12 அந்தச் சிறுவன் வந்து எச்சரித்த போது தான் அதுவரை அங்கு தான் உணர்ந்திராத பதற்றத்தையும், பரபரப்பையும் முத்துராமலிங்கம் உடனடியாக உணர்ந்தான். ‘யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்தில் தொடர்ந்து தங்கியிருக்க முடியாது - கூடாது’ என்று அவள் - நளினி எச்சரித்தது அவனுக்கு நினைவு வந்தது. தொழிற் போட்டு - பகைமைகள் காரணமாகச் சின்னியின் சாராய வியாபாரத்தைக் காட்டிக் கொடுத்தது போல இதையும் யாரோ எதிரிகள் போலீசுக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னைப் போல் ஒருவன் எந்தத் தவறும் செய்யாமல் எதற்காக அப்படி அப்போது ஒளிந்திருக்கிறோம் என்று எண்ணிய போது அவனுக்கு மனம் கூசியது. சமூக அமைப்பில் போலீஸ், சட்டம் எல்லாமே மிகப் பல சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவே தொடர்ந்து பலரைத் தண்டித்துக் கொண்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. கீழே பெண்களின் கூக்குரல்களும் அலறல்களும், ஓடித் துரத்தும் காலடி ஓசைகளும், அடைபடும் கதவுகளுமாக ஒரே பரபரப்பு. முத்துராமலிங்கத்துக்கு மனம் தவித்தது. ஒரு பாவமுமறியாத அப்பாவிப் பெண்கள் போலீஸ் ரெய்டில் சிக்கித் தவிக்கும் போது ஆண் பிள்ளையாகிய தான் மாடியில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் பதுங்கிக் கொண்டிருப்பது பேடித்தனம் என்று கருதினான் அவன். அவன் மனச்சாட்சி குமுறி எழுந்தது. கீழே நாய் இடைவிடாமல் குரைக்கும் ஒலியில் போலீஸாரின் துரத்தும் அதட்டல்களும் கைவளை ஓசைகளும், பெண்களின் பயங்கலந்த குரல்களும் இணைந்து கரைந்தன. பல ரெய்டுகளைச் சந்தித்த அநுபவமும் பழக்கமும் உள்ள வாட்ச்மேன், ஆயா, ஏவல்கூவல் வேலைக்காக இருந்த எடுபிடிச் சிறுவர்கள் எல்லாருமே சுவரேறிக் குதித்துத் தப்பி ஓடியிருப்பார்கள் என்று தோன்றியது. அவர்களுடைய குரல்கள் கீழ்பக்கம் கேட்கவில்லை. துரத்தப்பட்டும், விரட்டப்பட்டும், யாராலோ, யாருக்கோ விற்கப்பட்டும் வந்திருந்த அந்த அபலைப் பெண்கள் மட்டும் மாட்டிக் கொள்வதா என்று சிந்தித்தான் அவன். சமூகத்தின் ஒட்டு மொத்தமான கூட்டுத் தவறுகளுக்குக் கூட அபலைகள், நிராதரவானவர்கள் அப்பாவிகள் மட்டுமே பொறுப்பாவதும் இப்படித்தான் என்று தோன்றியது. தான் மட்டும் ஒளிந்து மறைந்து தப்ப வேண்டுமென்ற முனைப்புக்கும் பயத்துக்கும் என்ன காரணம் என்று தனக்குத் தானே சிந்தித்தான் அவன். ஒவ்வொரு பயத்துக்கும் ஒரு சுயநலம் தான் காரணம் என்று புரிந்தது. சுயநலம் தான் பயப்பட வைக்கிறது. சுயநலம் தான் தனது குற்றத்தைப் பிறர் கண்டு சொல்வதற்குள் முந்திக் கொண்டு தான் பிறரைக் குற்றம் சாட்ட வைக்கிறது. சுயநலம் தான் ஒளிந்து கொள்ள வைக்கிறது. சுயநலமும் பயமும் இல்லாவிட்டால் மனிதர்களின் உலகம் சொர்க்க புரியாக இருக்கும் என்று எண்ணினான் அவன். இப்படி எண்ணிய மறுகணமே அவனால் ஒளிந்திருக்க முடியவில்லை. தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொள்ள முடியவில்லை. பிறர் அகப்படும் போது தான் மட்டும் தப்ப வேண்டும் என்ற முனைப்பு அழிந்தது. அவன் மாடிப்படிகளில் விரைந்து இறங்கிக் கீழே சென்றான். அளவு பிசகாமல் அவனது வலிமை மிக்க கால்கள் இரண்டிரண்டு படிகளாகத் தாவி இறங்கின. வேகமாக இறங்கின.
