அரும்பு

14. பினாங்

     சீனி முகமது ராவுத்தர் கடை.

     தடித்த கண்ணாடித் தகடு போட்ட மேசைக்குப் பின்னே உட்கார்ந்து சிட்டையில் எழுதிக் கொண்டிருந்த ஊதாத் தொப்பிக் கணக்கர் வரவேற்றார்.

     “சலாம். மைடானிலிருந்து வருகிறேன். பீயன்னாக் காவன்னா கடை.”

     “சலாம், இரிங்ய.” அப்துல்காதர் எழுந்து பக்கத்தில் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டான். “ஏய் காசிம்! தண்ணி கொண்டா, ஓடு... இரிங்ய, படகுல வந்தியங்யளா, பயணம் எப்படி?”

     “படகில்தான், பயணம் பரவாயில்லை. பெரியவுக இருக்காகளா... முதலாளி கடிதம் கொடுத்து விட்டிருக்கிறார்.”

     “வாப்பா மேல இருக்காக, சொல்லி அனுப்பலாம்.”

     பாண்டியன் உறையை எடுத்து மேசையில் வைத்தான். பிரிப்பதற்காக அதைத் தூக்கிய அப்துல் காதர், பிரிக்காமலே கீழே வைத்தான் - தலைப்பில் ‘தனது பார்வை’ என்று எழுதப்பட்டிருந்தது.

     தட்டில் தேநீர்க் கூஜாவையும் பைகளையும் கொண்டு வந்து வைத்தான் காசிம்.

     “இந்தாம்பிளா, இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னி போடு. இந்த பெட்டி படுக்கை எல்லாத்தையும் மேலே கொண்டு போ. வாப்பாகிட்ட மைடான் பீயன்னாக் காவன்னா கடையில இருந்து இவுஹ வந்திருக்காஹனு சொல்லு.”

     “வெந்நீர் வேண்டாம். பச்சைத் தண்ணீரே போதும்.”

     “நல்லாக்கிதே, கப்பல் அலுப்புக்கு...” கணக்குப் பிள்ளை குறுக்கிட்டார்.

     “சரி.”

     தேநீர் அருந்தினார்கள்.

     சிறுவன் வந்து கூஜாவையும் கோப்பைகளையும் எடுத்துச் சென்றான்.

     கட்டை மிதியடி மரப் படிக்கட்டில் இறங்கி வரும் ஓசை கேட்டது. நரைத்த நீண்ட தாடியும் வழுக்கச் சிரைத்த தலையில் ஒட்டிப் படிந்த வெள்ளைத் துணித் தொப்பியுமாய் ராவுத்தர் வந்தார்.

     “சலாம்” பாண்டியன் எழுந்தான்.

     “சலாம், சலாம், இரிங்ய தம்பி, இரிங்ய” உட்கார்ந்தார். “ஏப்பா தம்பிக்குத் தண்ணிக் கொண்டாரச் சொல்லு.”

     “இப்பத்தான் தேத்தண்ணி குடிச்சோம்.” பாண்டியன் உட்கார்ந்து கடித உறையை எடுத்து நீட்டினான்.

     “வென்னி போடச் சொன்னியா?” உறையை வாங்கிப் பிரித்துக் கடிதத்தை எடுத்துக் படிக்கலானார்.

     “ஆகுது.”

     ராவுத்தர் கடிதத்தை மடித்து உறைக்குள் போட்டு, பெட்டகத்தில் வைக்கும்படிக் கட்டி, மகனிடம் நீட்டினார்.

     “ஒன்பது நாள் சபரா?”

     “ஆம், இடையில் காற்று அடித்ததில் சுணங்கி விட்டது. கொஞ்சம் சரக்கைக் கூடக் கடலில் எறிந்து விட்டோம்.”

     “இன்ஷால்லாஹ், நல்லபடியாய் வந்து சேர்ந்ததே போதும். பணம் என்றைக்கும் தேடிக்கலாம்...”

     ‘மைடான் ஆள்’ பற்றிக் கேள்விப்பட்டு வந்து கூடிய கடை ஆட்களும் வங்குசாக் கடைக்காரர்களும் மைடானில் உள்ள உற்றார் உறவினர் பற்றித் தகவல் கேட்டார்கள். சொன்னான். குண்டு வீச்சு, கொள்ளை பற்றிப் பேச்சுக் கிளம்பி நீண்டு கொண்டிருந்தது. ராவுத்தர் செருமினார்.

