16 இருவரும் அங்கிருந்து பஸ் ஏறி வடபழநி முனையில் வந்து இறங்கினார்கள். கோயிலுக்குத் திரும்புகிற தெருமுனையில் ஒரு பொதுக்கூட்டம் நடப்பதற்கான பெரிய மேடை தயாராகிக் கொண்டிருந்தது. குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் ‘மக்கள் முன்னேற்றப் பேரணி’ என்ற பேனர் பளிச்சிட்டது. அங்கங்கே கிழிசல் தெரிந்த கதர்ச் சட்டையும், அரையில் பழுப்பேறிய கதர் வேஷ்டியுமாகப் பயில்வான் போல் தோற்றமுள்ளவரான ஒரு ஸ்டாலின் மீசைக்காரர் மைக் முன் நின்று மக்களை அறைகூவி அழைத்துக் கொண்டிருந்தார். “அன்பர்களே! பெருமக்களே! நடைபெறுகிற ஆட்சியின் லஞ்ச ஊழல்களை விவரித்துத் தேசத் தொண்டர் சிவகாமிநாதன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே முழங்கப் போகிறார்...” “சிவகாமிநாதன்கிறது வேற யாருமில்லே, பேசறாரே... அவரே தான்” என்றான் சின்னி. “அப்பிடியா...?” என்று ஆச்சரியத்தோடு மேடைப் பக்கம் பார்த்தான் முத்துராமலிங்கம். பேசிக் கொண்டிருந்த சிவகாமிநாதனே மைக்கை இடது கையால் பொத்திக் கொண்டு பக்கவாட்டிலிருந்த டீக்கடையைப் பார்த்து, “யாருப்பா? டீக்கடைப் பையன்... உடனே ஒரு ஸ்பெசல் டீ போட்டு மேடைக்குக் கொண்டா... தொண்டை வறளுது” என்று நடுவே ஓர் அவசர ஆர்டரும் கொடுத்தார். “அப்பழுக்கில்லாத மனுசன். சொத்துச் சுகமெல்லாம் தேசத்துக்காகச் செலவழிச்சே ஏழையானாரு. கடவுளே எதுத்திக்கிட்டு எதிரே வந்தாலும் நெசத்தைப் பேசப் பயப்படமாட்டாரு. யதார்த்தவாதி வெகுஜன விரோதீம்பாங்களே... அப்படித்தான் ஆச்சு இந்த மனுசன் கதையும். சுதந்திரம் வந்தப் பெறவு காங்கிரஸுக்கு வந்த பெரிய மனுசன்களும், புதுப்பணக்காரங்களுமா, இந்தப் பழைய ஆளைக் காங்கிரஸிலேருந்து வெளில துரத்திட்டாங்க...” “அப்புறம்...?” சின்னி தொடர்ந்தான்: “மனுசன் அசரலே! ‘மக்கள் முன்னேற்றப் பேரணி’ன்னு தொடங்கி லஞ்ச ஊழலுங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எதிர்த்து தனி ஆளா நின்று இப்பிடி போராடிக்கிட்டிருக்காரு. இந்த ஆளுகிட்டப் பட்டம் பதவி பணம்லாம் இல்லேன்னாலும் ஜனங்க இவரைக் கடவுளா மதிக்கிறாங்க...” மைக்கில் மிஸ்.மங்காவின் தந்தையான அந்த மந்திரி பெயரைச் சொல்லி அவரது லஞ்ச ஊழல்களைப் பற்றிப் பேசப் போவதாக அப்போது சவால் விட்டுக் கொண்டிருந்தார் சிவகாமிநாதன்.
ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த சுருக்கெழுத்தாளர் ஒருவர் டீக்கடையை ஒட்டிக் கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பத்தருகே பெஞ்சில் அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
சாதாரண உடையிலிருந்த அவரை மேடையிலிருந்தபடியே சுட்டிக்காட்டி, “இங்கே வந்திருக்கும் சி.ஐ.டி.த் தோழர் நான் சொல்லுவதை ஒன்று விடாமல் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று முழங்கிக் கொண்டிருந்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் சின்னியை வினவினான்: “யாருக்கும் பயப்படமாட்டாரு போல்ருக்கே...” “யாரிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்காதவரு எதுக்காவப் பயப்படணும்? பேட்டைக்குப் பேட்டை அவருக்குன்னு ஒரு தொண்டர் பட்டாளம் உண்டு. குடும்பம்னு பெரிசா ஒண்ணுமில்லே... சம்சாரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தவறிப் போச்சு... ஒரு பையன், கல்யாணங்கட்டற வயசிலே ஒரு வயசுப் பொண்ணு... ரெண்டு பேரும் இங்கே கூட்டத்துக்கே வந்திருப்பாங்க...” “எங்கே இருக்காரு?... என்ன பண்றாரு?” “சிந்தாதிரிப்பேட்டையிலே சாமிநாயக்கன் தெருன்னு இருக்குது... அங்கதான் வூடு... பேருக்கு ஒரு சின்ன அச்சாபீஸ் வூட்லியே நடக்குது... அச்சாபீஸ்லே வெளி ஆளுங்க யாருமில்லே... அவுரு பொண்ணு, பிள்ளை எல்லாருமே பார்த்துக்கிறாங்க. அச்சாபீஸ் வேலைகள்ளாம் இவங்களுக்கே நல்லா அத்துபடி.” “ரொம்ப அதிசயமான குடும்பம்...” “இன்னொண்ணு சொல்ல மறந்திடிச்சே... ‘தியாகியின் குரல்’னோ என்னமோ ஒரு வாராந்திரப் பத்திரிகையும் அந்த அச்சாபீஸ்ல இருந்து போடறாங்க...” கூட்டம் முறையாகத் தொடங்கியது. தலைவர் பேச்சாளர் எல்லாமே சிவகாமிநாதன் தான். எல்லாக் கூட்டங்களிலும் தொடக்கத்தில் பாடுவது போல் கடவுள் வாழ்த்து பாடாமல், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்” என்று கம்பீரமான குரலில் பாடிவிட்டுப் பிரசங்கத்தைத் தொடங்கினார் சிவகாமிநாதன். இப்படி மேடைச் சொற்பொழிவுகளுக்கென்றே வாய்த்தாற் போல் கணீரென்று பிசிறு தட்டாத வெண்கலக் கடையில் யானை புகுந்ததை ஒத்த குரல் அவருக்கு வாய்த்திருந்தது. தனித்தனியே திரள் திரளாகவும், கொத்துக் கொத்தாகவும் நின்றிருந்த மக்கள் மேடைக்கு முன் வந்து தரையில் உட்காரத் தொடங்கினார்கள். தரையில் உட்காரக் கூசியவர்கள் ஓரங்களில் நின்றே கேட்கத் தொடங்கினார்கள். மந்திரம் போட்டு வரவழைத்த மாதிரிச் சிவகாமிநாதன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. சின்னி முத்துராமலிங்கத்தைக் கோயிலுக்குப் போக அழைத்தான். “வாப்பா! உள்றப் போயி சாமி கும்பிட்டுட்டு வந்தப் பெறவு கேக்கலாம்.” “பெருமக்களே! அந்தக் காலத்திலே என்னைப் போன்ற தேசபக்தர்கள் வீடு வாசலை விற்றுத் தேச சுதந்திரத்துக்காகப் போராடினோம்! இன்றோ தேசத்தையே விலைக்கு வித்து அந்தப் பணத்திலே சொந்த உபயோகத்துக்கு வீடு வாசல் கார் எல்லாம் வாங்கிக்கிறாங்க. வீட்டை விற்று நாட்டைக் காப்பாற்றின தலைமுறைக்கும் நாட்டையே விற்று வீடு வாங்கிச் சம்பாதிக்கிற தலைமுறைக்கும் எத்தனை வித்தியாசம் பாருங்க...” சின்னியும் முத்துராமலிங்கமும் வடபழநி கோயிலுக்குள் நுழையும் போது ஒலிபெருக்கியில் சிவகாமிநாதனின் குரல் இப்படி முழங்கிக் கொண்டிருந்தது. கோவிலின் உள்ளே சந்நிதிக்கு மிக அருகே மந்திரியின் மகளான மிஸ். மங்காவும், அவள் அன்னையும் தரிசனத்துக்காக நின்றிருப்பதைக் கவனித்தான் முத்துராமலிங்கம். நல்ல வேளையாக அவள் இவனைப் பார்க்கவில்லை. சின்னிதான் பார்த்துவிட்டுச் சொன்னான். “அன்னிக்கி நம்ம கொலைகாரன்பேட்டை வூட்டாண்டே கார்லே வந்து உன்னைப் பார்த்திச்சே, அந்தப் பொண்ணு நிக்கிது...” “அதுக்கென்ன? நிக்கட்டும்.” “அவங்க யாரு தம்பீ? போலீஸ் பாரா - கோவில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸரு - எல்லாமாச் சுத்தி ஒரே தடபுடல் பட்டுக்கிட்டிருக்கே? யாரோ மினிஸ்டரோட பொண்ணுன்னு ஜனங்க பேசிக்குதே...?” “சாமி கும்பிட வந்த இடத்திலே... அதுலே