மலர்

32. கிரியான்

     பிலவான் துறைமுகத்தை - சுமத்ரா கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கிரியான். வானில் தாரகைகள் சூழ நின்ற சந்திரமதி ஒளி வீசினாள். பாண்டியன், கம்பிக் கிராதியில் கைகளைப் பதித்து, நிலவுத் தேறல் களியாட்டத்தில் எழுந்து விழுந்து நெளிந்து புரண்டு கூத்தாடிய அலைகளைப் பார்த்து நின்றான். பச்சை நீலவானும் பசு மஞ்சள் கடல் பரப்பும் கலந்து நெகிழ்ந்து கிளர்ந்து மெல்லினிய மோகனப் பாட்டிசைத்தன. வானில் தொங்கிய சர விளக்குகள், அலைக் கொண்டையில் பிதிர்ந்த நுரைக் கோவைகளில் வைர வைடூரியமாய்ப் பிரதித்துப் பகட்டின.

     வலக்கை நெற்றியை வருடியது. கடலும் வானும் தொன்று தொட்டு மானிடனின் மனதை மருட்டி மிரட்டியும், தெம்பளித்து மகிழ்வித்தும் வருவது ஏன்? அகலாழமா, அழிப்பாற்றலா, அல்லது மனதற்ற பரிசுத்த நிலையா? மானிடன் ஏன் மிரள்கிறான். மகிழ்கிறான்? மனது இருப்பதால் மனதற்ற பரிசுத்த நிலை... ஆறறி உயிர்ப் பிராணிக்கு அந்நிலை இயலுமா? மனமின்றேல் குழப்பமில்லை. வாழ்வு தாழ்வு, உற்றார் வேற்றார், விருந்து பட்டினி என்ற வேறுபாடுகளும் இல்லை. மனதால் என்ன பயன்? அதை அழித்துவிட முடியாதா? திருச்சிராப்பள்ளி அறிவழகர் என்ன வேண்டினார்?

     ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக்கடற்குளே வீழாமல்
     மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் -

     ஒன்றை விட்டொன்று பற்றல்... ஆ, என்ன மடமை, என்ன மடமை... ஒன்றை விட்டொன்று பற்றல்!

     - மானிடனே, நண்பனே! நீ எதை விட்டு, எதைப் பற்றினாய், ஏனெதற்கு? - மானிடனே, தோழனே! நான் சாதி சமயத்தை விட்டுச் சங்கத்தையும் கட்சியையும் பற்றினேன். புராணங்களை எரித்துவிட்டுப் பத்திரிகைகளைப் படிக்கிறேன். மர்மக் கற்பனை தெய்வ விக்கிரகங்களை வெறுத்து, வெட்ட வெளிச்ச மானிடப் பொம்மைகளைத் தொழுகிறேன். காவி உடைச் சந்நியாசிகளைப் பழித்து, வேறு உடைச் செயலாளர்களைத் துதிக்கிறேன். காணிக்கை செலுத்த மறுத்துச் சந்தாக் கட்டுகிறேன். தேர்த் திருவிழாக்களுக்குச் செல்வதை நிறுத்தி, மாநாடுகளுக்கும் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கும் போகிறேன். நெற்றியில் திருநீறு பூசுவதை விடுத்துச் சட்டையில் சின்னம் அணிகிறேன். மோட்ச லோகப் புரட்டை விண்டறிந்த என் மனம் துன்பமில்லா இன்பபுரியை நாடி நிற்கிறது. நான் மூடநம்பிக்கை மடமையிலிருந்து விடுபட்ட அறிவியக்கப் பகுத்தறிவாளன்; விஞ்ஞானதாசன், அறிவே துணை, விஞ்ஞானமே கதி.

