நுனை

3. ஐந்து தலைகள்

     சுங்கை ரெங்காஸ் வே டெப்போவைப் பார்த்து வரக் கருதி, பாண்டியன் சைக்கிளில் கிளம்பினான். அவுடு மார்க்கெட் தெரு. மூன்று ஜப்பானிய சிப்பாய்களும், மெர்டேக்கா சின்னம் அணிந்த மலாய்க்காரன் ஒருவனும் எதிர் வரிசைச் சீன வீடுகளைக் கவனித்தவாறு இடப்புற நடைமேடையில் மவுனமாய் நின்றனர்... கெசாவன். கடைகள் மூடிக்கிடந்தன. உயிர்ப் பிராணிகளோ, வாகனங்களோ தென்படவில்லை. ஆளரவமில்லாப் பகல் நேரக் கெசாவன் - நகரின் பிரதான வர்த்தகப் பிரதேசம் அச்சுறுத்தியது.

     எதிரே, பாலீஸ் வேயில் ஜப்பானியர் நிறைந்த லாரி சென்றது. டாவ்ரோஸ் மாளிகை முன் கதவைச் சில சிப்பாய்கள் திறக்க - இல்லை, உடைக்க - முயன்று கொண்டிருந்தனர். கெர்க் ஸ்ட்ராட்டில் திரும்பினான். டெர்மூலன் ரெஸ்டாரன்ட். ஜப்பானிய அதிகாரிகள் உரத்த குரலில் உரையாடி நின்றனர். குறுக்கிட்ட தண்டவாளப் பாதையைக் கடந்தான். லாரி ஓசை கேட்டது. இடப்புறம் ஒண்டினான்.

     “உரேஎஎ!” ஜப்பானியக் குரல் அதட்டிற்று.

     தலையை வலப்புறம் திருப்பினான்.

     “இந்தோ! இந்தோ!” லாரி சிப்பாய்கள் கத்தினர்.

     “பன்ஸாய்!” முறுவலுடன் கூவினான்.

     “இந்தோ - நிப்பன்னோ காவனு காவனு.”

     கைகளைக் கோத்துக் காட்டி, இந்தியர் - ஜப்பானியர் நட்புறவைத் தெரிவித்தார்கள்.

     லாரி தாண்டிச் சென்றது. வலப்புறம் ரொக்ஸி பயாஸ்கோப் மேடை; ஹொங்கொங், ஷங்ஹாய், சுவாத்தோ தெருக்கள். டும்... துப்பாக்கி வெடி. சீனச் சிறுவர்கள் முண்டியோடி மறைகின்றனர். என்ன இழவோ தெரியவில்லையே. திரும்பிவிடலாமா...? முன்னே ராணுவ வண்டிகள் பாய்ந்து வந்தன. ஒதுங்கினான்.

     “தம்பீ! தம்பி!”

     படக்கடை நகுதா மரைக்காயரின் குரல்.

     சைக்கிளை நடைபாதை ஓரத்தில் நிறுத்திவிட்டுக் கடைக்குள் நுழைந்தான். முழுக்கை பனியனும் சிவப்புக் கொட்டடிக் கைலியும், கட்டை மிதியடியும், புகை வீசும் சுருட்டுமாய் மரக்காயர் நின்றார்.

     “என்ன நானா, சேதி எல்லாம் எப்படி?”

     “உட்காருங்க தம்பி, அந்தப் பக்கம் போக வாணாம். தலையை வெட்டிச் சடக்குல வச்சிருக்கானாம். முருதாருப் பயல்.”

     “என்ன! தலையை வெட்டி வைத்திருக்கிறானா! எங்கே நானா?”

     “வில்லிமினா ஸ்திராட் முக்குல, தம்பி. அதைப்பத்தி நமக்கென்ன, உட்காருங்க.”

     “டிப்போவுக்குப் போகிறேன், நானா. அவசர வேலை.”

     “இப்ப வேணாந் தம்பி. பெறகு போவலாம்.”

     “அவசர வேலை, நானா.”

     “தம்பீ! சொல்றதைக் கேளுங்க...”

     சைக்கிளில் ஏறியவன் காதில் மரக்காயரின் குரல் அதற்குமேல் விழவில்லை.

     ஹக்கா - வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிறை வட்டமாய் இடம் விட்டுப் பார்வையாளர்கள் குழுமி நின்றனர்; கண் இமைக்காமல், ஊன்றிய சிலைகளாய் மெய்ம்மறந்திருந்தார்கள்.

