அரும்பு

10. ஆவன்னா

     இந்தொனேசியா - மலேசியா பிரதேசம் சைலேந்திரரின் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்த காலத்திலும், அதற்கு முன்னரும் இந்த அலைகளின் மீது தமிழரின் வணிக நாவாய்கள் கூட்டம் கூட்டமாய்த் துறைமுகங்களை நாடிச் சென்றிருக்கின்றன. சோழர்களின் போர்க் கப்பல்கள் இந்த கடலைக் கிடுகலக்கித் திரிந்த காலமும் உண்டு.

     சைலேந்திரருக்கும் சோழர்களுக்கும் இடையே நெருங்கிய அரசியல் - வணிக உறவு இருந்தது. ஒரு சைலேந்திரன் ஸ்ரீமாரவிஜயோத்துங்க வர்மன் - ராஜராஜ மகா சோழன் காலத்தில் தமிழ்நாட்டு நாகப்பட்டினத்தில் தந்தையின் நினைவாகச் சூடாமணி விஹாரை என்ற அழகுருவான பவுத்த ஆலயம் ஒன்றை ஆக்கினான். இன்னொருவன், சோழருக்கு ஆதரவாக, சிங்களருக்கு எதிராகத் தனது கடற்படையை அனுப்பி வைத்தான். இந்த நட்புறவுத் திரைக்குப் பின்னே, கடலாதிக்க உரிமை குறித்து எழுந்த போட்டிப் பூசலே சைலேந்திரனின் வீழ்ச்சிக்கு வித்தாக அமைந்தது.

     கி.பி. 1025-இல் ராஜேந்திர சோழனின் போர்க் கப்பல்கள் அணி அணியாக வந்து, சைலேந்திரரின் கடற்படைகளை நொறுக்கியும் எரித்தும் அமிழ்த்தியும் அழித்துவிட்டன. கரையிறங்கிய படை வீரர்கள் சைலேந்திரரின் ராஜதானியான ஸ்ரீவிஜய நகரையும்* வணிகப் பெரும் பட்டினமான மலையூரையும்# சூறையாடித் தீக்கிரையாக்கினர். ஸ்ரீவிஜய சக்கரவர்த்தி சங்கிராம விஜயோத்துங்க வர்மன் சிறை பிடிக்கப் பட்டான். அத்துடன் சைலேந்திர சாம்ராஜ்யத்தின் முடிவு காலம் தொடங்கி விட்டது.

     * ஸ்ரீவிஜயநகர் - தென் சுமத்ராவின் முசி ஆற்றங்கரையில் (இப்போது பலம்பாதில் நகர் உள்ள இடத்தில்) இருந்த துறைமுகப் பட்டனம்.

     # மலையூர் - தென் சுமத்ராவில் ஜம்பி ஆற்றங்கரையில் (இப்போது ஜம்பி நகர் உள்ள இடத்தில்) இருந்த வணிகப் பெருநகர்.

     சைலேந்திரருக்குப் பிறகு மாயா பாஹித் அரசு தலை எடுத்தது. பின்னர் சிற்றரசர்களின் குழப்படிக் காலம். அதை அடுத்து இஸ்லாமிய வெள்ளம் - அணை போட முடியாத பிரளயம்...

     சேர சோழ பாண்டியரின் நாவாய்கள் இந்த முந்நீரை மொய்த்திருந்த காலம் கனவாய்க் கற்பனையாய்ப் பழங்கதையாய்ப் பாதாளப் புதையலாய் மறைந்து போயிற்று... ஆனால், சைலேந்திரரின் போர்க் கப்பல்களை எரித்தமிழ்த்திக் கரையிறங்கி, அவர்களின் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடி வழியில் வந்தோரிற் சிலர், இதோ...

     பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளைக் கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல - வயிற்றுப் பிழைப்புக்காக, சீனர்களுக்குச் சொந்தமான, சீனர்களால் செய்யப்பட்ட, சீனர்களால் செலுத்தப்படும் பாய்மரக் கப்பல் இது; வாணிபச் சரக்குகளுடன் பினாங் துறைமுகத்தைக் கருதிச் சென்று கொண்டிருக்கிறது, மலாக்கா கடல்மீது.

     கதிரவன் சாயும் வேளை, மேற்கே, கல் விளிம்பில் செந்தீ வண்ணம் கண்ணைப் பறிக்கிறது. சூரிய வட்டம் கடல் கோட்டைத் தொட்டு மனவோட்டத்திற்கும் விரைவான கதியில் தீச் சக்கரமாய்ச் சுழல்கிறது; அந்தக் கடுவிசை இயக்கம் கடலிலும் தெரிகிறது... கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அப்பாலும் உவரி, எல்லையில்லாப் பரவை.

     தொங்கான் செல்கின்றது.

     கப்பித்தான் ஐ லியாங் அவனது பொந்துக்குள், செப்பு விளக்கின் அருகே தலை சாய்த்து, சண்டு புகைத்துப் போதைக் கடலில் ஆழ்ந்திருந்தான்.

     மேல் தட்டில், மேற்கே பார்த்தபடி கடல் பக்கம் காலைத் தொங்கவிட்டிருந்த பாண்டியன் முகத்தைக் கிழக்கே திருப்பினான். தங்க வட்ட மதி பரிந்து கிளம்புகிறது. வெள்ளி மலர்கள் பூக்கின்றன. உப்பங்காற்று தலைமுடியைக் கோதி ஆடையை அலைக்கிறது. மேற்கே திரும்பினான். ஆ! நாகை, மாமல்லை, கொற்கை, புகார்! அந்தத் துறைமுகங்களிலிருந்து பருத்திக் கலிங்கமும் வெண்முத்தும் கொண்டு வந்து சீனப்பட்டும் செம்பவளமுமாய்த் திரும்பிய நாவாய்கள் எத்தனை எத்தனை! புயலால் அலைப்புண்டு நாவாய்களுடன் மூழ்கிய வணிகர், மாலுமிகள் எத்தனை பேர்! எங்கிருந்து எங்கே சென்றனர், எவ்வாறு முடிவெய்தினர்? தெரியாது. சைலேந்திரரின் பேரரசை நொறுக்கி வீழ்த்திய தமிழ்க் கடற்படைக்குத் தலைமை தாங்கிய யாமமோத்தோ யார்? தெரியாது.

     “பாவன்னா! இங்கிட்டு வாங்க, வயித்து வேலையை முடிச்சிக்கிடலாம்.”

     பாண்டியன் உட்புறம் குதித்தான்.

     தேயிலைப் பெட்டி அடுக்கின் மீது அச்சின் பாய்களை விரித்து உட்காருகிறார்கள். மங்குப் பாத்திர மூடிகள் திறபடுகின்றன. வாழை இலைகளில் கட்டுச் சோற்றையும் கறிகளையும் எடுத்து வைத்து உண்கிறார்கள்.

     “நான் மூணாங்கணக்கு மைடானுக்கு வரச்சே, பிலவான்ல நாலுநாள் கப்பலைவிட்டு இறங்கக் கூடாதுன்னு சொல்லிப்பிட்டான்.” சோறு நிறைந்த வாயுடன், ‘உப்புக் கண்டம்’ அண்ணாமலைப் பிள்ளை கூறினார். “அப்ப, மலாய் டாப்புல கால்ராவோ என்னமோன்னு சொன்னாங்ய. அது, ம்ம்... தொள்ளாயிரத்தி முப்பதோ முப்பத்தி ஒண்ணோ நினைப்பில்லை - கொப்பனாபட்டி நாவன்னா மூனா மார்க்கா நொடிச்ச வருசம்.”

     “நாவன்னா மூனா மார்க்கா நொடிச்சது முப்பத்தி ஒண்ணுல.” அங்கமுத்து தெரிவித்தான். “அந்த வருசந்தான் அவுக பினாங்குக் கடையில பெட்டியடிக்கி வந்தேன்.”

     “அங்கமுத்து சூரப்பயல்!” சண்முகம் பிள்ளை கூவினார். “எட்டுக் கண்ணும் விட்டெரிஞ்ச நாவன்னா மூனா மார்க்காவைக் காலெடுத்து வச்ச முணா மாசம் எடுத்து வச்சு எழுதினவன்ல!”

     “எட்டுக் கண்ணும் விட்டெரிஞ்சதோடயா... கொடி கட்டிப் பறந்துச்சு!” ஆவன்னாவின் வலக்கை இலையைத் துப்புரவாக வழித்துப் பருக்கையைத் திரட்டி அள்ளிக் கொண்டிருந்தது. “கொடி கட்டிப் பறந்துச்சு, கொடி!... நாவன்னா மூனா மார்க்கான்னு சொன்னா, சாட்டர் வங்கிப் பெரிய தொரையே - யாரு? இங்கினைக்குள்ள இருக்கிற மைடான் தொரையக இல்லை; இவுகளுக்கெல்லாம் அப்பன் லண்டன்ல இருக்காரே, அவர் - ஒரு செக்யண்டு யோசிப்பாராம்.”

     ஆவன்னாவின் தலை ஆடிற்று. இடக்கை, பக்கத்தில் கிடந்த டைமன் துண்டை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்தது. பார்வை வலப்புறம் - நல்லக்கண்ணுக் கோனார் திசையில் சென்றது.

     “மாப்பிள்ளை, நல்லா வயிறு நிறையாத் தின்னுங்க. இப்படிக் கோழி கிண்டுராப்புல கிண்டினா ஊர்ல போயி எப்படிப் பிள்ளை குட்டி பெறுறது?”

     “பெத்த பிள்ளையக போதும், அயித்தான்! இப்பவே உங்க தங்கச்சி இடுப்பொடிஞ்சி போயிக் கிடக்காள். அது சரி, பேச்சை விட்ராதியக, நாவன்னா மூனா மார்க்கா நொடிச்ச உள் குட்டு என்ன? இனத்தில் ரொம்ப நிலுவை நின்னு போச்சா, இல்லை, ரெண்டு கால் எலியக...”

     “அதெல்லாம் ஒண்ணுமில்லையிங்கிறேன். டயன் முடிஞ்சு போச்சு. அம்புட்டுத்தான். ரெங்கோன் கடை, அவரு இவரு, அப்படி இப்படியினு என்னென்னமோ சொல்லிக் கிணாக, அதெல்லாம் பெரிய இடத்துச் சங்கதி, நமக்கு என்ன தெரியிது... யார் வச்ச தீயோ படப்பு வெந்து போச்சு. செவ்வையாப் போன கப்பல் டமார்னு பாறையில...” உதட்டைக் கடித்தார். தலை குலுங்கிற்று. “வேலாயுதம்! ஞானபண்டிதா!... எல்லாரும் தண்ணிமலையானை நினைச்சுக்கங்க. ஒரு கோளாறும் வராது.”

