உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 31. பினாங் பிரை ரெயில் நிலையத்தில் வந்து நின்ற பேங்காக் எக்ஸ்பிரஸிலிருந்து பாண்டியன் இறங்கினான். பினாங் செல்லும் நீராவிப் படகைப் பிடிப்பதற்காகப் பிரயாணிகள் பரபரப்பாய் இறங்கி ஓடினர். “பாண்டி!” இடப்புறத்திலிருந்து குரல் வந்தது. திரும்பினான். கூட்டத்தை உதறித் தள்ளிக் கொண்டு மாணிக்கம் வந்தான். வெள்ளைச் சட்டைக்குக் கீழே சிமிந்தி நிற ட்வீட் சராய். தலையில் கரும்பச்சை ஃபெஸ் தொப்பி. வாய் மூலையில் சிகரெட் புகைந்தது. அவனைத் தொடர்ந்து கைலி - குல்லா அப்துல் காதரும், வேட்டி - திருநீறு செல்லையாவும் வந்தனர். பாண்டியன் ஏங்கும் பார்வையுடன் நோக்கினான். என்ன மாற்றம்! என்ன மாற்றம்! அதற்குள் எல்லாரும் பழைய பாதையில் திரும்பிவிட்டோம். திரும்பிக் கொண்டிருக்கிறோம். கிராணி காலில் ட்வீட் சராய்; வங்குசாக்கடை முஸ்லீம் தலையில் ஃபெஸ் குல்லா; வட்டிக்கடை அடுத்தாள். இடுப்பில் வேட்டி. “மாணிக்கம்! காதர்! செல்லையா!” “வருக வருக, நல்வரவாகுக!” மாணிக்கத்தின் வாய் நாடக பாணியில் பேசியது. இடக்கை மெய்யன்புடன் தோளைத் தொட்டது, அப்துல்காதரும் செல்லையாவும் கைகளைப் பற்றினர். “காபி குடிக்கலாம்.” அப்துல்காதர் சொன்னான். “நேரமாகிறது, இந்தப் படகிலேயே கிளம்பி விடுவோம்.” “கோலப் பிரை படகில் போகலாம். கார் இருக்கிறது” மாணிக்கம் நகர்ந்தான். “அங்கே ஒரு புதுக்கடை திறந்திருக்கிறார்கள், மீகோரெங் தின்று பார்.” “சரி, போகலாம்.” ரெயில் நிலையத்துக்கு வெளியே நின்ற ‘உல்ஸி’யில் ஏறி உட்கார்ந்தனர். மாணிக்கம் காரைச் செலுத்தினான். “ரேசன் என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்? மாசானம், முத்தையா?” “பேங்காக்கில் குறிப்பிடத்தக்க ஆள்களில் ஒருவன். பணம் தண்ணீர் பட்டபாடு. இனிமேல் பேங்காக்தானாம். மாசானம், முத்தையாவும் அப்படித்தான். நகருவார்கள் என்று தெரியவில்லை.” சுங்க்கிங் ரெஸ்டாரன்ட் முன் போய் வண்டி நின்றது. உள்ளே சென்று தென்மேற்கு மூலை மேசையைச் சுற்றி அமர்ந்தனர். “நாவன்னா இங்குதான் இருக்கிறாரா?” “இருந்தால் வராமல் இருப்பாரா? முதல் கப்பிலேயே ஊர் கிளம்பி விட்டார். ஆடிட்டர் சிங்கப்பூரில் இருக்கிறார். அன்பானந்த அடிகள் ஈப்போவில்... நாவன்னா முதல் வேலையாகப் பிரான்மலைக்குத்தான் போவார் என்று நினைக்கிறேன். நீ இல்லாததால், கல்யாணியின் அருமை பெருமைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி என் உயிரை வாங்கி விட்டார். அவள் என்ன அவ்வளவு நயம் சரக்கா?” “சுமாரான உருப்படி. இவருக்கென்னவோ அவளில் மயக்கம்.” பணியாள் வந்து என்ன வேண்டுமென்று கேட்டான். மாணிக்கம் தெரிவித்தான். “செல்லையா, ஆவன்னா மைடானுக்குப் போய்விட்டாரா, இங்கேதான் இருக்கிறாரா?” “கப்பல் விடுவதற்கு முன்னமே தொங்கானில் போய்விட்டார்.” “சுமத்ராவுக்கு இப்பொழுது எதற்காகப் போகிறாய்?” மாணிக்கம் கேட்டான். “ஊர் போக வேண்டு மென்றால் இப்படியே கப்பலேறு.” “போய் நண்பர்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும். முதன் முதலில் நான் வேலைக்கு வந்தது மைடானில்தான்.” உண்டித் தட்டுகளும் காபி மங்குகளும் மேசைக்கு வந்தன. பேசிக்கொண்டே உண்டார்கள். “இந்தச் சமயம் நீ சுமத்ராவுக்குப் போவது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நிலைமை மேலும் மோசமாகலாம்.” “போய் வர முடிவு செய்து விட்டேன்.” “சரி, உன் விருப்பம்” மாணிக்கத்தின் இடக்கை