3 லாரி ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு அதிர்ந்து நின்றது. தூக்கக் கிறக்கத்திலிருந்த குமாரி கண்மணி அப்படியே கட்டித் தழுவினாற் போல முத்துராமலிங்கத்தின் மேல் நிலைகுலைந்து வந்து விழுந்திருந்தாள். ”என்னது? என்ன ஆச்சு?” என்று பதறிப் போய்த் தான் எழ முயன்று தன் மேலே விழுந்திருப்பது ஒரு பெண் என்ற கூச்ச உணர்வுடன் அவளை எழுப்பி விட விரைந்த முத்துராமலிங்கத்துக்கு, அவள் எழுந்திருக்கவே விரும்பாதவள் போல் லாரி குலுங்கி நின்ற அதிர்ச்சியில் மூர்ச்சித்து மயங்கி விட்டாளோ என்ற சந்தேகத்தோடு பார்த்தால், கண்மணி கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை மெதுவாக விடுவித்துத் தன்னை அவளிடமிருந்து நீக்கிக் கொண்டு சாலையில் என்ன நடந்தது என்று பார்க்க மற்றவர்களோடு லாரியிலிருந்து கீழே இறங்கினான் முத்துராமலிங்கம். சாலையில் முன்னால் போய்க் கொண்டிருந்த வேறு ஒரு லாரி நட்ட நடுவே குடை சாய்ந்து பாதையை மறித்தாற் போலக் கவிழ்ந்திருந்தது. அதனால் ஏற்பட்ட கூக்குரல்களும், குழப்பமும் பின்னால் வரிசையாக வந்து கொண்டிருந்த பல லாரிகளையும் பஸ்களையும் பாதித்தன. கவிழ்ந்த லாரியில் பின்புறம் இருந்தவர்களில் பெரும்பாலோர் குதித்துத் தப்பிவிட்டனர். சிலருக்குக் காயம், சிராய்ப்பு, ஊமை அடிகள். காபினில் இருந்த டிரைவர், கிளீனர் முதலிய ஆட்களுக்குச் சிறிது பலமான அடி. அவர்கள் கட்சி ஆட்கள் என்பதற்காக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் முத்துராமலிங்கம் பம்பரமாக இயங்கி அவர்களுக்கு உதவினான். காயம் அடைந்தவர்களை வேறு ஒரு லாரியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான். ‘கட்சி’ - அதுவும் ஆளும் கட்சி அநுதாபிகள் ஏறி வந்த லாரி என்பதால் போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இல்லை. உதவிகள் கூட இருந்தன. நடுச்சாலையில் அகாலத்தில் இம்மாதிரி விபத்து வேலைகளில் அறிவுப்பூர்வமாக உடனே செய்யப்பட வேண்டியது என்ன என்று புரியாமல் மலைத்தும் திகைத்தும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டும் உணர்ச்சி வசப்பட்டும் நின்ற அந்தக் கூட்டத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு உரியதை நேரந்தவறாமல் செய்தவன் முத்துராமலிங்கம் தான். கண்மணி அவனை வியந்தாள். பாராட்டினாள். ”அண்ணே! நீங்க இல்லாட்டி இது மாதிரி நடந்ததுக்கு எனக்குக் கையும் ஓடாது - காலும் ஓடாது. நல்லவேளை! சமய சஞ்சீவியாக இருந்து உதவினீங்க.” ”உங்க கட்சித் தலைவருங்கதான் எப்ப ஜனங்களுக்கு என்ன செய்யணும், ஏன் செய்யணும்னு தெரியாம முழிக்கிறாங்க! கஷ்டப்படறவனுக்கு எது உடனே தேவைன்னு புரியாம மலைச்சுப் போயிடறாங்க. அல்லது நான் தான் இதுக்குக் காரணம் நீதான் இதுக்குக் காரணம்னு சண்டை போட்டுக்கறாங்க.” ”தலைவர்கள் எவ்வழி அவ்வழிதான் தொண்டர்களும்னு வச்சுக்குங்களேன்.”
இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்மணி.
”தண்ணிப் பஞ்சத்தாலயும், சோத்துப் பஞ்சத்தாலயும், அறிவுப் பஞ்சத்தாலயும் ஜனங்க கஷ்டப்பட்டிட்டிருக்கறப்ப - மகாநாடு - ஊர்வலம், சிலை வைப்பது, ஊர்ப்பெயர், தெருப் பெயரை மாத்தறது, வறுமையை எதிர்த்து வாய்ப்பந்தல் பிரசங்கங்கள்னு நடத்திக்கிட்டிருக்கிற வகையிலே செயல்படற தலைவர்கள் தான் எல்லாக் கட்சிகளிலேயும் இன்னிக்கு இருக்காங்க...” இதற்குப் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிச் சமாளித்தாள் கண்மணி. அருகே இருந்த ஒரு டீக்கடையிலிருந்து தனக்கும் அவனுக்குமாக டீ வரவழைத்தாள் கண்மணி. கட்சி ஆள் ஒருத்தன் போய் அவன் செலவில் வாங்கி வந்தான். ”வியாபாரம் போல் நடக்கிற அரசியலும், அரசியலால் பாதிக்கப்பட்ட ஊழல் மயமான வியாபாரமும் உள்ள தேசத்தில் எதுவுமே உருப்படாது” என்று அந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் முத்துராமலிங்கம். இரவு இரண்டரை மணிக்குமேல் லாரிகள் மீண்டும் புறப்பட்டன. காற்றுக் குளிர்ந்து வீசலாயிற்று. திறந்த லாரியாக இருந்ததால் சில்லென்ற காற்று முகத்தில் வந்து அறைந்தது. களைப்பினால் முத்துராமலிங்கமும் சிறிது கண்ணயர்ந்து விட்டான். மறுபடி வெயில் முகத்தில் பட்டுச் சுள்ளென்று உறைத்த போது தான் அவன் கண்விழித்தான். லாரி சென்னைக்குள் வந்திருந்தது. பக்கத்தில் கடல் அலைகளில் வெயில் பட்டுப் பளபளத்ததால் அது கடற்கரைச் சாலையாக இருக்க வேண்டுமென்று அவனுக்குப் புரிந்தது. நகரின் தெருக்கள் எல்லாம் கோஷங்களாலும், தோரணங்களாலும், கூட்டங்களாலும், பஸ்கள், லாரிகளாலும் நிரம்பி வழிந்தன. கடற்கரைச் சாலை முழுவதும், வெளியூர்களிலிருந்து வந்திருந்த பஸ்களும், லாரிகளும்தான் நிறைத்துக் கொண்டிருந்தன. நீச்சல் குளத்தையும், மீன் காட்சிக் கூடத்தையும் ஒட்டியிருந்த ஓரிடத்தில் உள்பக்கமாகச் சாலையில் இறங்கி மணற்பரப்பை ஒட்டி இருந்த கடற்கரைத் தார் ரோட்டில் லாரி நின்றது. ”எல்லாரும் இறங்குங்க! அண்ணா சமாதி வந்தாச்சு. லாரி இங்கேயே நிக்கும். மறுபடி நாளைப் பொழுது சாயுறப்ப இங்கேயிருந்து ஊர் திரும்பும். அதுக்குள்ளார வந்திரணும்” என்று கண்மணி அறிவித்தாள். ”அண்ணன் எங்கே போவணும்? தங்க வேற எடமில்லையானா எங்கூடவே வந்தா லாட்ஜ்லே தங்கிக்கலாம்! கட்சி ஆளுங்க இங்கியே பக்கத்துலே திருவல்லிக்கேணியிலே எனக்கு நான் வழக்கமாத் தங்குற ஒரு லாட்ஜ்லே இடம் போட்டு வச்சிருப்பாங்க” என்று முத்துராமலிங்கத்தையும் தன்னோடு கூப்பிட்டாள் கண்மணி. ”இல்லே! நான் என் வேலை விஷயமா எங்கப்பாரு சொல்லியனுப்பிச்ச ஒருத்தரைப் பார்க்கணும். நான் இந்த ஊருக்குப் புதிசு... இந்த அட்ரஸைப் பார்த்து எப்பிடிப் போகணும்னு மட்டும் சொன்னால் போதும்” என்று