உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற் பாகம் 2. காப்பு எங்கே? மாடுகள் மேய்வதற்கென்றே ஒதுக்கி விட்டிருந்த அந்தப் பசுங்கன்றோடு தொடர்ந்து சென்ற மேட்டில் முதல் முதலில் தனியாகக் காணப்பெற்ற நீண்ட கொட்டகை, பொதுவான மாட்டுக் கொட்டிலாகும். அப்பால் இரு வரிசையாக உள்ள இருபது வீடுகளும், மரகதமலை ஹட்டியைச் சேர்ந்தவை. தனியாக, மேற்கே சரிவில் காணும் நான்கு வீடுகளும், அந்த ஹட்டியைச் சேர்ந்த ‘தொரியரு’க்கு உரியவை. சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், மைசூரிலிருந்து பண்டிப்பூர்க் காடுகளின் வழியே நீலகிரி மலையில் வந்து குடியேறியதாகச் சொல்லப்படும் படக மக்கள் சமூகத்திடையே அவரவர் தொழிலுக்குத் தகுந்தபடி சில பிரிவுகள் இருந்தன. ஹரிவர், உடையர், அதிகாரி, கணக்கர், கடக்கர், தொரியர் என்ற பெயரில் முறையே, குருமார்களாகவும், அதிகாரிகளாகவும் கணக்கர்களாகவும் இருந்தனர் என்றும் கூறுவர். தொரியர் என்ற பிரிவினர், மற்ற பிரிவினருக்குப் பணிபுரியும் மக்களாக, ஒவ்வொரு ஹட்டியிலும் குடியிருந்தனர். பணிபுரிபவர் என்ற முறையில் இருந்தாலும், உயர்ந்தவராகக் கருதப்பட்ட மக்களுக்குப் பிள்ளைகள் போன்ற உறவுடையவராகவே தொரியர் கருதப்பட்டு வந்தனர் என்றும் தெரிய வருகிறது. ஹட்டியின் கீழ்ப்புறம் சிறு வீட்டைப் போலவே தோன்றும் குடில், தெய்வ முன்னோராகிய ‘ஹத்தப்பா’வின் கோயில். கோயிலுக்கு முன் விரிந்திருக்கும் சமவெளியான மைதானமே குடியிருப்பின் பஞ்சாயத்துக் கூடும் பொது இடம். மேற்கு ஓரத்திலிருந்து மலையைச் சுற்றி வளைந்து தெற்கே ஓர் ஒற்றையடிப் பாதை சென்றது. கோயிலுக்குப் பின்புறத்திலிருந்து வரும் பாதை, அந்தப் பாதையில் இணையும். இந்த இணைப்பு இடத்தில் நாலடி உயரமுள்ள மேடை ஒன்று உண்டு. அங்கிருந்து நோக்கினால், கீழேயிருந்து ஊருக்குள் வரும் பாதையில் வருபவர்களைக் காண முடியும். ரங்கனின் தந்தை மாதன், நாளின் பெரும்பாலான பகுதியை, அந்தக் கல்மேடையில் அமர்ந்தே கழித்து விடுவது வழக்கம். பாரு, ஜோகி, ராமன், பெள்ளி, கிருஷ்ணன் எல்லோரும், தொரியர் குடியிருப்பைத் தாண்டி, அவசரமாக மேலே குறுக்கே ஏறி, இரைக்க இரைக்க ஓடி வந்தனர். ஜோகியின் வீடு கோயிலைப் பார்த்து இருக்கும் கோடி வீடு. வீட்டு வாசலில் ஹட்டியிலுள்ள பெண்கள் எல்லோருமே கூடியிருந்தனர். பாரு, ஜோகிக்கு மாமன் மகள். கிழக்கே அருவிக் கரையோடு காடுகளைத் தாண்டி நடந்தால், ஜோகியின் மாமன் ஊராகிய மணிக்கல் ஹட்டிக்குப் போகலாம். பாருவின் தாய், கீழ்மலையில் தன் அம்மையின் வீட்டில் பிரசவித்து, குழந்தையுடன் அன்று கணவன் வீடு செல்லுகிறாள். வழியிலே நாத்தியின் வீடு வந்து தங்கி, பெரியவளான பாட்டியின் ஆசி பெற்று, மறுநாள் மணிக்கல் ஹட்டி செல்லப் போகிறாள். அண்மையில் ஓடுகள் வேய்ந்து காரை