உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நுனை 8. செர்டாங்வே டியோங்வா ரெஸ்டாரன்ட் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். முன்னே நாவன்னா தட்டுத்தடுமாறி இறங்குவது வெளிச்சமில்லாப் படிக்கட்டில் நிழல் மங்கலாய்த் தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன்னர், உதடுகளுக்கிடையே அவர் கவ்வியிருந்த சிகரெட் கடைசிப் படியில் கிடந்து கங்கு மின்னலுடன் புகைகிறது. நடைபாதையில் இறங்கி நின்றார்கள். “பாவன்னா! வண்டி பிடிஸ்ஸி ஏதி விட்ருங்க... கொலும்பு ஸ்திராட்டுக்கு. பிரகு கடைஹி போரேன்... பாவன்னா! பாவன்னா! கொலும்பு போயிருகிகலா? கொலும்பு கொலும்பு கொலும்பு.” இடக்கையைத் தோளில் வைத்து முகத்தை உற்றுப் பார்த்தார். “நல்ல ஊரு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. ம்க்ம் ம்க்ம் க்ர்ர்.” காறித்துப்பிக் காலால் தேய்த்தார்; சில விநாடிகள் தேய்த்துக் கொண்டே இருந்தார். “ம்க்ம் ம்க்ம்... பாவன்னா! உங்களுக்கு பிராமலக் கல்யானிய தெரியுமால்யா. கல்யானி கல்யானி உடலு என்னா உடலு வுடலு விடலு வில்போல வலையும். வில், வியில், ஹிஹிஹி. உங்கலுக்கு வில் கையில் வஸ்ஸி அம்பு போடுறவில் கல்யானி ஹி நான்னா உயிரு. கலுஃத்தை சேர்த்துக் கட்டிகிருவா. ம்க்ம் ம்க்ம்... வெஃத்தில் எஸ்ஸி இறங்குறது அவ தொண்டையில சிவஃப்பா ரஃத்தமாட்டமா தெரியும்... ம்க்ம் ம்க்ம் ம்க்ம் க்ர் க்ர்ர்...” சாடோ வண்டிகள் இரு திசையிலும் ஓடிக் கொண்டிருந்தன. “ஹெய்! ஹெய்! ஹெய்! க்ணிங் க்ணிங்...” தெரிந்த வண்டிக்காரன் எவனாது தென்படுகிறானா என்று விளக்கிலாச் சாலையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். “அக்மெட்!” “யா துவான்.” வண்டி நெருங்கி வந்து நின்றது. “கொலொம்போ ஸ்ட்ராட். மாரிமுத்து வீடு. இரட்டை அங்சானா மரம். இறங்கி வீட்டுக்குள் கொண்டு போய் ஒப்படை.” “பாய்க், துவான்.” கைத் தாங்கலாய் நாவன்னாவை வண்டியில் ஏற்றி விட்டுச் சில்லறையை நீட்டினான். அக்மெட் பணத்தை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வண்டியைத் திருப்பினான். “பாவன்னா! வரேன், நானே இறங்கீருவேன், ம்க்ம் ம்க்ம்...” வடக்கே நடந்தான். எதிரே, மாட்டு வண்டித் தமிழர்கள் இரண்டு பேர் கைலியும் கழுத்தடைப்புக் கோட்டுமாய் வந்தனர். “கிராணி ஐயா, கும்பிடுறேன், என்ன இந்நேரத்தில இங்கிட்டு?” “தன் போலிங் வீட்டுக்கு.” “சரி, போயிட்டு வாங்க.” நடைபாதை இருட்டில் பச்சூலி மணம் கமழ நின்றவள் தோளைக் குலுக்கி நெளித்தாள். ஒரு சீனன் உற்றுப் பார்த்துவிட்டுப் போனான். பாசார் திக்கிலிருந்து வந்த டொரியான் பழ மணம் கம்மென்று சூழ்ந்து அழுத்திற்று. தெற்கேயிருந்து வந்த வண்டியை நிறுத்தி ஏறினான். “செர்டாங்வே.” “பாய்க், துவான்.” வண்டி ஓடலாயிற்று. சராய்ப் பையில் கையைவிட்டுப் பார்த்தான். சிகரெட் பெட்டியைக் காணோம். எங்கே போட்டேன்? வலக்கை சட்டைப் பையைத் துழாவியது. ஓ, இங்கே இருக்கிறதோ? சிகரெட்டை உருவி வாயில் கவ்விக் கொண்டு நெருப்புக் குச்சியைக் கிழித்தான்; அணைந்து போயிற்று. இன்னொரு குச்சி; அணைந்து போயிற்று. மூன்றாவது குச்சி. தீ எரிகிறது. பற்ற வைத்தான். இதென்ன தீ தீக்கொள்ளி. இல்லை, நெருப்புக் குச்சி தீப்பிடித்து எரிகிறது. ஓஹோஹோ... அலைத்தணைத்து எறிந்தான். ஏன் மூன்று முயற்சிகள்... கை நடுக்கமா, காற்றா... சீச்சி! மடத்தனம் மடத்தனம்... என்றோ ஒருநாள், குடி முழுகிப் போகிறதொன்றுமில்லை. என்றோ ஒருநாள்... அட்டணைக்கால் போட்டுச் சாய்ந்தான். மெல்லிய கீழைக்காற்று வீசியது. இரண்டொரு மானிட உருவங்கள் இருட்டில் கலந்து மறைந்தன. உடல் நிலைகொள்ளாமல் இங்குமங்குமாய் இடம் பெயர்ந்தது. சீச்சீ. உடல் அடங்காது. மனம் ஒடுங்காது. யாரும் எதையும் அறிவு வழியில் நிறைவேற்ற முடியாது. சீச்சீ. உடலும் மனமும், விருப்பமும் ஒழுக்கமும், சீச்சீ... அரசியின் மனதைக் கவர்ந்த அறிவழகர் என்ன சொல்கிறார்.
