உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அரும்பு 15. கேளிக்கை பினாங் நகரின் போர்த் தழும்புகள் ஆறி மறைந்து கொண்டிருந்தன. துறைமுகத்தில் பாய்மரக் கப்பல்கள் கூட்டம். வெவ்வேறு இடங்களிலிருந்து சரக்கேற்றி வந்த தமிழர்கள் கடைவீதியில் சந்தித்துத் தகவல் பரிமாறிக் கொண்டனர். எதிர்பாராது சந்தித்துக் கொண்ட நண்பர்கள், சென்றகால ஊர் நிகழ்ச்சிகளைப் பேசி நிகழ்காலத் தொல்லைகளை மறந்து மகிழ்ந்தனர். நாள்கள் வாரமாகி மாதமாகி உருண்டன. யுத்த பீதி கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து மறையலாயிற்று. பினாங் மக்கள் மீண்டும் முழு மூச்சாய்க் கேளிக்கை வெறியில் ஈடுபடலாயினர். களியரங்கங்களிலும் சினிமா கொட்டகைகளிலும் நெரிசல். ஹோட்டல்களில் இட நெருக்கடி, சூதாட்டத் தொட்டிகளில் பண நோட்டுகள் கத்தை கத்தையாய்க் கைமாறின. பாண்டியன் - மாணிக்கம் ஜோடியை நாள் தவறாமல் வின்சர் கூத்து மேடையில் காணலாம். யுத்தத்துக்கு முந்திய தமிழ்ப்படங்கள் மாறிமாறித் திரையிடப்பட்ட காலம் அது. தாழ்வாரத்தில் இளைஞர்கள் விலகாத புகைத் திரையினூடே வசுந்தரா, ராஜகுமாரி, வசந்தா பற்றி விமர்சித்து நிற்பார்கள். உள்ளூர்ப் பெண்கள் தாய் நாட்டு முறையில் தலைகுனிந்து கொட்டகைக்குள் விரைவர். படம் தொடங்கிச் சிறிது நேரமானதும் நண்பர்கள் இருவரும் வெளியேறி நியூ பீச்சுக்கு நடப்பார்கள். அங்கு நீலமணி விளக்குகள் அணைந்து வெகுகாலமாகி விட்டது. கண்ணாடி மண்டப ஹோட்டல் அடைபட்டுக் கிடக்கிறது. மண்டபத்திலிருந்து மெல்லிசை மிதந்து வர, மங்கல் வர்ண விளக்குகளின் கலவை வெளிச்சத்தால் மோன ஒளிபெற்ற கடலோரத் தோட்டத்தின் பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்து காபி பருகியவாறே, குறுக்கு மறுக்காய் நடந்து பகட்டித் திரியும் தங்கநிறப் பெண்டிரை நோட்டமிட்ட காலம் மறைந்து விட்டது. கடற்கரைக்குப்பின் நியூ ஒர்ல்ட், அல்லது வெம்ப்லி களியரங்கம்: நாடகம், சர்க்கஸ், நாட்டியம் மற்றும் பல கேளிக்கைகள் உண்டு தொன்மையான ரத்தப் பாஞ்சாங் லீலா விநோத கான சபையாரின் பழங்கால நாடகங்களில், தமிழ் நாட்டில்கூட உருக்குலைந்து போன நந்தவன சீன், வேட்டை சீன், சிங்காசன சீன்களை அசல் உருவத்தில் காணலாம். “மந்திரீ!” “பிரபோ.” “நம் ராஜ்யத்தில் மாதம் மும்மாரி பெய்கிறதா?” “ஆம், பிரபோ.” “பிராமணர்கள் முறைப்படி வேதம் ஓதி வருகின்றனரா?” “ஆம் பிரபோ.” “பெண்கள் கற்பு நெறி தவறாது ஒழுகுகிறார்களா?” “ஆம், பிரபோ,” “சந்தோஷம், சந்தோஷம்.” வெம்ப்லி நாட்டிய அரங்கில் புகழ்பெற்ற சீனக் கட்டழகி ஒருத்தி இருந்தாள். அவளை முக்காலே மூன்று வீச அம்மணக் கோலத்தில் பார்க்கலாம். புள்ளி விளக்குப் போட்டுப் பெண் அவயவங்களைக் காட்டும் அரங்கமும் உண்டு. அங்கே