உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நுனை 7. மூன்று நண்பர்கள் பிரின்ஸ் ஹெண்ட்ரிக்ஸ் தெருவின் தென்புறத்திய கிம்லீ சிற்றுண்டித் தோட்டக் கடைக்குள் மூவரும் நுழைந்தனர். கடைக்காரன் வரவேற்றான். “தபே, துவான் துவான்.” “தபே, தவ்க்கே.” வட்டமாய்ப் பின்னி மூடி அடர்ந்த பூங்கொடி வளைப்பு ஒன்றினுள் கிம்லீ அழைத்துச் சென்றான். உள்ளே மேசை. சுற்றிலும் நான்கு ஆசனங்கள். பாண்டியன் வடமுகமாய் உட்கார்ந்தான். தங்கையாவும் தில்லைமுத்துவும் எதிரே அமர்ந்தார்கள். பையன் ஓடி வந்தான். மீகோரெங், முட்டை, அன்னாசி, பப்பாளி, காபி கொண்டு வரும்படி உத்தரவாகியது. இரண்டொருவராய்ச் சீனர், இந்தொனேசியர், தெருவிலிருந்து தோட்டத்துக்குள் வந்து கொண்டிருந்தனர். “யாரது, பாவன்னாவா?” 8-ஆம் நம்பர் கிட்டங்கி முதல் பெட்டியடி மேலாள் நாவன்னா எட்டிப் பார்த்தார். “வருக, வருக.” “வந்தேன், அமர்ந்தேன்.” நாவன்னா கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்தார். அவர்களினும் சற்று அதிக வயதானவர்போல் தெரிந்தது. மின்னிய கண்களும் வாய் வெட்டும் நகைச்சுவைப் பான்மையை அறிவித்தன. “என்ன, பினாங்கில் தகப்பனார் நலமா?” தங்கையா பக்கம் முகத்தைத் திருப்பினார், “கடிதம்?” “நலம். படகில் கடிதம் வந்தது.” “சாட்டர் வங்கியை யொக்கொஹாமா வங்கி என்று மாற்றி நடத்தப் போகிறானாமே, உங்களுக்கு வேலை?” “கட்டளை வந்திருக்கிறது. தில்லைமுத்துவும் சேரப் போகிறான்.” “ஏன், பள்ளிக்கூடம் அவ்வளவுதானாக்கும். யுத்தம் முடியும்வரை பையன்கள் கழுதை மேய்க்க வேண்டியதுதானோ?” “இங்கே கழுதை இல்லை. பன்றி மேய்க்கலாம்.” மெத்தடிஸ்ட் பள்ளி மாஜி ஆசிரியர் தில்லைமுத்து விடை அளித்தான். பையன் தின்பண்டத் தட்டுகளையும் காப்பி மங்குகளையும் கொண்டு வந்து வைத்தான். நாவன்னாவுக்கும் கொண்டுவரும்படி தெரிவிக்கப்பட்டது. “பாவன்னா, கொஞ்சம் எட்டிப் பாருங்க அந்தப் பக்கம். வடக்கத்தி மாடு போலப் போறாளே மலாய்க்காரி, தெரிகிறதா?” “யாரவள்?” எட்டிப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான். “யாரவளா? ‘தங்கத் தண்டைக்காரி’ யாஸ்மின். உடம்பு எப்படி? வயது நாற்பத்தைந்துக்கு மோசமில்லை.” “என்ன, அவ்வளவு வயது இருக்குமா!” “நல்லாச் சொன்னியக போங்க.” வார்த்தைகளைக் குறுக்கி வளைத்திழுத்துச் செட்டிநாட்டுப் பாணியில் பேசலானார். “அவுத்துப் பார்த்தா அண்ணாமலையான் தின்னுத்திப் பைபோல இருக்கும். அஞ்சு பிள்ளையக.” “ஆறு பிள்ளைகள் என்று கேள்வி.” தில்லைமுத்து திருத்தம் கூறினான். “அடியம்மத்தா! பாத்தியளா பாவன்னா! எந்தப் புத்துல எந்தப் பாம்பு கிடக்குமுனு எப்படிச் சொல்றது!” கண்களை உருட்டினார். “வாத்தியார் மேப்படி சங்கதியகள்ள எம்புட்டுக் கணக்காயிருக்கார், பாத்துக்கங்க.” “தில்லைமுத்து ஊமைக் கள்ளன்.” தங்கையா சொன்னான். “சரி சரி, ரொம்பச் சரியின்னேன். அது போகுது, பேச்சை விட்ராதியக. என்ன பாவன்னா, நம்ம செட்டிய வீட்டு ஆளுக இன்னைக்கும் செம்மறியாட்டு மந்தையாட்டம் அவள்ள போயி விழுறாங்ய?” “அவ கிடக்கா, நாத்தச் சிறுக்கி, நீங்க பினாங் வியாபாரத்துக்கு வரலையா?” “எனக்குப் பினாங்குக் கொண்டு வேலையும் வேண்டாம், சைகோன் கொண்டு வேலையும் வேண்டாம். இந்த மட்டில் உடம்பை உருப்படியாய் ஊர்கொண்டு பொய்ச் சேர்த்தால் போதும். பினாங் வியாபாரம் நிச்சயந்தானா?” “நிச்சயந்தானாவா! தொங்கான் பேசி, சரக்கு கொள்முதல் நடக்கிறது.” “பினாங் வியாபாரத்துக்குப் போறது சரி. