23 இரவு ஒன்பது மணி ஆனதும் முத்துராமலிங்கம் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் புறப்படத் தயாரானான். மங்கா வீடு திரும்பப் போகிறாளா அல்லது சிவகாமிநாதன் குடும்பத்தினருடனேயே தங்கப் போகிறாளா என்பது தெரியவில்லை. அவளுடைய தந்தையாகிய மந்திரி எஸ்.கே.சி.நாதனின் மேல் அப்போது அவளுக்கிருந்த கோபத்தில் வீடு திரும்ப மாட்டாள் என்றே தோன்றியது. “நான் அறைக்குப் புறப்படறேன். பத்துமணிக்கு மேலே இங்கேயிருந்து பஸ் கிடையாது. மறுபடி நாளைக்குச் சாயங்காலம் தான் நான் இங்கே வருவேன்” என்றான் அவன். “நான் வீட்டுக்குப் போய் எங்கப்பா முகத்திலே விழிக்கிற எண்ணத்திலே இல்லே. ஒண்ணு இங்கே தங்கிக்கணும். அல்லது சிநேகிதிங்க யாருக்காவது ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு அங்கே போகணும்” என்று மங்கா முத்துராமலிங்கத்திடம் சொல்லும் போது சிவகாமிநாதனும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவரே அவளிடம் சொன்னார்: “உனக்கு வசதிக் குறைவு இல்லேன்னா நீ தாராளமா இங்கே என் மகளோட தங்கிக்கலாம் அம்மா! எந்தச் சிநேகிதியையும் தேடிப் போகணும்கிறது இல்லே. என் வீட்டிலே சௌகரியங்கள் குறைச்சல். அசௌகரியங்கள் தான் அதிகம்.” “தவறுகளும் தீமைகளும் கலந்த சௌகரியங்களை விட ஒழுக்கமும் நேர்மையும் உள்ள அசௌகர்யங்களே போதும் என்கிற முடிவுக்கு நான் வந்தாச்சு ஐயா!” “பல பேர் அப்படி முடிவுக்கு வரத் துணியாத காரணத்தால் தான் இன்னிக்கிப் பொது வாழ்க்கையிலே லஞ்சமும், ஊழலும், முறை கேடுகளும் மலிஞ்சு போயிருக்கு அம்மா!” முத்துராமலிங்கமும் அவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸுக்குப் புறப்பட்டான். மங்காவின் புதிய திடீர் முடிவினால் தானும், சிவகாமிநாதனும், அவளும் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற சிந்தனையே அப்போது அவன் மனத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அவள் இவ்வளவு விரைவில் இப்படி மனம் மாறிவிடுவாள் என்பதை இன்னும் கூட அவனால் நம்பி ஒப்புக் கொள்ள முடியாமல் இருந்தது. வெளிநாட்டுப் படிப்பிலும் பகட்டிலும் ஆசையுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தின் சராசரிப் பெண்ணாகவே அவளைக் கற்பனை செய்து வைத்திருந்தான் அவன். அதனால் தான் அவளது மனமாற்றம் அவனைத் திகைக்கச் செய்திருந்தது.
சிவகாமிநாதனின் வீடு என்பது முக்கால்வாசி அச்சகத்திற்கும், கால்வாசி மற்ற உபயோகங்களுக்குமாக இருந்த ஒரு பழைய காலத்து ஓட்டடுக்குக் கட்டிடம். நவீன வசதிகள் எதுவும் இல்லாதது. சொல்லப் போனால் அத்தியாவசியமான சில சௌகரியங்கள் கூட அங்கே கிடையாது. அங்கே வருகிற விருந்தினர்கள் உபசரணைகளை அடைய முடியாது. மாறாக அங்கு நிறைந்திருக்கிற சிரமங்களைத் தான் பங்கிட்டுக் கொள்ள முடியும்.
