உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 26. மொக்தார் பில்வான் துறைமுகம் ஓய்ந்துபோய்க் கிடந்தது. ஜப்பானியரைத் தவிர சில ஜாவாக்காரக் கூலியாள்கள் மட்டுமே தென்பட்டனர். முன்பெல்லாம் நீலநிற உடையும் இடுப்பில் செருகிய ஊக்குக் கட்டையுமாய் எங்கும் பரந்து திரிவார்களே சீனர்கள், அவர்களைக் காணவே காணோம். இரண்டு சிறு கப்பல்கள் பாலத்தை அணைந்து நின்றன. தொலைவில் குரூசர் போன்ற ஓர் உருவம் தெரிந்தது. மேற்கே ஆற்று வாய்க்குள் பாய்மரக் கப்பல்கள் நின்றன. மெடான் செல்லும் மொத்தோர் ரெயில் நிலையத்துக்கு முன்னே நின்றது. ஏறி உட்கார்ந்தார்கள். வலப்பறம் மலாய்ப் பெண்களின் பீசாங்கோரெங் கடை வரிசை. துறைமுகக் கூலி வேலைக்காரர்கள் தரையில் குந்தி உட்கார்ந்து தின்கிறார்கள். மண்எண்ணெய்ப் புகையைக் கக்கிக்கொண்டு தகரடப்பா இரைச்சலுடன் வண்டி விரைந்தது. பிரயாணிகளில் தோட்டக் காட்டுத் தமிழர்கள் ஐந்தாறு பேர் இருந்தனர். நடராஜனுக்கு நேர் எதிரே உட்கார்ந்திருந்தவர், ‘எங்கோ பார்த்த முகமாயிருக்கிறதே’ நோக்குடன் அடிக்கடி பாண்டியன் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தார். பிறகு, திரும்ப மறந்து போய் நகத்தைக் கடிக்கத் தொடங்கினார். தென்னந் தோப்புகள், வாழைத் தோட்டங்கள், நீப்பா புதர்கள் பின்னோடி மறைந்தன. அவற்றுக்குப் பின்னேயுள்ள சதுப்பு நிலத்திலிருந்து வந்த மக்கல் நெடி மூக்கைத் துளைத்தது. லபுவான் கிராமம். ‘செட்டிய வீட்டுக்’ கடைகள், ஆரம்பத்தில் - மெடான் தலையெடுப்பதற்கு முன்னர் - இங்கேதான் இருந்திருக்கின்றன. பூலுபிரையான், குளுகூர், இடப்பக்கம் மாடறுக்கும் தொட்டி. முடை நாற்றம். வட்டிக் கடைக்காரர்களின் கிஸ்திப் பாக்கிக்குத் தவணை சொல்வதில் சூராதி சூரன் என்று மொஸ்கி ஸ்ட்ராட் அடுத்தாள்களிடம் நற்சான்று பெற்ற கெற்றிக் காடெங்கியான் யுத்தத்துக்குமுன் இங்கேதான் வேலை பார்த்தான். வலப்பக்கம், யுத்தக் கைதிகள் முகாமுக்குப் போகும் பாதை. மெடான் எல்லை. பேப்பேயேம் பெட்ரோல் கிடங்கு வெட்டவெளியாய்க் காட்சி அளிக்கிறது. தபால் கந்தோர், தானா லாப்பாங், ஸ்தசியோன்*. மொத்தோர் நின்றது.
* ரயில்வே ஸ்டேஷன் இரண்டு சாடோ வண்டிகளை அமர்த்திக் கொண்டு பாண்டூங் ஹோட்டலுக்குப் புறப்பட்டனர். பிற்பகலில் ஹோட்டலை விட்டு வெளியேறிய பாண்டியன் உள்ளூர் இந்திய சுதந்திரச் சங்கத்தின் தலைவர் சின்னன் சிங், செயலாளர் சாப்லானி, ஸ்பெஷல் ஏஜண்ட் ராஜலிங்கம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினான். பிறகு, ஜாலன் ராஜாவில் கொஞ்ச தூரம் தெற்கே நடந்து போய், சாடோ ஒன்றை நிறுத்தி ஏறிக்கொண்டு