வட்டமிட்டொளிர் பிராண வாயுவெனு நிகளமொடு கமனம் செய் மனமெனும் பெரிய மத்தயானையை என் வசமடக்கிடின் மும்மண்டலத் திட்டமுற்ற வளராச யோகமிவன் யோகமென் றறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வென் இனி இங்கிதற்கும் அனுமானமோ பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுப யோகமும் பார காவ்ய கவித்வ நான் மறை பாராயணம் செய் மதியூகமும் அட்ட சித்தியு நலன்பருக் கருள விருது கட்டிய பொன் அன்னமே! அண்ட கோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகீ என் அம்மையே! அடிகாள்! கேடிலியப்ப பிள்ளை தவப் புதல்வீர்! மட்டுவார் குழலி மணாளீர்! அரசியை மயக்கிய அறிவழகீர்! நன்றை சொன்னீர், நனி நன்றாய்ச் சொன்னீர். மனமெனும் பெரிய மத்த யானையை அடக்கும் வழி என்ன? அதையும் சொல்வீராக. எப்படி அடக்குவது? எல்லாத் திக்குகளிலும் தடங்கல். மனதுக்கு உடல் முட்டுக்கட்டை. உடலுக்கு மனம் இடைஞ்சல்... சிகரெட் புகை கண்ணில் படர்ந்து உறுத்திற்று. சீச்சீ, மனம் உடல் எல்லாம் கற்பனை. நாமே வகுத்த வேறுபாடு... அடிகாள்! மனதை அடக்கத் தெரியாததால்தான் நீடு வாழாமல் இளமையிலேயே மாண்டு போனீரோ - அதுவும் அந்தப் பொட்டைக் காட்டில் போய். அதிருக்கட்டும், அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்ட நாயகி அம்மை உம்மைக் கைவிட்டது ஏன்? மனம் குவியும் தந்திரம் உமக்குக் கைவரவில்லையா? அன்றி, ‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையாகிய பின்னையுங் கன்னி’யெனத் திரிவதால் அம்மைக்குப் பிள்ளைப் பாசம் அற்றுவிட்டதா...? ஐந்து ராணுவ லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து சென்றன. வாயிலிருந்த சிகரெட்டைக் கையிலெடுத்துப் பார்த்தான் கங்கு மின்னுகிறது. இன்னும் உயிர் போகவில்லை. புகையை இழுத்து ஊதினான். சீச்சீ. எல்லாம் கதை. மனதை விண்ணில் - ஒழுக்கக் கனவு லோகத்தில் பறக்கவிடலாம். கொஞ்ச நேரம், மிகக் கொஞ்ச நேரத்துக்குத்தான். தரையிலோ அறுசுவை உண்டி. வகை வகையான பானம், சேலொத்த விழியும் பாலொத்த மொழியும் சிற்றிடையும் சிறு பிறைநுதற் கீற்றுமான மடந்தையர்... சிறகு கட்டிக்கொண்டு கற்பனை வானில் பறப்பவர்களைத் தரைக்கு இழுக்கத்தான் மங்கையரோ? மனிதனை மயக்கி மயலூட்டி மழுக்கி விழித்தாட்டித் துடிப்பிக்கும் புயல் நெருப்பு மழை - பெண்ணாகி வந்த மாயப் பிசாசம் -
பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக் கண்ணால் வெருட்டி மார்பால் மயக்கிக் கடி தடத்துப் புண்ணாங் குழியிடைத்தள்ளி என் போதப் பொருள்பறிக்க எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சியோகம் பரனே... அப்பா கச்சியேகப்பா, நானென்னப்பா செய்வேன், சின்னஞ்சிறு பையனப்பா! அப்பா பட்டினத்தப்ப, உன் கதியே இப்படியென்றால் என்னைச் சொல்வது என்னப்பா நியாயம், நீயே சொல்லப்பா... ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன். இப்பொழுதுதான் தங்களை நினைத்தேன். தாங்களோ சட்டியும் கையுமாய்ச் சாலையோரம் நிற்கிறீர்கள். சட்டியில் ஒன்றையும் காணோமே, ஏன்? ஹெஹ் ஹெஹ் ‘இருக்குமிடந்தேடி’ வந்து ‘உருக்கமுடன்’ அன்னமிடுவார் யாரும் சிக்கவில்லையாக்கும்? ஏஞ்சாமி - சாமி, சின்னப்பயல் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக்கூடாது - கலி காலத்தில் இந்த விரதமெல்லாம் கடைத் தேறுமா? தெருக் காட்டுக்குள் போய் ஆடிப்பாடி இருந்தால்தான் சோற்றைப் பார்க்கலாம். சோறு வேண்டுமாயின் தயவு செய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். முதலில் கெசாவனுக்குப் போய்ப் பூப்போட்ட சட்டை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். தாடி இருந்துவிட்டுப் போகிறது. லேசாய் வெட்டிவிட்டால் போதும். அரிதாரம் இல்லையோ? வேண்டாம். விபூதியை அப்பிக் கோவணத்தால் தேய்த்துவிடுங்கள். பவ்டர் பூசியது போலவே இருக்கும். சரி என்னென்ன சினிமாப் பாட்டு தெரியும் உங்களுக்கு? என்ன, ‘பெண்ணே. வா வா வா! இன்பம் தா தா தா!’ கூடத் தெரியாதா?... கதை - வசனம் பேசத் தெரியுமா? தெரியாது. பேடிக் கூத்து ஆடத் தெரியுமா? அதுதான் சாமி, குண்டியை ஆட்டிக் குதிப்பது... அதுவும் தெரியாதா சரி. உங்களுக்கு என்னதான் தெரியும்? ஒரு பானை சோற்றை அவக் அவக்கென்று விழுங்கத் தெரியுமா? போங்க சாமி, போங்க. சுத்தப் பட்டிக்காட்டுச் சாமியாய் இருக்கிறீர்களே. பண்டாரப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தால் எந்த இல்லத்தரசி தங்களுக்குச் சோறு போடுவாள் - அதிலும் தாங்கள் இருக்குமிடம் தேடி வந்து... மூன்றாள் பிச்சையை மிச்சம் பண்ணினால் ஒரு மாட்டினி பார்த்து விடலாமே, சாமி... சரி, எப்படியும் போங்கள், தங்களுக்குச் சொல்லிப் பயனில்லை... அது நிற்க. தங்களிடம் ஒரு சேதி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் வீட்டு வகையில் யாரேனும் இப்போது அங்கே தொழில் நடத்துகிறார்களா? இல்லையா? ஆ, எப்பேர்ப்பட்ட மார்க்கா! இருந்த இடம் தெரியாமலா போய் விட்டது! கோவன்னா அவர்கள், பெண்டாட்டி தாலியை விற்க மதுரைத் தெற்காவணி மூல வீதிக்குப் போயிருந்த இடத்தில் - இல்லையில்லை, தாலியில்லை, தண்டை, அதுதான் சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் அநியாயமாய்க் கொலையுண்டாராமே, பிள்ளை வைக்கக் கூடக் கொள்ளி இல்லாமல் - மன்னிக்கவும், நாக் குழறுகிறது. பிள்... ம்ம்... கொள்ளி வைக்கக்கூடப் பிள்ளை இல்லாமல், கண்ணகியாத்தாளும் மலைக்காட்டில் போய் மாண்டு போனார்களாக்கும். ஐயோ, பாவம்! கணவரிடம் தண்டையைக் கழற்றிக் கொடுப்பானேன். விடாப்பிடியாய் அவனைப் பின்பற்றிப் போய் அறியாத் தேயத்தில் அநாதையாய்ச் சாவானேன்? ம்ஹ்ங்... கோவன்னா அவர்கள் எடுத்து வைத்திருந்த திருக்கடையூர் தாசி மாதவிக்கு ஒரு மகள் பிறந்திருந்ததாகவும் - அந்தத் தங்கச்சி பெயர் மணிமேகலை என்றார்கள் - அதுவும் பருவ வயதில் துறவறம் பூண்டு சாக்கிய மடத்தில் போய் ஒடுங்கி விட்டதாகவும் சொல்கிறார்களே, உண்மைதானா? ம்ஹ்ங்... கோவன்னா அவர்களின் மாமனார் எட்டி மாநாய்கன் வீடும் கொடியற்றுப் போனதாக்கும்... ஏஞ்சாமி, இதெல்லாம் ஏனிப்படி...? ஆ! அப்படியா! அதுசரி, இன்னொரு சங்கதி. வீடு கசந்த பின் தாங்களும் திருக்கடையூருக்குத்தான் போனீர்களோ... என்ன பெயர்? திருவுடைய நாயகி! நல்ல பெயர், மணியான பெயர்... ம்ம்? மூன்று மாதத்தில் புளித்துவிட்டதாக்கும். பிறகு