மங்கா தன் தந்தையோடு கோபித்துக் கொண்டு தியாகியின் குரல் அலுவலகத்திலேயே தங்குகிறேன் என்று சொன்ன போது அதை ஏற்கவும் இயலாமல் மறுக்கவும் இயலாமல் இருந்தார் சிவகாமிநாதன். அங்கே வீட்டில் இருப்பவர்களுக்கே சரியான படுக்கை, விரிப்பு, தலையணை என்று எதுவும் கிடையாது. அழுக்கடைந்து கிழிந்த இரண்டொரு பாய்களும், தலைக்கு உயரமாக வைத்துக் கொள்ள மரக்கட்டைகளுமே இருந்தன. அங்கிருந்த வசதிக் குறைவுகள் காரணமாகச் சிவகாமிநாதனுக்கு அவளை அங்கே தங்கும்படி முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. பண்பாடு, நாகரிகம் காரணமாகத் ‘தங்குகிறேன்’ என்று கூறுகிறவளைத் ‘தங்காதே’ என்று மறுக்கவும் முடியவில்லை. பரந்த மனமும் குறுகிய பொருளாதார வசதிகளும் உள்ள ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் ஏற்படக்கூடிய சோதனை தான் இது. சிவகாமிநாதனின் மகள் மங்காவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். படுப்பதற்கென்று தனி அறை. குளிப்பதற்கென்று தனி அறை. இதெல்லாம் அந்த வீட்டில் இல்லை. சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் அரசியலைத் தொடங்கி அதை ஒரு லாபம் தரும் வியாபாரமாக மாற்றிக் கொண்டு அதன் மூலம் மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழும் பலரையும் சிவகாமிநாதனையும் ஒப்பிட்டு நினைத்தாள் அவள். அன்று இரவு பதினோரு மணிக்குமேல் இருக்கும். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையைத் தொடர்ந்து அவளுக்குப் பழக்கமான அந்த ஹார்ன் ஒலியும் கேட்டது. தன் வீட்டிலிருந்துதான் கார் வந்திருக்கிறது என்று மங்காவுக்குப் புரிந்தது. வேண்டுமென்றே எழுந்திருக்காமல் அயர்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்தாள் மங்கா. சிவகாமிநாதனின் மகள் தான் எழுந்திருந்து போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, மங்காவை எழுப்பி, “உங்கம்மா உன்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க... வாசல்லே காரிலே காத்துக்கிட்டிருக்காங்க” என்றாள். “ஏன்? உள்ளே வரமாட்டாங்களாமா?” “தெரியலே! நான் கதவைத் தெறந்து போய்ப் பார்த்தப்பக் கூட, ‘உடனே என் பெண் மங்காவைப் பார்க்கணும்னு’-எங்கிட்டவே எரிஞ்சு விழுந்தாங்க. ‘உள்ர வாங்க’ன்னு கூப்பிட்டுப் பார்த்தேன். ‘நான் உள்ளே எல்லாம் வர முடியாது! என் பெண்ணை வெளியிலே அனுப்பு’ன்னு கத்தினாங்க.” அந்த வீட்டையும் அந்த வீட்டு மனிதர்களையும் பற்றி மிகவும் குறைவாக நினைத்துக் கொண்டு அங்கே படியேறி உள்ளே வருவது கூடத் தன் அந்தஸ்துக்குக் குறைவான காரியம் என்று அம்மா நினைப்பதாகப் பட்டது மங்காவுக்கு. “நீங்க மறுபடி வெளியிலே போய் அவங்களை உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட வேண்டாம். வரணும்னா வந்துக்கட்டும். இல்லாட்டி எப்படியும் போகட்டும்.” “வந்திருக்கிறது வேற யாரோ இல்லியே? உங்கம்மா தானே? நீங்களே போய்ப் பார்க்கறதிலே தப்பு ஒண்ணுமில்லியே...?” சிவகாமிநாதனின் மகள் சுபாவமாகத்தான் இப்படிக் கூறினாள். ஆனால் மங்கா அதைச் சுபாவமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. விறுவிறுவென்று