தன்னிடமிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையின் முகவரியைக் கண்மணியிடம் காண்பித்துக் கேட்டான் அவன். ‘எட்வர்ட் எலியட்ஸ் ரோடு’ - என்று குறித்திருந்தது அந்த முகவரியில். ”இன்னிக்கு இருக்கிற கும்பலிலே டாக்ஸி ஆட்டோ எதுவும் கிடைக்கிறது கஷ்டம். பஸ்ஸிலே கும்பலா இருக்கும். அப்படியே இடம் பிடிச்சுப் போனாலும் உங்க இறங்கற இடம் புரிஞ்சு இறங்க முடியாது. உங்க உயரத்துக்குப் பஸ்ஸிலே நின்னீங்கன்னாக் கீழே தெருவைப் பார்க்க முடியறது சாத்தியமில்லே...” என்றாள், கண்மணி. ”வழி சொன்னீங்கன்னா நான் நடந்தே போயிறலாமில்லே?” அவனுடைய துணிவையும் நம்பிக்கையையும் கண்டு கண்மணி புன்முறுவல் பூத்தாள். ”ஏன் சிரிக்கிறீங்க...?” ”இல்லே! அண்ணனுக்கிருக்கிற நம்பிக்கையைப் பார்த்துச் சிரிப்பு வந்திச்சு...” புத்தம் புதிய கட்சிக்கொடி பறக்கும் சைக்கிள் ரிக்ஷா ஒன்று அப்போது அங்கே எதிர்ப்படவே, ரிக்ஷாவைக் கைதட்டிக் கூப்பிட்டாள் கண்மணி. ”ரிக்ஷாவிலேயே போயிடறீங்களா? விவரம் சொல்லி அனுப்பறேன்.” நகர நாகரிகத்தின் போலிச் சாயங்கள் புரியாத காரணத்தால் அத்தனை தொலைவுக்கு ரிக்ஷாவில் பயணம் செய்வது கொஞ்சம் தயங்க வேண்டிய காரியம் என்பதைக் கூட முத்துராமலிங்கம் உணரவில்லை. ஆனால் அதற்கு என்ன செலவாகுமோ என்று மட்டுமே அவன் தயங்கினான். ”அண்ணன் நடந்தே போய்ச் சேர்ரத்துக்குள்ளாரப் பாக்க வேண்டிய ஆளு வெளியே போனாலும் போயிறலாம். இங்கே மெட்ராஸ்லே உத்தியோகம் பாக்கற பெரிய மனுஷங்களைப் பார்க்கணும்னாக் காலையிலே ஒம்பது ஒம்பதரைக்குள்ளாரப் போயிரணும். இல்லாட்டி, வீட்டிலே அவுங்களைப் பார்க்க முடியாது.” ”அப்பச் சரி? நமக்குத் தோதுபடற வாடகையைப் பேசுங்க... என் கையில் வசதி அதிகம் இல்லே.” ”அடடே! அதுவா சங்கதி? நம்ம ஆளுக்கு ஒரு கஷ்டம்னா நாங்க விட்டுடுவமா? செலவுக்குப் பத்தாட்டி நான் தாரேன் அண்ணே! எங்கிட்ட வாங்கிப்பீங்கள்ளே...” ”இப்ப வேணாம்! அவசியம்னாக் கேட்டு வாங்கிப்பேன்.” கண்மணி ரிக்ஷாக்காரனோடு பேரம் பேசி அவனை இரண்டு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தாள். கட்சி அனுதாபம் கொஞ்சம் துணை செய்திருந்தது. ”ரெண்டு ரூபா குடுங்கண்ணே! இடம் விசாரிச்சுப் பத்திரமாக் கொண்டு போய் சேர்த்துடுவாரு.” என்ன காரணத்தாலோ பிடிக்காத பெண்ணைக் கழுத்தில் கட்ட நேரும் ஒரு கலியாணத்து மணமகன் போல அந்தப் பெருநகரம், அதன் ஜன நெரிசல் சந்தடி ஆரவாரம் அனைத்தையும் வெறுக்கும் ஒட்டாத மனநிலையில் அப்போது இருந்தான் முத்துராமலிங்கம். திரும்ப லாரி புறப்படுகிற தினத்தன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்து கொள்ளும்படி கண்மணி அவனுக்கு ஞாபகப்படுத்தி அனுப்பினாள். சைக்கிள் ரிக்ஷா கடற்கரைச் சாலையிலே தெற்கு நோக்கிச் சென்று கிழக்குப் பக்கம் கடற்கரை மேட்டில் இந்த ஊரையே வெறுத்து அவசரமாக எங்கோ ஓடிப் போகிறாற் போலிருந்த ஒரு காந்தி சிலையருகே