முகை

27. யாமசாக்கி

     கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கியின் பச்சை மோரிஸ் - மேல் மூடி கீழிறங்கிய டூரர், கெசாவனிலிருந்து பிலவான் சாலையில் புகுந்தது. கீழ்ப்பக்கம் தானா லாப்பாங். பல நிற மலர் விளக்குகளுடன் அசைந்தாடும் பூஞ்செடிகள். பச்சைப் புல் விரிப்பு விளிம்பில் தூங்கிவாகை மரங்கள். செவ்வெள்ளைப் பஞ்சு மலர்கள் உதிர்ந்து பிதிர்ந்து பறக்கின்றன. புளிய மரங்கள் வரிசையாக நிற்கும் சாலை, நடுமேடை மேற்புறம் பெரும்பெரும் கட்டிடங்கள் - பேப்பேயெம், ஹண்டல் மாட்ஸ்கப்பை, ஜாவானு பாங்க்., பின்ஜெய் வே, கோத்தாராஜா செல்லும் நெடுஞ்சாலை, வண்டி இடப்பக்கம் திரும்பி விரைந்தது.

     யாமசாக்கி ஒன்றன்பின் ஒன்றாய்ச் சங்கிலித் தொடராய் சிகரெட் பற்ற வைத்துப் புகைத்து, கால்வாசி கூட எரியாதிருக்கையிலேயே அவற்றை வாய்ப் பிடியிலிருந்து பறித்து அடுத்தடுத்து வீசி எறிந்து கொண்டிருந்தான். பார்வை சாலை மீதிருந்தது. மனம் ஜப்பானைச் சுற்றி வந்தது. இவோஜிமா, ஓக்கினாவா, உள்வேலித் தீவுத் தளங்கள்... இனிமேல்... இனிமேல் யாமாத்தோ புனித பூமி, அமெத்தரசு தேவதையின் பிறப்பிடம்? முடியாது, முடியவே முடியாது. டோக்கியோவை, கோபேயை, ஓசாக்காவை நொறுக்கி எரிக்கலாம்; அங்கு குவிந்து கிடக்கும் வெள்ளைச் சட்டைப் பேடிகளைக் கொன்று குவிக்கலாம். ஆனால் தென்னோ ஹெய்க்காவின் போர் வீரர்களை அவ்வளவு சுலபமாய் ஒழித்துவிட முடியாது. 50 லட்சம் பேர் நின்ற இடத்தில் செத்து மடியச் சித்தமாயிருக்கிறோம்.

     சிகரெட்டைச் சுண்டி இழுத்துப் புகையை ஊதியது வாய். ப்ஸ்ஸ்ஸ்... கப்பல் படையும் விமான அணிகளும் மோசம் செய்து விட்டனர்; ஒழிந்து போயினர்... கப்பல் படை! அட்மிரல்களும், கம்மடோர்களும் வியாபாரி* வீட்டுப் பிள்ளைகள். அவர்களுக்கு வீரம் ஏது? போர்த்திறன் ஏது...?

     * யுத்தத்துக்கு முந்திய ஜப்பானில் வர்த்தகக் குடும்பங்களைச் சேர்ந்தோர் கடற்படையிலும், விவசாயிகளின் பிள்ளைகள் ராணுவத்திலும் சேருவது பொதுவான வழக்கம்.

     யாமமோத்தோ செத்ததோடு கடற்படையும் செத்துவிட்டது. அட்மிரல் சியுச்சி நகுமோவின் அதிரடி அணி! கமாண்டர் மிட்சுவோ புச்சிடாவின் கடற்கழுகுகள்...? பழங்கதை, பழங்கதை... பர்மாவும் பிலிப்பைனும் தொலைந்த மாதிரிதான். இங்கிருந்து பெட்ரோல் போவது அடியோடு நின்று விட்டது. இதற்கு ஒரு வழி காணாவிடில்... பிரிட்டிஷ் படைகள் சுமத்ராவில் இறங்கப் போவதாகச் சொல்வது வெறும் வதந்தி, வீண் புரளி, எங்கிருந்து வந்து எங்கே இறங்குவார்கள்? தளங்களிலிருந்து வெகுதூரம், விமானத் தாக்கு கடுமையாகலாம்.

     கண்கள் இருபுறமும் மாறி மாறிப் பார்த்தன. அந்திச் செவ்வொளியில் புல்லும் புதரும் மரமும் கொடியும் மோகன வண்ணமாய்த் தோன்றின. இடக்கை பிடரியைத் தடவியது. வாய் புகை கக்கியது... ப்ஸ்ஸ்ஸ். கடிதத்தைப் பார்த்ததும் ஜெனரல் துள்ளிக் குதிப்பார்...

