நுனை

6. அர்னேமியா ஆறு

     அர்னேமியா ஆற்றில் மணல் அள்ளும் வேலை மும்முரமாய் நிகழ்ந்தது.

     மலையகத்திலிருந்து வடமுகமாய் ஓடிய நதியின் மேல்பாதியில் குத்துப் பாறைகளினிடையே நீர் சலசலத்தது. கீழ்ப்பாதியில் வெண்மணல் மெத்தை. இரு கரையிலும் ஓங்கி வளர்ந்த மரங்களினூடே செடிகொடிகள் மண்டிப் பின்னிக் கிடந்தன. தெற்கே, அடுக்கடுக்காய் உயர்ந்த பச்சை நீலப் பவள மலைத்தொடர். தத்தித் தாவிச் சுற்றி மலையேறிய பிரஸ்தாகி சாலை இங்குமங்கும் சாம்பல் நிறக் கோடாய்த் தெரிந்தது. வெகு தொலைவில் கத்தரிப்பூ நிறமாய் மின்னிய கபான்ஜாஹே கொடுமுடி மஞ்சுத் திரைக்குப் பின் மறைவதும் தோன்றி முறுவலிப்பதுமாய் விளையாடுகிறது.

     குளுகூர் சிறை முகாமிலிருந்து கொண்டு வரப்பட்ட டச்சுக் கைதிகள், மணல் அள்ளிக் கூடையில் சுமந்து சென்று கரையில் நின்ற மாட்டுவண்டிகளில் கொட்டினார்கள். மணல், அளவு மட்டத்தை அடைந்ததும், புதிதாக உண்டாக்கிய பாதை வழியாக முக்கியூர்ந்து நெடுஞ்சாலையில் ஏறி மறைந்தது மாட்டு வண்டிப் பட்டாளம். வடக்கே சற்றுத் தொலைவில் தமிழ் ஜாவானிய கூலிப்படை பெரியசாமிக் கப்பலா தலைமையில் தனிக் கூட்டமாய் மணல் அள்ளி வண்டியிலேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது.

     வடகரையில் செழித்து நிழல் நிரப்பி நின்ற ஜுமாரா மரத்தடியில் மடக்கு நாற்காலிகளில் அமர்ந்து பாண்டியனும் லெப்டினன்ட் கிமியோரி நோமுராவும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர்.

     தலைக்கு மேல் ஐந்தைந்தாக 8 விமான அணிகள் பறந்தன. மங்மங் மங்ம்ங்... ஒரே கதியான தாள ஓசைபோல் இரைச்சல் அலைகள் ஒலித்தன.

     “ஜிரோ! புதுவகை!” கைகளைக் கண்ணுக்கு மேல் குவித்துப் பார்வையை வானில் செலுத்திய நோமுரா தெரிவித்தான். கூர்ந்து மேலே நோக்கியபடி ஜிரோ, விமானத்தின் பெருமைகளைக் கூறலானான். பிறகு, செருமிக் கொண்டு பாண்டியன் பக்கம் திரும்பினான்.

     “இந்தியர்கள் வெகு விரைவில் தாயகம் திரும்பலாம். இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசம் பிரிட்டிஷ் ராணுவத்தின் கல்லறையாக மாறப் போகிறது. பர்மா சேனாபதி காவாபே மிகச் சிறந்த போர் நிபுணன்.”

     பாண்டியன் சிகரெட் பெட்டியை நீட்டினான்.

     “அரி காதோ.”

     இருவரும் சிகரெட் பற்றவைத்துப் புகைத்தனர்.

     “ஆசிய நாடுகள் அனைத்துக்கும் விடுதலை. அவற்றுக்கிடையே ஒத்துழைப்பு, கூட்டுறவு, ஆள் அரவமில்லாது கிடக்கும் வடக்கு ஆஸ்திரேலியாவில் ஆசியர் குடியேறி வேளாண்மை செய்ய வசதி. இதுவே டாய் நிப்பனின் போர் நோக்கம்.”

