உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 39. பதக்கம் மாலைப்பொழுது. பொன் வெயிலோடு மழை தூறிக்கொண்டிருந்தது. காலடி ஓசை கேட்டுத் திரும்பினான். மூன்று பேர் - வட சுமத்ரா மெர்டேக்கா படைகளின் தலைவர் காசிம், குடியரசு சர்க்கார் இணைப்பு அதிகாரி கர்னல் லூபிஸ், அவருடைய உதவியாளர் சிம்பொலான் - உள்ளே நுழைந்தனர். வந்தனை - வரவேற்பு முடிந்ததும் மேசையைச் சுற்றி அமர்ந்தார்கள். பணிச்சிப்பாய் தேநீர் கொண்டுவந்து வைத்தான். கர்னல் லூபிஸ், சராய் வைக்குள் கையைவிட்டு ‘அப்துல்லா’ டப்பியை எடுத்து நீட்டினார். “ராஜா உத்தாங்குக்கு என்னுடைய அன்பளிப்பு. போன வாரம் டச்சு மேஜர் ஒருவனிடமிருந்து கைப்பற்றப்பட்டது.” “திரிமாகசி, துவான் கர்னல்.” டப்பியை வாங்கி, மூடியைத் திருகித் திறந்து சிகரெட்களை எடுத்துப் பரிமாறினான். லூபிஸ், வாயில் புகைந்த சிகரெட்டை எடுத்து வலக்கையில் பிடித்துக் கொண்டு, இடக்கையால் சட்டையை இழுத்தொதுக்கிச் சரி செய்து கொண்டார். “மேஜர்! உங்களின் வேண்டுகோளைக் குடியரசு சேனைத் தலைமையகம் கவனமாக ஆராய்ந்தது.” சிகரெட்டை வாயில் கவ்விக்கொண்டு இரு கைகளாலும் சட்டையைச் சரி செய்யலானார். “நெடுங்காலம் காட்டிலேயே அடைந்து கிடப்பது கடினமான பாடுதான். ஒரு மாத விடுமுறையில் சிபோல்கா, அல்லது லிம்பூனில் இளைப்பாறும் யோசனை தங்களுக்குப் பிடிக்குமா?” “நான் கட்டாயம் ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது.” “முடிவை மாற்றக் கொஞ்சமும் இடமில்லையா?” “வருந்துகிறேன்.” சில விநாடிகள் அமைதி நிலவியது. காப்டன் சிம்பொலான் தேநீர்க் கூஜாவைத் தூக்கிக் கோப்பைகளில் ஊற்றினார். எடுத்துப் பருகினார்கள். “அப்படியானால் சரி.” லூபிஸ் கோப்பையை மேசையில் வைத்தார். “தங்களின் ஒப்பற்ற சேவையை இந்தொனேசியக் குடியரசு சர்க்காரும், மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குடியரசின் அதி உன்னத வீரப் பதக்கத்தைத் தலைவர் சேனாதிபதி சார்பில் தங்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கவே நான் வந்திருக்கிறேன்.” “திரிமாகசி, துவான் கர்னல்.” அறையில் மீண்டும் அமைதி சூழ்ந்தது. மவுனமாய் சிகரெட் புகைத்தனர். ஜன்னலுக்கு வெளியே வெயில் மங்கிக் கொண்டிருந்தது. “மேஜர், டச்சுக் கடற்படையின் முற்றுகை தங்களுக்குத் தெரிந்ததே. மலேயாவுக்கு - மலேயா வழியாகத்தான் உங்கள் நாட்டுக்குப் போக வேண்டும், இல்லையா - மலேயாவுக்கு எவ்வாறு போய்ச் சேருவதாக எண்ணம்?” “ஏதாவது ஒரு படகில்...” “கடல் தாண்டுவது கடினமாக இருக்கும். டச்சுக்காரர்கள் இதற்குள் தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பார்கள்.” “மெடான் நண்பர்களைக் கலந்து கொண்டு தக்க ஏற்பாடு செய்ய முடியுமென்று நம்புகிறேன்.” “தாங்கள் விரும்பினால் ஜாவா வழியாகப் பிலிப்பைன் பாதையில் செல்ல ஏற்பாடு செய்கிறேன். ஆனால், அதற்குக் காலம் பிடிக்கும். உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது.” “இங்கிருந்தே கடல் தாண்ட முடியுமென்று நம்புகிறேன்.” “தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். இன்னொரு விஷயம்! மலேயாவில் தங்களுக்குப் பல நண்பர்கள் இருக்கலாம்... இங்கிருந்து வெளிநாடுகளுக்கு டச்சு முற்றுகையை மீறிச் சரக்கனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா?” “அங்கு போய்த்தான் விசாரிக்க வேண்டும்.” “பினாங்கில் குடியரசு சர்க்கார் பிரதிநிதி இஞ்ச்சே அக்மட் பின் ரக்மான், இதுபற்றிப் பேசி முடிவு செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு. அவருக்கும் தகவல் அனுப்புகிறேன்.” “மலேயாவில் எங்கு இறங்கினாலும் பினாங்குக்குப் போவேன். நிச்சயம் அவரைச் சந்திக்கிறேன்.” கர்னல் லூபிஸ் எழுந்தார். மற்றவர்களும் எழுந்தனர். மறுநாள் காலையில் வடக்குச் சுமத்ரா முதலாவது கொரில்லாப் படையின் விழா அணிவகுப்பு நடந்தது. இந்தொனேசியக் குடி அரசின் அதி உன்னத வீரப் பதக்கத்தை மேஜர் பாண்டியனின் சட்டையில் அணிவித்து, கர்னல் லூபிஸ் போற்றுரை வழங்கினார். கம்பொங் டாரா முத்து என்ற மொக்தாருக்குப் பாண்டியன் தகவல் அனுப்பினான். பதில் வந்தது “இயலாது.” கம்பொங் டாராவுக்கு மீண்டும் செய்தி போனது. “இயன்ற வழியில் எப்படியாவது உடனே வகை செய்ய வேண்டும். பணத்துக்கு ஜாலன்கூடா ஹாஜி ருஸ்லான் அலியைச் சந்திக்கவும்.” மொக்தாரின் பதில் வந்தது: “திங்கட்கிழமைக்கு மேல் புதன் கிழமைக்குள் கம்பொங் டாரா மேலக் கோடியில் இருக்கும் அலமேலு வீட்டில் போயிருந்து கொண்டு அவள் மாறலில் செய்தி அனுப்பவும். மெடானுக்குள் இரவில் நுழைய வேண்டாம். கடுமையான ஊரடங்குச் சட்டம். பகலிலும் வேண்டாம். கூட்டம் இராது. மாலை 5-7 மணி சரியான நேரம். அலமேலு சொல்கிறபடி நடந்து கொள்ளவும். ‘குருவிச்சவாரி’க்கு ஏற்பாடு செய்வதாக மார்கெட் ஸ்ட்ராட் மோப்பிங் தவ்க்கே ஒப்புக் கொண்டிருக்கிறார்.” புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|