முகை

21. ஜாராங்

     ஜாராங் படை முகாமில் ரக்பீர்லால் அரோரா என்றொரு பஞ்சாபி காப்டன் இருந்தான். அவனுடைய அணியில் மலையாளி ஹவில்தார் ஒருவன் இருந்தான். பெயர்: சுகுமாரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதே அணியில் தமிழ் ஹவில்தார் ஒருவனும் இருந்தான். பெயர்: பலவேசமுத்து; ஒல்லியான கறுப்புடலும் எஃகு நெஞ்சமும் கொண்ட துடுக்கன். முன்னையோர் இருவருக்கும் பின்னையோன் கடும் பகைவன். இந்த மூவரும் கூடி உண்டாக்கிய ஒரு வில்லங்கம், முதலில் ஜாராங் முகாமையும், பிறகு இந்தியத் தேசிய ராணுவம் முழுவதையுமே உலுக்கிவிட்டது.

     5ஆவது கொரில்லா ரெஜிமெண்ட், பயிற்சி முடிந்து போர்க் களத்துக்குப் போகத் தயாராயிருந்த படைகளில் ஒன்று. அதில் லெப்டினன்ட் பதவிக்கு மேற்பட்டோர் அனைவருமே பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திலிருந்து வந்தவர்கள். மற்றபடி பழையவர்களும் புதியவர்களும் சரிபங்கினராக இருந்தனர். பிளாட்டூன்கள் பெரும்பாலும் தனித்தனியே பழையவர் புதியவர் பிரிவுகளாக இருந்தன.

     படை முகாமுக்கு வரும் உணவுப் பண்டங்களும் துணிமணி முதலியனவும் வழிப்பயணத்தின் போதும், வந்து சேர்ந்த பிறகும் குறைவதில் புதுமை இல்லை. அலெக்ஸாண்டர் காலமுதல் நடந்து வரும் நிகழ்ச்சியே. ஆனால் முன்பு வாணிப நிலையங்களில் வேலை பார்த்த - சரக்குப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் உள்ள தமிழர்கள் பலர் ஜாராங் முகாமில் இருந்தனர். தன் குறைச்சல், வண்டிக் குறைச்சல், பூச்சிக் குறைச்சல் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகள் அவர்களுக்குத் தலைகீழ்ப் பாடம். எனவே, சரக்கு அறை வரவுசெலவுகளைச் சரிபார்ப்பதையும் யுத்தக் கடமைகளில் ஒன்றாகக் கருதலாயினர்.

     சரக்கு அறைப் பொறுப்பு காப்டன் ரக்பீர்லால் வசம் இருந்தது. அவனும், அவனுடைய அன்பன் சுகுமாரனும் மேலதிகாரிகளின் கூட்டுறவுடன் சரக்குகளைக் கள்ளச் சந்தையில் விற்றுப் பெரும் பணம் திரட்டி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். போக்கு வரத்துத் தடங்கல் காரணமாய் ஏற்கெனவே குறைந்திருந்த அரிசி பருப்பு ரேஷனில் கல்லும் மண்ணும் தலைதூக்கி, முந்தியவற்றைப் பெருமளவில் விரட்டிவிட்டன.

     முகாம் கமாண்டர் ஜாகர் சிங்கிடம் செய்த புகார்கள் பலனளிக்கவில்லை. ரக்பீர்பால் - சுகுமாரன் கூட்டுப் படங்கள் அருவருப்பான ரகங்களில் விளக்கக் குறிப்புகளுடன் விடுதிச் சுவர்களில் தோன்றலாயின.

     பலவேசமுத்துவும் அவனுடைய நண்பர்களும் சுகுமாரனைச் சந்திக்கும் போதெல்லாம், “சுகுமாரீ ஞென்னுட பொண்ணே! ஞென்னுட குட்டீ!” என்று கேலி செய்யவும், ஆபாசக் சைகைகள் காட்டவும் தொடங்கினர்.