     - மானிடனே, நண்பனே! நீ ஏமாந்தாய், ஏமாந்தாய்! எதை விட்டு எதைப் பற்றினாய், அதற்கிது எவ்வகையில் நயம்? மூடநம்பிக்கை மதத்தினும் அறிவு நம்பிக்கை விஞ்ஞானம் எவ்வாறு மேம்பட்டது? மடமை, மடமை, மடமை... கடலடியில் நீந்தி என், நீந்தாதிருந்துமென்? அணுவைப் பிளந்து என், பிளவாதிருந்துமென்? சேண் நெடுந்தொலைக் கோளங்களோடு குறிபேசியென், பேசாதிருந்துமென்? இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால், அமைதி தரு மகிழ்வு பெறுமோ? பொய்மையும் பொறாமையும் ஒழியுமோ, ஒழியாதே! பொருளாசை புகழாசை அழியுமோ, அழியாதே! விந்தை விளைமந்த்ர தந்த்ர பவ்தீக ரசவாதப் பொறிகார விஞ்ஞானப் பேரறிஞீர், சொல்வீர், சொல்வீர்... வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

     சராய்ப் பையில் கையைவிட்டு, சிகரெட் பெட்டியை எடுக்கிறான். வலக்கை ஒரு சிகரெட்டை உருவி உதடுகளுக்கிடையே செருகுகிறது. இடக்கை தீப்பெட்டியைத் தூக்கி வருகிறது. வலக்கை தீப்பெட்டிச் செருகைத் தள்ளி ஒரு குச்சியை எடுத்து உரசி எரித்துச் சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு குச்சியை தீயைக் கடலுக்குள் எரிகிறது. வாய் புகையை இழுக்கிறது. வலக்கை மேலேறிச் சிகரெட்டைப் பற்றி இழுக்கிறது. ப்ஊஉஉ... தொண்டைக்குள் சென்று கணப்பு மூட்டிய புகை இப்போது கம்பியாய், வளையமாய், கம்பி வளையமாய் வெளியேறுகிறது. ப்ஊஉஉ... தாயுமானவர் விழைந்த செயல் - சிந்தையற்ற உயிர்மை இயலுமா... அப்படியானால் மனம் எதற்கு, புலன்கள் எதற்கு? ஒருக்கால் இவையெல்லாம் இருக்கவே செயல் சிந்தையற்ற உயிர்மை அடைவதுதான் அறிவாற்றலின் குறிக்கோளா? புரியாத வெறும் குழப்பம், குதர்க்கம்... மானிடன் அவ்வப்போதைய நிலவரத்திற்கேற்பத் தனக்குத் தெரிவான வகையில் செயலாற்ற வேண்டும். செயலற்ற நிலை சாவு. சிந்தையற்ற நிலை அழிவு. சிந்தை செயலற்ற நிலை பெறக் கானமலை உச்சிக் குகையில் கண்மூடி நெடிதிருப்பானேன். தீயினிடை வைகித் தோயமதில் மூழ்குவானேன், வாயுவை நிறுத்தி மனதினை அடக்குவானேன்? வெட்டி வேலை, வெட்டி வேலை. அரைப் பலம் அரளி வேரை அரைத்துத் தின்றால் உடனே பலன் தெரியுமே!

     சிகரெட் புகையை ஊதியவாறு பின்னே திரும்பினான். நெடுகிலும் மெத்தை விரிப்புகளின் மீது மனிதப் பிராணிகள் உறங்கின. ‘எல்லாம் யோசிக்கும் வேளையில், பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்.’

     கைகளை மீண்டும் கிராதிமேல் வைத்துக் குனிந்தான். பச்சை நீலவானில் தங்க மலரைச் சூழ்ந்து நின்ற வெள்ளி முகைகள் கண் சிமிட்டின. பசு மஞ்சள் சேலை அணிந்த கடல் நங்கை கெக்கலித்துச் சிரித்தாள். தென்றல் உடலைத் தாலாட்டியது. தென்றல், தென்காற்று... சின்னமங்கலம்... அது எப்போது தோன்றிய ஊர்? சங்க காலத்தில் இருந்ததா? பாரியின் பறம்பு மலையை நோக்கி மூவேந்தரின் கூட்டுப் படைகள் சென்றதைச் சின்னமங்கலம் அறியுமா? தெரியவில்லை. ஆனால், நவாபுகளின் குதிரைப் படையை அறிந்திருக்கிறது.

