6 முத்துராமலிங்கத்தின் கையிலிருந்த சூட்கேஸை வாங்க முயன்றுகை நீட்டியபடியே, “சரக்கு வந்திருக்கா? இன்னிக்கு சரக்கு வரவேண்டிய நாள்னுதான் நானே காத்திருக்கேன்” என்றான் அந்த ஆள். இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்கு மேலும் குழப்பம் அதிகமாகியது. அவர்கள் அங்கு வேறு யாரையோ எதற்கோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது. உள்ளே இரண்டொரு பிணங்கள் வேகும் நாற்றமும் புகைக் குமட்டலும் குடலைப் புரட்டின. கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பங்களில் பல்புகள் பறிக்கப்பட்டிருந்தன. பல்புகள் உள்ள கம்பங்களோ அழுது வடிந்தன. சூட்கேஸை அந்த ஆள் வலிந்து பறிக்க முயலவே தன் வலிமை முழுவதையும் ஒன்று திரட்டி அப்படியே அவனை நெட்டித் தள்ளினான் முத்துராமலிங்கம். அந்த ஆள் பத்தடி தள்ளிப் போய் ஒரு மரத்தடியில் நிலைகுலைந்து விழுந்தான். “என்னா வாத்தியாரே; சரக்குக் கொண்டாரலைன்னா கொண்டாரலைன்னு சொல்றதுதானே? அதுக்குப் போயி இத்தினி கோவமா?” “....” “நாலஞ்சு நாளாக் கஷ்டமருங்க தேடி வந்து சும்மாத் திரும்பிப் போறாங்க. அதான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்.” முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிய முத்துராமலிங்கத்துக்குப் பின்பு விஷயம் மெல்ல மெல்லப் புரிந்தது. அந்தக் கும்பலுக்குக் கஞ்சாவும், அபினியும் கடத்திக் கொண்டு வந்து தருகிற ஒருவன், வழக்கமாக இதே போல் ஒரு சூட்கேஸுடன் இதே நேரத்துக்குத் தேடி வருவது உண்டென்றும், அவன் அனுப்பித்தான் இவன் வந்திருக்கிறான் என்று தன்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் தன்னை அப்படி அவர்கள் நடத்தக் காரணம் என்றும் விளங்கியது. மற்றவர்கள் சாகும் இடமான மயானத்தில் அவர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. இலேசாக மழை தூறத் தொடங்கவே அங்கிருந்த ஒரு பாழ் மண்டபத்தில் அவன் உட்கார வேண்டியதாயிற்று. யாரோ ஒருவருக்குச் சமாதி மண்டபமாகக் கட்டப்பட்டு இன்று பாழடைந்திருந்த அந்தப் பழைய கட்டிடத்தில் நாலைந்து பேர் நனையாமல் உட்காரப் போதுமான இடமிருந்தது. மிக அருகில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பற்றிய பிரக்ஞையோ பாதிப்போ இல்லாமல் மனிதர்கள் கள்ளச் சாராயத்துக்கும், கஞ்சாவுக்குமாக சகஜமாய் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் இந்திய நகரத்திலும் ‘அண்டர்வோர்ல்ட்’, எனப்படும் கீழ் உலகம் ஒன்று இப்படி இயங்கி வந்தது. இந்தக் கீழ் உலகத்தின் உதவியும், அடியாள் வலிமையும், பண பலமும், அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தேவைப்பட்டன. அரசியலால் கிடைக்கிற சில இலகுவான லாபங்களும், பாதுகாப்பும் இந்தக் ‘கீழ் உலகத்துக்கும்’ அவ்வப் போது தேவையாயிருந்தன.
அப்போது மழை பெரிதாக வந்துவிட்டால், மேலே கூடாரமில்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் முற்றாக எரிய முடியாமல் போய்விடுமே என்கிற கவலையோடு மயானத்தின் வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும் தங்களுக்குள் அதுபற்றிப் பேசிக் கொண்டார்கள்.