கீழ்ப் பகுதியில் நடுக்கூடத்தில் அவன் கண்ட காட்சி முன்பே எதிர்பார்த்ததுதான். அங்கே நாலு பெண்கள் அலங்கோலமான நிலையில் நின்றார்கள். இரண்டு கான்ஸ்டேபிள்கள் அவர்களருகே காவலுக்கு நின்றார்கள். முன்பே அவன் அநுமானித்தது போல் ஆயாக் கிழவி உட்பட மற்ற எல்லோரும் தப்பி ஓடிவிட்டிருந்தார்கள். நாய் மட்டும் ஓடாமல் தோட்டத்தில் கட்டிய இடத்திலிருந்தே குரைத்துக் கொண்டிருந்தது. சுயநலமும் பயமுமே உள்ள மனிதர்களை விட அவை என்னவென்றே புரியாத நல்ல மிருகங்கள் எவ்வளவோ உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அந்த நிலையில் அவனுக்குத் தோன்றியது!
“ஏய்! நில்லு... ஓடினா உதைப்படுவே” என்ற கூப்பாட்டுடன் ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கத்தைப் பிடிக்க விரைந்து ஓடி வந்தான். முத்துராமலிங்கம் திமிறிக் கொண்டு ஓடாததும் தப்ப முயலாததும் அந்தப் போலீஸ்காரனுக்கே ஆச்சரியத்தை அளித்தன. முத்துராமலிங்கம் அருகே வந்ததும் அந்தப் பெண்களின் கூட்டத்தில், ‘நல்லதோர் வீணை’ பாட்டுப் பாடிய அந்த நளினி இல்லாததைக் கவனித்தான். அவள் தப்பிவிட்டாளோ என்ற எண்ணத்தோடு கூடத்தின் இருபுறமும் இருந்த அறைகளைக் கவனித்த போது ஓர் அறை அடைந்திருந்ததும் அதன் வாயிலில் போலீஸ்காரன் ஒருத்தன் காவல் நிற்பது போல் கதவில் சாய்ந்திருந்ததும் பார்வையில் பட்டன. அந்த அறை வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கிய முத்துராமலிங்கத்தைப் பெண்களுக்குக் காவல் நின்ற போலீஸ் தடுத்தான். “ஏய்! இப்பிடி நில்லு! நீ அங்கே போகப்படாது...” அவனது தடையுத்தரவைப் பொருட்படுத்தாமல் முத்துராமலிங்கம் அந்த மூடப்பட்ட அறை வாயிலை நெருங்கி, “உள்ளே யாரு இருக்காங்க...?” என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டேபிளிடம் நிதானமாகக் கேட்டான். “யாரு இருந்தா உனக்கென்னப்பா? உங்கப்பன் இருக்கான் உள்ளார... போப்பா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு?” முத்துராமலிங்கம் அசையாமல் அந்த அறை வாசலிலேயே நின்று கொண்டான். மற்றொரு கான்ஸ்டபிள் ஓடி வந்து, “நீ யாருப்பா இதெல்லாம் கேக்க? இப்ப உன்னையே அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போகப் போறோம்” என்று முத்துராமலிங்கத்தின் சட்டைப்பை, இடுப்பு, எல்லாவற்றையும் சோதனையிட்டு மணிபர்ஸ், சீப்பு, பேனா, கர்சீப் ஆகியவற்றை வெளியே எடுத்தான். “நான் இங்கே மாடியிலே தங்கியிருக்கேன். என்னை நீங்க அரெஸ்ட் பண்ண முடியாது; நான் எந்தத் தப்பும் பண்ணலே.” “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது? விபச்சாரத் தடைச் சட்டத்தின் கீழ் உன்னைக் கைது செய்யப் போறோம்.” கான்ஸ்டபிள் இப்படித் திமிராகச் சொல்லிக் கொண்டிருந்த போதே அறைக் கதவு திறக்கப்பட்டது. உள்ளேயிருந்து முகத்தில் முத்து முத்தாக அரும்பிய வேர்வையுடன் யூனிபாரம் எல்லாம் கூட வேர்வையால் நனைந்த கோலத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தயக்கத்தோடு வெளியே வந்தார். அறைக்குள் கட்டிலில் அலங்கோலமான நிலையில் அந்தப் பெண் நளினி தென்பட்டாள். முத்துராமலிங்கம் ஒரு விநாடி கூடத் தயங்காமல் கான்ஸ்டேபிள்களைப் பார்த்துச் சொன்னான்: “விபசாரத் தடைச் சட்டத்தின் கீழே இங்கே நீங்க யாரையாவது கைது செய்யணும்னா முதல்லே இவரைத்தான் கைது செய்யணும்” என்று சப்-இன்ஸ்பெக்டரைச் சுட்டிக் காட்டினான். அடுத்த கணம் அவன் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அறைந்தவன் கான்ஸ்டேபிள். மற்றொரு கான்ஸ்டேபிள் அறைக்குள் தலையை நீட்டி, “சீக்கிரம் புறப்படும்மா, மத்தவங்கள்ளாம் காத்துக் கிட்டிருக்காங்க...” என்று அறைக்குள் கட்டிலில் கசங்கிய மலராகக் கிடந்த அந்தப் பெண்ணை விரட்டினான். எஸ்.