நுனை

9. பயணம்

     மொஸ்கி ஸ்ட்ராட் 18 - ஆம் நம்பர் கிட்டங்கி.

     சாயங்கால நேரம்.

     ரம்புத்தான் பழத்தை உரித்துத் தின்று கொண்டிருக்கும் காயாம்பு பிள்ளை - முதல் பெட்டியடி சீனாக் காவன்னா மார்க்கா முதலாளி - எதிரே, வாங்குப் பலகையில் அடக்கம் என்றோ அல்ல என்றோ திட்டமாய்ச் சொல்ல முடியாதபடி, ஒரு காலைச் சம்மணம் கூட்டியும் மறுகாலைப் பாதம் பலகையைத் தொடும்படி குத்த வைத்தும், அலமாரியில் லேசாகச் சாய்ந்தமர்ந்திருக்கும் மூன்றாவது பெட்டியடி மேலாள் முருகையா பிள்ளையிடம் கூறுகிறார்:

     “தண்டாயுதபாணி கிருபையில் நல்லபடியாய் போய்த்து வரட்டும்; வேணாமுங்கலை, ஆனாக்கா எனக்கு என்னமோ பிடிக்யலை.”

     “ஆமாமா, அது சரிதான்.”

     “த்தூ... தத்தூஉஉ...” நாற்காலி அருகே வாயைப் பிளந்து நிற்கும் பணிக்கத்தில் கொட்டையைத் துப்பிவிட்டு, எதிரே நின்ற பையன் இரு கைகளிலும் பற்றியிருந்த தண்ணீர்செம்பை வாங்கி வாயைக் கொப்புளித்துத் துப்புகிறார் காவன்னா.

     செம்பை வாங்கிக் கொண்டு பையன் போகிறான்; போய் மறைந்து விட்டான்.

     “டேய்! அட பயகா!”

     “ஏன், இந்த வந்துட்டென்.” முன்னே, பெட்டியடியில் பேரேடு பதிந்து கொண்டிருந்த அடுத்தாள் எழுந்து, இறங்குகிறார்.

     “அந்தப் பயலை, ம்ம்... அந்த இந்த மாத்திரையை எடுத்தாரச் சொல்லு; அலமாரியில இருக்கு.”

     அடுத்தாள் உள்ளே விரைகிறார்.

     (காவன்னா எடுத்து வரச்சொல்வது ராயல் மன்மத சஞ்சீவி மாத்திரை - ‘எத்தனை வயதானாலும் கவலை வேண்டாம். நாளைக்கு மூன்று வேளையாக ஒவ்வொரு மாத்திரை; ஒரே ஒரு மண்டலம் சாப்பிட்டால் போதும். இழந்த வீரியத்தை மீண்டும் பெறலாம். பெண்களைக் கவரும் கட்டழகும் காந்த சக்தியும் உண்டாகும். பத்தியமில்லை. குணமின்றேல் பணம் வாபஸ்.’ - பிள்ளையவர்களுக்கு ஆவணி பதினேழோடு ஐம்பத்தொன்பது முடிந்து அறுபது நடக்கிறது... பினாங்கில் வாங்கிய மருந்து. வேறு சீசாவில் மாற்றிப் போட்டு வைத்திருக்கிறார்.)

     “வயிறு ஒரு மாதிரியா இடக்குப் பண்ணுதுல, அதுக்கு நல்லதுனு சொன்னாக.”

     “ஆமாமா, அததுக்குச் செய்யிறதை அப்பப்பச் செய்யணுமுல.”

     பையன் வேவேகமாய் வந்து சீசாவை நீட்டுகிறான்.

     “அட கூதறைப்பலே, மேல் தட்டுல இருக்கிற போத்தல்ரா, ஊதாப் போத்தல். பெண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிறது சரியாப் போச்சுதுல. போடா கொதக்குப்பலே, போ.”

     பையன் படிக்கட்டை நோக்கி விரைகிறான்.

     “என்ன, எல்லாம் சேர்ந்து நாப்பது ரூபாய் சரக்குத் தேறுமா?” மூனா ரூனாவின் பதவிசான குரல் கேள்வி கேட்டது.

     “நாப்பதாவது, அம்பதாவது, ரொம்பப் போனால் இருபத்தஞ்சு, முப்பது. அதுக்கு மேல போகாது.”

