13 தந்தை தனக்காக யாருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினாரோ அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையை மீண்டும் அவன் சந்திக்க நேர்ந்தது. அவர் அவனைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டார். ஆனால் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை. அங்கே அவர் விசாரித்ததிலிருந்து குற்றப்பிரிவு, விசாரணை, இம்மாரல் டிராஃபிக் விவகாரங்கள் அவருடைய பொறுப்பில் இருப்பதாகப் பட்டது. கைது செய்யப்பட்டு வந்திருந்த பெண்களின் கன்னத்தில் தட்டுவது, தோளில் கையை வைத்துப் பேசுவது போன்ற செயல்களால் அவரும் யோக்கியரில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஒரே ஒரு பெண்ணை லாக்கப்பில் தள்ளி அவரும் உள்ளே போய்விட்டு வந்தார். பிடித்து வந்த பெண்களையும் முத்துராமலிங்கத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் அல்லது வேண்டுமென்றே சாப்பிடக் கூட வழி செய்யாமல் பட்டினி போட்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி ‘ரெய்டு’ நடத்துவது போல் பாசாங்கு செய்வதும் விட்டு விடுவதும் வழக்கம் என்று உடன் இருந்த பெண்களில் ஒருத்தி முத்துராமலிங்கத்திடம் கூறினாள். அந்த ஒரு விபசார விடுதியில் மட்டுமல்லாமல் நகரின் வேறு விபசார விடுதிகளிலும் இவர்களுக்கு ‘மாமூலாக’ ஒரு கப்பம் கட்டி வருவதுண்டு என்றாள் அவள். சட்டத்தால் தடுக்கப்படும் கள்ளச் சாராயம், சட்டத்தால் தடுக்கப்படும் விபசாரம் எல்லாவற்றையும் ‘முதலீடாக’ வைத்தே சட்டத்தின் பாதுகாவலர்கள் சம்பாதிக்கவும் முயலுகிறார்கள் என்பதை அறிந்த போது அவனுக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. மாடியில் ஒளிந்து கொள்ளும்படி வேண்டப்பட்டிருந்த தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் வலுவில், போலீஸிடம் வந்து சிக்கி ஒரு குற்றமும் செய்யாமலே தண்டனை அனுபவிப்பது ஒரு விதத்தில் பலவற்றின் குரூரமான உண்மை முகங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படும் என்றே அவனுக்குத் தோன்றியது. அநுபவங்களையும் அநுபவங்களிலிருந்தும் கற்க நேர்கிற இந்த வாய்ப்பை அவன் விரும்பினான். பொது மக்கள் தவறுகளைச் செய்து விடக் கூடாது என்பதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஒவ்வோர் அதிகாரமும், நிர்வாகமுமே தவறுகளைத் துணிந்து செய்யத் தொடங்குவது தான் ஊழலின் முகத்துவாரம் என்று அவனால் இப்போது உணர முடிந்தது. இரவு பதினொன்றரை மணிக்கு மேல் சின்னி யாரோ ஒரு பெரிய அரசியல் பிரமுகரோடு அங்கே வந்தான். அவர்கள் அதிகாரிகளோடு பேசினார்கள். அரை மணி நேரத்தில் பெண்களையும், முத்துராமலிங்கத்தையும் விடுவித்து அழைத்துக் கொண்டு செல்ல அவனால் முடிந்தது. “நீ எப்போ விடுதலையாகி வந்தே? உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதாகச் சொன்னாங்களே?” என்று சின்னியைக் கேட்டான் முத்துராமலிங்கம். “எல்லாம் அப்புறமாகச் சொல்றேன்” என்று சின்னியிடமிருந்து சுருக்கமாகப் பதில் வந்தது. அவனது முழங்கையில் கட்டுப் போட்டுக் கழுத்தில் முடிந்திருந்த கோலம் கலவரத்தில் அவன் அடைந்த பரிசாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. சின்னியோடு கூட அரசியல் பிரமுகரும் இருந்தாலும் அவரைக் கடைசி வரை முத்துராமலிங்கத்துக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவில்லை.
கொலைகாரன்பேட்டை பங்களா முகப்புக்கு வந்ததும், “இவளை நீங்க இட்டுக்கினு போங்க... காலம்பர அனுப்பி வைங்க... போறும்” என்று சிரித்தபடி கூறிய சின்னி தன் கும்பலில் கட்டழகு மிக்க ஒரு பெண்ணை அந்தப் பிரமுகரோடு காரில் அனுப்பி வைத்தான்.
