உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அரும்பு 17. தமிழ்ப் பேரவை (வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத் திருமருதோங்கிய விரி மலர்க்காவில் வெள்ளை வட்டமதி பட்டப் பகல்போல் நிலவு வீசத் தமிழ் மலையத் தென்றல் விளையாடுகிறது. அங்கு கூடல் மாநகர மைந்தரிற் சிலர் மகிழ்ந்திருக்கின்றனர். யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் நிறைந்த தங்கக் கிண்ணங்கள் மின்னிச் சிரிக்கின்றன. பல்லியம் கறங்கப் பாவலர்கள் பாடுகின்றனர்; விறலியர் ஆடுகின்றனர்... பாடலும் ஆடலும் ஓய்ந்து இப்பொழுது அறிஞர்கள் தத்தமது சிந்தைக் கெட்டிய உண்மைகளை விளம்பி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடுமெனப் போர் முரசம் முழங்குகிறது - கன்னட - ஆந்திர ஈட்டி வீரர்களும், பட்டாணிய மராட்டியக் குதிரைச் சிப்பாய்களும், பிரெஞ்சு - பிரிட்டிஷ் பீரங்கித் துருப்புகளும் அடுத்தடுத்துத் தோன்றிப் பாய்ந்து வருகின்றனர். அவையோர் கலைந்தோடுகின்றனர். ஓடுகின்றனர், ஓடுகின்றனர், ஓடி மறைந்து போயினர். காட்சி தேய்ந்து கரைகிறது, தேய்ந்து கரைகிறது, தேய்ந்து கரைந்து மறைகிறது.) (பினாங் நான்யாங் ஹோட்டல் ஜன்னல்களுக்கு அப்பாலான கீழ்வானில் பசுமஞ்சள் வண்ணப் பொன்னொளி பரப்பும் குளிர்மதி மெல்லென ஊர்ந்து மேலேறுகிறது. சுற்றி நிற்கும் ஒளி மீன்கள் நகைத்து மின்னுகின்றன - மண்டபத்துள்ளே சாயைகள் - சாயைகள் - தமிழ்ச் சாயைகள்.) நாவன்னா பாடுகிறார்:
மைந்தரோடூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழிக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக்கூடல் அகம் ஆடிட்டர் பாடுகிறார்:
மாலை விலை பகர்வார் கிள்ளிக்களைந்த பூச் சாலமிகுவதோர் தன் மைத்தாய் காலையே வில்பயில் வானகம் போலுமே வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம். அடிகள் பாடுகிறார்:
களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால் களிகள் விதிர்த்திட்ட செங்கல்துளி கலந்து ஓங்கெழில் யானை மிதிப்பச் சேறாயிற்றே பூம்புனல் வஞ்சி அகம். மாணி: தமிழர்களே, முத்தொள்ளாயிரத்திற் காணும் இந்த மூன்று பாடல்களும் தமிழ்நாடு சீரழியத் தொடங்கிய காலத்தைப் புள்ளியிட்டுக் காட்டுகின்றன. அவற்றை ஒருமுறை மனதிற்குள் பாடிப் பாருங்கள். போகம் போகம் போகம் என்றே அவை போக முழக்கம் செய்கின்றன. பாண்: எந்த ஒரு இனம் செல்வச் செருக்கால் வரம்பு கடந்து போக நுகர்ச்சியில் திளைக்கிறதோ, அது சீரழிவது திண்ணம். மாணி: போகத்தின் உடன்பிறவி டம்பம்; அதன் விலை ஒழுக்கக்கேடு; விளைவோ அழிவு. பாண்: சீரழியவிருக்கும் ஓர் இனத்தாரிடையே முதலில் அளவிறந்த போகஆசை தோன்றும். போக நுகர்ச்சிக்கு அடித்தேவை பணம். ஆகவே, பணத்துக்காக எதுவும் செய்யலாம் என்ற கொள்கை பிறக்கின்றது. பணமே எல்லாம் என்ற எண்ணத்தின் தொடர்பாய்ச் சமுதாயத்தின் கட்டுத் திட்டங்கள் நைந்து ஒழுக்க நெறிகள் மறைந்து போகின்றன. அதன்மேல் மனிதப் பண்புகள் மங்கிவிடும். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, பாபிலோனின் வீழ்ச்சியே! அடிக: இன்ப நாட்டமும், பொருள் தேட்டமும் அடியோடு இழுக்கென்று கூறுகின்றனையோ? இன்பம் காரணமாகப் பொருள் தேடுமாகலானும் பொருளானே அறம் செய்யுமாகலானும் இன்பமும் பொருளும் ஏற்றமென ஓதினாருணர்க. பாண்: அடிகாள், அவர் குறிப்பிடுவது இல்லறம், ஈத்துவத்தல் முதலான நல்லறங்களாலே பெறப்படும் இன்பமும் பாடுபட்டு உழைப்பதனாலும் தீதற்ற திறமைப் பயனாலும் அடையக் கூடிய பொருளுமாம், அறிக. மாணி: உலகின் ஒளி விளக்காய்த் திகழ்ந்த பாபிலோன் அழிந்து வீழ்ந்தது ஏன்? போகம், போகம், போகம் என்று வரலாறு கூவுகின்றது. அம்மாநகரத்து இறுதிக் காலத்திலே, இளைஞர்கள் கன்னத்தில் அரிதாரம் பூசிக் கண்ணுக்கு அஞ்சனமும் உதட்டுக்குச் சாயமும் தீட்டிக் கொண்டு, பொன் மாலையும் பூமாலையுமாய்ப் பாட்டிசைத்து நாட்டியமாடித் திரியலாயினர். நெறிமுறையில் அடங்காத சேர்க்கை முறைகள் தலை எடுத்தன. அவற்றிற்கு ஒளிவு மறைவு தேவையில்லை என்ற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. பாண்: பாபிலோனியர் அவ்வாறு போகக் கடலில் நீந்தியிருந்த வேளையில், அவர்களின் பரம வைரியான பாரசீக வேந்தன் சைரஸ் படை எடுத்து வந்தான். எதிரி கோட்டை வாயிலை இடிக்கின்றான். தடுப்பதற்கு நாதியில்லை. தடுக்கும் பொறுப்புடைய ஆடவரோ அஞ்சன அரிதாரராய்ப் பொன்மாலையும் பூமாலையும் அணிந்து தெருச்சந்திகளில் பேடிக்கூத்து ஆடிக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே பாபிலோனிய மன்னனைத் தொலைக்கத் திட்டம் தீட்டியிருந்த பெரிய கோயில் பூசாரிகள், எதிரிக்குக் கோட்டை வாயிலைத் திறந்து விட்டனர்... பாபிலோனின் வீழ்ச்சி மன்பதைக்கு என்றென்றும் நல்லதொரு படிப்பினையாக இருக்கட்டும். மாணி: சுமேரியாவும் அசீரியாவும் பினீசியாவும் நிலைகெட்டு அழிந்து போனது ஏன்? ஊர், நினேவோ, டயர் நகரங்கள் செத்துப் புதைந்துபோனது என்? போகம், போகம், போகம்! போகத்தின் உடன்பிறவி டம்பம்; அதன் விலை ஒழுக்கக் கேடு; விளைவோ அழிவு. பாண்: ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்க நேர்ந்திருப்பது ஏன்? மாலிக்கபூரும் ஜுல்பிக்கர்வானும், கம்பண உடையானும், லட்சுமண நாய்க்கனும், ஷாஹாஜியும் வெங்கோஜியும், டூப்ளேயும் கிளைவும் விருப்பம் போல் வலம் வந்து தமிழ்நாட்டைச் சூறையாட முடிந்தது ஏன்...? நம் மூதாதையர் போக வாழ்க்கையின் விளைவு! - நான் குறிப்பிடுவது ஆட்சி