     அன்று திங்கட்கிழமை. மாலை 4 மணி. பாண்டியன் படுத்திருந்தான் தலைவலி என்று. தனது அணியுடன் காட்டுக்குப் போகவில்லை. ஓய்விலிருந்த இரண்டு அணிகள் தவிர மற்றவை எல்லாம் வெளியே பயிற்சிக்குச் சென்றிருந்தன.

     தென்புறத்திலிருந்து நசுங்கலான இரைச்சல் வந்தது; படிப்படியாய் அதிகரித்தது. ஹிந்தியிலும் தமிழிலும் ஏசிக் கூச்சலிடுகிறார்கள். யார்? திடுமென உடல் சிலிர்த்தது... ரக்பீர்லால் - பலவேசமுத்து...

     எழுந்து, கைலி - பனியன் உடலோடு ஓடினான்.

     பலவேசமுத்து மல்லாந்து பிணம் போல் கிடந்தான். அவன் நெஞ்சில் இடது முழங்காலை ஊன்றி உட்கார்ந்து, முகத்தில் இரண்டு கைகளாலும் குத்திக் கொண்டிருந்தான். ஆறடி - இருநூற்றிருபது பவுண்டு ரக்பீர்லால். பக்கத்தில் இரண்டு சிப்பாய்கள் மூங்கில் கழிகளை ஓங்கியவாறு நின்றனர்.

     “காப்டன்!” ஓடிவந்து நின்ற பாண்டியன் கத்தினான். ரக்பீர்பால் பார்வையை உயர்த்தினான்.

     “கெட் அப், இம்மிடீயட்லி.”

     “என்ன?” தீப்பறக்கும் கண்களுடன் உறுமியவன் எழுந்து, பிஸ்டலை உருவ வலக்கையை நகர்த்தினான். காப்டனுக்குப் பின்புறமாகத் தாவி, அவன் கைவிரல்களில் இரண்டை இடக்கையால் பற்றிச் சுண்டி இழுத்து, அதே விநாடியில் மடித்த வலக்கையைக் கழுத்துக்கு மேல் அந்த இடத்தின் மீதும் பாயவிட்டான். இடக்கை, காப்டனின் இடுப்பிலிருந்த உறையைத் திறந்து பிஸ்டலை எடுத்து வலக்கைக்கு மாற்றிற்று. மறு விநாடி இடக்கை முழு வேகத்துடன் பாய்ந்தது. வலக்கால் முன்னே பாய்ந்து காப்டனின் இடுப்பை முட்டிவிட்டுத் திரும்பியது.

     ரக்பீர்லால் சாய்ந்து விழுந்தான்.

     சிப்பாய்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

     கீழே பார்த்தான். பலவேசமுத்துவின் நிலைமை படுமோசம். ரக்பீர்லால் இன்னும் சிறிது நெரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான். உடனே கர்னலிடம் போய்த் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கர்னல் ஜாகர் சிங்கின் அலுவலகத்தை நோக்கி ஓடினான்.

     பலவேசமுத்து இரு கைகளாலும் தரையைத் தடவினான். கண் விழிக்க முடியவில்லை. உடலெல்லாம் ஒரே வலி. என்ன இது... ரக்பீர்லால், சிப்பாய்கள்... எடுத்த எடுப்பிலேயே சூரியால் குத்தித் தள்ளி இருக்க வேண்டும். மடத்தனம், மடத்தனம். கண்ணில் சூரிய வெளிச்சம் பட்டது. மங்கலாக மரங்கள் தெரிந்தன. எதிரே கிடப்பது என்ன... ஆள்... ரக்பீர்லால் ? எப்படிக் கீழே விழுந்தான்? நகர முடியவில்லை. இனிப் பிழைப்பது சந்தேகம். அவனையும் தீர்த்துவிட வேண்டும். பார்வை போய்விட்டது. தலை சுற்றுகிறது. கால்களை மடக்க முடியவில்லை. எழுந்தேயாக வேண்டும். பார்வை போய்விட்டது. தலை சுற்றுகிறது. சூரிக் கத்தி எங்கே? இடுப்பு. இதோ... எழுந்திருக்க வேண்டும். கொஞ்சம் இன்னும் கொஞ்சம் இன்னும் இன்னும் இன்னும்... “ஆவோய்!” ஓலம் காதைத் துளைத்தது - அவன்தான், அவன்தான். குத்தினேன் குத்தினேன். தலை சுற்றுகிறது - பெரிய மாடு முட்டித் தள்ளியது - விழுந்தான். வலி வலி வலி...