எழுந்து போய் வாயிற் கதவைப் படீரென்று அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வந்தாள் மங்கா. “நீங்க தூங்கலாம். இனிமேல் வாசற் கதவை யாராவது தட்டினா நான் போய்ப் பார்த்துக்கிறேன்” என்று சிவகாமிநாதனின் பெண்ணிடம் சொல்லிவிட்டுப் பாயில் உட்கார்ந்து கொண்டாள் அவள். “நீங்க கோபத்திலே கதவை அடைச்சிட்டீங்க! நாங்க தான் தெருவிலே தடுத்து நிறுத்தி வச்சுக் கதவைச் சாத்தி அவமானப்படுத்தறோம்னு உங்கம்மா நினைச்சுக்கப் போறாங்க, பாவம்!” என்றாள் சிவகாமிநாதனின் மகள். அவளுடைய பண்பாடு காரணமாக எழுந்த பயத்தை மங்கா புரிந்து கொண்டாலும் அம்மாவின் திடீர் வருகை காரணமாக அவளுக்கு ஏற்பட்ட கடுமை ஒரு சிறிதும் தணியவில்லை. வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. சாதாரணமாகவோ, நாகரிகமாக அல்லாமல் முரட்டுத்தனமாக அது தட்டப்பட்டது. அம்மாவே இறங்கி வந்து தட்டுகிறாளா அல்லது டிரைவரை விட்டுத் தட்டச் சொல்கிறாளா என்பது புரியவில்லை. அகாலத்தில் இன்னொருவர் வீட்டுக் கதவை இப்படி அசுரத்தனமாகவும், அநாகரிகமாகவும் தட்டுகிற மமதையும், அதிகார போதையும் அவளுக்கு எரிச்சலூட்டின. எரிச்சலோடு எழுந்து போய்க் கதவைத் திறந்தாள் மங்கா. அம்மாவும், டிரைவரும் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள். அம்மா சொல்லித்தான் டிரைவர் கதவை அப்படிப் பலமாகத் தட்டியிருக்க வேண்டுமென்று புரிந்தது. அம்மா சீறினாள்: “என்னடீ இது? இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா? வீடு வாசலை விட்டு இப்படி யார் வீட்டிலேயோ வந்து உட்கார்ந்துக்கிட்டுக் கிளம்பமாட்டேன்னு அடம் பிடிக்கிறியே?” “எனக்கு வரப்பிடிக்கலே. வரமாட்டேன்.” “அப்படி நீ சொல்ல முடியாதுடீ! சொல்லவும் கூடாது... நல்லதோ கெட்டதோ பொண்ணுங்கறவ வயது வந்தப்புறம் அப்பா அம்மாவோட தான் இருந்தாகணும்... இல்லாட்டி மானம் போயிடும்.” “அப்பாவுக்கு இருக்கிற மானத்தை விட இங்கே ஒண்ணும் கொறைஞ்சி போயிடலே அம்மா!” “வாயை அடக்கிப் பேசுடீ! யாரைப் பத்தி எங்கே நின்னு என்ன பேசறோம்னு நினைச்சுப்பாரு... ஏண்டீ, இப்படித் திடீர்னு புத்தி கெட்டுப் போனே?” “யாரு சொன்னா? போன புத்தியே எனக்கு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டிருக்கு...” “நீ இப்போ எங்கூடப் பொறப்பட்டு வரப் போறியா இல்லியாடீ? உனக்காக நடுத்தெருவிலே நின்னு கத்தி என் மானம் போய்த் தொலையிது!” “நீ விடிய விடியக் கத்தினாலும் நான் வரப் போறதில்லே அம்மா! நீ போகலாம். என் சண்டையோ, கோபமோ உன்னோட இல்லே. அப்பாவோடத்தான்...” என்று சொல்லி மீண்டும் கதவை முகத்தை முறித்தாற் போல அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் அவள். தொடர்ந்து சிறிது நேரம் கதவு தட்டப்பட்டது. ஆனால் மங்கா பிடிவாதமாகத் திறக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டாள். சிறிது நேரத்தில் தட்டுவது நின்று போய்விட்டது. அம்மாவும், டிரைவரும் பொறுமை