உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அரும்பு 16. நான்யாங் ஹோட்டல் நான்யாங் ஹோட்டலில் கிம்பர்லி தெருவைப் பார்த்த பெரிய அறை - ‘கல்யாண மண்டபம்’ - மாணிக்கத்துக்காக நாள் குறித்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அக்கரையிலிருந்து வந்த தோட்ட முதலாளி முத்தழகுப் பிள்ளை அந்தத் தேதியில் கல்யாண மண்டபம் வேண்டுமென்று கேட்டார். “சூடா லிசல்வ்.” மார்க்கெட் தெரு ஜக்கரியா மரக்காயர் தலைகீழாய் நின்று கேட்டுப் பார்த்தார். “சூடா லிசல்வ்.” பீச்தெரு பன்சியாங் தவ்க்கே கெஞ்சினார் - பேங்காக் வியாபாரிகள் வந்திருக்கிறார்கள் என்று. “சூடா லிசல்வ்.” இரவு எட்டே முக்கால் மணி. மாணிக்கம், ஆடிட்டர் ஜெயராமன், அன்பானந்த அடிகள், கைலிக் கடை குமாரவேல் ஆகியோர் ரிக்ஷாவில் வந்திறங்கிப் பின் வாசலில் நுழைந்து படிக்கட்டில் ஏறினார்கள். படிக்கட்டுக்குப் பின்னே மூங்கில் முக்காலி மீது உட்கார்ந்திருந்த லிங்வான் எழுந்து, முகத்தில் மவுடீகச் சிரிப்புப் படர வந்தனை கூறினான்: “தபே துவான் துவான்.” முன்புறக் ‘கொடே காப்பி‘யிலிருந்து மங்குகளின் ஒலியும் சீனர்களின் ஙொய்ங் புய்ங் இரைச்சலும் கலந்து குழம்பிய ஓசை வந்து கொண்டிருந்தது. படிக்கட்டுத் தலைப்பில் நின்ற ஹோட்டல் முதலாளி பாஞ்சாங் வரவேற்றான். “தபே, துவான் துவான்.” படிக்கட்டை அடுத்து பளிங்கு பதித்த மேசையும் அதைச் சுற்றி வெற்று நாற்காலிகளும் கிடந்தன. நேர் மேலே, முகமூடியிட்ட மின்விளக்கு தொங்கியது. இடக்கையால் தலைமுடியைக் கோதியவாறு மாணிக்கம் முன்னே நடந்தான். ஓர் உருப்படியையும் காணோமே. மும்முரமான வியாபாரம் போலிருக்கிறது. ஓ, சனிக்கிழமை... கிச்சுக் காட்டிச் சிரித்து விளையாடும் இரைச்சல், வாடிக்கைக்காரர்களால் ‘அந்தப்புரம்’ என்று குறிக்கப்படும் பின்புறத்துப் பெரிய அறையிலிருந்து வந்தது... படிதாண்டாப் பத்தினிகள் கூப்பிட்டனுப்பினால்தான் தலையைக் காட்டுவார்கள்... இருபுறமும் அறைகளில் ஆள் புழக்கம் இருந்தது. நடித்தெழும் அவசரக் குரல்களும், தட்டுமுட்டுச் சாமான்கள் இடம் பெயரும் ஒலியும் பலகைச் சுவர்களைத் தாண்டி வந்தன. கொஞ்சம் இடைவெளி விட்டுச் சாத்தப்பட்டிருந்த 16ஆம் நம்பர் அறைக் கதவு தடாலென்று அடைப்புண்டு கொண்டி போடப்பட்டது. “கூலவாணிகன் சாத்தையா!” அடிகள் தாடியை உருவியவாறு முனகினார். இப்படி இடங்களில் அன்பானந்தருக்குப் பார்வைத் திறன் மிகுதி. சுண்டுவிரல் தெரிந்தாலே போதும். ஆளைக் கணித்து விடுவார். கல்யாண மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள். காபி கூஜாவும் மங்குக் கோப்பைகளுமாக வந்த பாஞ்சாங், அவற்றை மேசை மீது வைத்து விட்டுத் தலையைச் சொறிந்து நின்றான். போகலாமென்று மாணிக்கத்தின் கை சைகை காட்டியது. பாஞ்சாங் போகிற போக்கில் ஈப்போவிலிருந்து மரியம் வந்திருப்பதாகத் தெரிவித்தான். பதில் இல்லை. கைலிக் கடைக்காரர் வலக்கையைப் பிசைந்து கொண்டிருந்தார்... அந்தப்புரத்தில் புது உருப்படிகள் இருக்கும் போலிருக்கிறது. வரவழைத்துப் பார்க்கலாம். நேரம் வீணாகிறது... இவன் ஒரு