நுனை

5. மொஸ்கி ஸ்ட்ராட்

     மைடான் என்று தமிழர்களுக்கு அறிமுகமான மெடான்* நகர மொஸ்கி ஸ்ட்ராட்டில் வட்டிக் கடைத் தமிழர்கள் மீண்டும் குடிபுகுந்தனர்.

     * இந்தியாவிலிருந்து வந்த டெல்வி கல்தான் வம்சத்தினரால் நிறுவப்பட்டது மெடான் நகர். அதன் முழுப்பெயர் மெடான் டெலி. டெல்லி சுல்தானின் தலைநகர் அது. மைடான் என்ற உருதுமொழிச் சொல்லின் திரிபே மெடான்.

     பெட்டியடிகளில் வழக்கம் போல் மேலாள், அடுத்தாள், பெட்டியடிப் பையன்கள் உட்கார்ந்து கணக்குப் புத்தகங்களையும் கடன் சீட்டுகளையும் புரட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் கிஸ்தி - தவணைப் பணம் - கட்டுவார் யாகும் தென்படவில்லை.

     செட்டித் தெரு - மொஸ்கி ஸ்ட்ராட் - படிப்படியாகக் களையிழந்து கொண்டிருந்தது. உடல்களில் துவைத்துப் பழுப் பேறிய ஆடை. அன்றாடச் சலவை ஏற்பாடு நின்று போயிற்று. பெட்டியடிகளில் எல்லாம் எப்போதும் எல்லாரிடையேயும் ஒரே கேள்வி - மூன்று கிளைகளையுடைய பதில் தெரியாத கேள்வி - யுத்தம் எப்போது முடியும், அதுவரை எப்படி வயிறு வளர்ப்பது, இருப்பதை வைத்துத் தின்றால் எத்தனை நாளைக்கு வண்டி ஓடும்?

     ஆ! எப்படி மகிமையோடிருந்த தெரு இப்படி ஆகி விட்டது!

     அந்தக் காலத்தில் காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் - மல்லிகை, சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திருநீறுமாய்க் கை மேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடிப் பையன் கால்களைச் சம்மணமாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர் முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காகப் பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக் கட்டிக் கொண்டிருப்பான்.

     வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி ‘வசூலுக்குப் போகும்’ நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ‘ஆட்டி வைக்கும்’ காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள்.

     மேலாட்கள் திண்டுகளை அணைத்தவாறு குறட்டை விடும் அல்லது ‘ஆண்ஸ்ட்’ சூனாப்பானா கிட்டங்கி மாடியில் ரங்கு விளையாடும். பிற்பகல் வேளையில் அடுத்தாட்கள் கால்களை நீட்டிச் சாய்ந்து உட்காருவார்கள். பெட்டியடிப் பையன்களின் தகட்டு முதுகும் சிறிது தொய்யும். திருப்பத்தூரில் ‘கார் ஏசண்டு’கள் என்ன இபுராகிமும் சாமிக்கண்ணு வும் ‘வந்தே மாதரம்’ ஐயர் கிளப்புக் கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டிப்புரண்டு மல்லுக்கட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்க்காரர்களுக்கும் இடையே 'பொம்பளைச் சங்கதி' யாய் நடந்த கலகம்: சிராவயல் மஞ்சு விரட்டில் மாரியூர் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம் போட்டுப் பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகள் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசி மகிழ்வார்கள்.

     ஊர்த் தபால் வரும் நாளில் திருவிழா உற்சாகம் தாண்டவமாடும். ஒருவருக்கொருவர் கடிதங்களைப் படித்துக் காட்டியும் தெரிவித்தும் ஆனந்தம் அடைவார்கள் - அண்ணே, மட்டிக் கண்மாய் நிறைஞ்சிருச்சாம், இந்த வருசம் சோத்துக்குப் பஞ்சமில்லை... மாப்பிள்ளை, சியாந்தார் சீனாவானாக்கூனா கடையில் பெட்டியடிக்கி இருந்தானே ஒரு ஒத்தை நாடிப் பயல் நல்லமுத்தன், அவன் பெண்டாட்டியைக் குத்திக் கொன்னுபிட்டு நாண்டுக்கினு செத்துப் போனானாம்... மூனாரூனா, உங்க கடைக்கிப் பெரியையா பிள்ளை மேலாளுக்கு வருறார்; சம்பளச் சீட்டு எழுதியாச்சு; ரகசிய நியூஸ்...

