20 இளைஞன் முத்துராமலிங்கம் பேசி முடித்த பின் தியாகி சிவகாமிநாதன் பேசத் தொடங்கினார். “திருடர்களையும் கொலைகாரர்களையும், கொள்ளையடிப்பவர்களையும், பதுக்கல், கள்ள மார்க்கெட் கலப்படப் பேர்வழிகளையும், லஞ்ச ஊழல் மன்னர்களையும் அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளத் துப்பில்லாமல் உண்மையை அஞ்சாமல் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்துக்காக என் போன்ற ஏழைத் தேச பக்தர்களை அரெஸ்ட் செய்கிறார்கள். சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. நல்லவர்களும், நல்லதைச் சொல்பவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தின் எந்தப் பெரிய அல்லது சிறிய அமைப்புக்களிலும் லஞ்ச ஊழல்களும், தவறுகளும் புரிகிற பெரும்பான்மையோருக்கு - யோக்கியர்களாக ஊடாடும் சிறுபான்மையோர் இடையூறாகி விட்டார்கள். லஞ்சமும், ஊழலும், சுயநலமும், திட்டமிட்டு மக்களை ஏமாற்றுவதும் முன்பெல்லாம் தனிமனிதர்களின் குற்றங்களாக இருந்தன. இன்று அவையே சில இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும், கட்சிகளாகவும் கூட வளர்ந்து விட்டன. என்னைப் போல இதை எடுத்துச் சொல்பவர்கள் எப்போதும் அபாயத்துக்குள்ளாகிறார்கள். ஆபத்துக்குள்ளாகிறார்கள். பொதுமக்கள் அயரும் நேரத்தில் அவர்களைத் தாக்கும் கொசுக்கள் போல மூட்டைப்பூச்சிகள் போலச் சமூக விரோத சக்திகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. சமூக ஆரோக்கியம் என்ற இரத்தத்தை இவை மறைந்திருந்து வந்து உறிஞ்சிவிட்டு மறுபடி மறைந்து கொள்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது...” இப்படித் தொடங்கியவருடைய பேச்சில் சூடு ஏறிக் கொண்டே போய் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு முடிந்தது. கூட்டம் முடியும் போது இரவு பதினொன்றே முக்கால் மணி. மக்கள் ஆர்வமிகுதியினால் தியாகி சிவகாமிநாதனின் வழக்கு நிதிக்கு மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், செயின்கள் என்று கழற்றிக் கொடுத்திருந்தனர். சிவகாமிநாதன் பேசத் தொடங்கிய பதினைந்து நிமிஷங்கள் கழித்து இளைஞர்கள் வசூலுக்காகத் துண்டுகளுடன் கூட்டத்தில் இறங்கினார்கள். அப்படி வசூலுக்கு இறங்கி இளைஞர்களில் முதல் ஆளாக முத்துராமலிங்கம் இருந்தான். அந்தக் கூட்டத்தில் அப்படி வசூலுக்காகப் புகுந்து புறப்பட்ட போது அவனுக்கு அங்கே ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. மங்கா தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றி அவன் விரித்து ஏந்தி வந்த துண்டில் போட்டாள். அவளோடு கூட வந்திருந்த மற்றோர் இளம் பெண் ஒரு முழுப் பத்து ரூபாய் நோட்டைப் போட்டான்ள். முத்துராமலிங்கம் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “என் கண்களையே நம்பமுடியலியே?” என்று மங்காவைக் கேட்டான். அவள் பதிலுக்குக் கேட்டாள்: “தாங்கள் நம்ப முடிந்தவை மட்டும்தான் நடக்க முடியும் என்று நினைப்பவர்கள் தான் இப்படி எல்லாம் ஆச்சரியப்படுவார்கள்.”
