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்தான் சின்னி. கையில் காயத்துக்காகக் கட்டுப் போட்ட நிலையில் அவன் அலைவதைப் பரிவோடு குறிப்பிட்டுப் பேசினான் முத்துராமலிங்கம். “கையை இந்த நிலையிலே வச்சுக்கிட்டு எனக்காக நீ அலையறதைப் பார்த்துச் சங்கடமா இருக்கு சின்னி!” “பலவிதமா வாழ்க்கையிலே அடிபட்டு அடிபட்டுச் சுகம் எது சங்கடம் எதுன்னு பிரிச்சுப் புரிஞ்சுக்கறதே எனக்குச் சிரமமாப் போச்சுப்பா...” “நீ ஒரு சமுதாய ஞானி... அனுபவ ரீதியில் பழுத்த யதார்த்த ரிஷி... அதான் இப்பிடி உன்னாலே பேச முடியுது. அதற்குச் சின்னி பதில் சொல்லவில்லை. ஆட்டோ ஓசையில் தொடர்ந்து உரையாடுவது இயலாத காரியமாயிருந்தது. கால்மணி நேரம் ஆட்டோ பயணம் தொடர்ந்தது. ஸ்டூடியோ கேட்டிலேயே தான் பார்க்க வேண்டிய ஆளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு ஆட்டோவுக்குக் கணக்குத் தீர்த்துத் திருப்பி அனுப்பிவிட்டான் சின்னி. “ஒம்பதாம் நெம்பர் ஃப்ளோருக்குப் போகணும். அதுக்கு முன்னாடியே மேக்கப் அனெக்ஸ் ஒண்ணு இருக்கும், அந்தப் பொம்பிளை அங்கே தான் இருக்காம்.” “எந்தப் பொம்பிளை சின்னி?” “அதான்ப்பா கவர்ச்சி நடிகை குமார் ஜெகஜ்ஜோதீன்னு பேப்பர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் படம் வருதே...?” “ஆமாம்... அது யாரு...?” “முதல்லே... நம்ப கொலைகாரன்பேட்டை வீட்லதான் இருந்திச்சி. அப்ப இந்தப் புரொட்யூசர் அங்கே வரப்போக இருந்தான். அப்ப அவன் கூடவே இட்டுக்கிட்டுப் போயி ஸ்டாராக்கிட்டான்... நம்ப மேலே விஸ்வாசம் உண்டு... ஒரு வார்த்தை சொன்னாக் கேக்கும்.” “மத்தவங்களுக்கு விசுவாசம் இருக்கோ இல்லையோ... எல்லாருக்கும் அது இருக்கும் - இருக்கணும்னு உனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு...” “அப்படியில்லேப்பா! சின்ன வயசிலே கஷ்டப்பட்டு மேலே வந்தவனுக்கெல்லாம் அது இருக்கும்; இருக்கணும்.” ஒன்பதாம் நம்பர் ஃப்ளோர் வாசலில் அனெக்ஸுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரு பிரம்பு நாற்காலியில் காபரே நடனத்துக்குரிய ஜிகினாப் போல மினுமினுக்கும் கவர்ச்சி உடையுடன் உடலழகு விட்டுத் தெரியும் இள நடிகை ஒருத்தி மேக்கப்போடு அமர்ந்திருந்தாள். சின்னியைப் பார்த்ததும் அவள், “வாங்கண்ணே! ஏது இப்படி... இந்தப் பக்கம் அபூர்வமா...?” என்று புன்னகையோடு எழுந்து அவனை வரவேற்றாள். “உங்களவரு ஊர்ல இருக்காராம்மா? இவருக்கு ஏதாச்சும் ஒரு வேலை கேக்கணும் அவரிட்ட... நீ ஒரு வார்த்தை சொன்னீன்னா நிச்சயம் நடக்கும் தங்கச்சீ!” “கட்டாயம் சொல்றேன்... அண்ணனுக்கு இல்லாததா?” என்று கூறியபடி முத்துராமலிங்கத்தின் பக்கமாகப் புன்னகையோடு திரும்பிக் கும்பிட்டாள் அவள். “இது நம்ம ஜெகஜோதி... இவரு முத்துராமலிங்கம்... எம்.ஏ. படிச்சிருக்காரு... கதை - பாட்டு - வசனம் எழுதறதுலே எல்லாம் தெறமை உண்டு” என்று சின்னியே துணிந்து ஜோடித்து அறிமுகத்தைச் செய்து வைத்தான். “அது உள்ளே ஷூட்டிங்கிலே இருக்குது! இப்ப இங்கே வரும்... நான் சொல்லி வழி பண்ணிடறேன்.” “நான் இருக்கணுமா...?” “ஏன் வேற எங்கேயாச்சும் போவணுமா?” “எங்கேயும் போக வேணாம்? நானும் இருக்கணுமா? வேண்டாமான்னு தான் கேட்டேன்.” “இருங்கண்ணே... காபி கொண்டாரச் சொல்லட்டுமா?” சின்னியின் பதிலை எதிர்பாராமலே ஒரு பையனைக் கைதட்டி அழைத்துக் காபிக்குச் சொன்னாள் அவள். அப்போதிருந்த காபரே நடனக்காரிக்கான ஒப்பனையில் அவள் ஒரு வனதேவதை போல