உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 29. சுந்தரம் பினாங் படகுத் துறையில் இறங்கிய பாண்டியன் ஜெலுத்தொங் கிளம்பினான். சைக்கிள் ரிக்ஷா பீச் தெருவில் விரைந்தது. முகத்தைச் சுட்டது மாலை வெயில். நெடுகிலும் சீனர் கடைகள். வெள்ளை, பழுப்பு, கறுப்புச் சிப்பாய்கள் நடந்தும், வண்டிகளிலும் திரிந்தனர். அவர்களைச் சுற்றிச் சிகரெட் வாங்கி விற்கும் சீனச் சிறுவர்கள் ஓடியாடிக் கெஞ்சினர். “ஜானி! ஜானி ஒன் பாக்கெட்.” இடையிடையே பாசிச எதிர்ப்புப் படை கொரில்லாக்கள் - இலைப் பச்சை உடையும் துப்பாக்கியுமாய்த் தென்பட்டனர். ‘வெற்றிலைத் தவ்க்கே’ கடைக்கு முன்னால் முதலாளி சுவீடின், செட்டித் தெரு ஆட்கள் சிலருடன் செங்காவி வாயால் தமிழ்பேசி நின்றார். பைஜாமா அணிந்த சீனப் பெண்கள் கட்டை மிதியடி ஓசையுடன் சென்றனர். மலாய்ப் பெண்கள் குதிங்கால் செருப்பு மீது அன்னமென நடந்தார்கள். ஜெலுத்தொங் சாலையில் திரும்பி ஓடிக் கொண்டிருந்தது ரிக்ஷா. உடனும் எதிரும் ராணுவ லாரிகள் பறந்தன. அவற்றில் நின்ற ஆஸ்திரேலியச் சிப்பாய்கள் எக்காளமிட்டுப் பாடினர். புதிதாய்ப் பிறந்திருக்கும் ஜீப் கார்கள் வண்டு போல் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இடப்புறத்திலிருந்து கூச்சலிட்டு வந்த படகுத் தெழிலாளர் கூட்டம் சாலையைக் கடந்தது. கொழுத்துப் பளபளத்த ஒரு தவ்க்கேயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்கிறது கூட்டம். “ஜிப்புன் கங்காணி! ஜிப்புன் கங்காணி!” என்ற குற்றசாட்டுக் கூச்சல் தொடர்ந்து ஒலிக்கிறது... ஜப்பான் காங்காணியோ, தொழிலாளிகளுக்குப் பிடிக்காத முதலாளியோ... கணக்குத் தீர்ப்பதற்கு நல்ல தருணம்... “காமினாபோ!” குறுக்கிட்ட நடையர்களையம், விலகாத வண்டியர்களையும் ஒரே வசவாய் அடுத்தடுத்து ஏசிக்கொண்டே மணியை அழுத்தினான் பாகன். க்ணிங் க்ணிங் க்ணிங். எதிரே வந்த சில ரிக்ஷாக்களில் வர்ணம் பூசிய பட்டாடை வேசைகள் அட்டணைக் காலராய்ச் சாய்ந்திருந்தனர். உடல் வியாபாரத்துக்காக நகருக்குள் செல்கிறார்கள் - சையாம் ரோட், சூலியாதெரு, லவ் லேன்... பேரா சாலையில் திரும்பி மாணிக்கம் வீட்டுக்கு முன்னே போய் நின்றது வண்டி. “காத்திருக்கவா துவான்?” “வேண்டாம்.” காசு கொடுத்துவிட்டுப் படிக்கட்டில் ஏறினான். மூன்றாவது வீட்டுத் தாழ்வாரத்தில் நின்ற சீனக்குமரி - கலவனாயிருக்குமோ - இமை கொட்டாமல் பார்த்தாள். அதற்கடுத்த வீட்டு முகப்பில் கைலி - கெமேஜாவும், நெற்றியில் பச்சை குத்திய பொட்டுமாய் நாற்காலி மீதிருந்த தமிழ் நங்கை படக்கென்று எழுந்து வீட்டுக்குள் ஓடினாள். சீனக் ‘குழந்தை வைத்தியர்’ வீட்டில் ஏராளமான குழந்தைகள் பலவகை ராகதாளங்களில் கூட்டாக அழுது கொண்டிருந்தன. “பாயன் லெப்பாஸ் போயிருக்காரு. விடிய விட்டுத்தான் வருவாரு” மாணிக்கத்தின் சமையல் - எடுபிடி ஆள் முனியாண்டி பதில் சொன்னான். “பாயன் லெப்பாஸுக்கா?” “ஆமா, நிசமாய்த்தான்... நீங்யதானே ‘சாராங்’ பாண்டியிங்கிறவரு?” “எப்படித் தெரியும்?” “மூணு பேர் படத்தில் நிக்கிறிங்யள்ள!” “ஓ! ஆம், மாணிக்கத்திடம் மட்டும் நான் வந்ததைச் சொல். வேறு யாராவது கேட்டால் என்ன சொல்வாய்?” “அந்தமாதிரி யாரும் இங்கிட்டு வரலையே. நான் இங்கினயேதான் உட்கார்ந்துக்கிணு இருந்தேன் - அப்டீம்பேன்,” “மணி மணி. அடுத்த வீட்டுக்காரர்கள்?” “கப்சிப் கவர்தார். நம்ம வீட்டுச் சங்கதியின்னால் வாயத் திறக்கமாட்டாக.” “சரி, போய்ட்டு வரவா?