முகை

30. பேங்காக்

     பேங்காக் நகரம் கேளிக்கைக் கடலில் மிதந்தது. யுத்தம் காரணமாகச் செழிப்புக் குன்றாத தென்கிழக்காசிய நகரம், இது ஒன்றுதான் போலும். கிழிந்த உடையோ, காய்ந்த உடலோ தென்படவில்லை. பணம் தண்ணீராய்ச் சிந்திச் சிதறியது. ஸ்விஸ் ஃபிராங்க், ஸ்வீடிஷ் குரோனர், அமெரிக்க டாலர் எது வேண்டுமாயினும் கள்ளச் சந்தையில் வாங்கலாம், விற்கலாம். வேறு ஏதாவது வேண்டுமா? எறிகுண்டு, எந்திர பீரங்கி? ஜீப் வண்டி, மோட்டார் படகு? பணம் இருக்கிறதா அசல் பணம், சுண்டினால் ஓசை கேட்கும் பணம்? உடனே வாங்கலாம். கையில காசு, வாயில தோசை. தயவுசெய்து எது, எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள். யுத்தத்தின்போது பல்வேறு நாடுகளில் கொள்ளையடித்து ஒளித்த அரிய நகை நட்டுகளும் கலைப் பொருள்களும் வேண்டுமா? வாருங்கள். மோம் ஆற்றங்கரைக் கடைகளுக்கு. வில்லங்கமான ஆட்கள், பண்டங்களை நாடு கடத்த வேண்டுமா? அங்கேயே ஏற்பாடு செய்யலாம்.

     மேனாம் நதியே நகரின் பெருஞ்சாலை - பெரிய கடைவீதி. பல கால்வாய்கள் - தெருக்கள் - பிரிந்து செல்கின்றன. கடைகள் படகுகளில் மிதந்து திரிகின்றன. மிதக்கும் கடைகளுக்கு மிதந்து வருவோர் பண்டங்களை வாங்கிக் கொண்டு மிதந்தே செல்கிறார்கள். படகுகளில் கவலையறியாத முகங்கள், ஒளிவு மறைவில்லாமல் உரக்கப் பேசிச் சிரித்துச் செல்கின்றன.

     தரைச் சாலைகளில் கார்களும் ஜீப்களும் ட்ராம்களும் ரிக்ஷாக்களும் குழலோசை - மணியோசை கிளப்பி ஊரைக் கிடுகலக்கித் திரிகின்றன.

     பிரிட்டிஷ் துருப்புகள், அமெரிக்க மாலுமிகள், வியட்னாமிய கம்யூனிஸ்டுகள், இந்தொனேசியப் புரட்சியாளர்கள், மாசேதுங்கின் ஆட்கள் இங்குமங்குமெங்கும் தென்பட்டனர். அவர்களிடம் பண நோட்டுகள் கற்றை கற்றையாயிருந்தன. கண நேரத்தில் உருவுவதற்குத் தோதாய் உடைக்குள் ஆயுதம் ஒளிந்திருந்தது.

     இந்தோனேசியர், டச்சுக் கடற்படையின் கண்காணிப்பை மீறிக் கொண்டு வந்த ரப்பர், காபி, தேயிலை, மிளகை விற்று, எறிகுண்டுகளும் துப்பாக்கிகளும் கொள்முதல் செய்து தாயகத்துக்கு அனுப்பும் பணியில் மூழ்கியிருந்தனர். ஒரே அடியில் சுருண்டு விழுவோர் போலிருந்த வியட்னாமியர் பெரும் பண்டங்களில் கவனம் செலுத்தினர் - மார்ட்டர், பசூக்கா, ஜீப். மாசேதுங்கின் ஆட்களோ என்ன செய்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியாத - யாவரும் அஞ்சும் மர்ம மனிதர்களாய் நடமாடினர்.

     பர்மாவிலிருந்து தப்பித் தலைதெறிக்க ஓடி வந்திருந்த மாசானமும் முத்தையாவும், கே.கே. ரேசன் கடை மாடியில் தங்கி இருந்தனர். அவர்களோடு பாண்டியனும் போய்ச் சேர்ந்தான்.

     இன்னொரு கடை - பாண்டியன், முத்தையா, மாசானத்துக்காக - ஆரம்பிக்கலாமென்று ரேசன் யோசனை கூறினான். அவ்வாறே, ‘ஒரியண்டல் ட்ரேடிங் கம்பெனி’ தொடங்கப்பட்டது.

