உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 37. கங்சார் ஞாயிற்றுக்கிழமை மாலைநேரம். கங்சார் தெருக்களில் போருக்கு முந்திய காலத்தில் போல் ஹாஸ்விளக்கு வெளிச்சம் படர்ந்திருந்தது. டெர்பூர்ட்டன் தெருவில் கடைகள் மூடிக்கிடந்தன. சீனரின் கடை - வீடுகளில் மட்டும் மாடி ஜன்னல்களின் விளக்கொளி தெரிந்தது. மேற்குக் கோடி பயாஸ்கோப் கொட்டகை சரவிளக்குமயமாய் மின்னியது. அதன் எதிரே வரிசை வரிசையாய் ராணுவத்தினரின் ஜீப்புகளும் லாரிகளும் நின்றன. முன்சுவரில் கோர்த்திருந்த ‘காதலியின் நெஞ்சு’ விளம்பரத் தட்டியை, சராய் பைகளில் கைவிட்டு நின்ற இளைஞர்கள் பிளந்த வாயுடன் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர். கிழக்கே முச்சந்தியில் காவல் சாவடி. இரும்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிப்பாய்கள் - 3 வெள்ளையரும் 2 அம்போனியரும் சிகரெட் புகைத்தார்கள். இந்தொனேசிய வாலிபர்கள் சிலர் அவர்களுடன் அரட்டை பேசி நின்றனர். பாதையில் நடந்தோர் முச்சந்தியில் தெரு மாறினார்கள். வான் லீபன் ஸ்ட்ராட்டின் நடுநாயகமாய் விளங்கும் போன்ஹோம் ரெஸ்டாரன்டில் டச்சுத் துருப்புகள் எப்போதும் போல் மொய்த்திருந்தனர். ரேடியோவில் பியானோ இசை. கண்ணாடித் தகடிட்ட மேசைகளின் மீது தட்டு - கரண்டி - கோப்பைகள் ஓசை கிளப்பின. எதிரே கிரேமர் பூங்கா. அதன் இருபுறமும் இருள் கவ்விய பள்ளிக்கூட வளைவுகள். தெருவோரம் மொத்தோர் வண்டிகள். டிரைவர்கள் சிலர் வழிப்போக்கர்களுடன் ரொக்கோ புகை பரிய உரையாடி நின்றனர். ஏழரை மணிச் செய்தி அறிக்கை நெருங்குகிறது. விநாடிகள் கழிவதைப் போன்ஹோம் ரெஸ்டாரன்ட் ரேடியோ துலக்கியது. “பிப் பிப் பிப் டிஸிஸ்டே நிரோம்ஷ் பத்தா...” திடுமென வெளிச்சம் மறைந்தது. எறிகுண்டுகள் வெடித்தன. தோட்டாக்கள் முழங்கின. தெருக்களில் கதறியலறித் தலைதெறிக்க ஓடுவோரின் ஓலம். மூலைக்கு மூலை நெருப்புக் கூக்குரல்: “அப்பி! அப்பி! அப்பி!” குண்டுகள் தொடர்ந்து முழங்கின. டச்சுக்குரல்கள் ஏசின. “ஹோட் பர் டூம்யெ!... ஹோட் பர் டூம்யெ...!” நின்ற வண்டிகள் விரைந்தோடின. காவல் சாவடிகளில் இருந்த சிப்பாய்கள் இருள் கவிந்த சில விநாடிகளுக்குள் எறிகுண்டுக்கும் கிரிஸ் கத்திக்கும் இரையானார்கள். தெருக்களில் நடந்த சிப்பாய்கள் மலைத்து வீழ்ந்தனர். ஹாஸ், தந்தி, டெலிபோன் நிலையங்கள் வெடிமுழக்கத்துடன் தகர்ந்தன. பாடி வீட்டில் போல்ஸ் விளையாடியும், செய்தி அறிக்கையை எதிர்பார்த்தும் நின்ற ராணுவத்தினர் விளக்கணைந்த சற்று நேரத்துக்குள் குண்டு மாரியில் சுருண்டு விழுந்தனர். டச்சு ராணுவ வண்டிகள் ஆயுதத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு தெற்கே விரைந்தன. அவற்றில் வடக்கு சுமத்ரா முதலாவது கொரில்லா ரெஜிமென்ட் வீரர்கள்! கங்சார் தோல்வி டச்சு ராணுவத்தைக் கிடுகலக்கிவிட்டது. தாக்கியவர் யார்? எங்கிருந்து எப்படி வந்து கூடினார்கள்? நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவன் யார்? ராணுவ உளவுத்துறைத் தலைவர் டிகூர்ஸ் கங்சாருக்குச் சென்று செக்யூரிட்டி செர்விஸ் அதிகாரிகளைக் கூட்டி வைத்துத் தகவல்களை அலசினார். என்ன தெரிகிறது? தாக்கியவர்கள் நன்கு பயிற்சி பெற்ற, கட்டுக் கோப்புடைய படையைச் சேர்ந்தவர்கள். படைத் தலைவன்? யாரோ ஒரு ஜப்பானிய அல்லது ஐரோப்பிய ராணுவ அதிகாரி. ஆனால் மேஜர் டில்டன் வேறுவகையாகக் கருதினான். தாக்குப் போருக்குத் தலைமை தாங்கியவன் ஒரு தமிழன். மொஸ்கிஸ்ட்ராட் செட்டி... வாத்! எவ்வாறு படைத் தலைமைக்கு வந்தான்? இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சி பெற்றவன். ஹஹ்ஹஹ்ஹா... இன்டீஷ் நாசியொனால் லெஹர்! இன்டீஷ் ஹஹ்ஹஹ்ஹா இன்டீஷ் நாசியொனால் லெஹர்... “ஹஹ்ஹஹ்ஹா”. ஏளனச் சிரிப்பில் டில்டனின் குரல் அடங்கிவிட்டது... முதலாவது கொரில்லா படையின் கங்சார் வெற்றிச் செய்தி வட சுமத்ரா எங்கணும் ஒலித்து மற்றப் பகுதிகளிலும் பரவி, இந்தொனேசியா முழுவதிலும் எதிரொலித்தது. டச்சுப்படை நிலையம் உள்ள பெரிய ஊர் ஒன்றின்மீது குடியரசுக் கட்சியினர் படையெடுத்துப் போய்த் தாக்கிப் பெருமளவில் சேதம் விளைவித்தது இதுதான் முதல் தடவை. புதிதாக முளைத்திருக்கும் இந்த வீரன் - வடசுமத்ரா முதலாம் கொரில்லாப் படையின் தலைவன் யார்? பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திலிருந்து மெர்டேக்கா படைக்கு மாறிய முஸ்லிம் அதிகாரி! மாபார் தோட்டத்தில் கொழுந்து கிள்ளும் அந்தக் கூலித் தமிழனின் மகன்...! பாண்டியனின் பெயரும் உருவும் கற்பனை வடிவெடுத்தன. ராஜா உத்தாங் - காட்டரசன்! உடலில் உருக்குக் கவசமும் கையில் பட்டாக் கத்தியுமாய் வெள்ளைப் புரவிமீது பறந்து செல்வான். ஜின்களின் அருள் பெற்றவன். குண்டுகள் அவன் உடலை அணுகா. ராஜா உத்தாங் ஹிடூப்! கங்சார் போருக்குப் பத்துநாள் கழித்து லொம்பொங் விமான நிலையத்தைத் தாக்கி அழித்தது வட சுமத்ரா கொரில்லாப் படை. தரையிலிருந்த மூன்று விமானங்களும் சுக்கு நூறாகிவிட்டன. எண்ணெய்த் தொட்டிகள் எரிந்து போயின. இந்த அடி டச்சு ராணுவத் தலைவர்களை மேலும் குழப்பியது. லொமபொங் வட்டகையில் குடியரசு ஆதரவாளர்கள் கிடையாதே. ராஜா உத்தாங்கின் படை மெடான் - கங்சார் பகுதியில் இருப்பதாகவல்லவா கணிப்பு! விலங்குகளும் ஊடாடாத கன்னிக் காட்டில் 30 மைல் ஊடுருவி வந்து தாக்கி இருக்க முடியுமா? ஒருவேளை இரண்டு ‘ராஜா உத்தங்’குகள் தலைமையில் ஒரே மாதிரியான இரண்டு படைகள் இருக்கின்றனவா... லொதம்பொங் பாய்ச்சலைத் தொடர்ந்து சுங்கை லிம்பியான் சண்டை. டச்சு மோட்டார் படை பிளக்காங் மத்தி முகாமுக்குச் செல்வதாக மெடானிலிருந்து தகவல் கிடைத்தது. பாண்டியனின் கொரில்லாக்கள் இடைமறிக்கச் சென்று காத்திருந்தனர். டச்சுப் படை தித்தி கிச்சியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. இருபுறமும் ஆள் அண்ட முடியாத காடு. இடையிடையே பாழடைந்த சிசால் தோட்டங்கள். சுங்கை லிம்பியான் நெருங்குகிறது - வண்டிகள் கிரீச்சிட்டு ஒன்றோடொன்று உரசி உரசி மோதி நின்றன - எதிரே சாலையை மறித்து மரக்கிளைகள் விழுகின்றன. குண்டுகள் வெடித்தன. டயர்கள் தெறித்தன. சுதாரிப்பதற்குள் படுசேதம் ஏற்பட்டுவிட்டது. மோட்டார் அணி நகர முடியாமல் இருபுறமும் மரங்களில் மறைந்திருந்து சுட்டவர்களின் கண்ணுக்குத் தெரிய நின்று துடித்தது. காவல் விமானம் சுற்றிச் சுற்றிப் பறந்து, குருட்டாட்டமாய்க் காட்டுக்குள் குண்டு வீசத் தொடங்கியது. அதற்குள், கொரில்லாப்படை இடம் பெயர்ந்து வெகுதொலை போய்விட்டது. வட சுமத்ரா கொரில்லாப் படையின் பாய்ச்சல்கள் பரந்து பெருகின. விமானத் தளங்கள் நொறுங்கின; பாலங்கள் இடிந்தன; தண்டவாளங்கள் பெயர்ந்தன; கிடங்குகள் எரிந்து சாம்பலாயின. புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|