“ “கோப்பி போட்டாறேன். குடிச்சிட்டுப் போகலாம்ண்ணே.” “நேரமாகிறது. வருகிறேன்.” “போய்த்து வாங்கண்ணே, வண்டி பிடிச்சாரவா?” “வேண்டாம், முச்சந்தியில் நிற்கும்.” “சரி, போய்த்து வாங்கண்ணே.” முச்சந்தியில் காபிக் கடைக்கு முன்னால் நின்ற ரிக்ஷாவில் ஏறி வடகிழக்கே கையைக் காட்டினான். வண்டி கிளம்பியது... இந்தச் சமயத்தில் எங்கோ போய்த் தெலைந்திருக்கிறானோ... “அண்ணே! அண்ணே!” எதிரே வந்த ரிக்ஷாவில் இருந்தவன் கூப்பிட்டான். பிராக்குப் பார்வையாய்த் தலையைத் திருப்பினான்... நடராஜன்... வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினான். நடராஜன் சாலையைக் குறுக்கிட்டு வந்தான். “வண்டியை அனுப்பிட்டு வா.” நடராஜன் திரும்பிப் போய் வண்டியிலிருந்து இறங்கி நெற்றி வியர்வையை அழுக்குத் துண்டினால் துடைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரனிடம் பணம் கொடுத்துவிட்டு வந்தான். “எங்கு போகிறாய்?” “மாணிக்கண்ணனைப் பார்க்க... ஜாராங்கில் உங்கள் படையிலிருந்த ஆள். அந்தச் சுந்தரம் பயல்... உங்களைப் பார்த்தது நல்லதாய்ப் போயிற்று.” “அதற்காகத்தான் வந்தேன். மாணிக்கம் வீட்டில் இல்லை. காலையில்தான் வருவானாம்... மேற்படியானை இன்றே தீர்த்துவிட வேண்டும்.” “சூலியா தெருவில் கொஞ்சம் கடினம். அந்தப் பக்கத்தை விட்டு நகருகிறானில்லை. தடம் தெரியாமல் வேலையை முடிக்க வேண்டுமே.” “முடிக்கலாம். சூலியா தெருவில் எங்கே இருக்கிறான்?” “ஜஸ்வந்தராய் கடை மாடி. ஆடிட்டர் இருந்த அறை. மற்ற அறைகள் காலி. மாடி வாசல் இரும்புக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். உடைசல், பூட்ட முடியாது.” “ம்ம்.” “எப்படியாவது ஆளைக் கடத்தி இந்தப் பக்கம் கொண்டு வந்து விட்டால், சீட்டைக் கிழித்து அமுக்குவது சுலபம். மூன்று நாளாய்ப் பார்க்கிறோம் சிக்குகிறானில்லை.” “அங்கேயே வைத்து முடிப்போம்.” “ம்ம்!... சரி.” “ஆயுதம்?” “பட்டாணி ரோடில் இருக்கிறது. உங்களிடம்?“ “இல்லை.” “கொஞ்சம் சீனி எடுத்து மாப்போல் தூளாக்கிக் கொள். கண்ணைக் கவரும் நிறத்தில் கண்ணாடிக் காகிதம். கட்டுவதற்குப் பட்டுநூல்... மாறு நிறம். சீனி ஒரு வேளை பல்பொடி அளவு போதும்... கவர்ச்சியாக மடித்துக் கட்டிக்கொண்டு வா.” “சீனி!” “ம்ம்.” “சீனி எதற்கண்ணே?” “தடம் தெரியாமல் வேலையை முடிக்க. கெக் செங் கடை மாடி. யாருக்கும் - நம் ஆட்களுக்குக் கூடத் தெரியக்கூடாது.” “சரி, முக்கால் மணி நேரம்.” நடராஜன் ரிக்ஷா அமர்த்திக் கொண்டு முதலில் கிளம்பினான். சற்று நடந்து போய்ப் பாண்டியன் வண்டி ஏறினான். இருபுறமும் அடுத்தடுத்துத் தெருக்கள் பிரிந்தன. காட்ஸ் தெரு, ஜாவா தெரு, மெக்காலம் தெரு, தீமா தெரு, பிரெஸ்கிரேவ் தெரு - சீனர் மிகுந்த சீனருக்குச் சொந்தமான கட்டிடங்கள். மாடி ஜன்னல்களிலிருந்து நீண்டு நின்ற மூங்கில் கம்புகளில், துவைத்த ஆடைகள் கோத்துத் தொங்கின- வெயில் காய்வதற்காக. ஆறு முச்சந்தி - ஆறு சாலைகள் சந்திக்கின்றன. பினாங் ரோடில் திரும்பிற்று ரிக்ஷா. லாரி, கார், ஜீப், ரிக்ஷா, சைக்கிள் வண்டிகள் குறுக்கு நெடுக்கு எதிர்க்காய் மறுகின. வலப்புறம் மாக்ஸ்வெல் சாலை. முக்கில் சிமிந்தி நிற வின்சர் கூத்துமேடை. தாழ்வாரத்தில் பூக்கடைகள், மல்லிகை, ரோஜா, பச்சூலி, வண்டிகளின் மணியோசை, குழலோசை, பல இன ஆண் பெண்கள். பல மொழிகளின் குழம்பொலி. விங்லொக் ரெஸ்டாரன்ட். போலீஸ் தலையகம். ஜுவால் மூரா... “சூடா.” வண்டி நின்றது. இறங்கினான். கிழக்கு முகமாயச் சற்று நடந்து சாலையைக் குறுக்கிட்டுத் தென்புற நடைபாதைக்கு மாறினான். நடையர்கள் கூட்டம் நெளிந்து இடையறாப் பேச்சொலியோடு ஊர்ந்தது. “ரொக்கோ! ரொக்கோ! பூத்தே பூஞா ரொக்கோ!” சீமை சிகரெட் விற்கும் சிறுவர்கள் கூவித் திரிந்தனர். நடைபாதையில் காகித விரிப்புகளின்மீது சாக்லெட் பெட்டிகள். பற்பசைக் குழாய்கள், பால் டப்பிகள், சோப்புகள் - எல்லாம் சிப்பாய்களிடம் வாங்கியவை - பரவிக் கிடந்தன. தெரு வியாபாரிகளின் ஓயாத