மலர்

38. காடும் நாடும்

     ஜாத்தி மரத்தடி நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். வானில் பூத்திருந்த வெள்ளி மலர்கள் நகைத்தன. வளர்நிலாத் திங்கள் ஒளியாடியது. இலைத் திரை தங்கப் பச்சையாய் மின்னிற்று. மென் காற்றில் முல்லை மணம் மிதந்து வந்தது. இனிய மணம் இனிய காற்று இனிய நிலவு...

     திடுமென ஊர் நினைவு பாய்ந்து வந்து சிந்தையை அழுத்தியது. ஊர் ஊர் ஊர். சின்னமங்கலம். மதுரை... சின்னமங்கலம், மதுரை... ஊருக்குப் போக வேண்டும். சண்டை வேண்டாம், துப்பாக்கி வேண்டாம்... காடு வேண்டாம்... பதுக்கம் வேண்டாம்... காட்டு வாழ்க்கை விலங்குகளுக்கும் காட்டுமிராண்டிகளுக்குமே. எனக்கு என்னொத்த நண்பர்கள் வேண்டும். பெண்கள் வேண்டும். புத்தகங்கள் வேண்டும். தெருக்காட்சிகள் வேண்டும்.

     சுற்றடைத்தழுத்திய மரக்கடலின் குரல் காற்றிசையாய், கிண்ணோசையாய்க் கிளம்பி ஒலித்தது... எனக்குக் காட்டுமிராண்டி வாழ்க்கை ஒத்துவராது. நான் ஊர்ப்பிராணி. பிரிந்து பிணங்கி வாழ்வது பிழை. இணைந்து இசைய வாழ்வதே முறை.

     எழுந்தான். இரு கைகைளும் தலைமுடியைக் கோதின. வன வாசம் - பரதேசி வாழ்க்கை போதும். சுணங்காமல் தாயகம் திரும்ப வேண்டும். இந்தச் சிறுவயது காலத்துக்குள் மிதமிஞ்சிய போகத்தையும் பரபரப்பையும் நுகர்ந்து விட்டேன். தீய பழக்கங்களினால் உடல் தூய்மையை இழந்தேன். ஆனால், என் சிந்தை மாசடையவில்லை. அழுக்ககன்ற என் மனம், இழந்த உடல் தூய்மையை மீட்டுத்தரும். உடம்பே மனிதனின் நல்வாழ்வுக்கு அடிப்படை. உடம்புகெடின் மனம் கெடும். இனிமேல் அமைதி வாழ்க்கை; ஒழுக்க வாழ்க்கையே தேவை. ஒழுக்கம் இன்றேல் விழுப்பம் இல்லை. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...