முகை

25. நேதாஜி

     விலாசினியிடமிருந்து கடிதக் கட்டைப் பெற்று வந்த மூன்றாம் நாள், வெகு காலை நேரம்.

     பாண்டியனை ஏற்றிச் சென்ற சேனையகக் கார் குறுக்குச் சந்துகளில் வழியாகப் பறந்து சென்று கத்தே மாளிகை வாசலை அடைந்து நின்றது.

     அறைக் கதவு திறந்திருக்கிறது. கர்னல் கலிக்குஸுமான் நெப்போலிய பாணியில் கைகளைப் பின்னால் மடக்கிக் கோர்த்துக்கொண்டு குறுக்குமறுக்காய் நடந்து திரிந்தார்.

     உள்ளே நுழைந்து வந்தனை செய்தான்.

     “நேதாஜி வந்திருக்கிறார். பார்க்க வேண்டும், வா.”

     வெளியேறினார். பின் தொடர்ந்தான்.

     படிக்கட்டில் ஏறி, மேல்மாடியை அடைந்து நடந்தனர். நெடுகிலும் குறுக்கிட்ட காவலர்களிடம் குறிச்சொல்லைக் கூறிக்கொண்டே அறையை அணுகினார்கள்.

     கர்னல் சீட்டை அனுப்பினார். மறுவிநாடியே அழைப்பு வந்தது.

     உள்ளே நுழைந்து வந்தனை செய்து நின்றனர். பிரகாசமான விளக்கொளியில் கண் கூசிற்று.

     “கலிக்குஸுமான், உட்காரலாம்.”

     கர்னல் உட்கார்ந்தார்.

     “சொல்லலாம்.”

     “காணாமற்போன கடித விவகாரத்தை லெப்டினன்ட் பாண்டியனிடம் ஒப்படைத்தேன். அவுங்சான் கடிதம் கிடைக்கவில்லை. வேறு பல கடிதங்கள் கிடைத்திருக்கின்றன.”

     சட்டை உள் பையிலிருநந்து நீளமான பச்சை உறையை எடுத்து மேசைமேல் வைத்தார்.

     நேதாஜி உறையைப் பிரித்து ஒவ்வொரு கடிதமாகப் புரட்டினார் - அவர் ரங்கூனிலிருந்து போர் நிலவரம் பற்றி எழுதிய கடிதங்கள், பிலிப்பைன்ஸ் தலைவர் ஜோஸ் லாரலிடமிருந்து தனிமுறையில் வந்த கடிதம், சையாம் பிரதமர் சோங்ராம் எழுதிய கடிதங்கள்...

     “அவுங்சான் கடிதம்?”

     “லெப்டினன்ட் பாண்டியன்...”

     “சொல்லலாம்.” பாண்டியன் பக்கம் திரும்பினார்.

     “தலைவரவர்களே, அந்தக் கடிதம் கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கி கையில் சிக்கியிருக்கக்கூடும். அவன் இப்போது சிங்கப்பூரில் இல்லை. ஒரு வேளை சுமத்ராவில் சாபாங் பகுதியில் இருக்கலாம்.”

     “சாபாங்... எப்படித் தெரியும்?”

     “இந்தக் கடிதங்களை வைத்திருந்தவள் பேச்சிலிருந்து யூகித்தேன்.”

     “அவள் யார்?”

     “ஒரு வேசை. பாரிஸ்டர் சங்குண்ணி மேனனின் தங்கை.”

     நேதாஜியின் முகம் திடுமென மாறியது. காரணம் திகைப்பா, அல்லது தன்மீது எரிச்சலா என்று கணிக்க முடியவில்லை.

     “கடிதங்கள் அவள் கைக்குப் போனது எப்படி?”

     “ஜெனரல் சிவநாத்ராய்.”

     “அவுங்சான் கடிதம் கெம்பித்தாய் கையில் எவ்வாறு சிக்கிற்று?”

     “விலாசினி”

     நேதாஜி பின்னே சாய்ந்து, பாண்டியன் முகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

     “லெப்டினன்ட், நீதானே ‘ஜாராங்’ ஆள்?”

     “ஆம், தலைவரவர்களே.”

     “உன் முகம் நினைவிலிருக்கிறது.”

     சில விநாடிகள் அமைதி நிலவியது. நேதாஜியின் கண்கள் மூடியிருந்தன. கர்னல் மேசை விரிப்பைப் பார்த்தவாறு நாற்காலி விளிம்பில் அமர்ந்திருந்தார். பாண்டியன் இரும்புச் சிலைபோல நின்றான்.

     “யாமசாக்கி சுமத்ராவுக்குச் சென்றிருக்கக் கூடும்” கண்களைத் திறந்து, பாண்டியனைப் பார்த்துச் சொன்னார். “சாபாங்கில் கெம்பித்தாய் அதிகாரிகள் கூட்டம் நடக்கவிருக்கிறது. தேதி தெரியவில்லை. ஜெனரல் யோஷிநாகா சாபாங் போகிறான்... உன்னால் கடிதத்தை மீட்டு வர முடியுமா?”

     “முடியுமென்று நம்புகிறேன், தலைவரவர்களே.”

     “கெம்பித்தாய் செயல்முறைகள் பற்றித் தெரியுமா?”

     “தெரியும், தலைவரவர்களே.”