வாணிபக் குரல் காதைப் பிளந்தது. ‘மேனன் கிளினிக்’ நர்ஸ் சுந்தரியின் இளமை குன்றாத உடல் முன்னே சென்று கொண்டிருந்தது... மூவா மருந்து தின்று தொய்யா வரம் பெற்ற உடலா, அன்றிச் சாயப் பூச்சு - கட்டுமான வேலைத்திறனின் பலனா? ஆறேழு பிள்ளைகளாவது இருக்கும். உடன் செல்லும் நெடுமரம் யார்...? ‘கெக் செங் கெடே கோப்பி’க்குள் நுழைந்து மாடிப்படியில் ஏறினான். மேசைகளில் பல பாஷைகளை கலந்த சேர்மான ஒலியும் கோப்பை - தட்டு - கரண்டிகளின் ஓசையும் கூடிய அலதிகுலதி முழங்கியது. தென்புற அறை மூலையில் போய் உட்கார்ந்தான். “ஆ, மாணிக்காம் பூஞா காவன்? தபே துவான், தபே.” கடை முதலாளி உள்ளே வந்து, மாணிக்கத்தின் நண்பனை வரவேற்றான். “தபே தவ்க்கே, ஆப்ப மச்சம்?” “நலம் நலம்” முறுவல் மிதந்த முகத்துடன் கடைக்காரன் அடுத்த அறைக்குக் கிளம்பினான். பையன் அருகில் வந்து குனிந்தான். கோபி பாயிட், சிகரெட், பத்திரிகை கொண்டு வரும்படி சொன்னான். முன்னே, யாழ்ப்பாணக் குடும்பம் உண்டியில் ஈடுபட்டிருந்தது. மேல்புறத்தில் ஐந்தாறு சீனர்கள் ஏதோ வியாபார பேரத்தைக் காகிதத்தில் எழுதிப் படித்துத் தேநீர் பருகினர். காபி, சிகரெட், பத்திரிகை மேஜைக்கு வந்தன. பத்திரிகையைப் பிரித்துப் படித்தவாறு பாலில்லாக் காபியைக் குடித்தான். மாணிக்கம் இருந்தால் நல்லது. இவன் விளையாட்டுப் பயல்... மலேயாவை மீண்டும் வளப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் பற்றிய சர்க்கார் அறிக்கையைப் படித்துக் கொண்டிருந்தான். “அடடே, நீங்களா! பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது மலாக்காவில் தானே இருக்கிறீர்கள்?” வெள்ளைச் சட்டையும் சந்தனநிறச் சராயுமாய் வந்த இளைஞன் கும்பிட்டான். “வருக, வருக. சற்றும் எதிர்பாராத சந்திப்பு. உட்காருங்கள். இப்போது மூவாரில் வேலை.” பாண்டியன் கை கூப்பினான். “ஒன்றும் தொந்தரவு இல்லையே? ஏதாவது அலுவல்...?” வந்தவன் அமர்ந்தான். “இல்லையில்லை. பொழுது போகாமல் உட்கார்ந்திருக்கிறேன். உங்களுடன் பேசிக்கொண்டே கொஞ்சம் நேரத்தை ஓட்டலாம்.” பையன் ஓடி வந்தான். இருவருக்கும் மீகோரெங், பீசாங் பப்பாயா, கோப்பி சூசு கொண்டு வரும்படி உத்தரவாகியது. சுப்பையா, முத்தையா, சாத்தையாக்கள் பற்றி இருவரும் ஆர்வத்துடன் பேசலாயினர். மேல்புறச் சீனர்கள் சலிப்புக் கூச்சலுடன் வெளியேறினர் - பேரம் முற்றுப் பெறவில்லை போலும். யாழ்ப்பாணக் குடும்பமும் புறப்பட்டது. நடராஜன் சராய்ப் பைக்குள் கையை விட்டான். பாண்டியனின் கை தடைக்குறி செய்தது. பையன் வந்து தட்டுகள், கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டுப் போனான். சில விநாடிகள் கழிந்தன. பாண்டியன் கதவுப் பக்கம் பார்வையைத் திருப்பிக் கையை நீட்டி வாங்கி, பிஸ்டலை சராய் பைக்குள்ளும், பொட்டலத்தை நெஞ்சுப் பையிலும் திணித்துக் கொண்டான். கெக் செங் கடையிலிருந்து வெளியேறிக் கிழக்கே நடந்து, சூலியா தெருவில் திரும்பினார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய்க் கம்ப விளக்குகள் எரிந்தன. ஹோட்டல்களுக்கு முன்னே ரிக்ஷாக் கூட்டம். ஆண்கள், பெண்கள், அலிகள் ஏறினர், இறங்கினர். உள்ளிருந்து மாஜோங் விளையாட்டோசை வந்தது. குட்டிச் சுவராய் நின்ற கடைகள் இருள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. அவற்றுள் சீனச் சிறார் இரைச்சலுடன் ஓடி ஒளிந்து பிடித்து விளையாடினார்கள். “அண்ணே, சுந்தரி!” நடராஜனின் இடக்கை, ஹோட்டல் மாடி ஜன்னலை நோக்கி உயர்ந்தது. “போறா போ, நாத்தச் சிறுக்கி.” கைலிக் கடை வையாபுரி முதலியார் ஆழ்ந்த சிந்தனையுடன் தரையைப் பார்த்தவாறு கடந்து சென்றார். “நேற்றுப் பிடிபட்ட