மாமல்லை, நாகை, கொற்கை... தொழிலைக் கவனிக்க நேரமில்லை. மேலாளும் அடுத்தாட்களும் சேர்ந்து பட்டை நாமம் போட்டார்கள். கடை நொடித்துவிட்டது. உடுத்திய வேட்டியோடு, ‘ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல’ என்று பரதேசம் கிளம்பிவிட்டீர்கள்... இவ்வளவுக்கு ஆகியும் கூடப் பெண்ணாசை அடியோடு ஒழியவில்லையே. ஆமாம், சமயங்களில் நினைவு வரத்தான் செய்யும். அதற்குத்தான் ஒரு இக்குவைத்துப் பாடியிருக்கிறீர்களே -
நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல விலை மாதருண்டிந்த மேதினியில் - என்று. அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்புத்தி! ஏஞ்சாமி, விலைமாதர்தான் தங்களுக்குப் பிடிக்குமாக்கும்... கொல்லைப்புற மாங்கனிகளில் விருப்பம் இல்லையோ? ஆமாம், அது சரிதான். சந்தைக் கடைச் சரக்கின் ருசியே அலாதி. அதுதான் இழுத்த இழுவைக்கெல்லாம் ஒத்துவரும். ம்ம். வயது காரணமாய் வரும் நரம்புத் தளர்ச்சி... உடல் வலு மருந்து... இதில் கூச்சம் என்ன, சாமி. எல்லாருக்கும் உள்ளதுதான். எனக்குத் தெரிந்தவரையில் இதற்கு ராஜ மருந்து ஒன்றே ஒன்றுதான் - மதுரைத் தென்னோலைக்காரத் தெரு நொண்டி வைத்தியரின் ‘மன்மத பாண லேகியம்’ மூன்றே மூன்று டப்பி. நாளைக்கு மூன்று வேளை - தொண்ணூறு நாள்... யுத்த காலம் சரக்குக் கிடைக்காது. கப்பல் விட்ட பிறகுதான் ஊரிலிருந்து... ம் ம், அதற்கிடையே ஒரு கைபாக மருந்து. டொரியான் பழவாடை தங்களுக்குப் பிடிக்குமோ? சரி, டொரியான் சுளைகளைப் பிழிந்து ரசம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் - கால்படி ரம்புத்தான், பீசாங்மாஸ், மங்குஸ்தான், வாதுமைப் பருப்பு முந்திரிப்பருப்பு, பிஸ்தாப்பருப்பு, குங்குமப்பூ, கற்கண்டு, குல்கந்து, பால், நெய், தேன் இவற்றைச் சம எடையாய் - ஒரு தோலா எடுத்து விழுதுப்பதமாய் அரைத்து, டொரியான் பழச்சாற்றில் போட்டு அடுப்பில் வைத்துப் பாதியாகச் சுண்ட வைத்துக் காலையில் மாலையில் சாப்பிட வேண்டும். வடிவாய் ஒரு மண்டலம். நல்ல பலன் தெரியும்... ம்ம், அது நிற்க, அடிகளாருக்கு வேகுப்பட்டி மைனர் கானா ரூனாவைத் தெரியுமா? அப்பச்சி சாகும்போது சுளைசுளையாய்ப் பத்து லட்சம் வராகன்* வைத்துவிட்டுப் போனார். அவ்வளவும் மூன்றே வருஷத்தில் காலி. கானா ரூனா இப்பொழுது சோழ நாட்டில்தான் - திருக்குடந்தையோ, மயிலாடுதுறையோ நினைவில்லை - ஒரு நாடகக் கணிகை வீட்டில் காலம் தள்ளுவதாகக் கேள்வி. தெரியாதா? மாறன்குடி ‘அத்தறுதி’ முத்துக்கருப்பப் பிள்ளை மகன் திருநாவுக்கரசு? விருதுநகர் ‘குங்குமப் பொட்டு’ உலகளந்த பெருமாள் நாடார் மகன் ராஜரத்தினம்? சாமி தோப்பு ‘உண்டியல் கடை’ ராமையர் மகன் சுந்தாச்சு? இவர்களெல்லாம் கோடம்பாக்கம் குட்டிகளை இழுத்து வைத்துக் கொண்டு உங்கள் ஊர்ப் பக்கம்தானே இருக்கிறார்களாம் - புதுச்சேரி என்றோ காரைக்கால் என்றோ சொன்னார்கள் - இவர்களையும் தெரியாதா?... ஆ, என்னே என் மடமை! இவர்கள் இந்தக் காலத்து ஆட்களன்றோ! தங்களுக்குத் தெரியாதுதான்... அடிகாள் அடிகாள்! என்ன மாயமிது, எங்கே மறைந்தீர்கள்! ஓ, தங்களுக்குச் சித்து விளையாட்டும் தெரியுமோ...