கிழவர்கள் கூட்டம் எப்போதும் முண்டியடித்துக் கொண்டு நிற்கும். இடையிடையே, மலேயாத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நான்யாங் ஹோட்டலுக்கும் செல்வார்கள். உடல் வியாபார நிலையமான அங்கு, தமிழர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத அரிய காட்சியைக் காணலாம். முதலாளிகளும், தொழிலாளிகளும் படித்தவர்களும் தற்குறிகளும் சரிநிகர் சமானமாய் உரையாடிக் கொண்டிருப்பார்கள். பல்லாண்டுக்காலமாய்த் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து பழகிய ஹோட்டல்காரன் பாஞ்சாங், அவரவர் குறிப்பறிந்து ஆவன செய்து இங்குமங்கும் பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான். யாருக்கு என்ன பிடிக்கும், இளமையா முதுமையா, ஒல்லியா பருமனா, ஆடா, மாடா, வாடிக்கைக்காரர்களில் யார் முகத்தில் விழிக்க யார் விரும்புவதில்லை - எல்லாமறிந்த சூரன்! “தேத்தே புசார் புசார், தவ்க்கே!” என்று கூறிக் கண்களை உருட்டிக் கைகளைக் குவித்துக் காட்டி ஆட்களை விழத்தாட்டும் அவன் திறமையை எழுத்தில் விளக்க முடியாது. மலாய் அறவே தெரியாதவர்களுக்கும் சைகை மொழியாலேயே அடிப்படை விவரங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளியத் தெரிய வைக்கும் திறனாளி பாஞ்சால். மலேசியாவில் வாழும் விநோத விபரீதத் தமிழர்களில் சிலரையும் நான்யாங் ஹோட்டலில் சந்திக்கலாம். காலை ஆறு மணிக்குப் படுத்து, மாலை ஆறுக்கு எழுந்து, பல் துலக்கிப் பசியாறி, ‘அன்றாட அலுவல்வல்களை’த் தொடங்கும் ‘இராப் பறவை!’ உற்சாக மருந்து ஒரு அவுன்ஸ் தொண்டைக்குள் இறங்கியதும் ‘பறவை’யாகிக் கைகளை அலைத்துப் பறக்க முயலும் டபுள் வீ! முகமது நபி காயல்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தவரென்று ‘தக்கசான்று’களுடன் மெய்ப்பிக்கும் அல்ஹாஜ்! படுக்கையில் தூவவென்று பெரிய துணிப்பை நிறையக் காம்பரிந்த மல்லிகையுடன் வரும் பானா ழானா! பிறருக்காகப் பணம் கட்டி மகிழும் தவ்க்கே புசார்! சேலை கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னே நின்று பார்ப்பதில் நாட்டமுடையவரெனக் கூறப்படும் கானா...! இப்படிப் பலர்... சொக்கலிங்கபுரம் ஆள் ஒருவரைப் பார்ப்பதற்காக அக்கரைக்குப்* போயிருந்த பாண்டியன், மறுநாள் காலையில் பினாங் திரும்பினான். படகு ஒன்பது மணிக்குப் பாலத்தில் அணைந்தது. இறங்கிச் சைனா தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தான்.