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்கங்க.” “ஏன், என்ன சங்கதி?” “ஊசி நுழைய இடம் இருக்குதுன்னா நம்ம ஆளுக உத்திரத்தைத் தூக்கிக்கிணு போவான். என்னடான்னா, அங்கின போயிச் சரி பண்ணிக்கிடலாமுனு போறமும்பாங்ய. ஜப்பான்காரன் கண்டுக்கிணான்னால் தலையை வெட்டிச் சடக்கில வச்சிருவான்.” “அதெல்லாம் வழக்காடுகிற வெள்ளையனிடம். தலைவெட்டி ஆட்களிடம் அல்ல.” “சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். அது போகுது, நீங்க ஏன் சாப்பிடாம இருக்கிறீக?” “உங்களுக்கும் வரட்டும்.” “பாவன்னா, உங்களுக்குப் பிரான்மலை கல்யாணியைத் தெரியுமா?” “தெரியுமே. வருஷா வருஷம் எங்களூர்த் திருவிழாவில் சதிர் ஆடுவாள்.” “அவள் எப்படிக் குட்டி! அவளே அச்சாய் ஒருத்தி - இவள் கைலி கட்டி கெமேஜா போட்டிருக்கிறாள் - நேற்றிலிருந்து மறுகிக்கிணு திரியிறாளே, அவள் யார்?” பையன் பலகாரத் தட்டுகளையும் காபி ‘மங்’கையும் கொண்டு வந்து வைத்தான். உண்ணலானார்கள். “அவளா! தெபிங்திங்கி ராஜம்மாள்.” தங்கையா அறிவித்தான். “விலை அதிகம், பாண்டியனுக்கு வேண்டுமென்றால் இலவசமாகக் கூட வருவாள். காரணம் முகராசி என்று சொல்லுகிறார்கள்.” “பாவன்னா சங்கதியை ஏன் சொல்றியக” நாவன்னா மீண்டும் வார்த்தைகளை வளைத்திழுத்துக் குறுக்கலானார். “விழுற இடத்தில மச்சம் விழுந்தா எல்லாம் வகையா வந்து வாய்க்கும். ‘நான் வாறேன் வாக்கப்பட, எந் தங்கச்சி வாறா பிள்ளை தூக்க’ன்னு வந்து விழுவாளுக.” “ஆ! அப்படியா.” பாண்டியன் சிரித்தான். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர். “நீங்க கிளம்ப நேரமாகுமோ? எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு.” நாவன்னா எழுந்தார். “பினாங்குக்கு நீங்க வரலையாக்கும்?” “இரண்டு மாதம் போகட்டும், பார்க்கலாம். சரி எல்லாரும் இருங்க, வர்றென்.” “போய் வருக.” “ஏய்! கோப்பி தீக்கா.” தங்கையா கத்தினான். “சலாம் வருது, தம்பி.” புடைவைக் கடை அரசன் மரக்காயர் எட்டிப் பார்த்தார். “சலாம், நானா. உள்ளே வாங்க. ஒரு கோப்பி.” “வேலை இரிக்கிர்து, தம்பி. கோப்பிக்கென்ன, என்றைக்கும் குடிக்யலாம்... எட்டா நம்பர் செட்டியார் வந்தாஹளா?” “நாவன்னாதானே? இப்பத்தான் போறார்.” “சரி, இரிங்ய. எல்லாருக்கும் சலாம்.” “சலாம், போய்ட்டு வாங்க, நானா.” பையன் கோப்பி மங்குகளைக் கொண்டு வந்து வைத்தான். “இந்தச் சமயத்தில் நீ ஏன் பினாங்குக்குப் போகிறாய்?” தங்கையா கேட்டான். “அன்னெமர் நீதான் போக வேண்டும் என்று சொல்கிறாரா?” “பினாங் வியாபாரமே என் யோசனைதான். யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போவது நிச்சயம்.” பாண்டியன் காபி மங்கைத் தூக்கிக் குடித்தான். “என்ன விஷயம்? திடீரென்று பினாங் மோகம்?” “மெடான் கசந்துவிட்டது. இது ஒதுக்குப்புறமான இடம். யுத்த காலத்துக்கு இந்த ஊர் லாயக்கில்லை. பொந்துக்குள் அடைபட்டது போல் இருக்கிறது.” “பினாங்?” “அங்கே பர்மா, சையாம், இந்தோசீனாவிலிருந்து வரும் ஆட்களையாவது பார்த்துப் பேசலாம்; ஏதாவது செய்யலாம். இங்கே