     மற்றவர்கள் திடுக்கிட்டு முகத்தைச் சுளித்தனர், ஆவன்னாவின் அபசகுனப் பேச்சைக் கேட்டு.

     “என்ன பாவன்னா!” இடப்பக்கம் திரும்பினார். “ஒண்ணும் பேசக் காணமே!”

     “நல்ல பசி.”

     “ஆமா. ரொம்ப நேரம் மேலே உட்கார்ந்துக்கிணு உப்பங்காத்துக் குடிச்சிங்யள்ள.”

     ஆண்டியப்ப பிள்ளை இடக்கையால் இடுப்பைப் பிடித்தவாறே எழுந்து போய், இலைகளைக் கடலில் எறிந்துவிட்டுக் கைகழுவினார்.

     “இந்த இடுப்பெழவு சனியன்தான் மனுசனை வாட்டி வதைக்கிது. ஊருக்குப் போனமுன்னா ஒரு கரைச்சல் இல்லை. உடம்பு கம்பிளீட்டா இருக்கு... வேலாயுதம்! ஞானபண்டிதா!”

     “இந்த ஊர்த் தண்ணி செய்யிற வேலை, அயித்தான்!” கடலில் காறித் துப்பிவிட்டு வந்த நல்லக்கண்ணுக் கோனார் கூறினார். “கந்தகத் தண்ணி, சனியன்.”

     “தண்ணி என்னங்கிறேன், தண்ணி. மயித்தவுங்களுக்கெல்லாம் இல்லாத தண்ணியா நமக்கு மாத்திரம், நம்ம உடம்புக் கோளாறு... சரி, படுக்கைய விரிக்யலாம்.”

     இடத்தைச் சமன் செய்து படுக்கைகளை விரித்து உட்கார்ந்தனர்.

     வானத்து நிலவும் தாரகைகளும் கடலில் மின்னின. மெல்லிய காற்று உடலை வருடிற்று. பக்கங்களில் மொத்து மொத்தென்று மோதிச் சிதறிய கடல் அலைகளின் ஓசை நேரே சீராய் எழுந்து தேய்ந்தெழுந்தது.

     நடுக்கடலில் மிதந்த தமிழர்களிடையே மொஸ்கி ஸ்ட்ராட் ஏற்றத்தாழ்வு நடைமுறைகள் மறைந்து, இணைப்புணர்வும் நட்புறவும் தோன்றியது; வழக்கத் தளைகளை அறுத்துக் கொண்டு மனம் திறந்து பேசலாயினர்; அவரவர் கொண்டு விற்கக் கப்பலேறியது; காணிகரை வாங்கி வீட்டை எடுத்துக் கட்டியது; கல்யாணம் காச்சி பிள்ளைக்குட்டி என்றாகி ஆளானது...

     ஆண்டியப்ப பிள்ளை வெற்றிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளங்கையில் துடைத்துக் காம்பையும் நுனியையும் கிள்ளி, நரம்புரித்துச் சுண்ணாம்பு தடவி வாயில் திணித்துக் கொண்டே சொல்லலானார்:

     முத முதல்ல தொள்ளாயிரத்து ரெண்டுல கப்பலேறி, கானாச் சீனாவானா ஈப்போகடைக்கி வந்தேன். முதலாளி சிவசங்கரம் பிள்ளை - யார் தெரியுமுல, ‘அத்தறுதி’ முத்துக் கருப்ப பிள்ளைக்கிப் பெண் கொடுத்த மச்சினன்; வேம்பு வயல்காரர். குதிரையில போயி எதிரி குடுமியை அறுத்துக்கிணு வந்தார்னு சொல்வாகளே, கூனாப் பானாழானா - அதாவது ஆவிச்சி வள்ளலுக்கு அப்பச்சி; அரசப்ப செட்டியாருக்கு அண்ணன் - அவர் ரெங்கோன் கடையில எஸ்ஸெஸ்ஸாய்க் கொண்டு வித்துப் போதும் போதுமுனு கை நிறையா சம்பளம் சாமானுக்கு வாங்கியாந்தவர்... கூனாப் பானாழானா மார்க்கா இருக்கே, அது சாட்டர் வங்கி, உலாந்தா வங்கியாட்டமாய்ப் பெரிய கப்பல். நம்ம மொஸ்கி ஸ்திராட் கொடுக்கல் வாங்கல் அம்புட்டும் அங்கெ ஒரு நாள் வரவு செலவு. சீனாவானா சொல்லியிருக்கார். கூனாப் பானா ழானா ரெங்கோன் கடையில அவர் கொண்டு விக்யச்சே மொகல் வீதியில இறங்கி நடந்து போனாருன்னா, பெரிய சேட்டு மகன் சேட்டெல்லாம் எழுந்திரிச்சு ராம் ராம் கொடுப்பானாம். அந்த மார்க்காவில் கொண்டு விக்கிறதுன்னா பிரிட்டிஷ் எம்பிரஸ்ல தாசீல் பண்ற மாதிரி... விடிஞ்சதிலயிருந்து படுத்துக்கிறவரை பெட்டியடிப் பயகளும் அடுத்தாளுகளும் பணம் பண்ணிக் கட்டுற சத்தம் மணியோசையாட்டம் சிஞ்சாமிர்தம் கொட்டிக்கிணு இருக்குமாம். பெட்டகங்களைத் திறந்தால், நம்பிக்கைக்குக் கொண்டாந்து கொடுத்து வச்ச நகை நட்டுக்களும் பத்திரம் தஸ்தாவேசுகளும் பொட்டணம் போட்டுப் பேரெழுதி அடுக்கடுக்காய் அடுக்கி இருக்குமாம். வங்கியில கூனாப் பானா ழானாச் சமால் வருறவரை எந்நேரமானாலும் கணக்கு முடிக்காமல் உட்கார்ந்துக்கிணே இருப்பாங்யளாம். அது அந்தக் காலம்! இப்பத்தான் எல்லாம் மார்க்கா, எல்லாரும் முதலாளியினு ஆகிப் போச்சே! அது போகுது என்ன சொன்னேன்...?

     “ஈப்போ கானாச் சீனா வானா மார்க்காவுக்கு வந்தியக.”

     ஆமா, அங்கெ ஒரு கணக்குத்தான் இருந்தேன். சீனா வானா தொழில்ல சூரன். நல்ல குணமான ஆளுதான். ஆனாக்கா சம்பளக்காரனுக்குக் கொடுக்கிறது வைக்கிறதுல கை உள்ளடிக்யும். ஊர்ல போயி ரெண்டு மாசம் இருந்துப்பிட்டு, தீனா மூனா ரூனாத் தீனா மார்க்கா சித்தியவான் கடைக்கி வந்தேன். அந்தக் கணக்கும் பெட்டியடிக்கித்தான். அப்ப எனக்குச் சொற்ப வயசு. அப்புறம் அடுத்தாளுக்குச் சம்பளச் சீட்டு எழுதிக்கிணு அவுக பினாங்குக் கடைக்கு வந்தேன்; தொடர்ந்து அவுககிட்டயே பினாங்குக் கடைக்கும் கோலாலம்பூர் கடைக்குமாய் வந்துக்கிணு இருந்தேன். முதலாளி ‘விடாக்கண்டன்’ திட்டாணி செட்டியார். வெகு காலத்துக் கடை. பரம்பரையாப் பெரிய மார்க்கா. சம்பளம் சாமானுக்குக் கொடுக்கிறதுல ரொம்பத் தாராளம். அங்கெ கொண்ட விக்யச்சேதான் மேக்கொண்டு காணி கரைய வாங்கி வீட்டை எடுத்துக் கட்டினது... இருபத்தி ரெண்டாவது வயசில கலியாணம்.

     விடாக்கண்டன் செட்டியார் கோடையிடியன். கோபம் வந்துட்டால் கண்ணு மூக்குத் தெரியாது. திங்கு திங்குன்னிக் குதிப்பார்; தாறுமாறாய்ப் பேசிப்பிடுவாரு. உடும்புப் பிடியின்னால் உடும்புப் பிடி. அரைச் சாண் நிலத்துக்கு ஆனை வெட்டிப் பொங்கல் வைப்பேன்ம்பாரு. விராலிமலை முத்து மீனாச்சியிங்கிறவளைக் கொண்டாறதுக்காக, ஒரு பெரிய செமீந்தாரோட சபதம் போட்டு ஒரு லகரம் வரை செலவு பண்ணினார். சொன்னபடி அவளைக் கொண்டாந்து, புதுக்கோட்டையில பளிங்கு மாளிகை கட்டிக் கொடுத்து வச்சிருந்தாரு...

     “ஏன் அயித்தான், கீழராச வீதியிலதானே அந்த வீடு?”

     அது ‘ஏரப்ளான்’ சூனாப் பானா எடுத்து வச்சிருக்கிற பொம்பளையில - பார்சி லேடி. இது பல்லவன் குளத்துப் பக்கமுங்கிறேன். முத்து மீனாச்சியிருக்காளே, அவளைக் கண்கொண்டு பார்க்க முடியாது - சூரியப் பிரகாசம். சின்ன வயசிலேயே செத்துப் போனாள்... அப்புறம் காக்கினாடா சைட்லயிருந்து, கோரங்கிக்காரி* ஒருத்தியைப் பிடிச்சாந்து, அந்த வீட்லயே வச்சிருந்தார். அது ஒரு மாதிரியா ஊர்ல மேயிற கழுதையினு தெரிஞ்சதும் அடிச்சு விரட்டிப்பிட்டு, மலையாளத்திலருந்து ஒருத்தியைக் கொண்டாந்தார். வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரியாட்டமா யிருப்பாள். அவளை முடிச்சுவிட்டவர் மதுரையில ஒரு லாயர். அவருக்குக் கமிசன் தொகை மட்டும் ரூபாய் பதினாயிரம். அவள் புருசனுக்கும் பெருந்தொகை கொடுத்து வெட்டி விட்டாக. இதுகளை வினாக எத்தனை எத்தனையோ, சொல்ல முடியாது. எங்க செட்டியார் பொம்பளை விசயத்தில் பெரிய கவுச்சி...

     * கோரங்கி - ஆந்திராவில் உள்ள சிறுதுறைமுகம். ஆதியில், ஆந்திரர்கள் அங்கே கப்பலேறி அக்கரை நாடுகளுக்குச் சென்றதால் (அங்கே) அவர்களுக்கு ‘கோரங்கி’க்காரர் என்ற பெயர் வந்தது.

     செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டால் கண்ணு மூக்குத் தெரியாதுன்னு சொன்னேம் பாருங்க... முதல் கணக்கு அடுத்தாளுக்கு இருந்துட்டுப் போய் ஊர்ல இருக்கச்சே, ஒரு சமயம் ரொம்பப் பணமுடை. வரிப் பாக்கி கட்ட விட்டுப் போச்சு. திடுதிப்னு வந்து நின்னுக்கிணு சப்தியிடாங்கிறாங்ய. செட்டியார்ட்டப் போயி பணம் வாங்கிக்கிணு வரலாமுனு போனேன். முகப்பில உட்கார்ந்திருந்தார். பார்த்ததும், புதுக்கோட்டையில போயி ஒரு வேலையை முடிச்சிக்கிணு வாடான்னி பிளசர்ல அனுப்பிச்சு விட்டார். போனேன். வேலை முடியலை. வந்து சொன்னதும் கோபம் வந்திருச்சு. அவனே இவனே, அத்திரிப் பூத்திரியினு கண்டபடி வஞ்சுபிட்டு, விருட்டுனு பிளசர்ல போய்ட்டார். திண்ணையில் உக்கார்ந்திருக்கேன். என்ன செய்யிறதுனு தெரியலை. காருக்குப் போவமுன்னாக் காசு குறையுது. எப்பவும் ஓர் இடத்துக்குப் போகச் சொன்னால் நோட்டை எடுத்து எறியிறவர் அன்னைக்கி என்னமோ ஒரு நெனைப்பில் மறந்திட்டார். நானும் தேவையின்னால் புதுக்கோட்டையில யார் கடையிலயாச்சும் செட்டியார் பேரைச் சொல்லி வாங்கிக்கலாமுனு மிதப்பாய் இருந்துட்டேன். ஆச்சிகிட்டப் போயிச் சொல்வமுன்னால் அவுக ரொம்ப மேலுக்கு முடியாமப் பின்கட்டுல படுத்திருக்காக. வயித்துப் பசியோ சொல்லி முடியாது. சிறு குடலைப் பெருங்குடல் திங்கிது... என்னடா இது, மலைபோல நம்ம முதலாளி வீடு இருக்குன்னி வந்தமே, இப்படி ஆகிப்போச்சே. சாயந்தரம் தவணை தீருது. கதவைப் பிடுங்கிக்கிணு போய்த்தான்னால் நாளைக்கி ஊர்ல தலைகாட்ட முடியுமான்னி நினைக்ய நினைக்ய நெஞ்சு குமுறுது. இருந்தாப்புல இருக்கேன். கிறுகிறுன்னு தலையைச் சுத்தீரிச்சு. சாஞ்சிட்டேன். கழுத்தைப் பிடிச்சு நெரிக்கிறாப்புலயும், தண்ணிக்குள்ள பிடிச்சு அமுக்குறாப்புலயும் கனாக்கண்டனோ என்னமோ தெரியலை, மேலெல்லாம் வேர்த்து நடுங்குது. அப்ப,

     ‘ஆண்டியப்பா! அட ஆண்டியப்பா அ அ!’ன்னு கிணத்துக்குள்ளயிருந்து வருறாப்புல சத்தம் கேட்குது. துடிச்சுப் புரண்டு எழுந்திருச்சிட்டேன். கண்ணைக் கசக்கிக்கிணு பார்த்தால், மேலுக்கு முடியாமப் படுத்திருந்த ஆச்சி நிலைப்படியில் வந்து நின்னுக்கிணு எங்க ஆத்தாளாட்டமாய்க் கூப்பிடுறாங்க. ஆச்சியைக் கண்டதும் கண் கலங்கீரிச்சி. மாக்கு மாக்குன்னு அழுதிட்டேன். அப்ப, ஆச்சி,

     ‘அட மறுக்கோளிப் பயலே! ஏன்டா பச்சைப் பிள்ளையாட்டம் கண்ணைக் கசக்கிக்கிணு இருக்காய், கால் முகத்தைக் கழுவிக்கிணு சாப்பிடு வாடா’ங்கிறாக. நானு, ‘ஆச்சி, எனக்கு சப்தி வந்திருக்கு, ஆச்சி!’ன்னு புலம்புறேன். அதுக்கு அவுக, ‘என்னடா உளறுறாய். கல்லுப்போல உங்க செட்டியார் இருக்கையில எவன்டா உனக்கு சப்தி கொண்டாறவன்? முதல்ல சாப்பிட வாடா’ங்கிறாக. சரியினு போயிச் சாப்பிட்டுப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். அப்ப, ஆச்சி,

     “ஏன்டா உங்க செட்டியார் கோபத்தில ஒண்ணு சொல்லிபிட்டாகன்னா அதை ஓர் இதாய் நினைக்யலாமாடா... நேத்து அந்த மேமலையான் தமாசுக் கொட்டகையில போயி - அவன் பாவிபரப்பான் படக்கின்னு போவான், செட்டிய வீட்டுக் குலத்தைக் குடிகெடுக்க வந்து பிறந்திருக்கான் - பத்தாயிரமோ பதினஞ்சாயிரமோ தோத்துக்கிணு வந்திருக்காக... அதுதான் யோசனை பண்ணாமல்... ஹ்ம்.., அது கெடக்குது, ஆமா அ அ, அவசரமாய் வந்திருக்கியே என்னடா சேதியின்னாக. சொன்னேன். ஆச்சி மறுபேச்சுப் பேசலை. அலமாரியைத் திறந்து முப்பத்தஞ்சு ரூபாய் எடுத்துக் கொடுத்தாக. அப்புறம், மதுரை - நாகப்பட்ணத்தையர் கடையில வாங்கியாந்த மிட்டாயி, சேலத்திலயிருந்து தரவழைச்ச மல்கோவா, கப்பல்ல வந்த ரொட்டி பிஸ்கோத்து, சாக்குலட்டு, வீட்ல போட்ட சீடை, முறுக்கு, அதிரசம் இதுகளையெல்லாம் கடகப்பெட்டில வச்சுக் கொடுத்தாக. எதுக்குச் சொல்ல வருறேன், அந்தக் காலத்தில அப்படி மகராசியக இருந்தாக...

     செட்டியார் என்னென்ன ஆட்டமெல்லாமோ ஆடினார். விடாக்கண்டன்கிற டயிட்டல்படி வீதியில வேற வம்பு தும்புகளை விலைக்கு வாங்கி வச்சுக்கினு வீம்பு பண்ணுவார். அவர் என்ன கூத்து நடத்தினாலும் சரி, வீட்ல மகாலெட்சுமியாட்டமாய் ஆச்சி இருந்தாக! தீனா மூனாத் தீனாக் கொடி எட்டுக் கண்ணும் விட்டெறிஞ்சு பறந்துச்சு... வீட்டுக்குப் பொம்பளை வாய்க்கிறதுன்னாச் சும்மாவா இருக்கு? இன்றைக்கு நம்ப பக்கத்திலயும் மெட்ராஸ் டாப்பு இருபத்தி ஆறு சில்லாவிலயும் அரசப்ப செட்டியார் ராசதர்பார் பண்றார்ன்னால், ஏன்? அதுதான் வீட்டுக்கு ஆச்சி வந்த வேளை. அந்த ஆச்சி மண்ணைத் தொட்டாலும் பொன்னுதான். வீட்ல சோத்துக்குக் கேள்வி கேட்பார் உண்டா? வந்தவன் போனவன் வழிப்போக்கனுக்கெல்லாம் நளபாகச் சாப்பாடு. லெச்ச லெச்சமாய்ப் பணம் குமிஞ்சு கிடந்தாலும் ஊரானுக்கு ஆக்கிக் கொட்ட மனசு வேணுமூல... ம்ம், செட்டியார் புதுக்கோட்டை போனவர் வரலை. ஆச்சிகிட்டச் சொல்லிக்கிணு ஊர் போய்த்தேன்...

     மய்க்யா நாள் பொலப்பொலன்னு பொழுது பரியிது. செட்டியார் பிளசர் போட்டு வந்து மானா ரூனா வீட்ல இருந்துக்கிணு ஆள் விடுறாரு. நான் அப்பத்தான் வயலுக்குப் போறதுக்காகப் பழையது உண்டுக்கிணு இருக்கேன். எனக்கு வந்த வரத்தை இப்படி அப்படியின்னு சொல்ல முடியாது. நேத்துச் சொல்லிக்யாம வந்ததுக்குத்தான் வைய வந்திருக்கார் போலயிருக்கு. செட்டிய வீட்ல சேவகம் பண்றதுக்கு வதிலாய் சீதளிக்கரையில் உட்கார்ந்து வருறவன் போறவனுக்குச் சிரைச்சு விட்டுக்கிணு இருக்கலாம்னு இருக்கு. சரி, என்ன செய்யிறது போவம்னு போனேன். ‘அப்படி உட்கார்ரா’ன்னாரு. மூலையில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு மானா ரூனாகிட்டச் சொல்லிக்கிணு கிளம்பினார். என்னையவும் ஏறிக்யச் சொன்னார். ஏறிக்கினேன். பிளசர் தேரடி கிட்டப் போகுது. அப்ப,

     “ஏன்டா, சொல்லிக்யாம ஓடியாந்திட்டியே, வீட்ல சாப்பிட்டியால்லியாடா? வந்த சேதி என்னடா?”ன்னாரு.