கம்பொங் டாராவுக்குச் செல்லும்படி சொன்னான். இன்னமும் வழுவழுப்புக் குன்றாதிருந்த சாலையில் வண்டி ஒரே சீராய் ஓடியது. தெருக்களில் களை இல்லை. எங்கு பார்த்தாலும் நைந்த சட்டை, சராய், கைலி, பத்திக். மருந்துக்குக்கூட ஒரு காரைக் காணோம். ஜப்பானியர் நடமாட்டம் எதிர்பார்த்ததையும் விடக் குறைவு... கிழட்டு ஜப்பானிய அதிகாரி ஒருவர் சைக்கிளில் போனார். யாரும் அஞ்சி ஓடக் காணோம் - கவனித்ததாகவே தெரியவில்லை. என்ன மாற்றம்! புலி நோய்ப்பட்டால் எலியும் மதிக்காது... “பிரெந்தி.” வண்டியை நிற்பாட்டிக் காசு கொடுத்துவிட்டு இறங்கி நடந்தான். வாழைத்தோட்ட நடுவேயிருந்த அத்தாப்பு வீடு திறந்திருந்தது. உள்ளே இடுப்புயர மூங்கில் முக்காலி மீது உட்கார்ந்து கோப்பி பாயிட் குடித்துக் கொண்டிருந்த ஆள் முறைத்துப் பார்த்தான். “தபே, மொக்தார், தெரிகிறதா? அன்னெமர் கந்தோர் பாண்டியன்.” “ஆஅஅ... தபே, கிராணி புசார்.” முத்து என்ற மொக்தார் எழுந்து, முக மலர்ச்சியுடன் இரு கைகளையும் விரித்துத் தூய மலாயில் வரவேற்றான். “வருக, வருக, நல்வரவாகுக, அமர்க... கொஞ்சம் பருத்திருக்கிறீர்கள். முகமும் மாறிவிட்டது!” பாண்டியன் பின்கட்டுப் பக்கம் கையைச் சுட்டிக் கேள்விக் குறியாகத் தலையை அசைத்து விட்டுச் சுவரோர நாற்காலியில் தெருவைப் பார்த்து உட்கார்ந்தான். “வெளியே போயிருக்காள்.” அமர்ந்தான். “திரும்ப நேரமாகும்.” “என்னுடைய புதுப்பெயர் கந்தப்பிள்ளை அருளம்பலம். இந்திய சுதந்திரச் சங்கத் தலைமையக அதிகாரி.” “எப்பொழுது வந்தீர்கள், துவான்?” “வெள்ளிக்கிழமை, என் பெயர் என்ன?” “கன்த்தபில்லே அருலம்பலாம்.” அன்னெமர்களுக்குக் கூலியாட்கள் கொடுப்பனை செய்யும் தண்டல்களில் ஒருவனும், மெடான் வட்டகைப் போக்கிரிகளில் குறிப்பிடத்தக்கவனும், தந்தை வழியில் அரைத் தமிழனுமான மொக்தார், தலையைச் சொறிந்து கொண்டே கண்களால் சிரித்தான். “மொக்தார், நலம்தானே?” “ஒரு குறையுமில்லை, எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.” உள்ளே போய், மங்குக் கோப்பை ஒன்றைக் கழுவிக்கொண்டு வந்து மேசைமீது வைத்துக் கூஜாவிலிருந்த காபியை ஊற்றி எடுத்து நீட்டினான். “மீனும், துவான்.” “நன்றி” காபியைக் குடித்தான். சுமத்ரா வருகை நோக்கத்தைப் படிப்படியாக மொக்தாரின் மனவோட்டத்தை முக வழியாயறிந்து யூகித்தவாறே விளக்கினான். பிறகு சராய்ப் பைக்குள்ளிருந்து குறிப்புப் புத்தகத்தை எடுத்து, வலப்பக்க அட்டையின் உட்புற ஒட்டுக் காகிதத்தை நகத்தால் நீவிப் பிரித்தான். ஜப்பானிய ராணுவ அதிகாரி படம் குப்புற இருந்தது. மொக்தாரிடம் நீட்டினான். “இவன்தான், நன்றாகப் பார்த்துக் கொள்.” மொக்தார், இடக்கையில் வாங்கி