நுனை

1. கெர்க் ஸ்ட்ராட்

     காலைக் கருக்கிருட்டு நேரம்; தெருவிளக்குகள் எரியவில்லை. இப்பொழுதுதான் மழை தூறி ஓய்ந்திருக்கிறது.

     ஜப்பானியத் துருப்புகளின் வரவை எதிர்நோக்கி மெடான் நகரினர் தெருவின் இருமருங்கிலும் கூடி நிற்கிறார்கள். கூட்டத்திலிருந்து பலவகை ராகங்களில் கிளம்பும் மலாய் பஹாசாவின் மெல்லோசையைப் பரபரப்பான சீனமொழி ஊடறுக்கிறது.

     ஊர் நடுவே கிழக்கு மேற்காகக் கடக்கும் தெரு இது - கெர்க் ஸ்ட்ராட். இந்தத் தெரு சேறும் சகதியுமாய் இருபுறமும் நீப்பா புதர்கள் மண்டிக் கிடந்த காலத்தில் - டச்சுக்காரர்கள் வேரூன்றுவதற்கு முன் - இதில் போர்ச்சுகல் சிப்பாய்களும் ஆங்கிலத் துருப்புகளும் மேற்கிலிருந்து கிழக்கே நடந்திருக்கிறார்கள். அதற்கு முன்னர், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் அரும்பொருள்களையும் கப்பல்களில் ஏற்றி வந்த அரபியரும், அவர்களுக்கு முன்பே அறுசமய நீதிகளையும் அருங்கலைகளையும் நாவாய்களில் கொணர்ந்த தமிழர்களும் இந்த வழியாய்க் கிழக்கே சென்றதுண்டு. இப்பொழுது: டாய்நிப்பன்* படைவீரர்கள் கிழக்கேயிருந்து வரவிருக்கிறார்கள். அவர்களைக் காணத் திரண்டு நிற்கின்றனர் குடிமக்கள்.

* மகாஜப்பான்

     *அன்னெமர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய #கிராணி பாண்டியன், வடக்கேயிருந்து கெசாவன் நடை பாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும் வெள்ளைச் சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.

* மராமத்து காண்ட்ராக்டர்
# குமாஸ்தா

     “தொலுங் லாலு சிக்கட்.” சிறிது விலகி இடம் விடுமாறு அடுத்தடுத்து வேண்டிக்கொண்டே நாற்சந்தி முக்கிலிருக்கும் புத்தகக் கடையைத் தாண்டி, இடதுபுறம் கெர்க் தெருவில் திரும்பியவன், டெர்மூலன் ரெஸ்டாரன்ட் முன்பு போய் நிற்கிறான்.

     கிழக்கு வெளுத்து இருள் கலைகிறது. உருவங்கள் தெளிவடைகின்றன.

     சிகரெட் புகையை இழுத்து ஊதியவாறு வாரகாம்ப் புத்தகக் கடை மூலையை நோக்கித் திரும்பி நடந்தடைந்து, எதிரோடிய பாலீஸ்வேயில் பார்வையைச் செலுத்தினான். சுல்தான் அரண்மனைக்குச் செல்லும் அந்த அகன்ற சாலை நடுவில், இடையிடையே வெளிவிட்ட மேடை. அதில் நின்ற விசிறிமரங்கள் காலைக் காற்றில் சரசரத்தன. ஒரு முக்கில் டாவ்ரோஸ் மாளிகை. மறுமுக்கில் மாதா கோயில். அப்பால், சாலையின் இருபுறமும் பெரும்பெரும் கடைகள் - தொக் கோவன் டெப்போல், கூர்னியர், ஒயிட்டவே, ஆல்ட்டன்பர்க், பாயர்ஸ்...

     கதிரவனின் ஒளிக்கதிர்கள் தோன்றிப் பரவின. மரங்களில் பல்லினப் பறவைகளின் சிலம்பலோசை. கூட்டத்தில் தள்ளுமுள்ளும் பேச்சரவமும் அதிகரித்தது.