     “தம்பி, நேரமாகுது, முதல்ல குளிச்சிப் பசியாறுங்க.”

     மைடான் ஆளைப் பார்க்க வந்த கூட்டம் கலைந்தது.

     பாண்டியனை உள்ளே குளியல் அறைக்கு அழைத்துச் சென்றான் அப்துல் காதர்.

     “தானா மேரா எஸ்டேட் கிராணி மாணிக்கம் என்பவருக்கு நண்பர் கடிதம் கொடுத்து விட்டிருக்கிறார். கோலக்கங்சார் அடுத்தாள் ஒருவர் பற்றியும் விசாரிக்க வேண்டும்.”

     “ரப்பர் தோட்டங்கள் எல்லாம் லாலான்புல் மண்டிக் கிடக்கின்றன... மாணிக்கம் எனக்குப் பள்ளித் தோழன். இப்போது இங்கே ரேடியோ நிலையத்தில் வேலை செய்கிறார். அப்புறம் பார்க்கலாம்... கோலக்கங்சாரில் எங்கள் கடை இருக்கிறது. நாளை நின்று கணக்குப் பிள்ளை போவார். விசாரிக்கச் சொல்வோம்.”

     மாலையில் பாண்டியனும் அப்துல் காதரும் வெளியே கிளம்பினார்கள். செட்டித் தெருவிலும், குறுக்கிட்ட மார்க்கெட் தெருவிலும் குண்டு வீச்சில் இடிந்த கட்டிடங்கள் குட்டிச் சுவராய் நின்றன. லேவாதேவிக் கிட்டங்கிகள் சிலவற்றில் பலசரக்கு மூடை அடுக்குகள் தென்பட்டன.

     “அத்தா! எங்கு பயணம்!” ஆனாச் சீனா வானா யீனா மார்க்கா கிட்டங்கியைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கிய அடுத்தாள் செல்லையா கேட்டான்.

     “என்னாம்பிளா, பார்த்தாக்கா அசல் வங்குசாக் கடைக்காரன்லாம் பிச்சை வாங்கணும் போல இருக்கு. வட்டிக்கடை ஆளுக்கெல்லாம் எங்களுக்குப் போட்டியாக கிளம்பீட்டிங்ய... சித்தப்பா போய்ட்டாஹளா!”

     “உங்கள் கடைக்கு வந்தவர் அப்படியே வீட்டுக்குப் போயிருப்பார்.”

     இரண்டொரு அடுத்தாட்களும், பலசரக்குக் கடை முஸ்லீம்கள் சிலரும் கடந்து மேற்கே சென்றனர். எதிர்வரிசைக் கடைகளில் பூட்டை மாறிமாறி இழுத்துச் சரிபார்க்கும் ஓசை கேட்டது.

     “சுமத்ராவிலிருந்து எங்களுக்கும் சரக்கு வந்திருக்கிறது. இவர் பாண்டியன், இன்றுதான் மைடானிலிருந்து வந்தார்.”

     செல்லையாவும் பாண்டியனும் கைகூப்பி முறுவலித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

     “இவன் செல்லையா, இவுக முதலாளி எங்களுக்கு ரொம்ப வேண்டியவர். எனக்குச் சித்தப்பா முறை. என் தங்கச்சிய - சித்தப்பா மகளை இவனுக்குத்தான் கட்டிக் கொடுக்கப் போகிறோம்.”

     “சரி சரி நடம்பிளா, கதை சொன்னது போதும்.”

     மேற்கே நடந்தார்கள். கடைகள், குட்டிச் சுவர்கள். தண்டாயுத பாணி கோயில் தேர் வீடு அரைகுறையாய் நொறுங்கிக் கிடக்கிறது. அசனுசன் கடை இருந்த இடமே தெரியவில்லை. சூலியா* தெரு, வடக்கே திரும்பினார்கள். சையது கடை திறந்திருந்தது. உள்ளே பலகாரத் தட்டுகள், தேநீர்க் கோப்பைகள் அலறின. மூன்று சகோதரர்களும் பரிமாறுகிறார்கள். இடையிடையே சமையல் கட்டுக்குக் கச்சாத்து தெரிவிக்கப் படுகிறது. “ஆப்பம் - கோழிக் கறி மூணு...! தோசை - மீன்கறி ரெண்டு! இடியாப்பம் - தேங்காய்ப் பால் அஞ்சு!”

