உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 22. விடுதலை பசிபிக் ஆழியில் அமெரிக்கப் படைகளின் கை மேலோங்கிவிட்டது. ஜெனரல் மெக்கார்தரின் போரணிகள் நியூகினி, சாலமோன் தளங்களிலிருந்து மார்ஷல், மாரியானி தீவுக் கூட்டங்களினூடே தாவிக் கடந்து வந்து பிலிப்பைனையும் ஜப்பானையும் அணுகிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானிய நகரங்களில் தொடர்ந்து குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பிலிப்பைன் போருக்காக இருசாரரும் வரிந்து கட்டலாயினர். ஜப்பானியக் கடல் - விமானப் படைகள் தம் கையிருப்பு முழுவதையும் வீசி எறிந்து, பிலிப்பைனில் எதிரிப் படைகள் கரையிறங்குவதைத் தடுப்பதோடு, அமெரிக்கக் கடற்படையையும் அழித்தொழிக்க வேண்டுமென்று டாய் நிப்பன் உன்னதப் பேரவை தீர்மானித்தது. ஜப்பானின் எஞ்சிய கடற்படைகள் அஞ்சா நெஞ்சத்துடன் - ஆனால் அடித் தேவையான விமான பலம் அறவேயின்றி - அமெரிக்காவின் பிரமாண்டமான பசிபிக் ஆழிக் கப்பற்படையை அழித்தொழிக்கக் கிளம்பிச் சென்றன; அழித்தொழிந்து போயின, லெய்த்தே கடலில் நடந்த மாபெரும் போரில். மெக்கார்தரின் படைகள் பிலிப்பைனில் கரையிறங்கலாயின. ஐரோப்பாவில் காலூன்றிய ஆங்கிலோ - அமெரிக்கச் சேனைகள் கடுமையான இழுபறிப் போர்களை வென்றபின், சிக்பிரீட் காப்பரண் வரிசைகளைப் பிளந்துகொண்டு ஜெர்மனிக்குள் புகுந்துவிட்டன. வடக்கே ‘மான்ட்கோமரி’ சேனைகளும், தெற்கே ‘பிராட்லி’ சேனைகளும் ஜெர்மனியின் இதயப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. சுவிட்சர்லாந்தை நோக்கி, ஜெர்மன் லாரி ஒன்றில் தப்பியோடிய வழியில், இத்தாலியின் 20ஆம் நூற்றாண்டு சீசர் முசோலினியும் அவரது கடைசி இளங்காதலி கிளாரெத்தாவும், கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் கையில் சிக்கிக் கழுவேற்றப்பட்டனர். ரஷியாவின் ‘வெற்றித் தாக்குப் போர்’ தென்போலந்துப் பனிவெளியில் தொடங்கியது. கோனேவ், காலைக் கருக்கலில் விஸ்டுலா நதியைக் கடந்து முன்னேறலானார். வடக்கே - டான்சிக் வட்டகையில், ரொகொசாவ்ஸ்கி, ஜெர்மன் படை வரிசைகளின் பின்புறத்தே பாய்ந்து போய்க் கடலைத் தொட்டு, 20 ஜெர்மன் டிவிஷன்களை ஒதுக்கித் தள்ளினார்; அவற்றைக் கிழக்கிலிருந்து பாய்ந்த செர்னியகோவ்ஸ்கி நெற்றி முட்டாய் மோதித் தாக்கி உடைத்தெறிந்தார். இடையில், ஜுக்காவ் ஊடுருவி மேற்கே பறந்து போய் போலந்துத் தலைநகர் வார்சாவை வளைத்து நசுக்கிக் கைக் கொண்டார். பர்மா முகப்பிலோ போர் நிலைமை படுமோசமாய் மாறிக் கொண்டிருந்தது. எண்ணிறந்த தமிழ் இளைஞர்களின் குருதியைக் குடித்துச் செந்நிறம் பெற்ற கோகிமா போர்க்களம் பகைவனின் கைக்கு மாறிப் பல மாதங்கள் கழிந்துவிட்டன. ஜெனரல் முதாகுச்சியின் ‘இம்பால் சேனை’ கட்டுக் குலைந்து தாறுமாறாய் சயாம் எல்லையை நோக்கி ஓடிவந்து கொண்டிருக்கிறது. தன் தேவைக்குப் பின் தான தர்மம் என்ற நியாயப்படி எவ்வித உதவியுமின்றிக் கைவிடப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தினரோ, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, வெயிலறியாக் கானகங்களிலும், செங்குத்தான மலைச் சரிவுகளிலும் திக்குத் தெரியாமல் திரிந்துழல்கின்றனர். சிறை முகாமில் இருந்த பாண்டியனுக்கு ஒரு நாள் நண்பகலில் அஸாத் ஹிந்த் ஃபவ்ஜ் உன்னத சேனாதிபதியின் முத்திரையிட்டு மூடிய உறையொன்று தனி அதிகாரி மாறலில் ‘விடுதலை’ உத்தரவுடன் வந்து சேர்ந்தது. புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|