     செட்டியார் இப்படிக் கேட்டதும் எனக்குப் படபடன்னு வந்திருச்சி. முதலாளி கிட்டப் பேசுறமுங்கிற நினைப்பு நறுவுசாய் இல்ல. நான் பாட்டுக்குக் கத்திக்கிணு ஆதியோடந்தமாய் அம்புட்டையும் சொல்றேன். வரிப் பாக்கி கட்ட விட்டுப் போச்சு. கையிலயிருந்த பணத்தைச் சித்தப்பு கேட்டார்னு கைமாத்துக் கொடுத்துப்பிட்டேன். நெல்லளந்த பணம் வராமல் சுணங்கீரிச்சு. திடுதிப்னு வந்து நின்னுக்கிணு சப்தியிடாங்கிறாங்ய. மானா ரூனா வீட்டுக்கு ஓடினேன். அவுக எல்லாரும் திருச்சியில கலியாணமுனு போய்த்தாக. வேற ஆளுககிட்டப் போய்க் கேட்க மனசு வரலை.... மலைபோல நம்ம முதலாளி வீடு இருக்கேன்னு நினைச்சு, செக்குக்கார ராவுத்தர் வீட்ல காருக்குக் காசு வாங்கிக்கிணு ஓடியாந்தேன். வந்தவனை என்ன ஏதுன்னு கூடக் கேட்காமல் புதுக்கோட்டைக்குப் போடான்னியக. போனேன். அரும்பாடுபட்டுப் பார்த்தேன். வேலை முடியலை. கவலையோட வந்தேன். நீங்ய தாறுமாறாப் பேசிப்பிட்டிங்யன்னு சொல்லிக்கினு இருக்கேன். தொண்டை அடைச்சிக்கிணு பேச முடியல. அப்பச் செட்டியார்,

     “சரி சரி, இந்தாடா”ன்னு தோல் பெட்டியைத் திறந்து பத்து ரூபாய் நோட்டுக அஞ்சை எடுத்து நீட்டுறாரு. நானு, ‘ஆச்சி முப்பத்தஞ்சு ரூபாய் கொடுத்தாக. வீட்லதான் சாப்பிட்டேன். வரிப் பாக்கியைக் கட்டிப்பிட்டேன்! நெல்லளந்த பணமும் வந்திருச்சு’ன்னு சொல்றேன், அவரு,

     “சரி சரி வாங்கிக்யடா. இதை உன் பத்து வழியில சேர்க்க வேண்டாம்டா. கோபத்தில் நான் பாட்டுக்குப் பேசிப்பிட்டன்டாங்’கிறாரு.

     பணத்தை வாங்கிக்கினேன். என்னைய இறக்கிவிட்டுப்பிட்டு, விருட்டுனு பிளசர்ல போய்த்தாரு.

     முத நாள் செட்டியார் புதுக்கோட்டையிலிருந்து திரும்பினதும் நடந்த சங்கதியப் பிற்பாடு சமையலாள் சொன்னார். வந்து இறங்கினதும் அலமாரியத் திறந்து பிராந்தி போத்தலை எடுத்து வச்சுக்கிணு அவர் பாட்டுக்கு ஊத்தி ஊத்திக் குடிச்சாராம். அப்புறம், ‘சம்பளக்காரன் போயி வேலை முடியலையினு அவனை வஞ்சு விரட்னனே, இப்ப நான் போயி வேலை முடியலையே, போத்தலையும் கிளாசுகளையும் டமார் டமார்னி நிலைக்கண்ணாடியில விட்டெறிஞ்சி நொறுக்குறாராம். நல்ல வேளையா ஆச்சி ஓடியாந்து, கையைப் பிடிச்சுக் கூட்டிப் போயிக் கட்டில்ல படுக்கப் போட்ருக்காக. அப்படி நேரங்கள்ள ஆச்சிய வினாக மயித்த யாரும் கிட்டத்தில் அண்ட முடியாது... கோழி கூப்பிட எழுந்திச்சதும் பிளசர் போட்டுக்கிணு திருப்பத்தூர் வந்திட்டார்... எதுக்குச் சொல்ல வருறேன், அந்தக் காலத்தில அப்படி முதலாளியக இருந்தாக. எல்லா முதலாளிகளையும் அப்படிச் சொல்லிப்பிட முடியுமா? ‘சூத்தைக் கத்திரிக்காய்’ பழனியப்ப செட்டியார் போல அட்டத்தரித்திரியம் பிடிச்ச முதலாளியகளும் இருக்கத்தான் செய்யிறாக; அப்படி முதலாளியகதான் ரொம்ப. இருபது முப்பது லெச்சம் தேறும். மனுசன் வேகாத வெயில்ல லொங்கு லொங்குனு ஏழு மைல் நடந்து தெக்கூர் சந்தைக்குப் போயி, பொழுது சாயிறவரை புளிய மரத்தடியிலயே காத்துக்கிணு இருந்து, விக்யாமல் கிடக்கிற சூத்தைக் கத்தரிக்காயை வாங்கித் துண்டுல முடிஞ்சுக்கிணு வருவாராம். அந்த ஆச்சி இருக்கே, அது அவருக்கு மேலே ஒரு படி, எச்சிக் கையால ஈ ஓட்டாத மகராசி. குடலை உருவி உள்ளங்கையில வச்சுக் காட்டினாலும் ஒருவாய் சோறு போடாது. செட்டியார் வாங்கியாற கத்தரிக்காயை அப்படியே அலமாரியில பூட்டி வச்சிருந்து, சமையல்காரன்கிட்ட அப்பப்ப எண்ணி எடுத்துக் கொடுக்குமாம். மிச்சப் பலகாரத்தைத் தெருவில் வச்சு வியாபாரம் பண்ணிப் பணம் சேர்க்கும் அந்த ஆச்சி...

     “ஆத்திலே வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்யணும், சித்தப்பு.”

     பூர்வ சென்ம வாடையிடா மகனே, பூர்வ சென்ம வாடை. இப்படியெல்லாம் சம்பாரிச்ச பணம் என்ன ஆச்சு? பிள்ளையில்லை. சொந்தக்காரப் பயல் ஒருத்தனைப் பிள்ளை கூட்டினாக. செட்டியார் மண்டையப் போடுறவரை கழுத்தில கொட்டையும் கையில திருவாசகமுமாய் இருந்தான். அப்புறம் காட்டினானே கைவரிசையை! ஊருக்கு ஒரு வைப்பாட்டி. ஒவ்வொருத்திக்கும் ஒரு வங்காள வீடு. எந்நேரமும் தண்ணி! சீட்டு! ரெண்டு வருசத்தில் சீக்குச் சிறங்குன்னு வாங்கி நெஞ்சு வத்திச் செத்துப் போனான். சூத்தைக் கத்திரிக்காய் செட்டியார் வீட்டுச் சொத்துகளெல்லாம் இன்றைக்கு எவனெவன் கையிலோ சிக்கிக்கிணு முழிக்கிது...

     “அது சரிதான் தாசிக்கித் தாய்க் கிழவி சொல்றாப்புல ‘விவேக சிந்தாமணி’ சொல்லுதுல: ‘செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி, நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே’ன்னு. அந்தப்படியே ஆகிப்போச்சு.”

     ஆமாமா. பணம் எவனெவன் கிட்டயோ இருக்கு, தன்மை வேணுமுல... அன்னைக்கி மதுரையில பாருங்க, ஒரு நபரைப் பார்த்தேன் - ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாதும்பாக. இந்த நபர் ஊரையும் சொல்லக்கூடாது. ஒரு நபர்னு வச்சுக்கங்க - கப்பலாட்டமாய்ப் பெரிய பிளசர்ல போறான். மெட்ராஸ்ல என்னமோ பிசினெசாம்... அந்தக் காலத்தில் எங்க செட்டியாருக்குப் பொம்பளை கூட்டியாந்து விட்டுக்கிணு திரிஞ்ச பயல்! அதையெல்லாம் நாமள் பேச முடியுமா? இப்பத்தான் எல்லாம் தலைகீழாய் மாறிப்போச்சே! மாத்தமுன்னா மாத்தம், தோசைப் புரட்டு மாத்தம்! பிரிட்டீஸ் எம்பிரஸ்ல கொடி இறங்கவே இறங்காதுரான்னாங்ய. இன்றைக்கி பார்த்தியகள்ள, மட்ட மல்லாக்க விழுந்து போய்க் கிடக்கு. சிங்கப்பூர் கோட்டையில சப்பான்காரன் கொடி பறக்குது... மாத்தமுன்னா மாத்தம், தோசைப் புரட்டு மாத்தம்! எல்லாம் பணம், பணம், பணம்தான். பணம் வருதுன்னால் என்னமும் செய்யலாமுனு ஆகிப்போச்சு. பணம் இருந்தால் மட்டும் போதுமா, பணம் இருந்தால் அதுக்குக்குத் தக்கனையாகத் தன்மை வேணும்; வீரம் வேணும்; ஏழை எளியதுகளுக்கு உதவுறாப்புல நாலு காரியம் பண்ணி நல்ல பேர் வாங்கணும். இந்தக் காலத்தில் நாய் கிட்டயெல்லாம் பணம் இருக்கு. அமெரிக்காவுல பாருங்கள், ஒரு பெரிய கம்பெனி முதலாளி வீட்டு நாய் பேருக்கு நாலு கோடி டாலர் இருக்காம். அதுக்குத் தனியா பங்களா, பிளசர், ஆள் மாகாணமெல்லாம் இருக்குதுங்கிறாக. இருந்து என்ன செய்ய? எச்சிலையைத்தான் நக்கிக்கிணு திரியும். கையில் கல்லைத் தூக்கினதும் காலைக் கிளப்பிக்கிணு ஓடும். எத்தினி கோடி இருந்தாலும் நாய் நாய்தானே? ‘நாய்க் குணம் போகுமா ராசகோபாலா’ன்னி தெரியாமலா கேட்டு வச்சிருக்கான்... நல்லா யோசிச்சுப் பார்த்தால் நாக்கு வழிக்கிறதுக்காவது ஆகுமா பணம்? வயித்துப் பசிக்கிப் பணத்தை திங்ய முடியுமா? அரிசி பருப்பு இதுகளை வாங்கியாந்து சமையல் பண்ணித்தானே திங்கயணும்...?

     “ஏன்கிறேன், என்ன பணமுனு ரொம்ப இளப்பமாய்ப் பேசுறீரே, அதுக்காகத்தானே இப்படிக் கடல்ல தண்ணியில வந்து தவதாய்ப்பட்டுக்கிணு திரியிறோம்?”

     என்னங்கிறேன், பெரிய பணத்தைக் கண்டுபிட்டீர், பணத்தை. பணம் எத்தினி நாளைக்கி நிலைச்சு நிக்யும்? இன்றைக்கி இருக்கும், நாளைக்கிராது. சகடைக்கால் போல வரும், போகும்... ஆனானப்பட்ட லம்சின் கம்பெனி எங்கே? அறுபத்தாறு ஊர்ல தொழில் நடத்தின நாவன்னா மூனா மார்க்கா எங்கே? தங்கக் கும்பாவுல சோறுதின்ன காதர் பாவா ராவுத்தன் கடை எங்கே? தடமாவது தெரியுமா சொல்லுங்கிறேன்... பணம் வரும், போகும். எங்கெயிருந்து வந்துச்சு பணம்? ஆத்தா வயித்துக்குள்ளாயிருந்து கொண்டாந்தியா? என்னென்னமோ எப்படியெப்படியோ செய்து பணம் வந்து குமியுது...

