உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 19. நீசூன் நீசூன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த பாண்டியன், யுத்தக் கலைக் கல்வியிலும், கள நடவடிக்கைப் பயிற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஆயுதப் பயிற்சி, தலைமைப் பயிற்சியோடு, நெருக்கடி நேரங்களில் சிந்தனை, தீர்வு, செயல் துரிதத்தின் அவசியத்தை, முக்கியத்தை பள்ளி ஆசிரியர்கள், கர்னல்கள், மேஜர்கள், காப்டன்கள் குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தின்கீழ், இயன்ற அளவு மாணவ அதிகாரிகளுக்குப் புகட்டினார். கே.கே. ரேசன் - கார்மேக வேளார் மகன் கதிரேசன், ஆர்.சி. மாசானம் போன்ற சில இனிய நண்பர்களின் அறிமுகம் பாண்டியனுக்குக் கிடைத்தது, நீசூன் முகாமிலேதான். முன்னையோன் மலேயாவிலேயே பிறந்து வளர்ந்து படித்து வேலை பார்த்தவன். பின்னையவனோ தென்கிழக்கு ஆசியப் போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக அண்ணன் தேடி வைத்திருந்த வேலையை ஏற்க, மலேயா வந்து சேர்ந்தவன். பரந்த கல்வி அறிவும் சிந்தனைத் திறனும் கொண்டவன் ரேசன். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாயிருந்தும், தமிழ்நாடு பற்றி ஆங்கில நூல்கள், பத்திரிகைகள் வழியாக நன்கு அறிந்திருந்தான். மாசானமோ இதற்கு நேர்மாறானவன். தேவை - இன்றியமையாத் தேவை - எவ்வளவோ அந்த அளவோடு கல்வியைச் சுருக்கிக் கொள்ளும் இயந்திர யுக குணம் அவனிடம் பூரணமாகக் குடி கொண்டிருந்தது. ஆனால் ரேசனைப் போல அஞ்சா நெஞ்சமும் செயலாற்றலும் உள்ளவன். நீசூன் காலத்தில் மாணிக்கத்துடனும் ரேசனுடனும் பாண்டியன் நடத்திய வாதப் பிரதிவாதங்கள் பலப்பல. சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், கடமை, ஒழுக்கம் முதலான கோட்பாடுகள் பற்றி அவர்கள் துருவித் துருவி ஆராய்வதுண்டு. இந்திய சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கப் போவதாகவும், அதற்குத் தேவையான தகுதியும் திறமையும் தம்மிடம் இருப்பதாகவும், இளமைத் துடிப்போடு அவர்கள் நம்பினார்கள். அது சம்பந்தமான வேலைத் திட்டங்கள் பற்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஆராய்ந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் மிகுந்த இந்தியாவுக்குப் பொருத்தமான வாக்குரிமை முறை என்ன? தலைக்கு ஒரு ஓட்டா, தகுதிக்குத் தகுந்த அளவில் ஓட்டா? தகுதியை எப்படி - எந்த அடிப்படையில் வரையறுப்பது? வழக்கு நோய் பிடித்த எளியவர்கள் அதிகமாயுள்ள நம் நாட்டுக்கு உகந்த நீதி பரிபாலன முறை எது...? இந்தியாவின் தலைவிதியே தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதுபோல் அவர்கள் பேசினார்கள்; ஆராய்ந்தார்கள்; கனவு கண்டார்கள். அது இளமையின் நம்பிக்கை மேலோங்கி நின்ற காலம்; யுத்த நெருக்குதல் காரணமாகக் கனவுப்பான்மை மிகுந்திருந்த சமயம். இந்தியா விடுதலை பெற்றதும், முதல் வேலையாக எல்லாருக்கும் உணவு, உடை, வீடு! மூவருக்கும் விருப்பமான