35 அவர்கள் இருவரும் கடற்கரை உழைப்பாளிகள் சிலையருகே மேலே ஏறி வந்திருந்தார்கள். “என்ன நடந்திச்சுப் பார்த்தியா? உங்கப்பா இன்னும் ஓய்ந்து அமைதியடைந்து விடவில்லை. வெளிநாட்டுக்குப் போயிருந்தாலும் நமக்கு ஆள் ஏற்பாடு பண்ணித் தொல்லை கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காரு...” “இந்த டூரிஸ்ட் பஸ் மட்டும் சமய சஞ்சீவியா வரலேன்னா நம்மைக் கடத்திக்கிட்டே போயிருப்பாங்க.” “என் உடம்பிலே உயிர் உள்ளவரை அப்படி நடக்க முடியாது. விடமாட்டேன் மங்கா.” அவன் குரலில் நிச்சயமும் இரும்பின் உறுதியும் ஒலித்தன. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தின் அருகே சவாரி இறக்கி விட்டுவிட்டுக் காலியாகத் திரும்ப இருந்த ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீடு திரும்பினார்கள் அவர்கள். அவர்கள் வீடு திரும்பியபோது சிவகாமிநாதன் வீட்டில் இருந்தார். வழக்கமாக அவர் இரவு உணவை முடிக்கும் நேரத்துக்குமேல் ஆகியிருந்தும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது மெதுவாக நடந்ததை அவரிடம் விவரித்தான் முத்துராமலிங்கம். இரண்டு சுக்கா சப்பாத்தியும், கொஞ்சம் வேக வைத்த காய்கறியும் அரை டம்ளர் பாலும் மட்டுமே இரவில் சாப்பிடும் பழக்கமுடையவர் அவர். முதலிலேயே உண்டு முடித்திருந்தும், அவர்களோடு சேர்ந்து எழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேசியபடியே உடன் அமர்ந்திருந்தார். அவர் மங்காவைப் பார்த்துச் சொன்னார்: “உங்க ரெண்டு பேரையும் பழி வாங்கற வேலையை ரௌடிகளிடம் ஒப்படைச்சிட்டுத்தான் உங்கப்பா வெளிநாடு போயிருக்கார் போலிருக்கு.” “எங்கப்பாவே ஒரு ரௌடிதானே ஐயா?” “கொஞ்சம் உயர்தரமான ரௌடிங்க பெரிய பெரிய பதவிகளிலே இருக்காங்க. சுமாரான ரௌடிங்க அவங்களுக்கு உதவிபுரியிற நிலையிலே இருக்காங்க. அதுதான் இன்னிக்கு இந்த நாட்டு நிலை. நீ சொல்றது சரிதான்.” “எங்கம்மா இங்கே தேடி வந்திருந்தப்பச் சொன்னாங்க! ‘தியாகியின் குரலை’ வாரம் வாரம் வரவழைச்சு அவரைப் பத்தி நான் எழுதற கட்டுரையை அப்பா இரகசியமாப் படிக்கிறாராம். ரொம்பக் கோபமாம்.” “இந்தச் சண்டை தகராறு அடிபிடி எல்லாம் நிற்கணுமானா நீ இனிமே அதை எழுதாம விட்டுட்டாலே போதும்னு எனக்குத் தோணுது.” கூறிவிட்டு அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் சிவகாமிநாதன். அவர் தன்னுடைய உறுதியைச் சோதிக்கிறார் என்று தோன்றியது அவளுக்கு. “அவர் திருந்தறவரை அல்லது மக்கள் அவரது அசல் உருவத்தைப் புரிஞ்சுக்கறவரை அதை நான் நிறுத்தப் போறதில்லே...” என்று அவருக்கு அப்போது உறுதியாக மறுமொழி கூறினாள் அவள்.