     ஆற்றின் அருகே அமர்த்திய கட்டிடத்தில் புதிய கடை. அகப்பட்டதை வாங்கி விற்றார்கள். பிரிட்டிஷ் துப்பாக்கி, அமெரிக்க டாலர், இந்தொனேசியத் தேயிலை. சில சமயங்களில் பெரிய மீன்களும் சிக்கிக்கொள்ளும் - பீரங்கி, ஜீப், மோட்டார் படகு... பணம் குவிந்தது. வாரி இறைத்தார்கள். கதிரவன் சாய்ந்ததும், அலங்கரித்துக் கொண்டு கேளிக்கை நிலையங்களை நாடிச் செல்லும் மந்தைக் கூட்டத்தில் மாஜி இந்திய தேசிய ராணுவ லெப்டினண்டுகள் நால்வரையும் காணலாம்.

     அன்று ஞாயிற்றுக்கிழமை. காரில் ஊருக்கு வெளியே புறப்பட்டனர். எப்பக்கமும் பச்சை. தென்னந் தோப்புகள், நெல் வயல்கள். குடில்களுக்கு முன் காலை நீட்டி உட்கார்ந்து வெற்றிலை மென்று அசைபோட்டுக் கொண்டிருந்த பெண்கள் கள்ளங்கபடின்றிப் பேசிச் சிரித்து மகிழ்ந்திருந்தனர். சிறுவர்கள் பிரப்பம் பந்துகளைத் தூக்கி எறிந்து, ராகா - ராகா விளையாடினார்கள்.

     திரும்பிய போது நகரம் ஒரே ஒளிமயமாக இருந்தது. எல்லாத் திசைகளிலும் மானிடர் கூட்டம். தென்பட்ட கோலாகல ரெஸ்டாரண்ட் ஒவ்வொன்றின் முன்னும் கார் நின்றது. கடைசியாக, ஏழரை மணிக்கு ‘மூன்லிங்’ போய்ச் சேர்ந்தபோது தலைகள் கனத்திருந்தன. உடலிலே தெம்பு, நடையிலே மிடுக்கு.

     முன்புறத்தில் பிரிட்டிஷ் - அமெரிக்க அதிகாரிகள், சையாமியப் பிரபுக்கள், சீன வணிகர்களின் ஜீப்புகளும் கார்களும் வரிசையாக நின்றன. மரங்களில் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள். உள்ளிருந்து வந்த ஜாஸ் இசை உடலைக் கிளறியது. வண்டிகள் மேலும் மேலும் வந்து நின்றன. அவற்றிலிருந்து தந்தச் சிலைப் பெண்களுடன் - வெள்ளையரும் - உள்ளூராரும் இறங்கிப் பொய்யுரையும் போலிச் சிரிப்புமாய்ப் படியேறி உள்ளே சென்றனர்.

     தமிழர் நால்வரும் தென்புறம் கிடந்த ஆசனங்களில் அமர்ந்தனர். எதிரே, மூவர் நால்வராய் வெள்ளையர் உட்கார்ந்திருந்தார்கள். நடுநடுவே பெண் மின்னல் வீசியது. அவர்களுக்கு அப்பால், வாசலருகே, சீன சையாமிய ஜோடிகள். உள்ளூராருக்கு எதிரே வியட்னாமியர் வரிசை - அவர்களை அடுத்து இந்தொனேசியர் இருவர்.

     மண்டப நடு வெற்றிடத்தில் கறுப்பு லேஸ் அரைப் பாவாடையும் கண்ணாடிப் பட்டுக் கச்சும் தரித்த பொன்னிறப் பெண் உடலை வளைத்து நெளித்துக் குதித்துக் காட்டிப் பாடினாள்.

     யையை யையை யை - யையா
          யா - யையா
     யயியயி யயியயி யயி - யையய
          யா - யையீ

     பன்னிற மங்கல் வெளிச்சக் கலவையில் புகைப்படலம் சுற்றித் திரிந்தது. பிரெஞ்சு அத்தர் வகைகளின் கனமணம் முகத்தோடு ஒட்டி அழுத்திற்று.

