உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 40. கெர்க் ஸ்ட்ராட் ஹக்கா ஸ்ட்ராட்டில் ஹாஸ் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் பகட்டியது. இரு திசைகளிலும் வண்டிகளின் ஓட்டம். பாண்டியன் இடது விளிம்பில் மேற்கு முகமாய்ச் சென்று கொண்டிருந்தான். ஊதா ட்வில் சட்டையை உள்ளடக்கிய பச்சைக் கொட்டடிப் பழுப்பு நிறக் கைலி. காக்கி கோர்டுரோய் கோட். காலில் செருகு சப்பாத்து. பின்னால், இப்புறமும் அப்புறமும் ஒதுங்கி, மலாய் உடையில் ஜுமாடியும், இஸ்காந்தரும் சென்றனர். அவர்களுக்குப் பின்னே அதே முறையில் ரஷீத்தும், கர்த்தாவிரோவும் நடந்தார்கள். ரொக்ஸி பயாஸ்கோப் அருகே, ஜீப் வண்டியை ஒட்டி நின்ற டச்சு லெப்டினன்ட் முறைத்துப் பார்த்தான். பாண்டியன், தோட்டக் காட்டுத் தமிழனின் தெம்மாடித் தோற்றத்துடன் வாயிதழ்களை விரித்துக் கண்களை இடுக்கியவாறு ஒரே சீராய் நடந்தான். இடக்கை பிடரியை மாறி மாறிச் சொறிந்தது. தண்டவாளப் பாதையைக் கடந்தான். கெர்க் ஸ்ட்ராட். டெர்மூலன் ரெஸ்டாரன்ட். ராணுவத்தினர் மொய்ப்பு. வண்டி வரிசை. இடப்புற மாதா கோயிலை ஒட்டி நடந்தான். கார்கள் விரைந்தன. மானிடர் ஊர்ந்தனர். இடையிடயே ஆயுதம் தரித்த சிப்பாய்கள். மரக்கிளைகள் சரசரத்தன. டாவ்ரோஸ் உச்சி மாடியில் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம். “பிரெந்தி!” நடைபாதையோரம் மோட்டார் - பைக்கை நிறுத்தி விட்டு வந்த டச்சு கார்ப்பொரல் உறுமினான். வலக்கையில் பிஸ்டல். மறுகை இடைவாரைப் பற்றி இருந்தது. பாண்டியன் நின்றான். எதிரே நான்கு அம்போன் சிப்பாய்கள் உரக்கப் பேசிச் சிரித்து வருகின்றனர்... நிறுத்தியவனின் கண்களைப் பார்த்தான். ஐயம் விழிக்கிறது. “நெய்க் தாஙான்.” பாண்டியன் கைகளை உயர்த்தினான். சிரித்துப் பேசி வந்த சிப்பாய்கள் தம்பாட்டில் கடந்து சென்றனர். மிரட்சிப் பார்வையாய் கார்ப்பொரலின் கண்களை நோக்கினான். இன்னான் என்று கருதுகிறானா... வெறும் ஐயமா... பேசி ஏமாற்றிச் சமாளிக்க வேண்டும்... “துவான்! சாயா கிலிங், துவான்... துவான்! சாயா தீடாமிலாயு, துவான்,” அப்பாவிக் குரல் கலங்கி முறையிட்டது - மலாய்க்காரன் அல்ல, தமிழன் என்று. இடுங்கிய கண்கள் டச்சுக்கரனின் முகத்தைக் கூர்ந்து கணித்துக் கொண்டிருந்தன. வழிப்போக்கர்கள் நடை வேகத்தைக் குறைத்துத் திரும்பியும், கொஞ்சம் தள்ளிப் போய் நின்றும், வேடிக்கை பார்த்தனர். “டாத்தங் சம சாயா.” கார்ப்பொரல் உறுமினான். தன்னுடன் வரும்படி. “துவான்! சாயா கிலிங், துவான்... துவான்! சாயா தீடாமிலாயு துவான்.” தலைக்குமேல் செங்குத்தாய் வானை நோக்கிநின்ற கைகளை சைகைக் குறியாய் நடுங்கி அசைந்தன. டும். பின்னே தோட்டா வெடிக்கும் ஓசை. டச்சுக்காரனின் கண்கள் இமைத்தன. உயர்த்திய கைகளோடு நின்றவன் மின்னல் வேகத்தில் குந்திப் பக்கவாட்டில் தாவினான். இடக்கையை உரசிக்கொண்டு தோட்டா பறந்தது. பிஸ்டல்கள் முழங்கின. டும் டும் டும்... கையில் பிஸ்டலுடன் தாவித்தாவிக் குதித்துக் குறுக்கு நெடுக்குமாய் மாறி மாறி ஓடினான். தோட்டாக்கள் பறந்தன. உடல்கள் விழுந்தன. அங்கங்கு