அரும்பு

18. மிட்வே

     ஜப்பான்-அமெரிக்கா யுத்த முடிவு பசிபிக் ஆழி அரங்கிலேயே தீர்மானமாக வேண்டும். இதை நன்குணர்ந்த ஜப்பானியக் கடற்படைகளின் தலைவர் யாமமோத்தோ கலங்கினார். அமெரிக்காவின் கப்பல், விமான பலம் நாளுக்கு நாள் வெகு விரைவாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால், ஜப்பானின் நிலைமையோ இதற்கு நேர்மாறுதல். ஒப்பற்ற பொருள் வளமும் உண்டாக்க வசதிகளும் கொண்ட எதிரியின் படைபல வளர்ச்சியுடன் போட்டியிட ஜப்பானுக்கு வகையே இல்லை.

     அமெரிக்காவின் பசிபிக் ஆழிக் கப்பற்படை பலம், தகர்க்க முடியாத அளவில் உச்சம் பெறுவதற்கு முன்னரே, அதை உள்ளிழுத்து ஒழிக்கும் உபாயமாகவே மிட்வே - அலூஷியன் தாக்குப் போர்த் திட்டத்தை யாமமோத்தோ வகுத்தார். அதன்படி, அட்மிரல் நகுமோவின் அதிரடி அணியும், களத்தை நோக்கிப் புறப்பட்டன. யாமமோத்தாவின் நேரடித் தலைமையில் இருந்த போர் அணி, தேவை ஏற்படின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் நோக்கத்துடன், மாரியானி தளத்தையொட்டி லாந்திக் கொண்டிருந்தது.

     பெர்ள் ஹார்பர் நொறுக்கடிப் போரில் போலவே, நகுமோவின் விமான அணிகள், கமாண்டர் புச்சிடா தலைமையில் மிட்வே தீவுத் தளத்தின் மீது பாய்ந்தன. ஆனால் இந்தத் தடவை, ஜப்பானிய அதிரடி அணி வருவதையும், அதன் போர்த் திட்டத்தையும் தெரிந்திருந்த அமெரிக்கப் போர் விமானங்களும் பீரங்கி வரிசைகளும், புச்சிடாவின் கழுகுகளை வரவேற்கச் சித்தமாயிருந்தன.

     குண்டுகள் வெடித்தன. பீரங்கிகள் முழங்கின. விமானங்கள் எரிந்தன. கப்பல்கள் கவிழ்ந்தன.

     புச்சிடாவின் விமானங்கள் தாக்கு நடவடிக்கையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தபோது, மிட்வே தீவுக்குத் தெற்கே வலிமைமிகு அமெரிக்க ‘டாங்க்’ அணிகள் தோன்றி, எதிரி விமானங்களில் ஒரு பாதி தாக்கு நடவடிக்கையிலும், மறுபாதி தாய்க் கப்பல்களில் பெட்ரோல் குடிப்பதிலும் முனைந்திருந்த நேரத்தைத் துல்லியமாய் கணக்கிட்டுத் தம் குண்டு விமானங்களையும் டார்பிடோ விமானங்களையும் சண்டை விமானங்களையும் பறக்க விட்டன. வியப்படி வாய்ப்புக் கிட்டியதாகக் கருதியிருந்த நகுமோ, சுற்றுக் காவலுக்குத் தேவையான விமானங்களைக் கூட நிறுத்திக் கொள்ளாமல், அனைத்தையும் போரில் ஈடுபடுத்தி இருந்ததால், அமெரிக்க விமானங்களின் வேலை சுளுவாய் அமைந்து விட்டது.

     மிட்வே தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் அல்லும்பகலும் மூன்றுநாள் நடந்த அஞ்சுவரு போரில் அட்மிரல் நகுமோ 4 விமானந் தாங்கிக் கப்பல்களையும், பல குரூசர்களையும், டெஸ்ட்ராயர்களையும், ஏராளமான - ஏறக்குறைய எல்லா விமானங்களையும் இழந்து விட்டார்.

