25 கலகம் செய்வதற்கென்று கூட்டத்தில் ஊடுருவியிருந்தவர்களே மிகவும் தந்திரமாகச் செயல்பட்டிருந்தார்கள். அவர்கள் மந்திரி எஸ்.கே.சி.நாதனால் ஏவப்பட்டு வந்திருந்தாலும் சிவகாமிநாதனின் ஆதரவாளர் போல் பாவித்து மந்திரியின் மகளாகிய மங்காவை எதிர்த்துக் கலகம் புரிவதாக நடித்தார்கள். கூட்டத்தினரும் முதலில் அதை அப்படித்தான் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது. தியாகி சிவகாமிநாதன் ஒருவருக்கு மட்டுமே அதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வந்தது. தன் தரப்பு ஆட்களில் யாரும் எக்காரணத்தை முன்னிட்டும் இப்படிப்பட்ட வன்முறைகளில் இறங்கக் கூடியவர்கள் இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மந்திரியின் மகளாகிய மங்கா தங்கள் மேடையில் பேசுவது பிடிக்கவில்லை என்றால் அதைத் தன்னிடம் வந்து விவாதித்து ஆட்சேபிப்பார்களே யொழிய இப்படிச் சோடாபுட்டியை வீசிக் கொண்டு தன் தரப்பு ஆட்கள் குதிக்க மாட்டார்கள் என்று அவர் அறிவார். எனவே தான் யாரோ மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டுத் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொண்டு உஷாரானார் அவர். ஆனால் அவர் உஷாராவதற்குள் காரியம் கை மீறிப் போய் விட்டது. கலகம் செய்யக் கிளம்பியவர்கள் வெளியிலிருந்து வந்த எதிரிகள் என்று தெரிந்திருந்தால் சிவகாமிநாதனின் ஆதரவாலர்களும் மக்களும் அவர்களை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு முதலில் அது தெரிந்திருக்கவில்லை. அங்கே அப்போது கலகம் செய்தவர்கள் ‘சிவகாமி நாதன் வாழ்க!’ என்றும் ‘ஊழல் ஒழிப்பு இயக்கம் ஓங்குக!’ என்றும் அவர்களுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டே எதிரான காரியங்களில் இறங்கி மங்காவை மட்டுமே பகிஷ்கரிப்பது போல் நடந்து கொண்டதால் எல்லாருமே என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனார்கள். சோடா புட்டிகளும், கற்களும், பழைய செருப்புக்களும் மேடையை நோக்கிப் பறந்தன. ஒரே கூச்சல் - ஆர்ப்பாட்டம். மேடையில் தியாகி சிவகாமிநாதன் எழுந்து நின்றார். அவர் மேலும் மங்கா மேலும் எதுவும் பட்டுவிடாமல் தடுக்கிற முயற்சியில் முத்துராமலிங்கம் மேடையில் முன்னால் பாய்ந்து கவசம் போல் கைகளை மறித்து நின்று காத்தான். பறந்து வந்த சோடா பாட்டில்களில் ஒன்றும் கற்களில் சிலவும் அவன் மண்டையில் தாக்கின. மேடையில் இரத்தம் ஒழுக நின்றான் அவன். ஒரு கையால், காயமுற்ற மண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, ‘தோழர்களே! அமைதி! அமைதி” என்று உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தான் அவன். சிவகாமிநாதன் பதறிப் போனார். சிந்தாதிரிப்பேட்டையிலேயே கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகில் இருந்த ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனிக்கு முத்துராமலிங்கத்தை அவசர அவசரமாக ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்றார் அவர். தேசியப்பற்றும் சிவகாமிநாதன் மேல் அபிமானமும் உள்ள அந்த டாக்டர் முத்துராமலிங்கத்தின் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டினார். மங்கா அழத் தொடங்கி விட்டாள். சிவகாமிநாதனின் மகளுக்கும் மகனுக்கும் அவளைத் தேற்றுவது சிரமமான காரியமாக இருந்தது. கூடியிருந்த கூட்டம் கலைய மறுக்கவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டு விட்டுச் சிவகாமிநாதன் மறுபடி பொதுக்கூட்ட மேடைக்குப் போனார்.
திடீரென்று புயல் ஒன்று வந்து ஓய்ந்து போயிருந்த மாதிரிக் கலகங்கள் ஓய்ந்து கூட்டம் அமைதியடைந்திருந்தது. கலகம் செய்வதற்கென்றே வந்து ஊடுருவியிருந்த கும்பல் தப்பி ஓடியிருந்தது. காத்திருந்த கூட்டத்திற்குச் சிவகாமிநாதன் பேசினார்.
எல்லாப் பக்கங்களிலும் நெடுந்தொலைவுக்கு ஒலிபெருக்கியைக் கட்டியிருந்ததால் மருத்துவமனையிலிருந்தபடியே முத்துராமலிங்கமும் மற்றவர்களும் கூட அதைக் கேட்க முடிந்தது. மங்காவை அவள் தந்தைக்கு எதிராகப் பேச விடாதபடி தடுக்கவே அத்தனை தந்திரமான கலக ஏற்பாடு என்பது அதற்குள் பலருக்குப் புரிந்திருந்தது. “இப்படி ஆயிரம் கலகங்களும் கலகக்காரர்களும் வந்தாலும் நானும் எனது இயக்கமும் ஒடுங்கி ஓய்ந்து விட மாட்டோம். நரித்தனமும் வஞ்சகமும் வேஷம் போடுவதும் எனக்குத் தெரியாதவை. ஆதரவோ எதிர்ப்போ எதானாலும் நேராகவும் நேர்மையாகவும் வரவேண்டுமென்று நினைக்கிறவன் நான். பொதுவாழ்வில் வஞ்சக வேடங்கள் கூடாது. பச்சை மண் குடத்தில் அது காய்ந்து குடமாவதற்கு முன் தண்ணீர் நிரப்பி வைத்தால் அது கரைந்து விடும். உருத் தெரியாமல் சிதைந்து விடும். லஞ்ச ஊழல்களினால் பணம் சேர்த்துக் கொண்டு அரசியல் நடத்துவதும் அப்படித்தான். வேண்டியவர்களைப் போல் உள்ளே நுழைந்து கொண்டு கோஷங்கள் போட்டு வேண்டாதவர்களின் வேலைகளைச் செய்கிறீர்கள். என் அருமை மகனைப் போன்ற முத்துராமலிங்கத்தை மண்டையைப் பிளந்து மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டீர்கள். அவரை இரத்தம் சிந்த வைத்து விட்டீர்கள். இன்று இந்த மேடையில் அவர் சிந்திய இரத்தத்திற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். அடியாட்கள் வைத்து அரசியல் நடத்தும் உங்களுக்கு மந்திரிப் பதவி ஒரு கேடா?” என்று தொடங்கி விளாசி விட்டார் சிவகாமிநாதன். கூட்டத்தின் முழு விவரங்களையும் முதலில் இருந்தே ஒரு சி.ஐ.டி. குறிப்பெடுத்துக் குறித்துக் கொண்டிருந்தார். தம்முடைய சொற்பொழிவு ஒரு வரி விடாமல் அப்படியே மந்திரிக்குப் போகும் என்பதும் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சோடாபுட்டி கல்லெறிக்குப் பயந்து கூட்டம் நடத்த முடியாமல் போயிற்று என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் வந்து தனியாகப் பேசிக் கூட்டத்தை நடத்தியிருந்தார். கூட்டம் கலைந்து ஒலிபெருக்கி மேடை ஏற்பாட்டுக்காரர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவர் மீண்டும் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு மணி பன்னிரண்டு. மண்டைக் காயத்தின் வலியினால் தூங்க முடியாமல் தவித்த முத்துராமலிங்கத்துக்குத் தூக்க மருந்து கொடுத்து உறங்கச் செய்திருந்தார்கள். மௌனமாகக் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்த மங்காவுக்குத் துணையாகச் சிவகாமிநாதனின் மகளும் அமர்ந்திருந்தாள். “நீ ஏம்மா அழுதுகிட்டிருக்கே... ஏதோ போறாத வேளை. நடக்க வேண்டியது நடக்கலே... நடக்கக் கூடாதது நடந்திரிச்சு... அழுது என்ன ஆவப்போவுது?” “எனக்குத் தெரியும் ஐயா! இன்னிக்கிக் கூட்டத்திலே நான் எங்கப்பாவை எதிர்த்துப் பேசுவேன்னு அறிவிச்சதாலே தான் இத்தினி கலாட்டாவும் வந்திச்சு. நான் தான் இத்தனைக்கும் காரணம்...” “அசடே இதெல்லாம் என்ன பேச்சு? கலாட்டாவுக்கும் எதிர்ப்புக்கும் பயந்தாப் பொது வாழ்க்கையிலே எதுவுமே செய்ய முடியாது. எல்லாம் எதிர் கொண்டு சமாளிச்சுத் தான் ஆகணும்.” “என்னைப் பேசவிடாமல் பண்ணணும்கிறதுக்காக இப்படிக் கலாட்டாப் பண்ணி இவர் மண்டையை உடைச்சுட்டாங்களே பாவிகள்.” “என்ன செய்வது? ஒவ்வொரு தர்மயுத்தத்திலும் முதலில் அதர்மம் தான் ஜெயிப்பது போல் தோன்றும்... தர்மவான்கள் தான் சிரமப்படுவார்கள். பொறுத்திருந்து தான் ஜெயிக்கணும்! அதான் சோதனை நிறைய வரும்னு முதல்லியே சொன்னேனே.” “எல்லாம் எங்கப்பா ஏற்பாடாத்தான் இருக்கும்! இந்த மாதிரிக் காரியத்துக்காக ஆயிரம் இரண்டாயிரம் செலவழிக்கக் கூடத் தயங்க மாட்டாரு அவரு.” “முதல்லே எனக்குக் கூடப் புரியல்லே. நீ நம்ம மேடையிலே பேசறதை எதிர்த்து எங்க ஆளுங்க தான் கூப்பாடு போடறாங்களோன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம்தான் விஷயமே புரிஞ்சுது. எங்களைப் பத்தியோ எங்க பேச்சைப் பத்தியோ உங்கப்பா கவலைப்படலே. நீ இந்த மேடையிலே அவரைப் பத்திப் பேசறதை மட்டும் அவர் விரும்பலே, அதைத் தடுக்கத்தான் எல்லா ஏற்பாடும்னு புரிந்தது. நாங்க எப்பவும் போல வழக்கமா அவரை எதிர்த்துத்தான் பேசுவோம். ஆனா நீ பேசினா ‘அவரோட சொந்த மகளே பேசறப்ப நிஜமாத்தான் இருக்கணும்னு’ ஜனங்க தன்னைப் பத்தி வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு பயப்படறாரு. அதான் இப்படிக் கலாட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிக் கூட்டத்தையே கலைக்கறாரு...” “இப்படி எத்தனை நாளைக்கிக் கலாட்டாப் பண்ணியே சமாளிச்சிட முடியும்?” “பணமும், பதவியும் இருக்கிற வரை முடியும். போலீஸ்காரங்க பதவி இருக்கற வரை அவரு சொன்னபடி கேட்பாங்க...” “கலாட்டாப் பண்ணினவங்களையும் சோடா பாட்டில் எறிஞ்சவங்களையும் போலீஸ் - ரவுண்ட்-அப் பண்ணிப் பிடிச்சாங்களா இல்லியா?” “பிடிக்கலே... வசதியாத் தப்ப விட்டுட்டாங்க... எல்லாம் முன் கூட்டியே ஏற்பாடு தான்.” அன்றிரவு சிவகாமிநாதனின் மகளும், மங்காவும், மருத்துவமனையிலேயே தங்கினார்கள். சிவகாமிநாதனும் அவர் மகனுமே வீட்டிற்குச் சென்றார்கள். இரவு வீட்டில் தூங்கவே