     ஆட்டக்காரியை ஒரே பார்வையாய்ப் பார்த்தவாறு இருந்த முத்தையாவின் வாயில் பாட்டுப் பிறந்தது:

     பத்தினியே - என்
     பாவையே ரத்தினமே - நீ
     பத்தினியே யானால் - உன்
     பாவாடை கழன்று...

     “ச்சீ, வாயை மூடுலே! பொம்பளைங்க இருக்காங்க.”

     “என்ன சொன்னாய், மாசானம், என்ன சொன்னாய்? ஓ! பெண்கள், பிரம்புவன், விமன்.”

     துணிச் செருப்பின்மீது பூனைபோல் வந்த பணியாள், வாயை வலக்கையால் அணைத்தவாறு குனிந்து, கட்டளை என்னவென்று கேட்டான். ரேசன் பட்டியலைக் கூறினான், முதலில் பானம்.

     கறுப்பு உடைக்காரியின் ஆட்டபாட்டம் முடிந்தது. அடுத்த நிகழ்ச்சிக்கு முந்திய இடைவெளி நேரத்துச் சையாமிய மெல்லிசை, வாத்திய மேடையிலிருந்து கிளம்பிக் கீச்சிடலாயிற்று.

     ரேசனின் வெறிப் பார்வை, நேர் எதிரே சையாமிய நங்கை ஒருத்தியுடன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காப்டன்மீது மீண்டும் மீண்டும் திரும்பி விழுந்தது. வாசலருகே நாற்காலியில் சாய்ந்து தூங்கியவனை ஒட்டி இருந்தவள், இமை கொட்டாமல் பாண்டியனைப் பார்த்தாள். முன்புறம் குலுங்கியது. இடக்கை வயிற்றைத் தடவியது. பாண்டியன் தலையைத் திருப்பி நோட்டமிடலானான்.

     “ஏலே, அங்கே பார்” முத்தையாவின் விலாவில் மாசானம் இடித்தான். “கதவோரம் வயிற்றைத் தடவுகிறாளே, தெரிகிறதா, அவளைப் பாண்டி கணக்குப் பண்ணுகிறான்.”

     “ஆ, அப்படியா! பாண்டி தொலைந்தான். அவனைச் செலவெழுத வேண்டியதுதான். முனிபுங்கவர்களெல்லாம் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள்? பெண்களைப் பார்க்காதே, அதிலும் வயிற்றைத் தடவுகிறவளை நினைக்கவும் நினைக்காதே என்று. பாண்டியன் என்ன செய்கிறான்? வயிற்றைத் தடவுகிறவளைப் பார்க்கிறான். எனவே, தொலைந்தான், ஒழிந்தான்.”

     மாசானம், வயிற்றைத் தடவியவளை, உற்றுக் கவனிக்கலானான்.

     “மாசானம்... அட தேரிக்காட்டுப் பயலேஎஎ!”

     “என்னலே?“

     “இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டது ஏன்?“

     “பெண்.”

     “ராவணன் செத்ததும் கோவலன் செத்ததும் ஏன்?“

     “பெண்”

     “ஆகவே, மாசானம், மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்; பெண்களைப் பார்க்காதே. மாசானம், பெண்களைப் பார்க்காதே, பெண்களைப் பார்ப்பதுவும் தீது; பெண்கள் சொற் கேட்பதும் தீது; பெண்களோடு இணங்கியிருப்பதுவும் தீது. இது யார் வாய்ப் பொன்னுரை தெரியுமா?”

     “முத்தையாத் தடிகள்!”

     “சீச்சி!... அன்னை வயிறறியா அண்டமா முனிவர். அவர் அருளிச் செய்த ‘இடாகினிப் பேய் - என் இல்லக்கிழத்தி’ என்ற காப்பியத்தை நீ படித்ததில்லையோ? கட்டாயம் படிக்க வேண்டும். பெண்களின் உறவே கூடாதென்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அஃது யாதோவெனின்...”