     எல்லாரும் தலையை நீட்டிக் கிழக்கே பார்த்தவாறு நின்றார்கள் - மெடான் நகரைக் கைக்கொள்ள வரும் ஜப்பானியப் படையை வரவேற்க.

     சூரிய வெளிச்சத்தில் டாவ்ரோஸ் மாளிகைப் பச்சைப் பளிங்கு அரையுருண்டை வழுக்குக் கோபுரம் பசுமஞ்சளாய் மின்னுகிறது. மரக் கொண்டைகளில் தங்க வண்ணக் கோல வரிகள். பறவைகளின் கரைச்சல் பெருகி ஒலிக்கின்றது. திடுமெனக் கிழக்கிலிருந்து ஆரவார ஓசை கிளம்பித் திரண்டு வருகிறது.

     “ஐப்பான் சூடா டாத்தங்! ஜப்பான் சூடா டாத்தங்!”

     ஆரவாரம். கைதட்டல். கூக்குரல். ஒற்றை வரிசையாய் மூன்று சைக்கிள்கள் உருண்டு வந்தன. அழுக்குத் துணியும் பளபளக்கும் டாமி துப்பாக்கியுமாக ஜப்பானிய சிப்பாய்கள், முதுகில் பெரிய மூட்டை. உடலிலும் வண்டியிலும் செடிகொடிகள் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தன.

     “பன்ஸாய்! பன்ஸாய்! பன்ஸாய்!”

     இப்பொழுது நான்கு நான்காக அடுத்தடுத்து சைக்கிள்கள் வருகின்றன.

     குளிப்பாட்டிப் பல நாளான அழுக்குடல்கள், இரும்புத் தொப்பி, தண்ணீர்க் குடுக்கை, என்னென்னவோ போட்டடைத்த சட்டைப் பைகள். பின்தட்டில் தனவாடச் சிப்பங்கள்.

     நேர்ப்பார்வையாய் சைக்கிளை ஓட்டிச் சென்றனர் - பொலோனியாவில் உள்ள விமானத் திடலையும் டச்சு மாளிகைகளையும் நோக்கி.

     பாண்டியன் மலைத்துப்போய் நின்றான். இவர்களா, இவர்கள்தாமா சிங்கப்பூரை வென்று வாகை சூடிய வீரர்கள்! ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளி உள்ள இடங்களில் போர் தொடுத்து வெற்றி கண்ட ஜப்பானிய ராணுவத்தினர் இவர்கள்தாமா!

     ஏறக்குறைய நூறு சிப்பாய்கள் சென்றிருப்பர். பிறகு சிறிது நேரம், வழுவழுவென்றிருந்த கரும்பாதையில் சைக்கிள்கள் உருளவில்லை.

     கிழக்கே மீண்டும் ஆரவாரம் பரிந்தது.

     “பன்ஸாய்! பன்ஸாய்! பன்ஸாய்” சைக்கிள்கள் வரிசை வரிசையாய் உருண்டோடி வந்தன. இப்போது, சிப்பாய்கள் பல் தெரியாத புன்னகையோடு தலையசைக்கிறார்கள். இடையிடையே பேரிரைச்சலுடன் மோட்டார் - பைக்குகள் வரலாயின. அவற்றின்மீது ஆலிவ் நிறக் கம்பளி ஆடை தரித்த ராணுவ அதிகாரிகள் கடுகடுத்த முகத்துடன் தோன்றி மறைந்தனர்.

     கூட்டம் கலையலாயிற்று. பத்துப் பதினைந்து பேர்! சுக்கமூலியா தெரு வழியாய் ஜப்பானியப் படை செல்லும் திசையை நோக்கிக் கிளம்பினர். அவர்களைப் பின்பற்றி மேலும் சிலர் புறப்பட்டார்கள். பிறகு, பலர் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து ஓட்டமும் நடையுமாய் மேற்கே விரைத்தனர்.