     கர்னல் ஜாகர் சிங் ஓடி வந்தான். உருவிய பிஸ்டலுடன் சில அதிகாரிகள் உடன் வந்தனர். பாண்டியன் பின்தொடர்ந்தான்.

     ஜாகர் சிங் மிரண்டு போனான். பலவேசமுத்துவின் உடல் விறைத்துப் போய்க் கிடக்கிறது. கன்னத்தில் ரத்தக் கீறலும் கையில் பலவேசமுத்துவின் சூரிக் கத்தியுமாய் நின்ற ரக்பீர்லால், பாண்டியனைச் சுட்டிக்காட்டிக் கூச்சலிட்டான்.

     பலவேசமுத்துவின் உடலைத் தொட்டுப் பார்த்த கர்னல், சிப்பாய்களை அழைத்துப் பின்புறமுள்ள அத்தாப்புக் கொட்டகைக்கு அதைத் தூக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டான். பிறகு பாண்டியன் பக்கம் திரும்பி உறுமினான்.

     “நீ கைது செய்யப்பட்டிருக்கிறாய். இவ்வளவுக்கும் நீயே பொறுப்பு.”

     அதிகாரிகள் இருவரைக் கூப்பிட்டுப் பாண்டியனைச் சிறைக்கூடத்தில் அடைக்குமாறு சொல்லிவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

     ஆஸ்பத்திரிக் கொட்டகையில் படுத்திருந்த லான்ஸ் நாயக் சின்னையா முக்கி முனகி எழுந்து தாழ்வாரத்துக்கு நடந்தான். அங்கிருந்து பம்மிப்பம்மிப் போய்த் தலைவாசலை அடைந்து, ஹவில்தார் பீர்முகம்மது தலைமையில் நின்ற காவலர்களிடம் முகாமுக்குள் நடந்ததைப் பற்றித் தனக்குத் தெரிந்ததைக் கூறினான். பீர் முகம்மது, சிப்பாய் உடையப்பனைக் கூப்பிட்டுக் காட்டுக்குள் விரட்டிவிட்டான்.

     ரீமோ காட்டில் பயிற்சி நடத்தி முடித்த 3 அணிகள் முகாமுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த தங்கவேலுவின் அணியைப் பீசாங் ஓடைக் கரையில் மறித்து, உடையப்பன் செய்தி சொன்னான்.

     “வயர்லஸ் அறையில் யார்?” தங்கவேலு கேட்டான்.

     “ஞானப்பிரகாசம்.”

     “எல்லாவற்றையும் கழற்றிப்போட்டுவிட்டு ஒளிந்திருக்கச் சொல், ஓடு.”

     உடையப்பன் முகாமை நோக்கித் தலைதெறிக்க ஓடினான்.

     பின்னால் வந்த அணிகள் இரண்டுக்கும் தங்கவேலு செய்தி அனுப்பினான்.

     தங்கவேலுவின் அணி முகாமுக்குள் நுழைந்தது. வந்தவர்கள் நேரே ஆயுதச் சாலைக்குள் சென்று, அங்கு காவல் நின்ற சிப்பாய்களைப் பிடித்தடைத்து விட்டுப் புதிய காவலர்களை நிறுத்தினர். பின்னர் சிறைக்கூடத்திற்குப் போய் காவல்காரர்களைக் கைது செய்து, பாண்டியனை விடுவித்தார்கள்.

     இரண்டாவது வந்த கண்ணுச்சாமியின் அணி, கமாண்டரின் அலுவலகத்துக்குப் போய், கர்னல் ஜாகர் சிங்கையும், அங்கிருந்த மற்ற அதிகாரிகளையும், சிப்பாய்களையும் கைது செய்தது.