     ரேசனின் கம்பீரமான ஆங்கிலவாங்கிலக் குரல் திடுமெனக் கிளம்பி முழங்கி, மண்டபத்தில் இருந்தோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

     “ஆ! இளவரசர் சிரீ புவோங்சிரீ வைத்தியக் கோன்...! இவர் ஃபீல்ட் மார்ஷல் மஹாராஜ சிரீ சிரீ வினயானந்தோ பான்ட்யா, தமிழகத் தரை - கடல் - விமானப் படைகளின் உன்னதச் சேனாதிபதி. மான்ஸ்டைனின் மதிநுட்பமும், ரொகொசாவ்ஸ்கியின் நெஞ்சழுத்தமும், மான்ட் கோமரியின் நிதானமும் ஒருங்கே அமையப்பெற்ற மாவீரன்! ஒரு காலத்தில் மூவுலகையும் ஏழு கடலையம் கட்டியாண்ட பாண்டிய மன்னர்களின் நேர்வழித் தோன்றல்.”

     “ஆஅஅ!... மஹாராஜக பான்ட்யா!” இளவரசர் குறும்புப் பார்வையும் புன்முறுவலுமாய்த் தமிழக உன்னதச் சேனாதிபதியின் கையைப் பற்றினார்.

     “இவர் ஜெனரல் சிரீ மாசான அபயவங்சே. புகழ்பெற்ற தமிழ் முதலாம் சேனையின் தலைவர். பறக்கின்ற குருவியை ஓடுகிற ஓட்டத்தில் சுட்டுத் தள்ளும் திறனாளி! ஏராளமான தமிழ் ஆடுகளைக் கோகிமா கசாப்புக் கடைக்கு இட்டுச் சென்று இறைச்சியாக்கிய சூரன்...! இவர் ஜெனரல் சிரீ முத்தயாத்திரிஜி குர்லால்மியா. தமிழ் கமாண்டோ அணிகளின் கீர்த்திமிகு தலைவர்...! மவுண்ட்பேட்டனை ஓட்டப் பந்தயத்தில் தோற்கடித்த மாவீரன்! பாரத கண்டத்தின் தங்கச் சுரங்கங்கள், நாணயச் சாலைகளில் பெரும்பாலானவை இவர் குடும்பத்தாருக்கே சொந்தம்.”

     இருவரும் அறிமுகக் கட்டியத்துக்கு ஏற்ப ராணுவ பாணியில் நெஞ்சைத் துருத்தி நின்று, முறுவலித்தனர்.

     “மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சி... மன்னிக்கவும், கொஞ்சம் அவசர வேலை.”

     இளவரசர் - வயது 35-க்கும் மேல் 75-க்குள் இருக்கலாம் - கழுத்தைச் சொறிந்தார்.

     “இளவரசர் அவர்களே, சற்று அமர்ந்து பானம் செய்வோமாக.” இடக்கையை முதுகுக்குப் பின் மடித்து, முன்னே குனிந்த ரேசன் கூறினான். “கறுப்பு, மஞ்சள், பழுப்பு மந்தைகளை எல்லாம் கட்டி ஆளும் ஆங்கிலோ - அமெரிக்க சேனாதிபதிகளிற் பலர் இந்த மகோன்னத அவையில் குழுமி இருக்கின்றனர். அவர்களின் மேலான பார்வையில் நமது சந்திப்பு மகிழ்ச்சியைப் புலப்படுத்துவோம், வாரீர், வாரீர், வந்தருளீர்.”

     “தயவுசெய்து மன்னிக்கவும். இன்னொரு தடவை.”

     இளவரசரின் வயதில்லா உருவம் வாசலை நோக்கி விரைந்து போய் மறைந்தது.

     ரேசன் நின்றபடியே கண்ணடித் தம்ளர்களில் பானத்தை ஊற்றினான். மற்றவர்கள் உட்கார்ந்தனர்.

     “ஜென்டில்மென்!” ஆங்கிலவாங்கிலக் குரல் பேசியது: “மகா பிரிட்டன், வட அயர்லாந்து, கடல்களுக்கு அப்பால் உள்ள டொமினியன் நாடுகள், காலனியப் பிரதேசங்களின் அரசரும் இந்தியாவின் சக்ரவர்த்தியும், கறுப்பர்களின் காவலருமான மாட்சிமிகு ஆறாம் ஜியார்ஜ் மன்னர் பிரானின் உடல்நலனுக்காகப் பிரார்த்தித்து, அவரது அடிமைக்குடிகளாகப் பிறந்த நாம், இப்போது பானம் செய்வோமாக.”

     “கத்தித் தொலைக்காதே” பாண்டியன் தாய்மொழியில் சொன்னான். “தமிழில் பேசு.”