     மேல் மாடியிலோ, கீழே ஒதுக்குப்புறமாகவோ அடுத்தாட்கள் கைமேசைகளுக்குப் பின் அமர்ந்து, குறிப்புப் பேரேடுகளை வைத்துக் கொண்டு கணக்கு ஒத்துக்கொள்வார்கள்.

     “எம்பத்தெட்டாம் நம்பர் மாங்காலானில் டாவ்ரோஸ் பெரிய துவான் வீட்டில் சமையல் வேலை பார்க்கும் யாவாக்கார கசான்பாவிரோ பற்று மேற்படியான் பெஞ்சாதி பத்மாவதி ஒண்ணு, லாயர் கோட்கென்ஸ் கந்தோர் கிராணிபூரின் சுக்குமூடா ரெண்டு ஆக ரெண்டு பேர் கூடக் கையெழுத்து பத்து மாதம் தவணைக் கிஸ்தி சேகல் சீட்டு ஒண்ணுக்கு வட்டிகட ருப்பியா* இருநூத்தி நாப்பது?”

     * டச்சு கில்டர் நாணயம்

     “ம்ஹ்.”

     “ஆதாய வரவு மேற்படி வசம் வட்டி ரூபாய் நாப்பது.”

     “தொண்ணூத்தி நாலாம் நம்பர் தெப்பக்கொங் ஸ்திராட் கெடேரம்பா சீனன் தவ்பூசிம் பற்று தங்கக் கழுத்துச்சங்கிலி ஈட்டின் பேரிலும் மேற்படியான் தம்பி மார்க்கெட் ஸ்திராட் புடவைக் கடை தவ் லீ பூன் கையெழுத்துக் கூடவும் இருபது மாதம் தவணை கிஸ்தி சேகல் சீட்டு ஒண்ணுக்கு வட்டி கட ரூபாய் ஆயிரத்தி இருநத்தி அம்பது!"

     “ம்ஹ்.”

     “ஆதார வரவு மேற்படி வசம் வட்டி ரூபாய் அம்பது.”

     “ம்ஹ்.”

     “ஏண்ணே, ஏழா நம்பர் கிட்டங்கி வழுக்கு மண்டை ஒரு மாதிரியாக் காலை அகட்டிக்கிணு திரியிறாரே என்ன சங்கதி, பஞ்சர் கிஞ்சர் ஆகிப் போச்சோ?”

     “அவுகளுக்கு ஆம்பிளை சீக்கு. மேற்படி சங்கதியில் பணத்தை இறுக்கிப் பிடிச்சால் இப்படித்தான். அச்சின் ஓட்டல்ல பிராண்டான்காரி ஒருத்தி சிலுப்பிக்கிணு திரியிராள்ள, ஒரு டரியல் அவகிட்டெக் கொள்முதல் ம்ஹ்.”

     “நூத்திப் பத்தொம்பதாம் நம்பர் பாஞ்சார்க்கார அப்துல் சுபேர் வரவு கணக்குத் தீர ரெண்டு மாதம் கிஸ்தி ரூபாய் இருபத்தி அஞ்சு.”

     “ம்ஹ்.”

     “செலவு மேற்படி வசம் தள்ளிக் கொடுத்தது ரூபாய் ரெண்டு.”

     “ம்ஹ்.”

     “சாட்டர் வங்கி பற்று சமால் ரொக்கம் ரூபாய் மூவாயிரம்.”

     “ம்ஹ்.”

     “இதுவும் பற்று முன் தேதியில் புதிய விடுதல் சமால் செக் ஒண்ணுக்கு ரூபாய் எண்ணூத்திப் பதினெட்டு காசு தொண்ணூத்தி ஆறு.”

     “ம்ஹ்.”