சின்னத்தம்பி, இவர் மகன்தான்.” பாண்டியன் தலையைத் திருப்பிப் பின்னோக்கினான். முதலியாரின் குனிந்த உருவம் தரையைப் பார்த்தபடி வடக்கே சென்று கொண்டிருந்தது. “ஏப்பா, ஏன் இப்படிச் செய்றான் சனியன் பிடித்த பயல்... அவனை அடித்துக்கிடித்து இழவைக் கூட்டினீர்களா?” “அதெல்லாம் ஒன்ணுமில்லையண்ணே, பணம்.” வலக்கைக் கட்டைவிரலால் சுட்டுவிரலைச் சுண்டினான். “எந்நேரமும் பிரியாணி அரவை - தின்னிப் பயல்... உடுத்துறதுல கபூர் மரக்காயரெல்லாம் பிச்சை வாங்கணும். பொம்பளை செலவு... ராத்திரி ராத்திரி சிங் லியோங் ஹோட்டலில் இரண்டு கிழவிகளைக் கூட்டி வைத்து இளித்துக் கொண்டிருப்பானாம். வெறும் இளிப்பு - பொண்ணையன்!” முகத்தைச் சுளித்தான். “அதுதான் பணம்...” “சரி, சரி.” இடக்கையால் நடராசனின் முதுகைத் தட்டினான். பின்னேயிருந்து வந்து முந்தி, இரண்டு கிராணித் தமிழர்கள் சென்றனர். மணம் வீசும் தலைகள். ரோஜா மலர் செருகிய பச்சை பிளேஸர் கோட்டுகள். “நல்லபடியாய்ப் புத்தி சொல்லிப் பார்த்தீர்களா?” “லுத்தப் பயல்! அவனுக்குப் புத்திய சொல்லிப் பயனில்லை. மாணிக்கண்ணன் ஆள் அனுப்பிக் கூப்பிட்டதற்கு வர முடியாதென்று சொல்லி விட்டானாம்.” “மாணிக்கம் என்ன சொன்னான்?” “சனிக்கிழமை இறுதியாக முடிவு செய்யலாம் என்றார்.” தென்முகமாய் தொடர்ந்து நடந்தனர். “ஒன்ஸ் ஐ ஹேட் யெ லஸ்டி லாஸ்...” லவ் லேனிலிருந்து வந்த வெள்ளைச் சிப்பாயின் சாராயக் குரல் - பாட்டைக் கேட்டுத் திரும்பினார்கள். சிப்பாய் குல்லாவை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டு சிரித்தான். “ஹிஹிஹிஹி... மை நேமிஸ் கார்ட்டர். சி-ஏ.ஆர்.டி-இ-ஆர் - கார்ட்டர், கால்ஸ் லான்ஸ்பரி கார்டர் ல்ல்ல்... கார்ப்பொரல், சிக்ஸ்த் சாமர்செட்ஸ். ஹிஹிஹிஹி...” விலகி விரைந்து நடந்தனர். “ஹினோமாரு கொடி சாய்ந்து விட்டது. இப்பொழுது கார்ட்டர் கொடி!” “யார் கண்டது! இன்னும் கொஞ்ச நாளில் சின்பெங்* கொடி பறந்தாலும் பறக்கும்!”
* சின்பெங் - மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பாசிச எதிர்ப்பு கொரில்லா படையின்) தலைவர். “ஆமாம், யார் கண்டது, ஹி ஹி ஹி ஹி. மை நேமிஸ் கார்ட்டர். சி-ஏ-ஆர்-டி... ஹிஹிஹிஹி...” “போதும்.” பேசாமல் நடந்தார்கள். எதிரே, செல்லையாவும் அப்துல்காதரும் உற்றுப் பார்த்தவாறு வந்தார்கள். பாண்டியன், வலக்கையால் தலைமுடியைக் கோதும் பாவனையாகப் போக்கில் செல்லும்படி சைகை காட்டினான். கடந்து சென்றனர். தகரக் கடைப் பட்டடைகளில் சுத்தியல்கள் மோதி முழங்கின. “காதர் கடையில் காபி குடிக்கலாம். பிளாஸ்கிலும் காபி வாங்க வேண்டும்.” கடைக்குள் நுழைந்தனர். ஜன்னலோரம் போய் உட்கார்ந்தார்கள். எதிரே மலாய்ப் பெண்கள் கோஷ்டி இடியாப்பம் - கோழிக் கறி தின்று கொண்டிருந்தது. “கப்பல் விட்டதும் முதல் வேலை, ஊருக்குக் கிளம்புறதுதான், நானா.” பின்னாலிருந்து வந்த குரல் சொல்லிற்று. “ஊர்ல பட்டினி கிடந்தாலும் சரி, இனிமேல் கப்பலேறுற வேலையை விட்ர வேண்டியதுதான்.” ‘நானா’வின் குரல் தீர்மானமாகப் பதிலளித்தது. “பிளாஸ்கில் காபி வேண்டும்.” பாண்டியன் 5 டாலர் நோட்டைக் கல்லாவில் வைத்தான். “பிளாஸ்க்கைக் கொடுத்துவிட்டுச் சில்லறை வாங்கிக் கொள்கிறோம்.” “அதெல்லாம் வாணாம் வாங்கிக்கினு போங்க.” காபி அடைத்த பிளாஸ்க் வந்தது. வாங்கிக் கொண்டான். பயணம் தொடர்ந்தது. பிட் தெருவைக் கடந்தனர். இருள் சூழ்ந்திருந்தது. மங்கள்தாஸ் கடைத் தாழ்வாரத்தில் ஐந்தாறு குஜராத்தியர் கிசுகிசுத்து நின்றார்கள். குவீன் தெரு மாரியம்மன் கோயிலிலிருந்து மணியோசை வந்தது. திவான்மீரா கடைக்குள் கிட்டப்பாவின் ‘அன்றொரு நாள் குட்டி’ இசைத்தட்டு பாடுகிறது... கிங்தெரு முக்கில் வழக்கம்போல் அலிகள் கூட்டம் அபிநயத்துடன் பலத்த