உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 28. அணுகுண்டு செக்யூரிட்டி செர்விஸ் அலுவலாய் இந்தோசீனாவுக்குப் போயிருந்த பாண்டியன், சிங்கப்பூர் திரும்பினான். யுத்த நிலைமை கடுவிரைவாய் மாறிக் கொண்டிருந்தது. ‘மார்ஷல் இவான் கோனேவ்’ சேனைகள் தெற்கிலும், ‘மார்ஷல் கொன்ஸ்தாந்தின் ரொகொசாவ்ஸ்கி’ சேனைகள் வடக்கிலும் இணைந்து வர, மார்ஷல் ஜியார்ஜ் ஜுக்காவ் படை வெள்ளம் ஜெர்மனிக்குள் நுழைந்து பரந்துபோய் ஓடர் ஆற்றங்கரையை அடைந்தது. ஓடர் முகப்பிலிருந்த ஜுக்காவ்வின் சுரங்கத் தலைமையகத்துக்கு மேலே பச்சை - மஞ்சள் - சிவப்பு வர்ணங்கள் மும்மூன்றாக மும்முறை வானை நோக்கிப் பிரிந்து சென்றன - பெர்லின் நகருக்கான போர் தொடங்கி விட்டது. டாங்கி - ராக்கெட் - பீரங்கி - விமான அணிகள், ஜெர்மன் படை வரிசைகளையும் தலைநகரையும் தகர்த்தெறிந்து கொண்டிருக்கவே, ‘ஸ்டாலின் கிராட் சூரன்’ சுய்க்கோவ்வின் தெருச்சண்டை வீரர்கள் பொத்துப் புகுந்து நகர நடுமையத்தை அடைந்தனர். அடால்ஃப் ஹிட்லரும் அவருடைய பல்லாண்டு வைப்பாட்டி - ஒரு நாள் மனைவி எவா பிரவ்னும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். பெர்லின் நகரம் ஜெனரல் வாசலி சுய்க்கோவிடம் அடிபணிந்தது. ஜப்பானிய நகரங்களைத் திட்டமிட்டு நொறுக்கி எரித்து வந்த அமெரிக்க விமானப் படை, ஹிரோஷிமா நகர்மீது ஓர் அணுகுண்டை வீசிற்று. அதை அடுத்து ரஷியாவும் ஜப்பான்மீது போர்ப் பிரகடனம் செய்தது. பிறகு, நாகசாக்கி மீது ஓர் அணுகுண்டு... ஜெனரல் மெக்கார்தரிடம் ஜப்பான் அடிபணிந்தது. கர்னல் கலிக்குஸுமானிடமிருந்து அழைப்பு வந்தது. கத்தே மாளிகையை அடைந்து மேலே சென்றான். இன்னும் சில நாள்களில் கட்டிடத்திற்கு உரியோர் திரும்பி விடுவார்கள். அதன்பிறகு மூவர்ணக் கொடியையும், நேதாஜியின் வீர உருவப் படத்தையும், இந்திய தேசிய ராணுவ வீரர்களின் காலடி ஓசையையும் குறிச்சொல் முழக்கத்தையும் இங்கே காணக் கேட்க முடியாது... “ஆ, பாண்டியன்!” நாற்காலியிலிருந்து எழுந்து வந்த கர்னல், பாண்டியனின் கையைப் பற்றினார். “என்னுடைய வேலை முடிந்து விட்டது. கப்பலேற வேண்டியதுதான் பாக்கி!” மேசைக்கு வடக்கே கிடந்த நாற்காலியைச் சுட்டிவிட்டுத் தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார். பாண்டியன் உட்கார்ந்தான். கர்னல் சிகரெட் பெட்டியை நீட்டினார். இருவரும் புகைக்கலானார்கள். தலைக்கு மேல் சுழன்ற மின்விசிறி கிரீச்சிட்டுக் கொண்டிருந்தது. “நேதாஜி உன் சேவையைப் பாராட்ட விரும்பிக் கட்டளை பிறப்பித்திருந்தார். அது இப்போது