     “ஏன் அயித்தான், நாய் வித்த பணம் குலக்யுமா? பணம், பணம்தானே!”

     நாய் வித்த பணம் குலைக்யாதுங்கிறேன், நாய் விக்கிறவனுக்கு நாய்க்குணம் வந்திரும். சரி, எப்படி வந்த பணமோ என்னமோ, உன் பணமுனு ஆகிப்போச்சு. அதை இறுக்கிப் பூட்டிக்கிணு பூதம் காத்தாப்புல காத்து என்ன புண்ணியம்? அக்கிரமச் செலவுக்குப் பணத்தை இறைக்கிறதும் ஒண்ணுதான், பூட்டி வச்சுக்கிணு பூஞ்சணம் பிடிக்ய விடுறதும் ஒண்ணுதான். நாளைக்கிப் பாடையில கட்டித் தூக்கிப் போகையில் உன் தங்கமும் வயிரமும், உன் பங்களாவும் பிளசரும் கூட வருமா? இடுப்புக் கயித்தையும் அத்துக்கிணுதான் விடுவாங்ய. இல்லை, பெட்டகம் பெட்டகமாய்ப் பணம் இருந்தால் உயிர் நிலைச்சிருமா? முடிசார்ந்த மன்னரும் முடிவிலொரு பிடிசாம்பல்னு எழுதி வச்சிருக்கான். ஊக்கமாய் நாலு தொழிலைப் பண்ணிச் சம்பாரி, உண்டு உடுத்து வீடு வாசலைக் கட்டு, பிள்ளை குட்டிகளுக்கு வேணுமுங்கிறதெல்லாம் செய்யி. யாரு வேண்டாமுங்கிறது... இதுகளை வினாக மிஞ்சுற பணத்தில் ஏழை எளியதுகளுக்கு உதவுறாப்புல நாலு காரியம் பண்ணி நல்ல பேர் வாங்கணும். ஓர் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், சத்திரம், தண்ணிப் பந்தல்னு கட்டி வச்சால், அது அணையா விளக்கு. தலைமுறை தலைமுறையா நின்னு பேர் சொல்லும். உன் லெச்சமும் கோடியும் நின்னு பேர் சொல்லுமா...? ம்ம்...

     எங்க செட்டியார் இருக்காரே, என்னென்ன ஆட்டமெல்லாமோ ஆடிப் பணங்காசை இறைச்சார். அப்படி இருந்தும் பாருங்க, ஆச்சியுடைய யோகத்துக்குப் பணம் ஊத்துக் கிளம்பிக் கொப்புளிச்சிது - அப்பச்சி பணத்துக்கு மேலே பலமடங்கு சேத்து வச்சிட்டுத்தான் போனார். டாம்டூம்னு செலவு பண்ணினாலும் தொழில்ல சூரன். கணக்கு வழக்குல எம்ட்டன். வரவு செலவுல புதுக்கோட்டை அம்மன் காசு பிசகுச்சோ, தொலைச்சுப்புடுவாரு தொலைச்சு. ராசபிளவை வந்துதானே அவருக்கு வயது முடிஞ்சது. வம்பாயிலருந்து ரெண்டு டாக்கட்டரைக் கூட்டியாந்து வச்சுப் பார்த்தாக. ஒண்ணும் முடியலை. அவர் போனா நாலா நாள் வெள்ளிக்கிழமை காலையில் கோயில் மணி கணகணன்னி அடிக்கிது. ஆச்சி சிவலோகம் புறப்பட்டுட்டாக. சிவகாமி ஆச்சிய இந்த வாசல்ல தூக்கிப் போறாக. அந்த வாசல்லகூடி லெச்சுமி ஆச்சி குடுகுடுன்னி ஓடீட்டாள். அப்புறம் எத்தினி நாளைக்கி வண்டி ஓடும்? கண்மூடிக் கண் திறக்கலை எட்டுக் கண்ணும் விட்டெரிஞ்ச தீனா மூனா ரூனாத் தீனா மார்க்காவுல கொடி இறங்கீரிச்சு. இறங்கினது இறங்கினதுதான். பழையபடி கொடி ஏத்துறதுக்கு இன்னமும் பாலகன் பிறக்கலை. வேலாயுதம்! ஞான பண்டிதா!...

     செட்டியாருக்குப் பிறகு மைனருக ராச்சியம். சுத்தக் கூதறையக... நம்ம சொத்துச் சுதந்திரம் என்ன, வரவு செலவு என்னன்னி அதெல்லாம் ஒண்ணும் தெரியாது. தண்ணி போடுறதும், ரங்கு விளையாடுறதும், எடுபட்ட சிறுக்கிகளைப் பிளசர்ல தூக்கி வச்சிக்கிணு ஊர் சுத்துறதும்தான் தெரியும். ஒனக்கு நடப்புக் கணக்குக்கும் தவணைக் கணக்குக்கும் வித்தியாசம் தெரியலை. தெரிஞ்சவன் சொன்னால், சம்பளக்காரப் பயல் எனக்குப் புத்தி சொல்றதான்னி நினைக்கிறாய். சரி, ஒன் நோக்கம்போல நடத்திக்ய. நாங்க பழைய ஆளுக பாதிக்கி மேல விலகிக்கிணம். ஐந்தொகையின்னால் அஞ்சு லக்கமான்னு கேட்கிற ஆளு நீ. எதிர் வட்டியினால் என்னன்னு தெரியுமா? ஒனக்கு என்னத்துக்கு அம்புட்டுப் பெரிய நெனைப்பு. நீ என்ன ஒங்க அப்பச்சியா. ‘அத்தறுதி’ முத்துக்கருப்பப் பிள்ளை போட்ட கணக்கானாலும் ஒரே பார்வையில் குத்தங்குறை இருந்தால் எடுத்துச் சொல்ல!... எங்க செட்டியார் பெரிய சூரன். பிள்ளையகளைத்தான் தற்புத்தி பண்ணி விடாமல் போய்த்தாரு...

     விடாக்கண்டன் செட்டி வீடு விழுந்திருச்சுனு என்னமோ காணாததைக் கண்டாப்புல பேசறாகளே, விழாம என்ன செய்யமுனு கேக்கிறேன். ஆச்சிக்குப் பஞ்ச பாண்டவராட்டம் அஞ்சு பிள்ளையக. அதில ரெண்டு சிறுவயசிலேயே தவறிப் போச்சு. மிச்சம் மூணு பிள்ளையக. பார்க்குறதுக்குத்தான் பெரிய செட்டியாராட்டம் ராச கம்பீரமாய் இருக்கும். மயித்தபடி படுமோசம் ஒரு சல்லி சம்பாரிக்யத் தெரியாது - ஆனாக்கா, அம்புட்டுச் சோக்கும் உண்டு, உங்க அப்பச்சி ஆடாத ஆட்டமா, நாடாத நாட்டமா! ஒரு ரூபாய் சம்பாரிச்சுக் கால்ரூபாய் செலவு பண்ணினார். நீ இருக்கிறதையில கரைக்கிறாய். பொம்பளை சோக்குப் பண்ண வேணாமுங்கலை. பண்ணு, ரதியாட்டமாய் ஒரு பொம்பளைய இஸ்டாக்காய் எடுத்து வச்சு மாதம் இம்புட்டுன்னு கொடு. ராசாவாட்டம் போய்வா. அதை விட்டுப்பிட்டு கண்ட கண்ட இடத்தில் எச்சிலைய நக்கிக்கிணு திரியிறது என்ன பொழப்பு? காரைக்குடிச் சுண்ணாம்புக்காரச் சந்திலயும், மதுரை மொட்டைக் கோபுரத் தெருவிலயும் போயி, டாப்பர் மாமாப்பயகளோட இளிச்சிக்கினு நிக்கிறியே, நிக்யலாமா... ம்ம், சுத்தக் கூதறையக...

     காரைக்குடியில ஒரு சோலியினு போயிருந்தேன் - அத நான் விலகிக்கிணு ஊர்ல இருக்கிற சமயம் - முதலாளி வீட்டுக்குப் போய்த்து வரணுமுனு நினைப்பு வந்திருச்சு. தாக்காட்டிப் பார்த்தேன். மனசைத் தகான் பண்ண முடியலை. சரி, போய்த்து வந்திருவமுனு புதுக்கோட்டைக் காரைப் பிடிச்சுப் போனேன்... பிள்ளையகத்தான் அப்படியினால், வீட்டுக்கு வந்த ஆச்சிமார் இருந்த இருப்பைப் பார்த்ததும் பத்திக்கிணு எரிஞ்சிரிச்சு. ஒரு ஆச்சி, வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிணு - நான்கூட முதக்கோசுல பார்த்ததும் யாரோ கைம்பொண்டாட்டியாக்குமுணு நினைச்சுப்பிட்டேன், அது இங்கிலீஸ் படிச்சதாம், இங்கிலீஸ் - செருப்புக் காலோட நடுவீட்ல திரியுது. இன்னொரு ஆச்சி, காரைக்குடிக்கி பிளசர் அனுப்பி பிரியாணிப் பொட்ணம் வாங்கியாந்து மேசைப் பலகாயில வச்சிக்கிணு அட்ணக்கால் போட்டாடி திங்கிது! அம்புட்டுப் பெரிய மாடமாளிகையில வந்தவனை ‘வா, இருன்னு’ சொல்றதுக்கு நாதியில்லை... பெரிய செட்டியார் உட்கார்ந்து சிம்ம கர்ச்சனை பண்ணுற திண்ணையில் குப்பை கூளம் குமிஞ்சு கிடக்குது. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் எதிர்க்கத் தொங்கின படம் - அதில செட்டியாரும் ஆச்சியும் இருக்காக. கல்கத்தா வங்காளி ஒருத்தனை தரவழைச்சு வரைஞ்சது - எங்கெயோ காணோம். வதிலுக்கு எவனோ ஒரு கழுதைக்கிப் பிறந்த பயலும் உதுத்த சிறுக்கி ஒருத்தியும் கட்டிப் பிடிச்சுக்கிணு இருக்கிறாப்புல படம் போட்ருக்கு- அவ இடுப்புக்கு மேல முக்காவாசி பப்ளிக்காய்த் தெரியிது. பாலசுப்ரமணியம் படத்தில் நூலாம்படை மண்டியிருக்க... வீடு விளங்குமா? விடாக்கண்டன் செட்டி வீடு விழாமல் என்ன செய்யுமுனு கேட்கிறேன்.