     “இல்ல, பேச்சுக்களைப் பார்த்தால் லெச்சக் கணக்குல சரக்கு ஏத்துறாப்புல இருக்கேன்னி கேட்டேன்.”

     “பேச்சுக்கென்ன, முதலா, வட்டியா? என்னமும் பேசலாம். தேயிலை, கோப்பி, சாதிப்பத்திரி இதுகளை இங்கயிருந்து கட்டிக்கிணு போயி, அங்கயிருந்து துணிமணிகளை அள்ளியாரத்துன்னி திட்டம் போலருக்கு.”

     “திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு... சண்டை சாடிக்கையான காலம். வழியிலே ஒண்ணு ஆனாப் போனா...”

     “அதைப்பத்தி நமக்கென்ன. அவுகவுக நோக்கத்துக்குப் போறாக.” உடலைப் பின்னே சாய்த்துக் கால்களை நீட்டிக் கைகளை உயர்த்திய காவன்னா, கொட்டாவி விடுகிறார். எழுந்து நின்று இப்படியும் அப்படியுமாய் உடலை அசைத்துத் திருப்பிச் சோம்பல் முறித்துவிட்டு மீண்டும் குரிச்சியில் அமர்கிறார். “ம்ம்... அவுகவுக நோக்கத்துக்குப் போறாக. இப்பத்தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலமுனு ஆகிப் போச்சே. அந்தக் காலத்தில மாதிரி, புதுசா ஒரு காரியத்தைச் செய்யிறதுன்னாப் பெரியவுக தெரிஞ்சவுகளைக் கலந்துக்கினு செய்வமுங்கிறதெல்லாம் இப்ப ஏது? அதது தன் மூப்பாகி ஆட்டம் போடுது.”

     “ஆமாமா... ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நாளைக்கிப் பயணமுன்னாக...”

     “போயி நல்லாப் பணங்காசை அரிச்சிக்கிணு வரட்டும். யாரும் வேணாமுங்கலை. நம்ம செட்டி வீட்டு ஆளுகளோட, அன்னெமர் வகைக்கி அந்தப் பாண்டியன்கிற பையனும் - அதுதான் அந்த நாடா வீட்டு ஆள் - பானா ழானாக் கானா ரூனாவில அடுத்தாளுக்கு இருந்த பையன் போறாப்புல இருக்கு.”

     பையன் ஊதாச் சீசாவையும் தண்ணீர்ச் செம்பையும் கொண்டு வருகிறான். வாங்கி இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்கிறார். பிறகு ஏப்ப வரிசை: “பா அஹ்வ்... பா அஹ்வ்.”

     செம்பையும் சீசாவையும் எடுத்துக் கொண்டு பையன் உள்ளே போகிறான்.

     “ஆமா, அப்படித்தான் சொன்னாக.” முருகையா பிள்ளை குறிப்பிட்டார். “அது ஒரு தினுசான ஆளு; நிமுந்த மாடல். நம்ம செட்டி வீட்டுச் சைசு கொஞ்சங்கூட இல்லையே! பானா ழானாக் கானா ரூனா மார்க்காவில கொண்டு வித்த ஆளுன்னி சொல்லவே முடியாது.”

     “தேசங்கள் தோறும் பாசைகள் வேறு. அவுகள்ளாம் தெக்கித்தி ஆளுக. அருப்புக்கோட்டைப் பக்கம். வந்தேறுங்குடி... அவுக அப்பு சின்ன மங்கலத்திலே அந்தப் பிள்ளையார் கோயிலுக்கிட்டே கடை வச்சிருந்தாரு...”

     “சரி சரி, அப்படியா! ம்ம், நாலு நாளில பினாங்கு போயிறலாமா?”

     முருகையா பிள்ளை வாங்குப் பலகையிலிருந்து இறங்கி நடையனை மாட்டுகிறார்.

     “ஆமாமா, நாலு நாளாச்சிலும் பிடிக்யுமுல... என்ன, காத்து வாங்கவா, தானா லாப்பானுக்குத்தானே, சரி, போய்த்து வாங்க.”