மட்டத்தில் இருந்தவர்களை. பெரும்பாலான தமிழர்கள் அன்றும் இன்றும் பஞ்சையரே - அளவிறந்த போகம் ஆண்மையின் எதிரி; அறிவின் வைரி. சுமேரியரையும் ஆசீரியரையும் பீனீசியரையும் போன்று நாமும் வேரோடு அழிந்து போகாமல் தப்பியது வியப்பிற்குரியதே! அடிக: தமிழ் இனத்தின் ஒப்புயர்வற்ற தனிச்சிறப்புக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. நண்பர்களே, கண்கூடான ஓர் எடுத்துக்காட்டு! சுமேரியாவும் ஆசீரியாவும் பினீசியாவும் வீழ்ந்தழிந்தன. ஆனால், தமிழகமோ கல்தோன்றி மண் தோன்றாக் கால முதல் இன்று வரையும் தொடர்ந்து வாழ்கின்றது! ஏன்? இதுவே தமிழினத்தின் தனிப்பெரும் சிறப்பு. சாத்: தமிழினம் தொடர்ந்து வாழ்வதற்குக் காரணம் யாதோவெனின், தமிழ்மொழியே என்று கூசாமல் பகர்வேன். கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தது எதை? பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்திருப்பிலே வளர்ந்தது எது? வள்ளுவனை இளங்கோவனை செயங்கொண்டானை உலகினுக்கீந்தது எது? செந்தமிழ், பழந்தமிழ், பசுந்தமிழ்! அதுவே தமிழ் இனத்தின் உயர்வு; தமிழகத்தை நிலையாகக் காத்து நிற்கும் கன்னித் தெய்வம்! மாணி: தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபட வேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்! காவேரிக் கல்லணையைப் பார்!’ என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது. அடிக: எது பொருளற்ற கூக்குரல்? அதற்கு முன் எந்த இனம் அத்தகைய எழுத்து மேன்மையையும், செயல்திறனையும் காட்டியிருக்கிறது? சொல் சொல் சொல்! பாண்: உலக வரலாற்றுப் பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதற்கு அடிகளாரே சரியான உதாரணம். பெரிய கோயிலுக்கும் கல்லணைக்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஃபேரோ மன்னர்கள் பிரமித் கோபுரங்களைக் கட்டிவிட்டனர். பாபிலோனியர், எப்போதும் நீர்நிறைந்த - அகன்ற யூபிரத்தீஸ் நதிக்கு அடியில் பதினைந்து அடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்ட சுரங்கப் பாதை ஒன்றை அமைத்திருந்தார்கள். மாணி: இலக்கியத் துறையிலும் தமிழர்கள் தனிச் சிறப்புக் கோர இடமில்லை. ஏறக்குறைய திருக்குறளையொத்த பல நீதிநூல்கள் பல்வேறு நாடுகளில் தோன்றி இருக்கின்றன. காப்பியங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பாண்: எகிப்திய அமைச்சன் ப்தாஹோத்தப்* தன்னுடைய மகனுக்கு எழுதிய அறிவுரைக் கடிதம் ஒன்றின் மொழிபெயர்ப்பைச் சமீபத்தில் படித்தேன். திருக்குறளைக் கரைத்துக் குடித்தவன் எழுதியது போல் இருந்தது. காலத்தில்தான் பெரிய ஏமாற்றம். திருவள்ளுவருக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் அது!
