34 ஒரு கவிதையை எழுதியதற்காகச் சிறை சென்று மீண்ட அநுபவமும், தன்னை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் வார்த்தைகளாலேயே அந்தக் கவிதை வானளாவப் புகழப்பட்டிருந்ததும் முத்துராமலிங்கத்தைப் பிரபலமாக்கின. அவன் பெயர் எங்கும் பரவியது. அவனை இரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். பின்பு, காமிராமேன் சண்முகத்தின் உதவியால் புதிய தயாரிப்பாளர் ஒருவருடைய படத்துக்குச் சில பாடல்கள் எழுதினான் அவன். நன்றாக வாய்த்துவிட்ட காரணத்தால் படம் பிரபலமாகி வெளிவருவதற்குள் பாடல்கள் வெளிவந்து பிரபலமாகி விட்டன. பாடல்களுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து வேறு சில தயாரிப்பாளர்களும் அவனைத் தேடி வந்தனர். முன்பு எந்தத் திரை உலகில் முந்நூறு ரூபாய்க்காகப் பாபுராஜ் போன்ற கைநாட்டுப் பேர்வழிகளுக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி நிற்க நேர்ந்திருந்ததோ அதே திரை உலகில் அவன் பெயர் இப்போது பரவிச் சுதந்திரமாகக் காலூன்றி நிற்க அவனுக்கு இன்று ஓர் இடம் கிடைத்திருந்தது. இப்போது முத்துராமலிங்கம் மாதம் தவறாமல் ஊருக்குப் பணம் அனுப்பினான். அவனும் மங்காவும் தொடர்ந்து சிவகாமிநாதனோடு கூடவே வசித்தார்கள். அவருக்காக உழைத்தார்கள். பொழுது விடிந்து பொழுது போனால் பத்திரிகைக் கடன்களுக்கும் அரசாங்கமும் ஆளுங்கட்சியும் தம்மேல் ஜோடிக்கும் பொய் வழக்குகளுக்கும் பதில் சொல்லவே சரியாயிருந்தது அவருக்கு. அத்தனை சிரமங்களுக்கும் வேதனைகளுக்கும் நடுவிலும் கூடச் சிறுமை கண்டு பொங்கும் இயல்பும், தீமைகளைச் சாடும் கோபமும் குறையாமல் அவர் வாழ்ந்ததைக் கண்டு முத்துராமலிங்கம் அவரை வியந்தான். வணங்கினான். பாடல்களோடு இரண்டொரு படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பும் சண்முகத்தால் அவனைத் தேடி வந்தன. “உன்னை யார் யாரோ சினிமா ஆளுங்க கார்லே தேடி வராங்க. அவங்களை வாங்கன்னு உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லக் கூட வசதி இல்லாத வீடு இது! இப்ப உன்னாலே உன் கால்லே நிற்க முடியும்னா நீ அடையாறிலேயோ, மைலாப்பூர்லியோ ஒரு தனி வீடு பார்த்துக்கிட்டு போகலாமே?” என்று மெல்ல ஆரம்பித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் கறாராகப் பதில் சொல்லிவிட்டான். “முடியாது ஐயா! இங்கே தான் இருப்பேன். வசதியில்லாதப்ப இங்கே ஒண்டிக்கிறதும், கொஞ்சம் வசதி வந்தப்ப ஒண்டியிருந்த எடத்தை உதறித் தள்ளிட்டுப் போறதும் என்னாலே முடியாது... எனக்கு இங்கே ஒரு வசதிக்குறைவும் இல்லே. என்னைத் தேடி வர்றவன் இங்கே வந்தா வரட்டும்... வராட்டிப் போகட்டும்.
முத்துராமலிங்கமும், மங்காவும் தொடர்ந்து அங்கேயே இருந்தார்கள். வழக்கம் போல் அவருக்கு எல்லா விதங்களில் உதவினார்கள். எல்லா வேலைகளையும் சுபாவமாகச் செய்தார்கள்.