முத்துராமலிங்கத்தையும், மங்காவையும் அதிகமான கவனத்துடனும் ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்குமாறு எச்சரித்தார் அவர். இரவு உணவு முடிந்த பின்னும் நெடு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
மறுநாள் காலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று முத்துராமலிங்கத்தை உடனழைத்தாள் மங்கா. முதல்நாள் இரவு கடற்கரையில் தங்களை காரில் கடத்திக் கொண்டு போக முயன்ற ரௌடிகளிடம் இருந்து தப்ப வழியருளும்படி அவள் கற்பகாம்பிகையை மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தாளாம். அம்பிகையின் அருள் தான் அந்த வேளையில் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸாக வந்து தங்களைக் காப்பாற்றியது என்று அவள் நம்பினாள். அதனால் விடிந்ததும் உடனே போய் அங்கே அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளைத் தனியே அனுப்புவது பாதுகாப்பில்லை என்று அவனுக்குப்பட்டது. அவனும் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டான். கோவிலில் அர்ச்சனை தரிசனம் எல்லாம் முடிந்து வலம் வரும்போது பிராகாரத்தில் தற்செயலாக அம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. எதிரெதிரே பார்த்துக் கொண்ட போது இருவருக்கும் ஒரு நிமிஷம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. இருவரும் சில விநாடிகள் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டனர். தாய்க்கும் மகளுக்கும் நடுவே குறுக்கிட விரும்பாமல் முத்துராமலிங்கம் ஒதுங்கி நின்று கொண்டான். ஒருவேளை தான் மங்காவுடன் அருகே நின்றால் அவள் தாயின் கோபம் அதிகமாகலாம் என்ற தயக்கமும் அவன் மனதில் அப்போது இருந்தது. அவன் விலகி ஒதுங்கி நின்று கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம். அம்மா தான் முதலில் பேசினாள்: “நீ நல்லா இருக்கணும்னு தாண்டீ அம்மனை வேண்டிக்கிட்டேன்.” “உன் நல்லெண்ணத்துக்கு நன்றி அம்மா! ஆனா அது பலிக்குமா இல்லையான்னுதான் எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்பா என்னடான்னா எங்களைக் கடத்திக்கிட்டுப் போறத்துக்கும், உதைக்கறத்துக்கும், அடிக்கிறத்துக்கும் ரௌடிப் பசங்களை ஏற்பாடு பண்ணித் துரத்திக்கிட்டிருக்காரு. நீ நினைக்கிறது நடக்குமா, அவர் நினைக்கிறது நடக்குமான்னு தெரியலே!” என்று தொடங்கி முந்திய இரவு கடற்கரையில் நடந்ததை விவரித்தாள். கேட்டு முடிந்ததும் அம்மா அழத் தொடங்கிவிட்டாள். “ஐயோ! எனக்கு அப்படிக் கெட்ட எண்ணம்லாம் கெடையாதுடீ! நீ எங்க இருந்தாலும் பூவும் பொட்டுமா நல்லா இருக்கணும்டீம்மா” என்று பொது இடத்தில் கண்ணீருகுத்து அழ ஆரம்பித்திருந்த அவளைத் தேற்றி அழுகையை அடக்கிச் சமாதானப்படுத்த முயன்றாள் மங்கா. அம்மா பேசிய பேச்சிலும், வார்த்தைகளிலும் தொனித்த ஆதங்கத்திலிருந்து அப்பாவின் பணத்தாசை, பதவி ஆசை, லஞ்ச ஊழல் மயமான அரசியல், எதுவுமே அவளுக்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. “தனியா எங்கேயும் போகாதே! ஜாக்கிரதையா இரு. உடம்பைக் கவனிச்சுக்க” என்று ஜபம் பண்ணுவது போல் திரும்பத் திரும்பக் கூறிவிட்டுப் போனாள் அம்மா. அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்து முத்துராமலிங்கத்துடன் சேர்ந்து கொண்டாள் மங்கா. கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து வீடு திரும்பும் போது அம்மாவுக்கும் அப்பாவின் போக்குகள் பிடிக்கவில்லை என்று முத்துராமலிங்கத்திடம் விவரித்துக் கொண்டு வந்தாள் மங்கா. அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மங்காவிடம் சொன்னான்: “பதவியில் இல்லாத காலத்துக்குப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகப் பதவியைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஒரு வழக்கமாகவே வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக உன் தந்தை இதில் இன்று முன்னணியில் இருக்கிறார்.” அவர்கள் கோயிலிலிருந்து வீடு திரும்பிய போது சிவகாமிநாதனிடம் யாரோ ஒரு சேட் வாயிலிலேயே நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். “பணத்துக்கு வழி சொல்லலேன்னா பிராப்பர்ட்டி மேலே அட்டாச் பண்ணி இந்த வீட்டை ஜப்திக்குக் கொண்டாந்துட வேண்டியதுதான்” என்று இரைந்து கொண்டிருந்த அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் சிவகாமிநாதன். சேட் போகிறவரை