அலட்சியமாக ஒரு விநாடி பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். பாண்டியன் படத்தை வாங்கி, அதற்குத் தீ மூட்டி எரித்துக் கீழே போட்டு, சப்பாத்துக் காலால் தேய்த்தபின், கீழே குனிந்து ஊதித் தூசாக்கினான். “மெடானில்தான் இருக்கிறான்” கண்ணை மூடி நெற்றியைச் சுருக்கித் தலையைப் பின்னே சாய்த்தான். பாண்டியன் உள்சட்டைப் பைக்குள்ளிருந்து பண நோட்டுக் கற்றைகள் இரண்டை எடுத்து மேசைமீது வைத்தான் - சற்று ஓசை கேட்கும்படியாக. “மொக்தார், உனக்கு என்னுடைய அன்பளிப்பு.” “திரிமா கசி, துவான்.” நோட்டுக் கற்றைகளை இடுப்பில் செருகிக்கொண்டு உள்ளே சென்றவன், பெரிய சாராயச் சீசாவையும், இரண்டு மங்குக் கோப்பைகளையும் கொண்டுவந்து வைத்தான். உட்கார்ந்து, மெத்த மெதுவாய்ச் சீசா மூடியைத் திருகித் திறந்து கோப்பைகளில் ஊற்றி நிரப்பி, ஒன்றை எடுத்து நீட்டினான். “மீனும், துவான்.” “திரிமா கசி.” பாண்டியன் கோப்பையைத் தூக்கி வாய்க்கு உயர்த்தினான். மூக்கில் நெடி ஏறியது. நாற்றம் பிடித்த சனியன். மறுப்பதற்கில்லை, குடித்தான். மொக்தார் ஒரே குடிப்பில் கோப்பையைக் காலி செய்து மேசையில் வைத்தான். பார்வை குறுகியது. உலகைத் துரும்பாகக் கருதும் ஏளனச் சிரிப்பு முகத்தில் படர்ந்தது. “நான் சிந்திக்கிறேன், துவான், சிந்திக்கிறேன்” வலக்கைச் சுட்டுவிரல் நெற்றியைத் தொட்டது. “சிந்திக்கிறேன், துவான், சிந்திக்கிறேன்.” “யா, நன்கு சிந்தித்து முடிவுசெய்ய வேண்டும்.” பாண்டியன் சிகரெட் பற்ற வைத்தான். புலன்கள் பிசகுவது போலிருந்தது. கடுமையான சரக்கு. மேலும் குடித்தால் ஆபத்து... “துவான், இன்னும் கொஞ்சம்.” இந்தப்புறக் கோப்பையில் ஊற்றிச் சீசாவைத் தூக்கிச் சாய்த்தான். “தவ்சா, சுக்கோப்” பாண்டியன் வலது உள்ளங்கையில் கோப்பை வாயை அடைத்தான். மொக்தார் கோப்பையை வெறுத்துச் சீசாவைத் தூக்கி, தலையைப் பின்னே சாய்த்து, அண்ணாந்து வாயில் ஊற்றலானான். பாண்டியன் புகையை இழுத்து ஊதியவாறு ஓரப் பார்வையாய் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். மொக்தாரின் மூடிய கண்கள் திறந்தன. சீசாவை மேசைமீது வைத்துவிட்டு, ஜன்னலில் இருந்த கையகலத் தகரப் பெட்டியைத் திறந்து, இலையும் தூளும் எடுத்து ரொக்கோ சுருட்டித் தீக்கொளுத்திப் புகைக்கலானான். பார்வை, கரும்பச்சைச் சீசாவுக்குள் எண்ணெய் மங்கலாய்த் தெரிந்த, மிஞ்சியிருந்த ஷம்சுமீது லயித்திருந்தது. “செய்து முடிக்கலாம், துவான், செய்து முடித்துவிடலாம்.” “ம்ம்.” “பொலோனியாவே டில்டன் துவான் வீட்டில் தங்கி இருக்கிறான். அடுத்த