     “டிபூர் தோட்டம் மருதமுத்துத் தண்டல் நடப்புக் கணக்கு வரவு முன் தேதியில் புதிய விடுதல் சாட்டர் வங்கிசெக் ஒண்ணுக்கு ரூபாய் எண்ணுாத்திப் பதினெட்டு காசு தொண்ணூத்தி ஆறு.”

     “இந்தியா நோட்டுக் கொள்முதல் பற்று உலாந்தா வங்கி* வசம் அஞ்சு ரூபாய் நோட்டு நூறும் பத்து ரூபாய் நோட்டு நூத்தி அம்பதும் ஆக இந்திய ரூபாய் ரெண்டாயிரத்துக்கு அறுபத்தி மூணே முக்கால் விலையாக ரூபாய் ஆயிரத்தி இருநூத்தி எழுபத்தஞ்சு.”

     * ஹாலந்து பாங்க்

     “ம்ஹ்.”

     “உடன் வித்து வரவு இந்திய ரூபாய் அறுனூத்தி அம்பதுக்கு எழுபது விலையாக ரூபாய் நானூத்தி அம்பத்தஞ்சு.”

     “உலாந்தா வங்கி செக் மாறலாய் இந்திய நோட்டுக் கொள்முதல் கணக்கு வகைக்கு ரூபாய் ஆயிரத்தி இருநூத்தி எழுபத்தஞ்சு.”

     “மஹ்... இரு, பொதுக்கை கடையில போயி ஒரு கோப்பி குடிச்சிட்டு வருறேன். அப்புறம் நீ போகலாம்.”

     சில கடைகளில் பலசரக்கு வியாபாரம் தொடங்கி நடத்தினார்கள். காபிக் கொட்டை, ஜாதிப் பத்திரி, கருவாப் பட்டை, புளி, மிளகு, சாம்பிராணி முதலியவற்றை வாங்கி விற்றனர்.

     ராணுவ சர்க்காரிடம் அனுமதிச்சீட்டு பெற்று, குறிப்பிட்ட பண்டங்களைப் பாய்மரக் கப்பலில் பினாங்குக்கு ஏற்றுமதி செய்யலாமென்றும், மலேயா அதிகாரிகள் அனுமதிக்கும் சாமான்களைச் சுமத்ராவுக்குக் கொண்டு வரலாமென்றும் பிரகடனமாகி இருந்தது. சில சீனர்கள் ஏற்கெனவே பினாங் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும். வதந்தி உலவியது.

     மொஸ்கி ஸ்ட்ராட்டிலும் ‘பினாங்கு வியாபார’ நாட்டம் தோன்றிப் பேச்சு நடக்கலாயிற்று.

     அன்னெமர் கந்தோரில் மீண்டும் வேலை ஆரம்பமாகியது.

     விமானத்திடலைப் பெரிதாக்கிச் சுற்றிலும் கொத்தளங்கள் அமைப்பதில் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்த ஜப்பானியருக்கு நாள்தோறும் வேலையாட்களும் மாட்டு வண்டிகளும் கொடுப்பனை செய்ய வேண்டும். பிரஸ்தாகி சாலையை ஒட்டிக் காட்டுக்குள் நடந்த ரகசியக் கட்டுமான வேலைக்கு அர்னேமியா ஆற்றிலிருந்து மணல் அள்ளி அனுப்பும் வேலையும் ஏற்கப்பட்டிருந்தது.

     கந்தோரிலிருந்து வெளியேறிய பாண்டியன் மூடு பாதையில் வடக்கே நடந்தான்.

     “பாவன்னா! வாங்க, பார்க்காமல் போறியகளே.” 13 - ஆம் நம்பர் கிட்டங்கிக்குள்ளிருந்து முதல் பெட்டியடிப் பெரிய அடுத்தாள் காளிமுத்து அழைத்தார்.

     “வந்தேன், வந்தேன்.” உள்ளே போய் வாங்குப் பலகையில் உட்கார்ந்தான்.

     “வாங்க, இருங்க.”

     “வாங்கண்ணே, இருங்க” பையன் காபி வாங்க ஓடினான்.