* ப்தாஹோத்தப் - பண்டைய எகிப்தின் 5-ஆவது ராஜ (ஃபேரோ) வம்சத்தைச் சேர்ந்த அலோசிஸ் மன்னனின் மந்திரியும், மெம்பிஸ் பிரதேசக் கவர்னருமான ப்தாஹோத்தப் (சுமார் கி.மு.3000) அடிக: தமிழகத்தில் நீருக்கும் நெருப்புக்கும் இரையாகி மறைந்த மாநூல்களையும், இடிந்து மண்ணாகிவிட்ட மாட கூடங்களையும், நீவிர் இருவரும் அறிவீராயின் இவ்வாறு பேசத் துணியீர். துணியீர்...! ஆ! ‘யாரறிவார் தமிழ்ப் பெருமை, மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும்...’ பாண்: எத்தனையோ நாடுகளில் பலப்பல தொன்னூல்களும் மாமாளிகைகளும் அழிந்து போயிருக்கின்றன. அது தமிழகத்துக்கு மட்டுமே உடைமையான சிறப்பு நிகழ்ச்சியல்ல. எனவே, அதை வைத்துப் பெருமை பாராட்டுவது மடமை... சாஃபக்லீஸ்* எழுதிய நூற்றுக்கும் அதிகமான நாடகங்களில் எழு மட்டுமே கிடைத்திருக்கின்றன.
* சாஃபக்லீஸ் (கி.மு. 495-406) - கிரேக்க மகா நாடகாசிரியர்களில் ஒருவர். அடிக: சாஃபக்லீஸ்? யாரவன்? பாண்: அடிகளாருக்குத் தெரிந்திருக்க முடியாது. தெரிந்திருந்தால் அவருடைய இலக்கியப் பார்வை... சாத்: தமிழராய்ப் பிறந்தும் தமிழ் உணர்ச்சியற்ற நீவிர் இருவரும் என்ன சூதுக் கருத்துடன் இப்படிப் பேசுகின்றீர்? உலகில் தமிழே தாழ்ந்த மொழி என்றும், உலகில் தமிழர்கள் உருப்படியாக எதையும் செய்ததில்லை என்றும் கூறுகின்றீரோ? மாணி: இலக்கியத் துறையிலும் மற்ற சில வகைகளிலும் தமிழனின் சாதனை சிறப்பானதே. ஆனால் ஒரே போடாகத் தமிழைப் போன்றதொரு சிறந்தமொழி வேறில்லை என்பதும், தமிழனைப் போன்ற திறனாளி வேறு எங்கணுமே இல்லை என்பதும் பிழை. ஒவ்வொருவனும் அவனது இனத்தின் தொன்மையையும் சாதனைகளையும் எண்ணிப் பெருமை பாராட்டுவது குற்றமில்லை. ஆனால், அது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பாண்: தவறான நம்பிக்கைகளின்மீது எழும் தற்பெருமை, உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும். ஆடிட்: உண்மை, உண்மை, உண்மை. நாவ: சரி! தமிழ் மக்களும், அவர்களோடு சேர்ந்து பாரத கண்டத்தினர் அனைவரும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வழி என்ன? சொல்லுங்கள். மாணி: முன்னேற்றத்துக்கு முழு முதல் தேவை நம்பிக்கையே. இரண்டாவது, காலத்திற்கு ஒவ்வாத கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கைவிட்டுப் புதியவற்றைக் கைக்கொள்ளுதல். அடிக: தமிழன் என்றுமே கண்மூடித்தனமாகப் பழமையைக் கட்டி அழுதவனல்லன். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, காலவகையினானே’ என்ற சான்றோர் வாக்கை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மாணி: நன்று. ஆனால், அந்தப் பொன்வாக்கை நாம் என்ன அளவுக்குக் கடைப்பிடித்து வருகிறோம்? நம் நாட்டைப் பற்றி நிற்கும் சனியன்கள் எவை? அவை மறையாததற்கு காரணம், அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறை என்ன, அவற்றை எடுத்துச் சொல்வோர் நம்மில் எத்தனை பேர். நாவ: நம்மைப் பிடித்திருக்கும் சனியன்களிலெல்லாம் தலையாயது ஜாதிமுறை. முதல் வேலையாக அதை ஒழிக்க வேண்டும். சாத்: ஜாதிமுறை காரணமாகவே ஒரு ஜாதி