நாம் சுத்தச் சோம்பேறிகளாய்க் காலந்தள்ளிக் கொண்டிருக்கிறோம். உலகில் என்னென்னவோ நடக்கிறது. எத்தனையோ நிகழ்ச்சிகள், அவற்றின் துடிப்பை அங்கே கொஞ்சம் உணரவாவது முடியும்.” “உலக நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம் தலைவிதி பிறரால், சாட்டை வைத்திருக்கும் மேய்ப்பர்களால் முடிவு செய்யப்படுகிறது.” “கையைக் கட்டிக் கொண்டிருந்தால் எப்படி மேய்ப்பர்களாவது? மாடுகளாகவே இருக்க வேண்டியதுதான்.” “ஓஹோ! படகிலேறி மலேயாவுக்குப் போனால் மேய்ப்பனாகி விடலாமோ?” “மேய்ப்பனாவதற்கான வழிதுறைகளை ஆராய்ந்து திட்டம் வகுக்கலாம். மலேயாவில் நம் நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கு எத்தனை பேர் இருக்கிறோம், எத்தனை பேருக்கு அதுபற்றி அக்கறை உண்டு?” “திட்டத்துக்கும் நமக்கும் வெகு தொலை.” “அந்த நிலையை மாற்ற வேண்டும்.” “உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்!” தில்லைமுத்து கூவினான். “தமிழினம் முன்னேறத் திட்டம் தீட்டுங்கள்!” “தில்லைமுத்து! எனது நண்பர் ஒரு கதை சொன்னார். வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி. நீ அதைத் தெரிந்து கொள்வது அவசியம். சுருக்கமாகச் சொல்கிறேன்.” பாண்டியன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்குமுன், மணியக்காரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கிக் கொள்ள வேண்டுமென்று, அரசு ஆணையிட்டது. மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று, ‘விரசாய் அடிச்சுவிடுங்கையா வேலைக்குப் போகணும், நேரமாகுது’ என்று முறையிட்டு, முதுகைத் திருப்பிக் காட்டிக் கொண்டிருந்தனர். சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக அவரவர் சக்திகேற்பக் காலும் அரையுமாக லஞ்சத் தொகையும் எடுத்துச் சென்றிருந்தார்கள். இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை, நேற்றைய நிலை.” “எனக்குத் தமிழக நிலவரம் தெரியாது.” தங்கையா சொன்னான்: “சிறு வயதிலேயே கப்பலேறி வந்துவிட்டேன்... நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென்கிறாய்? சொல்லேன்.” “அதிர்ச்சி வைத்தியம்! தமிழினம் - தமிழினம் மட்டுமல்ல, பாரத மக்கள் அனைவருமே கண் விழிப்பதற்கான முழு முதல் தேவை என்ன? கடுமையான அதிர்ச்சி வைத்தியம்.” “அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் கருவி?” “வீர இளைஞர் அணி; அதற்கு அஞ்சா நெஞ்சம் படைத்த ஒரு தலைவன்.” “பிறகு, தான்தோன்றித் தடியர்களின் வல்லடி ஆட்சி, ம்ம்?” “இல்லை, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்.” “ஓஹோ! மணிமேகலை... ‘அறமெனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாதிது கேள், மன்னுயிர்க்கெல்லாம், உண்டியும் உடையும் உறையுளுமல்லது கண்டதில்...’ ம்ம்? அது இயலா விடின்? சொற்பொழிவும் காட்சிசாலையும் சவுக்கடியும்!” “சேச்சே! எல்லாம் நன்மைக்கே எனும் அழுகுணிக் கும்பலில் நீயும் சேர்ந்து விட்டனையோ? இயலாமை தெரியுங்கால் நம்புக; அதனை அடுத்தூர்வதஃதொப்பதில். நம்பிக்கை நண்பனே, நம்பிக்கை. சில ஆயிரம் தோழர்களின் துணையோடு பலகோடி மக்களின் ரஷியாவை லெனின் பிரபு கைக்கொள்ள முடிந்தது ஏன்? நம்பிக்கை. நன்னம்பிக்கை. வன்னம்பிக்கை - தளராத தன்னம்பிக்கை.” “நாம் எதை