உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அரும்பு 13. கடற்கூத்து அன்று நாலாவது நாள். புகையிலைச் சிப்பங்களின் மீது பச்சை ரெட்டை விரித்தமர்ந்து ‘504’ சீட்டு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். “அவனுக்குப் பெரிய சீட்டப்பா” பனியனைக் கழற்றிக் கொண்டே சண்முகம் பிள்ளை குறிப்பிட்டார். “என்னங்காணும் பெரிய சீட்டு. ஆனைக்குப் பிறந்ததோ!” கிண்டலும் நையாண்டியும் கலந்த பேச்சு ஒன்றையொட்டி மற்றொன்றாய்க் கிளம்பி கலகலத்தது. திருப்பத்தூர்க்காரர்களின் நையாண்டி முறையே தனி வகை. பேச்சில் தடிச் சொற்கள் அறவேயின்றி, வார்த்தைகளை வளைத்திழுத்து நீட்டும் வகையாலேயே விறுவிறுப்பை ஏற்றுவார்கள். அவர்களின் பேச்சு நயத்தை அந்த ஊர் ‘கார் ஸ்டாண்ட்’டில் கேட்க வேண்டும். கார்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் நிற்கின்றன. ‘கார் ஏசண்டுகள்’ காதில் பென்சிலும் ட்ரிப் ஷீட்டுமாய்ப் பீடிப் புகையுடன் திரிகிறார்கள். வாய்கள் கார் ஸ்டாண்ட் ராகத்தில் கூவுகின்றன. “குன்னடி - காரடி - தேவோட்டை! தேவோட்டை!” “சிங்கம்பிடாரி - கொட்டாம்பட்டி - நத்தம்! நத்தம்” உசேன் கடைக்குள்ளிலிருந்து ஓடிவரும் வண்டு மீசை கானா ரூனா கத்துகிறார்: “விலகு! விலகு! ஒன் டன் ராயல் மெயில் வருது. புதுக்கோட்டை போறவுகெல்லாம் ஓடியாங்க. அஞ்சு நிமிசம்தான் டயம் இருக்கு.” கண்ணாயிர விலாஸ் கார் வந்து நிற்கிறது. டாப்பில் ஆள் உயரத்துக்கு அடைத்துக் கட்டிக் கிடக்கும் மூட்டைமுடிச்சு சட்டிபானைகளைத் தூக்கித் தரையில் வீசுவதற்காக ‘கிளீனர்’ மேலே ஏறுகிறார். டிரைவர் சுல்தான் கீழே தாவி ஏசண்டின் முதுகில் ஓர் பூசை போடுகிறார். “இந்நேரத்திலேயே கண்ணு ரெண்டும் டேஞ்சர் போடுதே. மச்சான்! என்ன சேதி!” என்ற கேள்வியுடன். “கானா ரூனாவுக்கு வயிறு ஒரு மாரியா மக்கர் பண்ணதுல. அதுதான் காலையில காலையில முதல் வேலையா நடுமரத்துக் கசாயம் சாப்பிடுறாக!” என்ற இரக்க பாவத்துடன் குறிப்பிடுகிறார் அருகில் நிற்கும் நாடக ‘கண்ராக்கிட்’ நல்லகுடியான் சேர்வை. முறுக்கு, சீவிய இளநீர், வாழைப்பழச் சீப்புத் தட்டுகளுடன் சிறுவர்கள் காரைச் சூழ்ந்து கொண்டு வியாபாரக் கூச்சல் கிளப்புகிறார்கள். வடமேற்கு மூலைக் கீற்றுக் கொட்டகைக் கடையிலிருந்து தகரத் தாளத்துடன் நொண்டி முத்தையாவின் வணிகப் பாட்டுக் கிளம்புகிறது: சாவன்னா லேனாக் கலரு - ஐயா, சாப்பிட்டுப் பார்த்துப் போங்க, ஐசு போட்டுத் தாறேன் - ஐயா, அச்சாவான கலரு...” “பெரியவுகளே, எங்கெ போகணும்?” “நத்தம்” “என்னது, நத்தத்துக்கா? இந்தாங்கப்பு, நத்தத்துக்குப் போறவுக இதில் ஏன் கட்டி ஏறுறிங்ய? அந்தாந்தப் புளிய மரத்தடியில் நிக்கிது பாருங்க, ஓட்டை ராட்டுக் குப்பைவண்டி, அதுல போயி விழுங்க... நத்தத்துக்குப் போறாகளாமுல நாத்தத்துக்கு.” தரையில் குந்தி உட்கார்ந்திருக்கும் சிவகங்கை கார் ஏசண்டு மீராசா, விரல்களால் நசுக்கிக் கொண்டிருந்த பீடியை வாயில் வைத்துக் காம்பைக் கடித்துத் துப்பி விட்டுப் பற்ற வைக்கிறார். “நத்தத்தில நாய் சவதமும்பாகளே, கொள்முதலுக்குப் போறாகளோ அவுக” தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டே குறிப்பிடுகிறார், பாகனேரி கார் ஏசண்டு வீரப்பன். “எதுக்குப் போறாகளோ போக்கத்தவுக. முதமுதல்ல