பிற ஜாதிகளைச் சுரண்டி வாழ முடிகிறது. மாணி: ஜாதிக்கும் சுரண்டலுக்கும் சம்பந்தமே இல்லை. எவன் எந்தத் தொழிலைச் செய்கின்றானோ, அவன் அதன் தன்மையைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொள்கிறான். வக்கீலாயிருப்பவன் பார்ப்பனனாயினும், முதலியாயினும் அவனுக்கு ஒரே லட்சியம், வழக்குகளில் வெற்றி காண்பதும் கட்சிக்காரனிடம் இயன்றவரை பணத்தைக் கறப்பதும். தொழிற்சாலை நடத்துபவன் செட்டியாயினும் நாய்க்கனாயினும் அவனுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்; குறைந்த செலவில் பண்டங்களைத் தயாரித்துக் கூடுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்று லாபத்தைப் பெருக்குவது. பாண்: செருப்பு செய்து விற்பவன் சக்கிலியனாயினும் சமணனாயினும் அவனுடைய வேண்டுதல் - மாடுகள் சாகட்டும் தோல் விலை இறங்கட்டும்! ஆடிட்: ஜாதிவெறி தொலையும் வரையில் நம் மக்களுக்கு விமோசனம் இல்லை. மாணி: ஜாதிமுறை ஜாதிவெறியாகத் தலைதூக்கியதற்குக் காரணம், பொதுமக்களின் பாதுகாப்புக் கூட்டுறவுத் தேவை. நம் தேசத்தில் முறைதுறை இல்லாத அரசர்களும், பச்சைக் கொள்ளைக்காரர்களும் தொடர்ச்சியாய் வெகுகாலம் ஆட்சி நடத்தி வந்ததால், சாதாரண மக்களின் தற்காப்புக் கூட்டுறவு ஏற்பாடாக ஜாதிப்பற்று தலைமுறைக்குத் தலைமுறை வலுப்பெற்று வந்துள்ளது. தனியாகச் சென்று கோரினாலும், கூட்டமாகச் சென்று கோரினாலும் ஒரு மாதிரியான நீதியையே எதிர்பார்க்க முடியும் என்ற நிலைமை ஏற்படின், ஜாதிமுறையின் பிடிப்புத் தளர்ந்துவிடும். பாண்: இன்னும் கொஞ்ச காலத்தில் ஜாதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும். புதிய தொழில் நகரங்களை நோக்கிக் கிராம மக்கள் படை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான தொழில் கூடங்களில் ஒரே மாதிரி ஆடை அணிந்த ஆள்கள், ஒரே மாதிரியான வேலையைப் பார்க்கும் சூழ்நிலையில், ‘என்ன ஜாதி’ என்ற கேள்விக்கே இடமிராது. சாத்: அந்த நிலைமை ஏற்பட நாளாகும். கலப்புமணம் ஒன்றே ஜாதிமுறையை உடனடியாக வெட்டி வீழ்த்தக்கூடிய ஆயுதம். அடிக: ஆம், ஆம், ஆம். நாவ: என் கருத்தும் அதுவே. ஆடிட்: நானும் அப்படியே நினைக்கிறேன். பாண்: ஆதனூர் நந்தனார்களும், தில்லை மூவாயிரத்தாரும் கொள்வினை கொடுப்பினை செய்து கொள்வதால் மட்டும் ஜாதி முறையை ஒழித்துவிட முடியாது. சீர்திருத்த மாற்றங்களுக்கு எண்ணத் தெளிவே முதல்படி. சாத்: தேவையற்ற - நம் மக்களின் சக்தியை வீணடிக்கும் - ஜாதிமுறை தோன்றியதற்குக் காரணம் என்ன? பாண்: கால - இடத் தேவைகளுக்கேற்பச் சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது. மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது; இருந்து மாறியிருக்கிறது. எனவே, நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. மாணி: ஜாதிமுறையைத் தாங்குவோர் அதற்காகப் போராடுவது, அதன் தன்மையினால் நன்மை ஏற்படுகிறது என்று கருதி அல்ல; அதை வைத்துப் பெறக்கூடிய பயனை எண்ணி... இன்றைய தமிழன் தனது பெருந்தேவைகளாகக் கருதுவது பணம், பதவி, பள்ளிப் பட்டம் மூன்றையுமே - இந்த