     பாண்டியன் வடக்கேயும் தெற்கேயும் திரும்பிப் பார்த்தான். கம்பொங்* வாசிகள் கூட்டம் கூட்டமாய் நாற்சந்தியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் புதிய கம்பீரம் மிளிர்ந்தது. நடையில் மிடுக்கு. கண்களில் எதையோ எதிர்பார்ப்பது போன்ற நோக்கு.

* கிராமம்

     வடமுகமாய்த் திரும்பி கெசாவனில் நடந்தான்.

     கடைகள் மூடிக் கிடந்தன. புதிதாய் முளைத்த டிப்டாப் ரெஸ்டாரன்ட் அருகே இரண்டு சீனர்கள் சிககிசுத்து நின்றனர். வலதுபுறம் லிம் பின் சியாக் மாளிகை வெளி முற்றத்துச் சம்பகா மரத்தடியில் யாரோ ஒரு சீனக் கிழலி புலம்பிக் கொண்டிருந்தாள்.

     எதிரே சீனச் சிறுவர்கள் - பாவம், விவரமறியாப் பாலகர் - குதூகலக் கூச்சலுடன் ஓடி வந்தார்கள்; “பன்ஸாய்! ஜிப்புன் மாய்!”

     இடது புறம் எப்பாலெய்ன் ரொட்டிக் கடை, பிளாங்க் கென்ஸ், சார்ட்டர்ட் பாங்க், பன் ஹின் லீ; வலது பக்கம் வரிசையாய்ச் சிந்தியர் ஜவுளிக்கடைகள்; அசோமுல், மத்தானி, கிமத்ராய், தவ்லத்ராம்...

     “பான்தியான்! பான்தியான்!” பின்னாலிருந்து அழைப்புக் குரல் வந்தது. தலையைத் திருப்பிப் பார்த்தான். கால்வாசி திறந்திருந்த கியாங் லிம் சைக்கிள் கடைக் கதவோரம் இளையவன் லிம் தெங் நின்றான்.

     “இதோ வருகிறேன்.”

     “ஒரு நிமிஷம்.”

     உள்ளே நுழைந்தான்.

     “கம்பொங் ஆசாமிகள் கொள்ளைக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறார்களாம்” குரலில் அச்சம் தொனித்தது. சிகரெட் பெட்டியை நீட்டினான். “வேலைக்காரப் பையன் பார்த்தாக்காரன் - சொல்லிவிட்டுப் போகிறாள்.”

     “அப்படித்தான் தெரிகிறது.” சிகரெட் ஒன்றை உருவி எடுத்துப் பற்ற வைத்தான். “சைக்கிள் கடை மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். எச்சரிக்கையாக இரு.”

     “அன்னெமர் எங்கே?”

     “கம்பொங் பெத்தும்பா.*”

* கிராம மணியக்காரன்

     “செட்டிகள்?”

     “அங்கேதான், பெங்கூலு ஆதரவில் இருக்கிறார்கள்.”

     “நீ ஏன் போகவில்லை?”

     “வேடிக்கை பார்க்க வேண்டாமா?”

     “சோறு?”

     “எங்காவது.”

     “நீ தமிழன். நான் சீனன்; பெண்டு பிள்ளைக்காரன்.”

     “இந்தத் தெருவில் அப்படியொன்றும் நடக்காது. பெண்களை வெளியே தலைகாட்ட விடாதே, இன்று ஒரு நாள்தான் ஆபத்து. நாளை எல்லாம் சரியாகிவிடும்.”

     “நன்னம்பிக்கையே நலம்.”

     “ஆம், வருகிறேன், தபே.”

     “தபே. எந்நேரமானாலும் உண்டிக்கு வரலாம். அல்லது ஆள் அனுப்பு.”

     “நன்றி.”