பூசிப் புதுப்பித்திருந்த ஜோகியின் வீட்டில், மணியகாரரின் மகள், கிருஷ்ணனின் தாய், சாயும் வெயிலில் நின்றபடியே குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். வெல்லமும் பாலும் ருசித்த குழந்தை நாவைச் சப்புக் கொட்டிக் கொண்டு பல் இல்லாத வாயைக் காட்டி எங்கோ பார்த்துச் சிரித்தது. “இனிப்புக்கு சப்புக் கொட்டுகிறாள், பார்” என்று அவள் குழந்தையை கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருக்கையில், ஜோகி ஆவலுடன் அந்தப் பெண்டிர் கூட்டத்தில் புகுந்து பாய்ந்து வந்தான். “அட! வந்தது யாரென்று தெரிந்து விட்டதா? கண்ணைத் திருப்பிப் பார்த்துச் சிரிக்கிறாள். ஜோகி, பார். உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்!” எல்லாருமே சிரித்தார்கள். சிரிப்புக்கும் அவர்கள் கேலிகளுக்கும் ஜோகிக்குப் பொருள் விளங்கவில்லை. அவன் நோக்கமெல்லாம் குழந்தையின் மீதே குவிந்தது. பரபரக்கும் விழிகளால் பார்த்து அதிசயித்தான். எத்தனை அழகு, அந்தக் குழந்தை! ரோஜா நிறம்; கறேலென்ற சுருண்ட தலைமயிர், சிறு நெற்றியில் வந்து விழுந்தது. சின்ன மூக்கு; செப்பு வாய்; பிஞ்சுக் கைகள்; குஞ்சுக் கால்கள். “எனக்கு - என்னிடம் தரச் சொல்லுங்களம்மா” என்று அவன் இரு கைகளையும் நீட்டிய போது எல்லோரும் சிரித்தார்கள். “உனக்குத்தான். உனக்கு இல்லாமலா மாமன் மகள்? இதோ பார்; ஐய! உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்” என்று குழந்தையைத் தாழ்த்தி அவனிடம் காட்டினாள் கிருஷ்ணனின் தாய். “இவள் - ரங்கனுக்கு. ஜோகிக்கு பாரு” என்றாள் மாமி அதற்குள். இந்தப் பேச்சில் வெட்கமும் நாணமும் பிறக்காத பருவமல்லவா? “ம்... எனக்குப் பாரு வேண்டாம். இந்தப் பாப்பாத்தான் வேண்டும்” என்று அவன் சிணுங்கினான். மறுபடி சிரிப்பொலி எழும்பியது. “பார்த்துக் கொள்ளம்மா உன் பையனுக்கு இருப்பதை? நேருக்கு நேர் பாரு வேண்டாமென்று சொல்கிறானே! ஏண்டா, பாருவுக்கு என்ன? வந்ததும் வராததுமாய் உன்னைப் பார்க்கத்தானே ஓடி வந்திருக்கிறாள்? அவள் நன்றாக வேலை செய்வாள்; உனக்கு நல்ல பையனாகப் பெற்றுத் தருவாள்” என்று அவன் தலையில் செல்லமாக இடித்தாள் மாமி. அவள் பேச்சின் பொருளை உணராத ஜோகி, தனக்கே உரிய வேகத்துடன், “ஹூம், எனக்கு இந்தப் பாப்பாவைத்தான் பிடிக்கிறது” என்றான். “ஆயிரம் பொன் தர வேண்டும். ஆமாம்; சும்மாக் கிடைக்காது!” என்றாள் மாமி, கேலியான கொஞ்சலில். “தருவேன்” என்று ஜோகி தலையை ஆட்டினான். மீண்டும் ஒரே சிரிப்பு. “எங்கேயிருந்து ஆயிரம் பொன் தருவாய்? ஆசையைப் பார்!” என்று அதிசயித்தாள் பெள்ளியின் பாட்டி. “தருவேன்” என்றான் ஜோகி திடமாக. “ஆயிரம் கறவை எருமையுங் கூட வேண்டும்” என்றாள் மாமி மீண்டும் குமிண் சிரிப்புடன். “ஆகா, நீ தேவலையடி! என் பையன் ஏதோ சாது என்றால் நீ மேலே மேலே