முரண்டு பிடித்த பயல். சொன்னாலும் கேட்க மாட்டான்... ஈப்போ மரியம்... யாரது... மரியம்... மரியம்... ஈப்போ மரியம்... அம்மாடியோ...! அந்த எருமையா... நம்மால முடியாது சாமி. அவளுக்குத் தாடிக்காரன்தான் லாயக்கு. அலோர்ஸ்டார் சீனத்தி... என்ன பெயர்... சிம்லான் வந்திருப்பாளா... எதற்கும் கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம். “சுமத்ராக்காரர்கள் பாண்டியன், நாவன்னா, வருகிறார்கள்” காபியை மங்குகளில் ஊற்றிய மாணிக்கம் தெரிவித்தான். “சாத்தையாவையும் சேர்த்துக் கொள்வோம்” அடிகள் சொன்னார். “தண்டமிழாசான் சாத்தான் இப்பொழுது ‘மணிமேகலை’யின் பிறப்பு மர்மத்தை நேர்முகமாய் ஆராய்ந்து கொண்டிருக்கின்றான்” மாணிக்கத்தின் வலக்கை பின்னே கட்டியது. “அவனைப் பதினாறாம் இலக்க அறையிலிருந்து வெளியேற்றுவது கடினம்.” ஆடிட்டரின் கொடுங்குரல் இழுவையாகக் கிளம்பி ஒலித்தது.
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாஅமி சங்கம் சரணம் கச்சாஅஅமி “சாத்தனார்* பற்றிய இளக்காரப் பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” அடிகள் ஆவேசமாய்க் கத்தினார். “பண்டைச் சான்றோரை இங்ஙனம் நையாண்டி செய்தால் தமிழ் எவ்வாறு வளரும்?”
* மணிமேகலை ஆசிரியரான ‘தண்டமிழாசான்’ கூலவாணிகன் சாத்தன் புத்த மதத்தைச் சேர்ந்தவர் (கூலவாணிகன் - தானிய வியாபாரி) “அடிகாள்! சினவல் ஓம்புமதி.” மாணிக்கம் அமர்த்தல் குறியாகக் கையை அலைத்தான். “தமிழ் வளராததற்கு சீரழிந்ததற்குக் காரணம், பண்டைச் சான்றோரும் மானிடரே என்பதை நாம் மறந்ததுதான்.” அடிகள் கண்ணை மூடிக் கொண்டு தாடியை உருவலானார். “உன் கூற்றானதால் இத்தோடு போயிற்று. நான் சொல்லியிருந்தால், என் தலையைச் சீவியிருப்பார்” ஆடிட்டர் பொய் அச்சத்துடன் கழுத்தைத் தடவலானார். “தமிழன்னை ஆணையிட்டால் யார் தலையையும் சீவுவோம்” அடிகள் உறுமினார். “உற்றார் உறவினராயினும் சரி. மனைவி மக்களே ஆயினும் சரி.” அடுத்த அறையிலிருந்து கட்டில் அசைவு ஒலியும் முனகல் குரலும் வந்தன. “பிறப்பின் தொடக்கம் மிக மிக அருவருப்பானது” ஆடிட்டரின் இமைகள் பொருந்தின. “நினைத்தாலே வயிற்றைப் புரட்டுகிறது” அடிகள் இடக்கையால் மூக்கைப் பொத்தினார். “சரி, அதற்கு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” கைலிக் கடைக்காரர் சீறினார். “வேட்டியை அவிழ்த்தெறிந்து விட்டு, பீலாஸ் காட்டுக்கு ஓடிப் போய் விடலாமா?” “குமாரவேல்! பொறுங்கள், பொறுங்கள்” பேராபத்தைத் தடுக்க முயல்பவர் போன்று, ஆடிட்டர் உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னார். “நான் எப்போதுமே அவசர முடிவுகளை வெறுப்பவன்... அருவருப்பான செயல்களில் ஈடுபடுவோர் அருவருப்பாகவே ஆகி விடுகிறார்கள் - மாடு தின்போர் மாடாகவும், கீரை தின்போர் கீரையாகவும் ஆகிவிடுவது போல். ஆகவே, அருவருப்பான செயலில் ஈடுபடுவதாயிருந்தால், அதன் விளைவுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... சோமபானம்...” படிக்கட்டில் ஆள்கள் ஏறிவரும் ஓசை கேட்டது. பாண்டியனின் குரல் கிளம்பி வந்தது.