     துலுக்கன் வந்து தமுக்கடிக்கிறான் மேட்டுபட்டியிலே - அவன் துரத்தித் துரத்திப்
     பிடிக்கிறானே குதிரைசாயபு நாங்க பெண்டுகள்
     என்ன செய்யிவோம் நங்கைமார்களே நம்ம ஆம்பிளைக ஓடீட்டானே பேடிப்பயக
     துலுக்கன் வந்துஹ்ஹ்... ஐயையோ
     துலுக்கன் வந்துஹ்ஹ்... ஐயையோ துலுக்கன் வந்து
     தமுக்கடிக்கிறான் மேட்டுப்பட்டியிலே-அவன்
     தூக்கி வண்டியில் ஏத்துறானே குதிரைசாயபு
     நாங்க பெண்டுகள் என்ன செய்யிவோம் நங்கைமார்களே நம்ம ஆம்பிளைக ஓடீட்டானே பேடிப்பயக.

     பாளையக்காரர்களின் குழப்படிக்காலத்தில் கும்பினியான் படையும், மருதுபாண்டியன் படையும் சின்னமங்கலத்தில் மாறிமாறிக் கூடாரம் போட்டிருக்கின்றன. மருது வசமிருந்த பிரான் மலைக்கோட்டையைத் தாக்கிப் பிடித்த கர்னல் ஸ்ப்ரேயின் படைகள் கடைசி நாள் யுத்தத்திற்கு முன் இளைப்பாறியது சின்னமங்கலத்தில் தான். அதற்கு முன் இன்னஸ் தலைமையில் வந்த கும்பினிப் படையை மருது அங்கே வழிமறித்துத் தாக்கி விரட்டியிருக்கிறான். பிரான்மலையில் ஒளிந்திருந்த பாஞ்சாலங்குறிச்சி ஊமையனைத் தொண்டைமானின் காவலாள் முத்துவயிரவன் சேர்வை அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து கட்டிப் போட்டிருந்த தூண் இன்றும் சின்னமங்கலம் பெருமாள் கோயிலில் நிற்கிறது. நத்தம் லிங்கம நாயக்கனும், சிவகங்கை உடையார்த் தேவனும் வரிவசூல் என்ற சாக்குடன் மாறிமாறியும் ஒன்றுகூடியும் வந்து குடியானவர்களை அடித்து வதைத்துக் கொள்ளையடித்த கொடுமையை எதிர்த்து, இந்த ஊர் மக்கள் - ‘பள்ளுப்பறை அடங்கலாயப் பதினெட்டுச் சாதியும்’ - ஒரு தாய் வயிற்று மக்களெனத் தோளோடுதோள் நின்று வீரப்போர் புரிந்திருக்கிறார்கள். ஊமையனைப் பிடிக்கவென்று வந்த எட்டப்பனின் கம்பளரும், தொண்டைமானின் கள்ளரும், இங்கே முகாம் போட்டிருந்து, ஊர் மக்களின் நெல்லுப்புல்லு ஆடு மாடுகளையும் பணங்காசுகளையும் திருடியிருக்கிறார்கள். அதற்கு முன் பாளையக்காரர் என்ற பட்டத்துடன் கொள்ளைத் தொழில் நடத்தி வந்த சண்டாளர்களை இயன்ற போதெல்லாம் அடித்து ஒடுக்கிய நல்ல வீரன் கொமாந்தான் சாயுபு - மருதநாயகமாய்ப் பிறந்து முகமது யூசுப்கானாய் மாறிய ‘கான்சா’ - இந்த வழியே தனது படைகளை நடத்திச் சென்றதுண்டு.

     சின்னமங்கலம் நாகரிக யுகத்தில் காலடி வைத்தது வெகு அண்மையில், கடைவீதி வியாபாரிகளின் பிள்ளைகளுக்கு இங்கிலீசு சொல்லிக் கொடுப்பதற்கென்று வரவழைக்கப்பட்ட சுவிசேஷபுரம் ‘டானியல் வாத்தியார்’ நல்லான் குளத்தங்கரை வீட்டுக்கு முன்னால் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து. ஏ-பீ-சீ-டி (ஏபிசிடி ஙெப்பன் தாடி, ஓப்பீசிடீ ஙொப்பன் தாடி) புகட்டியது அரைகுறையாய் நினைவிருக்கிறது. சிவந்த புறாக் கண்ணும் காது வைத்துத் தைத்த காக்கிச் சட்டையுமாய் அவர் நடந்து செல்வதைப் பார்க்கவே பயமாயிருக்கும். வட்டவட்டமான பெரிய பொத்தான்கள் மிகுந்த அவர் ‘போலீஸ்’ சட்டையிலும் அரை மீசையிலும் மயங்கி, மனதையும் உடலையும் பறிகொடுத்த பெண்கள் பலபேர்.