இந்த லட்சியத்தைப் பற்றிப் பேசுவதும், அதை அமலாக்குவதற்கான திட்டங்களை வகுப்பதும், அவர்களின் மனதுக்கினிய பொழுதுபோக்காக இருந்தது. சுதந்திரம் கிடைத்ததுமே, எவ்விதச் சிக்கலுமின்றி, அந்த மூன்றும் எல்லாருக்கும் கிட்டிவிடுமென அவர்கள் நம்பினார்கள். ஓர் உத்தரவு; எல்லாருக்கும் உணவு, உடை, வீடு! அது நம்பிக்கைக் கனவுகள் மிகுந்திருந்த இளமைப் பருவம். வாரத்துக்கு ஒரு நாள் நகருக்குப் போய் வரலாம். சிங்கப்பூரின் பெயர் இப்போது சியோனன் தோ- தென் கடல் பட்டணம் - என்று மாற்றப்பட்டிருக்கிறது. ராஃபிள்ஸ் சதுக்கத்தில் முன்போல் பளபளக்கும் பெண்களையும், புதுப்புது ஊர்திகளையும் பார்க்க முடியாது. தெருக்களில் கழுகுப் பார்வையுடன் வேசையர் திரிகிறார்கள். பிரிட்டிஷ் ‘ஜானி’களின் காலம் மறைந்து விட்டது. இப்பொழுது நிப்பன் சிப்பாய்களுக்குத் தனி விடுதிகள், தனி வேசைகள். தமிழ் மாணவர்களின் ஊர்வலம் சிராங்கூன் சாலை கச்சி மொய்தீன் உண்டிக் கடையில் போய் முடியும். அரைச் சைவன் செல்லையா வேண்டாவெறுப்புடன் தட்டுக்களைக் கிண்டுகிறான். முழுச் சைவன் மணி வெறும் ரசத்தில் சோற்றைப் பிசைந்து தின்கிறான். “மணி!’’ கையில் கோழித்துண்டைத் தூக்கிப் பிடித்திருந்த பாண்டியன் கூப்பிட்டான். “ஜனகனின் குலகுரு யாக்ஞவல்கியன் மாட்டிறைச்சி தின்பது பற்றி என்ன சொன்னான், தெரியுமா?” “தெரியாது” “‘மாட்டுக் கறி தின்பது பாபமாக இருக்கலாம். இருப்பினும் பல்லுக்கு மெதுவாக இருந்தால் தின்னவே தின்பேன்.’ - என்றான் அந்த பிராமணோத்தமன்.” ஐந்தாறு கைலிக் கடைக்காரர்கள் - புதுச்சேரி ஆட்கள் - சளசளவென்று பேசிக்கொண்டே நுழைந்தனர். நாற்காலிகள் இடம் பெயர்ந்தன. தீனிக் கச்சாத்து ஒலி கிளம்பியது. “மாணிக்கம், பாண்டி சொல்வது உண்மையா, இட்டுக் கட்டின கதையா ?” “யாக்ஞவல்கியன் மாட்டுக் கறி தின்றானோ என்னவோ, அவன் அவ்வாறு சொன்னதாக நம்பப்படுவது உண்மை. பல்லுக்கு மெதுவாக இல்லாதது உடலுக்குக் கெடுதல்; எனவே விலக்க வேண்டும் என்பது அவன் கூற்றின் உட்கிடை... வேத காலப் பிராமணர்களுக்கு மாட்டுக்கறி இன்றேல் தொண்டைக்குள் சோறு இறங்காது. இதை விலக்கியது பின்னர், நம் தேச வெக்கைக்கு மாவன்னாக் கானா உகந்ததல்ல என்று தெரிந்த பிறகு.” “தமிழ்நாட்டிலேயே நம் மூதாதையர் மாட்டுக்கறி தின்றிருக்கிறர்கள்.” பாண்டியன் குறிப்பிட்டான். “என்ன?” “நீ பேசாமலிரு.” மணியிடம் செல்லையா சொன்னான். “இருவரும் கூடிப் பேசிக்கொண்டு கதை கட்டுகிறார்கள்.” “தமிழர்களே!” பாண்டியன் கைகளை அகல விரித்தான். “மாடு தின்ற நம் முன்னோரின் பீடு பற்றிக் குடவாயில் கீரத்தன் கூறுகிறான், கேளுங்கள் -
கல்சேர்பு இருந்து கதுவாய்க் குரம்பை தாழிமுதழ் கலித்த கோழிலைப் பருத்தி பொதி வயிற்றிளங்காய் பேடை ஊட்டி போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ் நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக் கொழுப்பாத்* தின்ற கூர்ம்படை மழவர்...