மந்திரி எஸ்.கே.சி.நாதன் எதைப் பற்றிய நிலைமைகளையோ கண்டறிந்து வர அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணம் போயிருந்தார். மந்திரியாக வந்ததுமே சர்க்கார் செலவில் இப்படி நாலு பிரயாணம் போவதுதானே நடைமுறை, அவர் ஊரில் இல்லாததால் இவர்களுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கத்தான் செய்தன. ஒருநாள் மாலை இருட்டிய பின் கிரீன்வேஸ் ரோட்டிலிருந்து அம்மா மங்காவைத் தேடி வந்து பார்த்துவிட்டுப் போனாள். வழக்கம் போல் தெருவில் காரிலிருந்தபடியே, டிரைவர் மூலம் அவளைக் கூப்பிட்டனுப்பித்தான் பேசினாள் அவள். வழக்கமான திட்டு, வசவு, சாபம் எல்லாம் முடிந்த பின், “அப்பா தான் ஊரில் இல்லையே? நாலு நாள் எங்க கூட வீட்டிலே வந்து இரேன்... நான் தனியா இருக்கேன்” என்று அம்மா ஆரம்பித்த போது, மங்கா கண்டிப்பாக அதற்கு மறுத்து விட்டாள். அமெரிக்காவிலிருந்து அப்பா திரும்பும் போது லண்டன் வந்து பர்மிங்ஹாம் போய் அண்ணனோடு ஒருவாரம் தங்கி விட்டு வரலாம் என்று அம்மா தெரிவித்தாள். மங்காவை எப்படியாவது நைச்சியமாகப் பேசி மனமிளகச் செய்து தன்னோடு வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று அவளுடைய அம்மா செய்த முயற்சி அவ்வளவும் வீணாகி விட்டது. “என்னடீ இப்படிக் கறுத்து முகமெல்லாம் குழி விழுந்து இங்கே பஞ்சத்தில் அடி பட்டவ மாதிரி ஆயிட்டியே? சரியாச் சாப்பிடறியா இல்லியா?” என்று அம்மா கேட்ட போது கூடத் தன்னைத் தாழ்வு உணர்வில் சிக்க வைக்க அவள் முயல்வதை மங்கா சரியாகப் புரிந்து கொண்டாள். “நான் நல்லாத்தான் இருக்கேம்மா! உன்னைப் பார்த்தாத்தான் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கு?” “ஆமாண்டீ பேச மாட்டியா பின்னே? பறிகொடுத்ததாலே தானே இப்பிடிக் கண்ட கண்ட எடத்துக்கெல்லாம் நான் உன்னைத் தேடி அலைய வேண்டியிருக்கு!” “இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதேம்மா! முன்னே ஒரு வாட்டி கூட இது மாதிரித்தான் ‘கண்ட கண்ட எடம்’னு சொன்னே? நீயும் அப்பாவும் இருக்கிற எடத்தை விட இது ஒண்ணும் கொறைவான இடம் இல்லே, ஞாபகம் வச்சுக்கோ...” “நான் யாரையும் கொறைச்சுச் சொல்லலேடீ.” “பின்னே நீ பாட்டுக்கு கண்ட கண்ட இடம்னா என்ன அர்த்தம்?” அம்மா விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துராமலிங்கம் கோடம்பாக்கத்திலிருந்து வந்தான். “மங்கா! இன்னிக்கு நான் கொஞ்சம் ஃப்ரீ! மறுபடி நாளைக்குக் காலைல தான் எனக்கு வேலை. கடற்கரைக்கு போயிட்டு வரலாமா?” இந்த மாதிரி ஓய்வு கிடைத்து அவன் இப்படி அவளைக் கேட்பதே அபூர்வம். அவள் மலர்ச்சியோடு சம்மதித்தாள். தியாகி சிவகாமிநாதன் அப்போது வீட்டில் இல்லை. வக்கீல் வீட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாகப் பேசப் போயிருந்தார். கஸ்தூரியும், பாண்டித்துரையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். கஸ்தூரியும் சமையலறையில் ஏதோ கைக்காரியமாக இருந்தாள். பாண்டித்துரை அச்சகத்தில் அச்சுக் கோத்துக் கொண்டிருந்தான். மங்காவும் முத்துராமலிங்கமும் அவர்கள் இருவரையும் கூடக் கடற்கரைக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். “வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறத்துக்கில்லே. யாராவது தேடி வருவாங்க... அப்பாவும் வக்கீல் வீட்டுக்குப் போயிருக்காரு... நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... நாங்க வீட்டைப் பார்த்துக்கிறோம்” என்று மறுத்துவிட்டார்கள் அவர்கள் இருவரும். முத்துராமலிங்கமும் மங்காவும் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். கடற்கரையில் கூட்டமே இல்லாமல் ஓர் ஒதுக்குப்புறமான மூலையைத் தேடி அவர்கள் அமர்ந்த போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. அன்று