     இரவில், இங்கிலீசு வாத்தியாரிடம் படிக்கும் நாடார் தெருப் பையன்களைச் சுற்றிக் கொண்டு, தந்தைமார் கேள்வி மேல் கேள்வி போடுவார்கள் -

     “டேய், என் பேருக்கு என்னடா இங்கிலீசு?”

     “...”

     “கெளுத்தி மீனுக்கு?”

     “...”

     “என்னடா இங்கிலீசு படிக்கிறிங்ய, இங்கிலீசு. கூமுட்டைப் பயக... அட அந்தா, வாளாந்தான் மகன் வாறானப்பா, அவன் நல்லாப் படிப்பான்... டேய், மாரியப்பா! இங்க வாடா... உன் பேருக்கு என்னடா இங்கிலீசு?“

     “வாக்கினேசன்.”

     “கெளுத்தி மீனுக்கு?“

     “ஐடோப்பா”

     மின்னல் வேகத்தில் விடைகளை வீசி எறிந்த மாரியப்பன், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்ச - நடுக்கத்துடன் ஒரே பார்வையாய் எதிரே பார்த்து நிற்கிறான்.

     “புலிக்குப் பிறந்தவன்ல! அஅஅஆ...” மாரியப்பனின் ஐயாப்பன் நீர் காத்தலிங்க நாடார் வெற்றிக் களிப்புடன் கெக்கலிக்கிறார்.

     மற்றப் பையன்களின் முதுகில் தந்தையரின் கைகள் பலம் கொண்ட மட்டும் அடித்து விளையாடுகின்றன.

     “முட்டாப் பயலுக்குப் பிறந்த பலே, உனக்கு என்னத்துக்குடா படிப்பு? மாடுமேய்க்கப் போ, ஓடு. மாரியப்பனும் உன்னைப்போலப் பிள்ளைதானே, ம்?... ஆவரங்காட்டுக்குப் போயிப் பொன்னுவண்டு பிடிக்யத் தெரியுமா...? உதியன் ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடப் போறியா?”

     “கூதறைப் பய பிள்ளைக... பஞ்சாங்க ஐயர் மகனெல்லாம் என்னமாய் இங்கிலீசு படிக்கிறான்! அவனுக்கும் இவுக வாத்தியார் தானே சொல்லிக் கொடுக்கிறாரு?”

     “அக்கறையாய்ப் படிக்யணுமுல” நீர்காத்தலிங்க நாடார் கொக்கரித்தார். “பாடம் படிக்யாமக் கணக்கன்குண்டுல எருமை மாட்டு வாலைப் பிடிச்சு நீச்சடிச்சுக்கிட்டுத் திரிஞ்சால் இங்கிலீசு எப்படி வரும்?”

     ‘குதிரைச் சவாரி’யிலிருந்த சில சந்தை வியாபாரிகள் கையில் அகப்பட்ட கயிறு, கம்புகளை எடுத்துக் கொண்டு பையன்களைத் தீட்டுகிறார்கள்.

     “ஐயையோஓஓஓ!... அடிக்யாதிங்கையா. இனிமப் பொன்னுவண்டு பிடிக்யப் போகலய்யா... ஐயையோஓஓ... இனிம நல்லாப் படிக்கிறென்... ஐயோ! அம்மா!... செத்தென் செத்தேன்எஎ...”

     அடுப்புப் புகையோடு மாரடித்துக் கொண்டிருந்த தாய்மார்கள் ஓடோடி வந்து, உடலில் ஐந்தாறு அடிகளைத் தாங்கியவாறே பிள்ளைகளை மீட்டு அணைத்துச் செல்கிறார்கள்.

     அலைகளின் களியாட்டத்தினூடே வெள்ளிய பெரிய மீன் துள்ளிப் புரண்டது. மீன்களுக்கு உறக்கம் உண்டா, இல்லையா... இடக்கையைத் தூக்கிப் பார்த்தான். மணி 11-17. படுக்கலாம். எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். அரசியை மயக்கிய அறிவழகீர்! ‘எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்.’