* பினாங் சுற்றிலும் கடலால் சூழப்பட்ட தீவு “பாவன்னா! பாவன்னா!” வலப்புறம், நகரத்தார் விடுதியிலிருந்து குரல் வந்தது. நாவன்னாவோ... திரும்பிப் பார்த்தான். படிக்கட்டில் நின்றார். “அடடே, வருக வருக. என்ன திடீர்த் தோற்றம், எப்போது வந்தீர்கள்?” “நேற்று, ராவுத்தர் கடையில் கேட்டேன். அக்கரைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். என்ன சேதி, நலம்தானே?” “ஒரு குறையுமில்லை, சரக்கு ஏதாவது?” “அங்கே பொழுதெழுவு போகவில்லை. கொஞ்சம் சரக்குப் போட்டுக் கொண்டு வந்தேன். உங்களுக்கு இனிமேல் பினாங்தானோ?” “இப்போதைக்கு இங்கேதான்.” “உள்ளே போகலாம்.” நுழைந்தார்கள். பல திறப்பட்ட செட்டியார்கள் அமர்ந்தும் சாய்ந்தும், சின்னஞ்சிறு துண்டுக் காகிதங்களில் செலவுச் சிட்டை எழுதியும், யுத்த வதந்திகளைப் பேசியும் இருந்தனர். தார்மடி வேட்டியும் மழித்த தலையுமாயிருந்தோர் ஐயாக்கண்ணுடன் ஒரு விநாடி உற்றுப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். கிராப்புத் தலையும் தட்டு வேட்டியுமாய் இருந்தவர்களில் சிலர் வரவேற்றார்கள். “வாங்க, இருங்க.” பாண்டியனைத் தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நாவன்னா. “சின்னமங்கலம் மளிகைக் கடை சிவலிங்க நாடார் தெரியுமல்லவா? அவர் மகன், மைடானில் எங்கள் அம்மான் கடையில் ஒரு கணக்கு இருந்தார். இப்போது வேறு கடையில் கொண்டு விற்கிறார்.” சிவந்த மேனி இளைஞர் ஒருவர் நெருங்கி வந்தார். “உங்கள் தகப்பனார் எங்கள் அப்பச்சிக்கு ரெம்ப வேண்டியவர். நாங்கள் நெற்குப்பை, சின்னமங்கலத்தில் உங்கள் கடையில்தான் சரக்குக் கட்டுவோம்.” சின்னமங்கலம் பற்றிய பேச்சு விரிந்தது. பாலாற்று ஓடுகால் குளிப்பு. ஆறாம் திருவிழாவில் குடல்மாலை அணிந்த கழுவனின் அஞ்சுவரு ஆட்டம். ஆவண எழுத்தர் அகமது ஜலாலுதீனின் வில்லி பாரதப் புலமை. (யூனியன் போர்டு தலைவர் சேவுகமூர்த்தி அம்பலம்: “அண்ணன் மகனே! அந்த ‘நீல நெடுங்கிரியும் மழை முகிலும்’ ஒருங்கச் சொல்லி விரிவாய் வியாக்கியானம் பண்ணனும். கேட்டு ரொம்ப நாளாகுது.”) ‘ரோட்டடி’க்குப் போகும் அடைக்கலங்காத்த நாடாரின் கம்பீரத் தோற்றம்: கிளாஸ்கோ மல்வேட்டி - ஃபியூஜி பட்டுச்சட்டை - புலித்தோல் இடைவார் - வெஸ்ட் எண்ட் கடிகாரம் -‘கிரிச்’ மிதியடி. (நாடார் தெருப் பெண்களின் கருத்து: “பாலையம்பட்டி நாடான்! தலைகொடுத்து அடைக்கலம் காத்த தேரிமுத்து முன்னோடி வம்சத்தில் பிறந்த பயல்! இப்படிக் களவாணிப் பயகளோட சேர்ந்துக்கிட்டு வழிப்பறிக்குப் போறானே. இது காலக் கோலமில்லாமல் என்னடி தாயே!”) திருநெல்வேலி சைவ ஆச்சி கடை இட்லி - மல்லிக் காப்பி, துப்புரவாய்ச் சாணமிட்டு மெழுகிய தரை, பளபளக்கும் பித்தளைத் தம்ளர்கள். (“கோமதி விலாஸ்‘ சங்கரமூர்த்தியா பிள்ளை குறிப்பு: “கீழ்சாதி முண்டைக. சைவமாவது ஆச்சியாவது. அவளுக சாதியச் சொல்லவே நாக் கூசுது. கண்காணா ஊர்ல வந்து வேசம் போடுதாளுக.”) பினாங் நகரையும் தாயகத்தையும் மறித்த கடலையும் மறந்து, மனத்திரையில் செட்டிநாடு