     நோமுரா புகையை இழுத்து ஊதினான்.

     பாண்டியன் கைக்குட்டையை எடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்தான்.

     “பாண்டினோ!” வாயிலிருந்த சிகரெட்டைக் கையில் எடுத்தான். “ஒரு காலத்தில் இந்தொனேசியா முழுவதையும் கட்டியாண்ட இந்த டச்சுக்காரர்களைப் பார். கோழைகள், கோழைகள்... அன்று வீரர்கள், நிபுணர்கள். இன்றோ ஒரு சிகரெட் துண்டுக்காக நாய்கள்போல் சண்டை போடுகின்றனர்.”

     “நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குத் தக்கபடி செயல்திறனைக் காட்டவில்லை இவர்கள்.”

     “வெறும் ஆர்ப்பாட்டம், வெறும் ஆர்ப்பாட்டம். ஜப்பானியராயிருந்தால் மெடான் வட்டகையில் விடாப்பிடியாகப் போராடி வருஷக் கணக்கில் இழுத்தடித்திருப்பார்கள்.”

     “ஆமாம்.”

     “இவர்களின் உண்மை சொரூபத்தைக் குளுகூர் சிறை முகாமில் பார்க்க வேண்டும். கூடுதலாய் ஒரு கவளம் சோறு, அல்லது ஒரு சிகரெட் பெறுவதற்காக ஒருவர்மேல் ஒருவர் அபாண்டமாய்ப் பழி சுமத்துகிறார்கள். இவர்களுக்குள்ளே நடக்கும் அடிபிடிச்சண்டைகள்!... ‘என் செருப்பை ஒளித்து வைத்திருக்கிறான்... என் கருவாட்டுத் துண்டைத் திருடிக் கொண்டான்...’ எந்த நெருக்கடி நிலையிலும் ஜப்பானியரிடம் அப்படிக் கண்ராவிக் கூத்துகளைக் காண முடியாது.”

     கதிரவன் வான உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தான். காங்கை கூடியது. சாலையில் ராணுவ லாரிகள் கிளப்பிய அலறல் அமுங்கலாய் வந்து காதில் விழுந்தது. முன்னால், ஆற்றுக்குள் எலும்பும் தோலுமான வெள்ளையர் அழுக்குக் கந்தல் உடையுடன் மண் அள்ளிச் சுமந்து நடந்தனர்; முக்கி முனகிக் குனிந்து மண்வெட்டியால் சிராய்ந்து அள்ளுவதும், அள்ளிப் போட்டுக் கூடைகளை நிரப்புவதும், நிரப்பிய கூடைகளை முக்கி முனகித் தூக்கிக்கொண்டு நடப்பதுமாய்க் காணப்பட்டனர்.

     பாண்டியனின் பார்வை ஆற்றுப் பக்கம் சென்றது. திரும்பி, சிகரெட் புகையில் லயித்திருந்த நோமுராவின் முகத்தைப் பார்த்துவிட்டு, மர உச்சிகளை நோட்டமிடலாயிற்று. பார்வை மீண்டும் ஆற்றுப் பக்கம் சென்றது... ஆ, எவ்வளவு சுலபமான மாற்றம். வெற்றி - தோல்வி, வாழ்வு - தாழ்வு, பெருமை - சிறுமை...

     மணி ஆகிவிட்டது. லெப்டினன்ட் எழுந்து உடல் விறைக்க நின்று, பையிலிருந்த விசிலை எடுத்து ஊதினான். பாண்டியனும் எழுந்து விலகிப் போய் நின்றான்.

     வண்டிக்காரர்களும் கூலிச்சுமையாட்களும் - தமிழரும் ஜாவானியரும் அக்கரையை நோக்கி நடந்தார்கள்.

     வெள்ளையர்கள் காவலர் சூழ இக்கரைக்கு வந்தனர்.