     மீசைக்கார முத்துராமன்னி ஒரு ஒம்பது ரூபாய் நோட்டுப் பயல் வந்து வாய்ச்சான். சுத்தச் சல்லிப் பயல். பம்பைத் தலையவும் கிருதா மீசையவும், வாத்தா வக்கான்னிப் பேசுறதையும் பாத்தா செட்டிப்பிள்ளையினு சொல்லவே முடியாது. பதினாறு வயசிலயே குடி கூத்தியான்னிப் பழகி மேலெல்லாம் பொத்து வடிஞ்சு சீப்பட்ட பய. மூத்தவருக்கு அவன் தான் மந்திரி பிரதானி. அந்தப் பய பாருங்க, இவரை அங்க இங்கயினு கொண்டுபோய் விழத்தாட்டி ஒரே கவுப்பாய்க் கவுத்துப்பிட்டான். ரெண்டு பேருக்கும் சதா மேமலைத் தமாசுக் கொட்டகையிலதான் இருப்பு. எப்பப் பார்த்தாலும் தண்ணி! பொம்பளை! சீட்டு!... பணம் தேவையின்னால் அக்கரை டாப்புக்கு எழுதுறதில்ல. அகப்பட்ட இடத்துல வாங்கிக்கிணு நீட்ற கடுதாசியில கையெழுத்தைப் போடுறது. தமாசுக் கொட்டகையிலதான் தோல்பெட்டி நிறையாப் பணமும் அச்சடிச்ச கடுதாசியுமாய் கழுகாட்டம் காத்துக்கிணு இருக்காங்யளே... இவர் இப்படியா, நடுவுள்ளவரு மெட்ராஸ்லயிருந்து நகழுறதேயில்லை. சட்டைக்காரி ஒருத்தியை எடுத்து வச்சிருந்தாராம். எந்த ஊர்ல குதிரைப் பந்தயமுன்னாலும் கிளம்பீருவாரு. கூடவே ஒரு வண்டிப் பயக இருப்பான். அம்புட்டுப் பயலுக்கும் இவர் செலவுதான். வீட்டுக்கு கணக்குப் பிள்ளைக்கி நாள் தவறாம பணம் பணமுனு தந்தி வந்த மணியமாய்த்தான் இருக்கும். கடைசிப் பையன் லண்டன்ல லாயருக்குப் படிக்கிறமுனு போனவர் அங்கேயே இருந்து போனார். அவர் செலவு இவுக ரெண்டு பேருக்கும் மேலே... மைனருக மூணு பேருமாய்க் கூட ஆடின ஆட்டத்தில் தீனா மூனா ரூனாத் தீனா அஸ்திவாரமே ஆடிப்போச்சு... அப்ப மேமலைத் தமாசுக் கொட்டகைக்கி மலையாளத்திலயிருந்து மூணு குட்டிகளோட ஒரு தடிமாட்டுச் சிறுக்கி வந்து சம்பாரிச்சுக்கிணு இருந்தாள். அந்த மூணு உருப்படியிலயும் மூத்தவர் புழக்கம். அவளுக சொல்லிக்கிறது, நாங்க செமீந்தார் வீட்டுக் கும்பமுனு. அதைக் கேட்டுச் செட்டி மகனுக்குத் தாங்கலை. செமீந்தார் வீட்டுப் பொம்பளைகளோட தொடுப்பாயிருக்காராம் இழவு மகன்! என்னடாயிது, செமீந்தார் வீட்டுப் பொம்பளையிங்கிறாளே, செய்யிறது மேற்படி தொழிலாயிருக்கேன்னி நினைச்சுப் பார்த்தாதானே. கேப்பையில நெய் ஒழுகுதுன்னால் கேட்கிறவனுக்குப் புத்தி எங்கே போச்சு. அவளுக கேக்கக் கேக்க ஆயிரமாயிரமாய் வீசி எறிஞ்சார். ரெண்டாவது குட்டிக்கி வயிரத்திலேயே அரசிலை கூடச் செஞ்சிப் போட்டாராம். அப்புறம், மதுரைக் குசவபாளையத்தில் தெருவில நின்னு சம்பாரிச்சவ ஒருத்தி - நல்லாச் சிவத்தத் தோல்காரியாய் பிடிச்சாந்து, அவளுக்குப் பிராமண வீட்டுப் பேச்சுக அஞ்சாறைப் பாடம் பண்ணி, ‘இது புதுத்தெரு வக்கீலய்யர் மகள், ஒங்க மேல காதல் கொண்டிருக்கு’ன்னி சொல்லிப் பிணைச்சுவிட்டு வெகு பணத்தைக் கறந்துபிட்டாங்ய. அவங்களுக்கென்ன, எவன் பெண்டாட்டி எவன் கூடப் போனாலும் லெவைக்கி அஞ்சு பணமுனு கமிசன் காசும் வெட்டுத்தட்டும் பாக்கிற பயகதானே... வீசுவீசுனு வீசுறதுக்கு எம்புட்டு நாளைக்கி வெண்ணிலையாப் பணம் கிடைக்கும்? நோட்டு மேல பணம் கொடுக்கிறவுக நிறுத்திப்பிட்டாக. செட்டிய வீட்ல சொத்துச் சுதந்திரத்தை வச்சு வாங்கக் கூச்சம். அப்பத்தான் நாட்டரசன் கோட்டைச் சின்னக்கண்ணு பிள்ளை இருக்காரே மலை முழுங்கி மகாதேவன், அவர்ட்டப் போயி மாட்டினார். கேக்கக் கேக்கப் பணத்தைக் கொடுத்து ஒண்ணு பாக்கியில்லாமல் எழுதி வாங்கிப்பிட்டாரு சீனா... தம்பிமார் ரெண்டு பேரும் என்ன ஏதுன்னிக்கூடக் கேட்கிறதில்லை. இவர் இங்கெயிருந்து அனுப்புற தஸ்தாவேசுகளில் எல்லாம் அட்டியில்லாமக் கையெழுத்துப் போட்டு அனுப்பிப்பிடுறது. அவுகளுக்கு அந்நேரம் செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கிடைச்சா போதும்... முத முதல்ல உத்தனூர் வயல், முல்லையாத்துப் பாசனத்தில் ஒரே தோப்பாய் நூத்தி எம்பத்தேழு ஏக்கரா, பிறகு மதுரை மேலமாசி வீதி, கீழமாசி வீதி, வடக்கு வெளி வீதி, கீழமாராட்டு வீதியில கடையும் வீடுமாய் நாப்பத்தி மூணு உருப்படி, அப்புறம் புதுக்கோட்டை, திருச்சி, மெட்ராஸ் சொத்துக...

     ஊர்ல, இப்படி இருக்குதா. அக்கரை டாப்புச் சங்கதியக் கேளுங்க... சபாநாயகம் பிள்ளையினு ஏழுங்கவாணிப் பய ஒருத்தனுக்குப் பவர் கொடுத்துக் கோலாலம்பூர் கடைக்கி அனுப்பிச்சாக. அவன் வடக்கத்தியான். என்னமோ ஒரு சாதியிம்பாக. அந்த மொல்லமாறிப் பய பாருங்க, சொந்தம் மகன் பெண்டாட்டியை மூத்தவருக்கு சாயிண்டு பண்ணி விட்டுட்டான். அப்புறம் கேக்கணுமா? அவன் வச்சதுதான் சட்டம். வாளியில சுண்ணாம்பைக் குழைச்சிக்கிணு செட்டி மகனுக்கு போட்டான் ஒரு ராமம்! இதைப் பார்த்துக்கிணு பினாங்கு ஏசண்டு சும்மா இருப்பானா? அவன் அண்டாவுல குழைச்சிக்கிணு நல்லா அரியக்குடி ராமமாய்ப் போட்டுவிட்டான். அப்புறம் ஈப்போ கடையில், மலாக்காக் கடையில, செரம்பான் கடையில, மூவார் கடையில, சத்தியவான் கடையில, அலோர்ஸ்டார் கடையிலயினு அம்புட்டுப் பயலும் கொளுவீட்டாங்ய. கண்மூடிக் கண் திறக்கலை, எட்டுக் கண்ணும் விட்டெரிஞ்ச தீனா மூனா ரூனாத் தீனா மார்க்கா மாயமாய் மறைஞ்சு போச்சு. அன்றைக்கிக் கோலாலம்பூர்ல தீனா மூனா ரூனாத் தீனா மார்க்கா இருந்து, ஐயாயிரம், பதினாயிரம், அம்பதாயிரம், கித்தாத்* தோட்டம், ஈயலம்பம், வீட்டுத்தோப்பு கன்னிபேச்சு நடந்த கிட்டங்கியில இன்றைக்கிப் பத்து கொடுத்துப் பதினஞ்சு வாங்குற நாள் கிஸ்திக்காரங்கயளாய் ஒரு கடைப்பய பெட்டியடி போட்டிருக்கானாம்... மார்க்கா என்ன செய்யும், பாவம்! முதலாளி சரியில்லையே, முதலாளி சரியில்லையே...