     முதலில் வந்த ரேடியோ தகவல்களை வைத்து, அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று மட்டுமே மிஞ்சியிருந்ததாகக் கருதிய யாமமோத்தோ, அட்மிரல் கொண்டோவும், அட்மிரல் ஹோசகாவாவும் அதிரடி அணியின் உதவிக்கு - எதிரி டாஸ்க் அணிகளை துடைத்தொழிக்க - விரைந்து செல்லுமாறு கட்டளை பிறப்பித்துவிட்டுத் தனது அணியுடன் களத்துக்குச் செல்லத் தயாரானார். அப்பொழுது அதிரடி அணித் தலைவரிடமிருந்து இறுதி நிலவர அறிக்கை வந்தது. “எதிரியின் 4 விமானந்தாங்கிக் கப்பல்கள் களத்தில் திரிகின்றன. என்னிடம் உருப்படியாக ஒன்றுகூட இல்லை.”

     பேராபத்து நிலைமையை உணர்ந்த யாமமோத்தோ அவரிடம் ஒரே ஒரு சிறு விமானந்தாங்கிக் கப்பலே இருந்தது - போர்ப் பிடியிலிருந்து நழுவி மறையும்படி 3 தாக்கடி அணிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

     யாமமோத்தாவின் மிட்வே போர்த்திட்டம் தோற்றதற்கு முக்கியக் காரணம், ஜப்பானியக் கடற்படையின் கூகமொழி அமைப்பு முறையை அமெரிக்க வேவுத் துறையினர் கண்டு பிடித்துவிட்டதேயாகும். போர்த் தேதி, கலந்துகொள்ளும் அணிகள், தாக்குமுறைகள் முதலான எல்லா விவரங்களும், ஜப்பானியக் கடற்படையின் ரேடியோ செய்திப் போக்குவரத்தை ஒற்றுக்கேட்டு வந்த அமெரிக்கக் கடற்படைத் தலைவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தெரிந்திருந்தது.

     பசிபிக் அரங்கில் மிட்வே யுத்தமே திருப்புமுனை... பிறகு சாலமோன் தீவுக் கூட்டத்துக்காக சண்டைகள் மூண்டன. பிணமாலைகள் உயர்ந்து குருதிவெள்ளம் பரந்தோடிய குவாடல்கனால் தீவு அமெரிக்கர் வசமாகி, மாபெரும் போர்த்தளமாக மாறிக் கொண்டிருந்தது.

     மாஸ்கோ நகர் வாயிலில் ஹிட்லரின் சேனைகள் மறித்து நிறுத்தப்பட்டது உலக வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்ச்சி. நகரின் தென்புறத்தைத் தொட்ட ஜெர்மன் சூறாவளித் துருப்புகள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரச்சார பீடமான பிராவ்டா மாளிகையைக் கைப்பற்றி விட்டார்கள்; அதன் தலைமீது நாஜி சுவாஸ்திகா கொடி பறக்கிறது! வடக்கே, நகர ட்ராம் தட எல்லையான ‘கிம்கி’யில் ஜெர்மன் டாங்கிகள் புகுந்துவிட்டன.

     கிழக்கு வெளுக்கும் நேரம். இன்னும் சில நிமிஷங்களில் நகரை வளைத்து நசுக்கிக் கைக்கொள்ள, ஜெர்மன் வெற்றிக்கு அறிகுறியாக க்ரெம்ளின் அரசகத்தை வெடிவைத்துத் தகர்த்தெறிவதற்கான ‘இறுதிப் பாய்ச்சல்’ உத்தரவு பிறக்கவிருக்கின்றது.

     பான்சர் அணிகளும் அதிரடிப் படைகளும் சித்தமாய் நின்றன.