* கொழுத்த பசுமாடு பாட்டு புரிகிறதா? இது சங்க காலத்தில் நிகழ்ந்தது.” “பாட்டு புரியவில்லை. ஆனால் நீ சொல்வது பொய். தமிழனாவது மாட்டுக்கறி தின்பதாவது.” அப்துல் காதர் முகத்தைச் சுளித்தான். “யாராவது வட நாட்டுக்காரர்களாக இருக்கும்.” “கீரத்தன் குறிப்பிடுவது தமிழ்நாட்டுப் போர் வீரர்களை - கூர்ம்படை மழவரை.” “அதற்குமுன்னர் நம் மூதாதையர் யானைக் கறியும் தின்றார்கள்” மாணிக்கம் கூறினான். “தொண்டியாமூர் சாத்தன் சொல்கிறான், கேளுங்கள் -
...புலி தொலைத்துண்ட பெருங் களிற்றொழி ஊன் கலி கெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை ஞெலி கோறிசிறு தீமாட்டி ஒலிதிரைக் கடல் விளை அமிழ்தின் கணம்சால் உமணர் சுனை கொள் தீம்நீர் சோற்றுலைக் கூட்டும்... என்பது அந்த பாட்டின் ஒரு பகுதி. இதில் மறவர்களும் உப்பு வியாபாரிகளும் யானைக் கறி தின்பதைக் காண்கிறோம்.” “யாரோ ஒருத்தன் கள்ளைக் குடித்துவிட்டுக் கைக்கு வந்ததை எழுதி வைத்திருப்பான்.” அப்துல் காதர் சொன்னார். “மாட்டுக்கறி, யானைக் கறி... இடைச்செருகல் என்று புலவர்கள் சொல்கிறார்களே, அந்த மாதிரிப் பாட்டோ, என்னவோ?” “அசல் பத்தரை மாற்றுப் பசும்பொன் என்று புலவர் பெருமக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாட்டு இது. யானைக் கறி தின்றவன் வேறு என்னென்ன செய்திருப்பான் என்பதை நீயே யூகித்துக் கொள்.” “உனக்கு இதுதான் வேலை. ஏதாவது குப்பையைக் கிளறிப் பார்த்துவிட்டுக் கதை சொல்வாய்... சரி, கிளம்பலாம்.” “பாண்டி! காரைக்குடிக் கீழையூரணிக் கரையில் திருநெல்வேலி சைவாள் ஒருவர் இட்லிக் கடை வைத்திருக்கிறாரே, அங்கே இட்லி தின்று பார்த்திருக்கிறாயா?” நாகப்பன் கேட்டான். “ஏன், அவ்வளவு நயமா? அங்கே இட்லிகூட மண்பானைச் சமையல்தானே?” “அகடவிகடம் பேசத்தான் தெரியும் உனக்கு. தின்று பார்த்தால் தெரியும், பஞ்சு மாதிரி இருக்கும்.” “சரி. ஊருக்குப் போனதும் முதல் வேலையாகக் காரைக்குடி கீழையூரணிக் கரைக்குப் போகிறேன்.” தென்கோடியில் கை கழுவிய தங்கவேலுவின் துன்பியல் பாட்டுகளில் ஒன்று மென்குரலில் கிளம்புகிறது.
காரைக்குடியிலே கல்லுக்கட்டி வீதியிலே கோடிசன மத்தியிலே கொப்பாத்தாள் வாசலிலே மாவிளக்கு வைக்கையில மச்சிமகன் வந்தானே தாலி அறுந்திடவே தந்தியை நீட்டினானே எஎ நாகப்பனின் எதிர்ப்பாட்டுக் கிளம்பிற்று -
அடியே காரைக்குடியுமென்ன கல்லுக்கட்டி வீதி என்ன கோடிசன மத்தி என்ன கொப்பாத்தாள் வாசலென்ன காலன் வருகையிலே - நாமள் கைமறிக்ய முடியா அஅதடீ கச்சி மைதீன் கடையிலிருந்து வெளியேறுகிறார்கள். இருட்டி விட்டது. இங்கொருவர் அங்கொருவராய் வழிப்போக்கர் நடக்கிறார்கள். கட்டிடங்களுக்குள் முகமூடி தரித்த மங்கல் வெளிச்சம் தெரிகிறது. மாணவ - அதிகாரிகள் பள்ளி முகாமை நோக்கி விரைகிறார்கள். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|