* வராகன் - ரூ. 3.50 டில்லி மட்டக்குதிரை தாவோட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. வலக்கை நெற்றியை வருடிற்று. ஒவ்வொருவரும் வெவ்வேறு வகை. பூம்புகார்த் துறவிக்கு, பெண்ணாகி வந்த மாயப்பிசாசம் கிட்டத்தில் வரவே கூடாது - அதாவது நினைவெழாத நேரங்களில். நினைவெழுந்தால் ‘வீதிக்குள் நல்ல விலை மாதருண்டு’ - நோய்நொடி நச்சுப்பிச்சு இல்லாத நல்ல விலைமாதர் அழகிய இளம் விலைமாதர். வண்டி செர்டாங்வேயில் திரும்பிற்று. நெருப்பணைந்த சிகரெட் நாறியது. வீசி எறிந்தான். வலப்புறத்தில் மலாய்ப் பெண்கள் உரையாடும் இனிய ஓசை. ஆ, அயிஷா அயிஷா அயிஷா. நன்மனம் நல்லுடல் நன்மணம். தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுச் சிலை. மஞ்சள் பட்டு விரிப்பு மூடித் தொங்கிய எண்முக்கு மேசை மீது நீலமணி விளக்கொளியில் பளபளக்கும் வெள்ளிப் பேலாக்கள். செந்நிறந்தேன். சப்ர மஞ்சத்தில் மெய்யுருகி மனமுருகக் குரலுருகும் நாதம் குமுகுமுத்தது. ‘ஒருநாள் தெங்கு முஜாஹிர் மனைவியுடன் பயாஸ்கோப் பார்த்துவிட்டுத் திரும்பினேன் - கணவனை தலாஹ் செய்த சமயம் அது - வாசலில் வெள்ளை வேட்டியும் சந்தன நிறக் கோட்டுமாய் நின்றனை. தலைமுடி கன்னங் கறேரென்று அலைந்தாடியது. முத்துப் பற்கள் மின்னின. அகன்ற விழிகள் என் மார்பை ஊடுருவின. யாரோ இன்னொரு ‘செட்டி’யுடன் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய். அப்பொழுதே என் காதலனைக் கண்டேன். கண்டு கொண்டேன் என் காதலனை, தலைவனை, நாயகனை... ஓ என் கண்ணாளா! என் மார்பாளா! என் ஆணாளா! என்னை மணந்து கொள். சேலை கட்டி, நெற்றியில் சின்னஞ்சிறு குங்குமத் திலகம் இட்டுக் கொள்கிறேன். இந்த ஊர் பிடிக்காவிடின் சொல், சிங்கப்புராவில் போய் வசிப்போம்!... சாயா பூஞா சிந்தா! சாயா பூஞா ராஜா...!’ ‘பெண் மயிலே! முடியாது, முடியாது, முடியாது. நான் தாலி கட்டும் வகையைச் சேர்ந்தவனல்லன். விலங்கு போட்ட தொழுவ வாழ்க்கை எனக்கு ஒத்து வராது. கண்மணியே கேள்; தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மனையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை வெறுத்த மனம் குழம்பித் திரிகின்றேன். பொன்னே மணியே புனை பூங்கோதாய்! என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால் நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருக்கும் வெறுப்பவனின் வெறுப்பு மிக மிகக் கொடிதன்றோ! காரளகப் பெண்சிகாமணியே! நான் மந்தையில் இருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய்! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருங்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன்! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ! மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ! அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...?’ மல்லிகை விளக்கு வரிசைகள் மின்னிய மேக கேசம் தோளில் மார்பில் அலை அலையாய்க் கற்றை கற்றையாய்ப் புரள்கிறது. இனிய மலாய்க்குரல் தேனாய்ப் பாலாய்க் கனிரசமாய் ஒலிக்கின்றது. ‘என் ஆருயிர் அன்பா! என் மார்பிற்குரிய நாயகா! ஊரறிய என்னை உன் இல்லாளாக ஏற்றுக்கொள்... நான் உன்னைப் பன்னீரால் குளிப்பாட்டி என் கூந்தலால் துவட்டி விடுவேன். உன் தலைமுடியை என் விரல்களால் கோதி வாரிவிடுவேன். உனக்குப் பிடித்தமானதைச் சமைத்து என் கையாலேயே ஊட்டிவிடுவேன். உன் வாயில் கண்ணில் நெற்றியில் முத்தி முத்தி முத்தாடுவேன். உன்னை அள்ளி அணைத்து மார்பில் சார்த்திக் கொண்டு பூங்கொடிபோல் என் உடலை அசைத்துத் தாலாட்டுவேன். உன் இமைகளை வருடி உறங்க வைப்பேன்...’ கைகளால் முகத்தைத் துடைத்தான். ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ காரணங்கள். மதுரைத் தெற்கு வெளி வீதி வியாபாரியின் மனைவி உலகறியா மாணவனை ஏமாற்றிக் கற்பழித்ததேன்? அவன் வயதில் மகன் இருந்தான். தகப்பனை உரித்து வைத்தது போன்ற உருவில். வியாபாரியிடம் அப்படி எதுவும் கோளாறு இருந்ததாகத் தெரியவில்லையே. அப்புறம் ஏன்? ஒரு வேளை அவளது பெருந்தீனி - எந்நேரமும் அரைத்துக் கொண்டிருக்கும் வாய் காரணமாக இருக்குமோ? பன்றிபோல் தின்றால் பன்றித்தனம் வருமா... ஆ அந்த மாணவ நாள்கள்... வீட்டிலிருந்து தங்குதடையின்றிப் பணம் வந்து கொண்டிருந்தது. வெண்கலக் கடைச் சந்து நாகமணி, மஞ்சனக்காரத் தெரு சொர்ணம், குயவர்பாளையம் கோகிலராணி என்ற குப்பம்மாள். பணம் குறைந்து போனால் ஒண்ணாம் நம்பர் சந்து மலையாள பகவதிகள் - ஓமனா, பாருக்குட்டி, சரோஜம்மா... திண்ணைகளில் தூணைப் பிடித்துக் கொண்டு வெள்ளை, சிவப்பு, கறுப்புச் சேலைப் பெண்டிர் நிற்பார்கள் - “ஞே! இடவ நோக்கே.” திரும்பிப் பார்த்தால் முடிச்சவிழ்த்த ரவிக்கையின் இரு நுனிகளையும் அகற்றிப் பிடித்துக் கொண்டு ஒளிவு மறைவின்றிக் காட்டுவார்கள். பார்த்துவிட்டுப் பேசாமற் போனால், காறித்துப்பிய வெற்றிலை எச்சில் பின் தொடரும். கண்ணாடி வளையல்கள் குலுங்கி ஒலிக்கக் கைகொட்டி நகைப்பார்கள்; ஏசுவார்கள். கிருஷ்ணன் கோயில் சந்தில் இடப்பக்கம் பள்ளத்தெரு - மாணவர்கள் சூட்டிய பெயர்: டவ்னிங் ஸ்ட்ரீட். ஒரு முக்கில் சாக்கனாக்கடை, மறு முக்கில் பிராமணாள் காப்பி கிளப்பு. வேறு இடங்களில் விலை போகாத தேய்ந்து போன வவ்விகள் பட்டைச் சாராய மணம் கமழ நடுத்தெருவில் நிற்பார்கள். எச்சரிக்கையாகப் போக வேண்டும். சற்று அயர்ந்தால், வேட்டியைப் பிடித்துக் கொண்டு, “பொம்பளைக்கி வகை சொல்லிப்பிட்டுப் போடா, பேடிப் பயலே!” என்று முழங்குவார்கள். தாழ்ந்த பொந்து வீடுகளுக்குள்ளிருந்து டாப்பர் மாமா சண்டியர்ப் படை திமுதிமுவென்று ஓடிவரும்... கிழக்கே செல்லும் தெருவில், அரைக்கால் வாசி திறந்திருக்கும் கதவுகளுக்குப் பின்னே சங்கிலியில் கட்டுண்ட கொச்சி நாய் தென்படும் உயர்ந்தவிலை தாசிவீடுகள். ‘மாமா’ கூறுகிறார்; “பஞ்சத்துக்கு ஆண்டியில்லை; பரம்பரை ஆண்டி. அந்தாந்தக் குச்சிக்காரி* வீடுகள்ள மாதிரி நச்சுப் பிச்சு வியாபாரம் கிடையாது. ஒரு பயமில்லை. காலம்பர வென்னீர் போட்டுக் குளிச்சிப்பிட்டுப் போகலாம்...”