     அப்பொழுது -

     திடுமெனச் செஞ்சேனையின் போர் முரசம் முழங்கிற்று; விண்ணும் மண்ணும் அதிரப் பீரங்கிகள் கொக்கரித்தன; பனி வர்ணம் பூசிய டாங்கிப் பூதங்களின் உருளோசை கடகடத்தது; வெண்கம்பளி ஆடை தரித்த கீழ்த்திசை வீரர்களுடன் சறுக்கு வண்டிகள் பாய்ந்தோடி வந்தன - ரொகொசாவ்ஸ்கியின்* சைபீரியச் சேனை களத்தில் குதித்துவிட்டது.

     * மார்ஷல் கொன்ஸ்தாந்தின் ரொகொசாவ்ஸ்கி - கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாக கைதாகி 4 ஆண்டு காலம் சிறைப்பட்டிருந்த இவர், ஜெர்மன் படையெடுப்புக்குப் பின் விடுதலை பெற்று, சைபீரிய 1ஆம் சேனையின் தலைமையை ஏற்றார். பிறகு, சேனைத் தொகுதி ஒன்றுக்குத் தலைவராகி, ஸ்டாலின்கிராட் வெற்றிக்குப் பின்னர் மார்ஷல் பட்டம் பெற்றார்.

     “சைபீரியர் வந்துவிட்டார்கள்! சைபீரியர் வந்துவிட்டார்கள்!”

     ரஷியப் போர் வரிசைகளிலெல்லாம் மகிழ்ச்சி. ஆரவாரம் பொங்கி எழுந்தது.

     ரெழேவ் நெடுஞ்சாலைப் பிரதேசத்தில் விரைந்து வந்த ஜெர்மன் அதிரடிப் படைகளை மடக்கும்படி சைபீரியரை ஏவியபின், அதுவரை காப்புப் போரில் ஈடுபட்டிருந்த படைகளை எல்லாம் அலை அலையாகத் தாக்குப் போரில் வீசி எறிந்தார் ஜுக்காவ்.

     வெர்மாக்ட் அணிகள் களத்தைக் கைவிட்டு ஓடுகின்றன.

     நெப்போலியன் போனபார்ட்டின் கிராண்ட் ஆர்மிக்கு நேர்ந்த கதி, அடால்ஃப் ஹிட்லரின் வெர்மாக்ட்டையும் எதிர்ந்து விட்டதென உலகம் கருதியது. ஆனால் ரஷிய ஜெனரல்களில் பலருக்கு, மாறுபடும் களநிலவரத்திற்கேற்பத் தன்னிச்சையாய், துணிச்சலோடு புது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தன்னம்பிக்கை இன்னும் பிறக்கவில்லை. தவிரவும், குலைந்துபோன ஜெர்மன் போர்வரிசைகளை நிலைப்படுத்திச் சீரமைப்பதற்காகத் தென் அரங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட மான்ஸ்டைனின்* காப்புத் தாக்கு நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, பேராபத்து சூழ்ந்து நின்ற அந்தப் பனிமாரிக் காலத்தில் ஜெர்மன் கீழைச் சேனைகள் கரைந்தழிந்து போகாமல் தப்பிப் பிழைக்க முடிந்தது.

     * ஃபீல்ட் மார்ஷல் எரிக்வான் மான்ஸ்டைன் - ஜெர்மன் சேனாதிபதிகளில் தலை சிறந்தவர். தாக்குப் போர், காப்புப் போர்த் துறைகளிலும் போர்த் திட்டம் வகுப்பதிலும் வல்லவர். உலகை நடுக்கிய மேற்கு ஐரோப்பிய பாய்ச்சல் (1940) திட்டத்தை வகுத்தவர் இவரே! (ஸ்டாலின்: “மான்ஸ்டைன், ஹிட்லரின் ஜெனரலக இல்லாதிருப்பின், அவரை ரஷிய யுத்தக் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பேன்”)

     பனிமாரிக் காலம் போய் வசந்தம் பிறந்தது. ரஷிய பூமி வெயிலில் காய்ந்து ஈரமிழந்து இறுகத் தொடங்கியது. மாஸ்கோ புதை சகதியில் சிக்கித் தப்பிய ஜெர்மன் ராணுவம் வியத்தகு முறையில் புதுத்தெம்பு பெற்றுப் புதுப் பாய்ச்சலுக்குச் சித்தமாகியது.