அழகாயிருந்தாள். “நல்லா வச்சிருக்காரில்லே...? நடுப்பெற வேற ஒண்ணு ஊடாடிச்சுன்னியே...? இப்ப அதெல்லாம் இல்லியே தங்கச்சி...?” “அவளும் தான் குலுக்கி மினுக்கிப் பார்த்தா... அவளாலே இவரைக் கவர முடியலே அண்ணே!” என்று கர்வமும் கம்பீரமும் நிறைந்து மிளிரும் ஓர் அழகிய புன்னகையை உதிர்த்தாள் அவள். “உன்னை மாதிரி வருமா தங்கச்சி?” முத்துராமலிங்கத்துக்குத் தெரியும்படி கூச்சமோ தயக்கமோ இன்றி இதைச் சின்னியால் விசாரிக்க முடிந்தது. அவளால் பதில் சொல்ல முடிந்தது. சினிமா உலகின் அதிக வெளிச்சம் பழகிப் பழகி அவர்களுக்குக் கூச்சமே மரத்துப் போயிருக்குமோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம். இப்படி உறவுகள் சினிமா உலகின் பை-புராடக்டா அதாவது துணை உற்பத்தியா - அல்லது சினிமா உலகமே இப்படி உறவுகளின் துணை உற்பத்தியா என்று அந்த விநாடியில் சந்தேகமாயிருந்தது அவனுக்கு. பெண்ணின் கவர்ச்சி அல்லது பணத்தின் கவர்ச்சிதான் அந்த உலகை நடத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. அந்தக் கவர்ச்சிகளின் மோதல்களுக்கு நடுவே இயல்பான திறமையுள்ள சில நல்ல கலைஞர்கள் சிக்கிக் கொண்டிருப்பதும் புரிந்தது. பையன் ட்ரேயில் கொண்டு வந்த காபியைச் சின்னிக்கும், முத்துராமலிங்கத்துக்கும் தானே எடுத்து வழங்கினாள் ஜெகஜோதி. அவளது அந்தச் செயலில் விநயமும் குழைவும் தெரிந்தன. தொந்தியும் தொப்பையுமான உருவத்துக்குப் பொருத்தமில்லாமல் டீ ஷர்ட் பேண்ட் அணிந்த ஒரு நடுத்தர வயதுக் கருப்புக் கண்ணாடி ஆசாமி சிகரெட் புகைத்தபடி ஷெட்டிலிருந்து வெளியே வந்தார். கூடவே கையில் வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் சிகரெட் டப்பாவுமாக ஒரு லைட்பாயும் உடன் வந்தான். “டியர்... யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே அங்கே?” என்று கேட்டுக் கொண்டே வந்த அவர் சின்னியும், முத்துராமலிங்கமும் எதிரே நிற்கிறார்களே என்பதற்காகத் தயங்காமல் அப்படியே அவளைத் தோளில் கை போட்டுத் தழுவிக் கொண்டார். “இந்த மேக் அப்லே... நீ பிரமாதமாயிருக்கே போ... அசந்து மறந்தா... நானே வேற யாரோ புது உருப்படீன்னு உடனே மயங்கி விழுந்திடுவேனோன்னு பயமாயிருக்கு.” “அப்போ இன்னும் புது உருப்படீன்னா உடனே மயங்கிப் போயிடற புத்தி இருக்குன்னு சொல்லுங்க...” “சே! சே! சும்மா பேச்சுக்குச் சொன்னேன்... எந்தக் கழுதையும் உன்னை மாதிரி ஆகுமா?” என்று மறுபடியும் தோளில் கை போட்டு அவளைத் தழுவிக் கொண்டார் அவர். “சின்னி அண்ணன் வந்திருக்குப் பாருங்க...” இப்படி அவள் சொல்லிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பது போல் அவன் பக்கமும் முத்துராமலிங்கத்தின் பக்கமும் அவரது பார்வை திரும்பியது... “வணக்கங்க முதலியாரே.” “அட... வாப்பா... உன்னை நான் பார்க்கவே இல்லையே...?” “அதெப்படி? தங்கச்சி இப்பிடி ஒரு மேக்-அப்போட எதிராலே நிற்கறப்ப சாருக்கு வேற யாருதான் கண்ணிலே பட முடியும்?...” “எப்பிடிப்பா இருக்கே...? நல்ல எக்ஸ்ட்ராங்க வந்தாச்... சொல்லுப்பா? ஒரு குரூப் டான்ஸுக்கு ஆள் வேண்டியிருக்கு...” “இன்னம் எக்ஸ்ட்ராக்களத் தேடற புத்தி போவலியே...?” அவள் வேடிக்கையாகக் குறுக்கிட்டாள். “பின்னென்ன? எக்ஸ்ட்ரா ஸ்ப்ளையர் கிட்டப் பேசறப்ப ஒரு கூடை கத்திரிக்காயா வேணும்னு கேப்பாங்க...” இதுதான் நல்ல சமயமென்று சின்னி வந்த காரியத்தை ஆரம்பித்தான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|