வட்டகையைக் கண்டார்கள். தெக்கூர் விலக்குப் பாதை. மயில்கள் உலாவுகின்றன; ஆலுகின்றன; ஆடுகின்றன; செட்டிநாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து பழனி வேல்முருகனின் அருளை நாடிச் செல்கின்றன. காவடிகள் பக்தி வெறி ஏறிய காவடிக்காரர்களின் கண்கள் அண்டசராசரங்களை ஊடுருவிப் பார்க்கின்றன. உடல்கள் நிலை கொள்ளாமல் துள்ளுகின்றன. “வேல்! வேல்!” முழக்கம் வானளாவி எழுகின்றது... நாட்டரசன் கோட்டையில் கண்ணாத்தாள் திருவிழா; கொன்னையூரில் மாரியாத்தாள் திருவிழா; காரைக்குடியில் கொப்பாத்தாள் திருவிழா. கோடாலிக் கொண்டையும் கண்டாங்கிச் சேலையும் முகத்திலகு பசு மஞ்சளும் மெட்டி ஒலியுமாய்ப் பெண்கள் நடமாடுகின்றனர். பட்டு வண்ணங்களிடையே வெள்ளை வெள்ளை வெள்ளை; மலர் வெள்ளை, வயிர வெள்ளை, துணிவெள்ளை, மணம் மணம் மணம்; மல்லிகை மணம் ஜவ்வாது மணம், ‘பம்பையா’ மணம். நாதசுரத் தேனோசை நிலாவொளியில் மிதந்து வந்து தாலாட்டுகிறது. திருவாவடுதுறை ராஜரத்தினம், திருவிடைமருதூர் வீருசாமி, திருவெண்காடு சுப்பிரமணியம், நடன சரஸ்வதிகளின் சதிர்க் கச்சேரி கலீரிடுகிறது; திருப்பத்தூர் பாக்கியம், திருக்கோகர்ணம் சேது, திருக்கோஷ்டியூர் செல்லம்... பெரிய கரிய பியூக் வண்டிக்கு முன்னே நச்சாந்துபட்டி ‘மைனர்’ சீனாத்தானா நிற்கிறார். வலக்கையில் திருக்கை வால் சவுக்கு. இடக்கை தலைமுடியைத் தடவி அமுக்கி விடுகிறது. பக்கத்தில் அவர் புதிதாக எடுத்து வைத்திருக்கும் வைத்தீசுவரன் கோயில் சொர்ணம் வயிர ஒளி வீசி நிற்கிறாள். பெட்டிக் கடைக்கு அருகே வெற்றிலையும் கையுமாய்த் தென்படுகிறாரே, அவர்தான் சத்தியக்குடி பெரிய அம்பலக்காரர். இந்த வட்டகையிலேயே தலையாய பட்டாதார். அம்பலகாரரின் நிலபுலன்களில் பெரும்பாலானவை உருட்டி மிரட்டியும், அடித்துப் பறித்தும் சேர்த்தவை என்றாலும், பரம்பரையாக வரும் சில பொட்டல் காடுகளும் உண்டு. அவருக்குப் பின்னால் ஏழெட்டுப் பேர் கைகட்டி நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள். சொன்னால் கை காலுக்கு ஆபத்து; மாடுகன்றுக்கு ஆபத்து. வீடு வாசலுக்கு ஆபத்து... தென்புறத்தில், எடுபிடி ஆட்கள் புடை சூழ கோலா மல்வேட்டி - முட்டை மார்க் பனியன் - டைமன் துண்டு கோலத்தில் நிற்பவரே ‘பவுண்’ ராவன்னாமானா. தாசிகளுக்கு பவுண் காசுகளாய்க் கொடுப்பவர் அவர்தான். அவரிடம் ‘சார்ஸ்’ பேசும்போது பவுண் கணக்கிலேயே சொல்ல வேண்டுமாம். கோயிலுக்கு முன்னால் கைகூப்பி நிற்கிறாரே ஒரு நரைத்தலை மூதாட்டி, அவர் 16 - 18 வயதுப் பையன்களுக்கு வாரி வாரிப் பணம் வழங்குவார் என்று கேள்வி. அம்மையாரிடம் வயதை ஏய்க்க முடியாது. முதுகெலும்பைத் தட்டிப் பார்த்தே சரியான வயதைக் கணித்து விடுவாராம். சாமிக்குப் பின்னே, ருத்திராட்ச