உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 34. அயிஷா நாகப்பட்டினம் ஸ்ட்ராட்டில் தங்கையாவின் பிரமச்சாரி இல்லம். பிற்பகல். வீட்டுக்காரன் அலுவலகம் சென்றிருந்தான். பாண்டியனின் கால்கள் மேசை மீது கிடந்தன. கையில் 4 நாள்களுக்கு முந்திய சிங்கப்பூர் பத்திரிகை. ஜன்னல்களின் வழியாய்த் தெருவோசை வந்தது. ஜாவானிய மலாயும், சுமத்ரா தமிழும் கலந்து குழம்பிக் காதில் விழுகிறது. சாடோ வந்து வாசலில் நிற்பதும், அதைத் தொடர்ந்து பெண் வாடையும் புலனாகியது. மல்லிகை - பச்சூலி மண் உணர்வை அழுத்தியது. யாரது, அவளா... கதவு தட்டப்பட்டது. “போலே மாசோ.” கதவைத் தள்ளி நுழைந்து, பாசப் பார்வையுடன் அயிஷா வந்தாள். வயலட் பத்திக், பச்சைப் பட்டு கெமெஜா, மஞ்சள் ஜியார்ஜெட் ஸ்லெண்டிங். “பாண்டீன்! பாண்டீன்!” உடல் புல்லரித்தது. கால்களைத் தடாலென்று கீழிறக்கி எழுந்தான். “வேண்டாம், வேண்டாம், உட்கார்.” மனம் தடுமாறியது ஏன் ஏன்... உட்கார்ந்தான். கைகள் கன்னத்தைத் தடவ, கோவைச் செங்கனிவாய் பட்டும் படாமல் நெற்றியில் முத்தமிட்டது. நெருப்பில்லை. குளிர்விக்கும் சுனைநீர். இமைப்பொழுதில் உடல் காங்கை தணிந்து போயிற்று. “என் சகோதரன்! என் சகோதரன்.” மீண்டும் நெற்றியில் முத்தினாள். குளிர் நீர், சுனை நீர், பனிநீர். “அயிஷா!” “பான்டீன், எனக்குத் திருமணமாகி இரண்டு வருஷம் முடியப் போகிறது. இனிமேல் நான் உனக்குச் சகோதரி... நான் கல்யாணம் செய்து கொண்டதில் உனக்குச் சம்மதம் தானே?” இடக்கையால் அவன் பின்தலையை அணைத்துக்கொண்டு, வலக்கையால் முடியை வாரி ஒழுங்கு செய்தாள். “ஆம், முழுச் சம்மதம். நீ என் சகோதரி... கணவன் யார்?” “நல்லவர்” பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தாள். “உன் ஊருக்குப் போகாமல் ஏன் திரும்பி வந்தாய்? சண்டை முடிந்து விட்டதே.” “உன்னையெல்லாம் பார்த்து விட்டுப் போகத்தான்.” “பான்டீன்! சுணங்காமல் கப்பலேறு. பணம் இல்லாவிட்டால் நான் தருகிறேன்.” “பணம் நிறைய இருக்கிறது. என்னை ஏன் விரட்டுகிறாய்.” “நீ பழைய பான்டீன் அல்ல... உன் கண்ணில் தீ எரிகிறது! உன் வாய் அச்சுறுத்துகிறது!” உள்ளங்கையால் நெற்றியை வருடினாள். “மெர்டேக்கா ஆள்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதே. அவர்களும் டச்சுக்காரரும் எப்படியோ போகட்டும்.” “என்னமோ சொல்கிறாயே, அயிஷா! மெர்டேக்கா ஆட்களாவது உறவாவது...” “உன் கண்ணில் தீ எரிகிறது! உன் வாய் அச்சுறுத்துகிறது!” “சரி சரி. புலவர் பாணியில் என்னென்னவோ சொல்கிறாய். உனக்கு ஒரு குறையும் இல்லையே?“ “இல்லை, நிறைமனதுடன் வாழ்கிறேன். கணவன் வீட்டில் இருக்கிறார்! உன்னைப் பார்க்கப் போவதாகச் சொல்லி வந்தேன். வெளியே சாடோ நிற்கிறது. “நான் வந்திருப்பது எப்படித் தெரியும்?” “என் கணவர் செட்டித் தெருவில் விசாரித்து வந்து சொன்னார். நான் சொல்வதைக் கேள், உடனே கப்பலேறு. மெர்டேக்கா ஆட்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதே.” “நன்றி, அயிஷா.” “போய் வரவா?” நெருங்கி வந்து நெற்றியில் முத்தமிட்டாள். “நான் சொன்னதை மறந்து விடாதே.” “நல்லது.” “ஸ்லாமத் திங்கல்.” “ஸ்லாமத் பாலே.” அயிஷா மணம் சிறுகி மறைந்தது. சாடோ வண்டி ஓடும் ஓசை கேட்டது. அந்தி மயங்கும் வேளை. கிழக்கு முகமாய்ச் சென்ற சாடோவின் பின்புறத்தில் பாண்டியன் சாய்ந்திருந்தான். இருபுறமும் தோட்ட வீடுகள். திரையிட்ட ஜன்னல்களுக்கப்பால் மூடி அமுக்கிய வெளிச்சம். மெல்லிய வானொலிக் குரல் பின்தொடர்ந்தது. மிஞ்சிய டச்சுக்காரரும் யுரேஷியரும் ஊர்திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்... வலப்பக்கம் பாலீஸ்வே பிரிகிறது. மூலையில் பச்சைப் பளிங்கு அரை உருண்டை வழுக்குக் கோபுர டாவ்ரோஸ் மாளிகை. மேலே அமெரிக்க கான்சல் அலுவலகம். டெர்மூலன் ரெஸ்டாரன்ட். வரிசையாய் ஜீப்புகள், கார்கள், எதிரே மாதா கோயில். ரெஸ்டாரன்ட் முன்பகுதி திறந்த மேடையின் நீல நியான் ஒளி வெள்ளத்தில் ராணுவ அதிகாரிகளின் உயர்ந்து வளர்ந்து பருத்த உடல்கள் நிற்கின்றன. கையில் பீர்க்குவளை, நெற்றியில் வியர்வை, வாயில் கம்பீரமான டச்சுமொழி. ரேடியோ அலறுகிறது. “*டிஸிஸ் டெ நிரோம்ஷ் பாத்தாஃபியா...” ரெயில் பாதையைக் கடந்து சென்றது சாடோ. ஹக்கா ஸ்ட்ராட். ஆள் நெரிசலும் வண்டிப் போக்குவரத்தும் அதிகரிக்கிறது.