     “கெய்ரேஎஎய்!” கார்ப்பொரல் அலறினான்.

     சிப்பாய்கள் வந்தனை செய்தனர். கைதிகள் இடுப்பளவுக்குக் குனிந்து வணங்கினார்கள். உருப்படிகளை மனக்கணக்காய் எண்ணினான் லெப்டினன்ட். பிறகு கார்ப்பொரலிடம் ஏதோ கேட்டான். அவன் பதில் சொன்னான் - உரத்த குரலில் கத்தினான்.

     இரண்டாவது விசில் ஊதப்பட்டது - சோற்றுக்கு.

     ஜுமாரா மரத்துக்குக் கிழக்கே இருந்த சமதரையை நோக்கிக் கைதிகள் நடந்தனர். எல்லாருக்கும் பின்னே, இடக் காலைத் தாங்கி நடந்தவாறு பருத்த உருவம் சென்றது. வெளிரிய மயிர், கூரிய நீலக் கண்கள்... ஆ, லாயர் டில்டன். ராணுவப் பட்டை தெரிகிறதே... ஓ, ரிசர்வ் மேஜர்.

     டில்டன் ஏறிட்டுப் பார்த்தார். முகத்தில் தெளிவு தோன்றிற்று. லேசாய்த் தலையை அசைத்துவிட்டு நடந்தார்.

     கைதிகள் தரையில் குந்தி, காய்ந்த வாழை இலையில் வைத்துக் கட்டிய சோற்றுருண்டையை எடுத்துத் தின்றார்கள். ஒரு கவளம்கூட இராது. விறைத்துப்போன கட்டி. கடித்துக் கொள்வதற்குச் சின்னஞ்சிறு கருவாட்டுத் துண்டு.

     டில்டன் கைதிப்படையின் தலைவர். வேலை செய்ய வேண்டியதில்லை. ஓய்வு நேரமும் அதிகம். சிறிது விலகி உட்கார்ந்து, சாவதானமாய் இலைப் பொட்டலத்தை அவிழ்த்துச் சோற்றுருண்டையையும் கருவாட்டுத் துண்டையும் எடுத்துத் தின்னலானார்.

     கைதி மந்தையை ஜப்பானிய மேய்ப்பர்கள் மீண்டும் ஆற்றுக்குள் ஓட்டிச் சென்றனர்.

     பாண்டியனும் நோமுராவும் ஜுமாரா மரத்தடி நாற்காலிகளில் மவுனமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

     டில்டன் உண்டியை முடித்துக்கொண்டு, குப்பைக் காகிதத்தில் பலப்பட்டடை புகையிலையை வைத்துச் சுருட்டி அவரே தயாரித்து வைத்திருந்த சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

     வெட்டவெளி உச்சி வெயிலில் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்தோடும் உடலுடன் அழுக்காய் அநாதையாய் முழங்காலில் கைகளைச் சுற்றிக்கொண்டு கிழக்கு முகமாய் உட்கார்ந்திருந்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ லாயர் டில்டனின் முதுகு, கிழிந்து நைந்த துணியுடன் பாண்டியனின் பார்வையில் விழுந்து உறுத்திற்று.

     நோமுராவிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். ஐப்பானியன் சீறிக் கத்தினான். டில்டனின் முகம் திரும்பியது; கண்கள் மிரண்டு விழித்தன.

     லெப்டினன்டின் முகத்தைப் பார்த்தபடி பாண்டியன் நிதானமாய், சிகரெட் புகையை இழுத்து ஊதினான், கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்களுக்கு உதவ வேண்டிய அவசியத்தை அவனுடைய மவுனப் பார்வை வலியுறுத்தியது.

     ஜப்பானியன் திகைத்தான். இது போன்றதொரு சிக்கல் இதற்குமுன் அவனை எதிர்ந்ததில்லை. இந்த இந்தோவுக்கு என்ன நெஞ்சழுத்தம், என்ன நிதானம்... ஈவிரக்கமில்லாத காட்டுமிராண்டிகளில் நானும் ஒருவன் என்று கருதுகிறானோ...