“கலைநாடிய தமிழ்நாடுடை செழியற்கிடுதிறையா மலைநாடியர் மங்கோலியர் மனையிற்கடைதிறமின்!” அடுத்து நாவன்னாவின் குரல்:
“மழலைத் திருமொழியிற் சில மலாயும் சில தமிழும் குழறித்தரு குணநாடியர்* குறுகிக் கடை திறமின்!”
* கீழ்த்திசை நாட்டுப் பெண்கள் இருவரும் சிரிப்பொலியோடு கல்யாண மண்டபத்தில் புகுந்தனர். “நாவன்னாவின் தமிழ்ப் புலமையை இப்பொழுதுதான் அறிகிறேன்” மாணிக்கம் நிமிர்ந்து உட்கார்ந்து முறுவலித்தான். “கிட்டங்கியில் நிறைய சரக்கு உண்டு. ‘கலிங்கத்துப் பரணி’ தலைகீழ்ப் பாடம்.” நாவன்னாவைப் பாண்டியன் சுட்டினான். “காபி கொண்டு வரச் சொல்.” மாணிக்கத்தின் கை மணியை அழுத்திற்று. பையன் ஓடிவந்தான். காபி கொண்டு வரும்படி உத்தரவாகியது. வந்தவர்கள் அமர்ந்தனர். பாண்டியன் சட்டைப் பையிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்து ஒன்றை உருவிக் கொண்டு, பெட்டியை மேசையில் போட்டான். பையன் காபிக் கூஜாவையும் கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான். பாஞ்சாங் ஓடிவந்து, ஒரு நிமிஷம் கதவைச் சாத்தி வைக்கும்படி வேண்டினான். “பீக்கிலூ, பூசோ பூஞா ஓராங்” மாணிக்கம் சீறினான். ஹோட்டல்காரன் குனிந்து கிசுகிசுவென்று ஏதோ சொல்லவே, மாணிக்கத்தின் தலை அசைந்து அனுமதி கொடுத்தது. கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தான் பாஞ்சாங். “மெய்யன்பர்களே, கேளுங்கள்” மாணிக்கம் காலை நீட்டிச் சாய்ந்தான். “மலேயா திருவள்ளுவர்” சுப்பிரமணியனாரும், டத்தோ கிராமட் சாலையில் வீடுகொண்டு ஆன்றோர் விதித்த கற்பு நெறி தவறாதொழுகி, ‘கலியுகக் கண்ணகி’ என்ற பட்டத்துடன் வாழ்ந்து வரும் வள்ளியம்மையாரும் இப்பொழுது ரதிகேளி விலாசம் என்ற சிறப்புப் பெயருடைய ஒன்பதாம் இலக்க அறைக்குள் சென்று கொண்டிருக்கின்றனர்.” “கோவலனார் எங்கோ?” கைலிக் கடைக்காரர் முன்னே குனிந்தார். “வாணிப அலுவலாய் அயலூர்- அதாவது திருக்கடையூர் மாதவி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.” “அஅஆஅ” அடிகள் தாடியைக் கோதியவாறு கெக்கலித்தார். “நல்ல பெயர்ப் பொருத்தம்” கைலிக் கடைக்காரர் குறிப்பிட்டார். “சுப்பிரமணியனார் - வள்ளியம்மையார்.” “பட்டப் பொருத்தம் அதனினும் சிறப்பாக அமைந்துள்ளது. திருவள்ளுவ நாயனார் - கண்ணகி நாச்சியார்!” ஆடிட்டர் முகட்டை