     தென் அரங்கில் பாயும்படி உன்னத சேனாதிபதி ஹிட்லரின் கட்டளை பிறந்தது.

     ஃபீல்ட் மார்ஷல் பெடோர் வான்போக் தலைமையில் 20 லட்சம் துருப்புகள் அடங்கிய வலிமை மிகு சேனைகள், எதிர்த்த படைகளை எல்லாம் நொறுக்கி வீழ்த்தியவாறு கிழக்கு முகமாய்ப் பறந்து சென்றன.

     6வது வாரத்தில் ஜெர்மன் வலச்சிறகு - கிலய்ஸ்ட் பான்சர் கணம், காகசிய எண்ணெய் வயல்களில் புகுந்துவிட்டது. இடது சிறகோ - பவுலஸ் தலைமையில் சென்ற 6வது சேனை - ஓல்கா நதிக்கரையை அடைந்து, ஸ்டாலின் கிராட் நகருக்கான போரைத் தொடங்கியது.

     நகரைக் காத்து நின்ற சுய்க்கோவ்வின் படைகள், வெர்மாக்ட்டின் சிந்தை கலங்கும் கொடூர அடிகளைத் தாங்கித் தாங்க முடியாமல் திணறின.

     “உதவி உதவி” என்று கதறினார் ஸ்டாலின்கிராட் தளபதி. ‘இல்லை’ என்று கைவிரித்தார் தென்போல் மண்டலத்தின் புதிய தலைவர் ஜுக்காவ்.

     தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, அறைக்கு அறையாய் இரவும் பகலும் பல நாள், பல வாரங்கள் இடையறாப் போர் நிகழ்ந்தது.

     எங்கு பார்க்கினும் பிணக் குவியல்கள்; கட்டிட இடிவுகள்; எரிந்து நொறுங்கிய விமானங்கள், பீரங்கிகள், வாகனங்கள், டாங்கிகள்...

     கள வீரர்கள் மெய்மறந்து மனங்குழம்பும் ‘தமர் பிறர் அறியா அமர் மயங்கு’ நேரம் - இறுதி நெருக்கடி வேளை வந்துவிட்டது.

     அப்பொழுது -

     வடதிசையிலிருந்து வடூத்தின் படைகளும், தென்புறத்தேயிருந்து எரமெங்க்கோ படைகளும் மின்னலெனத் தோன்றி, ருமேனிய 3 ஆம், 4 ஆம் சேனைகளை அடித்து நொறுக்கி அடிபணியச் செய்தபின், முன்னேறிப் போய் ஜெர்மன் சிறகுகளைப் பிடித்துக் கடித்துக் குதறலாயின. மேற்கே, ஜெர்மானியர் முதுகுப்புறத்தில் ரொகொசாவ்ஸ்கி சேனை மாயவித்தைபோல் முளைத்துப் படர்ந்து வளைத்துச் சாடிற்று. சுய்க்கோவ்வின் வீரர்கள் நாஜிகளின் குரல்வளையைப் பிடித்து நெரிப்பதற்காகத் தாவிப் பாய்ந்தனர்.

     முற்றுகையிட வந்தவர்கள் முற்றுகைக்குள்ளாகி விட்டனர்!

     ஜுக்காவின் வளைய வியூகம் இறுகத் தொடங்கியது; இறுகிக் கொண்டே இருந்தது. சேனைமடி களங்கள் பலவற்றில் வாகைசூடிப் பெரும் பெயர்பெற்ற ஜெர்மன் 6வது சேனை இடுப்பொடிந்து துடிக்கலாயிற்று.

     ரஷியரின் முற்றுகையை உடைத்து, 6வது சேனைக்குத் தொடுவழி பிளக்கும்படி டான் பிரதேச சேனாதிபதி மான்ஸ்டைனைப் பணித்தது ஜெர்மன் போர் வாரியம். மான்ஸ்டைன் தனது படைகளில் ஒரு பகுதியை வடக்கே திருப்பிவிட்டார்.