“அப்பாவை எதிர்த்துப் பேசுகிறவர்களுக்கு மகள் நன்கொடை கொடுத்தால் ஆச்சரியப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்?”
“நீங்களே உங்களுடைய பேச்சில் சொன்ன குருட்சேத்திர உதாரணப்படி இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.” கூட்டத்துக்கு நடுவே விவாதத்தையும் உரையாடலையும் வளர்த்த விரும்பாமல் மேலே வசூலுக்காக நகர்ந்தான் முத்துராமலிங்கம். சிறிது தூரம் நகர்வதற்குள்ளேயே மங்காவுடன் கூட இருந்த மற்றோர் இளம் பெண் ஓடி வந்து நாலாக மடித்த ஒரு துண்டுக் காகிதத்தை அவனிடம் நீட்டினாள். அவசர அவசரமாக மடிப்புக்களை பிரித்துக் காகிதத்தை மலர்த்திப் படித்த போது, ‘நாளை மாலை மூன்று மணிக்கு அமெரிக்கன் சென்டர் லைப்ரெரியில் அல்லது மூன்றரை மணிக்கு ‘டிரைவ் இன்’னில் சந்திக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தாள் மங்கா. அவளுடைய சிநேகிதி அவளது வாய் மொழியில் அல்லது ஜாடையில் பதில் கிடைத்தால் கூடப் போதும் என்று கூட்டத்தின் நடுவிலே தயங்கி எதிர்பார்த்து நின்றாள். “வர டிரை பண்றேன்னு சொல்லுங்க... நாளை எனக்கு வேலை எப்படியிருக்கோ... தெரியலே.” இதைச் சொல்லிவிட்டு மறுபடி வசூலுக்காகக் கூட்டத்தினுள் கலந்து கரைந்தான் அவன். அன்றைக்குச் சூளைமேடு பொதுக் கூட்டத்தில் ரூபாயாக இரண்டாயிரத்து எழுநூற்றுச் சொச்சமும் தங்க மோதிரங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றினால் மேலும் பத்தாயிரம் மதிப்புள்ளவையும் வசூலாகி இருந்தன. பேச்சாளர்கள் கூட்டத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பின் எல்லைக்கே கொண்டு போயிருந்தார்கள். மறுநாள் குன்றத்தூருக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒரு தென்னந்தோப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றிற்காக உதைக்கிறவர்கள், உதைபடுகிறவர்கள் சகிதம் அவுட்டோர் யூனிட் புறப்பட்டுப் போயும் வெயில் வருவதற்கு மறுத்து மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஷூட்டிங் கான்ஸலாகிப் பகல் பன்னிரண்டு மணிக்கே எல்லாரும் சென்னை திரும்பி விட்டார்கள். உதவிக் காமிராமேன் சண்முகம் அதை இப்படிக் கிண்டல் செய்தார். “இவங்க ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஸ்டண்ட் ஆளுங்க எல்லாரிட்டவும் கால்ஷீட் வாங்கினாங்க... சூரிய பகவான் கிட்ட மட்டும் வாங்கலே! மறந்துட்டாங்க... அவரு தகராறு பண்ணிட்டாரு.” சண்முகமும் அவனும் அறைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டார்கள். முதல் நாள் மங்கா கேட்டுக் கொண்டபடி அவளை அன்று மாலை சந்திக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம். பகல் இரண்டு மணிக்கு மேல் அவன் மங்காவைச் சந்திக்கப் புறப்பட்ட போது லாட்ஜிலுள்ள டெலிபோனில் பாபுராஜ் அவனைக் கூப்பிடுவதாகப் பையன் வந்து சொன்னான். எரிச்சலோடு போய் ஃபோனை வாங்கிப் பேசினான் முத்துராமலிங்கம். “நீ உடனே இங்கே வர