நம்புவது?” “இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.” “ஒளி பிறக்காவிடன், இருளையே ஒளியென நம்புவது?” “ஒளியாவது யாதெனின் ஒளியென நம்பப்படுவதே யாம்” சிரித்தான். “சரி, அது கிடக்கட்டும். இந்த வீர இளைஞர் படையை - மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் வழங்கும் கடப்பாடுடைய திருத்தொண்டர் கூட்டத்தை எந்த அடிப்படையில் எப்படித் திரட்டப் போகிறாய்?” “அதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும் - பலர் கூடிக் கலந்து பேசி.” “நல்ல நோக்கம். ஆனால் பாரத மக்கள் என்று சொல்லி உளப்புவதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.” தில்லைமுத்து காலை நீட்டிச் சாய்ந்தான். “அதிர்ச்சி வைத்தியப்படை வெற்றி பெற வேண்டுமானால் அதில் தமிழர்களைத் தவிர வேறு யாரையும் சேர்க்கக் கூடாது. தமிழ் இனம் ஒன்றே மான வீரத்துக்கு உறைவிடம். தமிழ் நாட்டை, தமிழ் மக்களை மேம்படுத்துவதே தமிழனின் கடமை. குஜராத்தியரும் வங்காளியரும் எப்படியோ போகட்டும். அதைப் பற்றி நமக்கென்ன?” “அவர்களும் வாழ்ந்தால் தான் நாம் வாழ முடியும்” பாண்டியன் திரும்பினான். “அவர்கள் தாழ்ந்தால் அதன் விளைவு நம்மையும் பாதிக்கும்.” “இல்லை. அவர்கள் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தமிழ்நாடு என்றென்றும் மானத்துடனும் வீரத்துடனும் தனிச்சிறப்புடனும் தலைநிமிர்ந்து நிற்கும்.” “இதுவரை மானத்துடனும் வீரத்துடனும் தனிச்சிறப்புடனும் தலை நிமிர்ந்து நின்றுள்ளதோ?” “என்ன சந்தேகம்? சங்க நூல்களைப் பயின்ற யாருக்கும் இந்த ஐயம் தோன்றாது. ஆனால் நீயும், தங்கையாவும் விதிவிலக்கு; நீங்கள் இருவரும் விதண்டாவாதக்காரர்கள்.” “தில்லைமுத்து! நீ தமிழகத்தை நேரில் கண்டதில்லை. கவிதைகளில் பார்த்தவன். கவிதை என்பதில் கற்பனை என்ற பொருள் மறைந்திருக்கிறது. இதை மறந்து விடக்கூடாது.” பாண்டியனின் குரலில் சூடுபிடித்தது. “பழம் பாடல்களில் விதந்தோதப்படும் தமிழ் வீரமெல்லாம் பெரும்பாலும் சில்லறைச் சச்சரவுகளைப் பற்றியவையே. காளையார்கோயில் வேங்கைமார்பனைப் பாண்டியன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது? இருவரும் தமிழர்கள். ஓர அரசன், சின்னஞ்சிறு கிராமத் தலைவன் ஒருவனை வீழ்த்தி, அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பறித்துக் கொண்டான். இதிலென்ன பெருமை இருக்கிறது.” சிகரெட் பற்ற வைத்துப் புகையை இழுத்து ஊதினான். “டில்லிப் பட்டாணியர் தமிழகத்தில் புகுந்து சூறையாடியபோது இலக்கியப் புகழ் பெற்ற தமிழ் வீரர்கள் எங்கெங்கே எதிர்த்துப் போராடினார்கள்? எத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தார்கள்? எங்கும் இல்லை, எவருமில்லை. மாலிக்கபூரின் குதிரைப்படை வெகு தொலைவில் வரும்போதே, ‘வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசையாண்ட தென்னவன்’ ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் நேரியமங்கலம் மலைக்காட்டில் ஒளிந்து கொண்டான்.” “பட்டாணியர் படலத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறாய்.” தில்லைமுத்து உறுமினான். “ஒரு வழுவலை வைத்துக்கொண்டு ஓர் இனத்தையே இழிவுபடுத்தக் கூடாது. உனக்கு மொத்தப் பார்வை குறைவு.” “மொத்தப் பார்வை அதிகமாயிருப்பதே என்னிடமுள்ள