உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 35. டில்டன் பாண்டியன் கிழிந்த நைந்த பழைய புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். இடப்புறப் பெரிய ஜன்னலுக்கு அப்பால் ஓங்கி வளர்ந்து நின்ற காம்பிர் மரத்தின் மீது பறவைகள் கரைந்தன. ஜாவாக்காரப் பணியாள் மங்குப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவும் ஒலியும், அவனுடைய பாட்டு முனகலும் பின்கட்டிலிருந்து வந்தது. பக்கத்தைப் புரட்டிப் பார்த்தான். இந்தியாவில் மொகலாயப் பேரரசுக்கு வித்திட்ட பாபர் எந்த ஊரிலும் இருமுறை ரம்ஜான் பண்டிகை கொண்டாடியதில்லை; ரம்ஜான் கொண்டாடாமல் இருந்ததுமில்லை. கங்கை உட்பட எதிர்பட்ட ஆறுகள் அனைத்தையும் இருமுறை குறுக்கு மறுக்காக நீந்தியிருக்கிறான். எப்போதுமே செயல் பரபரப்பில் ஈடுபட்டிருந்ததால் அவனுக்கு ஒருபோதும் மனக்குழப்பம் தோன்றியதில்லை. இடக்கை நெற்றியை வருடியது. செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டிய முறையில் செய்துகொண்டே இருக்க வேண்டும். செயலில் மூழ்கினால் சிந்தைக் குழப்பம் இராது. செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது...? மனம் கூறும் தீர்ப்பா, பெரியோர் வகுத்த விதிப்பா? பெரியோர் யார்? பெரியோரென உலகோரால் ஒப்புக் கொள்ளப் பட்டோர்... உலகோர்? ‘உலகம் என்பது உயர்ந்தோர்மட்டே’ உயர்ந்தோரை எப்படித் தெரிவது? முந்திய தலைமுறைகளில் பெரியோர் எனக் கருதபட்டோர் வகுத்துள்ள விதிமுறைகளை வைத்து... ஜீப் வண்டி வந்து நின்ற சத்தமும், அதன்பின் கதவு தட்டப்படுவதும் காதில் விழுந்தது. “வரலாம்” நிமிர்ந்து உட்கார்ந்தான். ‘தபே’ ராணுவ உடையில் வாட்ட சாட்டமாய் வளர்ந்திருந்த டச்சு இளைஞன் ஒளிவீசும் நீலக் கண்களுடன் உள்ளே நுழைந்தான். “மெனீர் பாண்டையான்?” “யா, மெனீர் பாண்டியன்.” எழுந்தான் “டில்டன், மேஜர் யொஹான் கைசர். செக்யூரிட்டி செர்விஸ். தங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.” கை குலுக்கினார்கள். பாண்டியன், பணியாளை விளித்துத் தேநீர் கொண்டு வரும்படி சொன்னான். எதிரெதிராய் அமர்ந்தனர். “முதலில் ஒரு விளக்கம். நான் தனிப்பான்மையில் வந்திருக்கிறேன். பதவி முறையில் அல்ல. லாயர் டில்டனைத் தெரியுமா?” “தெரியும், நெருங்கிப் பழக்கமில்லை.” “அவர் யுத்தக் கைதியாக இருந்தபோது. உயிரை வெறுத்து, அவருக்குப் பேருதவி செய்தீர்கள். அவருடைய உத்தரவுப்படி நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்.” “உதவி! எப்பொழுது? விளங்கவில்லையே.” “அர்னேமியா ஆற்றில். டச்சுக் கைதிகள் மண் அள்ளும் போது.” “ஓ, அதுவா! உயிரை வெறுத்து என்பதும், பேருதவி என்பதும் மிகை... அதுவும் கூட ஜப்பானிய அதிகாரியின் மறைமுக அனுமதியுடன்தான்... அவர் உங்களுக்கு உறவாளிய... இப்பொழுது எங்கே இருக்கிறார்?” “என் தந்தை. இறந்து போனார், விடுதலை