4 அவர் தான் குருசாமி சேர்வையாக இருப்பார் என்று முத்துராமலிங்கம் கருதிய மீசைக்கார மனிதர் ஆங்கிலத் தினசரியைப் படிப்பதிலிருந்து விலகி நிமிர்ந்து அவனைப் பார்த்தார். ‘பெல்ஸ்’ அவனை ஏதோ அபூர்வமான அதுவரை பார்த்திராத காட்டு மிருகம் ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்தது. “ஹூம் டு யூ...” என்று தொடங்கி அப்புறம் இந்த ஆளுக்குத் தமிழில் கேட்டாலே போதுமென்று முடிவு செய்து கொண்டாற் போல், “யாரப்பாது? என்ன வேணும்?” - என்று கேட்டார் அவர். சாதாரணமாகக் கேட்ட போதே அதிகார தோரணையில் ஒரு குற்றவாளியை விசாரிப்பது போன்ற போலீஸ் கெடுபிடி தொனிக்கும் விசாரணைக் குரலாக இருந்தது அது. “நான் ஆண்டிப்பட்டி - பசுங்கிளித் தேவரோட சன் சார்! இன்னைக்கிக் காலையில தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன். அப்பாரு உங்களைப் பார்க்கச் சொல்லி லெட்டர் கொடுத்தனுப்பிச்சிருக்காரு சார்!” போலீஸ் உயர் அதிகாரிகளின் முகமும் குரலும், இப்படித்தான் இருக்கும் - இருக்க வேண்டும் என்று மக்களிடம் ஏற்பட்டுவிட்ட குரூர உருவகத்தின் நிதர்சனம் போல் அவரது முகத்தில் புருவங்கள் ஏறி இறங்கிச் சுருக்கம் காட்டின. ஓர் அம்புப் பார்வையால் அவனைத் துளைத்தார் அவர். “கட்டுக்காவல் இல்லாம வாசக்கதவு தொறந்து கிடந்தா அந்தப் பட்டி இந்தப் பட்டி அவரோட மகன் இவரோட மகன்னு இப்பிடித்தான் யாராச்சும் உள்ளாரப் புகுந்துடறாங்க...” முத்துராமலிங்கத்துக்குச் சுரீரென்று உறைத்தது. இங்கிதமும், மனிதாபிமானமும், பண்பாடுமில்லாத முரட்டு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவரை எதிரே சந்தித்தாற் போலிருந்தது. எதற்கும் தந்தையின் கடிதத்தைக் கொடுத்துப் பார்க்கலாம் என்று பொறுமை இழந்து விடாமல் முயன்று பார்க்க நினைத்தான் அவன். சட்டைப் பையிலிருந்த கடிதத்தை எடுத்தான். அவர் அதைப் பார்க்காததைப் போல உட்பக்கமாக எழுந்து போய்விட்டார். நாயைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணும் உள்ளே போய்விட்டாள். நாய் அவன் காதைக் கிழிக்கிற குரலில் கத்திக் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அங்கே நிற்பதா போவதா என்று அவனுக்குப் புரியவில்லை. எதிரே வந்து நிற்கிற எந்த நாகரிகமான மனிதனையும் பிச்சைக்காரனாகவும், குற்றவாளியாகவும், தன்னை விடத் தாழ்ந்தவனாகவும் நினைக்கிற அற்ப மனப்பான்மை இந்திய அதிகார வர்க்கத்தின் புராதனமான குணங்களில் ஒன்றாக இன்னும் அப்படியே இருப்பதை அவன் கண்டான். மனம் கொதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. சராசரி இந்திய ‘புராக்ரட்’ என்பவன் இன்னும் ஒரு தனி ஜாதி என்றால், போலீஸ் அதிகாரிகள் அதில் மற்றொரு தனி ஜாதியாக இருந்தார்கள். எதிரே தென்படுகிற அனைவரையும் குற்றவாளிகளாகவும், கீழானவர்களாகவும், அற்ப ஜீவிகளாகவும், நினைக்கிற அவர்களது தாமச குணம் சுதந்திரமடைந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் போகவில்லை. பொதுமக்களின் சேவகர்கள் தாங்கள் என்ற எண்ணம் வராமல் பொதுமக்கள் தங்களுடைய சேவகர்கள் என்ற எண்ணமுள்ள அதிகார வர்க்கம் எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாட்டில் அடிமைத்தனம் நிரந்தரமாகவே கொலு இருந்து கோலோச்சி வாசம் செய்யும் என்று தோன்றியது.