     * கித்தா - ரப்பர்

     எங்க செட்டியாருடைய ஐயா கோலாலம்பூர்ல கடை தொடங்குறப்ப, இங்கின ஒண்ணு, அங்கின ஒண்ணுன்னி வெறும் குடிசையகதானாம். எங்கெ பார்த்தாலும், சகதி. கொசு உபத்திரியம் தாங்க முடியாதாம். கோலாலம்பூர் கடையில ஒரு படம் தொங்குச்சு பாருங்க, செட்டியார் மலாய் டாப்புக்கு வந்திருக்கச்சே அரிசித் தவ்க்கே டின்னர் விருந்து கொடுக்கையல எடுத்தது. எங்க செட்டியார்; சாட்டர் வங்கிப் பெரிய தொரை; உங்கஞ்சங்காய் வங்கி அக்கவுண்டன் தொரை - பெரிய தொரை அன்றைக்கி ஊர்ல இல்லைபோல இருக்கு; ஆயர்மானீஸ் தோட்டத்துக்குத் தமிழன் தொரை அவர் நம்ம பாசையில பாட்டு கீட்டெல்லாம் படிப்பாரு; தெங்கு மக்டூம்; எட்டு - மாடி வீட்டுத் தவ்க்கே மகன் இளையவர் - அவர் தான் அமெரிக்க லேடியக் கட்டியாந்தவர் - ஆக ஆறு பேரும் குரிச்சியில் இருக்காக. அரிசித் தவ்க்கே உப்புத் தவ்க்கே, மயில் சாப்புத் தவ்க்கே, புடைவைக் கடை லீலாராம், லாயர் சித்தம்பலம், நாகூர் மரக்காயர், சங்வீ டாக்கட்டர், இன்னும் மனுசாதி மனுசனெல்லாம் பின்னாடி நிக்கிறாக. அரிசித் தவ்க்கே இருக்காரே, அவருக்கு அப்பவே நாப்பதம்பது கோடி தேறும். இப்ப, நம்ம செட்டிய வீட்டுப் பணத்தை எல்லாம் வழிச்சள்ளினாலும் அணைபோட முடியாது. ஆதியில அவர் சீனத்தில இருந்து கட்ன துணியோட வந்து காவடி கட்டிச் சோறு வித்தவர். பிறகு கோப்பிக் கடை போட்ருக்காரு. ஊர் மளமளப்பான சமயம். என்னமோ தெரியலை, வங்குசாக்கடை வைக்கணுமுனு ஆசை வந்திருச்சு. கையில கொஞ்சம் பணம் இருக்க, மேக்கொண்டு செட்டிய வீட்ல வாங்கலாமுனு முதமுதல்ல தீனா மூனா ரூனாத் தீனா கிட்டங்கிக்கி வருறார். அப்பக் கோலாலம்பூர்க் கடையில ஏசண்டுக்கு கொண்டு வித்தவர் ‘மூத்தரக்குண்டி’ ராமன் செட்டியார் - அவர் மகன்தான் செட்டிப் பிள்ளைகள்ள முதமுதல்ல அரியோம்னி* டாக்க்டருக்குப் படிச்சு பாஸ் பண்ணினவர். ஏசண்டு ஊர்ல இல்ல. பெரிய அடுத்தாள் கருப்பணபிள்ளை - மறவ வீட்டாளு - பெட்டியடியில் இருக்கார். அப்ப மலாய் டாப்புக்கு வந்திருந்த செட்டியார், மயித்த கடைகளை எல்லாம் கண்ட்ரோல் செய்து செக்கிங் பண்ணிப்பிட்டுக் கடோசி லாஸ்டுல கோலாலம்பூருக்கு வந்தவர் குரிச்சியில் இருக்காராம். அரிசித் தவ்கேக்கி அப்ப இளம் வயசு. தலைமயிர் இரும்புக் கம்பியாட்டம் நட்டமாய் நிக்யுமாம். தவணைக்கிப் பணம் கேட்கிறார். எம்புட்ரா வேணுமுங்கிறார் கருப்பண பிள்ளை. சின்னத் தொகையாச் சொல்றார் அரிசித் தவ்க்கே. தீனா மூனா ரூனாத் தீனாவில் வட்டிக்கி ஆசைப்பட்டுச் சின்னத் தொகைகளோ வெண்ணிலையாவோ கொடுத்து வாங்குற பழக்கமில்லை. இல்லையிடா போடான்னிட்டார். கருப்பண பிள்ளை வீடு வாசல் காணி கரையோட ஊர்ல சேமமாயிருக்கார்! பிள்ளையகதான் எல்லாம் ஆகாவளியா திரியிதுக... வயசாயிப் போச்சு. நடக்கக் கொள்ள முடியாது. எல்லாம் இருந்த இடத்திலேயேதான். இன்னைக்கி கேட்டாலும் அரிசித் தவ்க்கே முதமுதல்ல தீனா ரூனாத் தீனாவுல வந்து பசக்குப் பசக்குணு முழிச்சிக்கிணு பணம் கேட்டதைக் கதை கதையாய் சொல்வார். அரிசித் தவ்க்கேயும் எப்பவாச்சும் கோலாலம்பூர் கடைக்கி வந்தார்னால் ‘கிராணி மோப்பிங் ஊர்ல நல்லாருக்காரா’னு தவறாமல் விசாரிப்பார் - கருப்பண பிள்ளைக்கு முகமெல்லாம் அம்மைத் தழும்பு...

     * ஹரி ஓம்

     அரிசித் தவ்க்கே அன்றைக்கி நரி முகத்தில் முழிச்சிட்டு வந்திருப்பார் போலயிருக்கு. பேரேட்டைப் புரட்டிக்கிணு இருந்த செட்டியார் ஏறிட்டுப் பார்த்தாராம். அரிசித் தவ்க்கேயும் எதிரிச்சிப் பார்த்திருக்கார். செட்டியார் என்ன நினைச்சாரோ என்னமோ தெரியலை. ‘சீனன் என்னடா கேட்கிறான்’னிட்டார். அரிசித் தவ்க்கேக்கி சீதேவி மாலை போட வந்திட்டாள். யாரால தடுக்க முடியும்?’ - செட்டியார் இருக்காரே, ஆசாமிக்காரன் யாரு, பத்து வரவு என்னன்னி கேட்கிற பழக்கமேயில்லை. கணக்கைப் பார்க்கிறதோட சரி. இன்னொண்ணு, கடேசி வரை அவருக்கு மலாய் பாசை தெரியாது. கருப்பண பிள்ளை விசயத்தைச் சொன்னதும், அரிசித் தவ்க்கே முகத்தைப் பழையபடி ஒரு செக்யண்டு பார்த்துப்பிட்டு, ‘துடியான பயலாருக்கானடா, கொடுரா, போயித்துப் போகுது’ன்னிட்டார். அப்ப இருந்து அரிசித் தவ்க்கேக்கி ஒரே ஏத்தம்தான். ஏத்தமுன்னா ஏத்தம் இப்படி அப்படியினு சொல்ல முடியாது. அவர் நாணயத்தைப் பார்த்து எந்நேரம் எம்புட்டுக் கேட்டாலும் அட்டியில்லாமக் கொடுத்தாக... வங்குசாக் கடை வச்சார், அரிசி வியாபாரத்தில நுழைஞ்சார் - யாரும் எதுத்து நிக்ய முடியலை. மலாய் டாப்பு பூராவும் ஏகபோகமாகிப் போச்சு. கித்தாத் தோட்டம், ஈயலம்பம், வீட்டுத் தோப்புகன்னி ஊர் ஊராய் வளைச்சார். சொந்தத்தில் கப்பல் விட்டார். உங்கத்தில* மில்லுக கட்டினார். சங்காயிப் பட்டணத்தில, பதினெட்டுத் தொப்பிக்காரன் தேசங்களிலயும் இப்படி இல்லையிங்கிறாப்புல முப்பத்தி ரெண்டு மாடி ஓட்டல் விடுதி கட்டினார். இம்புட்டுக்கு ஆகியும் பாருங்க, பழைய விசுவாசம் போகலை. கடேசிவரை எங்க செட்டியாரைத் ‘தவ்க்கே புசார்’னுதான் சொல்லுவார்...

     * உங்கம் - ஹாங்காங்

     செட்டியார் காலமாகிற சமயம், உலாந்தா கவர்மெண்டோட என்னமோ தகராலாகி, கவுணரோட மீட்டங்கி பேசுறதுக்காக வந்தாவியா போயிருந்தாராம். செட்டியார் பிழைக்க மாட்டார்னு கோலாலம்பூருக்குத் தந்தி வந்திருக்கு - அப்ப, நான் பினாங்குக் கடையில இருக்கேன் - உடனே அரிசித் தவ்க்கே கம்பேனியிலிருந்து அர்ச்சண்டு போட்டு வந்தாவியாவுக்குச் சொல்லிப்பிட்டாக. சேதியக் கேட்டதும் அங்கயே உலாந்தா கவர்மெண்டு மாறலாய் பெசல் ஏரப்ளான் பிடிச்சு, அரிசித் தவ்க்கே நம்ம ஊருக்குப் போறார். ஏரப்ளான் கல்கத்தாவிலிருந்து புறப்படுது. செட்டியார் காலமாகிவிட்டார்னு இங்கெ தந்தி வருது. அரிசித் தவ்க்கே மெட்ராஸ் போய் இறங்குறார். அதுக்குள்ள இங்கிருந்து சாட்டர் வங்கி ஆடர் போயி, மெட்ராஸ்ல பிளசர் பிடிச்சு, பூச்செண்டு மாலையாக, பட்டு வேட்டி பீதாம்பரம், சந்தனாதி வாசனைத் திரவியங்களெல்லாம் வாங்கி வச்சு ரெடிமேடாய் காத்துக்கிணு இருக்காக.

     ஊர்ல போயி இறங்குறார். செட்டியார் உடல் சந்தனக் கட்டையில செகசோதியா எரியிது. மயானத்தில் அரிசித் தவ்க்கே அவுக பாசையில என்னென்னவோ சொல்லிப் புலம்பிக்கிணு அழுத அழுகையைச் சொல்லி முடியாதாம். பிறகு, காரைக்குடி போய் கொப்பாத்தாளுக்கும்*, பழனி போயித் தண்டாயுதபாணிக்கும் செட்டியார் பேரில் அபிசேக அர்ச்சனையக நடத்தித் தான தருமங்களெல்லாம் பண்ணிப்பிட்டுத் திரும்பியிருக்கார்... அப்புறம், தீனா மூனா ரூனாத் தீனா நாலு பக்கமும் ஆட்டம் கொடுக்குதுனு ரூமர் தெரிஞ்சதும், அரிசித் தவ்க்கே, செட்டியார் மகன் மூத்தவருக்குத் தந்தி மணி பதினாயிரம் அனுப்பி, ‘ஒண்ணும் யோசிக்காதே, எத்தினி லெச்சமின்னாலும் நான் கட்றேன், உடனே புறப்பட்டு வா’ன்னி தந்தி மேல தந்தி அடிக்கிறாராம், வதிலே இல்லை. பெரிய மானேசர் வந்து வதிலில்லையினு சொன்னதும் அரிசித் தவ்க்கே என்னமோ ஏதோன்னி பதறிப்போயி, கல்கத்தாவில் இருக்கிற சீனக் கவுண்சலுக்குத் தந்தி சொல்ல அவர் இந்தியா கவர்மெண்டோட கலந்துபேசி, எல்லாருமாய்க் கூடி ஊரு உலகம் நாடு நகரமெல்லாம் தேடு தேடுன்னி தேடுறாக. செட்டி மகனைக் காணோம். எவளோ ஒரு எடுபட்ட முண்டையை இழுத்துக்கிணு போயி ஊட்டியிலயோ கூட்டியிலயோ அமுங்கிப் போனார். போன சீதேவி திரும்பி வந்து சோவியாச்சி# பெத்த பட்டத்து மகனை எங்கே எங்கேயினு தேடித் திரியிறாள். அவர் மூதேவி கழுத்தைக் கட்டிக்கினு விழுந்து கிடக்கார். யார் என்னத்தைச் செய்து என்ன ஆகுறது. டயன் முடிஞ்சு போச்சு, அம்புடுத்தான். வேலாயுதம்! ஞானப் பண்டிதா!