முடியவில்லை. பல தொல்லைகள் தொடர்ந்தன. அன்றிரவு வீட்டிலும் அச்சகத்திலும் கூடக் கல்லெறி சோடா புட்டி வீச்சு எல்லாம் தொடர்ந்தன. போலீஸில் போய்ப் புகார் செய்தும் பாதுகாப்புக்காக யாரும் வரவில்லை. சிவகாமிநாதனையும் அவரது இயக்கத்தையும் கூண்டோடு அழித்து விடுவது என்று மந்திரி கிளம்பியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது. மறுநாள் காலைப் பத்திரிகைகளில் விதம் விதமான தலைப்புக்களுடன் செய்திகள் பிரசுரமாகி இருந்தன. மந்திரிக்கு வேண்டிய தரப்புப் பத்திரிகைகளில் எல்லாம் “அமைச்சரின் மகளைக் கடத்திக் கொண்டு போய் அவருக்கு எதிராகப் பேசச் செய்யச் சதி. முயற்சி முறியடிக்கப்பட்டது. கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. சதிகாரர்களை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர்” என்கிற பாணியில் எழுதப்பட்டிருந்தது. எந்தத் தரப்பையும் சாராத பத்திரிகைகளில் ‘அமைச்சரின் லஞ்ச ஊழல்கள்’ பற்றி அவரது சொந்த மகள் பிரசங்கம். கூட்டத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக மேடையில் ஒருவருக்குக் காயம். பிரசங்கம் பாதியில் முடிந்தது” என்று வெளியிடப்பட்டிருந்தது. தீவிரமாக அமைச்சரையும் அவரது கட்சியையும், ஆட்சியையும் எதிர்க்கும் பத்திரிகைகள், “அமைச்சரின் முகமூடியை அவரது மகளே கிழிக்க முன் வருகிறார். மக்கள் மனக்குமுறல் - கோட்டை கலகலக்கிறது” என்கிற பாணியில் காரசாரமாக வெளுத்துக் கட்டியிருந்தார்கள். எப்படியோ எல்லாப் பத்திரிகைகளிலுமே தலைப்புச் செய்தி அந்தக் கூட்டமாகத்தான் இருந்தது. முத்துராமலிங்கம், மருத்துவமனையில் காலைப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தான். மங்கா அருகே இருந்தாள். சிவகாமிநாதனின் மகள் வீட்டுக்குச் சென்று முத்துராமலிங்கத்திற்குக் கஞ்சி, வெந்நீர் முதலியன தயாரித்து வர எண்ணிப் போயிருந்தாள். பேப்பர்களைப் படித்துக் கொண்டிருந்த முத்துராமலிங்கம், “உன்னாலே எத்தனை பிரச்னை பார்த்தியா?” என்று மங்காவைக் கேட்டான். “எங்கப்பா மனுஷனே இல்லே... ரொம்ப ரொம்ப ராட்சஸத்தனமாப் போறாரு...” “மனுஷங்க யாரும் அவரு கட்சியிலேயே கிடையாதே? அப்புறம் அவரு மட்டும் எப்பிடி மனுஷனா இருக்க முடியும்?” இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கையில் பிளாஸ்குடனும் பையுடனும் அங்கே வந்த சிவகாமிநாதனின் மகள் பதற்றமாக அவனிடம் தெரிவித்தாள். “கலகத்துக்கும் தீ வைப்புக்கும் தூண்டுதல்னு குற்றம் சாட்டி அப்பாவைக் காலம்பர மூணரை மணிக்குப் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க...” “இதென்ன அக்கிரமாயிருக்கு? கலகத்தை எல்லாம் அவங்க ஏற்பாடு பண்ணிப்பிட்டு ஒரு பாவமுமறியாத இவரைப் பிடிச்சுக்கிட்டுப் போறதா? இதை ரெண்டுலே ஒண்ணு பார்த்துடணும்” என்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் முத்துராமலிங்கம். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|