நோக்கிக் கைகளை உயர்த்தினார். திடுக்கிட்டுத் தலையைத் திரும்பிய அடிகள், சிரிப்பதா சினப்பதா என்று முடிவு செய்ய இயலாமல் ஓரே பார்வையாய் ஆடிட்டர் முகத்தைப் பார்த்தவாறு இருந்தார். கைலிக் கடைக்காரர் எங்கோ அவசர வேலை இருக்கிறதென்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். சாத்தையாவின் கட்டைச் சிவப்புடல் உள்ளே வந்தது. “வருக, வருக. நல்வரவாகுக” அன்பானந்த அடிகள் வரவேற்றார். “தண்டமிழாசான் சாத்தன் வருக” ஆடிட்டர் ஜெயராமனின் கண்கள் குறுகின. “அவர் உடல் நலம் வளர்க.” “கூழை வாணிகன் அமர்ந்தருள வேண்டும்” மாணிக்கம் நாற்காலியைச் சுட்டினான். “வந்தோம், அமர்ந்தோம்.” படிக்கட்டில், அழுத்தி மிதித்த காலடிகள் ஏறி வரும் ஓசை காதில் விழுந்தது. “கெம்பித்தாய்!” வாயிலிருந்த சிகரெட்டைக் கையில் எடுத்த மாணிக்கம் அறிவித்தான். “மேஜர் கெனியோச்சி இச்சியாமாவின் கிங்கரர்கள்.” பையன் ஓடிவந்து, “கெம்பித்தாய்! கெம்பித்தாய்!” என்று சன்னக் குரலில் அலறி எச்சரித்து விட்டு வெளியோடினான். அரவமின்றிச் சில விநாடிகள் கழிந்தன. கெம்பித்தாய் லெப்டினன்ட் அறைக்குள் புகுந்தான். இரண்டு கார்ப்பொரல்கள் வெளியே கதவையொட்டி நின்றனர். “சீக்கு?” அடிகளின் முகத்தை - கருந்தாடியைக் - கூர்ந்து நோக்கியவாறு லெப்டினன்ட் உறுமினான். “தமிரோ, மஸ்தா!” எழுந்து, தலைவணங்கி நின்று அறிவித்தார். “ஒஒஒ! தமிரோ...! தமிரோ ஜோத்தோ!” அறையிலிருந்த ஆள்களையும் பண்டங்களையும் ஒரு சுற்று நோட்டமிட்டபின், மேற்கொண்டு ஒன்றுமில்லை என்ற பாவனையாய்க் கையை அலைத்துவிட்டு வெளியேறினான். மற்ற அறைகளில் பலத்த உறுமலும் காலடி ஓசையுமாய் விசாரணை நடத்தி முடித்த பிறகு ஜப்பானியர் படிக்கட்டில் இறங்கிக் காரில் ஏறிக் கிளம்பின சத்தம் கேட்டது. அடிகள் எழுந்தார். கைகள் நீண்டு வளர்ந்த தாடியை உருவிக்கொண்டிருக்க, வாய் பாடியது.
“ஏற்றுக உலையே ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக! ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக!” ஆடிட்டர் எழுந்து உரத்த குரலில் கூவினார்: “பாஞ்சாங்” அடிகளின் பாட்டுத் தடைப்பட்டது. “பாஞ்சா அஅங்!” அழைப்புக் குரல் ஹோட்டல் முழுவதும் பரவி எதிரொலித்தது. புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|