வீடுகள் காலி... இரண்டு நாள்களாய் ஞேய் பாத்திமா போய் வருகிறாள்.” “கல்கத்தா ஸ்ட்ராட்டில் இருந்தாளே, அந்தக் கிழவியா - பாத்திமா துவா?” “அவளேதான். கெம்பித்தாய் ஆசாமிகளுக்குச் சின்னக் குட்டிகளைப் பிடிக்காது. காரணம் தெரியுமா, துவான்?” “அப்புறம் என்ன, சொல்.” “நான்தான் சாராயம் அனுப்புகிறேன். ஜெனரல்களுக்குக்கூட இப்போது சரக்கே கிடைப்பதில்லை... இரவெல்லாம் ஒரே குடி வெறியாய்க் காலைக் கடித்துக் குதறுகிறானாம்.” “பாத்திமா காலையா!” “யா துவான். அவளுக்கு அழகழகான கால்கள். கழுத்துக்கு மேலேதான் வயது தெரியும். அதுவும் சாயம் பூசி வந்தாளானால் கண்டுபிடிக்க முடியாது.” “ம்ம்.” “ஹிண்டு ஸ்ட்ராட் குட்டைத் தவ்க்கேகூட அவளை...” “இடம் எப்படி?” “தீர்த்துக்கட்டுவது சுலபம். பழைய கட்டுக் காவல் கிடையாது. ஜிக்கேடான் ரோந்து என்பதெல்லாம் பெயருக்குத்தான். ஆனால்... உயிரைச் செலவெழுதி விட்டுத்தான் இதில் இறங்க வேண்டும். கெம்பித்தாய்!” “வேலை முடிந்தாக வேண்டும்.” “முடித்துவிடலாம். கை தாழ்ந்ததும் பழைய வீர சூரத் தனமெல்லாம் போய்விட்டது. எந்நேரமும் பொம்பளை - தண்ணி, பொம்பளை - தண்ணி என்று ஆலாய்ப் பறந்து திரிகிறார்கள்... கடித விவகாரம்தான் தொந்தரவு. நீங்களே நேரில் போயாக வேண்டும்.” “ஆம்.” “நாளையும் பாத்திமா போகிறாள். இருப்பான். நன்கு விசாரித்துக் கொண்டு காலையில் திட்டமாகச் சொல்கிறேன். இரண்டு பாடாங்குக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கலந்து பேச வேண்டும். “வேண்டாம்.” “நம்பிக்கையான ஆட்கள்.“ “வேண்டாம்.” “சரி... துவான், ஒரு சந்தேகம், தவறாக நினைக்கக்கூடாது, ம்க்ம்ஹ், தங்களைப் பற்றிக் கெம்பித்தாய்க்கு நான் தகவல் கொடுத்து விடுவதாக வைத்துக் கொள்வோம், அப்புறம்?” “உனக்கேன் இந்தக் கவலை? முன் கூட்டியே இதையெல்லாம் யோசித்துத் தகுந்த ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம்.” “ம்க்ம்ஹ்... அது என்ன ஏற்பாடோ, துவான்?” “நீ எதிரி, ஒற்றன் என்பதை மெய்ப்பிப்பதற்குப் போதிய ஆதாரங்களைத் திரட்டி வைத்திருக்கிறோம். கம்பொங்டாராவிலேயே சாட்சிகள் உண்டு. இம்மி பிசகினாலும் உன் தலை உருள்வது திண்ணம்...” “ஒற்றன்! நானா?” “நீ ஒற்றனோ, இல்லையோ, அதைப் பற்றி யாருக்கென்ன? காப்டன் கொபயாஷி யார் பேச்சைக் கேட்பான்? சன்னன் சிங் பேச்சையா, கம்பொங்டாரா மொக்தார் பேச்சையா? நீ ஏற்கெனவே கெம்பித்தாய் கந்தோருக்குப் போய் வந்த ஆள். உன் பெயர் இன்றும் அங்கு சந்தேகப் புள்ளிகள் பட்டியலில் இருக்கிறது. இன்னொன்று: டாய்நிப்பன் அதிகாரிகளுக்குப் பொம்பளை - தண்ணி? இதற்கு என்ன தண்டனை