மனசைப் போகவிடாமே, மத்தவங்களைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு?” தற்காலிகமாகச் சின்னியின் வாயை அடக்க இது போதுமானதாயிருந்தது. அரை மணி நேரம் வடபழநிக் கோயிலுக்குள் செலவழித்துவிட்டு வெளியே தெருவுக்கு வந்த போது பொதுக்கூட்டத்தில் விறுவிறுப்பு அதிகமாயிருந்தது. கூட்டமும் அதிகரித்தது. தியாகி சிவகாமிநாதன் உச்ச ஸ்தாயியில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். மிஸ். மங்காவின் தந்தையான அந்த மந்திரியின் சந்தர்ப்ப வாதங்களையும், லஞ்ச ஊழல்களையும் அவர் பன்னிரண்டு லட்ச ரூபாய்க்குச் சென்னை அடையாற்றில் அரண்மனைபோல் ஒரு வீட்டைப் புதிதாக விலைக்கு வாங்கியிருப்பதையும் சொல்லி விளாசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்து முகப்பிலேயே போலீஸ் காவலோடு நின்ற காரில் ஏறப் போன மங்கையர்க்கரசியின் காதிலும் அவள் தாயின் காதிலும் இது விழுந்திருக்க வேண்டும். அப்போது முத்துராமலிங்கம் தானும், சின்னியும் நின்ற இடத்திலிருந்தே இதைக் கவனித்தான். கூட்டம் சாலை கொள்ளாமல் முழு அளவிலும் அதற்கு மேலும் கூடி விட்டதால் கார் எப்படியும் அங்கிருந்து வெளியேறிப் பிரதான சாலையாகிய கோடம்பாக்கம் ஹைரோடுக்குப் போக முடியாதபடி ஆகியிருந்தது. போலீஸை விட்டுக் கூட்டத்தை விலக்கிக் கார் போக வழி செய்யலாம் என்றால் எந்த மந்திரியின் லஞ்ச ஊழல்களைப் பற்றிக் கூட்டத்தில் காரசாரமாகப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதோ அந்த மந்திரியின் காரே கூட்டத்தை வகிர்ந்து கொண்டு போவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாயிருக்கும் என்றும் புரியவில்லை. அந்தச் சமயத்தில் சிவகாமிநாதனின் மகனும், மகளும் கூட்டச் செலவுகளுக்காக உண்டியல் ஏந்தி வந்தனர். தெரிந்தோ தெரியாமலோ மந்திரியின் காரருகே நின்றிருந்த மிஸ். மங்காவிடம் போய் உண்டியலை நீட்டினாள் சிவகாமிநாதனின் மகள். அருகே நின்ற போலீஸ் அவளைத் துரத்த முயல்வதையும், மங்கா போலீஸைக் கையமர்த்தித் தடுத்துவிட்டு ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உண்டியலில் போடுவதையும் முத்துராமலிங்கம் கண்டான். மங்காவின் தாய் அவளைக் கடிந்து கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதையும் கூட அவனால் காண முடிந்தது. நாட்டிற்காகப் பாடுபட்டுச் சிறை சென்ற தியாகி சிவகாமிநாதனின் மகள் காசுக்காக உண்டியல் ஏந்தி நிற்பதையும், நாட்டு விடுதலைக்கு எதிராக இருந்த பாரம்பரியத்தில் வந்த ஒரு சந்தர்ப்பவாதியின் மகள் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாக எடுத்துத் தருகிற நிலையில் இருப்பதையும் மனத்துக்குள் ஒப்பிட்டுப் பார்த்தான் முத்துராமலிங்கம். சின்னி சிரித்தபடியே கூறினான்: “படா கில்லாடிப் பொண்ணுப்பா! அப்பாக்காரரு எந்த மந்திரியைத் திட்டிப் பேசிக்கிட்டிருக்காரோ அந்த மந்திரி மகளுட்டவே அஞ்சு ரூபா கறந்திடிச்சே?” “குடுக்கட்டுமே! எல்லாம் இவுங்க மாதிரித் தியாகிங்க வவுத்திலே அடிச்சுப் பறிச்ச காசுதானே!” “இந்தக் கூட்டத்தை இதே ‘ஜோர்’ல ஏவி விட்டா... லஞ்சப் புலிங்களா இருக்கிற மந்திரிகளை அப்படியே போயிப் பந்தாடிப் புடுவாங்க...” “அப்பன் பண்ற தப்புக்கு அப்பாவி மகளோ, மனைவியோ எப்படிப் பொறுப்பு ஆவாங்க?” “நாட்டிலே எல்லாத்திலியும் இன்னிக்கு நெலைமை இப்படித்தான் இருக்கு! யாரோ உயிரை விட்டு உழைக்கிறான். வேற யாரோ அழுக்குப் படாம வந்து திடீர்னு பூந்து அனுபவிக்கிறான்.” அதெல்லாம் இனிமே நடக்காது. அதான் பாடினாரே, வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்னு.” “எவன் நிந்தனை செய்யிறான்? எங்கே செய்யிறான்? உண்டு களித்திருப்போர்தானே இன்னம் பவிஷா ஆண்டுக்கிட்டிருக்காங்க...” அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தின் மறுமுனையில் ஒரு சலசலப்பு எழுந்தது. திரும்பிப் பார்த்தபோது ஒரு போலீஸ் லாரி வந்து நின்று கொண்டிருப்பதை முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்தார்கள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|