     எதிரே மூன்று ஆட்கள் ஓடி வருகின்றனர். வடபுறக் காட்டைச் சுட்டியவாறு... இந்தோ... தமிரோ... கூரி*... கைரி - சட்டைத் தமிரோ... அலறியடித்துக் கொண்டு வருகிறார்கள். வேகத்தைக் குறைக்கும் படி மேஜர் முனகினான். “ஹை” கார்பொரல் டிரைவர் கத்தினான்.

     * கூலி - ஜப்பானியர் லகரத்தை ரகரமாகவும், சீனர்கள் ரகரத்தை லகரமாகவும் உச்சரிப்பார்கள்.

     விரைவு தணிந்து மோரிஸ் ஊர்ந்தது. தமிழர்கள் அணுகினர். நிறுத்தும்படி மேஜர் உறுமினான். வண்டி நின்றது.

     பாண்டியன் இடப்புறம் - மேஜர் யாமசாக்கியின் பக்கம் ஒதுங்கினான். நடராஜனும் கருப்பையாவும் மறுபக்கம் நெருங்கினர். மூவரும் நடுக்க உடலும் மிரண்ட கண்களுமாயக் கத்தினர். “விமானங்கள்! பாரஷுட் துருப்புகள்! ஆயுதத் தளவாடங்கள்!”

     யாமசாக்கியின் கூரிய கண்கள் முதலில் பாண்டியனையும், பிறகு, மற்ற இருவரையும் ஊடுருவி நோக்கின. வாயிலிருந்த சிகரெட்டைப் பறித்து இடக்கை வீசி எறிந்தது.

     “மானா?”

     “சானா, மஸ்தா.”

     மூவரும் வடமேற்கே சுட்டிக் காட்டினார்கள்.

     “சோ தெஷ் யோ.”

     சுட்டப்பட்ட திக்கைப் பார்த்தவாறு முனகியவன், திடுமெனப் பாண்டியன் பக்கம் திரும்பி, மறுபுறம் - டிரைவர் பக்கம் போய் நிற்கும்படி தலையை அசைத்தான்; வலக்கை கழுத்தில் தொங்கிய தொலைநோக்கியைத் தூக்கியது. டிரைவரின் இடக்கை தொடையிலிருந்து நழுவியிறங்கி, பக்கத்தில், ஆசனத்தின்மீது கிடந்த குட்டி டாமி துப்பாக்கியை நெருங்கிக் கொண்டிருந்தது - வழக்கமான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக. டிரைவர் பக்கம் போவதுபோல் மேற்கே திரும்பியவன், மின்னல் வேகத்தில் பழைய நிலையை அடைந்து, கையில் ரப்பர் ஆயுதத்துடன் தாவினான். அதே சமயம் நடராஜனும் பாய்ந்தான். தஃட் தஃட் தஃட் தஃட் தஃட்.

     கருப்பையா கதவைத் திறந்து உள்ளேறி வேலையை முற்றாக முடித்தான். பாண்டியனும் நடராஜனும் டூரின்மேல் மூடியை இழுத்தேற்றிப் பூட்டினார்கள். யாமசாக்கியின் உடலைத் தூக்கிப் பின் ஆசனக் காலடியில் போட்டுவிட்டு, டிரைவரின் உடலை முன்ஆசனத்தின் கீழ்த் தள்ளிய கருப்பையா, ஸ்டீரிங்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். மற்ற இருவரும் பின்பக்கம் ஏறிக்கொண்டு கதவை அடைத்தனர்.

     மோரிஸ் நகர்ந்தது.

     “மெதுவாய் ஓட்டு. எதிரே ஆற்றுப் பாலம் வரும். தெரிந்ததும் சொல்” பாண்டியன் தோல் பெட்டியைத் திறந்து சோதித்துக் கொண்டிருந்தான். “ஆள், வண்டி தென்படுகிறதா என்று கவனி.”

     “ம்ம்...”

     நடராஜன் பின்புற மைக்கா ஜன்னல் வழியாகச் சாலையை நோட்டமிட்டபடி இருந்தான்.

     தோல் பெட்டியைச் சோதித்து முடித்தவன், கெம்பித்தாய் சட்டைப் பைகளை ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கினான்.

     “இருக்கிறது.”

     எண்ணெய்த் துணி உறைக்குள் இருந்த மஞ்சள் காகிதத்தை எடுத்துப் பார்த்து, பனியனுக்குள் திணித்துக் கொண்டு, நடராஜன் பக்கம் திரும்பினான்.