இருந்தும் ஓடித் தொடர்ந்தும் சிப்பாய்கள் சுட்டனர். “ஷியூட் ஹெம்! ஷியூட் ஹெம்!” டச்சுக்குரல்கள் அலறின. துணைக்கு வந்தோர் நால்வரும் பிரிந்தோடி நின்று, தாவி விழுந்து புரண்டெழுந்து சுட்டார்கள். வழிப்போக்கர்கள் சிதறியோடினர். தரையில் நெடுங்கிடையாய் விழுந்து காதைப் பொத்திக் கொண்டார்கள். ராணுவ எச்சரிக்கைச் சங்கு ஓவென்று ஓலமிடத் தொடங்கியது. பின்தொடர்ந்து சுட்டு வந்தவனைப் பக்கவாட்டில் தாவித் திரும்பிச் சுட்ட பாண்டியன் குனிந்தும் நிமிர்ந்தும் கோணல் மாணலாய் ஓடினான். டாவ்ரோஸ் தாழ்வாரத்துக்குப் போய்விட்டால் தோதாயிருக்கும். பெரும் பெரும் தூண்கள். சுடவும் மறையவும் வசதி... கெசாவனில் வந்த ஜீப் நின்றது. குதித்திறங்கியவன் தோளில் தொங்கிய டாமி துப்பாக்கியை இடுப்பு மட்டத்தில் பிடித்து விசையை அழுத்தினான். டட்டட் டர்ர்ர்... நாற்சந்தியில் சுருண்டு விழுந்தான். தடதடதட... புயல் வெள்ளம் பூகம்பம் இருளிருளிருள் ஊற்றுயீரவெள்ளம் கைகால் இடுப்ப நெஞ்சு தடதடதட தடதடதட... இடக்கையில் டாமி துப்பாக்கியுடன் ஓடி வந்த டில்டன் குனிந்து பார்த்தான். “ஹோட்! பாண்டையான்... ராஜா உத்தாங்...” ஓடிவந்து சுற்றிநின்ற சிப்பாய்கள் வியப்புடன் உற்றுப் பார்த்தனர். வாய்கள் அரற்றின: “ராஜா உத்தாங்... ராஜா உத்தாங்... ராஜா உத்தாங்...” டில்டன் நிமிர்ந்து கட்டளைகளைப் பொழிந்தான். “சீபர்லிங்! சாலையை அடை... பால்ஸ்ட்ரா! டெர்மூலன் கூட்டத்தை விரட்டு... படுக்கை போடச் சொல்... நீல்சன்! அம்புலன்ஸ்...” குனிந்து, தரையில் கிடந்தவனின் சட்டைப் பொத்தான்களைப் பிரித்து விட்டான். ரத்தம் ரத்தம் ரத்தம். உடல் உடை தரையெல்லாம் ரத்தம். முதுகுக்குக் கீழே கைகளைக் கோத்துத் தூக்கிச் சென்றனர். மேசைகளைச் சேர்த்துப் போட்டு, விரிப்புகளை மெத்தையாய்ப் பரப்பிய படுக்கை மீது கிடத்தி முதலுதவி வைத்தியம் செய்தார்கள். “பான்டையான்...! பான்டையான்!” மேசைப் படுக்கையில் கிடந்தவனின் முகத்தை நோக்கியபடி டில்டன் நின்றான். உடல் அசைந்தது. கெர்க் ஸ்ட்ராட். மாதா கோயில். கார்ப்பொரல். வெடியோசை. பேச்சுக்குரல். டில்டன் குரல்... “பான்டையான்! பான்டையான்!” கண்கள் விழித்துக் கூசிப் படபடவென்று இமைத்தன. பாதாளக் குரல் கிளம்பியது. “ஹுடன்* அவொண்ட், மயோர்.”
* (டச்சு) குட் ஈவினிங் மேஜர். “ஹுடன் அவொண்ட், ராஜா உத்தாங்.” எட்டிச் சுவரோர மேசை மீதிருந்த தம்ளரை எடுத்து நீட்டினான். “இதைக் குடியுங்கள். இனிமேல் ஆபத்தில்லை. டாக்டர் வந்து கொண்டிருக்கிறார் - டாக்டர் ஹியூபர்.” திண்டுக்குக் கீழே கையைக் கொடுத்துத் தலையைத் தூக்கித் தம்ளரை வாயருகே பிடித்தான். நெருப்பு நீர் தொண்டையிலிறங்கி உடலில் தீ மூட்டித் தெம்பு பாய்ச்சியது. “என் ஆட்கள்?” “தெரியவில்லை, மொத்தம் ஆறு.” “எனக்கு இன்னும் கொஞ்ச நேரம்.” “நேன் நேன், இனிமேல் ஆபத்தில்லை. வலிய உடல். திடமான நெஞ்சு. திறமையான டாக்டர் வருகிறார். புதிய விந்தை மருந்துகள். சில தையல்கள். சில நாள் படுக்கையில். மீண்டும் பழைய பான்டையான்!” “ஓஹோ” “ஓஹோ ஒன்றுமில்லை. உண்மை... என்ன விபரீதமான