     உதவிப் படைகள் ஸ்டாலின்கிராடுக்கு 35 மைல்வரை நெருங்கி விட்டன.

     அப்பொழுது -

     மான்ஸ்டைனின் வருகையை எதிர்பார்த்து நின்ற மாலினோவ்ஸ்கியின் உக்ரைனிய சேனை குறுக்கே பாய்ந்து மறித்தடித்தது.

     கோதல் நிக்கோவ் பறந்தலையில் மான்ஸ்டைனும் மாலினோவ்ஸ்கியும் பொருதிப் பத்து நாள் மல்லாடினார்கள். ‘டான்’ சேனாபதி, அவரது உலகு புகழ் போர்த்திறனை எல்லாம் பயனித்துத் தன்னினும் பன்மடங்கு பலம்கொண்ட எதிரியைச் சிதறடிக்க-சிதறடித்து ஊடுருவ முயன்றார்; முடியவில்லை. இந்நிலையில் செஞ்சேனை முதல் முறையாகப் பெருமளவில் உபயோகித்த ஜ்தொர்மோவிக் விமானங்களும், ஏரியல் ராக்கெட்களும் பீரங்கிகளில் பெரும் பகுதியை அழித்துவிடவே, காகசியாவில் வளைத்தழிப்பு அபாயத்திற்கு உள்ளாகிவிட்ட பான்சர்களைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படவே, களத்தை எதிரியிடம் விடுத்துத் தெற்கே பின்வாங்கலானார், விமான பலம் அறவே இல்லாதிருந்த மான்ஸ்டைன்.

     ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்தது.

     ஜெர்மன் சேனாதிபதி ஃபீல்ட்மார்ஷல் ஃப்ரீட்ரிக் வான் பவுலஸ், மற்றும் 23 ஜெனரல்கள் உட்பட 96 ஆயிரம் ஜெர்மனியர் கர்னல் ஜெனரல் ரொகொசாவ்ஸ்கியிடம் சரண் அடைந்தார்கள். களத்தில் பொறுக்கி - எரிக்கப்பட்ட ஜெர்மன் உடல்கள் 147 ஆயிரம். தகவலின்றி மறைந்து போனவர்கள் சுமார் 100 ஆயிரம் பேர்.

     அதன்பிறகு 2 வது உலகப் போரிலேயே மிகக் கொடூரமானதென ராணுவ நிபுணர்களால் வர்ணிக்கப்படும் குர்ஸ்க் யுத்தம். 8 நாள் யுத்தத்தில் இரு தரப்பாருமாகச் சேர்ந்து 3 ஆயிரம் விமானங்களையும் 4 ஆயிரம் டாங்குகளையும், பல்லாயிரம் வீரர்களையும், இழந்தது அந்தச் செதில் களத்திலேதான்.

     அதுவே ரஷிய அரங்கில் ஜெர்மன் ராணுவத்தின் கடைசிப் பெரிய தாக்கடிப் போர்.

     வட ஆப்பிரிக்காவில், சூயஸ் கால்வாயைப் பிடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த ஃபீல்ட் மார்ஷல் எர்வின் ரோமலின் ஆஃபிரிக்கா கோர், புது வலுப்பெற்ற பிரிட்டிஷ் 8வது சேனையால் எல் அலாமீன் களத்தில் முறியடிக்கப்பட்டுப் பின் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது.

     அமெரிக்கத் துருப்புகள் மொராக்கோவில் கரை இறங்கிப் போர்த் தளங்கள் அமைக்கலாயின.

     போர் காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேனும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திரச் சங்கம் தோன்றியிருந்தது. அதன் போர் உறுப்பான ஆஸாத் ஹிந்த் ஃப்வ்ஜில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர்ப் பயிற்சி பெற்று வந்தனர்.