போகிறாயே! ஆயிரம் கறவை, சீதனமாக இங்கே வர வேண்டுமாம்; என் பையன் சோடையா?” என்று ஜோகியின் தாய் மாதி பாய்ந்தாள். “உனக்கு ஏன் அதற்குள் ஆத்திரம்? வேண்டுமானால் உன் பையன் மாமன் காலடியில் பொன்னை வைத்துக் கும்பிட்டு, ‘மாமா உங்கள் பெண்ணைத் தாருங்கள்’ என்று கேட்கிறான்!” என்றாள் மாமி கேலிக் கோபத்தில். “அது சரி, அது சரி” என்று பெண்கள் கலகலவென்று சிரித்து ஆமோதிக்கையில், கிருஷ்ணனின் தாய் அவனை உட்காரச் செய்து, மடியில் குழந்தையை விட்டாள். மலர் போன்ற குழந்தையை இளங்கால்களில் ஏந்திக் கொண்டு, சாயுஜ்யம் கிடைத்த மகிழ்ச்சியில், ஜோகி இருந்தான். அவன் தாய் மாதிக்கு, ஜோகிக்குப் பிறகு பிறந்த இரு குழந்தைகளும் தக்கவில்லை. ஆகையால், தனக்கு நினைவு தெரிந்து ஜோகி இத்தகைய இன்பத்தை அநுபவித்ததில்லை. ஜோகி பெரு மகிழ்ச்சியில் எத்தனை நேரம் ஆழ்ந்திருக்க முடியும் என்று எண்ணுபவள் போல் மாமி குழந்தையை அவன் மடியிலிருந்து எடுத்தாள். “மாமி, மாமி!” என்று கெஞ்சினான் ஜோகி. “இதோ பார், உங்கையன் வீடு வந்ததும் பத்து ரூபாய் கேட்டு வாங்கி மாமியிடம் கொடுத்துப் பெண்ணைக் கேள்” என்றாள் பாட்டி சிரித்துக் கொண்டே. “ஏ மாமி, பத்து ரூபாய் கொடுத்தால் பாப்பாவை இங்கே கொடுப்பீர்களா?” “அட போடா, அசட்டுப் பயலே!” என்றாள் அம்மை. “ஏன் அம்மா?” “பாப்பா இப்போது வரமாட்டாள். பெரியவளாக வளர்ந்ததும், நீ ஐயனைப் போல ஆனதும், பணம் கொடுத்து இங்கே நம் வீட்டுக்கு அழைத்து வருவோம். அப்போது பாப்பா உனக்குச் சோறு வைப்பாள். தண்ணீர் கொண்டு வருவாள். சாமை விதைத்து வீட்டுக்குத் தானியம் கொண்டு வருவாள். இப்போது பாப்பாவால் என்ன முடியும்?” என்று அம்மை விளக்கினாள். மாமி குழந்தையைப் பாட்டியிடம் கொடுத்து விட்டு, உள்ளிருந்து ஒரு வட்டத் தட்டு நிறையக் காஞ்சிப் பொரியும் வெல்லப் பாகும் கலந்து செய்த உருண்டைகளைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள். பாருவின் கையில் பொரி உருண்டை கொடுக்கும் போதுதான் அவள் கைகளில் இருந்த வெள்ளிக் காப்பைக் காணாமல் திடுக்கிட்டாள். “காப்பெங்கே, பாரு?” பாரு சுற்று முற்றும் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள். “எங்கேடி காப்பு?” “பெரிசு; பின்னால் கை பெரிசானதும் போட்டுக் கொள்ளலாம் என்றேன்; கேட்டாயா? எங்கேயம்மா விழுந்தது?” “நீ ஊரிலிருந்து வரும் போது இருந்ததா? அதைப் பார்” என்றாள் பாட்டி. “அங்கே வரும் போது காப்பு ஆடியதை நான் பார்த்தேன்” என்றான் கிருஷ்ணன். “எங்கெல்லாம் ஓடினார்களோ?” என்று தாய் பாருவின் மேல் முண்டை அவிழ்த்து உதறினாள். “வாருங்கள், எங்கே போனீர்களென்று காட்டுங்கள்” என்று மாதி முன்னே நடந்தாள். “அம்மா, நான் காப்பைத் தேடி எடுத்து வந்தால் மாமி பாப்பாவைத் தருவார்களா?” என்று ஜோகி முகம் ஒளிர ஓடி