மாலையும் விபூதி வரிகளுமாய்த் தேவாரம் பாடிக்கொண்டு வருபவர்தான் தாதன்குளம் சேனா. நம்பி அனுப்பிய செட்டியாரின் சியாந்தார் கடையை வேரோடு விழுங்கி ஏப்பம் விட்ட கபந்தன். இப்பொழுது பத்துப் பதினைந்து லகரம் தேறும். அஞ்சானூர் சிவன் கோயிலை எடுத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார். அந்தத் தெம்மாடிச் செட்டியார்தான் பாவம்! பழனியில் காவி வேட்டியும் திருவோடுமாய்த் தானா தினா தந்தினாதா போட்டுக் கொண்டு திரிகிறாராம். திருவிழாக் கூட்டம் நெருங்கி இறுகி உராய்ந்து அலைமோதும் நள்ளிரவு நேரம். திடுமெனக் கும்பலோசையைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்குரல் அலறுகிறது: “அடியெ தேனம்மா! இங்கெ பாருடியோஓஓ! அந்தாந்தத் திருப்பத்தூருப் பட்டுக் கிடப்பான் இடிச்சுக்கிணே வாறாண்டி.” ‘பையன் காபி தம்ளர்களைக் கொண்டுவந்து வைத்தான். செட்டிநாட்டுப் புகழ் தாசிகளைப் பற்றிப் பேச்சுக் கிளம்பியது. “மூனா ரூனா, உங்களுக்குப் பிரான்மலைக் கல்யாணியைத் தெரியுமா?” “யாரவள், அந்த வடக்கு வீதியில இருக்காளே, அவளா? அவள் என்னமோ ம்ம்... சானா மூனா வகையில யாரோ ஒருத்தர்ட்ட...” “அது எந்தக் காலத்தில?” நாவன்னாவின் முகம் சிவந்தது. “சரி சரி. கலியாணிக் குட்டிய இப்ப நினைச்சு என்ன ஆகப்போகுது” ‘மோல்மீன்’ நாச்சியப்பன் கொட்டாவியோடு குறிப்பிட்டார். “வாங்க, ரெண்டு ஆட்டம் சீட்டுப் போடலாம்.” நாவன்னா வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டே எழுந்தார். “எனக்குக் கொஞ்சம் வேலையிருக்குது. பிறகு சந்திப்போம்.” பாண்டியனும் எழுந்தான். “ஏன், ரெண்டு ஆட்டம் போட்டுப் பாக்கிறது... சரி சரி. உங்களுக்குத்தான் இது ஒத்துக்கிடாதே... ம்ம்... சரி... பொழுது சாய்ந்ததும் ராவுத்தர் கடைப் பக்கம் வருறேன்.” வட முகமாய் நடந்தான். சோபாராம் மளிகைக் கடையில் ஹிந்துஸ்தானி இசைத்தட்டு ஓலம். இடப்புறக் கடைத் தாழ்வாரத்தில் மூங்கில் முக்காலிகளில் இருந்த நான்கு சீனர்கள் ஒரே சீராய்ப் பல் குத்தித் துப்பிக் கொண்டிருந்தார்கள். துறைமுகத்தில் மூடைதூக்கும் தமிழர்கள் அழுக்கு வேட்டியும் பரட்டைத் தலையுமாய்த் தெற்கே ஓடினார்கள். பிட் தெருவில் திரும்பினான். கேட்ட வரம் கொடுக்கும் கீர்த்தியுள்ள குவான்யின் தேவதை கோயிலில் சீனர்களும் தமிழர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஊதுவத்தி சாம்பிராணி மணம் மிதந்து வந்தது. நடைபாதையில் உடனுக்குடன், உத்தரவுப்படி உண்டி சமைத்துக் கொடுக்கும் சீனர்கள் தீ கனன்ற அடுப்பையும் சமையல் பண்டங்களையும் காவடி கட்டித் தோளில் சுமந்து திரிந்தனர். சன்லைட் புத்தகக் கடையைக் கருதி நடந்தான். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|