     * சூலியா - சோழன், சீனமொழியில் ட்ஜூலியன், சோழ நாட்டாரைக் குறிக்கும் சொல்லாக மாறி பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கியது.

     மர வரிசை நடுமேடையுடன் தூங்கி வழிந்த பிட்தெரு குறுக்கிட்டது. கருங்குருவிகள் மரக்கிளைகளை மொய்த்தும், தந்திக் கம்பிகளின் மேலும் கீழுமாய்ப் பறந்தும் கரைந்தன. கப்பித்தான் மசூதிப் புறாப் பட்டாளம் குமுகுமுத்தது.

     “பேச்சாவில் போகலாம்”- அப்துல்காதர் நின்றான்.

     “நடக்கலாம், தொங்கானில் இத்தனை நாள் அடைப்பட்டுக் கிடந்ததற்கு...”

     “நடக்கலாம்” செல்லையா சொன்னான்.

     சூலியா தெருவைத் தொடர்ந்தனர். இட மூலைக் கட்டிடத்தின் கீழே கெடே கோப்பி; மேலே ஹோட்டல். ஜன்னல்களுக்குப் பின் ஆண் பெண் உருவங்கள் தென்பட்டன; படிக்கட்டில் ஏறி இறங்கின.

     “எல்லா வியாபாரமும் படுத்துவிட்டது. இதுதான் எப்போதும்போல் மளமளப்பாய் நடந்து கொண்டிருக்கிறது” மேற்கே பார்வையைத் திருப்பிய அப்துல்காதர் சொன்னான்.

     “எது என்ன ஆனாலும் இந்தத் தொழில் நடந்துகொண்டுதான் இருக்கும்.” மெடானிலிருந்து கொண்டுவந்த மூராட் சிகரெட் பெட்டியை நீட்டினான். “இது மனிதனுடன் பிறந்து வந்த தொழில், மற்றவை எல்லாம் நாம் உண்டாக்கிக் கொண்டவை.”

     “வேண்டாம், பழக்கமில்லை” செல்லையா கையை அலைத்தான்.

     அப்துல்காதரும் பாண்டியனும் ஆளுக்கு ஒன்றை உருவிப் பற்ற வைத்தனர்.

     “சலாம் அலைக்கும்.”

     துருக்கிக் குல்லா - பச்சை பிளேசர் கோட் - கெம்புக் கைலியாய் எதிரே வந்தவர், கைகளை மடக்குக் குறுக்காய் மார்போடணைத்து வந்தனை செய்தவாறு போனார்.

     “அலைக்கும் சலாம்” அப்துல்காதர் பதில் வந்தனை கூறினான்.

     இருபுறமும் செருப்பு, மருந்து, தையல், தகரக் கடைகள், புல் மண்டிய குட்டிச் சுவர்கள், சுற்றிலும் சீன மொழியின் ஙொய்ங் புய்ங் இரைச்சல் காதைத் துளைத்தது. ஹாங்க்கோ ஹோட்டல் வாசலில் வந்த நின்ற ரிக்ஷாக்களிலிருந்து வர்ணம் பூசிய சீன மேசைகள் இறங்கி, பூ முளைத்த சாட்டின் ஆடை மடிந்து பகட்ட உள்ளோடி மறைந்தனர். மாடியிலிருந்து மாஜோங் விளையாட்டோசை வந்தது... பல்லாண்டுக் காலமாய் ஊர் திரும்பும் தமிழர்களுக்குப் பேனா, கடிகாரம், தோல் பெட்டி முதலியன விற்றுப் பிரபலமான ‘சீமைச் சாமான் வியாபாரம்’ புவாக்கூய் செங்கின் கடை தரையோடு தரையாகிக் கிடந்தது.

     “இதுதானே புவாக்கூய்செங் கடை?”

     “ம்...”