     “முன்பக்கம் போய் மிதவைச் சாமான்களை எல்லாம் பிணைத்துக்கட்டு.”

     புதிய டிரைவர் காரை மேற்கே செலுத்திக் கொண்டிருந்தான். மற்ற இருவரும் ஆசனத் துணியைக் கிழித்துக் கயிறாக்கிக் கட்டுமான வேலையை முடித்தனர்.

     எதிரே பாலம் தெரிந்தது.

     “சாலையோரம் பாலத்தை ஒட்டி நிறுத்து.”

     பாலத்தை நெருங்கிச் சாலைவிளிம்பில் போய் நின்றது மோரிஸ். புது வெள்ளத்தில் கபான்ஜாஹே மலைச் செடிகொடிகள் மிதந்து வருகின்றன.

     “கார் வருகிறது, பின்னால்.”

     கண்ணை மூடித் திறந்த கருப்பையா தெரிவித்தான்.

     “அறிவிப்பில் இல்லாத நிகழ்ச்சி. எதிரியின் திடீர்ப் பிரவேசம்.”

     மகிழ்ச்சி அடைந்தவன்போல் கூவிய நடராஜன் தாவிப் பின் ஆசனத்தை அடைந்தான். அவனும் பாண்டியனும் மைக்கா அடைப்புவழியே உற்று நோக்கினர். நிறம் தெரியாத கார்... செடான், மந்த வேகத்தில் வருகிறது... நடராஜன் கெம்பித்தாய் தொலைநோக்கியை எடுத்துக் கண்ணுக்கு நேரே பிடித்துப் பார்த்தான்.

     “நிப்பன்னோ... ஒரு கதிரறுப்பு ஆள்.”

     “சரி, விலகு!”

     இருவரும் பின்பு ஜன்னலிலிருந்து விலகி, இப்பாலும் அப்பாலும் ஒதுங்கினார்கள்.

     “கருப்பையா.”

     “ம்ம்” திரும்பினான்.

     பாண்டியன், கைகளை விசைத்துப்பாக்கி பிடிக்கும் பாவனையாய் வைத்துக் காட்டினான்.

     “தோளில் தட்டியதும், அழுத்து.”

     “ம்ம்.”

     கருப்பையா, கெம்பித்தாய் டாமி துப்பாக்கியைத் தூக்கி விசையைச் சரிபார்த்து, கார் வரம்புக்குள்ளே நீட்டிப் பிடித்தான்.

     மற்ற இருவரும் பிணங்களின் பிஸ்டலையும் எடுத்துக் கொண்டு, ஆளுக்கு இரண்டாக - கைக்கு ஒன்றாகப் பிடித்திருந்தனர்.

     முதுமை இரைச்சலுடன் வந்த செவர்லே வண்டி பெருமூச்சு விட்டு நின்றது. ஜப்பானிய அழைப்புக் குரல்கள் கிளம்பின. முன்னாலிருந்தவனின் தோளைப் பாண்டியனின் கை தட்டிற்று. டாமி கொக்கரித்தது; டட்டட்டர்ர்ர், டட்டர்ர்ர். பாண்டியனும் நடராஜனும் ஒவ்வோர் உருப்படியாகக் குறி வைத்துச் சுட்டனர்.

     கருப்பையா எழுந்து வலக்காலை ஆசனத்தின்மீது மண்டியிட்டுக் கொண்டு, டாமியைச் சிறிது கீழ்வாக்கில் சாய்த்து மீண்டும் விசையை அழுத்தினான். டட்டர்ர்ர்...

     “போதும்.”

     நடராஜன் இறங்கிப் போய் செவர்லேயைச் சோதனையிட்டு, உள்ளே கிடந்த டாமி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, கதவுகளை இறுக்கி அடைத்தான்.

     இரண்டு கார்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் ஆற்றுக்குள் உருட்டி விட்டனர்.

     “டாமிகளை ஆற்றுக்குள் எறியுங்கள்.”

     நடராஜனும் கருப்பையாவும் விசைத் துப்பாக்கிகளைத் தூக்கிவீசினர்.

     “அரிகாதோ*, யாமசாக்கி சான் சயோனாரா!”

     * (ஜப்பானியம்) “யாமசாக்கி அவர்களே நன்றி! போய் வருகிறோம்”

     ஆற்றைப் பார்த்து நாடக பாணியில் பேசிய நடராஜன் வலக்கையை உயர்த்தி அலைத்தான்.

     “போதும், போகலாம்.”