இழந்து வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்க வேண்டும் என்று மங்கா அனுமானித்துக் கொண்டாள். பளீரென்று வெளிச்சம் பரவியது. யாரோ சுவிட்சைப் போட்டிருந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்தால் சிவகாமிநாதனே நின்று கொண்டிருந்தார். “நீங்களா? யாரோன்னு பயந்து போனேன். எங்கம்மா தேடி வந்து கூப்பிட்டாங்க... நான் பிடிவாதமா வரலேன்னுட்டேன்...” “தெரியும் அம்மா! நான் எல்லாத்தையும் என் ரூம் ஜன்னல் வழியாகக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உனக்கும் இத்தனை பிடிவாதம் கூடாது! உன்னைக் கண்டிச்சு நாலு வார்த்தை கடுமையாப் பேசி ‘வீட்டுக்குப் போ’ன்னு என்னாலேயும் சொல்ல முடியலே. நானே வேண்டா வெறுப்போட உன்னைத் தட்டிக் கழிக்கிறேன்னு நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாதேன்னும் பயமா இருக்கு...” “தயவு செய்து என்னையும் உங்களோட இன்னொரு பெண்ணா நினைச்சு நடத்துங்க... அந்நியமாப் பாவிக்காதீங்க...” “நான் ஒரு காலத்திலியும் உன்னை அந்நியமா நினைக்க மாட்டேன் அம்மா! ஆனா உன்னாலே எனக்கு வர்ற சோதனைகள் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். காரணம் உங்கப்பா மந்திரி. நானோ அவருடைய அரசியல் எதிரி.” இதற்கு அவள் பதிலெதுவும் கூறவில்லை. “போய்த் தூங்கும்மா! நேரமாகுது. காலையிலே பேசிக்கலாம்” - என்று அவரே விளக்கை அணைத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து அதிக நாள் பழகியவளைப் போல் சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டு கூடத்தைப் பெருக்குவது, தரையை மெழுகுவது, பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற வீட்டுக் காரியங்களில் சகஜமாக அவள் ஈடுபட்ட போது சிவகாமிநாதனும், அவர் மகளும் மகனும் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டு தடுத்தார்கள். “நீ எதுக்கும்மா இதெல்லாம் செய்யறே? ரொம்ப அவசியமா எதாவது செஞ்சுதான் ஆகணும்னாப் பிரஸ்ஸுக்கு வா... புரூப் திருத்தக் கத்துக் குடுக்கறேன்... பழகிக்கோ... போறும்” - என்றார் சிவகாமிநாதன். ஆனால் அவள் அவர்கள் சொல்லியபடி அந்த வேலைகளிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்ளவோ, விலகிக் கொள்ளவோ இல்லை. அவற்றையும் செய்துவிட்டு அதன் பின்பு அச்சகப் பகுதிக்குள் நுழைந்து பிழை திருத்தக் கற்றுக் கொடுக்குமாறு சிவகாமிநாதனிடம் கேட்டாள். சிறிதும் எதிர்பாராதவிதமாக மாலையில் வருவதாக முதல் நாளிரவு கூறிச் சென்றிருந்த முத்துராமலிங்கம் பகல் பதினோரு மணிக்கே அங்கே வந்து சேர்ந்திருந்தான். மங்கா அவனைக் கேட்டாள்: “சாயங்காலம்தானே வருவேன்னீங்க? இன்னிக்கும் ‘அவுட்டோர்’ கேன்ஸல் ஆயிடிச்சா?” “அவுட்டோர் கேன்ஸல் ஆகலே! என் வேலையே கேன்ஸல் ஆயிடிச்சு. பாபுராஜ் முதலியாரிட்டக் கோள் சொல்லி வத்தி வச்சு என் வேலைக்குச் சீட்டுக் கிழிச்சுப்புட்டான்.” நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|