தெரியுமா?” “ஹிஹ்ஹிஹ்ஹி... துவான், கோபம் இல்லையே? தங்கள் ஜாக்கிரதையைச் சோதிக்கவே கேட்டேன். குற்றமாக நினைக்க வேண்டாம்... பணத்துக்காக நான் இதில் இறங்கவில்லை. தங்களின் குணத்துக்காகவே ஆபத்தான வேலைக்கு உடன்படுகிறேன். ஒரு நொடியில் இதைப்போல பன்மடங்கு சம்பாதிக்க முடியும்!” “வேலை முடிந்து சிங்கப்பூர் திரும்பியதும் மேற்கொண்டு பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.” “திரிமா கசி, துவான், பணம் என்ன, பெரிய பணம்... எனக்கு நட்புதான் முக்கியம். என்றைக்கும் பணத்தைத் தேடிக் கொள்ளலாம். தங்களைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது கஷ்டம்.” “அது கிடக்கட்டும். டாமி துப்பாக்கி, எறிகுண்டு கிடைக்குமா?” “கிடைக்காது.” “விலை பற்றி அக்கறையில்லை. கேட்பதைக் கொடுக்கலாம்.” “நிப்பன் சிப்பாய்களிடம் எதையும் வாங்க முடியாது; விற்கலாம் - அவர்கள் சொல்லும் விலைக்கு.” “திருட்டு?” “முடியாது. கொன்று பறித்தால்தான்.” “தேவையில்லை, வீண் சிக்கல்.” “ஆமாம், இருக்கிற குதிரையை வைத்துச் சாடோ ஓட்ட வேண்டும். இன்றேல்...” “வந்தவழியே கிராமத்துக்குத் திரும்பிவிட வேண்டும். அப்படித்தானா?” “துவான், ஒன்றும் கோபம் இல்லையே?” “தீடா, தீடா.” குதூகலமாகச் சிரித்தான். “காலையில் எட்டு, ஒன்பது மணிக்கு வாருங்கள். திட்டமாய் முடிவு செய்யலாம்.” “யாருக்கும் தெரியக்கூடாது.” “அது என் பொறுப்பு. வேறு ஆள்கள் இருந்தால், மரம் கிடைக்குமா என்று கேளுங்கள். மர வியாபாரமும் செய்கிறேன்.” “படுக்கை அறை, குளியல் அறை, பைகள், பெட்டிகள் இருக்கும் இடமெல்லாம் தெளிவாய்த் தெரியவேண்டும். போய் வருகிறேன். தபே.” எழுந்து நடந்தான். “தபே, துவான், மிகமிக நன்றி.” நழுவிய கைலியை இடக்கையால் அமுக்கிப் பிடித்துக் கொண்டே எழுந்து வந்த மொக்தார் தோட்ட வாசல்வரை பின் தொடர்ந்தான். தெற்கு முகமாய் நடந்த பாண்டியன், பின்னே வந்த சாடோவை நிறுத்தி ஏறினான். வண்டி தாவோட்டமாய்ச் சென்றது. காலை நீட்டிச் சாய்ந்தான். புல்விரிப்பும் பூச்செடிகளும், மாசற்ற தெருக்களும், மாண்புமிகு வீடுகளுமாய் டச்சு துவான்கள் வாழ்ந்திருந்த பொலோனியா பாழடைந்து கிடக்கிறது. ஓடைக்கரையின் நாற்றுப்பச்சை வெல்வெட் புல்விரிப்பைக் காணோம். நிலவுநிற மலர்கள் பூத்துக் குலுங்கும் தாந்தலியோன் செடி வரிசைகளையும் காணோம். மார்புயர லாலான் புல்லும் இனம் தெரியாத காட்டுச் செடிகளும் படை எடுத்து நிற்கின்றன... சுல்தான் மமூன் அல் ரஷீத் வேயிலிருந்து வடக்கே திரும்பியது சாடோ. டில்டன் வீடு. பாவம்! கைதி முகாமில் இருப்பார். செத்திருப்பாரோ, ஜன்னலில் ஜப்பானியப் பக்கவாட்டு