* தாசி வகுப்பினரல்லாத, விபச்சாரத்தை வருவாய் தொழிலாகக் கொண்ட வேசைகள். முன் காலத்தில் இவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு ஊருக்கு வெளியே குச்சு (குடிசை) கட்டிக்கொண்டு வசித்ததால் வந்த பெயர் பிறகு மெடான் கொண்டு வேலை. மீண்டும் தாயகம். மேல மாசி வீதியில் முத்துநாயகி - தாசி மகள் தாசி. “ஒங்களுக்கு ராவ்சாகிப்...த் தெரியுமா... எம் மேல் அவருக்கு உயிர். மதுரைக்கு வந்தால் என்னைப் பார்க்காமல் போக மாட்டார். ஒன் மினிட். ஒரு இம்சையில்லை. பச்சை நோட்டு டோக்காய் வந்து விழுந்திரும்... ம்ம்... நீங்ய என்ன செட்டியாரா...? கோவிச்சிக்கிடாதிங்ய. சிங்கப்பூர் வேட்டி போல இருக்கேன்னி கேட்டேன்.” “நாடார்.” “ஐயையோ! நா டா ரா! அப்பவே சொல்லக் கூடாதா... சக்குன்னு கட்டில்ல வந்து உட்கார்ந்துக்கிட்டு கூசாமல் சொல்றிங்களே. என்ன பண்ணுவேன்... ஹம்கூம்... ஒங்களுக்குச் சிரிப்பாயிருக்காக்கும், ஏன் இருக்காது... ம்ம்... நீங்யளும் வந்திட்டிங்ய, என் மனசுக்கும் பிடிச்சுப் போச்சு...” குறும்புச் சிரிப்புடன் கன்னத்தைக் கிள்ளினாள். “அப்பவே நினைச்சேன். மேற்படி ஆள் போல இருக்கேன்னி. அம்மா கிண்டிக் கிண்டிக் கேட்கும். வாயை விட்ராதிங்ய. சாதி போச்சு, குலம் போச்சின்னு குதிச்சிப்பிடும் குதிச்சு. இந்தக் காலத்தில் சாதி குலமெல்லாம் பாக்க முடியுதா...? கீழே போய்ப் பால் பழத்தை எடுத்து வந்தாள். “என்ன... மறந்திருவிங்யளா? அத்தான்! மாட்டேன்னு சொல்லுங்க, ம். மதுரைக்கு வந்தா கட்டாயம் வீட்டுக்கு வரணும். பணமில்லை, அது இதுன்னி வராமல் இருக்கக் கூடாது. பணங்காசு கொடுக்கிறதுக்கெல்லாம் டசன் கணக்கில ஆள் இருக்கு. அத்தான் நான் நல்ல குடியில பிறந்திருந்தால் என்னைக் கட்டிக்கிடுவிங்யளா, ம்ம்? இப்ப இருக்கிறாப்புல எப்பவும் என் மேல ஆசையா இருப்பிங்யளா, ம்ம்...? அத்தான் இங்க பாருங்யளேன். கொஞ்சம் கண்ணை மூடிக்யங்க, ம்... கிச்சுக் கிச்சுக் கீஇஇச்.” அக்குளில் கையை வைத்துக் கிச்சரித்தவளின் அகம் குளிர முகம் மலர்ந்து முறுவலித்தது “பாப்பாவுக்குச் சிரிப்பாணியைப் பாருங்க... என் தங்கப் பாப்பா, என் கண்ணுப் பாப்பா, என் சின்னப் பாப்பா!” கன்னத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டாள். “அத்தான், நான் ஒண்ணு கேக்குறேன், தருறிங்யளா, ம்ம்? உங்களைப் போல எனக்கு ஒரு பிள்ளை தருவிங்யளாம், ம்ம்...?” பிள்ளை இல்லை. பிள்ளைப்பேறு ஆசை மனதை அரிக்கிறது. ஏற்கெனவே மூன்று வீடுகள் வாங்கியிருக்கிறாள். நான்காவது வீட்டுக்குப் பேச்சு நடக்கிறது. வீடு வாசல் இருந்து என்ன செய்ய, பிள்ளை இல்லையே! கோயில் குளம், தேர் திருவிழா ஒன்று பாக்கியில்லை. பார்க்காத டாக்டர் இல்லை; மருத்துவச்சி இல்லை. என்ன பயன்? பிள்ளை உண்டாகவில்லை. பிள்ளை பிள்ளை பிள்ளை. ஒரே ஒரே ஒரு பிள்ளை. ஆசைக்கு ஆதரவுக்கு சொத்துக்குச் சொந்தத்துக்கு ஒரு பிள்ளை. ஆத்தா அழகு மீனா! தாயே ஈசுவரீ! ஒரே ஒரு பிள்ளைதாம்மா... வடக்காவணி, மூலவீதியில் ‘ரங்கூன்’ ராஜசுந்தரி. ரங்கூனைக் கனவிலும் கண்டிராத இவள் பிறந்து வளர்ந்து வாழ்க்கைப்பட்டிருந்த ஊர் பரமக்குடி. பெற்றோர் சூட்டிய பெயர் நாகுலு. பவ்டர் பூச்சையும் மீறித் தலை காட்டும் கரும்புள்ளி செம்புள்ளிகளை அமுக்கி மறைப்பதற்காக, வீட்டுக்குள் நீல மட்டி நிற மின்விளக்குப் போடும்முறையை முதன்முதலாக மதுரையில் புகுத்திய வேசை இவளேயென்று விவரமறிந்த பழம் புள்ளிகள் கூறுவர்... ‘இரட்டை வீட்டு’ முத்துலட்சுமி: “நம்ம வீட்ல எல்லாரும் துணிஞ்சு படியேற முடியாது. உங்களைப் போலத் தரமான மனுஷாள் வந்திட்டால் தாக்ஷண்யத்துக்கு ஒத்துக்கிட வேண்டியிருக்கு...” குன்றக்குடியில் வள்ளிக்கண்ணு. மாடு - பசு