     கிழக்கே நடந்தார்கள். இருள் பெருகி மூடிக் கொண்டிருந்தது. இருபுறமும் சிள் வண்டுகளின் ரீங்காரம். கொசுப் படைகள் உடலைக் கடித்துக் குதறலாயின.

     சாலை நேர் கோடாகச் சென்றது.

     வடமேற்கே குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டது. பாண்டியன் திரும்பினான். அங்கே என்ன இருக்கிறது? விமான நிலையம் தெற்கே அல்லவா... தரைப் பீரங்கிகள் சுடக் காணோம். ஏதாவது விபத்தாக இருக்கலாம்...

     ஜ்ம் ஹ்ம் ஹங் ஜ்ம் ஹ்ம் ஹ்ங் ஜ்ம் ஹ்ம் ஹங்... விமானங்களின் பறப்போசை இறங்கிப் பெருகிக் குலுக்கிற்று. சுற்றுச்சூழல் நடுங்கி அதிர்ந்தது. அபாயச் சங்குகளின் அலறல் தெற்கேயிருந்து நசுங்கலாய் வந்தது.

     “B- 24* அசையாமல் நில்லுங்கள்.”

     * பறக்கும் கோட்டை என்று அறியப்பட்ட கனரக அமெரிக்க குண்டு வீச்சு விமானம்.
     கடந்து போன அதிரொலி திரும்பித் தாழ்ந்திறங்கிக் கடகடத்தது.

     திடுமென வானில் மத்தாப்புக் குண்டுகள் வெடித்துப் பட்டப் பகலெனப் பச்சை வெளிச்சம் போட்டன.

     “இடப்பக்கம்.”

     பாண்டியன் சாலைச் சரிவில் பாய்ந்திறங்கிப் பள்ளத்தில் மண்டியிட்டுப் படுத்தான். பின் தொடர்ந்த இருவரும் சரிவோடு ஒட்டிச் சாய்ந்தனர்.

     மேற்கேயிருந்து வெடிப்போசை அலை அலையாய் வந்தது. தரை இடையறாது குலுங்கிற்று.

     மத்தாப்பு வெளிச்சம் மறைந்து மீண்டும் இருள் கவ்வியது. வெடியோசை தொடர்ந்து கேட்கிறது. பாண்டியன் தலையைத் தூக்கி மேற்கே பார்த்தான் தீச்சிவப்பு உயர்ந்து விரிந்து கொண்டிருந்தது. வெடியோசை தீர்ந்தது.

     சாலையில் ஏறி மீண்டும் கிழக்கு முகமாய் நடக்கலானார்கள்.

     ஓடைப்பாலம். கீழே தண்ணீர் சலசலத்தது.

     “எல்லாவற்றையும் எறிந்துவிட வேண்டும்.”

     பாலத்தின் கைப்பிடிக் கிராதியோரம் போய் நின்று குனிந்து, ரப்பர் தடிகளையும் பிஸ்டல்களையும் அரவமில்லாமல் தண்ணீருக்குள் நழுவ விட்டனர்.

     கிழக்கே செல்லும் சாலையில் தொடர்ந்து நடந்தார்கள். சாலை நேர்கோடாகச் சென்றது.

     “குபூன் டிபூர் - அது புகையிலைத் தோட்டம் - மருதமுத்துத் தண்டலின் சொந்தக்காரப் பையன் செத்துப் போனான். காய்ச்சல். ஏழெட்டு வயதிருக்கும். நெற்றியில் பெரிய காயத் தழும்பு” பாண்டியன் மென்குரலில் சொல்லிக் கொண்டே வலப்புறம் நடந்தான். “கேதம் கேட்கப் போய்விட்டு வருகிறோம். மொத்தோர் தவறிவிட்டது. பூலு பிரையான் போக வேண்டும்... தானா லாப்பாங் போகும் வரை இந்தக் கதை. பிறகு, ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல்.”

     மவுனமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

     பில்வான் சாலை எதிர்ப்பட்டது.

     வலப்புறம் திரும்பினர், கெசாவனை நோக்கி.