பெற்ற சில நாள்களில். மீட்கப்படும் போதே மரணப் படுக்கையில் இருந்தார்.” “என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகமிக நல்லவர். தமிழர்களின் நண்பர். இந்தொனேசியரின் சுயாட்சிக் கோரிக்கையை ஆதரித்த டச்சுக்காரர்களில் ஒருவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.” பாண்டியனின் பார்வை எதிர்ப்புறச் சுவரில் தொங்கிய டோபா ஏரி - ‘நல்ல தண்ணீர்க் கடல்’ - படத்தின்மீது லயித்திருந்தது. டச்சு மேஜர், இடக்கை விரல்களின் பின்புறத்தைப் பார்த்தவாறு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். “உங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் படியும், இயன்ற எல்லா உதவிகளையும் செய்யுமாறும் பலமுறை வற்புறுத்தினார்... இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டுச் சிங்கப்பூருக்கு எழுதினேன்... இடையே போர்னியோவுக்குச் செல்ல நேர்ந்தது. இங்கிருப்பதைக் காலையில்தான் அறிந்தேன்.” “மெடானில் உங்களை நான் பார்த்ததில்லையே!” “யுத்தம் தொடங்கும் போது ஹாலந்தில் படித்துக் கொண்டிருந்தேன். நாஜிப் படைகள் புகுந்த பிறகு, பிரிட்டனுக்குத் தப்பியோடி, ராணுவத்தில் சேர்ந்தேன்.” “தாயார் நலமா? ஒருமுறை எங்கள் கடையின் சார்பாகப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க உங்கள் வீட்டுக்குப் போயிருந்தேன்.” “கைதி முகாமில் நாற்பத்து இரண்டிலேயே இறந்து போனார்.” “வருந்துகிறேன், மிக மிக வருந்துகிறேன். போர் கொடிது.” “எனக்கு போர் அனுபவம் நிறைய உண்டு.” “நானும் ஓரளவு அறிந்திருக்கிறேன்.” “பாண்டையான், எனது கடமைக்கு இழுக்கில்லாத வகையில் உங்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். இது எனது தந்தையின் மரணப் படுக்கைக் கட்டளை.” “நன்றி.” “அது நிற்க. நான் சற்று மனம் விடடுப் பேசலாமா? தங்கள் மலேயா படலம் பற்றி எனக்குத் தெரியும் - பிரிட்டிஷ் 14ஆம் சேனை உளவுத் துறையினர் அளித்த தகவல்.” “உண்மையாகவா! நான் அவ்வளவு பெரிய புள்ளியா?” “அது கிடக்கட்டும். தங்களைப் போன்ற இளைஞர்கள் இந்தொனேசியச் சிக்கல் பற்றிச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமென்பது எங்கள் அவா.” “இதில் சிக்கல் கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்தொனேசியருக்கு எது நல்லது என்பதல்ல இப்போதைய கேள்வி. அவர்கள் வேண்டுவது என்ன...? விடுதலை பெற்ற கொஞ்ச காலத்தில் அவர்களிடையே இனப்பூசல்கள் முளைத்து ஒருவரையொருவர் கழுத்தை அறுத்துக் கொள்ளலாம். அதுவேறு விவகாரம். “கத்தி கேட்டு அழும் குழந்தைக்கு அறிவு போதனை செய்வது கடினம். ஹங்?” “ஆம். வரலாற்றுத் துறையில் எனக்குப் பயிற்சி உண்டு. தொடர்பின்றிக் கிடந்த ஆயிரக்கணக்கான தீவுகளை - பலமொழி பேசும் பல இனங்களை ஒன்றுபடுத்தி ஒரு தேசமாகச் சமைத்தீர்கள். சுதந்திரச் சீனாவில் இல்லாத செழிப்பும் அமைதியும், லஞ்ச