மாடு. அமைதி தவழும் மடமை முகத்துடன் எந்நேரமும் அசை போட்டுக் கொண்டிருப்பாள். “பொக்குன்னுப் போங்க. அவுக, செட்டியாருக வருற நேரம்.” “என்ன செட்டியாருகளா?” “ஆமா. யாரு, ஏன், எதுக்குன்னியெல்லாம் சொல்லணுமாக்கும். மூணு பேரு கூட்டாச் சேர்ந்து சாப்பாட்டுக்குக் கொடுக்கிறாக. ஒண்ணாய்த்தான் வருவாக, போவாக. தெரிஞ்சுக்கிட்டிங்யளா? வந்த வழியைப் பார்த்து வண்டியக் கட்டுங்ய, நேரமாகுது.” கப்பலில் பழக்கமானவர்களுடன் சென்னையில் மூன்று நாள். தாலி கட்டிய நாயகர் தெரிந்து ஒதுங்கிக் கொண்டார். சகிப்பாளிக்கு வாழ்க்கைப்பட்டதால் இவள் தட்டுவாணியானாளா, அல்லது தட்டுவாணிக்குத் தாலி கட்டியதால் அவர் சகிப்பாளியானாரா? ஒரு வேளை பேடியாயிருக்குமோ... அல்லது இளமையில் தடம்புரண்ட நெறியில் சென்றதால் உடல் - திறனை இழந்தவரா...? இல்லத்தரசி பிறவித் தட்டுவாணியாகவும் இருக்கலாம். யார் கண்டது... சிகரெட் பெட்டியை எடுத்து, ஒன்றை உருவிப் பற்ற வைத்தான். உடல் உடல் உடலுடலுடல், சீச்சீச்சீ. காயமே இது பொய்யடா, காற்றடைத்த தோற்பையடா. குருதி சதை எலும்பு... அவற்றினாலான, அவற்றைத் தவிர வேறொன்றுமல்லாத, அவற்றின் விலை நிலமாம் அதற்காக... அதைக் கருதிக்கன்வி, படித்துப் பழகி, எண்ணி எழுதி... சீச்சீச்சீ! ஒருத்திக்கொருவன் இருவன் பலவன்... ஒருவனுக்கொருத்தி இருத்தி பலத்தி... சீச்சீச்சீ. நாய்போல் பன்றிபோல், குருதி சதை எலும்புடல். ஊத்தைக்குழி, மெய்யுணர்வற உழைத்திடும் கனகலவி... உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு விளைந்த பாண்டம். ஊத்தைக்குழிக்குள் இருக்கும் போது மூக்கைத் துளைக்கும் நெடி. அது உருண்டு திரண்டுருப் பெற்றுக் குழவியாகிப் புவியில் விழுந்து மடியிலேறி மழலை மொழியும்போது நன்மணம் நன்னாதம் பேரின்பம். முதலில் ஊத்தைக்குழிச் சாக்கடையில் நெளியும் புழு. பிறகு பேசும் பொற்சித்திரப் பிள்ளைக் கனியமுது. கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும் சொல்லாலுருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தன். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும் மயக்குறு பாலகன். தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் புதல்வன். மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற் கேட்டலின்பம் செவிக்கு... எங்கிருந்து வந்தான்? சீச்சீச்சீ. ஊத்தைக் குழியில் உண்டாகி உருவாகி உடல் பெற்று வெளியாகி வளர்ந்து பார்த்துக் கேட்டுப் படித்துத் தெரிந்து, அதையே விரும்பி ஏங்கித் துணிந்து, அதிலேயே மூழ்கி, முனகி, முயங்கி, ஆழ்ந்து தேய்ந்து நைந்து,
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தமசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒருகை தடிமேல் வர மகளிர் நகையாடி தொண்டு கிழவனிவனாரென இருமல் கிண்கிணென முனுரையே குழற விழி துஞ்சு குருடுபடவே செவிடுபடு செவியாகி நொந்து, தரையில் விழுந்து, ஊர்ந்து, புலம்பல் மொழிந்து, புலன்கள் அழிந்து, கிடை சடமாகி... சவம்... பிறகு?
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கிநினைப் பொழிந்தார்களே சரி. வரவு செலவு நேர். கணக்குத் தீர்ந்தது... சாடோ ஓடிக் கொண்டிருந்தது. “பிரெந்தி” வண்டி நின்றது. இறங்கிக் காசு கொடுத்துவிட்டுத் தென்புறப் பிலித்தோன் தெருவில் புகுந்து நடந்தான். வேலைக்காரி கதவைத் திறந்தாள். மாடிப் படிக்கட்டில் காலடி இறங்கி வரும் ஓசை கேட்டது. மல்லிகை மணம். அயிஷா... “சாயா பூஞா சிந்தா! சாயா பூஞா ராஜா!” தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுச்சிலை அணைத்திறுக்கிக் குமுகுமுத்தது. புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|