ஒதுங்கி நின்றிருந்த முத்துராமலிங்கம் அந்த சேட் எதற்காக இரைந்துவிட்டுப் போகிறார் என்று சிவகாமிநாதனிடமே விசாரித்தான். அவர் பதில் சொல்லாமல் மழுப்பினார். “உனக்கு எதற்கு அதெல்லாம்? என் சிரமங்களைக் கூடிய வரை நான் பிறரிடம் சொல்கிற வழக்கமில்லை.” “என்னையோ, மங்காவையோ, சண்முகத்தையோ நீங்க அந்நியமா நெனைக்கக் கூடாது ஐயா! காரணம், நாங்க உங்களை ஒரு விநாடி கூட அந்நியமா நெனைக்கிறதில்லே...” “நீங்க அப்படி நெனைக்கலேங்கிறதுக்காக என் கஷ்டங்களை எல்லாம் உங்க தலையிலே திணிக்கிறது நியாயமா இருக்காது அப்பா!” “உங்க கஷ்டங்களை நீங்க எங்களுக்குச் சொன்னா அதைச் சுமக்கிறதிலே எங்களுக்கும் பங்கு உண்டுன்னு அந்தச் சுமையைச் சந்தோஷமா நாங்க ஏத்துப்போம் ஐயா! தயவுசெய்து சொல்லுங்க...” “பிரஸ், வீடு எல்லாத்து மேலேயும் கடன் இருக்கு. எல்லாத்தையும் ஏலத்துக்குக் கொண்டாந்துடுவேன்னு தான் கூப்பாடு போட்டுட்டுப் போறான்.” முத்துராமலிங்கத்துக்கு அவர் கூறிய செய்தி வேதனையளிப்பதாக இருந்தது. தேசபக்தியும், பொதுத்தொண்டும் வீசை என்ன விலை என்று கேட்கக்கூடிய சந்தர்ப்பவாதிகளான பலர் கோடி கோடியாகப் பணம் பண்ணக்கூடிய காலத்தில் சிவகாமிநாதன் போன்ற சத்ய விவசாயிகள் வீடு வாசலைக் கடனுக்குப் பறி கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பது நெஞ்சைப் பிழிந்தது. என்ணத்தை உருக்கி அழ வைத்தது. அரசாங்கம் தானே அவருக்குத் தியாகிகளுக்குரிய மாதாந்திரப் பென்ஷன் கொடுக்க முன் வந்து விவரங்களை விசாரித்த போது கூட, “என் தியாகம் நாட்டுக்காக நானே விரும்பிச் செய்த தொண்டு ஆகும். அதற்கு விலை தர உங்களுக்கும் தகுதியில்லை. பெற எனக்கும் விருப்பமில்லை” என்று கடுமையாக மறுத்துப் பதில் எழுதிவிட்டார் அவர். விலை மதிக்க முடியாத உயர்ந்த சாதனைகளைச் சுலபமாக அவமதிக்கும் வழி அதற்கு மிகவும் மலிவான ஒரு விலையை நிர்ணயிக்க முயல்வது தான்” - என்று சிவகாமிநாதனே அடிக்கடி கூறுவது உண்டு. அன்று மாலையிலேயே முத்துராமலிங்கமும் காமிராமேன் சண்முகமும், வேறு சில நண்பர்களும் ஓரிடத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார்கள். “இன்றுள்ள சூழ்நிலையில் சிவகாமிநாதனைப் போன்ற உத்தமர்களைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எல்லாருக்கும் பயன்படக்கூடிய நல்ல மருந்து மரம் ஒன்று ஊர் நடுவே இருப்பது போல் இன்று நம்மிடையே அவர் இருக்கிறார். இன்று அவரைப் பாதுகாக்க வேண்டியது அவர் நலனுக்காக மட்டுமல்லாமல் நம் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் கூட அவசியமாகிறது” என்று தொடங்கி அவருடைய கடன் தொல்லைகளை விளக்கினான் முத்துராமலிங்கம். அவருக்கு வயது வந்த மகள் ஒருத்தி கலியாணத்துக்குக் காத்திருப்பதையும் கூறினான். அன்றே எல்லாருமாக முடிவு செய்து சில உதவி நாடகங்கள் மூலம் தாங்களே முயன்று பெரிய அளவில் டிக்கெட் விற்பனை செய்து அவருக்குக் கணிசமாக ஒரு நிதி திரட்டிக் கொடுத்துக் கடன்களை அடைக்கத் திட்டமிட்டனர். சில நாடகக் குழுக்களின் தலைவர்கள் சிவகாமிநாதன் மேல் அபாரபக்தி வைத்திருந்தனர். அவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு உடனே இசைந்தனர். ‘சிவகாமிநாதன் இப்படி நிதி வசூலை ஏற்பாரோ மாட்டாரோ’ என்ற சந்தேகத்தை மட்டுமே அவர்கள் முதலில் தயக்கத்தோடு தெரிவித்தார்கள். அவர் ஏற்பதாக இருந்தால் அவருக்கு உதவுவதைப் போல் தங்களுக்கு மனநிறைவு அளிக்கும் காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதையும் உற்சாகமாகத் தெரிவித்தனர். ‘தியாகியின் குரல்’ உதவி நாடகங்களுக்கு ஏற்பாடாயிற்று. சண்முகமும் முத்துராமலிங்கமும் மங்காவும் டிக்கெட் விற்பனையில் முழு மூச்சாக இறங்கினார்கள். எப்படியோ விவரம் அறிந்து தியாகி சிவகாமிநாதன் அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். கடிந்து கொண்டார். “இது எனக்குப் பிடிக்கவில்லை! இப்படி எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. எனக்காகவும் இப்படி மடிப்பிச்சை எடுக்கக் கிளம்புகிறீர்களே?” முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பல மணி நேரம் விவாதித்து அவரை அதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய வற்புறுத்தலுக்கும், விவாதத்துக்கும் பிறகு வேண்டா வெறுப்பாக அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|