* (டச்சு) “இது நெதர்லணட்ஸ் இன்டீஷ் வானொலி நிறுவனத்தின் பட்டேவியா நிலையம்.” பாண்டியன் கண்ணை மூடினான். போன டச்சுக்காரர்கள் திரும்பி விட்டனர். இருந்த ஜப்பானியர் போய் விட்டார்கள். மீண்டும் அவர்கள் வரலாம்; இவர்கள் போகலாம், இந்த இடம் இதுவரை எத்தனை எத்தனை பேரரசுகளுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது! எத்தனை எத்தனை இனத்தவர் இங்கு வெற்றிச் செருக்குடன் நடமாடியிருக்கிறார்கள்! தமிழர், போர்ச்சுகீசியர், ஆங்கிலர், உலாந்தியர், ஜப்பானியர், மீண்டும் உலாந்தியர்! பட்டியல் இத்துடன் முடியுமா...? இந்நகரம் எவ்வளவு காலத்தியது, இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? பேரரசுகள் தோன்றி மறைகின்றன; பெருநகரங்கள் உண்டாகி அழிகின்றன... எத்தனை எத்தனை பேரரசுகள், எத்தனை எத்தனை பெருநகரங்கள். ஃபேரோக்களின் மெம்பிஸ், சுமேரியரின் ஊர், எலாமியரின் சூசா, பாண்டியரின் கொற்கையம் பெருந்துறை, சோழரின் காவிரிப்படப்பைப் பட்டினம், சேரரின் முழங்கு கடல் முழவின் முசிறி, சைலேந்திரரின் ஓங்கு புகழ்ச் சந்தைத் திருப்பதி மலையூர்... பிற இனங்களை அடிமைப் படுத்துவது கீர்த்திக்காகவா அல்லது வேறு காரணத்துக்காகவா? தேவைக்கேற்ப எத்தனை காரணங்கள் வேண்டுமாயினும் உண்டாக்கலாம்... பேரரசுகளைப் படைத்துக் கீர்த்தியுற்றோரெல்லாம் என்ன ஆனார்கள்? மன்னர்கள் தலையில் கல்லேற்றி வந்து அரண்மனை கட்டிய அஷுர்பனிபால் தனக்குத் தானே தீவைத்துக் கொண்டு செத்தான். மாமன்னன் நெபுகத் நெஸ்ஸார் விலங்குக் கிறுக்குப் பிடித்து ‘நான்கு காலால்’ நடந்து புல் தின்று திரிந்து மாண்டான். அலெக்ஸாண்டர் வெற்றி வீரனாய்த் தாயகம் திரும்பும் வழியில் பாபிலோன் மாநகரிலே நடத்திய மதுபானக் களியாட்டின்போது சுருண்டு விழுந்து பல நாள் அவதிப்பட்டு மரித்தான். சீசர், நண்பனின் கத்திக்குத்துக்கு இரையாகி, உயிர் துறந்தான். நெப்போலியன், சின்னஞ்சிறு தீவில் சிறைப்பட்டிருந்து மாண்டான்... கீர்த்தியின் விலை என்ன? கீர்த்தியின் பலன் என்ன? கீர்த்தியின் முடிவு என்ன...? ***** மிளகு வியாபாரியாக மெடானுக்கு வந்த இந்தொனெசியக் குடியரசுப் படை கர்னல் காசிம் - மாஜி அச்சின் மாட்ஸ் கப்பாய் கிராணி - பாண்டியனைச் சந்தித்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்... மார்கெட் தெருவில் ஒரு கட்டிடம் பிடித்து ‘மலேயா - இந்தொனேசியா கார்ப்பொரேஷன்’ என்ற கடையை ஆரம்பித்தான் பாண்டியன். வசிப்பதற்காக ஜாலன் டொரியானில் ஒரு வீடும் அமர்த்தப்பட்டது. நகரில் டச்சுத் துருப்புகள் குவிந்து கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தினர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கப்பலேற இருந்தோர் இயன்றவரை பணம் சேர்த்துக் கொண்டு ஊர் திரும்ப விரும்பினார்கள். ஆயுதக் கிடங்குகளில் கணக்கு வழக்கின்றிக் கிடந்த துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் இரவோடிரவாய் இடம் பெயர்ந்தன; பணம் கை மாறியது. பாண்டியன் யோசனைப்படி அமைந்த வட சுமத்ரா முதலாவது கொரில்லாப் படைக்கு துமாஸ் காட்டில் போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது. இயன்ற போதெல்லாம் தூமாஸ் காட்டுக்குப் போய் வந்தான். நகரைத் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் மெர்டேக்கா அரசு. எல்லை கடக்கும் போது கொஞ்சம் எச்சரிக்கையாய் நடந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|