*****
     பினாங் பிரயாணிகள் பிலவான் துறைமுகத்துக்குப் புறப்பட்டனர்.

     அன்னெமா சார்பில் பாண்டியன் போகிறான். மற்றவர்கள்: சா.மு. ஆண்டியப்ப பிள்ளை - சொந்தக்கடை முதலாளி. சி.வயி. வயித்திலிங்கம் பிள்ளை வகைக்கு மருமகன் சண்முகம் பிள்ளை - மனையாளின் முகத்தைச் சானா பார்த்து வள்ளிசாய்ப் பன்னிரண்டு வருஷம் மூன்று மாதம் எட்டு நாளாகிறது. ‘டோனிக்கோ’ கண்ணப்ப செட்டியார் கடைக்குப் பெரிய அடுத்தாள் நல்லகண்ணுப் பிள்ளை - பிள்ளை என்ற கோனார். முரு.நா.சி. மார்க்காவுக்கு மேலாள் ‘உப்புக் கண்டம்’ அண்ணாமலைப் பிள்ளை - ‘ஆனா போடுற முடிச்சை அவர் வந்துதான் அவுக்கணும்.’ சி.ப. சங்கப்ப பிள்ளை - பிள்ளை என்ற சேர்வை - சொந்தக் கடை முதலாளி. நா. முத்தையா பிள்ளை சார்பில் மகன் சாமிநாதன். முரு. சாத்தப்ப செட்டியார் வகைக்கு அடுத்தாள் அங்கமுத்து.

     மண்ணெண்ணெய்ப் புகையைக் கக்கிக்கொண்டு மொத்தோர் விரைந்தத்.

     தபால் கந்தோரைக் கடந்த பின் டெல்லி மாட்ஸ் கப்பை. கெமெந்தே ஆஸ்பத்திரி. பேப்பேயம் பெட்ரோல் கிடங்கு கருகிக் கிடக்கிறது. குளுகூர். செழித்துக் கொழுத்து வளர்ந்து நிழல் பரப்பி நிற்கும் மரங்கள். பூலுபிரையான். கிழக்கே பிரியும் பாதையின் இருபுறமும், தோப்புகளின் நடுவே மரத்துண்டுகளின் மீது அத்தாப்பு வீடுகள்.

     பாண்டியன் நெற்றியைத் தடவினான். இந்த முக்கில்தானே மலாய்க்காரிபோல் உடை அணிந்திருந்த தமிழ்ப்பெண், “கண்ணு வலிக்கி நேர்ந்துக்கிட ஊர்ல கண்ணாத்தா கோயில்னு இருக்குதாமே, தெரியுமா?” என்று கேட்டாள். ஆமாம், நாட்டரசன் கோட்டைக் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் -

     நாட்டரசன் கோட்டையில
     நல்லதொரு கண்ணாத்தா
     கண்ணுவலி தீர்த்தாயானால்
     அம்மா கண்ணாத்தா
     கண்ணிரண்டும் தந்திடுவேன்
     தாயே கண்ணாத்தா.

     லபுவான். சாராயக் கடைக்கு முன்னால் டோபி பச்சையன் மூங்கில் நாற்காலி மீது அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார். தரையில் இந்தொனேசியர், சீனர், தமிழ்த் தொழிலாளர்கள் குந்தியிருக்கிறார்கள். கடைவீதி, வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள், காடாக மண்டிக் கிடக்கும் நானாஸ் செடிகள்.

     பிலவானில் மொத்தோர் நுழைந்தது. சேற்று நெடி. கடல் வற்றம் போலிருக்கிறது. இடப்பக்கம் மாஜி மொஸ்கி ஸ்ட்ராட் சமையலாள் பெரியாம்பிள்ளையின் ஆப்பக்கடை. மனைவி உள்ளூர்க்காரி - தமிழ்ப் பெண். மணிலா வாத்துபோல் பின்புறத்தைத் துருத்திக் கொண்டு கடைக்குள் இங்குமங்குமாய் நடந்து திரிகிறாள்.

     பெட்டி, படுக்கைகள், சிப்பங்கள் தொங்கானில் ஏற்றப்பட்டன. பயணம் சொல்லிக் கொள்ளும் படலம் தொடங்கியது.

     “ரத்தினம், போய்த்து வர்றென்.”

     “போய்த்து வாங்கண்ணே.” அன்னெமர் கந்தோர் பையன் கும்பிட்டான். “அண்ணே, ம்ம்...”