     இடப்புற நடைபாதையோரம் ஒதுங்கி, வண்டியிலிருந்து இறங்காமல் ஒரு காலைத் தரையில் ஊன்றி நின்று பார்த்தான்.

     இடுப்புயர மேசைமீது ரத்தம் சொட்டும் ஐந்து மனிதத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசைக்குப் பின்னால் நின்ற சிப்பாய், ஒவ்வோர் உருப்படியாய், மெதுவாய், அக்கறையுடன் தலைகளின் கிராப் முடியைச் சீப்பினால் வாரிவிட்டுக் கொண்டிருந்தான். சுற்றி நின்ற ஜப்பானியர் சிரித்து விளையாடினர். மேசைக்கு அருகில் மலாய், தமிழ், சீன மொழிகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைப் பலகைகள் -

     கொள்ளை அடிப்பவர்களுக்கும் குழப்பக்காரர்களுக்கும் டாய் நிப்பன் ராணுவம் அளிக்கும் தண்டனை இது. கொள்ளையடித்த பொருள்களை இன்றிரவு 8 மணிக்குள் அந்தந்த இடத்துக்குக் கொண்டுபோய் ஒப்படைக்காதவர்களுக்கும் இதே கதி கிடைக்கும்.

     பாண்டியன் இதற்கு முன்பும் வெட்டுண்ட தலைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறான். ‘கெண்டைத் துப்பட்டா’ வெள்ளிமுத்து, அவன் தம்பி மாயழகு, கையாள் புலிக்குத்தி ஆகியோர் தலைகளையும் இப்படித்தான் வயிற்றிலுப்பை சுமைதாங்கிக் கல்லில் வைத்திருந்தார்கள். ஆனால், அது தனிப்பட்ட பகை காரணமாய், ஒளிவு மறைவாய்...

     சுற்றுமுற்றும் பார்த்தான். பார்வையாளர்களில் யாரும் கண் இமைக்கவில்லை. பேயறைந்தவர்கள்போல் நின்றனர்.

     சிப்பாய்கள் நின்றும் குந்தியும் சிரித்து விளையாடினர். சீப்புக்காரன் மாறி மாறித் தலைகளை வாரிவிட்டுக் கொண்டிருந்தான். குந்தியிருந்த ஒருவன் திடுமென எழுந்து தாவிக் கூட்டத்தைப் பார்த்து உறுமினான்: “உரேஎஎ.” வலக்கை விரல்களைத் தகடுபோல் சேர்த்துக் கழுத்தில் வைத்துக் கத்திவெட்டுப்போல் அழுத்திக் காட்டி நடித்து மிரட்டினான்.

     “அல்லாஹ்!” மாநிற மலாய்க்காரன் அலறிக்கொண்டு மேற்கே பாய்ந்தோடினான். மிரட்சி மலைப்பு நொடிப் பொழுதில் கலைந்தது. கூட்டம் கதறியோடிச் சிதறியது. காலடியோசை கடகடத்தது.

     கூட்டத்தைப் பிடித்துத் தள்ளி விரட்டிய பீதி பாண்டியனையும் மோதியுலுப்பிவிட்டு அகன்றது. இருபுறமும் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணோம் - காட்சித் தலைகளையும் சிப்பாய்களையும் தவிர.

     ஹக்கா - வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன - இல்லை, நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர். சீப்புக்காரன் ஓய்வு ஒழிச்சலின்றித் தலை களை ஒன்றன்பின் ஒன்றாய் மாறிமாறி, மெதுவாய், அக்கறையுடன் வாரிவிட்டுக் கொண்டிருந்தான்.

     தரையிலிருந்த காலைத் தூக்கிச் சைக்கிளைச் செலுத்தினான். தலைகள் யாருடையவோ... கொள்ளை அடித்தவர்களோ, கைக்கு அகப்பட்டவர்களோ? யாராயிருந்தால் என்ன, கொள்ளை நின்றுவிட்டது... வயிற்றைக் கிள்ளுகிறது. காதர் கடைக்குப் போய்ப் பார்க்கலாம்.