ஐ. முத்துராமலிங்கத்தை முறைத்தபடி வினவினார்: “யாருடா நீ?” “இங்கே மாடியிலே தங்கியிருக்கேன்.” “ஓகோ... பெர்மனென்ட் கஸ்டமரா?” “சார்! மரியாதையாப் பேசுங்க...” மற்றோர் அறை விழுந்தது அவன் கன்னத்தில். “பொம்பிளை பொறுக்கிக்கெல்லாம் என்னடா மரியாதை?” முத்துராமலிங்கம் மேற்கொண்டு பேசவில்லை. விபசாரத்தைக் கண்டுபிடித்துக் குற்றம் சாட்ட வருகிற போலீஸ்காரர்களே விபசாரம் செய்பவர்களாகவும் திருட்டைக் கண்டுபிடித்து நியாயம் வழங்க வேண்டியவர்களே திருடுகிறவர்களாகவும் இருக்கிற சமூக அமைப்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்கள் அலட்சியம் செய்வது கூடத் தவறில்லையோ என்று கூடத் தோன்றியது. போலீஸ்காரர்களே திருடர்களாக மாறும் சூழ்நிலையில் யாரும் எந்த நியாயத்தையும் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் என்பது நிதரிசனமாகத் தெரிந்தது. பிடிபட்ட பெண்களில் சிலர் உரத்த குரலில் வாய் விட்டு அழ ஆரம்பித்தார்கள். சிலர் மௌனமாகத் தலை குனிந்தபடி கண்ணீர் சிந்தினர். விபசார விடுதிக்கு வருகிற பலவீனமான மனிதனாவது பணத்தைக் கொடுத்துத்தான் மகிழ்ச்சியை வாங்கிக் கொள்கிறான். போலீஸ்காரனோ எதையும் தராமலே பலாத்காரத்தால் பயமுறுத்தித் திருடுகிறான் என்பது புரிந்தது. எஸ்.ஐ. முத்துராமலிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினார். “நாம இங்கே ரெய்டு பண்றப்ப விபசாரம் நடந்துக் கிட்டிருந்திச்சுங்கறதுக்கு இந்த ஆள் மேலேயே எஃப்.ஐ.ஆர். போட்டுக்கலாம்.” இப்படிக் கூறிவிட்டு முத்துராமலிங்கத்தின் பக்கமாகத் திரும்பி, “யாரிட்டப்பா காது குத்தறே? நீ இங்கே சும்மா தங்கியிருக்கிற ஆளுதான்னா அதை முட்டாள் கூட நம்ப மாட்டானே?...” “இப்பிடி ஊர்லே ஒழுங்காயிருக்கிறவங்களைக் கெட்டவங்களா ஆக்க உங்களை மாதிரிப் பத்துப் போலீஸ்காரங்களே போதும்...” “டேய் வாயை மூடு... உன்னைக் கேக்கலே” எஸ்.ஐ. கூப்பாடு போட்டார். குற்றவாளிகளை ஊர்வலமாக அழைத்துப் போவது போல், முத்துராமலிங்கத்தையும் அந்தப் பெண்களையும் தெருவில் நடத்திக் கொண்டு போய்ப் போலீஸ் லாரியில் ஏற்றிய போது சாலையில் போவோர் வருவோரும் அக்கம் பக்கத்து வீட்டாரும் கும்பலாகக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். முணு முணுத்தார்கள். சிரித்தார்கள். அந்தச் சூழ்நிலையிலும் முத்துராமலிங்கம் தலைகுனியவில்லை. அடுத்து அவர்களைக் கொண்டு போய் இறக்கிய இடத்தில் முத்துராமலிங்கம் சந்திக்க விரும்பாத - சந்திக்கக் கூடாத ஒருவரை அங்கே சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. அவன் அங்கே அவரை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அவரும் அவனை அங்கே எதிர்பார்த்திருக்க முடியாதென்றே தோன்றியது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|