     “என்ன?” பாண்டியன் நெருங்கினான்.

     “எங்க அப்பு கோலக்கங்சார்ல அடுத்தாளுக்கு இருந்தாக. குண்டுல என்ன ஆச்சுதோ தெரியலை.” பொலபொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. “அவுக...”

     “பெயரென்ன, சிவகாமி பிள்ளையா?”

     “சொக்கையா பிள்ளை. ராங்கியம் கடை. சீனா வானா மூனா ரூனா மார்க்கா.”

     “அப்புவைப் பார்த்துத் தகவல் எழுதுறேன். கடிதம் வைச்சிருக்கிறாயா?”

     “ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ஆமாண்ணே.” கடிதத்தை நீட்டினான்.

     “கிறுக்கனாயிருக்கிறாயே. மனசைக் கலங்கவிடக் கூடாது.”

     “கடிதமே வரலையண்ணே.”

     “கோலக்கங்சாரில் இருப்பவர் படகில் எப்படிக் கடிதம் கொடுத்துவிடுவார்? தைரியமாயிரு. பாத்துக் கடிதம் வாங்கி அனுப்புறேன்.”

     “ஆகட்டுமண்ணே... ஊர்ல காணிகரை ஒண்ணுமில்லை. எங்க ஆத்தாளும் தங்கச்சியும் என்ன பாடுபடுறாகளோ... நாங்க ஆம்பிளையக ரெண்டும் பேரும் ம்ஹ்ம்... ம்ஹ்ம்...”

     “கண்ணைத்துடை. பொம்பளையா நீ, கண்ணீர் விடுவதற்கு. ஆத்தாளும் தங்கச்சியும் ஒரு குறையுமில்லாமல் இருப்பார்கள்.”

     ரத்தினம் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். சராயும் கோட்டும் அணிந்து, புதுப்பாணியில் தலைமுடியை வாரி விட்டிருப்பினும், குழந்தைத்தனம் முற்றாக மாறாத பருவம்.

     “அண்ணே, எங்க அப்பு தட்டுப்படாமல் போனால், எங்க ஊர் செட்டியார் ஒருத்தர் பினாங்கில இருக்கார், ‘மொக்கை’ பழனியப்ப செட்டியார்னு. அவரைப் பார்த்துக் கேளுங்க... நான் இங்கெ இப்படி இருக்கேன்னியும் சொல்லுங்க. நாளைக்கி ஒண்ணு ஆனாப் போனால் ஊர்ல தெரிஞ்சிக்கிடட்டும்.”

     “சரி, தைரியமாயிரு. போய்த்து வர்றேன்.”

     “ஆகட்டும், போய்த்து வாங்கண்ணே.”

     தொங்கான் புறப்படப் போகிறது. சீன மாலுமிகள் இங்குமங்குமாய் ஓடிக் கூச்சல் கிளப்பிக் கயிறுகளை அவிழ்த்துச் சுருட்டுகிறார்கள்.

     இறுதி விடையளிப்பு; தொங்கானிலிருந்த பிரயாணிகளும் கரையில் நின்ற உற்றாரும் மாறி மாறிக் கத்தினார்கள்;

     “எல்லாரும் இருங்க, போய்த்து வர்றோம்... எல்லாரும் போய்த்து வாங்க... மூனா ரூனா! கடையைக் கவனிச்சிங்கங்க... மாப்பிள்ளை! தீனாவை அவசியம் பார்த்து ஊர்ப் பாக்கி விசயத்தைக் கேட்கணும்... ஆவன்னா! நீங்கதான் வயதாளி, சாமான் சட்டுகளைப் பத்திரமாய்ப் பார்த்துக்கங்க... எல்லாரும் “தண்ணிமலையானுக்கு* நேர்ந்துக்கிணு போங்க. ஒரு கோளாறும் வராது... எல்லாரும் இருங்க, போய்த்து வர்றோம்... எல்லாரும் போய்த்து வாங்க...”

* தண்ணீர்மலை ஆண்டவன் - பினாங் தண்ணீர் மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான்.

     தொங்கான் வடக்கு நோக்கி ஊர்ந்து சென்றது. துறைமுகம் மறைந்தது. மரப் பச்சை தேய்ந்து கரைந்து கொண்டிருந்தது.