முடியுமா?” “எங்கேன்னு சொல்லலியே?” பாபுராஜ் இடத்தைச் சொன்னதும், “இன்னிக்கு இனிமே நான் எங்கேயும் வரமுடியாது. குன்றத்தூர் அவுட்டோர் இல்லேன்னதும் வீட்டுக்குப் போலாம்னிட்டீங்க... அதை நம்பி நான் எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் ஒருத்தரைப் பார்க்க வரேன்னிட்டேன். இதோ புறப்பட்டுக்கிட்டேயிருக்கேன்.” “வேலை முக்கியமா? யாரோ ஆளைப் பார்க்கிறது முக்கியமா?” முத்துராமலிங்கம் பதில் சொல்லாமலே டெலிஃபோனை வைத்துவிட்டுப் புறப்பட்டான். ஓடவும் விடாமல் நிற்கவும் விடாமல் பாபுராஜ் கழுத்தறுப்புச் செய்கிறானோ என்று சந்தேகமும் எரிச்சலும் வந்தன அவனுக்கு. மறுபடி ஃபோன் மணி அடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று விரைந்தான் அவன். சாலைக்கு வந்து பரக்கப் பரக்கப் பஸ் பிடித்துப் போன போது மூன்றே கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. சன் தியேட்டர் அருகில் இறங்கி நடந்து போய் ஜெமினி வளைவு திரும்பிய போதே அமெரிக்கன் சென்டர் வாசலிலிருந்து அவள் ‘டிரைவ்’ இன்னை நோக்கிச் செல்வது தெரிந்தது. சாலையில் பட்டுப்பூச்சியாக நடந்து கொண்டிருந்தால் அவள். அவன் அருகே போய்ச் சேர்ந்து கொண்டான். ‘ஹலோ’க்களும் மெல்லிய புன்முறுவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “வர மாட்டீங்களோன்னு நெனைச்சேன்.” “வேலை ஒண்ணுமில்லே, ‘அவுட்டோர்’ கேன்ஸல் ஆயிடிச்சு. நேத்து நீ கொடுத்த நன்கொடைக்கு ‘ஸ்பெஷலா’ நன்றி சொல்லணும்னு தோணிச்சு, வந்தேன்.” “கைவளை எங்கேன்னு அம்மா காலையிலே கேட்டாங்க. பொய்யா என்னமோ கதை சொல்லிச் சமாளிச்சேன்.” “குடுத்திட்டமேன்னு வருத்தமா இருந்தாக் குடுத்திருக்கவே வேண்டாமே?” “வருத்தமோ பயமோ, இருந்தா அந்தக் கூட்டத்துக்கே நான் வந்திருக்க முடியாது. நான் யாருன்னு தெரிஞ்சவங்க அங்கே கூட்டத்திலே ரெண்டொருத்தர் இருந்தாங்க. அவங்களுக்குள்ளே நான் அங்கே வந்து கேட்டுக்கிட்டிருக்கிறதைப் பத்திப் பேசிக்கிட்டாங்க. உடனே அதுக்காக நான் பயந்து கூசி ஓடிப் போயிடலே...” “உன்னோட அந்தத் துணிச்சல் தான் என்னை இன்னிக்கி இங்கே தேடி வரவழைச்சிருக்கு மங்கா!” “உள்ளதை உள்ளபடியே சொல்லணுமானா ‘பர்மிங்ஹாம்’ போறதுக்குக்கூட எனக்குப் பிரியமில்லே... “சீக்கிரம் புறப்படப்பாரு... நான் மினிஸ்டரா இருக்கற பீரியடிலேயே நீ போனாத்தான் பலதுக்கும் வசதி”-ன்னு அப்பாதான் வற்புறுத்தறாரு.” “அந்நிய நாட்டுக் கல்வி, அந்நிய நாட்டு உத்தியோகம்னு நாயா அலையிற குடும்பங்கள் சுதந்திரத்துக்கப்பறமும் பெருகிப் போச்சு...” “நீங்க அதைப்பத்தி என்ன நெனைக்கிறீங்க முத்துராம்?” “வசதி உள்ள குடும்பங்களுக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கும் வருகிற புதிய நோய்களில் இதுவும் ஒன்று. உள்நாட்டில் படித்தவர்கள் கேவலம் என்று நினைப்பதும் வெளிநாட்டில் படித்தவர்களும், படிப்பவர்களும் உயர்வு என்று நினைப்பதும் ராவ்பகதூர் திவான்பகதூர் மனப்பான்மை