     வில்ஹெல்மினா தெருவில் தெற்கே திரும்பினான். மெத்தடிஸ்ட் பள்ளி முழுவதும் ஜப்பானியர். தெருவோரத்தில் ராணுவ லாரிகள். பள்ளியிலிருந்து மேசை நாற்காலிகள் ஏற்றப்பட்டன. வண்டிகளிலிருந்து மரப்பெட்டிகள் இறக்கப்பட்டன. விறகுக்காக ஜன்னல் கதவுகளும் கரும்பலகைகளும் நொறுங்கிக் கொண்டிருந்தன. பெருங்கூச்சல். “தக்கனாரா!... இதாகுச்சி!... யொமியுரா!... ஷிகாமித்சு!” ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள். திடுமெனத் தொண்டை கிழியும் அலறல்:

     “கெய்ரேஎஎய்!”

     வாசலருகே வந்து நின்ற காரிலிருந்து குட்டையாய்த் திரண்டுருண்ட காப்டன் இறங்கினான். சிப்பாய்கள் விறைத்து நின்று வந்தனை செய்தனர்.

     தண்டவாளப் பாதையைக் கடக்கும்போது, ‘ஒயிட்டவே’ செல்லமுத்து எதிரே வந்தான். ஆங்கிலக் கேள்வி பிறந்தது.

     “பாண்டி! உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை?”

     “அடுத்த தைப்பூசம்.”

     “தைப் பூசத்தன்று பரம்பரை வழக்கப்படி காவடியாட்டம் தான்.”

     காதர் கடை மூடிக் கிடந்தது. கதவைத் தட்டினான். பையன் திறந்தான்.

     “சலாம் வருதண்ணே” தூக்க முகத்துடன் உள்ளிருந்து வந்த காதர் வரவேற்றான்.

     “என்ன, ஏதாவது அகப்படுமா?”

     “உட்காருங்க, இரிக்கிது. சொந்தத்துக்குக் கொஞ்சம் ஆக்கினேன். மரக்கறிதான்.” கதவை அடைத்தான்.

     “என்னத்தையாவது போடு.”

     அவசர அவசரமாய் உண்டியை முடித்துக்கொண்டு கிளம்பினான். சுமத்ரா வேயில் ஆள் அரவமேயில்லை. வீடுகள் மூடிக்கிடந்தன - எல்லாம் சீனருடையவை.

     இடப்புறம் திரும்பிச் சென்று நின்றது சைக்கிள்.

     வளைவு அடைப்பின் கொக்கியை நீக்கி உள்ளே சென்று கதவைத் திறந்தான்.

     சாமான்கள் இருந்தது இருந்தபடியே இருந்தன. பின்புறத்துக் கொட்டகையில் லாரிகள் மூன்றும் நின்றன. கிடங்கு அறையில் கடப்பாரை, மண்வெட்டிகளும் கொத்துக் கரண்டி, மூங்கில் கூடைகளும் அடுக்கிக் கிடந்தன.

     வடப்புற அறையின் ஜன்னலோர சோபாவில் சாய்ந்தான். கண்ணைச் சொக்கியது. இமைகள் பொருந்தின...

     “உரே, இந்தோ!” ஜப்பானியக் குரல் உலுக்கிற்று.

     லெப்டினன்ட் ஒருவனும் நான்கு சிப்பாய்களும் நின்றனர். தெருவில் ஒரு கார் - மெர்ஸிடெஸ் தென்பட்டது.

     “தபே, துவான்.”

     “தபே” லெப்டினன்ட் தலையை அசைத்தான்.

     பிறகு தெளிவான ஆங்கில உறுமல்: “இங்கு எத்தனை லாரிகள் இருக்கின்றன?”

     “மூன்று லாரிகள், பின்கொட்டகையில்.”

     “லாரிகளை மாட்சிமிகு தென்னோ ஹெய்க்காவின் ராணுவ உபயோகத்துக்காக எடுத்துக் கொள்கிறோம். ரசீது உண்டு. இப்பொழுது பின் கொட்டகைக்குப் போவோமாக.”

     லாரிகளை ஓட்டிச் சென்றனர். ஏதோ கிறுக்கின சிறு காகிதத்துண்டு கிடைத்தது.

     பாண்டியன் தெருவில் நின்று, லெப்டினன்ட் ஏறிச் சென்ற காரின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே. லிம்பின் சியாக்கின் கார்... முறையா, தவறா என்பதெல்லாம் வல்லமையைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். கையில் துப்பாக்கி இருந்தால் காசில்லாமலே தோசை. இல்லாவிடின், காசு இருந்தாலும் சில சமயங்களில் தோசை மறைந்துவிடும்.