     நடந்தான். லிம் தெங், கதவை இழுத்து மூடும் ஓசை கேட்டது.

     “மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!*”

* விடுதலை

     தானா லாப்பாங் வடபுறத்திலிருந்து சைக்கிள் கூட்டம் கத்திக்கொண்டு வந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், கிராணிகள் உதிரிகள் அடங்கிய கும்பல். அவசர அவசரமாய்த் தைத்த - பலதிற அளவும் கோலமும் கொண்ட ‘சுதத்திர இந்தொனேசியா’ கொடிகளை ஏந்தியிருந்தனர்.

     “இந்தொனேசியா ஹிடூப்! பிலாந்தா மத்தி!” இந்தொனோசியாவுக்கு வாழ்வையும் ஹாலந்து நாட்டுக்கு அழிவையும் வாரி இறைத்தவாறு சைக்கிள்காரர்கள் கெசாவனில் புகுந்தனர்.

     “மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!” பாண்டியனைப் பார்த்த கெமந்தே* கிராணி யாசின் கையிலிருந்த கொடியை ஆட்பு முழங்கினான்.

* நகராட்சி மன்றம்

     “மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!”

     பாண்டியன் வலது கையை உயர்த்தி அலைத்தவாறு கத்தினான்:

     “மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!”

     கிராண்ட் ஹோட்டல் திசையிலிருந்து ஒரு சாடோ வண்டி வந்தது.

     “பிலாந்தா மத்தி! சீனா மத்தி! செட்டி மத்தி!”

     சாடோ வண்டிக்காரன் தொண்டை கிழியக் கத்தினான்.

     பாண்டியன் திரும்பிப் பார்த்தான்.

     “ஆ! தபே துவான், தபே.”

     மொஸ்கி ஸ்ட்ராட் வட்டிக்கடைகளில் நாள் தவறாமல் ஏறி இறங்கும் சாடோ வண்டிக்கார சைனுடீன் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்தான்.

     “தபே, சைனுடீன்.”

     “வெறிபிடித்துத் திரிகிறார்கள், போக்கிரிகள், ஹிஹிஹிஹிஹி.”

     சாடோ வண்டிக்காரன் கிராஸ்ஃபீல்ட் மெர்டேக்கா வீரர்களின் திக்கில் சாட்டையை நீட்டிச் சுட்டிக் கெக்கலித்தான். பாண்டியன் முகத்தில் முறுவல் பூத்தது. சாடோவில் ஏறும்படி சைனுடீன் அழைத்தான். பாண்டியன் நன்றி கூறிவிட்டு, ஹட்டன்பாக் தெருவில் நுழைந்தான்.

     “தபே, துவான், புசார்.”

     ஹாரிசன் கிராஸ்ஃபீல்ட் கட்டடத் தாழ்வாரக் கயிற்றுக் கட்டிலின்மீது கால்களைச் சேர்த்து உட்கார்ந்து ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்த ‘உப்பாஸ்*’ சிராஜுத்தவ்லாகான் வந்தனை தெரிவித்தார்.

* காவல்காரன்

     “தபே, நவாப் ஷாஹி.”

     ‘வங்காள நவாப்’ வழக்கம்போல் சிரித்தார். சுற்றிலும் காணப்பட்ட பரபரப்பில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் ஹுக்கா புகையில் லயித்திருந்தது காவல்காரனின் மனம்.