லட்சியங்கள் சரியானவையா என்ற ஆராய்ச்சி இப்போது வேண்டாம் - அவற்றை அடைவதற்கு ஜாதியின் துணை தேவையில்லை; ஜாதியின் துணையால் மட்டும் அவற்றைப் பெற்றுவிட முடியாது என்று ஏற்பட்டு விடுமாயின், ஜாதிப் பிரிவை யாரும் வற்புறுத்தப் போவதில்லை. ஜாதிப் பேய் தானாகவே மரித்துவிடும். நாவ: ஜாதிப் பேயை ஒழிப்பதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. ஆனால், சீரான முன்னேற்றத்துக்கு ஜாதி ஒழிப்பு மட்டும் போதுமா? பாண்: போதாது. எனக்குத் தெரிந்தவரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவுவளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு, ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யாவுமே வெறும் விளையாட்டு வேலிகள்... அடிக: அது கிடக்கட்டும்; தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்கு உண்மையான காரணம் என்ன? பல வகைகளில் தாழ்ந்துள்ள வேறு இனங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது நாம் பின்தங்கி நிற்பது ஏன்? மாணி: தனி மனிதனுக்குப்போலவே சமுதாயங்களுக்கும் பிறப்பு - வளர்ச்சி, முதுமை - அழிவு உண்டு. காலத்திற்கேற்ப மாறிப் புது வலுப்பெறாத சமுதாயங்கள் செக்குமாட்டுத்தன்மை பெற்று நடைப்பிணங்களாய் காலந்தள்ள நேருகிறது; மாய்ந்து போவதும் உண்டு. அடிக: நம் மக்களின் மேம்பாட்டுக்கு முதல் நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும்? பாண்: தமிழர்களின் கிணற்றுத் தவளை மனப்பான்மையை மாற்ற வேண்டும். அத்துடன் ஆய்ந்து தேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை வழுவாது நிறைவேற்றும் கடமை உணர்ச்சியையும் பரப்ப வேண்டும். அடிக: ஆம், ஆம், ஆம். அது நிற்க, நண்பர்களே, வெகுகாலமாக எனக்கு ஓர் ஐயம்... வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக்கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழியில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பாண்: மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள். மாணி: இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள். நாவ: பர்மாவில் மூட்டை தூக்குகிறார்கள். சாத்: கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள். ஆடிட்: பாரத கண்டம் எங்கும் பரவிப் பிச்சை எடுக்கிறார்கள். அடிக: தமிழர்களே, இந்த இழிநிலை மாற ஒரு வழி இல்லையா? பாண்: உண்டு. நாவ: தமிழர்களே, பொழுது புலர்கிறது. புட்கள் கரைகின்றன; சீனர்களின் வர்த்தக இரைச்சல் கிளம்பிவிட்டது. நாம் போகலாம். புறப்படுங்கள். பாண்: ஆம். போகலாம். அடிக: நேற்றைய இருள் மறைந்து புதுநாளின் ஒளி தோன்றுகிறது. நாம் சொல்வோமாக. மாணி: போகலாம், நேரமாகிறது. சரத்: விடிந்துவிட்டது. புதுநாள் நமக்காக வைத்திருப்பது என்ன என்பதைப் பார்க்க வேண்டும். புறப்படுவோமாக. ஆடிட்: செல்வோம், சென்று உழல்வோம். வாருங்கள். (பினாங் நான்யாங் ஹோட்டல் கல்யாண மண்டபக் காட்சி தேய்ந்து கரைகிறது. கரைந்து தேய்கிறது. கரைந்து தேய்ந்து மறைகிறது.) புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|