ஊழலில்லா அதிகார வர்க்கமும் இங்கே இருந்ததை நான் அறிவேன். ஆயினும், அரசாட்சியில் இந்தொனேசியருக்கு எவ்வித உரிமையுமில்லாமல் செய்திருந்தீர்கள்... உணர்ச்சி வசப்பட்டோருக்குப் பிந்திய உண்மை மட்டுமே புலப்படும்.” “உணர்ச்சிவசப்பட்டோருக்கு நல்லது கெட்டது பற்றி அக்கறையில்லை. ஹங்.” “விரும்புவதா விரும்பாததா, என்பதே கேள்வி.” பையன் தேநீர் கொண்டுவந்து வைத்தான். அருந்தினார்கள். “சென்று போனதை மறந்து இந்தொனேசியரும், டச்சுக்காரரும் இனிமேல் சகோதரர்கள் போல வாழ முடியுமென்பது என் நம்பிக்கை.” “தங்கள் நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை.” சற்று நேரம் இருவரும் பேசவில்லை. டில்டனின் வலக்கை மேசை விரிப்பைத் தடவிக் கொண்டிருந்தது. “பிரிட்டிஷ் ஆட்சி அனுபவத்தைக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் நாட்டில் பிரிட்டிஷார் குடியேறி வாழவில்லை. எனவே, அவர்களுக்கு இந்தியாவின் நலனில் அக்கறை கிடையாது. இங்கே நிலைமை வேறு. யுத்தத்துக்கு முந்திய கணக்குப்படி இரண்டரை லட்சம் டச்சுக்காரர்கள் இந்தொனேசியாவில் நிலையாகக் குடியேறி வசித்தோம். அவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே பிறந்தவர்கள்.” “டச்சுக் குடியேற்றத்தை நீங்கள் நற்செயல் என்று கருதுகிறீர்கள். இந்தொனேசியருக்கு அது வேறு விதமாகப் படலாம்.” “மன்னிக்கவும், என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். எனது பாட்டனார் மெடானில் குடியேறினார். என் தந்தையும், நானும் இங்கேயே பிறந்தோம். எனக்குத் தாயகம் எது? இந்தொனேசியாவா, ஹாலந்தா?” “தேசியம் என்பது உணர்ச்சியடியாகப் பிறப்பது. மொழி, இன வேற்றுமைகளை மிகைப்படுத்துவது அதன் பிரதானக் கோட்பாடு.” “அப்படியானால் டச்சுக்கொடி வழியில் வந்த இந்தொனேசியனான என் கடமை என்ன?” “நெஞ்சின் முடிவைப் பின்பற்றுங்கள்.” “குடியரசுக் கட்சியினரின் எதிர்ப்பை நசுக்கிவிட்டு இந்தொனேசியா எங்கிலும் டச்சுக் கொடியைப் பறக்கவிடும்படி என் நெஞ்சு கூவுகிறது.” “நான் சொன்னேனே, தேசியம் உணர்ச்சி வழியாகப் பிறப்பதென்று... அவரவர் கடமையை அவரவர் மனசாட்சிக்கு நல்லபடியாகத் தோன்றும் வகையில் அவரவரே நிறைவேற்ற வேண்டும். வேறு வழியில்லை.” “ஆகவே ஒவ்வொரு செயலுக்கும் நெஞ்சின் தீர்ப்பு என்ற நங்கூரம் வேண்டும், இல்லையா?” “தன் மனமே தன்னைச் சுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடே அது.” “அந்தப் பாதுகாப்புடன் எதுவும் செய்யலாம் - கொல்லலாம். எரிக்கலாம், நொறுக்கலாம்?” “ஆமென்.” டில்டன் சிரித்தான். சற்று நேரத்துக்கு முன்தோன்றி மறைத்த ஐயத்திரை விலகியது. இருவரும், இன, மொழி, மத வேறுபாட்டைக் கருதாத பரந்த மனப்போக்குடைய இளைஞர்களாய் - எந்த நிலவரத்துக்கும் சித்தமானவர்களாக சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர். “இன்னொரு