     மூன்றாவது வந்த யாக்கூப்பின் அணியினரும் தங்கவேலுவின் அணியினருமாகச் சேர்ந்து, கேலான் காட்டிலிருந்து தனித்தனியாக வந்த இரு ‘எதிரி’ அணிகளையும் வளைத்துக் கைது செய்தனர். முகாமில் ஓய்விலிருந்த ஒரு அணி, நிலவரத்தை அறிந்து தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து, மற்ற அணியினரைக் கைது செய்தது.

     எல்லாம் 40 நிமிஷ நேரத்தில் முடிந்துவிட்டது. முகாம் விஸ்தாரமான நிலப்பரப்பில் இருந்தாலும், வாசல் காவலர்கள் சாதகமாக இருந்ததாலும், நடவடிக்கை எவ்வித அசம்பாவிதமின்றி நடந்தேறியது.

     ஜாராங் முகாமின் புதிய கமாண்டராகப் பாண்டியன் பதவி ஏற்றான்.

     காப்டன் ரக்பீர்லால், சிப்பாய்கள் போலா சிங், சேவாராம் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேறியது.

     ஞானப்பிரகாசத்தை அழைத்து, தைப்பிங் படை முகாமுக்கு வயர்லெஸ் செய்தி ஒன்றை அனுப்பும்படி பாண்டியன் சொன்னான். செய்தி போயிற்று -

     ‘ஹவில்தார் பலவேசமுத்து அகாரணமாய்க் கொலை செய்யப்பட்டான். கட்டுக்கடங்காத கொந்தளிப்பைச் சமாளிப்பதற்காக, மேலிடத்தின் ஒப்புறுதியை எதிர்பார்த்துக் கொலைகாரர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிலைமை தீவிரம். ஜாகர் சிங், கர்னல், முகாம் கமாண்டர், ஜாராங்.’

     சற்று நேரத்தில் பதில் வந்தது -

     ‘நேதாஜி புறப்பட்டு வருகிறார். கர்னல் கலிக்குஸுமான், கர்னல் பானர்ஜி, மேஜர் ராஜப்பா ஆகியோரும் துருப்புகளுடன் வருகிறார்கள். எல்லாரும் அவரவர் இடத்தில் இருக்க வேண்டும். நேதாஜியின் கட்டளைப்படி. ரகோஜிராவ் சிட்னிஸ், மேஜர் ஜெனரல், டிவிஷன் தலைமையகம், தைப்பிங்.’

     இரவு ஏழரை மணிக்குக் கார்களும், லாரிகளும் அலறி வந்து நின்றன. வாசல் திறக்கப்பட்டது. எல்லாரும் மையத் திடலில் வந்து கூடுமாறு உத்தரவாகியது. கூடி நின்றனர். கர்னல் பானர்ஜி விசாரணை நடத்தினார். குலை நடுங்கும் சூழ்நிலையில், எல்லோரும் நடந்ததை நடந்தபடியெ ஐந்தாறு வாக்கியங்களில் தெரிவித்தார்கள்.

     கோபத்தால் நடுங்கிய - சில சமயங்களில் குழறிய குரலில், ஆங்கிலத்திலும், ஹிந்துஸ்தானியிலுமாய்த் தண்டனைகளைப் பொழிந்து தள்ளினார் நேதாஜி. ஜாராங் முகாமிலிருந்து வயர்லஸ் கட்டளைகள் பறந்தன. இன்னின்ன முகாமில் உள்ள இன்னின்ன அதிகாரிகள் உடனே புறப்பட்டு வந்து ஜாராங்கில் பொறுப்பேற்க வேண்டும். ஜாராங் அதிகாரிகள் இன்னின்னார், இன்னின்ன முகாம்களுக்கு மாற்றம். கர்னல் ஜாகர் சிங், லெப்டினென்ட் பாண்டியன் இருவர் பதவியும் பறிமுதல். இவர்கள் கைது செய்யப்பட்டு, ராணுவக் கோர்ட் விசாரணை நடைபெறும்.