வந்தான். “அசட்டுப் பயலே! என்ன இப்போதே பாப்பா பித்தாயிட்டே?” என்று அம்மை அதட்டினாள். கதிரவன் மேல் வானில் சாய்ந்து விட்டான். சில்லென்ற குளிர்காற்று வீசியது. பாரு முன்னே ஓடினாள். மாதியும் குத்துச் செடிகள், புதர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே ஜோகியைப் பின் தொடரச் சென்றாள். எங்கும் புது வெள்ளிக் காப்பு மின்னவில்லை. மாடுகளை எல்லாம் சிறுவர் கொட்டிலுக்கு ஓட்டிச் சென்றனர். சட்டென்று நினைவு வந்தவனாய் மாதி கேட்டாள்; “ரங்கன் எங்கே?” “அதோ! எருமை ஒன்று கால் மடித்து விழுந்து கிடக்கிறதே!” “ம்... ஙே... ய்...” என்று அதன் ஒலி வேதனையைக் கொண்டு அவர்கள் செவிகளில் புகுந்தது. ஜோகி வேகமாக இறங்கினான். “பெரியப்பன் வீட்டு நோஞ்சல் எருமை பள்ளத்தில் எப்படிச் சரிந்தது?” அதன் முதுகிலே அடிப்பட்டு ரத்தம் கன்றியிருந்த கோடுகள் அவள் கவனத்தைக் கவர்ந்தன. இளம் உள்ளம் மெழுகைப் போல் நெகிழ்ந்தது. “யார் அடித்து ஓட்டினார்கள்? ரங்கா! ரே ரங்கா!” என்று ஜோகி சுற்றுமுற்றும் பார்த்துக் குரல் கொடுத்தான். “எருமை விழுந்து காலொடிந்து போச்சு, ரங்கா?” எதிர்க்குரல் எழவில்லை. பொரி உருண்டைக் கைபிசுக்குப் பிசுக்கென்று ஒட்டிக் கொள்ள, சிறுவன் எருமையின் உடலைத் தடவினான். காப்பை மறந்து நின்ற பாரு, எருமையின் காலுக்குக் கீழ் உறைந்திருந்த குருதியைக் கண்டாள். “ஐயோ, ரத்தம்!” அவள் போட்ட சத்தம் மாதியை அங்கே தள்ளி வந்தது. சற்று எட்ட, குன்றை ஒட்டிய விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் - பெண் அனைவரையும் அவர்களின் சலசலப்பு அங்கே தள்ளி வந்து விட்டது. ரங்கனின் சின்னம்மையான நஞ்சம்மை. நேர் எதிரே உள்ள மைத்துனன் வீட்டுக் கோலத்தைக் காணச் சகியாமல் அப்போதுதான் களையெடுப்பவள் போல் நிலத்துப் பக்கம் வந்திருந்தாள். கூட்டம் சேர்ந்த இடத்துக்கு வந்து தங்கள் வீட்டு எருமை விழுந்து காலொடித்துக் கொண்டு விட்டதை அறிய அவளுக்கு ஆத்திரம் பீறி வந்தது. ரங்கனையே நோக்கி அவள் கடுகடுப்புப் பாய்ந்த தென்பதைக் கூற வேண்டுமா? “ஈசுவரா! எருமைக்குக் காலே ஒடிந்து போச்சே! அந்தச் சோம்பேறிப் பயல் எங்கே போனான்?” “அதுதான் தெரியவில்லை, பெரியம்மா” என்றான் ஜோகி. “சேரும் இடத்திலே சேர்ந்து மேடு உயருகிறது. பறிந்த இடத்திலே பின்னும் பள்ளம் பறிகிறது. இருந்த ஓர் எருமையும் போச்சே! வீட்டுத் தலைவன் வேலை வெட்டி செய்யாமல் பொழுது போக்கிரானென்றால், இந்தப் பையனும் உதவாத பயலானானே! ஒருத்தி பாடுபட்டு வீட்டில் சாப்பிட முடியுமா? ஊருக்கெல்லாம் வாழ்வு இருக்கிறது. இந்த நஞ்சம்மைக்குச் சுகமில்லை” என்றெல்லாம் பிரலாபிக்கலானான். “அடாடா? இது யார் வேலை? ஏண்டா? முரட்டுப் பயல்களா? எருமையை இப்படியா அடிப்பது?” என்று கேட்ட வண்ணம் ஜோகியின் தந்தை லிங்கையா, எருமையைத் தூக்க