*****

     சிங்கப்பூர் போய்ச் சேர்ந்த பாண்டியன், குளித்து, உண்டியை முடித்ததும் கர்னல் கலிக்குஸுமானைப் பார்க்கச் சென்றான். வழியெல்லாம் பெருமை - மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஜப்பானியக் கப்பலில் சுமத்ராவுக்குப் போய், கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கியை வழிமறித்துக் கொன்று, முக்கியமான கடிதம் ஒன்றை மீட்டுக்கொண்டு, ஜப்பானியக் கப்பலிலேயே மலேயாவுக்குத் திரும்பி விட்டானன்றோ! யாமசாக்கியைச் சந்தித்த மறுநாள் பிலவானிலிருந்து ஒரு சரக்குக் கப்பல் பினாங்குக்குப் புறப்பட்டதும், மலேயா சேனாதிபதியின் சீட்டைக் கண்டதுமே கப்பல் காப்டன் மறுபேச்சின்றி இடம் கொடுத்ததும் நல்லூழ் என்றே கூற வேண்டும். எவ்விதச் சிக்கலுமின்றிக் கடமையை நிறைவேற்றி விட்டேன்...

     கர்னல் டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய இடக்கை எதிர்ப்புற நாற்காலியைச் சுட்டிற்று. உட்கார்ந்தான்.

     டெலிபோன் உரையாடல் முடிந்தது.

     “உன் முகத்தில் தற்பெருமை தாண்டவமாடுகிறது. கடிதத்தைக் கொண்டு வராவிடினும், யாமசாக்கியைத் தீர்த்திருப்பாய் என்று நம்புகிறேன் - உன்முகம் சொல்கிறது.”

     “கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கிக்குச் சாவு!” நாடகக் குரலில் உரைத்தான். “கமாண்டோ காப்டன் பிரமோத் சந்திர மஜும்தார் கையில் கடிதம், இதோ!”

     கடிதத்தை வாங்கிப் பார்த்த கர்னல், சில விநாடிகள் ஒன்றும் பேசாமல் பாண்டியனின் முகத்தை நோக்கியபடியே இருந்தார். பிறகு, சரேலென்று எழுந்து, அவன் வலக்கையைத் தனது இரு கரங்களாலும் பற்றினார்.

     “பாண்டியன், உனது செயல் திறமையைப் பாராட்டுகிறேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதே. வெற்றியின்போது அடக்கம் மிகமிகத் தேவை. மமதை அறிவை மழுக்கிவிடும்... எனது நல்வாழ்த்துக்கள்.”

     “நன்றி, கர்னல்சாப். சந்தர்ப்ப மகிமையைக் கருதிக் கொஞ்சம் நடித்தேன்.”

     “நான் அதைச் சொல்லவில்லை. பொதுவாகக் குறிப்பிடுகிறேன். நீ வயதில் சிறியவன். அறிய வேண்டியதும் பழக வேண்டியதும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆகவேதான்; அடக்கம் மிகமிகத் தேவை என்றேன்... வா, நேதாஜியை உடனே பார்க்க வேண்டும். யாமசாக்கி - பாண்டியன் சந்திப்பு பற்றிச் சாவகாசமாய்ப் பிறகு பேசிக் கொள்ளலாம். உன் ஆட்கள் இருவர்?”

     “என் அறையில் இருக்கின்றனர்.”

     “எவ்விதச் சிக்கலுமில்லை, சேதமுமில்லை.”

     “ஆம்.”

     “நல்லது.”

     இருவரும் புறப்பட்டனர்.

     சீட்டுப் போனதுமே அழைப்பு வந்தது. எழுதிக் கொண்டிருந்தவர் தலையை உயர்த்தினார். வந்தனை செய்தார்கள்.

     “கலிக்குஸுமான், உட்காரலாம்.”

     கர்னல் உட்கார்ந்தார்.

     “கடிதம் கிடைத்ததா?”

     பாண்டியன் பக்கம் பார்வை திரும்பியது.

     “ஆம், தலைவரவர்களே”

     சட்டைப் பைக்குள்ளிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினான்.

     வாங்கிப் பார்த்தார்.

     “ஏதேனும் சிக்கல்?”

     “திட்டப்படி நடந்தேறியது, தலைவரவர்களே.”

     “உனது ஆட்கள்?”

     “நலமே இருக்கின்றனர், தலைவரவர்களே.”

     “நன்றி... கலிக்குஸுமான்.”

     “தலைவரவர்களே.”

     “இவர்கள் மூவருக்கும் பண வசதியுடன் விடுமுறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”

     “அப்படியே செய்யப்படும், தலைவரவர்களே.”

     “லெப்டினன்ட்!” முகம் திரும்பியது. “விதித்த கடமையை வழுவின்றி நிறைவேற்றினாய். உன்னால் இந்திய தேசிய ராணுவம் பெருமை அடைகிறது. இன்னொரு முக்கியமான பணியை உன்னிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். அழைப்பு வரும். இப்பொழுது நீ போகலாம்.”

     வந்தனை செய்துவிட்டு வெளியேறினார்கள்.