29 அச்சகத்துக்குக் காலிகள் நெருப்பு மூட்டிச் சூறையாடி விட்டுப் போயிருப்பதாக எதிர்கொண்டு வந்த தொண்டர்கள் கூறியவுடன் மங்காவும், முத்துராமலிங்கமும் பதறிப்போய், “ஐயையோ, பாண்டித்துரையும், கஸ்தூரியும் வீட்டிலே இருந்தாங்களே...?” என்று சிவகாமிநாதனின் மகனையும் மகளையும் பற்றிக் கவலை தெரிவித்தார்கள். “அவங்களை முதல்லேயே பத்திரமா ரெண்டு வீடு தள்ளிப் பக்கத்திலே வேற மனுஷாளோடு தங்க வச்சிட்டோம். இல்லாட்டி ஆபத்தாப் போயிருக்கும்” என்றார்கள் எதிர்கொண்டு ஓடிவந்தவர்கள். சிவகாமிநாதன் மட்டுமே அதிகமாகப் பதற்றமோ பரபரப்போ காண்பிக்கவில்லை. “இவ்வளவும் நான் எதிர்பார்த்ததுதான்! இதை எல்லாம் தவிர்க்க நெனைச்சுத்தான் உங்க ரெண்டு பேரையும் கடற்கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்” என்றார் சிவகாமிநாதன். எல்லோரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள். போய்ப் பார்த்ததில் அச்சகத்துக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள் அதிகமாயிருந்தன. அவர்கள் எதிர்பார்த்ததையும் விட அதிகமாயிருந்தன. இன்னும் சில வாரங்களுக்குத் ‘தியாகியின் குரல்’ பத்திரிகையையே வெளியிட முடியாதபடி செய்து விடும் குரூர நோக்குடன் அத்தனை பயங்கரமான சேதங்கள் அங்கே விளைவிக்கப்பட்டிருந்தன. இப்படிப் பயமுறுத்திக் கலவரங்களை உண்டாக்கினால் அஞ்சி நடுநடுங்கி மங்காவை வெளியே அனுப்பி விடுவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பது புரிந்தது. மங்கா தன் தந்தையான மந்திரியை எதிர்த்துக் கொண்டு தங்கள் தரப்பில் சேர்ந்து தங்களோடு தங்குவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்களோ, அவை ஒவ்வொன்றாக ஏற்படத் தொடங்கியிருந்தன. மந்திரியும் அவருடைய கட்சி ஆட்களும் காட்டுமிராண்டிகளைப் போல் புகுந்து சூறையாடியிருந்தார்கள். சேதங்களைப் பார்த்த போது முத்துராமலிங்கத்துக்கும் மங்காவுக்கும், சண்முகத்துக்கும் நெஞ்சு கொதித்தது. வயது முதிர்ச்சியும் மனப்பக்குவமும் துயரங்களைக் கண்டு கலங்காத திண்மையும்தான் சிவகாமிநாதனை அந்த நிலையிலும் நிமிர்ந்து நிற்கச் செய்திருந்தன. மங்கா கேட்டாள்: “தயவுசெய்து நீங்க என்னைத் தடுக்கக் கூடாது! நானே எங்கப்பா கிட்டப்போயி இந்த அக்கிரமத்தை ஏன்னு கேட்கப் போறேன். பதில் சொல்லாட்டி, சீ! நீயும் ஒரு மனுசன் தானான்னு மூஞ்சியிலே காறித் துப்பப் போறேன்.” “வேண்டாம்! அதனால் ஒரு பிரயோசனமும் ஏற்படாது” என்றார் சிவகாமிநாதன். அவரது அன்பர்கள் சொன்னார்கள்:
“போலீஸோ, தீயணைப்புப் படையோ எத்தனையோ ஃபோன் பண்ணியும் முதல்லே வரலே. கலவரமெல்லாம் முடிஞ்சு ரௌடிங்க தப்பிப் போய்ச் சேர்ந்தப்பறம் தான் போலீஸ் தீயணைக்கிறவங்க எல்லாம் வந்தாங்க. அக்கம்பக்கத்துக்காரங்களும், நம்ம தொண்டர்களுமாக அவங்க வாரத்துக்குள்ளேயே தீயை அணைச்சிட்டாங்க.”