     * காரைக்குடி கல்லுக்கட்டில் கோயில் கொண்டிருக்கும் கொப்புடை நாயகி அம்மன்
     # சிவகாமி ஆச்சி

     தீனா மூனா ரூனாத் தீனா மார்க்காவைப்போல ஒரு கடை இனிமேல் இல்லை! விடாக்கண்டன் செட்டியாரைப் போல ஒரு முதலாளி இனிமேல் இல்லை. சிவகாமி ஆச்சிபோல ஓர் உத்தமியை இனிமேல் காணக் கிடைக்காது...! அம்புட்டுப் பெரிய சீமான் பொண்டாட்டிக்கி நானுங்கிற ஆங்காராம் கொஞ்சமாச்சும் உண்டா... ஏழை எளியதுக மனசு நோகுறாப்புல ஒண்ணு சொல்லுவாகளா, செய்வாகளா... ம்ம்... அதையெல்லாம் இப்ப நினைச்சு என்ன ஆகுறது... அவகளுக்குப் பெத்த பிள்ளைக்கும் சம்பளக்காரனுக்கும் வித்தியாசம் தெரியாது. மயித்த முதலாளியாக வீட்ல மாதிரி தன் வகைக்கி ஒரு சாப்பாடு, பிறத்தியானுக்கு ஒரு சாப்பாடுங்கிறது ஆச்சி காலம் வரை கிடையாது. செட்டியாருக்கு என்ன சாப்பாடோ அதுதான் எல்லாருக்கும்... சிவகாமி ஆச்சி காலமெல்லாம் போச்சு, போயே போச்சு. இப்பத்தான் எல்லாம் சகட்டு மேனிக்கு ஈரோப்பியன் பிளானாய் தலையில கோண வகிடு எடுக்கிறதும், முகத்தில புட்டா மாவை அப்பிக்கிறதும், சம்பர் ரவிக்கை போடுறதும் கால்ல செருப்பை மாட்டிக்கினு டக்கு புக்குன்னி திரியிறதுமாய் ஆகிப்போச்சே. இப்பப் பாருங்க, ரெம்பப் படிச்சவுக, பணக்காரவுக வீட்டுப் பொம்பளையக பிள்ளைக்கிப் பால் கொடுக்கிறதைக்கூட நிறுத்திப்பிட்டாகளாம்! ஏன்னி கேட்டால், உடம்பு கட்டு விட்டுப்போகுதாம். என்ன உடம்போ! என்ன பிறவியோ...!

     தீனா மூனா ரூனாத் தீனாவிலயிருந்து விலகிக்கினப்புறம் பெரிய பெரிய கடைகளுக்கெல்லாம் கூப்பிட்டாக, எனக்கு மனசில்லை. ஊர்லயே ஒரு கடைய வச்சிக்கிணு இருக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள மைடான்ல இருந்து எங்க அம்மான், ‘இங்க வந்து தொழில் நடத்து, அப்படிச் செய்யிறேன் இப்படிச் செய்யிறேன் மணலைக் கயிறாத் திரிச்சிப்பிடலாம்’னு எழுதினார். வந்தேன். ஒண்ணும் சுகப்படலை. எனக்குச் சில்லறையாகக் கொடுத்து வாங்கிப் பழக்கமில்லை. காலமெல்லாம் தீனா மூனா ரூனாத் தீனாவிலயே கழிந்து பெருங்கொண்ட போடாய்ப் பழகிப் போச்சு. ஊரும் புதுசு... அதோட எனக்கு டயனும் சரியில்லையினுதான் சொல்லணும். மயித்தவுகள்ளாம் சம்பாரிக்யலையா... கொண்டு விக்யக் கிளம்பயில பதிமூணு வயசு. இந்த நாப்பது வருசத்தில் ஊர்ல இருந்தது பத்துப் பன்னெண்டு வருசங்கூடத் தேறாது. பயக ரெண்டு பேரும் பர்மா டாப்புல கொண்டு விக்கிறாங்ய. அவங்ய சங்கதி எப்படி இருக்கோ என்னமோ தெரியலை - எல்லாத்துக்கும் தண்ணிமலையான் இருக்கான்னி இருக்கேன். ரெண்டு பொம்பளைப் பிள்ளைக்கிக் கலியாணம் முடிஞ்சிருச்சு. சின்னக்குட்டி அமுர்தம் ஆத்தா கூட வீட்ல இருக்கு. இந்தக் கணக்கோட எல்லாத்தையும் ஓரிசு பண்ணிக்கிணு ஊர்லயே இருந்தூர்ரதினு திட்டம். அதுக்குள்ள இந்தச் சண்டை யெழவு சனியன் வந்து சேர்ந்திருக்கு... இங்கின கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்... ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா... நாமள்தான் அக்கரையில் என்னமோ கொட்டிக் கிடக்குதுனு வந்து இப்படி லாலாயப்படுறம். ஆண்டவன் புண்ணியத்தில் கொஞ்சம் காணிகரை இருக்கு. வீட்ல இருந்துக்கிணே பசியாமல் சாப்பிடலாம். ஆம்பிள்ளையக மூணு பேரும் இப்படி அக்கரையில திரியிறமேன்னு நினைச்சாதான் கவலையாயிருக்கு... அதையெல்லாம் காட்டியும் ஒரு வாதனை ராத்திரியாப் பகலா ரம்பம் போட்டு அறுக்கிறாப்புல நெஞ்சை அறுத்துக்கிணே இருக்கு. பயணம் புறப்பட்டு வரச்சே சின்னக்குட்டி அமுர்தம்... உடும்புப் பிடியாப் பிடிச்சுக்கிணு வளவி* செய்து போடச் சொல்லிச்சு. நான் கோபத்தில தடிமாட்டுத்தனமாய்ப் பிள்ளைய அடிச்சுப்பிட்டேன். அதை நினைச்சாதான் மனசு வாதனைப்படுது.

     * (தங்க) வளையல்

     பயண நேரத்தில் மகள் அமிர்தம்: “அப்பூ எனக்கு வளவி செஞ்சி போடுங்கப்பு.” இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு நச்சரித்தாள். ஆண்டியப்ப பிள்ளை என்னென்னவோ சமாதானம் சொன்னார். மகள் கேட்கவில்லை. விடாப்பிடியாய் அழுது சிணுங்கினாள். கோபம் பொறுக்காமல் அதட்டி அடித்துவிட்டார்.

     அமிர்தம் தரையில் விழுந்து காலை உதறி அலறிப் புரண்டு துடிக்கிறாள். “அப்பூ! எனக்கு வளவியப்பு... அப்பூ! எனக்கு வளவிஇஇ.”

     ஆவன்னாவின் கண்களில் நீர் அரும்பியது. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். கண்ணீர் முத்து முத்தாய்த் திரண்டு கன்னங்களில் உருண்டது. வாய் புலம்பிற்று:

     “சண்டாளப் பாவிப்பயல் நான் என்னத்துக்குக் கடல்ல தண்ணியில திரிஞ்சு சம்பாரிக்யணும்... பெத்த பிள்ளைக்கி வளவி செய்து போட மனது வரலையே. இனிமே என்னைக்கிப் போயி அதைப் பார்க்கப் போறேன்!”

     கண்களிலிருந்து தாரைதாரையாய் நீர் வழிந்தது. இரு கைகளாலும் துண்டைப் பற்றி எடுத்து முகத்தை மூடிக்கொண்டார்.

     அமிர்தம் தரையில் கிடந்து அழுது புரள்கிறாள்.

     “அப்பூ! எனக்கு வளவிஇஇ... அப்பூ! எனக்கு வளவிஇஇ...”

     மனைவியும் மூத்த புதல்விகள் இருவரும் தேறுதல் சொல்கிறார்கள்.

     “என் தங்கமுல, நல்ல பிள்ளையில, எந்திரியம்மா, அப்பு தொலைக்கிப் போய்ட்டு வந்து, கைக்கி அஞ்சஞ்சு வளவி செஞ்சு போடுவாக... எந்திரியம்மா. சாயந்திரம், சீனி செட்டியார் கடைக்கிப் போயி, நல்ல நல்ல வளவியா வாங்கிப் போடுவம், என் தங்கமுல, கண்ணுல! எந்திரியம்மா... ‘அப்பு, போயித்து வாங்கப்புன்’னு சொல்லிக்கியம்மா, நேரமாகுது.”

     அமிர்தத்தின் சின்னஞ்சிறு பிஞ்சு உடல் தரையில் உருண்டு புரள்கிறது. கேவிக்கேவி அழும் குரல் காதைத் துளைக்கிறது.

     “அப்பூ! எனக்கு வளவிஇஇ... எனக்கு வளவிஇஇ... அப்பூ! எனக்கு வளவிஇஇ...”

     பிள்ளையவர்களின் நெஞ்சு பிளந்து, கதறல் கிளம்பியது.

     “சத்ராயிப்பலே! உனக்கு என்னத்துக்குடா பிள்ளை குட்டி? பிள்ளையருமை தெரியாத தடிமாட்டுப் பலேஎஎ.”

     வலக்கை சடார்சடாரென்று உச்சந்தலையில் அடித்தது. உடல் குழுங்கித் துடித்தது.

     “அயித்தான்! அயித்தான்! மனசை விட்ராதியக அயித்தான்!” நல்லகண்ணுக் கோனாரின் அரண்ட குரல் அலறிற்று. “ரெண்டு மாசத்தில சண்டை சாடிக்கையெல்லாம் தீந்திரும். அழகு நாச்சியா புண்ணியத்தில ஊர் போயி, பிள்ளை குட்டிகளுக்கு ஆசை தீர எல்லாம் வாங்கிப் போடலாம்.”

     பிறர், முகமூடியிட்ட உருவம் ஓசையின்றி அழுவதைக் காணச் சகிக்காமல், தலைகுனிந்து இருந்தனர்.

     ஆவன்னாவின் உடல் குலுக்கம் கொஜ்சம் கொஞ்சமாய்க் குறைந்து மறைந்தது. முகத்தை மூடியிருந்த துண்டு நழுவி மடியில் விழுந்தது.

     “மனசை நொந்து என்ன செய்ய... நம்ம தலை எழுத்து.” கண்களைத் துடைத்தார். “சரி, படுப்பம், வேலாயுதம்! ஞான பண்டிதா!”

     படுக்கைகளில் சாய்ந்தார்கள்.

     தொங்கான், பினாங் துறைமுகத்தைத் தேடிச் சென்று கொண்டிருந்தது.