     “ஊருக்குப் போகும்போது புவாக்கூய்செங் கடையில்தான் இந்தக் கடிகாரம் வாங்கினேன்” பாண்டியன் இடக்கையைத் தூக்கிக் காட்டினான்.

     “ஒரே குண்டு, அவன் பெண்டாட்டி, பிள்ளை, வேலையாள்கள் எல்லாரும் காலி, மாடியிலேயே வீடு.”

     பினாங் ரோடில் ஏறித் திரும்பினார்கள். ஓடியோன் தியேட்டர் மூளியாய் நிற்கின்றது. எதிரே, மல்லிகை மணமும் பச்சை கெமெஜாவுமாக வந்தவள், தோளைக் குலுக்கி நெளிந்தாள். குவீன்ஸ் தியேட்டர் கும்பல் கலைந்து சாலையில் சிதறிக் கொண்டிருக்கிறது.

     கறுப்பு ஜாகுவார் வண்டி கிழக்கு முகமாய் அலறிச் சென்றது.

     “கெம்பித்தாய்* மேஜர் இச்சியாமா” அப்துல்காதர் தெரிவித்தான். “கெட்ட நாமுருதமாப் பயல்.”

     * கெம்பித்தாய் - ஜப்பானிய செக்யூரிட்டி சர்வீஸ், (ரஷிய கே.ஜி.பி., அமெரிக்க சி.ஐ.ஏ. போன்றது)

     பாண்டியன் திரும்பினான். அதற்குள் லெய்த் தெருவில் மறைந்துவிட்டது கறுப்புக் கார்.

     மேற்கே நடந்தார்கள்.

     சைக்கிள் ரிக்ஷாக்களின் மணியோசைக் கிணுகிணுப்பு பெருகியது. போலீஸ் தலைமையக காங்க்ரீட் மாளிகை குண்டு வீச்சுக் காயங்களுடன் நிற்கிறது. விங்லொக் ரெஸ்டாரன்ட் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும் சிமிந்தி நிற வின்சர் கூத்து மேடை, அடுத்த காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கின்றது. ஆண் பெண் தமிழர் கூட்டம்.

     பர்மா ரோடில் திரும்பினார்கள். ரெக்ஸ் தியேட்டர், மெட்ராஸ் தெரு, செடித் தொட்டிகள் நிறைந்த நீலநிற வீடு, படிக்கட்டில் ஏறி மாடிக்குச் சென்றனர்.

     வெள்ளைச் சட்டை - சந்தன நிறச் சாராய் தரித்து நிலைக் கண்ணாடி முன்னே சீப்பும் கையுமாக நின்ற இளைஞன் திரும்பினான். பொது நிறம், முகத்தில் அறிவுக் களை வீசியது.

     பாண்டியனை அப்துல்காதர் அறிமுகம் செய்து வைத்தான்.

     “சின்னமங்கலமா! என் தாயார் பிறந்தது அடுத்த ஊர் - வேங்கைப்பட்டி - ‘ரங்கத்தார்’* மச்சக்காளைக் கோனாரைத் தெரியுமா? எனக்கு அம்மான், உட்காருங்கள்”

     * ரங்கத்தார் - ரங்கூன்காரர்

     “அப்படியா! எனக்கும் அம்மான் முறைதான். எங்கள் கடைக்கு அடிக்கடி வருவார்.”

     வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.

     பாண்டியன் தங்கையாவின் கடிதத்தை எடுத்து நீட்டினான்.

     மாணிக்கம் உறையைப் பிரித்துக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான்.

     “தங்கையா என் பள்ளித் தோழன். இவனும்தான்...” அப்துல் காதரைச் சுட்டி விட்டுக் கடிதத்தை மேசையில் போட்டான்.

     சுமத்ரா தமிழர்கள் பற்றியும், தொங்கான் பயண விவரத்தையும் மாணிக்கம் கேட்டான். பாண்டியன் சொன்னான்.

     “பாய்மரக் கப்பலில் பயணம் செய்து பார்க்க வேண்டுமென்று எனக்கு ஓர் ஆசை. ‘கெக் செங்’கில் போய்க் காபி குடிக்கலாம்.”

     “சரி, கிளம்பலாம்” - செல்லையா நகர்ந்தான்.

     படிக்கட்டில் இறங்கிப் புறப்பட்டார்கள்.