முயன்றான். “அவன் குடும்பத்துக்கு நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்” என்று கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லர் முணு முணுத்தார். “அருவியிலிருந்து பானையில் தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று லிங்கையா சிறுவர்களை விரட்டி விட்டு, எருமைக்கு வைத்தியம் செய்ய உட்கார்ந்து விட்டான். “கொட்டிலுக்கு ஓட்ட முடியாது. இங்கே வைத்துத்தான் பச்சிலை போட்டுக் கட்ட வேண்டும். ரங்கன் எங்கே?” லிங்கைய்யா நஞ்சம்மையைத் தான் பார்த்தான். தூண்டிக் கொடுக்காமலே பொல பொலக்கும் அவளுக்கு இது போதாதா? “கஷ்டகாலம், யார் பொறாமைக் கண்ணோ, ஏவலோ? ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதே” என்று தொடர்ந்து உதவாக்கரை ரங்கனின் அடங்காத்தனம், முரட்டுச் செயல், வேலை செய்ய வணங்காமை, திருட்டுத்தனம், பொய் எல்லாக் குணங்களையும் சொல்லிப் பிரலாபிக்கலானாள். “கவலைப்படாதீர்கள். அண்ணி, இன்றிரவு பயிருக்குக் காவல்முறை எனக்கு. பரணிலிருந்து குரல் கொடுக்கிறேன். தொரியமல்லனும் உடன் இருக்கிறான். தீ வளர்த்துக் கொண்டிருந்தால், ஒன்றும் வராது. மெள்ள இரண்டு நாளில் வீட்டுக்கு ஓட்டிப் போவோம். “ஜோகி, கொஞ்சம் புல்லறுத்துப் போட்டுவிட்டு வா!” என்றான் லிங்கையா, அண்ணன் மனைவிக்குத் தேறுதலாக. நஞ்சம்மை தலைவிதியை நொந்த வண்ணம் வீட்டுக்குச் சென்ற போது, எட்டு வயசுப் பெண் ரங்கி, அழும் குழந்தையை அடித்து அதட்டிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் வேக வைத்திருந்த மொச்சை விதை, நீரின்றித் தீய்ந்தது. அருவி நீர் எடுத்து வந்திருக்கவில்லை. “எருமையும் போயாச்சு, ஏண்டி சோம்பேறி, தண்ணீருக்குப் போகவில்லை?” “போகவில்லையம்மா.” “ஏண்டிப் போகவில்லை?” “வந்து...” “வந்து, வராமல்! ஏண்டி நீயும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? தகப்பன் சோம்பேறி, பையன் உதவாக்கரை, நீயும் உருப்படாதே.” “ஜோகி வீட்டிலே மாமி வந்திருக்கிறாங்கம்மா.” “அங்கே மாமி வந்தால் உனக்கென்னடி கழுதை? உனக்குப் பையனைக் கூட்டி வந்திருக்கிறாளா? வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்தாயா? துப்புக் கெட்டவளே! எருமை விழுந்து, இருந்ததும் போச்சு; குழந்தைப் பாலுக்கும் வழியில்லை.” பொல பொலத்துக் கொண்டே, அவள் பானையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். சற்றைக்கெல்லாம் அவளுடைய குழந்தைகளின் தந்தை கண்கள் பாழாய் சிவக்க, தள்ளாடும் நடையுடன் வீட்டுப் படியேறி வந்து, முன்புறம் வெளிமனை என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்தான். காப்பைச் செருகிக் கொண்டு அருவிக்கரைப் பக்கம் நடந்து சென்ற ரங்கன் வீடு திரும்பவில்லை. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|