முகை

20. கோத்தா பாலிங்

     ராணுவப் பள்ளிப் பரிட்சையில் தேறிய பாண்டியன், சுங்கைடூவா முகாம் 4-வது கொரில்லா படையில் செகண்ட் லெப்டினன்டாகப் பதவி ஏற்றான்.

     அலோர்ஸ்டார் - சிங்கப்பூர் நெடுஞ்சாலைக்குக் கிழக்கே, கன்னிக் காட்டின் நடுவில் படை முகாம் இருந்தது. பாசிச எதிர்ப்புச் சேனையினர் - கம்யூனிஸ்டு கொரிலாக்கள் - கணக்குப்படி, அது இருந்த இடம் அவர்களின் ஒன்பதாவது படை வட்டாரத்தைச் சேர்ந்தது. இந்தியத் தேசிய ராணுவத்தினர் காட்டுப் போர்ப் பயிற்சிக்காகச் செல்லும்போது, சில சமயங்களில் கம்யூனிஸ்ட் கொரில்லாக்களைச் சந்திப்பதுண்டு. அப்போதெல்லாம் ஒருவரை ஒருவர் காணாதது போல் ஒதுங்கிக் கொள்வது அவர்களிடையே தோன்றியிருந்த - பேச்சு எழுத்து உடன்பாடு இல்லாமலே உண்டாகி இருந்த - நடைமுறை ஏற்பாடு. ஓரோர் நேரங்களில் இட உரிமை குறித்து மோதல் ஏற்படுவதும் உண்டு. ஆயினும் உடனுக்குடன் பொறுப்பானவர்கள் சந்தித்துப் பேசுவதன் விளைவாய் மீண்டும் வழக்கமுறை நடப்புக்கு வரும். ஆனால் ஒருநாள் பொழுதுசாயும் நேரத்தில் எதிர்பாராவகையில் பெரிய சிக்கல் தோன்றிவிட்டது.

     பர்மா போர்க்களத்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த 4வது கொரில்லா படைக்குக் காட்டுப் போர் நுட்பங்களில் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக அரமாக்கி என்ற ஜப்பானிய மேஜர் தனது உதவியாளர் ஐவருடன் வந்திருந்தான். ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவுடன் அரமாக்கி கோஷ்டி காட்டுக்குள் போய்ப் பயிற்சி அளிப்பதென்று முடிவாகியது.

     முதல்நாள் பயிற்சி தடங்கலின்றி நிறைவேறியது. இரண்டாவது நாளில் பயிற்சிக்குப் போன அணி திரும்பிக் குரங்குக்கல் அருகே வரும்போது இரு புறத்திலிருந்து தோட்டாக்கள் பறந்து வந்தன. ஜப்பானிய கார்ப்பொரல் ஒருவனும், பஞ்சாபி சிப்பாய்கள் இருவரும் காயமுற்றனர். ஜப்பானியர் உடனிருந்ததால், பாசிச எதிர்ப்புப் படை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி விவகாரம் வளராமல் தடுக்க முடியாத நிலைமை உண்டாகி, இந்தியர் திருப்பிச் சுட்டனர். சிறிது நேரம் செடி கொடி மரங்களுக்கிடையே ஓடித் தாவிச் சுட்டுத் திரிந்து ஓய்ந்து பின், இரு சாரரும் அவரவர் இருப்பிடம் திரும்பினர்.

     சிறப்புப் பயிற்சித் திட்டத்தை இப்போதைக்கு நிறுத்தி வைக்க விரும்புவதாக ஜப்பானிய மேஜரிடம் முகாம் கமாண்டர் சோட்டுராம் கூறினார். இந்தியத் தேசிய ராணுவ உன்னத சேனாதிபதியின் வேண்டுகோள் மீதே இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், சீனக் குரங்குகளுக்கு அஞ்சித் திட்டத்தை நிறுத்தி வைக்க விரும்பின், முகாம் கமாண்டர் அவ்வாறே எழுதிக் கொடுக்க வேண்டுமென்று மேஜர் அரமாக்கி கூறினான். பயிற்சி பற்றி நேதாஜியிடமிருந்து திட்டமான கட்டளை வந்திருந்தது. ஆகவே, கர்னல் சோட்டுராம் தன்னை எக்கச்சக்கமாய்க் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

     சோட்டுராம் அடுத்தபடியாகக் கம்யூனிஸ்ட் கொரில்லாக்களுடன் பேச்சு நடத்திப் பார்க்க முடிவு செய்து பாண்டியனுக்கு ஆள் அனுப்பினார்.