பங்களாவில் எல்லாம் சகஜமாக இருந்தன. நாய் குரைக்காமல் சாதுவாகப் படுத்திருந்தது. சின்னியைக் கண்டதும் படு குஷியோடு எழுந்து வாலாட்டியது. சிறுவர்கள் தென்பட்டார்கள். ஆயாக்கிழவி முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள். அதை விடப் பெரிய ஆச்சரியம் உள்ளே வேறு பல பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். முத்துராமலிங்கம் சின்னியை அதுபற்றி விசாரித்தான். சின்னி சுலபமாகப் பதில் கூறினான்:- “இந்த டெப்போவில் சரக்குத் தீர்ந்து போனா வேற டெப்போவில் இருந்து சரக்கு வரும். வியாபாரம் நிக்காது. இது நாங்கள் நடத்தற எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும்! எதனாலயும் எதுவும் நிக்காது.” “அவரு யாரு?” “அரசியல்லே செல்வாக்குள்ளவரு... சொன்னா நாலும் நடக்கும். அதுசரி... பொடியங்க ‘மாடியிலேயே பதுங்கிக்குங்கன்னு’ உனக்குச் சொன்னாங்களாமே; அதை மீறி ரெய்டு நடக்கறப்ப நீ ஏன் கீழாலே வந்தே?” “என்னமோ தோணிச்சு... வந்தேன். இப்ப அதுக்காக நான் வருத்தப்படலே சின்னி...” “அவங்களுக்கும் நமக்கும் சண்டை ஒண்ணுமில்லே... சும்மா ஊர் வாயை மூட இப்படி அஞ்சாறு மாசத்துக்கொரு வாட்டி ‘ரெய்டு’ன்னு பேருக்குக் கண் துடைக்க வருவாங்க.” “அப்படியானால் கிருஷ்ணாம்பேட்டையில் நடந்த ரெய்டு...?” “அது பங்காளிச் சண்டை! நம்ப மேலிடத்துக்கு வேண்டிய ரெண்டு எம்.எல்.ஏ. கட்சிமாறி எதிர்த் தரப்புக்குப் போயிட்டானுவ... அந்த ஆத்திரத்தில் நடந்திச்சு.” “எம்.எல்.ஏ.யா ஆறதுக்காக ஓட்டை விலைக்கு வாங்கறாங்க. எம்.எல்.ஏக்களை கட்சிங்க விலைக்கு வாங்குது. கட்சிங்களைப் பணமுள்ளவன் விலைக்கு வாங்கறான். இப்படியே போனா விற்க முடியாததும், வாங்க முடியாததும் இந்த தேசத்துலே ஒண்ணுமே மீதம் இல்லேன்னு தானே ஆகுது...?” “நல்லாச் சொன்னேப்பா - அது தான் நெஜம்” சிறிது நேரம் கழித்து முத்துராமலிங்கத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு இன்னொரு காரியமும் செய்தான் சின்னி. சில்க் ஜிப்பாவும் கழுத்தில் தங்கச் செயினுமாக ஓர் அறையிலிருந்து வெளிப்பட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை அழைத்து வந்து முத்துராமலிங்கத்துக்கு அறிமுகப்படுத்தினான். “நம்ப வைரவன் சார் இந்த ஊர்லியே பெரிய பப்ளிஷர். கொண்டிச் செட்டி தெருவிலே பெரிய புக் ஷாப் வேற வச்சிருக்காரு. இவரு மனசு வச்சா உனக்கு ஒரு வேலை தர முடியும்.” அவர் சின்னியைக் கேட்டார்: “தம்பி யாருன்னு சொல்லலியே...?” “முத்துராமலிங்கம், நமக்கு ரொம்ப வேண்டியவரு... எம்.ஏ. படிச்சிருக்காரு... நீங்க தான் பார்த்து ஒரு வேலை போட்டுக் குடுக்கணும்...” “எந்தப் பக்கம்?...” “மதுரை - ஆண்டிப்பட்டி...” “மதுரைன்னா... வந்து...?” - எந்த ஜாதி என்று தெரிந்து கொள்ளத் தவித்து வெளிப்படையாக அதைக் கேட்கவும் முடியாமல், தவிப்பையும் விட முடியாமல் அவர் திணறுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. அவரை அப்படியே இன்னும் சிறிது நேரம் தவிக்க விடலாமென்றும் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே, ‘நீங்க இன்னாரோட சன் தானே?’ என்று தப்புத் தப்பான பெயர்களைக் கூறிக் கேட்டு அவனைத் திணற அடித்தார் அவர். முத்துராமலிங்கம் அவர் மேலும் பல பொய்யான தகப்பனார்களைத் தனக்குக் கற்பிப்பதற்குள் தன்னுடைய நிஜத் தகப்பனாரின் பெயரை விரைந்து சொல்லி விட விரும்பி, “எங்கப்பா பேரு பசுங்கினித் தேவர்” என்று கூறி விட்டான். எவ்வளவுதான் நாகரிகமாக உடையணிந்து நாசூக்காகப் பழகினாலும் ஒவ்வொரு மனிதனிலிருந்தும் ஒரு காட்டுமிராண்டி ஏதாவது ஒரு சமயத்தில் மெல்லத் தலையைத் தலையை நீட்டுகிறான். அதில் ஒன்றுதான் பிறரது ஜாதியைப் பற்றி அறிய விரும்பும் சமயமும் என்று புரிந்தது. வைரவன் மறுநாள் தன்னை வந்து பார்க்குமாறு முத்துராமலிங்கத்திடம் கூறினார். பின் உட்புறம் ஓர் அறை வாசலுக்குப் போய் வாயிற்படியில் நின்றவண்ணமே, “இந்தா உன் மாமூலை வாங்கிக்க” என்று ரூபாய் நோட்டுக்களை நீட்டினார். உள்ளே இருந்து தோள் புடைவை முற்றிலும் சரிய ஓர் இளம் பெண் வந்து அதை வாங்கிக் கொண்டு போனாள். “வைரவன் சார் நம்ம கஷ்டமர்” என்றான் சின்னி. அவன் அப்படிக் கூறியதை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று பட்டது. அவர் புறப்பட்டுப் போன பின் “இந்த மாதிரி வந்த எடத்துலே சிபாரிசு சொன்னா எப்படி? அவருக்கும் இது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்” என்றான் முத்துராமலிங்கம். சின்னி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தான். “அதெல்லாம் இல்லே... செய்வாரு... உனக்கு வேலை கெடைக்கும்.” “ஜாதி ஊரு பேரெல்லாம் விசாரிக்கிறாரே...?” “எல்லாரும் பொதுவாகக் கேக்கிறதைத் தானே கேட்டாரு.” “இதெல்லாம் அநாகரிகம். தப்புன்னு பேசிக்கிட்டே இதைப் பற்றிப் பூடகமா விசாரிக்கிற ஆசாரக் கள்ளனுகளை விட நேரடியாகவே என்ன ஜாதின்னு கேட்கிறவனே தேவலாம்.” “ஜாதி, கட்சி, பிரதேசம், மொழி இதையெல்லாம் வச்சுத்தான் இன்னிக்கு உலகத்திலே எல்லாமே நடக்குதுப்பா.” மறுநாள் காலை வைரவனைப் பார்க்கக் கொண்டிச் செட்டித் தெருவுக்குப் போனான் முத்துராமலிங்கம். அங்கே போக வழி, பஸ் நம்பர் முதலிய விவரங்களைச் சின்னியிடம் கேட்டுக் கொண்டு வந்திருந்தான் அவன். அவன் போய்ச் சேர்ந்த போது கடையில் வைரவன் இல்லை. இளம்பெண் ஒருத்தி யாரோ வாடிக்கைக்காரருக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மற்றோர் இளம்பெண் டெலிஃபோனில் யாருடனோ குழைந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அலமாரிகளிலும், புத்தக அடுக்குகளிலும், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் விற்பனையாகும் தலைப்புகளே அதிகமாகத் தென்பட்டன. ஓடிப் போன ஒய்யாரி, தேடிப் போன சிங்காரி, சீரழிந்தவளின் சிறுகதை, போன்ற புத்தகங்கள் கொச்சை கொச்சையான மலிவு வர்ண அட்டைகளோடு பல்லிளித்தன. அங்கே ஓடாமலும், தேடாமலும், சீரழியாமலும் ஒரு புத்தகத்துக்குக் கூடத் தலைப்பு இல்லை. பஸ் நிலைய விற்பனைகளுக்கும், இரயில் நிலைய விற்பனைகளுக்கும் சில்லறை விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கூடமாகத் தெரிந்தது அது. ஓடுவதற்கும், தேடுவதற்கும், சீரழிவதற்கும் பஸ்கள், இரயில்கள் அவசியமென்று கருதியோ என்னவோ புத்தகங்கள் எல்லாமே அப்படித் தலைப்புக்களோடு தான் விளங்கின. காலை பத்தரை மணி சுமாருக்கு வைரவன் கடைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முத்துராமலிங்கத்தை ஞாபகமில்லை. அதற்குள் மறந்து போயிருந்தது. அவனாகச் சொல்லி நினைவுபடுத்திவிட வேண்டியிருந்தது. அப்படி நினைப்பூட்டியது அவருக்குப் பிடிக்கவேயில்லை. சின்னியின் பெயரைக் கேட்டதுமே முகத்தைச் சுளித்துக் கொண்டார் அவர். ‘உங்க நண்பர் சின்னி’ என்று முத்துராமலிங்கம் கூறிய சொற்கள் அவருக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|