அச்சகத்தைத் ‘துவம்சம்’ செய்ததிலிருந்து தந்தையாகிய மந்திரியின் ஊழல்களைப் பற்றி மகள் எழுதும் கட்டுரைத் தொடரை வரவிடாமற் செய்வதுதான் கலவரம் புரிந்தவர்களின் முக்கிய நோக்கமாயிருப்பது தெரிந்தது. “கற்பைப் பற்றிப் புகழ்ந்து பேசும் விபசாரிகளைப் போல் ஜனநாயகத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசும் சர்வாதிகாரிகள் நிறைந்து விட்டார்கள் இந்த நாட்டில். பதவிப் பசி மிகுந்தவர்களும், பணப்பசி மிகுந்தவர்களும் நல்லவர்களை வேட்டையாடும் காலம் இது. பொறுமையும், சகிப்புத் தன்மையுமே இவர்களை எதிர்க்கப் போதுமானவை இல்லை” என்று சீறினான் முத்துராமலிங்கம். வயதுக்கேற்ற ஆத்திரமும் சீற்றமும் அவன் குரலில் இருந்தன. எல்லாருக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பாவமுமறியாத ஓர் ஆலமரத்தை யாரோ வெட்டி வீழ்த்த முயன்றாற் போல் உணர்ந்து குமுறினான் அவன். சிவகாமிநாதன் மேல் பற்றும் அன்பும் ஆதரவும் உள்ள வேறோர் அச்சக அதிபர் சில வாரங்களுக்குத் ‘தியாகியின் குரலை’த் தாமே அச்சிட்டுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அவருடைய அச்சகமும் சிந்தாதிரிப்பேட்டையிலேயே பக்கத்துத் தெருவில்தான் இருந்தது. சிவகாமிநாதன் அவரைத் தடுத்துப் பார்த்தார். “ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? என் அச்சகத்துக்கு ஏற்பட்ட கதி உங்கள் அச்சகத்துக்கு ஏற்பட வேண்டாமே என்று பார்த்தேன்?” “உங்களுக்கு உதவுவதால் எனக்கு அப்படி நேரும் என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்.” அவருடைய உறுதிமொழியைக் கேட்டுச் சிவகாமிநாதனுக்கு ஆறுதலாக இருந்தது. அவரது அச்சகத்தின் அன்பர்களும், தொண்டர்களும் சேதங்களைச் சரிசெய்து கொடுக்க விரைந்து முன் வந்தனர். பாதிக் கிணறு தாண்டிய நிலையில் இப்படி எவ்வளவு தான் தொல்லைப்படுவது என்று சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பிய மங்கா முத்துராமலிங்கம் திருமணத்தைத் துரிதப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சிவகாமிநாதனுக்குத் தோன்றியது. வெளியே செய்தியைப் பரவ விடுவதால் மங்காவின் தந்தையிடமிருந்து வரும் புதிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு இரகசியமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஏதாவது கோயிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே பதிவும் செய்துவிட முன்னேற்பாடு நடந்தது. சண்முகமும், சிவகாமிநாதனும், மங்காவும், முத்துராமலிங்கமும் மட்டுமே விவரம் அறிந்திருந்தனர். மந்திரி எஸ்.கே.சி.நாதன் மந்திரியாக நடந்து கொள்ளவில்லை. பதவியிலுள்ள ஒரு ரௌடியாகவே நடந்து கொண்டார். எல்லாக் கலவரங்களையும், எல்லாச் சேதங்களையும் திட்டமிட்டுச் செய்த பின் காலைப் பத்திரிகையில் “கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டுமே ஒழிய நபர்களை எதிர்த்துப் போரிடக் கூடாது. பழம்பெரும் தியாகியும், பத்திரிகையாளருமான சிவகாமிநாதனின் அச்சகத்தைக் காலிகள் தீ வைத்துத் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! இப்படிப்பட்ட செயல்களை நாகரிக உலகம் மன்னிக்காது” - என்று புத்தரின் மறு அவதாரம் போல மறுநாள் மந்திரி எஸ்.கே.சி.நாதன் ஓர் அறிக்கையும் விட்டு விட்டார். இதைப் படித்ததும் நிகழ்ச்சிகளை நேரிலேயே பார்த்து உண்மையைப் புரிந்து கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. திருடியவனே, தன்னைத் தப்புவித்துக் கொள்வதற்கு ஒரு மார்க்கமாக, “ஐயோ திருடன்! ஐயோ திருடன்!” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே திருடிய பொருளுடன் மெல்ல நழுவுவதைப் போல இருந்தது மந்திரியின் அறிக்கை. “பயந்தோ, தளர்ந்தோ, தொடர்ந்து போராடுவதற்குச் சலிப்படைந்தோ, பாதி வழியில் திரும்பிப் போய்விடச் சிவகாமிநாதன் தயாராயில்லை. எதற்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக இருக்கட்டும் என்று திருமண நாளன்று உடல் வலிமையும், மன வலிமையும் உள்ள தன் இயக்கத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரை அழைத்திருந்தார் சிவகாமிநாதன். அவர்களிடம் கூட திருமணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. “நான் பொறுப்பேற்றுச் செய்யப் போகிற ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சிக்காக உங்களை எல்லாம் அழைக்கிறேன்” என்று மட்டுமே சிவகாமிநாதன் அவர்களிடம் கூறியிருந்தார். பல திருமணங்களில் திருவும் இல்லாமல் மணமும் இல்லாமல் அவை வெறும் பட்டுப்புடவை, நகை எக்ஸிபிஷனாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி இருக்கிறார் சிவகாமிநாதன். மேல்தட்டு இந்துக்களிடையேயும் அவர்களைப் பார்த்து அனாவசியமாகக் கடன் வாங்கிக் காப்பியடிக்கும் மற்றவர்களிடையேயும் திருமணம் என்பது ஒரு புதிய சமுதாய ஊதாரித்தனமாக நிகழ்ந்து வருவதைப் பலமுறை பகிரங்கமாகக் கண்டித்திருந்த அவர் மங்கா முத்துராமலிங்கம் திருமணத்துக்கு மிக எளிய ஏற்பாடுகளையே செய்திருந்தார். முத்துராமலிங்கத்துக்கு ஒரு நாலு முழம் கோடி-கதர் வேஷ்டி, அங்கவஸ்திரமும், மங்காவுக்கு ஓர் எளிய கைதறிப் புடவையும், இரண்டு மாலைகளும், தாலியும், மஞ்சள் கயிறும் தான் ஏற்பாடு பண்ணியிருந்தார். வேறு எந்த ஆடம்பர ஏற்பாடும் கிடையாது. பத்துநாள் கழித்து ஓர் அதிகாலை ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிக்குள்ளான நல்லவேளையில் மாங்காடு அம்மன் கோயிலில் மங்காவுக்கு முத்துராமலிங்கம் தாலி கட்டினான். இருவரும் தியாகி சிவகாமிநாதன் ஆசீர்வதிக்க அவருக்கு முன்னால் மாலை மாற்றிக் கொண்டார்கள். திருமணம் எளிமையாகவும் கச்சிதமாகவும் முடிந்து விட்டது. அநாவசியமான சடங்குகள் எதுவும் அங்கே இல்லை. மாங்காடு ஆலயத்தில் கூடியிருந்த இருபது முப்பது தொண்டர்களுக்கு நடுவே சிவகாமிநாதன் சில வார்த்தைகள் பேசினார். “இது ஏறக்குறைய அடைக்கலத் திருமணம். இதை நான் எந்த விதத்திலும் தட்டிக் கழிக்க முடியவில்லை, முடியாது. பெண்ணின் தந்தை என் அரசியல் எதிரி. பெண்ணோ என் அரசியல் சிஷ்யை. பெண்ணின் காதலனோ என் அரசியல் தொண்டன். இவர்களுக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை இனி என் கஷ்ட நஷ்டமாக ஏற்பேன். என் மேல் நம்பிக்கையுள்ள நீங்களும் அப்படி ஏற்க வேண்டும் என்பது என் விருப்பம். நம்மைச் சுற்றிலும் தென்படுகிற அல்லது நாம் பார்க்கிற சினிமாக்களில் வருகிற காதலர்களைப் போல் இவர்கள் இருவரும் பூங்காக்களில், குளக்கரையில், மரத்தடியில் நதிக்கரையில் சந்தித்துப் பழகிய சராசரிக் காதலர்கள் இல்லை. இவர்களை இணைத்ததே இவர்களிருவருக்கும் எனது இலட்சியங்களில் இருந்த பிடிப்புதான். என் காரணமாக இணைந்த இவர்களை நான் கைவிட மாட்டேன். இவர்கள் இன்று சாதாரணத் தம்பதிகள். ஆனால் இப்படித் தம்பதிகளானதன் மூலம் இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் எதிரிகள் என்னவோ சாதாரணமானவர்கள் இல்லை. அந்த அசாதாரணமான எதிரிகளிடமிருந்து இவர்களைக் காக்கும் கடமை உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. என் அழைப்பை ஏற்று இந்தத் திருமணத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.” அன்று காலையிலேயே பத்து மணிக்கு அவர்களுடைய திருமணப் பதிவும் முடிந்து விட்டது. மாங்காட்டிலிருந்து பூவிருந்தவல்லி போய் அங்கே சிவகாமிநாதனின் நண்பர் வீட்டில் எல்லாரும் எளிமையான திருமண விருந்து உண்டார்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். விருந்து ஓய்வு எல்லாம் முடிந்ததும், “இன்னும் ஒரு வாரம் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டாம் என்பது என் அபிப்ராயம். பெங்களூர் போய் நிம்மதியாக ஒரு வாரம் கழித்து விட்டு வாருங்கள். இங்கிருந்தே பஸ் ஏறி விடலாம்” என்று யோசனை கூறித் தன் சொந்தச் சேமிப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார் உதவிக்காமிராமேன் சண்முகம், சிவகாமிநாதனும் அதையே வற்புறுத்தினார். ஆனால் முத்துராமலிங்கம் அதற்கு இணங்கவில்லை. அதை மறுத்துப்பேசி அவர்களோடு வாதாடினான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|