மறுபடி சர்க்கிள் முன்பக்கமாக வந்தார்.
“சார் இந்த லெட்டரை...” என்று முத்துராமலிங்கம் தான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்காமல் அவர் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கையில், வேலைக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு, “ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்” - என்று அவர் இரைந்தார். “சார்! உங்க பழைய நண்பர் ஆண்டிப்பட்டிப் பசுங்கிளித் தேவர்...” “எனக்கு எந்தத் தேவரையும் தெரியாது. எடத்தைக் காலி பண்ணுப்பா... தெனம் இப்பிடி நூறு பேர் தேடி வராங்க... உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா என்ன?” பொறுமை இழப்பதைத் தவிர முத்துராமலிங்கத்துக்கு வேறு வழி இல்லை. தன் இனத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்திலும், பழைய சிநேகிதத்திலும் தந்தை இவருக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் இவரோ ஒன்றுமே தெரியாதது போல நடித்துக் கடிதத்தையே வாங்க மறுக்கிறார். ஒவ்வோர் இனத்திலும் அடித்தளத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற வர்க்கத்திலிருந்து உதவிகளும், உபகாரத் தொகைகளும் பெற்றுப் படித்துப் பணம் பதவி வசதியான வாழ்க்கை எல்லாம் அடைந்து மேல் தட்டுக்குப் போய்விட்டவன், அதற்குப் பின் அந்த உயரமான இடத்திலேயே இன்னொரு தனி உயர் ஜாதியாகி விடுகிறான். அவன் தான் எங்கிருந்து வந்தோமோ அந்த மக்களுடன் தன்னைச் சேர்த்து நினைக்கவே கூசுகிறான். தன்னைப் போல் வசதியும் பதவியுமுள்ளவர்களோடு மட்டுமே அதன் பின் தன்னைச் சேர்த்து நினைக்கப் பழகிக் கொள்கிறான் என்று புரிந்தது. அந்தஸ்தும் பணமும் பதவிகளுமே இன்றைய புதிய ஜாதிகளைப் பிரிக்கின்றன என்று தோன்றியது. சராசரி இந்தியக் கிராமவாசியின் துரதிருஷ்டங்கள் பல. அவன் தேர்ந்தெடுத்து அனுப்புகிற அரசியல்வாதி தான் மேலே போனதும் அவனுக்குத் துரோகம் செய்கிறான். அவன் உருவாக்கி மேலே அனுப்புகிற உத்தியோக வர்க்கம் மேலே போனதும் அவனைப் புறக்கணிக்கிறது. அவன் உருவாக்கி அனுப்பிய பண்டங்களை நகருக்குப் போய் அவனே மீண்டும் வாங்கும் போது அதன் விலை அவனுக்கு எட்டாததாயிருக்கிறது. முத்துராமலிங்கம் தன் தந்தையின் அந்தக் கடிதத்தை ஒரு தபால்காரன் போட்டுவிட்டு வருவதைப் போல அந்த வீட்டு முகப்பில் வீசிப் போட்டுவிட்டு வெளியேறினான். நகரில் இறங்கியதுமே அதன் மேல் ஏற்பட்ட வெறுப்பு - ஏக்கம் - கசப்பு எல்லாம் இன்னும் அப்படியே தொடர்வது போலிருந்தது. அந்தப் பெருநகரம் புதிதாக வருகின்ற பாமரனுக்கு அது அளிக்கும் அலட்சியம், தோல்வி - முடிவான ஏக்கம் - எல்லாவற்றையும் மீறி அதை அடக்கி வெல்ல வேண்டும் போன்ற துடிப்பு இளைஞனான அவனுக்கு ஏற்பட்டது; எது எது எல்லாம் தன்னை அலட்சியப்படுத்தி ஏங்க வைக்கிறதோ அதை எல்லாம் உடனே முரட்டுத்தனமாக ஜெயித்து அடக்கி வெற்றிக் கொடி நாட்டி விட வேண்டும் போன்ற இளமைத் துறுதுறுப்பில் அவன் இருந்தான். ரிக்ஷாவில் தான் வந்த அதே வழியே திரும்பி நடந்தான் அவன். கிழக்கே