உருவம் தெரிந்தது. அவன்தானா... அவன்தான். பச்சை டூரர் வண்டி தென்பட்டது. மோரிஸ்... பக்கத்து மாளிகைகள் காலி; செடி கொடிகள் காடுபோல் மண்டி வளர்ந்து அடைத்து நிற்கின்றன... ஆ! ஹாவ்ப்யா மாட்ஸ்கப்பை பெரிய துவான் மாளிகையா இந்தக் கோலத்தில் இருக்கிறது...! டில்டன் வீடு தோதான இடம். அமுக்கமாய் வேலையை முடித்துவிடலாம். மோப்ப நாய்கள்? சாடோ திரும்பி விரைந்தது. மறுநாள் காலையில் பாண்டியன் போனபோது, மொக்தார் சுவரைப் பார்த்து உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தான். “தபே, மொக்தார்” ஐயக் கண்ணுடன் அரைத் தமிழனை நோட்டமிட்டான். தனிக்குடியன் ஆபத்தான ஆள்... “தபே, துவான், அமர்க, அமர்க.” நாற்காலியைச் சக்கரித்துத் திரும்ப எழுந்தான். “உன் பெண்டாட்டி?” ஜன்னலருகே உட்கார்ந்தான். “வெளியே அனுப்பி இருக்கிறேன்.” கைக் கோப்பையிலிருந்ததை மடமடவென்று குடித்துவிட்டு, உள்ளே போய் இன்னொரு கோப்பை எடுத்து வந்து மேசையில் வைத்துச் சீசாவைத் தூக்கி ஊற்றினான். “மீனும், துவான்.” கோப்பையை எடுத்து நீட்டினான். “நன்றி, காலை நேரம் குடிப்பதில்லை.” “காலையில் குடிப்பதில்லை! தவறு, துவான், தவறு. தினசரி சூரியனைக் கண்டதும் ஒரு கோப்பை ஷம்சு குடிக்க வேண்டும். தலைவலி, காய்ச்சல், கைகால் உளைச்சல் எதுவுமே அண்டாது. வெள்ளைக்காரன் மருந்தெல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஷம்சு! நெடியை முறித்து வர்ணம் போட்டு அனுப்புகிறார்கள்... அரைக்கோப்பை, துவான்...” “தவ்சா.” “சரி. ம்க்கம்க்ஹ். துவான் வேளை சரியில்லை. வீட்டில் வைத்து முடிக்க இயலாது. வேளை சரியில்லை துவான், வேளை சரியல்லை.” “ஏன்?” “இன்று மாலை சாபாங்குக்குப் போகிறான்.” “என்ன! எப்படித் தெரியும்?” “பாத்திமா... சாபாங் போவதால் இன்றிரவு வர வேண்டாமென்றும், திரும்பியதும் தகவல் அனுப்புவதாகவும் சொன்னானாம்.” பாண்டியன் சிகரெட் பெட்டியை எடுத்து நீட்டினான். “திரிமா கசி, துவான் வேண்டாம். இது என் தொண்டைக்கு ஒத்துக் கொள்ளாது. எனக்கு இலை ரொக்கோதான், புகையிலைத்தூள் நானே தயாரித்தது.” மொக்தார் தகரப் பெட்டியைத் திறந்து, ரொக்கோ சுருட்டலானான். பாண்டியன் வாயில் சிகரெட் ஏறிப் புகையத் தொடங்கியது.” “வேறு என்ன சொன்னானாம்?” “மூக்குமுட்டக் குடித்துவிட்டு அவன் பஹாசாவில் என்னமோ புலம்பினானாம். ஒரே வாந்தி. உடலைக் கடித்துக் கதறி விட்டானாம். மூன்று நாளும் இதே கூத்து... குடிகாரப் பன்றிகள் கதி இப்படித்தான் துவான், இப்படித்தான். ஹிஹ்ஹிஹ்ஹிஹ்... இப்பொழுது நிப்பனோ எல்லாருமே இப்படித்தான். கை விழுந்ததும் கூர் மழுங்கி விட்டது. எந்நேரமும் என்ன