உரையாடி நின்றது... ஜஸ்வந்த் ராய் கடை. மாடியில் வெளிச்சம் தெரிந்தது. படிக்கட்டில் மேலேறினர். அறைக் கதவு கால்வாசி திறந்திருந்தது. பலகைத் தளம் என்று நடராஜன் சைகை செய்தான். கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர்... மேசைமீது நின்ற கண்ணாடியைப் பார்த்து முகத்துக்கு வெள்ளை பூசிக் கொண்டிருந்தான். “சுந்தரம்!” கண்ணாடியைப் பார்த்திருந்தவன் தலையை உயர்த்தினான். கண்கள் அரண்டு ஒரே நோக்காய் விழித்தன. பாண்டியனின் முகத்தைப் பார்த்தபடியே எழுந்தான். வலக்கை நெற்றியிலேறி வந்தனை செய்தது. வந்தவர்கள் நாற்காலிகளை இழுத்துப் போட்டு உட்கார்ந்தனர். பாண்டியன் கையிலிருந்த பிளாஸ்க் சுந்தரத்தின் மேசைக்கு மாறியது. சுந்தரத்தின் கண்கள் பாண்டியனின் முகத்தை நோக்கி விழித்தவை விழித்தபடியே நின்றன. ஜாராங் லெப்டினென்ட் காலை நீட்டிச் சாய்ந்தான். வலக்கையில் சிகரெட் புகைந்தது. இடக்கை தொடைமீது பதிந்திருக்க, விரல்கள் தாளமிட்டன. “உட்கார்.” சுந்தரம் பார்வையை மேசைமீது திருப்பி, நாற்காலியில் உட்கார்ந்தான். முழங்கை முட்டியது. விரல்களால் தடவி விட்டான். முகமும் கழுத்தும் வியர்த்துக் கொட்டின. பாண்டியன் பக்கம் திரும்பினான். “கீழே போய்க் காபி கொண்டுவரச் சொல்கிறேன்.” சிகரெட் - புகைந்த கை பிளாஸ்கைச் சுட்டியது. நடராஜன் செருமிக்கொண்டே எழுந்துபோய் முற்றத்தைப் பார்த்த மேல்புற ஜன்னல் தட்டின்மீது உட்கார்ந்தான். “பினாங் ரோடில் கொஞ்சம் வேலை இருக்கிறது.” சுவரைப் பார்த்தபடியே எழுந்தான். “பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன், நீங்கள்...” “உட்கார். இனிமேல் உன் பிணம்தான் வெளியேறும்.” திடுக்கிட்ட உடலைச் சக்கரித்துக் கொண்டு சுந்தரம் திரும்பினான். ஜாராங் லெப்டினென்ட் இடக்காலை ஒடுக்கி, மறுகாலை நீட்டிச் சாய்ந்திருந்தான். வலக்கையில் சிகரெட் புகைந்தது. தொடையில் பதிந்திருந்த இடக்கையின் விரல்கள் தாளமிட்டன. தலைக்குமேல் தொங்கிய விளக்கு அசைந்தாடிற்று. சுவர் கடிகாரம் காலம் கணித்தது... டிக்-டிக்-டிக்-டிக்... மேற்கே திரும்பினான். கால்களைத் தொங்கவிட்டு ஜன்னலில் உட்கார்ந்தருந்த சப் ஆபீசர் இறுகிய வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தரம் உட்கார்ந்தான். உள்ளங்கையிலும் தொடையிலும் வியர்வைப் பிசுபிசுப்பு. நாக்கு வறண்டு தொண்டையை அடைத்தது. “உங்களுக்கு வீண் சந்தேகம்.” மென்று விழுங்கிச் சொன்னான். “ரக்பீர்லால் சங்கதியை நான் யாரிடமும் சொல்லவில்லை.” “சின்னத்தம்பியை ஏன் காட்டிக் கொடுத்தாய்?” “முந்தாநாள் ஆறுமுகம்” சப் ஆபீசர் தலையிட்டான். “அதற்கு முன் சிவசாமி, வீரையா...” ஜாராங் ஹவில்தாரின் உடலெல்லாம் வியர்த்து நனைந்தது. பனியன் நெஞ்சோடு ஒட்டி உரசிற்று. கைக்குட்டையை எடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்தான். “சுந்தரம், உன்னை இன்றிரவு எட்டு மணிக்குள் தீர்த்து விடுவதென முடிவு செய்துவிட்டோம்” சிகரெட்டை வாயில் வைத்துச் சாவதானமாய்ப் புகையை இழுத்து ஊதியவாறு பாண்டியன் சொன்னான்: “நேதாஜி உயிர்த்தெழுந்து வந்து தடுத்தாலும் இதை மாற்ற முடியாது. படிக்கட்டு வாசலில் ரேசனும், பின்சந்தில் மாணிக்கமும் நிற்கிறார்கள்... எது எப்படி ஆயினும் உன் உயிர் போவது திண்ணம். இன்னும் பத்தே பத்து நிமிஷம்தான் உனக்கு.” மேசையைப் பார்த்திருந்தவனின் முகம் திடுமெனத் திரும்பியது. “இது ஜாராங் முகாமல்ல, பினாங். சும்மாவிட மாட்டார்கள்.” “ஆமாம், பினாங். ஜாராங் முகாமல்ல.” “எனக்கு வேலை இருக்கிறது.” எழுந்து ஓர் அடி முன்னே நகர்ந்தான். நாற்காலியில் இருந்தவனின் உடல் சரேலென்று எழுந்தது. வாயிலிருந்த சிகரெட் இடக்கைக்கு மாறிற்று. வலக்கை