     “டாமில்...? டூ யு மீன் டாமில்!” ரேசன் வாயில் இடி முழங்கியது. வலக்கை தம்ளரைத் தூக்கிற்று. “டாமில் ஒழிக! டாமிலியன்ஸ் அழிக... ஆங்கிலம் வளர்க! ஆங்கிலர் வாழ்க!”

     பானத்தைப் பருகிவிட்டுத் தம்ளரை மேசைமீது ஓசைபடத் தட்டி வைத்தான். கண்ணாடி அலறியது.

     மண்டபத்தின் சூழல் திடுமென இறுகியது. ஒரே அமைதி. வெள்ளையரின் சிவந்த கண்கள் குறுகி நோக்கின. கடைக்காரன் வாசலில் கையைப் பிசைந்து நின்றான். மாசானமும் முத்தையாவும் குறும்புப் பார்வையுடன் ரேசனைப் பார்ப்பதும், விஸ்கி பருகுவதுமாக இருந்தனர். பெண்களுடன் வந்திருந்த சையாமியப் பிரபுக்களும் சீன வியாபாரிகளும் மனம் குழம்பி விழித்தார்கள். வியட்னாமியர் ரேசன் திக்கில் திரும்பிக் கிசுகிசுத்தனர்.

     வாத்திய இசை முடிவடைந்தது.

     “நேரமாகிறது... போகலாம்.”

     பாண்டியன் எழுந்து ரேசனின் இடுப்பில் இடக்கையைச் சுற்றினான். கண்கள் மெத்தனப் பார்வையாய் மண்டபத்தை வளைத்து நோட்டமிட்டன. என்னமும் நடக்கலாம். எல்லாரும் குடிவெறியில் மிதக்கிறார்கள். கைக்குக் கை ஆயுதம்...

     “மூடநம்பிக்கைகளின் அடிமையான கறுப்பு மனிதனே! தீர்க்கதரிசிகளை மதிக்காத தான் தோன்றித் தமிழனே! உட்கார்.”

     பாண்டியன் உட்கார்ந்தான். மனம் குமுறியது. தடிப்பயல் வேண்டுமென்றே வம்புக்கிழுக்கிறான். நாம் நாலே நாலு பேர். இவர்களோ பலர்...

     “பழுப்பரே, மஞ்சளரே, கறுப்பர்களே!” ரேசனின் குரல் ஓங்கி முழங்கியது. “உங்கள் தோலை வெள்ளையாக்கிக் கொள்ளும் வரை அடிமைகளாய் உழலக் கடவீர்! என்று தேவபிதா விதித்த சாபத்தை நீங்கள் மறந்ததென்ன? உடனடியாக நெருப்பில் குளித்து வெள்ளையராகுங்கள், இன்றேல்...”

     “தீர்க்கதரிசி அவர்களே, அவ்வாறே செய்கிறோம்” பாண்டியன் பக்தி ததும்பக் கூறினான். “இப்பொழுது நேரமாகி விட்டது. ஆலயக் கதவுகளைப் பரிசேயர்கள் இழுத்தடைப்பதற்கு முன் நாம் விரைந்து போய்த் தேவனை வழிபடுவோம், வாரீர்.”

     “கறுப்பு மனிதனே, குறுக்கிடாதே. தீர்க்கதரிசியின் அருளுரையைக் கேட்பாயாக.”

     பெண்களுடன் வந்திருந்த உள்ளூரார், தம் பெண்களை இழுத்துக் கொண்டு அவசர அவசரமாய் வெளியேறினர். வெள்ளையருடன் வந்திருந்த விலைப் பெண்டிரும் உயர்குல வேசைகளும் ஏதோ விபரீதம் நேரப் போகிறதென்ற உணர்வும், சண்டைக்காட்சி ஆவலுமாய் விழி இமையாமல் ரேசனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     மண்டப அமைதியைப் பிளந்து கொண்டு தீர்க்கதரிசியின் குரல் மீண்டும் முழங்கியது:

     “ஏதேன் தோட்டத்து ஆதாமியா முதல்வனின் கொடிவழியைச் சார்ந்த களவழி* நாட்டுக் கலம்செய்# கோவாம் கார்மேகம் தீர்க்கதரிசியின் புதல்வன் கதிரேசன் தீர்க்கதரிசி தேவனுக்குப் பிரியமான பாங்கோகியா நகரில் வந்திருந்து சாற்றுகின்றான்: பூமியே கேள்! வானமே செவிமடு! காற்றே கவனி! தேவனாகிய பராபரன் என் கனவிலே ஒளிப்பிழம்பாய்த் தோன்றி, ‘கதிரோன்! கதிரோன்! நீ பானை வனையும் தொழிலை மறந்து இந்தப் பாலைவனத்தில் வந்து பாடு கிடப்பதென்னே?’ என்றார். அப்பொழுது நான், ‘ஆண்டவனே! உம்முடைய கீர்த்தி பூமியில் என்றென்றும் நிலைப்பதாகுக. நான் பாபி; என்னை மன்னியும்’ என்றேன். அதற்கு அவர், ‘அவ்வாறே மன்னித்தேன். நீ பாடு கிடப்பது ஏன்? உடனே சொல்’ என்றார். அப்பொழுது நான் ‘பராபரனே! என் மக்கள் பூச்சி புழுக்களாய் உழல்கின்றனரே, அவர்களுக்கு ஒருபோதும் விமோசனம் இல்லையா?’ என்றேன். அதற்கு அவர், ‘உன் மக்கள் என் ஆணையை மீறினர்; ஆகவே அல்லலுறுகிறார்கள். நான் என்ன செய்வது?’ என்றார். மறுகணம் ஒளிப்பிழம்பு மறைந்துவிட்டது. நான் தனியாய் நின்றேன்...”

     * களவழி நாடு - திருக்கோஷ்டியூர் பகுதியின் பழம்பெயர்

     # கலம்செய் கோ - மண்பாண்டத் தொழிலாளி (வேளார், குலாலர்)

     “ஹஹ்ஹஹ்ஹா...” வட கிழக்கு மூலையில் ஒற்றையாய் அமர்ந்து பீர் பருகிக் கொண்டிருந்த இளம் வயது அமெரிக்கக் கடற்படை காப்டன் எழுந்து நின்று சிரித்தான். “அசல் விவிலிய தீர்க்கதரிசி! யூதேயா தீர்க்கதரிசி! பாலைவன...”

     “மெஞ்ஞானிகளின் முதுமொழி பொய்யாம்படியாய் அணுவைப் பிளந்து தீயாக்கிச் சூரிய புத்திரர்களின் தலையில் கொட்டிய அமெரிக்க அஞ்ஞானியே! மூடு வாயை. இன்றேல், தீர்க்கதரிசியின் கொடுஞ்சாபத்திற்கு உள்ளாக்கி மீளாத் துயரில் உழலக் கடவாய்.”

     “தீர்க்கதரிசி அவர்களே, நான் பாபி; என்னை மன்னியும்.”

     “அவ்வாறே மன்னித்தேன். உட்கார்.”

     அமெரிக்கன் பெருமுயற்சியோடு சிரிப்பை அடக்கிக் கொண்டு உட்கார்ந்தான்.

     தீர்க்கதரிசியின் ஆங்கிலவாங்கிலக் குரல் மீண்டும் கிளம்பியது:

     “தேவனின் அருளால் திரிகாலஞானம் பெற்ற கதிரோன் தீர்க்கதரிசி மேலும் சாற்றுகின்றான்: ஏ தாழ்ந்த தமிழகமே, உனக்கு ஐயோ! தக்கோலமே, உனக்கும் ஐயோ! கடாரமே, காம்போதமே, சம்பாவே, சாவகமே, மலையகமே, மாவிர்லிங்கமே, உங்களுக்கும் ஐயோ! உங்களுக்கும் ஐயோ...! செவியிருந்தும் செவிடானவர்களே, உங்கள் தோலை வெள்ளையாக்கிக் கொள்ளும்படி தீர்க்கதரிசிகள் மீண்டும் மீண்டும் இடித்துரைத்தும் நீங்கள் அசட்டையாயிருந்தது என்னே? வெள்ளைத் தோல் இருந்தால் நாடு நகரங்களை அழித்துத் தரைமட்டமாக்கலாம்; கேள்வியில்லை. பெண்டு பிள்ளைகளைக் கொன்று குவிக்கலாம்; கேள்வியில்லை...”

     “ஷ்யட்டப்!”

     எதிரே, சையாமிய அணங்குடனிருந்த பிரிட்டிஷ் காப்டன் லாகிரிக் குரலில் உத்தரவிட்டான்.