போய்க் கடற்கரைச் சாலையில் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினான். காலில் அணிந்திருந்த செருப்புக்களில் ஒன்று நூலிழையில் அறுவதற்குக் காத்திருந்தது. கடற்கரைச் சாலையில் வரும்போது இருந்ததை விட இப்போது கலகலப்பு அதிகமாயிருந்தது. வடக்கு நோக்கிக் கார்களும், சைக்கிள்களும் ரிக்ஷாக்களும் அதிக அளவில் விரைந்து கொண்டிருந்தன. கால் செருப்புக்களில் ஒன்று இன்னும் சிறிது நேரத்தில் தன்னை கைவிட்டுவிடும் என்ற உணர்ச்சி முத்துராமலிங்கத்திற்கு எரிச்சலூட்டியது. தலைநகரத்தில் இறங்கிய விநாடியிலிருந்து தனது துரதிர்ஷ்டங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்குவது போல் அவனுக்குத் தோன்றியது. கடிக்கப் படமெடுக்கும் ஒரு பாம்பை அடிக்க விரைவது போல் அந்தத் துரதிர்ஷ்டங்களை அடித்து நொறுக்கி விட வேண்டும் என்று முனைப்பாயிருந்தான் அவன். அதிகாலையில் பல் துலக்கிவிட்டு வழக்கமாக மென்று தின்னும் ஒரு கை வேப்பங்கொழுந்தை இன்று இன்னும் சாப்பிட முடியவில்லை. நேற்றுப் பொழுது சாய்கிற நேரத்துக்கு லாரியில் சென்னைக்குப் பயணம் செய்து வருகிற போது கூட ஒரு சாலையோர வேப்ப மரத்தில் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடிந்திருந்தது. ஆனால் சுற்றுமுற்றும் எங்கும் கசப்பே நிறைந்திருந்த சென்னை நகரத்தில் அவன் கண்களில் கொழுந்து பறித்து மென்று தின்ன இசைவாக இன்னும் ஒரு வேப்ப மரம்கூடப் படவில்லை. இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வேப்ப மரம் தென்பட்டுவிட்டது. குயின் மேரீஸ் காலேஜ் - ராணி மேரிக் கல்லூரி - என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிப் பெயர்ப் பலகை நிறுத்தியிருந்த ஒரு காம்பவுண்டுச் சுவரின் உட்புறம் வேப்பமரம் ஒன்று தென்பட்டது. வெளியிலும், உள்ளேயுமாகப் பட்டாம்பூச்சிகள் போல் கும்பல் கும்பலாக மாணவிகள் தென்பட்டார்கள். கல்லூரி தொடங்குகிற நேரம் போலிருக்கிறது. வேப்ப மரத்துக்காக விரைந்தபோது அவனுடைய செருப்பு அறுந்து காலை வாரி விட்டது. இரண்டு செருப்பையுமே தெரு ஓரமாக வீசி எறிந்துவிட்டு வெறுங்காலோடு நடக்கலாமா அல்லது நன்றாயிருக்கிற மற்றொரு செருப்பை உத்தேசித்து அறுந்து போனதையும் சேர்த்துக் கையிலெடுத்துக் கொண்டு செருப்புத் தைக்கிற ஆளைத் தேடலாமா என்றெண்ணித் தயங்கிய முத்துராமலிங்கம் அடுத்த கணமே அரைகுறையாக உபயோகமிழந்தை பண்டத்தை அறவே தூக்கி எறிகிற பெருநகர மனப்பான்மைக்குத் தயாராகியிராத காரணத்தால் மற்றொரு செருப்பையும் சேர்த்துக் கையிலே எடுத்துக் கொண்டு வேப்ப மரத்தை நோக்கி நடந்தான். திடீரென்று ஒரு காரணமுமில்லாமல் அவனருகே கும்பலாக நின்றிருந்த கல்லூரி மாணவிகளின் கூட்டம் அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது. வீண் பிரமையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மேலே நடக்க முயன்றவனை, “ஹீரோ வித் ப்ரோக்கன் சப்பல்ஸ்” என்ற கீச்சுக் குரல் சொற்கள் காதில் விழுந்து தடுத்தன. முத்துராமலிங்கத்துக்கு அந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனியாக அகப்பட்டுக் கொள்ளும் இளம் பெண்ணிடம் கூட்டமாக வாலாட்டும் ஆண் பிள்ளைகளை