என்னமோ கடற்கரை அவர்களுக்காகவே ஒழித்து வைத்த மாதிரி இருந்தது. கூட்டமே இல்லை. தன் வீட்டிலிருந்து அம்மா தேடி வந்து விட்டுப் போனதை அவனிடம் சொன்னாள் அவள். அவள் வீட்டுக்குக் கூப்பிட்டதையும் தெரிவித்தாள். அமுத்தலாக அவன் பதிலுக்குக் கேட்டான். “உனக்கு இஷ்டம்னாப் போயிட்டு வர்றதுதானே!” “எனக்குன்னு தனி இஷ்டம் எதுவும் கிடையாது! உங்களுக்கு இஷ்டமில்லாதது எனக்கும் இஷ்டமா இராது. உங்களுக்கு இஷ்டம்னா அது எனக்கும் இஷ்டமாத்தான் இருக்கும்.” “உள்ளதைச் சொன்னா உங்கம்மாவோட நீ போகாததுலேதான் எனக்குத் திருப்தி மங்கா.” “அம்மா அப்பா மாதிரி மோசம் இல்லே. ஆனால் அந்த வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டம் கிடையாது. தந்திரமா அம்மா மூலம் கூப்பிட்டுக் கொண்டு போய் அங்கே வேற விதமா ஏற்பாடு பண்ணி, என்னை ஒரு ரூம்லே தள்ளிக் கதவைப் பூட்டினாலும் பூட்டிடுவாங்க.” “உங்க வீட்டைப் பத்தி நீயே இப்படிப் பயப்படும்படி அத்தினி மோசமா இருக்கு மங்கா அது! இல்லியா... என்ன நான் சொல்றது... சரிதானே...?” “எங்கப்பா வெளிநாடு போயிருந்தாலும் அவரை நம்பறதுக்கில்லே. இப்பிடித் தந்திரமா ஏற்பாடு பண்ணிட்டுப் போனாலும் போயிருப்பாரு...” “பின்னென்ன? தியாகி சார் மாதிரியா எல்லாரும் இருப்பாங்க?... நாம கஷ்டப்பட்டப்ப ‘எங்ககூடத் தான் இங்கே இருக்கணும்’னாரு. இப்ப நான் கொஞ்சம் சம்பாதிக்கிறதைப் பார்த்து, ‘நீ ஏன் இங்கே இருந்து சிரமப்படணும் அப்பா? தனியா ஒரு வீடு பார்த்துக்கிட்டுப் போகலாமே’ங்கிறாரு?” “ரொம்பப் பெரிய மனுஷன்...” “ஆனா உங்கப்பா மாதிரிச் சின்ன மனுஷங்களுக்குத் தானே இது காலமாயிருக்கு?” “...” அதன் பிறகு தியாகியின் குரல் பத்திரிகை, வரப்போகும் தியாகி சிவகாமிநாதனின் மணி விழாவை எப்படிக் கொண்டாடுவது போன்ற பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் கடற்கரையிலிருந்து புறப்பட்டார்கள். இப்போது அவர்கள் மனத்தில் எந்தக் கவலையும் எந்தப் பயமும் இல்லை. கடற்கரை உட் சாலையில் ஒரே ஒரு அம்பாஸிடர் காரும் சுற்றி நாலைந்து ஆட்களும் சிதறினாற் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்தக் காரருகே நடந்த போது உள்ளே இருந்த டிரைவர் கார் ஹெட்லைட்டைப் போட்டு அணைத்தான். அடுத்த நிமிஷம் அந்த நாலைந்து பேரும் ஒன்று சேர்ந்து குபீரென அவர்களை வளைத்துக் கொண்டனர். இருவர் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி, “மூச்சு விடக் கூடாது! நீங்க ரெண்டு பேரும் உடனே காரில் ஏறியாகணும்” என்றார்கள். மங்கா நடுங்கிப் போனாள். முத்துராமலிங்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாமும் தைரியமாக நின்று தப்பும் வழியை யோசித்தான். சட்டைப் பையிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுப்பது போல் அதை மணலில் வேண்டுமென்றே நழுவ விட்டான். நழுவிய மணிபர்சை எடுக்கக் கீழே குனிவது போல் குனிந்து இமைக்கிற வேகத்தில் மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் முகத்தை நோக்கி வீசினான். இன்னொரு கையால் ஒருவனைக் காலை வாரி விட்டான். எல்லாம் படுவேகத்தில் நடைபெற்றன... அவனால் காலை வாரி விடப்பட்டு விழுந்தவனிடமிருந்து நழுவிய கத்தியைக் கையிலே எடுத்துக் கொண்ட முத்துராமலிங்கம் புயலாக மாறி அவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களும் அவனைத் தாக்கினார்கள். அப்போது டூரிஸ்ட் பஸ் ஒன்று கடற்கரைச் சாலைக்குள் புகுந்து அங்கே வரவே முரடர்கள் காரில் ஏறிக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள். முத்துராமலிங்கம் அந்தக் கார் நம்பரைக் குறிக்க முயன்றான். அது மிக மங்கலாக இருந்ததால் பாதி நம்பர் தான் தெரிந்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|