     தயங்கினான். மீண்டும் மீண்டும் ஆபத்தை விளக்கினான்.

     இறுதியில், வேண்டாவெறுப்பாக இணங்கினான்; ஓர் எச்சரிக்கையோடு; “சிப்பாய்கள் பிடித்துக் கொண்டால் வாய் திறக்கமாட்டேன். உன் தலை உருள்வது திண்ணம்.”

     மரத்தூரில் சாத்தி வைத்திருந்த உண்டிப்பையையும் காபி குடுக்கையையும் எடுத்துக்கொண்டு போய் டில்டனிடம் கொடுத்தான்.

     “வேக வேகமாய் உண்ணுங்கள்.”

     மூராட் சிகரெட் பெட்டியில் 5 ரூப்பியா நோட்டு இரண்டைத் திணித்து, அதையும் நெருப்புப் பெட்டியையும் நீட்டினான். பிறகு, இடப்புறமாகத் திரும்பி விரைந்து போய் நீரோட்டத்தின் மீது பார்வையைச் செலுத்தி நின்றான்.

     லாயர் டில்டனின் கைகள் நடுங்கின. உதடு துடித்தது. பையை அவிழ்த்தார். பூரி, தோசை! இறைச்சி, சட்னி! தின்றார். விக்கிற்று. குடுக்கையைத் திறந்து காபி குடித்தார். உடல் புல்லரித்தது. சிகரெட் பெட்டியை எடுத்துப் பிரித்தார். ஆ!... பத்து கில்டர்! எய்ன், ட்வே, ஃபியர், ஜெக்ஸ், அக்ட், டீன், பதின்மூன்று சிகரெட்டுகள்! நெருப்புப் பெட்டி! முழுப் பெட்டி! கண் கலங்கியது. தலையைத் தாழ்த்தி முழங்கால்களுக்கு இடையே வைத்தார். ஐந்தாம் நம்பர் செட்டியின் கிராணி. நல்ல பையன். ஜாத்திலான் வீட்டு விவகாரமாய் வந்திருந்தானே. பெயர் என்னவோ... இங்கு எப்படி வந்தான்... இப்பொழுது அன்னெமரிடம் வேலை பார்க்கிறானோ... வாய் முனகியது.

     “ஆண்டவனே! இந்தப் பையனுக்கு நீண்ட நல்வாழ்வைக் கொடும். இவனை எவ்விதத் துன்பமும் அணுகாமல் காப்பாற்றும்... பராபரனே! துர்பாக்கியனான எனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இவனை என்றென்றும் ரட்சிப்பீராக, ஆமென்.”

     இலைகளைப் புதருக்குள் எறிந்துவிட்டு, ஆற்றை நோக்கி நடந்த டில்டன் பாண்டியனை நெருங்கினார்.

     “சகோதரனே, நீ யார்? உன் பெயர் என்ன?”

     “பாண்டியன், அன்னெமர் காதர் மொய்தீன் கந்தோரில் கிராணி. முன்பு ஐந்தாம் நம்பர் செட்டியிடம் வேலை பார்த்தேன். தயவு செய்து நகருங்கள்.”

     கால் விரல்களை வெளிக்காட்டிய பீற்றல் சப்பாத்துகளைத் தரையில் தேய்த்து இழுத்துக்கொண்டே ‘ரோல்ஸ் ராய்ஸ்’ லாயர் டில்டன் ஆற்றுக்குள் இறங்கினார்.

     அர்னேமியா ஆற்றில் மணல் அள்ளும் வேலை 22 நாள்களாய்த் தொடர்ந்து நடந்தது. ஒவ்வொரு நாளும் டில்டனுக்கு உணவு, காபி, சிகரெட் கொண்டுபோய்க் கொடுத்தான். நல்ல வேளையாக எவ்விதச் சிக்கலும் எழவில்லை.