     இடது புறம் பொஸ்கி ஸ்ட்ராட் - செட்டித் தெரு அநாதையாய் கிடந்தது. கீழ்ப்பக்கம், கித்தாடா பல் வைத்தியசாலை, மட்சுவோக்கா டென்னிஸ் ராக்கெட் கடை இரண்டும் ஜப்பானியருடையவை; மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளன. டான்லிம் தச்சுப் பட்டறை; சமைந்த புதல்விகள் இருவருடன் குடித்தனம் நடத்தும் மனையவள் இல்லாக் கிழவன். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கிறது. அப்பால் வட்டிக்கடைக் கிட்டங்கிகள். வெங்கடாசலத்தின் ‘சிங்கப்பூர் சலூன்’. மாஜி சமையலாள் வெள்ளைச்சாமி நடத்தும் வெற்றிலைபாக்குக்கடை. அதன்மேல் கிழக்கு மேற்காகக் குறுக்கிடுகிறது அவுடு மார்க்கெட் ஸ்ட்ராட். மேல்புறம், நொத்தாரிஸ் கந்தோரை அடுத்துச் சிமிந்தி பாவிய சந்து. பிறகு, வரிசையாய் வட்டிக்கடைக்கிடங்கிகள். இடையில் அன்னெமர் காதர் மொய்தீன் ராவுத்தரின் கந்தோர். கடைசியாக, அவுடு மார்க்கெட் தெருவுக்கு இப்பாலாக, சின்லாம் கோப்பிக் கடையும் மாமுண்டி ஆசாரி பட்டறையும்.

     நடைபாதையிலிருந்து ஏறி, அடைப்பில்லாத, மூடின முன்தளத்தில் சென்றான். காலடி ஓசை தெருவின் அமைதியைக் குலைத்தது. மஞ்சள், நீலக் கட்டடக் கதவுகள் தூசுபடிந்து இறுக்கி மூடிக்கிடந்தன. அன்னெமர் கந்தோர் தாண்டிச் சென்று கோப்பிக் கடைக் கதவைத் தட்டினான்.

     “யாரது?” உள்ளேயிலிருந்து அரண்ட குரல் வந்தது.

     “பாஸ்தியான்.”

     கட்டை மிதியடிகள் கதவை நோக்கி வந்தன. மொஸ்கி ஸ்ட்ராட் அடுத்தாட்களால் ‘பொதுக்கை’ என்று அன்புடன் அழைக்கப்படும் சின் லாம் கதவைத் திறந்தான். பாண்டியன் உள்ளே நுழைந்தான். கதவு சாத்தப்பட்டது.

     “கோப்பி, துவான்?”

     “கோப்பி டன் ரொக்கோ.”

     காபி ‘மங்’கையும் மூராட் சிகரெட் பெட்டியையும் கொண்டுவந்து மேசையில் வைத்த பொதுக்கை, நிலவரம் எப்படியிருக்கிறதென்று கேட்டான்.

     “அஞ்சாதே, ஒரு ஆபத்தும் இல்லை” ஒரே மூச்சில் காபியைக் குடித்தவன், சிகரெட் பெட்டியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.

     பின்கட்டிலிருந்து, பொதுக்கையின் மனைவி குழந்தையைத் தாலாட்டும் கீச்சுக் குரல் வந்தது.

     “லய் - லய் - லய் லாஅஅய்!... லய் - லய் லய் - லாஅஅய்.”

     பாண்டியன் அலுவலகத்தை அடைந்து கதவைத் திறந்து உள்ளே போய் உள்புறம் தாழிட்டான். அடுத்த வினாடியே கதவை இடிக்கும் ஓசை கேட்டது. திறந்தான். சார்ட்டர்ட் பாங்க் கிராணி தங்கையாவும், மெத்தடிஸ்ட் பள்ளி ஆசிரியர் தில்லைமுத்துவும் சைக்கிளை அணைத்துக்கொண்டு நின்றனர்.

     “அமளி ஆரம்பமாகிவிட்டது. சுற்றிப் பார்க்கலாம் வா.” தங்கையா அழைத்தான்.

     “ஐந்தே ஐந்து நிமிஷம், உள்ளே வந்து உட்காருங்கள்.”

     சைக்கிளைச் சுவரோரம் சாய்த்துவிட்டு இருவரும் உள்ளே போய் உட்கார்த்தனர்.

     பாண்டியன் வேகவேகமாக மாடிப் படிக்கட்டில் ஏறினாள்.