முதற் பதிப்பின் முன்னுரை

     ‘புயலிலே ஒரு தோணி’ கதை இரண்டாவது உலகப் போர்க் காலத்தையொட்டி மலேயா இந்தொனேசியா - பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு. இந்தக் கதையில் வரும் வரலாற்று நிகழ்ச்சிகள், ஆட்களைத் தவிர மற்றபடியான சம்பவங்களும் மாந்தரும் எதையும், யாரையும் குறிக்கவில்லை. சம்பவங்கள் கதைக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை இயக்குவதற்காக உண்டாக்கப்பட்டவர்களே கதை மாந்தர்.

     யுத்த காலத்தை எல்லாம் மலேயா - இந்தொனேசியா பிரதேசத்தில் கழித்த நான், அப்போது அங்கே பலவகையான ஆடவரையும் பெண்டிரையும் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் காண நேர்ந்தது. அதன் கற்பனை வடிவான சாரமே இந்தக் கதை. கதாநாயகன் யார்?... பாண்டியன்? யுத்தம்? கதாநாயகி யார்?... அயிஷா? சமுதாயம்? அவரவர் விரும்புகிறபடி வைத்துக்கொள்ளலாம். என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கதைக்குக் கதாநாயகனோ, கதாநாயகியோ இல்லை.

     மெடான் நகரத்தின் தெரு - இடப் பெயர்களெல்லாம் சுதந்தர இந்தொனேசிய சர்க்காரால் மாற்றப்பட்டுவிட்டனவாம். தமிழர்களுக்கு மிகவும் பழக்கமான மொஸ்கி ஸ்ட்ராட், ஹிந்து ஸ்ட்ராட் இரண்டும், இப்பொழுது (பொருள் மாறாத) மலாய் பெயர்களுடன் விளங்குவதாகவும் நாகப்பட்டினம், கல்கத்தா, ஹட்டன்பாக், கெர்க் ஸ்ட்ராட்டுகளின் பெயர்கள் அடியோடு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அறிகிறேன்.

     கதை நாயகன் பாண்டியன் தமிழ்நாட்டில் கண்டிருந்த ‘கார் ஸ்டாண்டு’ காட்சிகளை இப்பொழுது காண்பதற்கில்லை. ஒரு கையில் பீடிக்கட்டு - நெருப்புப் பெட்டியும், மறுகையில் ட்ரிப்ஷீட் - நாடக நோட்டீஸும், காதில் பென்சிலும் வாயில் அகடவிகட அடாவடிப் பேச்சுமாய் நடமாடும் ‘கார் ஏசண்டு’கள் மறைந்து வெகு காலமாகிவிட்டது. பஸ்கள் ‘கார்’ என்றும், கார்கள் ‘பிளசர்’ என்றும், கண்டக்டர்கள் ‘கிளீனர்’ என்றும் அறியப்பட்ட காலம் அது.

     மதுரை ஒண்ணாம் நம்பர் சந்து, பள்ளத்தெரு வர்ணனைகள் யுத்தத்துக்கு முந்திய கால நிலவரத்தைக் குறிப்பவை; இன்றைய நிலவரம் முற்றிலும் வேறுபட்டதாகும்.

     கதையோட்டத்தில், இடையிடையே பண்டைச் சான்றோரின் சொற்றொடர்கள் - குறியிட்டுக்காட்டியும் காட்டாமலும் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். எல்லாம் குறிமயமாகி வாசகரின் கண்ணை உறுத்தலாகாதென்பதே இரவல் குறிச் சிக்கனத்திற்குக் காரணம்.

ப.சிங்காரம்

21.10.1972
மதுரை.