     “உன் சொந்தத் திறமையை நம்பியே இதில் இறங்க வேண்டும். அகப்பட்டுக் கொண்டாயானால் நான் எவ்வித உதவியும் செய்ய முடியாது... கெம்பித்தாய் தனி நிறுவனம். தெராவுச்சிக்குக்* கூட அவர்கள்மீது அதிகாரம் கிடையாது. புரிகிறதா?”

     * ஃபீல்டு மார்ஷல் ஹிசாயிச்சி தெராவுச்சி - தென் மண்டல ஜப்பானியப் படைகளின் தலைமைச் சேனாதிபதி.

     “ஆம்; தலைவரவர்களே.”

     “உன்னிடம் ஆபத்தான பணியை ஒப்படைப்பதால், அதற்கான காரணம் உனக்குத் தெரிவது நலம். ஜப்பானின் தோல்வி உறுதியாகி விட்டது. இப்போது என்னுடைய எண்ணமெல்லாம் நம் மக்களுக்குத் தொல்லை ஏற்படாமல் காப்பதுதான். கடிதம் ஜப்பானிய ராணுவ மேலிடத்தார் பார்வைக்குப் போனால் என்மீது கோபம் கொண்டு, அதற்காக நம் மக்களை வருத்துவார்கள். புரிகிறதா?”

     “ஆம், தலைவரவர்களே.”

     “ஆபத்தான பணி என்பதற்காகச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் தவிர்ப்பதற்கில்லை. யாராவது ஒருவர் பொறுப்பேற்று வேலையை முடிக்கத்தான் வேண்டும்.”

     “ஆம், தலைவரவர்களே.”

     “சுமத்ராவுக்கு எப்போதாவது போயிருக்கிறாயா?”

     “போர்தொடங்குமுன் அங்கேதான் இருந்தேன், தலைவரவர்களே.”

     “ஓ! நீ அங்கு பிறந்த ஆளா?”

     “தமிழ்நாட்டில் பிறந்தவன், தலைவரவர்களே.”

     “சுமத்ராவில் என்ன செய்து கொண்டிருந்தாய்?”

     “மெடான் நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தேன். தலைவரவர்களே.”

     மஞ்சளாடிய செம்முகத்தில், தடித்த கண்ணடி வட்டங்களுக்கு அப்பால் தெரிந்த சின்னஞ்சிறு கூரிய கண்கள், எதிர்த்த கண்களின் வழியாய் நெஞ்சை ஊடுருவி நோக்கின.

     “நன்று. சுமத்ராவில் உனக்கு எவ்வளவு பணம் தேவையாயினும் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். வேறு உதவிகளுக்கு வழியில்லை. கலிக்குஸுமானுடன் பேசி மற்ற விவரங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.”

     “கட்டளை, தலைவரவர்களே.”

     “உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

     “தாழ்மையான நன்றி, தலைவரவர்களே.”

     “இப்பொழுது, நீ போகலாம்... கலிக்குஸுமான்.”

     “தலைவரவர்களே” கர்னலின் உடல் நிமிர்ந்தது.

     பாண்டியன் வந்தனை செய்துவிட்டு வெளியேறினான். செக்யூரிட்டி செர்விஸ் அலுவலகத்துக்குத் திரும்பிய இருவரும் ‘யாமசாக்கி விவகாரம் - கடித மீட்பு’ பற்றி ஆராய்ந்தனர். இப்போதைய நிலைமையில் யாமசாக்கி விமானத்தில் சாபாங் செல்ல வகையில்லை. மெடானுக்குக் கப்பலில் போய் அங்கிருந்து காரில் செல்வான். ஆகவே முதலில் மெடானுக்குப் போய்ப் பார்த்துக் கொண்டு அப்புறம் சாபாங் செல்வது நலம். இந்த விவகாரத்தில் கொன்று - பறிப்பு தவிர வேறு வகை நடவடிக்கைக்கு இடமில்லை. சப் ஆபீசர் நடராஜன் (கிருங்காக் கோட்டை மங்கைபாகன் ஆசாரி மகன்) ஹவில்தார் கருப்பையா (நாட்டார்குளம் பொசலான் என்ற பொய் சொல்லானின் தம்பி) ஆகியவருடன் பாண்டியன் மெடானுக்குப் புறப்படுவதென்றும், நடவடிக்கை முறைகளை நிலைமைக்கேற்ப அவனே முடிவு செய்துகொள்வதென்றும் தீர்மானமாகியது.

     சுமத்ராவில் இந்திய சுதந்திரச் சங்கத்துக்குத் தீவிரமான அளவில் ஆதரவு திரட்டச் செல்வோர் என்று, மூவருக்கும் புனை பெயர்களுடன் - தேவை ஏற்படின் கையைக் கழுவுவதற்குத் தோதாய் நுட்பமான மாற்றமுடைய முத்திரையும் கையெழுத்தும் இட்டு மனுச்செய்து ஜப்பானிய சேனாதிபதியிடமிருந்து விசேஷப் பிரயாண அனுமதிச் சீட்டுப் பெறப்பட்டது.

     “இந்த மூவரும் இன்று முதல் 3 மாத காலத்துக்கு மலேயா - சுமத்ரா பகுதியில் எங்கிருந்து எங்கு போக விரும்பினாலும் அவ்வப்போதைய நிலவரத்திற்கேற்ப அவசரப் பிரயாண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.”