செத்த பிறகும் சில நாழிகை நேரத்துக்கு மழையும், வெயிலும் மனித உடலைப் பாதிப்பதைப் பற்றி நினைத்த போது வேடிக்கையாகத்தான் இருந்தது முத்துராமலிங்கத்துக்கு. வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும், “மழை வேற, பேஜாராப் போச்சு, இன்னைக்குத் தூங்கினாப்லத்தான்... டீக்குக் காசு குடுப்பா” - என்று சாராயப் பிரமுகனிடம் காசு கேட்டார்கள். “இந்த வாரத்துக்குள்ளாரவே உனக்குப் பதினஞ்சு ரூபாய்க்கு மேலே குடுத்தாச்சு! இனிமே ஒரு பைசாக் கூடப் பேராதுப்பா” - என்று கறாராக மறுத்தான் சாராய ஆள். வாட்ச்மேனோ அவனை மேலும் மேலும் விடாமல் கெஞ்சினான். வயிற்றுப்பாட்டுக்காக ஓர் எட்டணாக் காசு வேண்டும் என்று மன்றாடி அவன் தவிப்பதும் கறாரான வியாபாரி அதைத் தர மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதும் முத்துராமலிங்கத்துக்கு என்னவோ போலிருந்தன. வலுவுள்ள ஒரு முரட்டு மனிதன் இன்னொரு நலிந்த மனிதனைக் கழுத்தைப் பிடித்து நெரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாத இரக்க குணம் நிறைந்த மற்றொரு வலியவனைப் போல் தன்னளவில் அவனுக்கு உதவ வேண்டும் என்று உணர்ந்தான் அவன். ஒன்றும் பேசாமல் பையிலிருந்து ஓர் எட்டணாக் காசை எடுத்து அவனிடம் நீட்டினான் முத்துராமலிங்கம். அதைக் கையில் வாங்கிக் கொண்டு நன்றியுணர்வோடு, “சார்! உனக்கும் ஒரு ‘சிங்கிள்’ வாங்கியாரட்டா?” என்று முத்துராமலிங்கத்தை வினவினான் மயானக் காவல்காரன். முத்துராமலிங்கம் வேண்டாமென்று சொல்லவில்லை. அவனுடைய மௌனத்தைச் சம்மதமாகப் புரிந்து கொண்ட வாட்ச்மேன் டீ வாங்கி வரப் போனான். மரபுகளிலும், பாரம்பரியத்திலும், பழமையான பழக்க வழக்கங்களிலும் தழும்பேறிப் போன அவனுடைய கிராமத்தில் மயானத்தில் வைத்துச் சாப்பிடுவது கூடப் பாவம் என்று நினைப்பார்கள். இங்கோ, சர்வசகஜமாகச் சகல இடங்களிலும் நடக்கிற சகலமும் மயானத்திலும் நடந்து கொண்டிருந்தன. உண்பது, பருகுவது, உறங்குவது, வாழ்வது எல்லாமே மயானத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு பெரிய நகரமுமே ஒரு கலாசார மயானம் என்பதுதான் முத்துராமலிங்கத்தின் கருத்து. பழைய கலாசாரங்களின் இடுகாடுகளாகவும், மூத்த பழக்க வழக்கங்களின் சுடுகாடுகளாகவும் இன்று புதிய பெரு நகரங்கள் இருந்தன. சுயதன்மைகளையும், வாசனையையும், அடையாளத்தையும், ஆதாரத்தையும் இழப்பதற்குத்தான், ‘காஸ்மாபாலிடனாக’ இருப்பது என அழகான பெயர் சூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது. இந்தியாவின் நாட்டுப்புறத்து ஊர்களில் மயானங்கள் என்பவை ஊரிலிருந்து விலகியிருக்கும். சென்னையைப் போன்ற நகரங்களில் பகுதிக்கு ஒரு கறிகாய் மார்க்கெட், பகுதிக்கு ஒரு கோயில், பஜார் என்றிருப்பது போல் மயானங்களும் இருந்தன. மயானங்களும், மனிதர்களும் அருகருகே இருந்தார்கள். ‘வாட்ச்மேன் அழுக்கடைந்த அலுமினியம் டம்ளரிலே கால் டம்ளருக்குச் சற்றே அதிக அளவு இருக்கும்படி சுடச் சுடத் தேநீரை ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தான். அந்த நேரத்துக்கு, அந்தச் சூழ்நிலையில் தேநீர் மிகவும் இதமாகவும் ருசியாகவும் இருந்தது. கடற்கரைப் பக்கமிருந்து ஒலிபெருக்கிக் குரல்கள் காற்றில் மிதந்து வந்தன. “மீட்டிங் போகலாம் வாங்கப்பா...” என்றான் சாராயப் பிரமுகன். அந்த மழைத்தூறலிலும் கடற்கரையில் வெற்றி விழாக் கூட்டம் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது போலிருந்தது. முத்துராமலிங்கத்துக்குப் பொதுக் கூட்டத்தைக் கேட்கப் போகும் ஆசையை விட வழி தெரிந்த அவர்களோடு கடற்கரைக்கு நடந்து போய்விட்டால் அப்படியே தங்கள் ஊரிலிருந்து வந்த லாரி நின்று கொண்டிருக்கிற இடத்தையும் கண்டுபிடித்து விடலாம் என்று தோன்றியது. அவனும் அவர்களோடு புறப்பட்டான். கடற்கரையில் இரவைப் பகலாக்கியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் குழல் விளக்குகளின் ஒளி கண்ணைப் பறித்தது. அப்பாவி மக்கள் மழையில் நனைந்தபடி ஆட்டு மந்தையாகக் கூடி அர்த்தம் புரியாமலே கைதட்டியும் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். “வறுமையை ஓட ஓட விரட்டி வேலையில்லாத் திண்டாட்டத்தைத் திண்டாட வைத்து நாடெங்கும் சுபிட்சம் பொங்கச் செய்வோம். தெருவெல்லாம் தமிழ்ப் பேரறிஞர்களுக்குச் சிலைகள் வைப்போம். ஊரெல்லாம் பட்டி மன்றங்களும், கவியரங்கங்களும் நடத்துவோம். கூவம் நதிக்கரை எங்கணும் குளிர்பானக் கடைகளைத் திறந்து வைப்போம்” என்று மகத்தான ‘பொருளாதாரத் திட்டங்களை’ மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர். முத்தராமலிங்கத்துக்கு மனம் குமுறியது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகளைக் கூட முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வெறும் பிரசங்கப் பண்டங்களாகவே வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனைப் பேரும் கடைந்தெடுத்த எத்தர்கள் என்று அவனுக்குத் தோன்றியது. எதை எதை ஒழிக்கப் போவதாக அவர்கள் ஒவ்வொரு பிரசங்கத்திலும் கூறிக் கொண்டிருந்தார்களோ அதை வைத்தே சொந்தப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இந்நாட்டு மக்கள் திராணியற்றவர்களாகப் போய்விட்டார்களே என்றும் கொதித்தான் அவன். பொருளாதாரத் திட்டங்கள் போட்டு மக்களையும் நாட்டையும் முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களது பதவிக் காலத்துக்குள் ‘வெரைட்டி என்டர்டெயின்மெண்டுகள்’ போலவும் ‘ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்’ போலவும் எதை எதையோ நடத்தி வாண வேடிக்கை காட்டிவிட்டுப் போகிறார்களே என்று உறுத்தல் மக்களுக்கே இல்லாமல் போய்விட்டதே என்று தான் அவனுக்குக் கவலையாயிருந்தது. “இப்போது நீங்கள் வெகுநேரமாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலையரசி குமாரி கண்மணி பேசுவார்” என்று ஒலிபெருக்கியில் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஒரே விசில்கள் மயமாக எழுந்து எதிரொலித்தன. கூட்டத்தில் ஆவலோடு கூடிய வரவேற்கும் முறையிலான கைதட்டல் ஒலிகளும் வெள்ளமாக எழுந்தன. முத்துராமலிங்கம் ஜகஜ்ஜோதியாக மின்னிய மேடையை நிமிர்ந்து பார்த்தான். அந்த வெளிச்சத்தில் மைக்கின் முன் கண்மணி தேவலோக சுந்தரியாக வந்து நின்று மினுக்கினாள். “அண்ணன் அவர்களுடைய காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நடக்கும். நேற்று வரை ஆட்சியை நடத்திய ருத்திராட்சப் பூனைகளின் ஜம்பம் இனிமேல் சாயாது. யானைகள் இன்று ஆள வந்திருக்கிறார்கள், ஞாபகம் இருக்கட்டும்.” ஒரே கைதட்டல் மயம், காது கிழிபடுகிறாற்போல் விசில் ஒலிகள். கண்மணிக்கு அந்தக் கூட்டம் அப்படி ஒரேயடியாக வசியப்பட்டு மயங்கியது. “பேசாம இந்தப் பொம்பளையையும் ஒரு மந்திரியாகவே போட்டுப்பிடலாம்! என்ன அமர்க்களமாப் பேசுது