தலைமுடியைக் கோதியது. பாதி மூடிய கண்கள் செல்லையா பக்கம் திரும்பின. “டேய், என்ன செய்கிறாய்? மீகோரெங் தின்கிறாயா, கோழி பிடிக்கிறாய்?” “சனியன்-ஒரே கொழுப்பு. என்னென்ன இழவோ போட்டிருக்கான்.” “ஓஹோ, கொழுப்பா! இதென்ன ‘பிராமணாள் காப்பி அண்டு சாப்பாடு கிளப்’ என்று நினைத்தாயா? சுங்க்கிங் ரெஸ்டாரன்ட்.” “அவனுக்கு வேண்டுமானால் அடுத்த தடவை பருப்புங் கத்தரிக்காய் மீகோரெங் தயார் செய்யச் சொல்வோம்.” அப்துல்காதர் உடம்பை நெளிந்தவாறு எழுந்து, இடக்கையால் செல்லையாவின் முதுகில் அடித்தான். “வயித்துக்குத் துரோகம் பண்ணாமல் நல்லாத் தின்னும்பிளா.” “டேய், தடிப்பயலே, மீகோரெங் ஊட்டமெல்லாம் கையில் ஏறிவிட்டதாக்கும். சீனன் மேற்படி கறியும் சேர்த்திருக்கிறான், தெரியுமா?” “சேர்த்தால் சேர்த்துட்டுப் போறாம்பிளா, எல்லாம் கறிதான்.” காரில் ஏறிப் படகுத் துறையை நோக்கிக் கிளம்பினார்கள். “சுந்தரம் விவகாரத்தில் ஒன்றும் தொந்தரவு இல்லையே?“ “அவன் மாரடைத்துச் செத்தால் அதற்கு நாமா பழி?“ மாணிக்கம் சிரித்தான். “இன்ஸ்பெக்டர் குப்புச்சாமியும், பார்க்ளேயுமாய்க் கூடி மூன்று நாள் உலுக்கி எடுத்து விட்டார்கள். ஒரேயடியாய் பெப்பெப்பெப்பே போட்டு விட்டானாம். இன்ஸ்பெக்டரே வியந்து பாராட்டும் படியாக.” “வெறும் விளையாட்டுப் பயல் என்றல்லவா நினைத்திருந்தேன்.” “நானும்தான். நடராஜனும் இனம் தெரியாத இன்னோர் ஆளும் சேர்ந்து மாரடைப்புக்கு ஏற்பாடு செய்ததாக இன்ஸ்பெக்டர் தெரிந்து வைத்திருக்கிறார். “நடராஜனை எப்படித் தெரிந்தார்?“ “தெரியவில்லை. அந்த ‘இன்னோர் ஆள்’ நானே என்பது இன்ஸ்பெக்டரின் கணிப்பு. பார்க்கும் போதெல்லாம் நச்சரிக்கிறார். மாரடைப்புக் காட்சியை நடித்துக் காட்டும்படி - தொழில் ஞானத்துக்காகவாம்.” இருவரும் சிரித்தார்கள். “நடராஜன் எங்கே இருக்கிறான்?” “இப்பொழுது கோலாலம்பூரில். அவனை இங்கேயிருந்து கிளப்புவது பெரும்பாடாகி விட்டது. தினசரி ஒரு தகராறு.” “ரக்பீர்லால் சங்கதி?” “ஜாராங் முகாமோடு சரி. ஆங்கிலேயர் கெட்டிக்காரர்கள்.” கார் வேகத்தைக் குறைத்து நிறுத்தினான். “அவர்களுக்கு நடப்புக் கணக்கில்தான் அக்கறை. குப்பை கிண்டுவதிலேயே நேரம் கழிந்தால், இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியாள நேரமிராது.” சனிக்கிழமை பகலில் பினாங் போய்ச் சேர்ந்த பாண்டியன், ஞாயிற்றுக்கிழமை பூராவும், திங்கட்கிழமை மாலை வரையும் அங்கேயே இருந்தான். தாயகம் திரும்பும் தமிழர்களின் வழக்க முறைப்படி தண்ணீர்மலை, நியூபீச், பாம்புக்கோயில் முதலிய இடங்களுக்கு நண்பர் குழாமுடன் சென்று வந்தான். திங்கட்கிழமை, நண்பர்கள் புடைசூழத் துறைமுகம் போய்ச் சேர்ந்தான். கிரியான்! டிக்கெட்டில் பெயரைக் கவனிக்கவில்லை. முதன்முதலாக அவனைச் சுமத்ராவுக்கு அழைத்துச் சென்ற அதே கப்பல்! யுத்த காலமெல்லாம் எங்கெங்கோ வேறு கடல்களில் திரிந்துவிட்டு, யுத்தம் முடிந்திருந்ததும் திரும்பி வந்திருக்கிறது- அவனை மீண்டும் சுமத்ராவுக்குக் கொண்டுபோக. புறப்படும் நேரம் நெருங்கியது. விடைபெற்றுக் கொண்டு ஏறினான். கப்பல் சங்கு முழங்கிற்று. மணி 5-15. பிலவான் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது கிரியான். ஆட்கள், வண்டிகள், கட்டிடங்கள், கப்பல்களின் உருவம் மங்கி மறைந்தது. பினாங் நகரமும் மலேயாவும் பின்னேறின. மேல்வானில் கதிரவனின் செவ்வொளி குறைந்து கொண்டிருந்தது. புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|