வந்து சைத்தான் போல ஏறி இறங்கீட்டாக. இன்றைக்கி வசூல் கிசூல்தான்... நத்தத்துக்குப் போறாகளாமுல நாத்தத்துக்கு... கர்ர்ர்” காறித் துப்பிவிட்டுப் பீடியை வாயில் வைத்துக் கண்ணை மூடிச் சுண்டி இழுத்து ஊதுகிறார். “நத்தத்துக்காரவுக போற ஜோரைப் பாருங்க மாப்பிள்ளை” பாகனேரி ஏசண்டு மடியை அவிழ்த்துப் பீடிக்கட்டு நெருப்புப் பெட்டியை எடுக்கிறார். “செவி ரெண்டும் கசாப்புக் கடைச் சிங்கத்துக்குப் போல நட்டமாய் நிக்கிது.” “மீராசா! அட பலே! அங்கே பார்ரா, சோவன்னா மானா போற போக்கை. கிஜுஜு கிஜுகிஜுனு போட் மெயிலாட்டம் பரிஞ்சு போறாக.” வந்தேமாதரம் ஐயர் கிளப்புக் கடையை அடுத்த நாகப்பன் ‘பெட்டிக்கடை’க்கு முன்னால், வெற்றிலைச் சிவப்பு வாயில் மட்டைப் புகையிலையைத் திணித்தவாறு நின்ற டிரைவர் ஆணிமுத்து சேர்வை கத்துகிறார். “அவுக போயிட்டுப் போறாக, மாமு, பாவம்! வைக்கல் திங்கிற வயசு. தொழுவத்துக்குக் கிளம்பீட்டாக போலயிருக்கு.” “போங்க போக்கழிஞ்சவுகளே!” ‘சொல்மாரி’ சோமசுந்தரம் பிள்ளையின் பார்வை மீராசா பக்கம் திரும்ப, அவரது மணிநாதக் குரல் ஒலிக்கிறது. “ஏன் மான ரோசத்தை வித்துப்பிட்டு இங்கின நாலு பேர் நல்லவுக பெரியவுக வருகிற பிளேஸ்ல வந்து பப்பரப்பான்னிக் கப்பைப் பிளந்துக்கிட்டு இருக்குறிங்ய? சிங்கம்பிடாரிக் கோயில் மாடுபோல பூமிக்கிப் பாரமாய்த் திரிஞ்சது போதும். மணமேட்டுப்பட்டிப் பம்பையனுக்கு மட்டையடிக்க ஆள்வேணுமாம்; அங்கெ டேராவைத் தூக்குங்க.” “சோவன்னா மானா! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என் மருமகளைக் கொழும்புக்குக் கப்பலேத்தி விட்ருங்க.” “அபிசீனியாச்* சக்ரவர்த்தி அங்கெ சாயாக்கடை போட்ருக்காராம். அவர்ட்டப் போயி சிங்கிள் அடிக்யட்டும். அப்படியாவது நல்லது வழிக்கு வாறாகளான்னிப் பார்ப்பம்.”
* அபிசீனியா இத்தாலி வசமானதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி சக்ரவர்த்தி ஹெய்லி செலாசி கொழும்பு நகரில் ரெஸ்ட்டாரண்ட் வைத்து நடத்துவதாக செய்தி வெளியாகியிருந்தது. “இவுக அங்கெயெல்லாம் போனால், குச்சித் தாடியும் குல்லாத் தொப்பியுமாய் மாறிப் போவாக. கொட்டடிச் சேலையை இடுப்புல சுத்தி, மஞ்சள் சட்டையும் பச்சைக் கோட்டுமாய் வந்தாகன்னா, நம்ம சீதளிக்கரை சக்கரை ராவுத்தர் மகனா, இல்லை. ஐதராபாத் நிஜாம் பகதூரான்னிச் சந்தேகமாய்ப் போகும். பம்பையன்கிட்ட ரெண்டு மாசம் மட்டை அடிக்யட்டும் அப்புறம்...” கிளப்புக் கடைக்குள்ளிருந்து இடுப்பில் எண்ணெய் அழுக்குத் துண்டும் முகத்தில் பத்துநாள் ரோமமுமாய் வெளியேறிப் பெட்டிக்கடையை நோக்கி நடக்கும் சரக்கு மாஸ்டர் மணி ஐயரின் வாய் முனகுகிறது: ‘அட யாரப்பா இந்நேரத்தில் சொல்மாரியா பிள்ளைக்கிச் சாவி கொடுத்தது. லேசில நிறுத்த முடியாதே.’ “அவுகளைப் போகவிடுங்க, மாமு. களனித் தண்ணி குடிக்கிற நேரம். நீங்ய ஒரு பக்கம் அமயம் சமயம் தெரியாமல்...” “எலும்பை ஒளிச்சு வச்சிப்பிட்டு இடம் தெரியாமல் நின்னு ஊளையிட்டவுகளே! பின் குஞ்சத்தை மடக்கிக்கிட்டு ஓடுங்க. அந்தா! யூனியன் ஆபீஸ் எமதூதர் பாசக்கயிறும் தடிக்கம்புமாய் ஓடியாறார். சுணங்குனிங்களோ, அப்புறம் உங்களைச் ‘சந்தாக்’குல ஏத்த வேண்டியதுதான். கழுத்து வில்லையைக் காணமே. எங்கே? சரி சரி, மேற்படி சாமான்னிக் கடிச்சுத் தின்னுப்பிட்டிங்யளாக்கும். ம்ஹ். நீங்யெல்லாம் தலையெடுத்து ட்ரிப் சீட்டைப் கையில தூக்கப் போயித்தானே கார்க் காரங்யன்னால் பெண்பரசுக காறித் துப்புது. மானாமதுரைச்* சீனி உங்க வண்டவாளத்தை எல்லம் பிளேட்டில அவுத்துவிட்டும் புத்தி வரலையே...! நீங்ய செய்யிற அக்கிரமம் பொறுக்காமல் மழையும் சத்தியாக்கிரகம் பண்ணுது. அரிசி ரூபாய்க்கு நாலே முக்கால் படியாப் போச்சு. மதுரைக்கு வடக்கே பொம்பளை...”