     “ஏப்பு, சப்பான்காரன் இந்தியா டாப்புக்குள்ள நுழைஞ்சிட்டானாமே, உங்களுக்கு என்னமாச்சும் தெரியுமா?" கடைசிப் பெட்டியடி மூனா - பெட்டியடிகளில் பல்லாண்டு காலமாய்க் குனிந்து கணக்கெழுதிக் கூன் விழுந்து குறுதிப் போன முத்துச்சாமி பிள்ளை கேட்டார்.

     “அப்படியொன்றும் தெரியவில்லையே.”

     “நுழைஞ்சிட்டானாம், கல்கத்தா டவுனை அப்படியே பஸ்பமாக்கிப்பிட்டானுங்கிறாக. டவுனுக்குப் பத்துப் பதினஞ்சு மைல்ல இப்பச் சண்டை நடக்குதாம்.”

     பையன் காபி ‘மங்’கை முன்னால் வைத்தான்.

     “ஏண்ணே, சிகரெட்டு?”

     “வேண்டாம், தொண்டைக் கமறல்.”

     காபி ‘மங்’கை எடுத்துப் பருகினான்.

     முத்துச்சாமி பிள்ளை கைப்பெட்டியை நகர்த்திக் காலைப் பரப்பிக் கொண்டு கோப்பிக் கடை சீனர்களிடம் கேள்விப்பட்ட யுத்த வதந்திகளைக் கூறலானார். “பிரிட்டிஷ் படை வடக்கு மலேயாவில் கரையிறங்கி அலோர்ஸ் நகரைப் பிடித்துவிட்டது. ஒரு சீனன் ஜப்பானியச் சிப்பாய் வேஷத்தில் போய், ஜெனரல் யாமஷித்தாவைச் சுட்டுக் கொன்றுவிட்டான்.”

     மற்றப் பெட்டியடிக்காரர்கள் பிளந்த வாயுடன் மூனாவின் சேதிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். காளிமுத்துவின் வாய் பாண்டியனின் காதோரம் நெருங்கியது.

     “இப்பக் கொஞ்சம் குணமாயிருக்குதண்ணே. எரிச்சல் குறைஞ்சிருக்கு. அந்த மருந்துதான் கிடைக்கலை. பணமும் தடவல்.”

     “யாஹ்யாவிடம் சொல்கிறேன். எப்படியாவது வாங்கி வந்துவிடுவான். பணம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.”

     “சரி, நாளைக்கி நேர்ல போயிப் பேசி முடிச்சிக்கிடுவம். நமக்கு அசல் தேறினால் போதும்.” குரலை உயர்த்திக் கூறினார் காளிமுத்து.

     “ஆகட்டும்... நேரமாகிறது” பாண்டியன் எழுந்தான்.

     “சரிபோய்ந்து வாங்கண்ணே.”

     “என்ன, புறப்பட்டாச்சாக்கும். சரி, போய்த்து வாங்க.” இதுவரை ரகசிய உரையாடலின் சாரத்தை இயன்ற அளவுக்கு அறிவதில் கவனமாயிருந்த இலங்காமணிப் பிள்ளை - இரண்டாம் பெட்டியடி முதலாளி, மேலாள், அடுத்தாள், பையன் எல்லாருமே அவர்தான் - பேரேட்டின் மீதிருந்த பார்வையை உயர்த்தித் திருப்பினார்.

     “ஆமப்பு, எல்லாரும் இருங்க. வருறேன்.”

     கிளம்பி வடக்கு முகமாய் நடந்தான். நெடுகிலும் அழைப்புக் குரல்கள் பரிந்தன. பதில் சொல்லிக்கொண்டே போய் ஐந்தாம் நம்பரில் நுழைந்தான்.

     பெட்டியடிப் பையன் வாங்குப் பலகையிலிருந்து குதித்து நாற்காலியை இழுத்துப் போட்டான். அடுத்தாள் நாகலிங்கம் சமையலாளைக் கூப்பிட்டுத் “தண்ணி” கொண்டுவரச் சொன்னான்.

     “ஏய், வேண்டாம்ப்பா, இப்பத்தான் குடிச்சேன்.”

     “சும்மா, ஊத்தி வைங்கண்ணே.”