வந்ததும் மேற்குப் பக்கமாகத் திரும்பியது. அந்த சைக்கிள் ரிக்ஷாக்காரன் பேசிய கலப்பு மொழியைப் புரிந்து கொள்வது முத்துராமலிங்கத்துக்குச் சிரமமாயிருந்தது. ரிக்ஷாக்காரன் போதையிலிருக்கிறானா, சுய உணர்விலிருக்கிறானா என்று கூட நிதானிக்க முடியவில்லை. உட்புறம் பசும் பாய் விரித்தாற் போன்ற புல்வெளி உள்ள தோட்டத்துக்கு அப்பால் பங்களா இருந்த ஒரு காம்பவுண்டுக்கு முன்னால் ரிக்ஷா நின்றது. ”இந்த ஊடுதான் சார்.” இரண்டு ரூபாய் வாடகையை எடுத்துக் கொடுத்து விட்டு சூட்கேஸுடன் இறங்கிய முத்துராமலிங்கத்தை ரிக்ஷாக்காரனின் குழைந்த குரல் தடுத்து நிறுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது. ”எதினாச்சும் மேலே போட்டுக் குடு சார்!” ”உனக்குப் பேசின தொகையைக் குடுத்தாச்சே ஐயா! நான் எதுவும் கொறைச்சுத் தரலியே...” ”போட்டுக் குடு சார்...!” முத்துராமலிங்கத்துக்கு இது புதிய அனுபவம். பேசிய பேச்சை மீறும் வாடிக்கை இரு தரப்பிலும் இல்லாத ஒரு பிரதேசத்திலிருந்து வருகிற அவன், வாக்கு - வாக்குச் சுத்தம் - வார்த்தை நாணயம் - வார்த்தையைக் காப்பாற்றுவது - இவை பற்றி எல்லாம் அதிக அக்கறை காட்டக்கூடிய சுபாவமுடையவன். அவனுக்கு ரிக்ஷாக்காரனின் கெஞ்சல் தர்மசங்கடத்தையும் தயக்கத்தையும் உண்டாக்கியது. தற்செயலாக அப்போது உள்ளேயிருந்து விறைப்பாக நிமிர்ந்த நடையுடன் கனமான பூட்ஸ்கள் ஒலிக்க ஒரு கான்ஸ்டபிள் நடந்து வரவே, “சரி, நா வரேன் சார்” என்று ரிக்ஷாக்காரன் தானாகவே அவசரப்பட்டு நழுவி விரையலானான். ”சர்க்கிள் குருசாமி சேர்வை வீடு இதுதானே?” ”ஆமாங்க... நீங்க யாரு?” ”அவங்களுக்கு வேண்டிய உறவுக்காரங்க குடும்பத்தைச் சேர்ந்தவன்... பார்க்கணும்.” ”உள்ளார இருக்காரு! போங்க” - கூறிவிட்டுக் கான்ஸ்டபிள் வெளியே சென்று விட்டான். தோற்றத்திலேயே மிரட்டவும், எதிரே நிற்கிறவர்களை விரட்டவும் முடிந்த மீசையோடு கூடிய ஒரு நடுத்தர வயது மனிதர் வீட்டு உடையில் சோபாவில் அமர்ந்து ஆங்கிலத் தினசரியை உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார். ஆண்பிள்ளைகள் போல் இறுக்கமான சட்டையும் ‘பெல்சும்’ அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி மாமிச மலையாக வளர்ந்திருந்த உயரமான நாய் ஒன்றிற்கு ரொட்டித் துண்டை உயரே உயரே தூக்கிப் பிடிக்க நாய் இரண்டு காலில் ஊன்றிக் கொண்டு மற்ற இரண்டு கால்களையும் உயர்த்தி ரொட்டியைத் தாவிப் பிடிக்க எம்பி முயன்று கொண்டிருந்தது. இந்நிலையில் எப்படிக் கூப்பிடுவது - யாரைக் கூப்பிடுவது என்று தயங்கி நின்றான் முத்துராமலிங்கம். புது ஆள் வாடையை உணர்ந்து விட்ட நாய் குபீரென்று உச்ச ஸ்தாயியில் குரைத்தபடி திரும்பி அவனை நோக்கிப் பாய்ந்தது. ”ஹாய் டைகர்! கீப் கொயட்” என்று அப்போது அந்தப் பெண் அதைக் கூப்பிட்டுத் தடுத்தாள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|