அவன் அறிவான். கூட்டமாக நிற்கும் பெண்களுக்கு நடுவே பெண்களை விட நாணிக்கோணி நெளியும் தனியான ஆண்களையும் அவன் அறிவான். அவன் இரண்டு வகையிலும் சேராதவன். உலகில் பெண்களைக் கண்டு நாணிக் கூசும் ஆண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆண்மைக்குப் பெருமை இல்லை. ஆண்கள் நாணிக் கூசும்படி ஒளிவு மறைவில்லாத பெண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் பெண்மைக்குப் பெருமை இல்லை. பெண்களைப் பொறுத்தவரை முத்துராமலிங்கம் சங்கோஜியும் இல்லை. வெட்கம் கெட்ட முரடனுமில்லை. அப்படியே கையில் அறுந்த செருப்பை எடுத்துக் கொண்டு நேரே அந்தப் பெண்கள் கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் நடையில் தயக்கமோ பதற்றமோ ஒரு சிறிதுமில்லை. “இதைப் பார்த்து என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது? இப்படி இன்று எனக்கு நேரலாம். நாளை உங்களுக்கும் நேரலாம். நடுத்தெருவிலே சகமனுஷன் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தா அதைப் பார்த்துச் சிரிக்கிறதுங்கிற காட்டுமிராண்டித்தனம். ஆர் யூ நாட் அஷேம்டு?” அவர்கள் இதைக் கேட்டு அவனுக்கு மறுமொழி கூறாமல் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருக்கும் இப்போது சிரிக்க வரவில்லை. அதில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது மௌனத்துக்குப் பின் தயங்கித் தயங்கி மெல்ல “ஸாரி...” என்றாள். மற்றவர்கள் இடித்த புளி மாதிரி நின்றார்கள். “உங்களிலே யாராவது ஒருத்தர் நடுத்தெருவிலே மானபங்கப்பட்டு நின்னீங்கன்னு வெச்சுக்குங்க, நான் சரியான ஆம்பிளையா இருந்தா அதைப் பார்த்துச் சிரிச்சு இரசிக்க மாட்டேன். உடனே உங்க மானத்தைக் காப்பாத்தறது எப்படீன்னு தான் முதல்லே யோசிப்பேன்.” அவனது அந்த முகத்திலிருந்த உண்மை ஒளியையும், குரலில் இருந்த தீர்மானத்தையும் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் பேச வரவில்லை. சற்று முன் சிரித்த அத்தனைப் பெண்களும் அப்படியே பயந்து கட்டுண்டு நிற்பது போல் மிரண்டு நின்றார்கள். “சிரிச்சதுக்காக நான் உங்களை மன்னிச்சிடலாம்! நீங்க என்னிடம் அப்படி மன்னிப்புக் கேட்கலைன்னாலும் நான் உங்களை மன்னிச்சித்தான் ஆவணும். ஆனால் நாகரிகம் உங்களை மன்னிக்காது. போங்க காலேஜ் மணி அடிக்குது... நேரமாச்சு.” அவர்கள் போய் விட்டார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் புறப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு ரயிலில் அவசரத்தில் அள்ளித் திணித்தாற்போல்தான் மனிதர்களும் குணங்களும், மற்றவையும் நெருக்கடியோடு தாறுமாறாக இருந்தன. ஒழுங்கற்ற எதிலும், எதற்கும் எதனாலும் கட்டுப்படாத இந்தப் பெருநகர மனப்பான்மை அவனுக்கு எரிச்சலூட்டியது. ஒரு கை வேப்பங்கொழுந்தைப் பறித்து மென்று தின்ற போது உணர முடியாத கசப்பைக் குருசாமி சேர்வை வீட்டு அநுபவத்திலிருந்து கல்லூரி மாணவிகளின் அநுபவம் வரை ஒவ்வொன்றாக அவனை உணர வைத்தன. ஆனால் அந்தக் கசப்பு அவனைச் சோர்ந்து நலிய வைப்பதற்குப் பதில் அதிக உறுதியுள்ளவனாக்கியது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|