     மறுநாள் முற்பகல் ஒன்பதரை மணிக்குப் பாண்டியனும், ஹவில்தார் நல்லமணியும் காட்டுக்குள் சென்றனர். பாசிச எதிர்ப்புப் படைக் காவலர்கள் வழக்கமாகத் தென்படும் ஓடைக்கரையை அடைந்ததும், அங்கு அடர்ந்து வளர்ந்து நின்ற ஜாத்தி மரத்தடிக்குப் போய் நின்றார்கள்.

     உரத்த கருலில் ஏதாவதொரு பாட்டுப் பாடும்படி பாண்டியன் சொன்னான். நல்லமணியின் ‘கிடை’ப் பாட்டு கிளம்பியது.

     எண்ணி ஏழு பீத்தப் படலுக்குள்ளே வச்சு
     எரநூத்தி முப்பத்தி ஆறாடு மேய்க்க
     என்னால முடியது சாமியோஓஓ
     சண்டிச் சின்னானை கூட்டிக்கோ
     சாமி நீ கூட்டிக்கோஓஓ

     “ஹஹ்ஹஹ்ஹா... பாட்! பாட்! பாட்!!” மரக்கொண்டையில் அமர்ந்திருந்த சீனத் தமிழ் கெக்கலித்தது.

     “நாங்கள் நண்பர்க்ள்.” மேலே நோக்கிப் பாண்டியன் மலாயில் கூறினான்.

     “நண்பர்களைச் சந்திக்க வந்திருக்கிறோம். இறங்கி வருக நண்பரே.”

     “இதோ வருகிறேன்.” தெளிவான மலாய் பேசிய ராணுவ உடைச் சீனன் கீழே குதித்தான். அதே சமயம் மூன்று சீனர்கள் பின்பக்கப் புதருக்குள்ளிருந்து கிளம்பி வந்தனர்.

     தமிழர்களின் கண்ணைக் கட்டித் தமது கமாண்டரிடம் மரங்களிடையே ஒளிந்திருந்த செடி கொடிக் குடிசைக்கு அழைத்துச் சென்றனர்.

     முகமெல்லாம் அம்மைத் தழும்பும் நெடிய மேனியுமாயிருந்த கொரில்லா கமாண்டரின் தோற்றத்தில் தன்னப்பிக்கை மிகுந்த போர்த் தலைவர்களின் கம்பீரம் மிளிர்ந்தது. வயதை மதிக்க முடியவில்லை. ஹக்கா வகுப்பினனாக இருக்கலாம். மிக மிகச் செட்டாகப் பேசினான்.

     “நீங்கள் காட்டுக்குள் வருவது, போவதில் எங்களுக்கு மறுப்பினை இல்லை. ஆனால் ஜப்பானியருடன் வந்தால் சுடுவோம். இன்னொன்று; உங்கள் முகாமுக்கு வந்திருக்கும் ஜப்பானியர் அனைவரும் நாளைப் பொழுது சாய்வதற்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் சண்டைதான். மேற்கொண்டு பேச வேண்டியதில்லை. போகலாம்.”

     பாண்டியன் முகாமுக்குத் திரும்பி, கர்னலிடம் தகவல் தெரிவித்தான்.

     கர்னல் கேட்டார்: “என்ன செய்யலாம்?”

     “சீனப்பயல்களுடன் மோதிப்பார்த்து விடுவோமே. யாருக்கு யார் பணிந்து போக வேண்டுமென்பதை ஒரேயடியாய் முடிவு செய்துவிடலாம்.”