நடப்புக்கு வருகிறது.” எழுந்து, பெட்டகத்தை திறந்து, அரக்கு முத்திரையிட்ட பெரிய பச்சை உறை ஒன்றை எடுத்து மேசைமீது வைத்து அமர்ந்தார். “பணம்?” “ஆம். பழைய புலி டாலர். இனிமேல் நாணயமாய்ச் செல்லக் கூடிய பணம்; வலுவான பணம். அவர்கள் - சப் ஆபீசர் நடராஜன், ஹவில்தார் கருப்பையா இருவருக்கும் தனித்தனியே, கொஞ்சம் பழைய பணம் கிடைக்க நம்பிக்கையான ஆள் மாறலாய் ஏற்பாடு செய்திருக்கிறேன்.” “நன்றி கர்னல் சாப். இது நம் நெப்போலியனின் பொறுப்பாக இருந்தால், அப்படியே அமுக்கி இருப்பார்.” “இளைஞனே, நாணயமா - பித்தலாட்டமா என்பது ‘தேவை’களின் நெருக்குதலைப் பொறுத்தே முடிவாகிறது. ஆகவேதான் ‘தேவை’களைக் குறைத்துக் கொள்ளும்படி ஞானியர் கூறிப் போந்தனர்... தேவையல்லாதவற்றை வாங்குபவன் தேவையானவற்றை - அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரும்... தேவைகளைக் குறைத்துக் கொண்டால் பலருக்குப் பல தொல்லைகள் நீங்கிவிடும்.” “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” - ஆங்கில மொழிபெயர்ப்பை ஒப்பித்தான். “ஆ, டிருக்குரால்! நானும் படித்திருக்கிறேன், டிருவால்லவர் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு ஆராய்ந்திருந்த ஆள். நான் மொழிபெயர்ப்பில் படித்ததுதான். டாமில் படித்து டாமில் டிருக்குரால் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது... அது நிற்க. இன்னொரு விஷயம்.” கர்னல் மேசைச் செருகைத் திறந்து, ஜப்பானிய டாலர் நோட்டுக் கத்தைகளை எடுத்து நீட்டினார். வாங்கிக் கொண்டான். “மவுண்ட்பேட்டன் வரும்வரை இதுவும் ஓரளவுக்குப் பணம்தான். பிறகு துண்டுக் காகிதம். அந்த நோட்டுகளைப் பத்திரமாய் வைத்துக்கொள். இதை நோக்கம்போல வீசி எறிந்து காலிசெய்.” “செல்லுபடி என்பது செலுத்துவோனின் வலுவைப் பொறுத்தது. வலுவிருந்தால் காகிதம் ‘பணம்’ ஆகிறது. வலுக்குறைந்தால் ‘பணம்’ காகிதமாகி விடுகிறது. ‘செல்காலம் எல்லாம் செலுத்தினோம், அல்காலம் கல்லனோம் செம்பானோம் கான்.” “அதென்ன, செய்யுள்?” “தமிழ்ப் பாடல் ஒன்றின் வரிகள். தெய்வங்களுக்கும் செல்காலம், அல்காலம் என்று உண்டென்கிறான் ஒரு தமிழ்ப் புலவன்.” “ஆம், நாம் படைத்த தெய்வங்களுக்கு நமக்கான விதிமுறைகளே... அது போகட்டும். அடுத்த மாத ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவம் வருகிறது. நான் சிறைபிடிக்கப்படுவது நிச்சயம்.” “நீங்கள் கைதாவதைத் தவிர்க்க முடியாதா?” “எதற்காகத் தவிர்ப்பது? தாயகத்தில் எனது உற்றார் உறவினர் பெரும் பெரும் பதவிகளில் இருக்கின்றனர். பெயருக்குக் கொஞ்ச