பார்த்தியா?” இது முத்துராமலிங்கத்தின் அருகே நின்ற ஒருவர் வியந்து கூறியது. முத்துராமலிங்கத்தையே ஒரு விநாடி அந்தச் சொல்லலங்கார வேகமும், வசீகரமும் தன்னை மறக்கச் செய்தன. மிக அழகிய சொற்றொடர்களும், அலங்கார வார்த்தைப் பந்தல்களும் செயல் மலட்டுத்தனத்தை மறைக்கும் போர்வைகளாகவே இந்நாட்டில் பயன்பட்டு வருகின்றன என்பதை அவன் முயன்று நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. செயல்களைக் கவனிக்காமல் வெறும் பேச்சிலே மயங்கிச் சோரம் போகிற இந்த மக்களை யாரும் எதுவும் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக எண்ணினான் அவன். கண்மணியின் பேச்சு அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது! மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. மக்கள் மயங்கிக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அர்த்தம் புரியாமலே அடங்கிப் போய்ச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள். “நாளைக்கு எளிமையாக வாழ்வது எப்படி என்று மக்களை இன்று பயிற்றுவிக்க ஏழு கோடி ரூபாய்ச் செலவில் ஒரு திட்டம் தீட்டப் போகிறோம். வேலையில்லாத் திண்டாட்டத்தையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்கான பிரச்சார நாடகங்கள் போடப் பல கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம்.” இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்குச் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. மூன்று பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே வேலை இல்லை. இன்னும் முப்பது பல்கலைக் கழகங்களைத் திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். தவறுகளைக் களைய நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் தவறுகளையே நியாயங்களாக்கி விட முயற்சிகள் நடக்கின்றன. அநியாயங்களை ஒழிக்க முயல்வதற்குப் பதில் நியாயங்களையே ஒழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. உண்மைகளைப் புரியவைக்க முயலுவதற்குப் பதில் பொய்களைப் புரிய விடாமல் குழப்பி வைக்கவே முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. பொய்களே உண்மைகள் போலப் பேசப்பட்டன. இவர்களையும் இவற்றையும் எதிர் நீச்சலிட்டாவது ஒரு கை பார்க்க வேண்டுமென்று இளைஞனாகிய அவன் மனமும் கைகளும் துறுதுறுத்தன. தன் ஒருவனுக்கே ஆயிரம் - லட்சம் - கோடிக்கணக்கான கைகள் முளைத்து இவற்றையும் இவர்களையும் எதிர்த்துப் போரிட வேண்டுமெனத் துடித்தான் அவன். அவனையும் மீறி உணர்ச்சி வசத்தில் வாய் குரல் கொடுத்து விட்டது: - “பேசிப் பேசியே இப்படி ஊரை ஏமாத்தறாங்க...” “டேய்! யார்ர்ராவன்... ஒதையுங்கடா சொல்றேன்...” இரண்டு மூன்று பேர் முத்துராமலிங்கத்தை நோக்கி அவன் மேல் வெறியோடு பாய்ந்தார்கள். அறிவுக் கலப்பற்ற காரணகாரியச் சிந்தனையற்ற அந்த வறட்டு முரட்டுத்தனம் முத்துராமலிங்கத்திற்குக் குமட்டினாலும் தற்காப்புக்குத் தயாரானான் அவன். இம்மாதிரி வேளைகளில் வார்த்தைகளும் காரண காரிய வாக்கு வாதங்களும் மட்டுமே உதவி விடுவது இல்லை. முத்துராமலிங்கம் சுதாரிப்பதற்குள் - அவனுடைய வலது முழங்கையில் பிளேடுக் கீறல் ஒன்று விழுந்து செங்கீற்றாய் குருதிக் கோடாகிக் கொப்புளித்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|