மடங்கி மார்பைத் தொட்டுச் சாய்ப்பாய் உயர்ந்து பாய்ந்து, சுந்தரத்தின் வலது செவி, கன்னம், மூக்கைச் சிராய்த்தடித்துவிட்டு திரும்பியது. “உட்கார்.” சுந்தரம் உட்கார்ந்தான், விசைக்குப் பணியும் எந்திரம்போல. உடல் நடுங்கியது. கண்கள் ஓயாமல் இமைத்தன. வலக்கை விரல்கள் கழுத்தை வருடிக் கொண்டிருந்தன. பாண்டியன் இருப்பிடத்தில் அமர்ந்து வலக்காலைத் தூக்கி அட்டணையிட்டான். இடக்கை - சிகரெட் மாறியது. நடராஜன் ஜன்னல் தட்டிலிருந்து குதித்து வெளியே போய்ப் படிக்கட்டையும் மற்ற அறைகளையும் பார்த்துவிட்டு வந்து, நிலைப்படியில் ஒரு காலும் அறைக்குள் ஒரு காலுமாக நின்றான். டிக்-டிக்-டிக்-டிக்... சுவர்க் கடிகாரம் காலம் கணித்தது. திவான்மீரா கடையிலிருந்து, சுந்தராம்பாளின் ‘பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே...’ வந்து கொண்டிருந்தது. சுந்தரம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். ஒரே பார்வையாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கைக்குட்டையை எடுத்துக் கழுத்தையும் நெற்றியையும் துடைத்தான். அதைச் சராய்ப் பைக்குள் திணித்துவிட்டு மீண்டும் பார்த்தான். ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வயிறு கிள்ளுகிறது... சிங்லியோங்கில் பீபியும், ருமீலாவும் காத்திருப்பார்கள். இங்கோ எதற்கும் துணிந்த இந்தக் கொலைக்காரர்கள்... “நான் செய்ததெல்லாம் குற்றம். தயவுசெய்து மன்னித்து விடுங்கள். அடுத்த வாரம் தோட்டத்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெருந் தன்மையால் பிழைத்துத் திருந்தியதாக இருக்கட்டும்...” “ஓஹோ! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ அப்படித்தானா...? அது உனக்கும் எனக்கும் அல்ல, நாடி தளர்ந்த கிழவர்களுக்கு திருவள்ளுவர்களுக்கு.” “கையெடுத்துக் கும்பிடுகிறேன்... மன்னியுங்கள்.” “முடிவு முடிவுதான். உன் சாவை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.” “அண்ணே... என் கெட்ட காலம்... ஏதோ தெரியாத்தனமாய்...” “சுந்தரம், இதுவரை கோழையாயிருந்தது போதும். சாகும் நேரத்திலாவது வீரனாயிரு. சாவதற்கும் முறை இருக்கிறது. சாவைத் தவிர்க்க முடியாதென்று ஆகிவிடின், பேடியெனப் புலம்பாமல் வீரனைப் போல் சாக வேண்டும். எப்படி இருந்தான் என்பதை விட எப்படி இறந்தான் என்பது முக்கியமான விஷயம். தமிழர்களின் முதல் எதிரி கோழைமை. அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கலாகாது... மற்ற தமிழர்களின் நலனுக்காக நீ சாகப் போகிறாய். சாகத்தான் வேண்டும், சாகாமல் தப்ப வழியே இல்ல... பிறர் நலனுக்காக சாவது - அதிலும் உடனாளிகளாலேயே கொல்லப்படுவது பெறுதற்கரிய பெரும் பேறாகும். நீயும், கர்ண வள்ளலைப் போன்று, ‘யான் பெற்ற பெருந்தவப்பேறு என்னையன்றி இருநிலத்திற் பிறந்தாரில் யார் பெற்றாரே’ என்று மனம் குளிர்ந்து மகிழ்வதுதான் பண்பு.” கோபதாபமில்லா நடுமைக் குரல்மாரி சுந்தரத்தின் உணர்வில் பெய்து உடலைக் குளிப்பாட்டியது. பாண்டியன் என்னென்ன சொன்னானென்று கோர்வையாக நினைத்துப் பார்க்க இயலவில்லை. எனினும், தவிர்க்க முடியாத சாவின் தூதர்களாய், கொலைப் பழிக்கு அஞ்சாத எம கிங்கரர்களாய் இருவர் வந்து அறைக்குள் அமர்ந்திருப்பதை அந்த நடுமைக்குரல் அறிவித்ததாக மனதில் பட்டது. குறுகிய வாயும் வேட்டைப் பார்வையுமாய் நின்ற சப்-ஆபீசருக்குச் சுணக்கமின்றி வேலையை முடித்து விட்டுக் கிளம்பாமல், பாண்டியன் பிரசங்கம் செய்வது ஏன் என்பது துலக்கமாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. பேசி அவன் மனதைத் தாலாட்டிக் குழப்புவது சரி. வேலையை முடிப்பது எப்படி... பேச்சும் சீனியும் போதுமா... சுந்தரத்தின் பார்வை