குறை; இல்லாதது அல்ல. அது நிற்க, விஜயநகர வடுகர்சேனை வந்தபோது நடந்ததென்ன? தமிழர்களின் உதவியோடு பாண்டியனின் அரசு வீழ்த்தப்பட்டது. விஜயநகரத்தானுக்குத் தமிழ்க் கூலிப்படைகளை அமர்த்திக் கொடுத்து - பாண்டியனின் படைகளையே கைமாறச் செய்த தரகன் யார்? அரியநாதன் - தமிழன்.” “நம் வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய ஆதிக்கத்தை ஒழித்து, ஹிந்து சமயத்துக்குப் புத்துயிரூட்டவே விஜயநகர ராயர்கள் தமிழ்நாட்டின் மீது படை எடுத்தார்கள்.” தங்கையா குறும்புச் சிரிப்புடன் தலையிட்டான். “இதை நீ மறுக்கிறாயா?” “இஸ்லாமிய ஆதிக்கத்தை ஒழிப்பது, மண்ணாங்கட்டி! இது ஓர் அசல் கற்பனை. அவர்கள் நாடியது விஜயநகர ஆதிக்கம்... சண்டைக்குப் பயந்து சுல்தானுக்கு மகளைக் கட்டிக் கொடுத்த ராயர்! பெரும்படை இருந்தும் சண்டை போடாமலே சுல்தானிடம் சரணடைந்த ராயர்... இப்படிப் பல ராயர்கள் விஜயநகரை ஆண்டிருக்கிறார்கள். இதுதான் இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய லட்சணம்.” “வடுகர்கள் விவகாரம் நமக்கு வேண்டாம்.” தில்லை முத்து கூறினான். “தமிழினத்தின் மான வீரப் பரம்பரை பற்றிய உன் கருத்து விபரீதமானது. அதை நான் ஏற்க மாட்டேன். தமிழ் உணர்வு கொண்ட எந்தத் தமிழனும் ஏற்க மாட்டான்.” “விபரீதம் அல்ல, உண்மை. தமிழ் வீரம், தமிழ் நாகரிகம் என்பதெல்லாம் நம் புலவர்களின் தோப்பி மயக்கத்தில் தோன்றிய வெறும் கற்பனையாக இருக்கலாம் என்றே எனக்குத் தெரிகிறது.” “உளறாதே... செங்குட்டுவன்! ஏலாளன்! ராஜேந்திரன்! சுந்தரன்*! கருணாகரன்...!”
* ‘எம்மண்டலமுங் கொண்டருளிய’ சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1251-69) “பழங்கதை, பழங்கதை. எல்லா இனங்களுக்குமே இப்படி ஐந்தாறு பெயர்கள் உண்டு. இவர்கள் எல்லாரும் எந்த அளவில் எதைச் சாதித்தார்கள்? அலெக்ஸாண்டர் பாரசீய மகா சாம்ராஜ்யத்தை வென்றான். ஹிட்லர், ஒரே பாய்ச்சலில், பிர்ரிட்டிஷ் - பிரெஞ்சு - பெல்ஜிய - டச்சுப் படைகளைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தெறிந்தான். கிணற்றுத் தவளைக்கு அமேஸான் ஆறு, பசிபிக் ஆழி, இமயமலை எல்லாமே அந்தக் கிணற்றுக்குள்தான்.” தில்லைமுத்து ஒரே பார்வையாய்ப் பாண்டியன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். “பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போலிருக்கிறது இந்தத் தமிழ் வீர ஆராய்ச்சி” தங்கையா எழுந்தான். “தில்லைமுத்து! பண்டைநாள் பெருமை பேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்காலச் சிறுமைகள் மிகுந்திருக்கும் என்பது ஆன்றோர் கண்டறிந்த உண்மை. அது போகட்டும்.” பாண்டியனின் தோளில் இடக்கையை வைத்தான். “புறப்படுவதற்கு முன் தகவல் சொல். எனது பள்ளித்தோழன் மாணிக்கம் பினாங் அருகே தானா மேரா எஸ்டேட்டில் வேலை பார்க்கிறான் - பார்த்தான். கடிதம் தருகிறேன், கொண்டு போ. அருமையான நண்பன்.” “சரி. கிளம்பலாம்.” கதிரவன் மறைந்து வெகு நேரமாகிவிட்டது. முகமூடி தரித்த காகிதப் பூ விளக்குகள் காற்றில் அசைந்து ஒளி சிமிட்டின. தோட்டத்துக்கு வெளியே காரிருள் படர்ந்திருந்தது. விளக்குக் கம்பங்கள் வெளிச்சமின்றி நின்ற தெருவில் மேற்கு நோக்கி நடந்தார்கள். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|