கிடைத்தாலும் குடிப்பது, அகப்பட்டவளோடு படுப்பது... ஹிஹ்ஹிஹ்ஹ்ஹி...” கோப்பையைத் தூக்கிக் குடித்துவிட்டு, ரொக்கோ பற்ற வைத்துப் புகையை இழுத்து ஊதினான். ப்ஊஉஉ. “சரி அப்புறம்?” “வழியில் மறித்துச் சாய்க்க வேண்டியதுதான்.” “மேற்குச் சாலையில் மொத்தோர் போக்குவரத்து?” “ஐந்து மணிக்குமேல் ஒன்றுகூடத் தென்படாது.” “ஆள் புழக்கம்?” “அறவே இராது. ஜப்பானியர் கண்டால்தான் ஆபத்து. மற்றவர்களைப் பற்றிக் கவலை வேண்டாம்.” “இடத்தோது?” “நாலைந்து கல் தாண்டினால் போதும்.” “தப்பி ஓட நேர்ந்தால்?” “கம்பொங் ஆயர் தெரியுமல்லவா? ஊருக்குத் தெற்கே, காட்டுக்குள் பரண் கட்டிக்கொண்டு காலுங்கிச்சில் என்ற பாத்தாக்காரன் வசிக்கிறான். அவனிடம் போய் என் பெயரைச் சொன்னால் போதும்.” வாயில் புகைந்த சிகரெட்டை எடுத்துச் சாம்பல் கிண்ணத்தில் போட்ட பாண்டியன், பெட்டியிலிருந்து ஒன்றை உருவிப் பற்ற வைத்தான். மொக்தார் அடுத்த ரொக்கோவுக்கு இலை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தேய்க்கலானான். “ரப்பர் உறை போட்ட இரும்புத் தடிகள் மூன்று வேண்டும். கையடக்கமானது.” “மதியத்துக்குள் ஹோட்டலுக்கு வரும். புலி வேட்டைக்கு மூங்கில் கழி போதுமா, துவான்?” பாண்டியன் இடுப்பில் செருகியிருந்த பிஸ்டலை உருவினான். அரைத் தமிழன் பதற்றத்துடன், ஆயுதத்தை உடையினுள் செருகிக் கொள்ளுமாறு கைகளை ஆட்டினான். பிஸ்டல் மறைந்தது. “முடிந்தவரை ஓசையில்லாமல் வேலையை முடிக்க விரும்புகிறேன்.” “சிங்கப்புராவிலிருந்து கொண்டு வந்ததா, துவான்? கப்பலில் சோதனை?” “இந்திய சுந்திர சங்கப் பிரதிநிதி. ஜப்பானிய சேனாதிபதியின் சீட்டு.” “தாங்கள் ஒரே ஆள்தானா, இவ்வளவு பெரிய வேலையை முடிக்க! இரும்புத் தடி மூன்று கேட்டீர்களே?” “என்னுடன் ஒரு பட்டாளம் வந்திருக்கிறது. குவாலா சிம்பாங்வரை ஆள் அனுப்பியிருக்கிறேன்... மேற்படியான் சீட்டுக் கிழிந்து விட்டது” வலக்கையை ஓங்கி மேசையில் அடித்துவிட்டு எழுந்தான். “விடைபெற்றுக் கொள்கிறேன், மொக்தார். இனிப் பார்க்கத் தோதிராது. வேலை முடிந்து திரும்பியதும் மேற்கொண்டு பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறென்.” “திரிமா கசி, துவான், புறப்படும்போது மாரியாத்தாளைக் கும்பிட்டுவிட்டுப் போங்கள். கெம்பித்தாய்! மறித்ததும் போட்டுத் தள்ள வேண்டும். கெம்பித்தாய்!... ஹோட்டல் பையனிடம் கொஞ்சம் பணத்தைத் திணித்து, ஷம்சு கச்சேரிக்குப் போவதால் வர நேரமாகுமென்று சொல்லி வைப்பது நலம்.” “தபே, மொக்தார்.” “தபே, துவான், ஸ்லாமத் பாலே.” “ஸ்லாமத் திங்கல்.” புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|