அவன் மடிமீது பதிந்திருந்தது. திடுமெனத் தொண்டை இறுகி உடல் நடுங்கிற்று. பார்வையை உயர்த்தினான். பாண்டியன்... வலக்கையில் பிஸ்டல். பார்வையைத் திருப்பினான். நடராஜன் - இடக்கையில் பிஸ்டல், எதிர்ச் சுவரைப் பார்த்தான். டிக்-டிக்-டிக்-டிக்... இன்னும் கொஞ்சநேரம் பாக்கி. “என்னைக் கொன்றுவிட்டு நீங்கள் தப்ப முடியாது. நாளையே பார்க்ளே...” “ஓ! பார்க்ளே, மேஜர் பீட்டர் மெக்கார்மிக் பார்க்ளே... இப்போது நீ” எழுந்தான். “கெடு நெருங்கி விட்டது. இரண்டிலொன்று சொல். மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சாக விருப்பமா, நஞ்சு குடித்து அமைதியாகவா...” “அண்ணே, காப்பாத்துங்கண்ணே!” தொண்டையை அறுத்துக் கொண்டு புலம்பல் கிளம்பியது. “அண்ணெ! உங்ககூடப் பிறந்த தம்பிபோல நினைச்சுப் பாருங்கண்ணே!” “சுந்தரம், உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன். காப்பாற்றுவதற்கல்ல. சாகப் போகிறவன் குரலை உயர்த்திப் பேசக்கூடாது. அது சாவுத் துன்பத்தை அதிகரிக்கும்.” குழந்தையைத் தாலாட்டும் தாயின் குளுங்குரலில் சொன்னான். “அப்பொழுதே சொன்னேனே. சாகும் பொழுதாவது வீரனாயிரு என்று. சாவைத் தவிர்க்க முடியாதென்று ஆகிவிடின்...” “அண்ணே! காப்பாத்துங்கண்ணேஎஎ...” தொண்டை இறுகலை மீறி வந்த மென்குரல் புலம்பியது. “கேட்டதற்குப் பதில் சொல்... சரி, நானே முடிவு செய்கிறேன்... மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் உடல் துடித்து விதறல் எடுத்து...” சுந்தரத்தின் உடல் வெலவெலத்தது. மூளை சிதறி உடல் துடித்து ரத்த வெள்ளம் விதறல் வேண்டாம். நஞ்சு அமைதி வீரம் சாவு அமைதி நஞ்சு சாவு வீரம் நஞ்சு சாவு நஞ்சு... “நஞ்சு!” கிணற்றுக்குரல் கூவியது. “ஜோத்தோ, நான் கொண்டு வந்திருப்பது ஜப்பானிய ஜெனரல்களின் சொந்த உபயோகத்திற்கான சக்தி வாய்ந்த நஞ்சு. ருசி, மணம், நிறம் இல்லாத - குமட்டல், புரட்டல், வலித்தல் அறவே இல்லாத நயம் நஞ்சு. வெள்ளை வெளேர் என்றிருக்கும். தொண்டையில் இறங்கியதும் உயிர் போய்விடும். ஒரு தொந்தரவும் இராது. நயம் நஞ்சு - அமைதியான சாவு.” அலமாரி மீதிருந்த கண்ணாடித் தம்ளரை எடுத்து மேசைமேல் வைத்து அதில் பிளாஸ்க் - காபியை ஊற்றினான். சுந்தரம் முழங்கைகளை மேசையில் ஊன்றிக் கொண்டு தம்ளரை வெறித்துப் பார்த்தான். இவர்களிடமிருந்து தப்பி ஓடினாலும், ரேசனும் மாணிக்கமும் கைவேறு கால் வேறாய்ப் பிய்த்தெறிந்து விடுவார்கள்... காபி பாய்ந்தது. தம்ளர் நிரம்பிற்று. ஓசையுடன் மேசையில் உட்கார்ந்து பிளாஸ்க்... பார்வையை உயர்த்தினான். பாண்டியன், சட்டைப் பையிலிருந்து மஞ்சள் பொட்டலத்தை எடுத்து அவிழ்த்துப் பிரித்து, அதில் வெள்ளை வெளேரென்றிருந்த ‘நஞ்சு’த் தூளைக் காபியில் கொட்டிவிட்டு, பொட்டலம் கட்டியிருந்த தாளையும், பச்சைப் பட்டு நூலையும் பைக்குள் போட்டுக்கொண்டான். சுந்தரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் தாளையும் நூலையும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்கிறான்? துப்புக் கிடைக்காமல் செய்வதற்காக... கொஞ்சம் வாடை தெரிந்தாலே போதும், பார்க்ளே மடக்கிப் பிடித்து விடுவான்... “ஊரில் யாருக்காவது சேதி உண்டா?” சுந்தரம் மேசை மீதிருந்த காபி தம்ளரையும், பிஸ்டலுடன் நின்ற இருவரையும் மாறிமாறிப் பார்த்தான். தொண்டை வறண்டு காதடைத்துப் பார்வை மங்கியது. “சேதி உண்டா?” ஆவேசம் வந்தவன்போல் தம்ளரைத் தூக்கிக் கடகடவென்று குடித்தான். அமைதியான சாவு. நயம். நஞ்சு. சாவு ருசி மணம் நிறம் இல்லாத நயம் நஞ்சு. குமட்டல் புரட்டல் வலித்தல் அறவே இராது... “கடைசி நேரத்தில் அமைதியாக உயிரைவிடு. தொல்லையில்லாத அமைதியான