சந்திப்பு.” “எப்படியோ... சந்தித்தோம்.” “சந்திப்பதும், பிரிவதும் மனிதனின் தலைவிதி.” “சந்திப்பின் விளைவே பிரிவு... கண் கூசுகிறது... இது என்ன கட்டிடம்?” “டெர்மூலன்.” எட்டிப்போய் எதிர்விளக்கை அணைத்துவிட்டு வந்தான். “அதற்குப் பின் எவ்வளவு நேரமாகிறது?” “சுமார் 20 நிமிஷம்.” “அவனுக்கு எப்படித் தெரியும்?” “புகைப்படத்தைச் சிலரிடம் காட்டி வைத்தேன்.” “எந்தப் படம்?” “சிங்கப்பூரில் பின்லிங் ஸ்டுடியோ.” “ஆ, மூன்று பேர் படம்!” “கைது செய்து, இந்தியாவுக்குக் கப்பலேற்றி அனுப்புவது எங்கள் திட்டம்... துப்பாக்கிச் சூடு... விரும்பத்தகாத... பக்க விளைவு.” “ஓ!” “பிரிட்டிஷ் கான்சல், என் தந்தையின் நண்பர். உதவி செய்வதாய் வாக்களித்திருந்தார்.” “பழைய மாலிசன்?” “யா... பிரிட்டிஷ் பிரஜைகளின் நலனைப் பேணுவதில் பிடிவாதமானவர்.” “யா... தெரியும்.” “கொஞ்சம் ஓய்வு. அதற்குள் டாக்டர் வந்து விடுவார். மீண்டும் டெலிபோன் செய்துவிட்டு வருகிறேன்.” அடுத்த அறையை நோக்கி விரைந்தான். மூச்சுத் திணறியது. நெஞ்சுத் தொண்டை உருண்டுருண்டு பாதாள வெற்றுவெளி பாழ்வெளி காயம் குருதிவெளி பாழ்வெளி பினாங் ராஜுலா நாகப்பட்டினம் மதுரை சின்னமங்கலம் சந்தை வேப்பெண்ணெய் மருக்கொழுந்து கடகடவண்டி ஆளுயரப் பொரி உருண்டைக் கூடை புழுதி வட்டக் குடுமி பழுக்காக் கம்பி வேட்டி சாக்கு புகையிலை ‘ஓடியா ராசா ஓடியா போனா வராது பொழுது விழுந்தாச் சிக்காது’ அம்மன்கோயில் பொட்டல் பால்நிலவு சடுகுடு,‘நான்டா ஙொப்பன்டா நல்ல தம்பி பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரண்டா,’ மதுரை இம்பீரியல் சினிமா தெற்கு வெளிவீதி வியாபாரி வீடு மஞ்சனக்காரத் தெரு குயவர் பாளையம் ஒண்ணாம் நம்பர் சந்து ‘ஞே இவட நோக்கே’ மெடான் மொஸ்கிஸ்ட்ராட் பிலிதோன் ஸ்ட்ராட் அயிஷா தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுடல் ‘சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா’ யுத்தம் கொள்ளை ஐந்து தலைகள் அர்மேனியா ஆறு ரோல்ஸ் ராய்ஸ் லாயர் டில்டன் தொங்கான் புயல் பினாங் மாணிக்கம் நான்யாங் ஹோட்டல் நீசூன் கோத்தா பாலிங் ஜாராங் பலவேசமுத்து ரக்பீர்லால் சிறை கலிக்குஸுமான் விலாசினி யாமசாக்கி நேதாஜி ‘விதித்த கடமையை வழுவின்றி நிறைவேற்றினாய்’ பினாங் நடராஜன் சூலியா தெரு சுந்தரம் ‘அண்ணே காப்பாத்துங்கண்ணே’ பேங்காக் ரேசன் தீர்க்கதரிசி மெடான் அயிஷா தங்கையா காடு சண்டை கங்சார் ஊர் ஊர் ஊர் பதக்கம் கெர்க் ஸ்ட்ராட் குண்டு டில்டன் ‘ஆ என்ன விபரீதமான சந்திப்பு’ நெஞ்சு தொண்டை மூச்சு நெஞ்சு தொண்டை மூச்சு நான் நான் நான் புல் மரம் புள் விலங்கு நிலம் நீர் நெருப்பு வளி வான் அண்ட பிண்ட சராசரங்கள் நான் நான் நான் நானேஎஎ... “பான்டையான்! பான்டையான்!” ஓடி வந்தவன் தொட்டுப் பார்த்தான். உடல் சில்லிட்டு உறைந்திருந்தது. துணியை இழுத்து முகத்தை மூடினான். கடகடத்து வந்த ஆம்புலன்ஸ் வண்டி வாசலில் கிரீச்சிட்டு நின்றது. மேஜர் யொஹான் கைசர் டில்டனின் வாய் முனகலாயிற்று: “அச்சமற்ற மானிடனே! வீரனே...! உறங்கு... உறங்கு...” ***** புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|