விஷயம். இந்தொனேசியாவுக்குத் திரும்பியதும் இரண்டு விரதங்களை மேற்கொண்டேன். ஒன்று: உங்களைப் பார்த்து நன்றி தெரிவிப்பது. இரண்டு: எனது சகோதரியைக் கொன்ற ஜப்பானியனைக் கண்டுபிடித்துப் பழிவாங்குவது.” “தங்கள் சகோதரி கப்பலேறவில்லையா?” “கணவனுடன் பிராண்டானில் இருந்தாள். எதிர்பாரா விபத்து காரணமாகக் கப்பல் தவறிவிட்டது... சிங்கப்பூரில் சடாவோ யாமசாக்கி என்ற கெம்பித்தாய் மேஜர்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அதற்குமுன் ரங்கூனில் இருந்தவன். நாற்பத்து இரண்டில் ஜப்பானியப் படைகளோடு வந்து கொஞ்சம் காலம் மெடானில் இருந்திருக்கிறான்.” “ஏன் கேட்கிறீர்கள்?” “என் சகோதரியைக் கொன்றவன்... கடைசிக் கட்டத்தில் மெடானுக்கு வந்தான் என்று தெரிகிறது - சிங்கப்பூர் தகவல்படி. பிறகு என்ன ஆனான் என்று தெரியவில்லை - தடமே கிடைக்கவில்லை.” எதிரிலிருந்தவன் முகத்தை ஒரே பார்வையாய்ப் பார்த்தவாறு பாண்டியன் உட்கார்ந்திருந்தான். இருவர் கண்களும் சந்தித்தன... டச்சுக்காரனின் பேச்சு தடைப்பட்டது. ஏன்? ஏனிந்தப் பார்வை... “செத்துப் போனான்.” “யார்?” “கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கி.” “உண்மையாகவா! எப்படித் தெரியும்?” “நானே கொன்றேன்.” “என்ன யென்ன?” பரபரப்புடன் எழுந்து பாண்டியன் முகத்தை ஐயத்துடன் நோக்கினான். “எங்கே யெப்படி?” “மெடானுக்கு அருகேதான். கோத்தா ராஜா சாலையில்.” “ஏன்?” “மேலிடத்துக் கட்டளை.” “மன்னிக்கவும், அவன் செத்தது - தாங்கள் அவனைக் கொன்றது உண்மையா?” “ஆம், சிங்கப்பூரிலிருந்து பின்பற்றி வந்தோம். உங்கள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கேயே வேலையை முடிக்க நினைத்தேன், முடியவில்லை. திட்டத்தை மாற்ற நேர்ந்தது. தயவு செய்து உட்காருங்கள்.” “அப்புறம்?” நாற்காலி விளிம்பில், உடலை முன்னே குனிந்து அமர்ந்தான். “சாபாங்குக்குப் புறப்படும் நேரத்தை அறிந்து வழியில் காரை மறித்தோம்.” “மன்னிக்கவும், என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?” “மேலிடத்துக் கட்டளை.” “பான்டையான், இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” வலக்கையை நீட்டியவாறு எழுந்தான். “என் மனமார்ந்த நன்றி. டில்டன் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் நன்றி.” “தயவுசெய்து மிகைப்படுத்த வேண்டாம். யுத்த காலத்தில் இது சாதாரண நிகழ்ச்சி. எத்தனையோ பயணங்கள்... எத்தனையோ இடைச்சுரச் சாவுகள்.” “யா, பலப்பல... மீண்டும் நன்றி, என் மனமார்ந்த நன்றி.” கைகுலுக்கியபடியே சில விநாடிகள் மவுனமாய் நின்றனர். “என் கடமைக்கு இழுக்கில்லாத வகையில் எல்லா வழிகளிலும் தங்களுக்கு உதவச் சித்தமாயிருக்கிறேன், நேரமாகிறது... தபே.” “தபே.” “மீண்டும் சந்திப்போமாக!” “கட்டாயம் சந்திப்போம்.” புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|