உடனடிச் சாவு,” டம்ம். காலைத் தூக்கிப் பலகைத் தளத்தில் மிதித்து தைத்தான். முன்னே குனிந்து தம்ளரை வைத்தவன், தடாலென்று பின்னே சாய்ந்தான்... டிக்-டிக்-டிக்-டிக். நடராஜன் எட்டி நடந்து போய் மூக்கில் விரலை வைத்துப் பார்த்து, உடலைத் தொட்டான்... நாற்காலியில் பிணம் கிடந்தது. “மாரடைப்பு...” தீர்மானமாய் அறிவித்த பாண்டியன், தம்ளரில் மிச்சமிருந்த காபியை பிளாஸ்க்கில் ஊற்றிக் கலக்கி, அதில் கொஞ்சத்தைத் தம்ளரில் ஊற்றினான். பிறகு அலமாரி மீதிருந்த பிளாஸ்க்கை எடுத்துத் திறந்து உள்ளே பார்த்து, அதில் கடை பிளாஸ்க் காபியை ஊற்றி மேசைமீது வைத்தான். “போகலாம், இந்தா” பிஸ்டலை நீட்டினான். “வேண்டாமா?” நடராஜன் வாங்கிச் சட்டைக்குக் கீழ் இடுப்பில் செருகிக் கொண்டு, தன் கையிலிருந்ததைச் சராய்ப் பையில் திணித்தான். “படகுத் துறையில் சோதனை இருக்கும்.” நடராஜன் பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டான். கதவை முக்கால்வாசி சாத்தி வைத்துவிட்டுப் படியிறங்கித் தென்புறமாய் நடந்தார்கள். “ஏண்ணே, இதென்ன மாயம்?” “பள்ளிக்கூட நாளில் இதுமாதிரிக் கதையை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் படித்தேன். காலையில் நினைவுக்கு வந்தது.” “கனவு போலிருக்கிறது. எல்லாரிடமும் இந்தத் தந்திரம் பலிக்குமா?” “தந்திர மந்திரங்கள் பலிப்பது ஆளைப் பொறுத்தது. அவன் கோழைப்பயல் - நீ சொன்னதுபோல் பொண்ணையன்.” “என்னதான் கோழையாக இருந்தாலும்...” “மனமே அனைத்திற்கும் அடிப்படை. எதிரியை ஒழிப்பதற்கு முதற்படியாக அவன் மனதை மருட்ட வேண்டும்.” “இதில் அவன் சாகாமலிருந்தால்...” “நஞ்சு உபாயம் தவறியிருப்பின், இன்னொன்று தயாராயிருந்தது. அதுவும் ஆபத்தில்தான்.” “அது என்னண்ணே, எனக்கும் சொல்லுங்கள்.” “தேவை ஏற்படும்போது சொல்கிறேன்... ஒருவேளை சந்தேகப்பட்டு உன்னை விசாரிப்பார்கள். முதல் வேலையாக, மாணிக்கத்தைப் பார்த்து விஷயத்தைச் சொல். அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான்... வெறும் விசாரணையோடு சரி. குற்றச்சாட்டுக்கு இடமேயில்லை. மாரடைப்புக்கு யார் என்ன செய்யமுடியும்?” “அவன் உடல் கோளாறு. பெருந்தீனிக்காரப் பயல்.” “இதைப்பற்றி உனக்கும் ஒன்றும் தெரியாது.” “நான் ஒரு பாபமும் அறியேன். நான் உண்டு; என் வயிற்றுப்பாடு உண்டு... இன்ஸ்பெக்டர், உங்கள் புண்ணியமாயிருக்கட்டும், நல்ல வேலை ஏதாவது கிடைத்தால்...” “ஆமாம்... நேரமாகிறது. பிளாஸ்க்கை கொடுத்துவிட்டுப் போ. பட்டர்வர்த்தில் தங்கிக் காலையில் அலோர் ஸ்டார் போகிறேன்.” “சரி, இன்னும் கனவுபோலவே இருக்கிறது.” “இதிலிருந்து தெரிவது என்ன?” “மனத்திட்பமே எல்லாச் சாதனைகளுக்கும் அடிப்படை.” “முதலாவது மனத்திட்பம். பிறகு வினைத் திறமை. ‘வினைத் திட்பம் என்பது, ஒருவன் மனத் திட்பம்’ என்பான் மயிலாப்பூர் சாலியனும். வருகிறேன்.” இடப்பக்கம் திரும்பி நடந்தான். ***** கே.கே. ரேசன் - கார்மேக வேளார் மகன் கதிரேசன் - பேங்காக் நகரில் சையாமிய அரச குடும்ப வியாபாரி ஒருவரிடம் பணிபுரிந்த தாய்மாமன் ஆதரவோடு ‘ஏற்றுமதி - இறக்குமதி’ வர்த்தகத்தில் காலெடுத்து வைத்திருந்தான். வாரம் தவறாமல் பாண்டியனுக்கு வந்த ரேசனின் கடிதம் ஒவ்வொன்றும், ஒருமுறை பேங்காக்குக்கு வந்து போகும்படி வற்புறுத்திற்று - ‘வீட்டுக்கொரு இளவரசரும் சந்நியாசியும் கொண்ட நாடு உலகிலேயே இது ஒன்றுதான். வருக, வருக, வந்து பார்த்துச் செல்க’ என்று குறிப்பிட்டுக் கொண்டிருந்தது. பாண்டியன் பேங்காக் நகரைப் பார்த்ததில்லை. அங்கு போய்ப் பத்து நாள் இருந்து திரும்பத் தீர்மானித்தான். ஒருநாள் காலையில் சையாம் தலைநகருக்கு ரெயில் ஏறினான். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|