     குரல் வந்த திக்கில் தலைகள் திரும்பின. ரேசன் மெத்த மெதுவாய்க் குனிந்து, மேசையிலிருந்த சீசாவைத் தூக்கித் தம்ளரில் ஊற்றிக் கொண்டே உறுமினான்:

     “தீர்க்கதரிசியின் அருளுரையை இடைமறிக்கும் பிலிஸ்தியன் யார், யாரவன்...? கிளைவ்? ராஃபிள்ஸ்*...?”

     * சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ். 1819ல் சிங்கப்பூரை நிறுவியவர். இவரைத் தென்கிழக்கு ஆசியாவின் ‘கிளைவ்’ என்று கூறலாம்.

     “நோவ் நோவ் நோவ்... மான்ட்கோமரி.”

     உயர்ந்து பருத்த உருவம் நாற்காலியிலிருந்து எழுந்தது. உடல் தள்ளாடியது. மிதமிஞ்சிய குடியால் முகம் ரத்தமாய்ச் சிவந்திருந்து. உடனிருந்தவள் கையைப் பிடித்திழுத்து உட்கார வைக்க முயன்றாள்; முடியவில்லை.

     கடைக்காரன் வாசலிலிருந்து ஓடிவந்தான். மாசானம் வலக்கையை ஆட்டி வாசலுக்குத் திரும்பும்படி மிரட்டினான். வந்தவன் கைகளைப் பிசைந்தவாறே திரும்பி நடந்தான்.

     ரேசனை இடப்பக்கம் சற்று விலகி நிற்குமாறு சொல்ல நினைத்தான் பாண்டியன். அதேசமயம் தீர்க்கதரிசி பிரக்கியமாய் மேற்கே ஓர் அடி நகர்ந்தார்.

     “யா அர்!... ஓ! மான்ட்கோமரி. கீர்த்திமிகு பிரிட்டிஷ் எட்டாம் சேனையின் தலைவர்!” வலக்கை முன்னே நீண்டு ஆட்காட்டி விரலால் சுட்டியது. ‘தன்னிடம் ஒன்றுக்கு மும்மடங்கு படை பலம் இருந்தும் கொஞ்சமும் அஞ்சாமல் ரோமலின் ஆஃபிரிக்கா கோர்மீது பாய்ந்து வென்ற தீரன்! எல் அலாமீன் சூரன் ஃபீல்ட் மார்ஷல் பெர்னாட் மான்ட் கோமரீஇஇ.”

     “ஷ்யட்டப்”

     “ஹிஹிஹிஹி... மான்ட் கோமரீஇஇ.”

     ஃபீல்ட் மார்ஷல் எட்டி நடந்து வந்தார். தீர்க்கதரிசி கனவுப் பார்வையும் லம்பும் உடலுமாய் நின்றார்.

     முகத்தை நோக்கி வந்த ஆக்கிரமிப்புக் கை அதன் இலக்கை அடையுமுன், தீர்க்கதரிசியின் இடக்கை - மின்வெட்டில் சிக்கித் துவளவே, அவரது வலக்கை கழுத்துக்கு மேலே அந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது. பிறகு இடக்கை, வலக்கை, இடக்கை.

     ஃபீல்ட் மார்ஷல் திசை திரும்பிக் குப்புற விழுந்தார்.

     எதிர் வரிசையில் சிலர் பிஸ்டலை உருவிக் கொண்டு எழுந்தனர்.

     “துப்பாக்கி விளையாட்டு வேண்டாம். தயை கூர்க.” வலக்கை பிஸ்டலுடன் ஆழ்ந்த அமைதிக் குரலில் பாண்டியன் கூறினன்.

     மாசானத்தின் இரு கைகளிலும், முத்தையாவின் ஒரு கையிலும் புத்தம் புதிய - அன்று காலையில் கொள்முதல் செய்த பிரவ்னிங் ஆட்டமேடிக் பிஸ்டல்கள் மின்னின. அதுவரை ஆரவாரத்துடன் குடித்துக் கொண்டிருந்த வியட்னாமியர் வரிசையில் அமைதி சூழ்ந்தது. அவர்களின் பிஸ்டல் - கைகள் எதிர்வரிசை இலக்குகளைக் குறிபார்த்து இருந்தன. இந்தொனேசியர் இருவரும் இடக்கையில் பிஸ்டலும், வலக்கையில் கிரிஸ் கத்தியுமாய் எழுந்து நின்றனர்.