ஜஸ்டிஸ் கட்சியின் மிச்சம் மீதாரிகள் இந்நாட்டில் பரப்பும் நோய்.” “உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் போகப் போறதில்லே...” “நான் என் அபிப்பிராயத்தைத் தான் சொன்னேன். நீ போகக் கூடாதுன்னு சொல்ல நான் யார்...?” “என்னைப் பிடிக்கலைன்னாப் பிடிக்கலைன்னு நேருக்கு நேராவே சொல்லிடலாம். அதுக்காக இப்படி நான் யாரோ நீ யாரோங்கிற மாதிரிப் பேச வேண்டியதில்லை.” முத்துராமலிங்கம் வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். முதல் நாளிரவு தான் ஆற்றிய சொற்பொழிவில் அவள் அறவே மயங்கிப் போய்க் கட்டுண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் புரிந்ததை அப்படியே அப்போதே நம்பிவிடாமல் மேலும் மேலும் சோதித்து உறுதி செய்துகொள்ள விரும்பினான் அவன். அவளோடு உரையாடலைத் தொடர்ந்தான். “ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலனுக்குப் பாடுபடுவது இவையெல்லாம் மிகமிக அவசியம் என்று நினைக்கிற ஒரு தரப்பையும் தலைமையையும் சார்ந்து நிற்க விரும்புகிறவன் நான். ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலன் இவை எல்லாமே ‘நியூஸன்ஸ்’ என்று கருதும் தடாலடி முன்னேற்றப் பேராசையுள்ள ஒருத்தரின் மகள் நீ...” “இருக்கலாம்! ஆனால் எனது பகவத் கீதை நேற்றைய கூட்டத்தின் பிரசங்கத்தில் எனக்குக் கிடைத்து விட்டது. நான் இன்று இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறேன்.” “அப்படியானால் இப்போதே என்னோடு கிளம்பி வா! தியாகி சிவகாமிநாதனிடம் போகலாம். அவர் முன்னால் நீ பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்த நாட்டிலுள்ள எல்லா அரசியல் இயக்கங்களிலும் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் ‘நியூஸன்ஸ் வேல்யூ’ தான் தரப்படுகிறது. அடிப்படை ஒழுக்கத்தையும் நேர்மையையும் தேசபக்தியையும் முதலில் வற்புறுத்துகிற ஒரே மனிதர் சிவகாமிநாதன் தான்.” “நீங்கள் கட்டளையிடும் பட்சத்தில் நானே அவருடைய இயக்கத்தில் பிரதிபலன் எதிர்பாராத ஒரு சேவகியாகச் சேரத் தயார்!” “அது உன்னைப் பலவகைகளில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்.” “தர்மசங்கடங்கள் தவிர்த்து தெளிவு ஏற்பட்டு எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்ற ஞானம் பிறக்கிற ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வோர் இடத்திலும் ஒரு பகவத் கீதையே பிறக்குதுன்னு நீங்க தானே நேத்து பேசினீங்க...?” “அந்தப் பேச்சின் கூர்மையையும், நிர்தாட்சண்யத்தையும் நீ சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?” “தவறாகவோ அரைகுறையாகவோ புரிந்து கொண்டிருந்தாள் நான் இன்று இங்கே தேடி வந்து உங்களைச் சந்தித்திருக்கவே மாட்டேன்.” காபியைப் பருகிவிட்டு அவளைச் சிந்தாதிரிப் பேட்டைக்கு அழைத்த போது மலர்ந்த முகத்தோடு துணிந்து அவள் அவனோடு புறப்பட்டாள். காரை அமெரிக்கன் சென்டர் வாசலிலிருந்தே திருப்பி அனுப்பி விட்டதாகவும் சொன்னாள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|