காலம் சிறையில் இருப்பேன்... உனக்கு தெரிந்திருக்குமே, குற்றம் சாட்டப்பட்ட எளியவர்களிடம் நீதி தேவன் கேட்கும் கேள்வி என்ன?” “நீ குற்றம் செய்யவில்லை என்பதை எனக்குப் பிடித்தமான வகையில் மெய்ப்பிக்க முடியுமா?” “வலியோரிடம்?” “தாங்கள் யார்?” “நான் பாசின்பூர் நவாப் குமாரன். எனது தமையன் மத்திய சாக்கார் காரியதரிசி; தாய் மாமன் ஹைகோர்ட் நீதிபதி...” “ஆ...! அப்படியானால் விடுதலை.” இருவரும் அறை அதிரக் கெக்கலித்துச் சிரித்தனர்! “நேரமாகிறது.” பாசின்பூர் நவாப் ஜாடா எழுந்தார். “பழைய குப்பைகளை எரிக்கும் வேலை மிச்சம் இருக்கிறது. ஆ! என்னிடம் சிக்கியிருக்கும் சில ரகசியக் கடிதங்கள்... எல்லாமே தீக்கிரையாகப் போகின்றன... நெருப்பே வா, வா, வா!” நாடக பாணியில் கைகளை விரித்துக் கூவியவாறு எழுந்தார். “பொய்யையும் புன்மையையும் எரித்துச் சாம்பலாக்க வா, வா, வா!” “அக்கினி தேவன் வருவதற்குள் நான் கிளம்பிவிடுகிறேன்.” சிரித்துக்கொண்டே பக்கத்து நாற்காலியில் கிடந்த பழைய பத்திரிகைத்தாளில் பச்சை உறையையும் ஜப்பானிய் டாலர் கத்தைகளையும் வைத்துச் சுருட்டி எடுத்தவாறு எழுந்தான். “கர்னல் சாப், மிக மிக நன்றி. தங்களின் உயர்வகை நகைச்சுவையையும், பரந்த உலக ஞானத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” “இளைஞனே, நானும் உன்னை மறக்கப் போவதில்லை.” “விடைபெற்றுக் கொள்கிறேன், கர்னல் சாப்.” கை குலுக்கினார்கள். “இளைஞனே, என்னுடைய நல்லாசிகள்.” ***** சைகோனிலிருந்து கிழக்கே, நேதாஜியை ஏற்றிச் சென்ற விமானம் டை ஹோக்கு விமான நிலையத்தில் நொறுங்கி விழுந்து எரிந்து போயிற்று. அந்தச் செயல்வீரன் தீயில் கருகி அந்நிய மண்ணில் மாண்டு மறைந்தார். செப்டம்பர் முதல் தேதி பிரிட்டிஷ் படைகள் பினாங்கில் கரையிறங்கி அக்கரையிலும் பரவலாயின. பாண்டியன் அப்போது அலோர்ஸ்டார் நகரில் வசித்த சில நண்பர்களுடன் தங்கி இருந்தான். வடக்கு மலேயா படை விடுதிகளிலிருந்து வெளியேறிய தமிழர்கள் பலர் பினாங் போய்ச் சேர்ந்திருந்தனர். அங்கே பிரிட்டிஷ் துருப்புகளுக்கும், பட்டாளத்துத் தமிழர்களுக்கும் இடையே சில்லறைச் சச்சரவுகள் தோன்றிக் கொண்டிருந்தன. பினாங்கிலிருந்து வந்த பழனிவேல் சொன்ன செய்தியொன்று பாண்டியனின் மனதில் பெருங்கோபத்தைக் கிளப்பியது. அவன் படையிலிருந்த ஹவில்தார் சுந்தரம் கைக்கூலி வாங்கிக் கொண்டு நண்பர்களைக் காட்டிக் கொடுத்து வருகிறான். மறுநாளே பினாங்குக்குப் போகத் தீர்மானித்தான். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|