     உள்ளேயிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்த சமையலாள் காபி தம்ளரை நீட்டினார்.

     “ஏன் சின்னயாண்ணே, கோப்பி கெடுதல்னு சொல்வாகளே, தெரியுமா? இதோட ஆறு.” காபியை வாங்கிக் குடித்தான்.

     “என்னண்ணே கெடுதல், ஓடுற பாம்பை விரட்டி மிதிக்கிற வயசிலே.” தம்ளரை வாங்கிக்கொண்டு திரும்பினார். “பேசிக்கிணு இருங்கண்ணே. வருறேன்.”

     அன்னமெர் கந்தோரில் சேர்வதற்கு முன், இங்கே அடுத்தாளாகக் கொண்டுவிற்ற உரிமையால், பாண்டியனுக்கு இந்தக் கிட்டங்கியில் விசேஷ சலுகைகள் உண்டு.

     “என்னடாப்பா பாண்டியா, இந்தச் சண்டை சாடிக்கை யெல்லாம் எப்படாப்பா ஒழியும்?”

     பானாழானக் கானாரூனா மார்க்கா ஆதரவில் அந்தக் கிட்டங்கியில் ஒரே பெட்டியடி என்ற விதிக்கு விலக்காய் இடம் பெற்றுத் தொழில் நடத்தியவரான ‘வாவன்னாக் கேனாவானா’ - வாழ்ந்துகெட்ட வள்ளியப்ப செட்டியார் - அந்தத் தெருவில் பாண்டியனிடம் ஏகபோகமாய் அடாபுடா உரிமை கொண்டவர். உள்ளேயிருந்து வந்து வாங்குப் பலகைக் கடைசியில் சுவரோரம் இருந்த கைப்பெட்டிக்குப் பின்னே உட்கார்ந்தவாறு கேட்டார்.

     “கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும்.”

     “பெரியவுக சொன்னதெல்லாம் அப்படி அப்படியே நடக்குது. பார்த்துக்கிணுதானே இருக்காய்... குப்பை உயருது; கோபுரம் தாழுது. பிளசர்ல போனவன் நடந்து திரியிறான்; நடந்து திரிஞ்சவன் ஏரப்ளான்ல பறக்கிறான்... உங்க தகப்பனாரெல்லாம் எப்பேர்ப்பட்ட மனுசன்! சொன்ன சொல் தவறாத சத்தியவந்தன். அவரெல்லாம்... ஹ்ம்... திருவிழாவிலே வேசம் போட்டு ஆடினவன்லாம் இன்றைக்கி உங்க ஊர்க் கடைவீதியிலே மனுசன்னி உட்கார்ந்திருக்கான்டா... அக்கரைச் சீமைச் சங்கதியும் அப்படித்தான் போச்சு... எல்லாம் காலக் கோலமுடாப்பா...”

     வாழ்ந்து கெட்டவர் பேசிக்கொண்டே கைப்பெட்டியைத் திறந்து, சிட்டையை எடுத்துக் கீழே வைத்தார். பிறகு, மடியிலிருந்த மஞ்சள் வெல்வெட் பையை வெளியேற்றி அவிழ்த்துத் திருநீற்றை அள்ளி நெற்றியிலும் கழுத்திலும் பூசினார். “முருகா! பழனியப்பா!”

     “நாச்சியப்பண்ணனிடமிருந்து கடிதம் வந்ததா? படகு மாறலில் இரண்டு, மூன்று பேருக்குக் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார்களே?”

     “ஒண்ணையும் காணோம். என்னமோ தெரியலை. எல்லாத்துக்கும் தண்டாயுதபாணி இருக்கான்டா... முருகா! பழனியப்பா!”

     கந்தோர் பையன் வந்து ஐயாவுக் கப்பலா* காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனான்.

     விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். நாளை புதன்கிழமை, தொடர்ந்து அர்னேமியா ஆற்றுக்குப் போக வேண்டியிருக்கும். ஜப்பான்காரப் பயல்களோடு மாரடிப்பது பெருந்தொல்லை. டச்சுக் கைதிகளும் வேலைக்கு வருகிறார்களாம். அது வேறு கண்ராவி...