     தீர்க்கதரிசி தம்ளரைத் தூக்கி விஸ்கி பருகியவாறே எதிர் வரிசையினரை ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை நோட்டமிட்டார். பிறகு தம்ளரை மேசைமீது வைத்தார். வாயிலிருந்து வியப்புக் குரல் பிறந்தது.

     “மூலை முடுக்கெல்லாம் தமுக்கடிக்கப்படும் பிரிட்டிஷ் நகைச்சுவை எங்கே ஓடி மறைந்தது! நேர்மையாட்டு எங்கே போய் ஒளிந்தது! ஓ, அவையெல்லாம் வெள்ளையருக்கிடையேதானா... கைச்சண்டையில் தோற்றால் துப்பாக்கி; துப்பாக்கிச் சண்டையில் தோற்றால் அணுகுண்டு! இஸ் திஸ் கிரிக்கெட்?”

     பிஸ்டல் - கைகள் குறி பார்த்து இருந்தன. ஒரு விநாடி - ஒரு தோட்டா பலரின் உயிர் ஒரு விநாடி- ஒரு தோட்டாவில் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு தோட்டா வெடித்தால் போதும்...

     “மடத்தனம், மடத்தனம்.” வயதாளி பிரிட்டிஷ் மேஜர் ஒருவர் பின் வரிசையிலிருந்து, ஓங்கி மிதித்த ஓசை கிளம்பிய காலடியுடன் முன்னே வந்தார். “கவலையை மறக்கவே இங்கு வருகிறோம். சுட்டுக் கொண்டு சாவதற்கல்ல... ஆயுதங்களை உறையில் போடுங்கள்.”

     ஆயுதங்களின் நிலை இருந்தது இருந்தபடியே நீடித்தது.

     “இது போர்க்களம் அல்ல; கேளிக்கைத்தளம். ஆயுதங்களை உறையில் போடுங்கள்.” கம்பீரக் குரல் - பல நெருக்கடிகளைச் சமாளித்துத் தேர்ந்த தன்னம்பிக்கைக் குரல் அழுத்தந் திருத்தமாய் மீண்டும் கட்டளை பிறப்பித்தது.

     ஆயுதங்கள் மறைந்தன.

     “தீர்க்கதரிசி அவர்களே!” மேஜர் நெருங்கி வந்தார். “இது நெகேவ் பாலைவனமல்ல; பேங்காக் நகரத்து மூன்லிங் ரெஸ்டாரண்ட். கிருபை கூர்ந்து அமர்ந்தருளி உமது கால் வலியைப் போக்கிக் கொள்வீராக.”

     “முதிர்வயது மேஜர் அவர்களே, உமக்கு ஜெய மங்களம்! உலக அமைதியையும் கிழக்கு - மேற்கு நல்லுறவையும் கருதி யாம் அமர்ந்தருளுகின்றோம்.”

     தீர்க்கதரிசி உட்கார்ந்தார்.

     ரேசன் முகத்தைப் பார்த்து நின்ற மேஜர் திடுமென வாய்விட்டுச் சிரித்தார். அதைத் தொடர்ந்து மண்டபம் எங்கிலும் சிரிப்பொலி கிளம்பிக் கலகலத்தது.

     தரையில் கிடந்த காப்டன் தட்டுத் தடுமாறி எழுந்து மலைத்த பார்வையாய் விழித்தான். மற்றொரு காப்டன் வந்து, அவன் முதுகில் கையை அணைத்து, வெளியே கூட்டிச் சென்றான்.

     “வெய்ட்டாஹ்ர்!”

     பல குரல்கள் பணியாள்களை அழைத்து உத்தரவு பிறப்பித்தன. “டபுள் விஸ்கி... ரம் அண்ட் பியர்... பிராண்டி நோ பிளடி சோடா...”

*****

     நாள்கள் ஓடி மறைந்தன.

     சுமத்ராவுக்குப் போய்விட்டு, ஊருக்குக் கிளம்பத் தீர்மானித்திருப்பதாகப் பாண்டியன் அறிவித்தான். நண்பர்கள் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தனர். அவன் தீர்மானத்தை மாற்ற முடியவில்லை.