* ஹார்மோனிஸ்ட் சீனிவாசகத்தின் இசைத்தட்டுப் பாட்டு: மோட்டாரில் டிக்கெட் போடும் ஏசண்டுகள் மோசம் கேளடி - பெண்ணே, மோசம் கேளடி. மூட்டை - முடிச்சுகளுடன் வந்தவரின் கேள்வி குறுக்கிட்டது... “என்னப்பு... சிவசங்கை போற காரா? கார் என்னத்துக்கப்பு. காரு... நான் சொல்றதைக் கேளுங்க. ஒண்ரத் துட்டுக்குப் பொரிகடலை வாங்கி மடியில கட்டிக்கிட்டு, காலை ஓர் உதறு உதறிக் கைய வீசி நடையைக் கட்டுங்க... “சிவசங்கை! சிவசங்கை! வண்டி புறப்படப் போகுது. ரெண்டு நிமிசம்தான் இருக்கு.” மீராசாவின் வாய் உச்சக் குரலில் கத்துகிறது. “சிவசங்கை! சிவசங்கை! ஓடியா ஓடியா!” “பொடி நடையாய்ப் போனால், பொழுது சாயிறதுக்குள்ள சிவசங்கை எதுக்க வந்து நின்று கூப்பிடும். கார்க்காரங்ய சாவகாசம் நமக்கு வேண்டாம்ப்பு. அவங்ய தள்ளு மாடல் தகர டப்பாவுல ஏறுனிங்யளோ, அம்புட்டுத்தான்.” வலக்கை சிவகங்கை சாமிநாத விலாஸ் காரையும் மீராசாவையும் சேர்த்துச் சுட்டுகிறது. “ஆலமரத்துப் பொட்டல் போனதும் ‘லாடம்’ கட்டணுமுனு வண்டிய அவுத்துப் போட்ருவாங்ய. அப்புறம் நீங்ய முழங்காலைத் தலைக்கு வச்சுக்கிட்டு ஒரே உறக்கமாய் உறங்க வேண்டியதுதான்... அப்பூ... சொல்றதைக் கேளுங்கப்பு...” கொளுத்திக் கொண்டிருந்த வெயில் இமை நேரத்தில் மறைந்து விட்டது. புழுங்கிற்று. பாண்டியன் எழுந்து போய் அண்ணாந்து பார்த்தான். மேகப் பொதிகள் பரந்து திரண்டொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம். எதிர்க்கோடியில், வானையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தவாறு கப்பித்தானுடன் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் திடுமெனப் பாய்மரத்தை நோக்கி ஓடிச்சென்று கட்டுக் கயிறுகளை இறுக்குகிறார்கள். விவரிக்க இயலாத ஓர் உறுத்தல் ஒவ்வோர் உணர்விலும் பட்டது. எல்லோரும் எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மிரண்டு விழித்தனர். கிடுகிடுக்கும் இடிமுழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. அதேசமயம், மதிப்பிட முடியாத விரைவும் பளுவும் கொண்ட மோதல் தொங்கானையும், அதிலிருந்த நடப்பன கிடப்பனவற்றையும் உலுக்கிற்று, வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது. சூறாவளி. மாரியும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன. அலையோட்டம் தெரியவில்லை. வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான் தாவிக் குதித்து விழுந்து பம்பரமாய் சுற்றுகிறது. வலப்புறம் இடப்புறம். வலப்புறம் இடப்புறம். அப்படியும் இப்படியுமாய்த் தாவிக் குதித்து விழுந்து திணறித் தத்தளிக்கிறது. எலும்புகள் முறிவதுபோல் நொறுநொறு நொறுங்கல் ஒலி. தலைக்குமேல் கடல்... சாகிறோம் சாகப் போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு. இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம்... எங்கிருந்தோ தொங்கிய வடக்கயிற்றை வலக்கையால் பற்றிக் கிடந்தான். அருவியருவி உப்பருவி கடலருவி. மற்றவர்கள் எங்கேயெங்கே. மின்னொளி, கப்பித்தான் பொந்து, தாவும் பேயுருவங்கள், சுறாமீன், ரம்பப்பல், காற்றோலக் கடல் சீற்ற மழை. உடலயர்வுப் புலன் மயக்கம், தொங்கான் சுழன்று மலைத்துக் குதித்துக் கூத்தாட்ட மருளாட்டப் பேயாட்டம். நொறு நொறு நொறுங்கல் ஒலி. மூழ்கி முக்குளித்து மீன்கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாகிறோம். சாகப் போகிறோம் சாகமாட்டோம் சாகிறோம்... திடுமென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்துத் தென்பட்டன. பலகை அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான் கத்துகிறான்: “ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்!” பாண்டியன் எழுந்தான். எங்கெங்கோ இடுக்குகளில் முடங்கிக் கிடந்த உருவங்கள் தலை தூக்கின. தொங்கான் தள்ளாடுகிறது - அலைகள் - மலைத்தொடர் போன்ற அலைகள் மோதித் தாக்குகின்றன. தட்டுத் தடுமாறி நடந்தோடினர். வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்று கூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீக் கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக் கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப் போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு. முகத்தில் வெள்ளம். உடலில் வெள்ளம். கால் கையில் வெள்ளம். உடை உடலை இறுக்கிறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. சாவு சாவு சாவு. மரத்தூண் கல்தூண் இரும்புத்தூண் உயிர்த்தூண். தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு கும்மிருட்டுக் குருட்டிருட்டு. கை கை கை கடலில் மிதக்கிறது. சிலுசிலு மரமரப்பு, ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங். இடிமுழக்கச் சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. மூடைகள் சிப்பங்கள் நீந்தியோடி மறைகின்றன. தொங்கான் குதித்து விழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. கழன்று கிறுகிறுத்துக் கூத்தாடுகிறது. கடலலை அடிக்கிறது... என்னயிது! சூரிய வெளிச்சம்! சூரியன் சூரியன் சூரியன்... தொங்கானில் நீர் நெளிகிறது. பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. பொத்துக் கொப்பளிக்கும் பவ்வ நீரை மாலுமிகள் இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைக்கிறார்கள். ஆப்பு அடிக்கிறார்கள். மரம் வெட்டுகிறார்கள், செதுக்குகிறார்கள்... தொங்கானின் இருபுறமும், பின்னேயும் தேயிலைப் பெட்டிகளும், புகையிலைச் சிப்பங்களும் மிதந்து வருகின்றன. பாண்டியன் நாற்புறமும் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை. தொடங்கிய போதோ, முடிந்த போதோ, முடிந்து வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்த போது எல்லாக் கடிகாரங்களும் நின்று போயிருந்தன. தொங்கான் தன் வசமின்றித் தடுமாறிச் செல்கிறது. கடற் கூத்தின்போது மாலுமிகளால் தூக்கி எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும் மூடைகளும் மிதந்து உடன் வந்தன. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முற்றாகத் தெளிச்சி பெறவில்லை. கப்பித்தான் ஐ லியாங் தனது பொந்துக்குள் புகுந்து சண்டு புகைத்துக் கொண்டிருந்தான். பினாங் எவ்வளவு தொலைவில் இருக்கிறது. எப்போது போய்ச் சேரலாம்? பதில் சொல்வார் யாருமில்லை. இரவில் மேல்தட்டுக்கு வந்து கப்பித்தான் வானையும் கடலையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டுத் தலையைச் சொறியலானான். பாண்டியன் நெருங்கிச் சென்று நிலவரத்தைக் கேட்டான். கப்பித்தான் சீனமும் மலாயும் கலந்த மொழியில் சொன்னான்: “இனிமேல் பயமில்லை. இரண்டு நாளில் கரையைப் பார்க்கலாம்.” அன்றிரவு யாரும் உண்ணவில்லை; பேச்சாடவில்லை. மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய், முந்தியதைத் தொடர்ந்த பிந்தியதாய் வந்து மொத்து மொத்தென்று தொங்கானை மோதின. பறவை - மீன்கள் - இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின. தொங்கான் மிதந்து சென்றது. கடலின் இழுவைக்கிணங்கி. பகல் இரவாகிப் பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம் சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது. அவுலியா மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகளென முனகல் ஒலியோடு பின் தொடர்ந்தன. அலைகள் நெளிந்தோடின. கடற்கூத்துக்குப் பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய்க் கடலோடு கடலாய் மரப் பச்சை தெரிவது போலிருந்தது. சுமார் அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடி படகின் விளக்குகள் தென்பட்டன. கரை! கரை! கரை! அடுத்த நாள் முற்பகலில் பினாங் துறைமுகத்தை அணுகினார்கள். மணிக்கூண்டு தெரிகிறது. வெல்ட்கீ கட்டிட வரிசை. தெருவில் திரியும் வண்டிகள், ஆட்கள்... தொங்கான் கரையை நெருங்கிப் போய் நின்றது. தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன. ஒவ்வொன்றிலிருந்தும் கேள்வி எழுந்தது. “எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?” “பிலவான்... பிலவான்.” சுமத்ரா பிரயாணிகள் துடுப்புப் படகில் இறங்கிப் போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச் சென்று பிரயாண அனுமதிச் சீட்டுகளை நீட்டினார். “தமிரோ?” ஜப்பானிய அதிகாரி உறுமினார். “யா, மஸ்தா” தமிழர்கள்தாம் என்று தலைகுனிந்து வணங்கித் தெரிவித்தனர். பிரயாணிகளைச் சில விநாடிகள் நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில் முத்திரை வைத்துத் திருப்பிக் கொடுத்தார். மார்க்கெட் தெரு வழியாகச் சென்று செட்டித் தெரு என்ற பினாங் ஸ்ட்ரீட்டில் நுழைந்தனர். தெருவில் இரண்டொருவர் நடமாட்டமே தெரிந்தது. சீனி முகமது ராவுத்தர் கடைக்குக் கிளம்பினான் பாண்டியன். குவீன்தெரு சீனாக்காவன்னா கடைக்குப் போவதாகக் கூறினர் ஆண்டியப்ப பிள்ளையும் நல்லகண்ணுக் கோனாரும். மற்றவர்கள் மானரூனா கடையில் போய்க் கலந்து பேசிய பின், சரக்கை எங்கே இறக்குவதென்று முடிவு செய்யவிருப்பதாகச் சொன்னார்கள். “சோத்துக்குமேல் எல்லாரும் அங்கிட்டு வாங்க. கடல்ல போனதை அவுகவுக சரக்குக்கு மதிப்புப் போட்டு ஈவிச்சிக்கிடுவம்” ஆண்டியப்ப பிள்ளை வடக்கே நடக்கலானார். “அதுக்கென்ன, அப்படியே செய்துக்கிறது” எல்லார் பதிலையும் சேர்த்துச் சண்முகம் பிள்ளை கூறினார். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|