     “ஒருநாளில் இரண்டிலொன்று முடிவாகுமென்றால் பரவாயில்லை. நாள் தவறாது அவர்களுடன் மல்லாடிக் கொண்டிருக்க நேரும். நாம் நடுவில் - குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறோம். அவர்களோ சுற்றிலும் காட்டோடு காடாய் இருக்கிறார்கள். ஆனால் எந்த ஓர் இடத்திலும் இல்லை. அவர்களோடு பொருதுவதாக வைத்துக் கொள்வோம். எது போர் வரிசை? எது தாக்கு மையம்? இன்னொரு முக்கிய விஷயம்; நம்முடைய பலம் அவர்களுக்குத் தெரியும். அவர்களைப் பற்றி நமக்குத் திட்டமாக எதுவும் தெரியாது. எத்தனை ஆள், என்னென்ன ஆயுதங்களோடு இருக்கிறார்கள்...? ஜப்பானியர் அவர்களைக் கண்டும் காணாததும்போல் விட்டுவைத்திருப்பது ஏன், புரிகிறதா?”

     “புரிகிறது... ஜிம்பான் பாலத்தை நொறுக்கும் திட்டத்துடன் ஏராளமான கொரில்லாக்கள் வந்து குழுமியிருப்பதாக அரமாக்கியிடம் சொல்வோம். கிளம்பிவிடுவான். படையகத்துக்குத் தகவல் கொடுக்க.”

     “பாலக் கதையை நம்புவானா?”

     “நம்புகிறானோ இல்லையோ, இப்போதைய யுத்த நிலவரத்தில், காதில் விழுந்த செய்தியைத் தலைமையகத்துக்குத் தெரிவிப்பது கடமை என்று கருதுவான்... ஜப்பானியர் உளவு பார்க்க வந்திருப்பதாகக் கருதியே நேற்று சுட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.”

     அடுத்த நாள் காலையில் மேஜர் அரமாக்கியும் அவனது ஆள்களும் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு இரண்டுநாள் கழித்து, வேறு முக்கிய அலுவல் இருப்பதால், காட்டுப் போர் சிறப்புப் பயிற்சிகளில் மேஜர் அரமாக்கி கோஷ்டி கலந்துகொள்ள இயலாதென்று ஜப்பானியப் படையகத்திலிருந்து தகவல் வந்தது.

     போர்ப் பயிற்சிகளில் முதன்மையாக நின்ற பாண்டியன், ‘தனிப் பிரிவு’ப் பயிற்சி பெறுவதற்காகக் கோத்தா பாலிங் ரகசிய முகாமுக்கு அனுப்பப்பட்ட 35 அதிகாரிகளில் ஒருவனாக இடம் பெற்றான். ‘மந்தியும் அறியா மரம் பயில்’ கானகத்தின் நடுவே கோத்தா பாலிங் முகாம் இருந்தது.

     முகாம் கமாண்டர் கத்தாரகாமா - கர்னல். யாழ்ப்பாணத் தந்தைக்கும், ஜப்பானியத் தாய்க்கும் பிறந்தவரென்று கேள்வி. பயிற்சி ஆசிரியர்கள் இருவர்: காப்டன் ஜிரோ மட்சுடாய்ரா, காப்டன் கெஞ்சி யாகவாத்தா.

     கர்னலும் அவருடைய உதவியாளர்கள் இருவருமாகச் சேர்ந்து பயிற்சிக்கு வந்தவர்களை ஆறு வார காலத்தில் உருட்டிப் புரட்டி எடுத்துவிட்டார்கள்.

     எதிரிப் படையினர் நடமாடும் காட்டில், அவர்களுக்குத் தெரியாமல் நம் தரப்பினருக்குச் செய்தி அனுப்புவது எப்படி; எதிரி வசமுள்ள ஊரில் குழப்படி உண்டாக்க என்னென்ன செய்ய வேண்டும்; ஆயுதத்துடன் நிற்கும் எதிரியை மருட்டித் தப்புவதற்கான வழிகள் என்னென்ன; கைச் சண்டையில் எதிரியை வீழ்த்துவதற்கான துரித நடவடிக்கைகள் யாவை? இவையெல்லாம் கோத்தா பாலிங் பள்ளியில் புகட்டப்பட்ட பாடங்கள்.

     பயிற்சி முடிந்து திரும்பிய பாண்டியன், ஜாராங் முகாமில் இருந்த ஐந்தாவது கொரில்லா படைக்குப் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டான்.